குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, July 15, 2015

கடவுளைப் பார்க்க முடியுமா?

”கடவுளைக் கண்ணால் பார்க்க முடியுமா? ” உலக மாந்தர்களின் உள்ளத்தே விடை தெரியா கேள்வியாய் காலம் காலமாய் உதித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் எவராலும் விடை சொல்ல முடியவில்லை. 

ஞானிகளைக் கேட்டால் ”அவர் உன்னுள்ளே இருக்கிறார்” என்கிறார்கள். போகிகளைக் கேட்டால் ”கடவுளா? அவர் அந்தக் கோவிலில் இருக்கிறார், இந்தக் கோவிலில் இருக்கிறார்” என்று சொல்கிறார்கள். நாத்திகர்களைக் கேட்டால்,”கடவுள் இல்லை, கல் தான் உண்டு” என்கிறார்கள்.

எவரைக் கேட்டாலும் பதில் கிடைக்கிறது. ஆனால் கடவுளைக் காணமுடியவில்லை. அன்பர்களே, சீர்காழி கோவிந்தராஜனின் இந்தப் பாடலைத் தனிமையில் கேளுங்கள் ! கேட்டு விட்டு மனதூடே ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். ஏன் கடவுளைப் பார்க்க முடியவில்லை என்று உங்களுக்குப் புரிய வரும். அப்படியும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் ....



ஆசை ஆசையாய் பெற்று வளர்த்த குழந்தையைத் திடீரென்று காணவில்லை என்றால் குழந்தையைக் காண்பதற்காக மனது துடிதுடிக்குமே! அழுது புலம்புமே ! அலறுமே ! உடல் சோர்ந்து போமே ! இதயம் வலித்து வலித்து கண்களில் கண்ணீர் வழிந்தோடுமே ! உடல் செயலற்றுப் போய் இடிந்து போகுமே? செத்துப் போய் விடலாமே! என்று துடித்து துடித்து துன்பத்தில் உழலுமே ! ஒரு குழந்தையைக் காணாவிடில் இப்படியெல்லாம் வேதனையில் வீழ்ந்து வெம்பி வெந்து துயரத்தில் ஆழ்ந்து அழுகின்ற மனிதர்கள் என்றாவது ஒரு நாள் கடவுளைக் காண இப்படித் துடித்ததுண்டா? அழுததுண்டா? ( கேள்வி கேட்டவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்).

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

Thursday, July 9, 2015

எம்.எல்.ஏ தொடர் - 1


மாடியிலிருந்து இறங்கி வந்த எம்.எல்.ஏ, வரவேற்பரையில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதிரில் நின்றிருந்த பிஏ சுதந்திரத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே”இன்றைக்கு என்ன விசேஷம்?” என்று கேட்டார்.

"அதையே ஏன்னா கேட்கிறீங்க? " என்று சொல்லிய சுதந்திரத்தின் கையில் வெள்ளை வெளேர் என்று ஒரு போனைப் பார்த்தார்.

“புது போனாய்யா?”

சுதந்திரம் மந்தகாசமாய் புன்னகைத்துக் கொண்டே “அம்பதாயிரம்னா, ஐபோனு” என்று பெருமையாகச் சொன்னார்.

சுதந்திரத்தை ஏற இறங்கப் பார்த்த எம்எல்ஏ, “ஏன்யா? அம்பதாயிரம் போனை உன் தலையில கட்டின கம்பெனிக்காரந்தான்யா பெருமைப்படனும், நீ எதுக்குய்யா பெருமைப்படறே, நீயெல்லாம் திருந்தவே மாட்டியாய்யா? என்கிட்ட பிஏவா இருந்துக்கிட்டு லூசுத்தனமா இருக்காதய்யா” என்றார்.

சுதந்திரம் காற்றுப் போன பலூனாகி விட, “வேற என்னய்யா சமாச்சாரம்?”.

தொடரும் ...

குறிப்பு : எனக்கு நீண்ட நாட்களாக 150 பக்கத்தில் நாவல் எழுத வேண்டுமென்ற ஆவல். கற்பனைகளை கலந்து கட்டி எழுதுவதென்பதெல்லாம் எனக்கு ஐம்பது வயது வரும் போது சாத்தியமோ என்னவோ?

நான் எழுத நினைத்துக் கொண்டிருக்கும் நாவலின் வடிவமோ வேறு. உண்மைக்கும் பொய்யுக்குமான உரையாடலாய் சமீபகாலத்து நிகழ்வுகளை கலந்து வரலாற்றுப் பதிவாய் பதிய வேண்டுமென்ற எண்ணத்துடன் நான்கைந்து வாரமாய் சிந்தனையோட்டம் சென்று கொண்டிருந்தது. இதோ ஆரம்பித்து விட்டேன். விரும்பியவர்கள் படிக்கலாம். விரும்பாதவர்கள் எப்படியோ அது அவர்கள் பாடு.

Thursday, June 25, 2015

அவன் பெயர் சதக்கத்துல்லா


புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதிதான் எனது ஊர். ஆவணம் தாத்தா ஊர். நெடுவாசல் எனது ஊர். ஆனால் வளர்ந்ததெல்லாம் தாத்தாவிடம். ஒரு பெண்ணால் ஏற்பட்ட நிகழ்வுகளால் ஊரில் பெரும் தனக்காரனாய் வாழ வேண்டிய அடியேன் ஊரு விட்டு ஊர் வந்து பிழைக்க வேண்டிய விதிப்பலனை அடைந்திருந்தேன்.

பிள்ளை பிராயத்தின் போது கூட பழகிய பல்வேறு வகுப்புத் தோழர்கள் காலவெள்ளத்தில் எங்கெங்கோ அடித்துச் செல்லப்பட்டிருக்கிறோம். ஆவணத்தின் வடக்குத் தெருவில் இருக்கும் அரசு துவக்கப்பள்ளியில் தான் எனது ஆரம்பக்கல்வி ஆரம்பம். எனது பள்ளித்தோழன் சின்னையனை இன்றும் மறக்க முடியவில்லை. ஊரில் பெரும் பணக்காரனான சின்னையன் என் மீது கொண்ட அன்பினால் என்னை முதுகில் சுமந்து என் வீட்டுக்கு அழைத்து வர முற்படுவான். அவனது தாத்தா அதற்காக அவன் முதுகில் சவட்டி விடுவார். அருகிலிருக்கும் பிள்ளையார் கோவிலில் என்னை அமர வைத்து விட்டு அம்மாவிடம் சென்று அழுது கொண்டே தங்கவேலை தூக்கிக் கொண்டு வர விடமாட்டேன் என்று தடுத்து விட்டார் என்றுச் சொல்லி இருக்கிறான். ஏன் இந்த அன்பு? காரணங்கள் அறியா வயதில் ஏற்படும் அன்பு வயது வளர வளர காரணங்களை அறிந்து கொள்ள முயல்கிறது. வயது  ஏற ஏற அனுபவங்களை மற்றும் மனது அறிந்து கொள்வதில்லை. அன்பினை மறைத்து விடவும் முயல்கிறது. பயன் கிடைக்குமா என்று அலைபாய்கிறது. 

சிறு வயதில் சின்னஞ்சிறு பாலகர்களுக்கிடையே உண்டாகும் நட்புக்கு ஏதும் காரணமும் இருக்க முடியுமோ? காரணம் அறிந்தா நட்பு ஏற்படும்? 

எத்தனை வயது ஏறினாலும் என்ன? சின்னஞ்சிறு வயதில் கொண்ட நட்பு சிதைந்தா போய் விடும். இன்னும் சிதையாமாலிருக்கும் இன்னுமொரு நண்பணுண்டு.

அவனுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. பல்வேறு துயரங்களிலும் துன்பங்களிலும் ஆட்பட்டுக்கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றான் அவன்.

எங்கிருப்பான் அவன்? அனுமானிக்கவே முடியாது. ஆவணத்திலிருப்பான் அல்லது மலேசியாவில் இருப்பான் அல்லது சிங்கப்பூரில் இருப்பான். திடீரென்று துபாயிலிருந்து பேசுகிறேன் என்பான்.

ஏதாவதொரு நாள் போன் வரும். ”தங்கம் ! சதக்கு பேசுறேண்டா” என்பான். ஊருக்குச் சென்றால் எங்கிருந்தாலும் தேடி வந்து விடுவான். ஊருக்கு வந்து விட்டான் என்றால் உடனே போன் வரும். 

எனது பாலப்பிராயத்திலிருந்து அவனிடமிருந்து நான் அடைந்தது அவனின் அன்பு மட்டுமே. அன்றைக்கு இருந்த அதே அன்பு இன்றைக்கும் அவனிடமிருந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவனிடமிருந்து போன் வந்து, அவன் பேசினால் எனக்கு உலகம் இயங்குவது நின்றே போய் விடும். அவனின் ஏகாந்த அன்பில் கரைந்து போய் விடுவேன்.

ஊருக்கு வந்தானென்றால் பலாப்பழத்தைத் தூக்கிக் கொண்டு கோவைக்கு வருவான். ”ஒரு நாள் கூட இருடா” என்பேன். கேட்கமாட்டான் உடனே சென்று விடுவான்.

பலனை எதிர்பாராத அந்த அன்பு உயிரை நான் என்றைக்கேனும் மறக்க முடியுமா? அவன் தான் எனது ஆருயிர் நண்பர் “சதக்கத்துல்லா!”

Friday, June 19, 2015

மருதாணி போட்டு விடுவது எப்படி?

இது கொஞ்சம் பிரச்சினையான பதிவு தான்(எனக்கல்ல). எனது பிளாக்கிற்கு அனேக பெண் வாசகிகள் உண்டு என்பதையும் அதனால் உருவாகப் போகும் ஒரு சில பின் விளைவுகளைப் பற்றியும் யோசித்தபோது மனதுக்கு கொஞ்சம் நெருடலாக இருந்ததாலும் இப்படி ஆரம்பித்து விடுகிறேன்.

ஓட்டைகள் இருக்கும் பையில் எதையேனும் ஊற்றி வைத்தால் ஒழுகிப் போய் விடும் அல்லவா? ஏழு ஓட்டைகள் இருக்கும் பையான நம் உடலில் இருக்கும் மூச்சு மட்டும் உள்ளுக்குள்ளேயே சென்று வந்து கொண்டிருக்கிறதே அது எப்படி? அதைத்தான் ‘நம் உடலொரு மாயப்பை” என மரணத்துக்கு விளக்கம் கேட்ட நசிகேதன் சொன்னான். மூச்சை விட்டால் முடிந்து போகும் எல்லாம். இப்படியான ஓட்டைப்பையில் நல்லது கெட்டது என்று வகை தொகையில்லாமல் நாம் சேர்த்து வைத்துக் கொண்டே இருக்கின்றோம். பொய், சூது, திருட்டு, பொறாமை இப்படி தீமைகளாய் நாம் சேர்த்துக் கொண்டே வைத்திருக்கிறோம். அதனால் என்ன கிடைத்து விடப்போகிறது? மாயப்பை என்றேனுமொரு நாள் அழிந்து விடும் என்பதை மனதில் எப்போதும் இருத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

மதிய நேரத்தில் உணவுக்குப் பின்னால் விஜய் டிவியில் வரும் சரவணன் மீனாட்சி தொடரை அவ்வப்போது மனையாள் சகிதம் கண்டு கடுப்பதுண்டு. மதுரை சீரியலில் ஆரம்பித்து மீனாட்சி வரை அழகாய் சென்று கொண்டிருந்த அந்த சீரியல் ஏனோ திடீரென வேறு பக்கம் செல்ல ஆரம்பித்தது. ஓங்கு தாங்கு என்று உதடு பெருத்த ஒரு நாயகியை, கதாநாயகியாக வைத்த இயக்குனரின் ரசனைக்கு என்ன காரணமோ? இருப்பினும் அந்த ஏலேலோ பாடலுக்காக சரவணன் மீனாட்சியை கடுப்புடன் காண்பதுண்டு.

அதிலொரு நாள் மருதாணி வைக்கும் படலம் வந்தது. சரவணன் மீனாட்சிக்கு மருதாணி வைத்து விடுவான். மறு நாள் காலையில் ஒவ்வொருவராக வந்து கையை சுத்தம் செய்து பார்ப்பார்கள். அதில் மீனாட்சியின் கை மட்டும் மருதாணியால் ரத்தச் சிவப்பாக மாறி இருக்கும். அங்கிருக்கும் பாட்டி உனக்கு கணவனாக வருபவன் உன் மீது கொள்ளை அன்பு வைத்திருப்பான் என்றுச் சொல்வார். ’இப்படி வேற ஒன்னு இருக்கோ?’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்று இரவு உணவை முடித்து விட்டு பான் ஸ்டார்ஸ் பார்ப்பதற்காக டிவியை ஆன் செய்தேன். 

“ஏங்க உங்களுக்கு ஒரு வேலை இருக்கு” என்றார் மனையாள்.

”சொல்லு கோதை, என்ன?”

முகமெல்லாம் புன்னகையுடன் கையொலொரு பிளாஸ்டிக் உறையுடன் அருகில் அமர்ந்து “மருதாணி வைத்து விடுங்கள்” என்றார்.

எனக்குள் அலாரம் அடிக்க ஆரம்பித்து விட்டது.

“அய்யய்யோ! அடக்கடவுளே! இதென்னடா எனக்கு வந்த சோதனை? அதுவும் பதினைந்து வருடம் கழித்து? இப்படியெல்லாமா மனுசனுக்கு சோதனை வரும்? “ என்று மனது தானாகவே புலம்ப ஆரம்பித்து விட்டது.

// ஆமா நான் ஏன் புலம்புகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? //

இந்த ஆளு நம்ம மேல பிரியமா இருக்காரா இல்லையான்னு பார்க்கணும் என்று அம்மணி முடிவெடுத்து விட்டார். (டிவி சீரியலினால் எனக்கு வந்த பிரச்சினையைப் பார்த்தீர்களா???) நான் வைத்து விடும் மருதாணி நன்றாக சிவக்கவில்லை என்றால் என் கதியை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். காதலித்து கடத்திக் கொண்டு போய் கல்யாணம் செய்தவன் அடியேன். மருதாணி வழியாக என் காதலுக்கு வந்த சோதனையை நானெப்படி வெல்வது? 

தோட்டத்தில் இருந்த மருதாணிச் செடியை பையனிடம் ”வெட்டி வீசி விடு” என்றுச் சொல்லி இருந்தேன். சரியென தலையை மட்டும் ஆட்டி விட்டான். அந்த மருதாணியால் நான் படும் பாடு அவனுக்கு எங்கே தெரியப்போகிறது? பயல் எனக்கு வேட்டு வைத்து விட்டான். சரி அவன் எதுக்கு வந்தானோ அதைச் செய்கிறான். மனதுக்குள் “ நீ நல்லா வருவாயடா பயலே!” என்று நினைத்துக் கொள்வதை எனக்கு வேறு என்ன வழிதான் இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம்?

”தென்னையை வைத்தால் இளநீரு, பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு” என்று அன்றைக்கே சொல்லி வைத்தார்கள். எவன் கேட்கிறான்? பட்டால் தான் புத்தி வருகிறது.

இடது கையில் மனையாள் மருதாணியை வைத்துக் கொண்டார். அது முடியும் தருவாய் வரைக்கும் எனக்குள் திக்கென்று இருந்தது. வலது கையை என்னை நோக்கி புன்னகையுடன் நீட்டினார். அது ஏதோ ஒரு பெண் சாமி சூலாயுதத்தை என்னை நோக்கி நீட்டியது போலவே எனக்குத் தோன்றியது.

நெஞ்சுக்குள் படபடப்புடன் கையைப் பிடித்து மருதாணியை எடுத்து விரலில் வைத்து விட்டு, கையின் நடுவில் வட்டம் போல அழகாய் இட்டு, சுற்றி வர ஏழு புள்ளிகளை வைத்து விட்டேன்.

மருதாணி வைத்துப் படுத்துக் கொண்டால் விடிகாலையில் அல்லவா கையைச் சுத்தம் செய்வார்கள்? ஆனால் மனையாளோ பாதி ராத்திரியில் எழுந்து போய் அதுவும் நான் மருதாணி வைத்து விட்டேன் அல்லவா அந்த வலது கையை மட்டும் கழுவி விட்டு வந்து விட்டார். 

இது செல்லாது செல்லாது என்று நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. எனக்குப் புரிந்து என்ன ஆகப்போகின்றது? புரிய வேண்டியவர்களுக்கு அல்லவா புரிய வேண்டும்? எல்லாம் எனக்கு வந்த சோதனை. 

விடிய விடிய நானல்லவா உலகத்தில் இருக்கும் அத்தனை சாமிகளை எல்லாம் தூங்க விடாமல் தொல்லை செய்து கொண்டிருந்தேன். நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன் என்று அம்மணி நினைத்துக் கொண்டு கையைக் கழுவி வந்து விட்டார். எனக்குள் பீதி கிளம்ப ஆரம்பித்து விட்டது. இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள் நண்பர்களே, இப்போது இந்தச் சோதனையெல்லாம் தேவையா? நீங்களே சொல்லுங்கள். இப்படியும் கொடுமைகள் இந்த உலகில் நடக்குமா? பெண்கள் ஏன் இப்படியெல்லாம் இந்த் ஆண்களை வதைக்கின்றார்களோ தெரியவில்லை.

உண்மையில் ஆண்கள் தான் பெண்களிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கிப்போய் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று யாருக்குத் தெரியப்போகின்றது? 

எல்லாம் மாயை!

பொழுதும் விடிந்தது. 

விடிய விடிய இடது கையில் காய்ந்து இருந்த மருதாணி ஓரளவுக்குத்தான் சிவந்திருந்தது.  ஆனால் பாதி ராத்திரியில் எழுந்து போய் கையைக் கழுவி விட்டு வந்த அதுவும் அடியேனால் வைத்து விடப்பட்ட வலது கை ரத்தச் சிவப்பில் சிவந்து இருந்தது. மனையாளுக்கு ஒரே சந்தோஷம்.

அலுவலகத்துக்கு கிளம்பும் போது தோட்டத்தில் இருந்த மருதாணிச் செடியைப் பார்த்தேன். அது காற்றில் அசைந்து என்னிடம் ஏதோ சொல்ல வருவது போல இருந்தது. புன்னகையுடன் அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.




Tuesday, June 9, 2015

காணாமல் போய்விட்ட கைப்பக்குவம்

என் சின்னம்மா வைக்கும் மீன் குழம்பில் ‘கவுச்சி’ வாடையே அடிக்காது. கடல் மீனாக இருந்தாலும் சரி, ஆற்று மீனாக இருந்தாலும் சரி. பைங்கால் சித்தி வைக்கும் சாம்பாரும், இறால் குழம்பும் ஒரு குண்டாச் சோற்றை அள்ளி அள்ளி விழுங்க வைக்கும். இறால் வருவலின் சுவைக்கு ஈடே இல்லை. அம்மா வைக்கும் சாம்பாருக்கு இணை இதுவரையிலும் சுவைக்கவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு கோபி சென்று திரும்புகையில் புஞ்சை புளியம்பட்டியில் நம்பியூர் போகும் வழியில் ஒரு வீட்டு மெஸ்ஸில் கத்தரிக்காயும், உருளையும் சேர்ந்த பொறியல் சாப்பிட்டேன். அந்த மாதிரியான சுவையான பொறியலை இதுவரைக்கும் சாப்பிட்டதே இல்லை. ஆஹா அற்புதம். (ஆமாம் உங்களுக்கு புஞ்சை புளியம்பட்டியின் ஸ்பெஷல் கதை தெரியுமல்லவா???)

திருவாரூருக்குச் சென்றிருந்த போது எனது நண்பரின் வீட்டில் மாங்கொட்டை சாம்பாரும், பிஞ்சுப் பறங்கிக் காய் மசாலாவும் சாப்பிட்டேன். அவர் எப்போது திரும்பவும் திருவாரூர் வருவார், திரும்பவும் எப்போது மாங்காய் சாம்பாரும், பறங்கிக்காய் மசாலாவும் சாப்பிடுவோம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன். நண்பரின் மனைவியாரின் கைப்பக்குவத்தில் அவர் சமைக்கும் “புளியதோரை” தெய்வத்தின் சன்னிதியில் தரும் பிரசாதம் போலவே இருக்கும்.

ஊருக்கு ஒரு ஸ்பெஷல் உணவு என்பது போல வீட்டுக்கு ஒரு ஸ்பெஷல் உணவு இருக்கும். அதுவெல்லாம் அந்தக்காலமாகி விட்டது.

இப்போதெல்லாம் பெண்கள் சமையல் கட்டில் சென்று சமைப்பது என்றாலே எட்டிக்காயைக் கடித்தது போல ஆகி விடுகின்றார்கள். கோவையில் ஹோட்டல்கள் ஆட்களால் நிரம்பி வழிகின்றன. அதே போல மருத்துவமனைகளிலும் ஆட்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

சாந்தி ஹியர் கேண்டீனில் ஒரு நாளைக்கு பத்தாயிரம் பேர் சாப்பிடுகின்றார்களாம். பிரபல ஹோட்டல்களில் நுழையவே முடியவில்லை. பெண்களுடன் ஆண்களும் குழந்தைகளும் ஒவ்வொரு ஹோட்டலாய் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

சமீபத்தில் கேரளா சென்றிருந்த போது அங்கிருக்கும் ஹோட்டல்களில் மசாலா உணவுகள் தான் கிடைத்தன. சாம்பாரில் கூட மசாலாவைச் சேர்க்கின்றார்கள். சாதம் கேட்டால் முடிந்து விட்டது என்று நாண், சப்பாத்தி, புல்காவைக் கொண்டு வந்து வைக்கின்றார்கள். அதற்கு இணை உணவு மசாலா. ஒரே ஒரு நேரம் சாப்பிட்டதன் விளைவாக ஒரு நாள் முழுவதும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு விட்டது.

எந்த வகை உணவானாலும் ஒரே மாதிரியாகத்தான் சமைக்கின்றார்கள். கோபி சென்றிருந்தேன். சாம்பார் சாப்பிட்டேன் ஒரே சுவை. எனது நண்பர் வீட்டில் எனது வீட்டில் வைக்கும் சாம்பார் போலவே இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டில் விசாரித்த போதுதான் தெரிந்து கொண்டேன். மார்க்கெட்டிங்க் எந்தளவுக்கு மனிதர்களை மாற்றம் செய்து விட்டது என்று அதிர்ந்து விட்டேன்.

சக்தி மசாலா, ஆச்சி மசாலா என்ற மசாலாக்கள் ஒவ்வொரு அடுப்பங்கரையிலும் நுழைந்து விட்டன. சாம்பார் பொடி, ரசப்பொடி, சிக்கன் மசாலா, மட்டன் மசாலா, மீன் மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள் என கிட்டத்தட்ட தமிழர்களின் பெரும்பாலோனோர் வீட்டில் மேற்படி மசாலாக் கம்பெனிகளின் மசாலாப் பாக்கெட்டுகள் தான். பின்னர் எங்கே கைப்பக்குவம் இருக்கும்? தமிழர்களின் பெரும்பாலான வீட்டில் ஒரே சாம்பார், ஒரே சுவை.

மசாலாக் கம்பெனியார்கள் பெண்களை மூளைச்சலவை செய்து விட்டனர். இன்ஸ்டண்ட் மசாலாவை பெண்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். வீட்டுச் சாப்பாட்டுக்கும், ஹோட்டல் சாப்பாட்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விட்டது.

என் வீட்டில் அம்மா ஊரிலிருந்து அரைத்துக் கொடுத்து விடும் மல்லித்தூள் மசாலாதான் குழம்புக்கு பயன்படுத்துகிறோம். ஸ்பெஷலாக சாம்பார் தூளை அரைத்து விட்டார் மனையாள். சாம்பார் வாசம் அசத்தும். எந்த ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றாலும் வீட்டு உணவு நினைவுக்கு வந்து விடுவதை தவிர்க்க முடியவில்லை.

உங்கள் வீட்டில் அடுப்பங்கரைக்குள் சென்று பாருங்கள். மசாலா பாக்கெட்டுக்களை எடுத்துக் குப்பைக் கூடையில் போடுங்கள். மனையாளின் கைப்பக்குவத்தை உணர வையுங்கள். காணாமலே போய் விடக்கூடிய மனைவியின் கைப்பக்குவத்தை உங்களின் குடும்பத்துக்கு உணர்த்துங்கள்.

வாழ்க வளமுடன் !!!

Friday, June 5, 2015

10 ரூபாயும் ஒரு மூதாட்டியும்

சமூக ஆர்வலர்கள் இப்போதெல்லாம் அழிக்கப்படுகின்றார்கள் அல்லது கொல்லப்படுகின்றார்கள். எல்லோருக்கும் உண்மை கசந்து விடுகிறது. சிலருக்கு கொலை செய்யும் மனத்தையும் தந்து விடுகிறது. சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவனை பார்க்கும் போது, ஓடோடி அவனுக்கு உதவி செய்யத் துடிக்காத இதயம் எவருக்கும் இல்லாமலிருக்காது. இருந்தும் பலரும் ஒதுங்கிக் கொள்கின்றார்கள். அதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. சமூகத்தின் நன்மைக்காக உதவிட வேண்டுமென்று நினைப்போருக்கு உண்மையில் கசப்பான அனுபவங்களே ஏற்படுகின்றன. சமீபத்தில் கோவையில் இப்படித்தான் மணல் கடத்தலுக்காக சமூக ஆர்வலர் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். ஒரு சிலர் செய்யும் சில செயல்களால் மனித சமுதாயத்துக்கு கிடைத்திட வேண்டிய பல்வேறு நல்ல காரியங்கள் சீர்பட்டுப் போகின்றன.

நேற்றைக்கு கணபதி பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. அலுவலகத்தில் அடியேன் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அப்போது வாசலில் ஒரு குரல். நெடு நெடுவென்ற உயரம். கெச்சலான தேகம். மஞ்சள் பூசிய முகம். நெற்றியில் குங்குமம். பட்டுச்சேலை போன்று வெகு நேர்த்தியாக உடுத்தப்பட்டிருந்தது. கையில் ஏதோ ஒரு துணிக்கடையின் பை. 

ஏறிட்டுப்பார்த்தேன், “பன்னாரி அம்மன் கோவிலுக்கு காணிக்கை” என்றார் அந்த மூதாட்டி. அருகில் வரச்சொல்லி, பத்து ரூபாய் நோட்டினை எடுத்து நீட்டினேன். வாங்கிக் கொண்ட அந்த மூதாட்டி இப்படித் தொடர்ந்தார்.

”மகாராசனாட்டம் இருக்கிறாய், ஆனால் மனதுக்குள் பல்வேறு போராட்டங்கள். ஒவ்வொரு காரியத்திலும் தடை. மனதுக்குள் வலி. எந்தப் பிசினஸும் ஒழுங்காக நடப்பதில்லை. கண் திருஷ்டி இருக்கிறது. அதுதான் உன்னை இந்தப் பாடு படுத்துகிறது. உன்னால் கை காட்டப்பட்டவர்கள் இன்றைக்கு எங்கேயோ இருக்கின்றார்கள். ஆனால் நீயோ இருந்த இடத்திலேயே இருக்கின்றாய், இன்னும் கொஞ்சம் குறி சொல்லனும், அந்த சேரில் உட்காரட்டுமா?”

”பாட்டி நீங்கள் சொல்வது மாதிரியெல்லாம் இல்லை. ஒன்றும் வேண்டாம். கிளம்புங்கள்” என்றேன்.

அந்த மூதாட்டியோ திரும்பவும் ”உனக்கு கண் திருஷ்டி நிறைய இருக்கு, அதைச் சரி செய்ய வேண்டும்” எனச் சொல்லிக் கொண்டே எதிரில் அமர எத்தனித்தார்.

”பாட்டி அப்படி ஏதாவதிருந்தால் அதோ அங்கே போட்டோவில் உட்கார்ந்திருக்கின்றாரே எனது குரு நாதர் அவர் பார்த்துக் கொள்வார். நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்” என மறுத்தேன். சுவாமியைப் பார்த்தார் அந்த மூதாட்டி. ”நீ நன்றாக இருப்பாயப்பா” என்றுச் சொல்லி விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டார்.

மனதுக்குள் ஏதும் பிரச்சினையோடு இருந்திருந்தால் பாட்டி பர்சைக் காலி செய்திருக்கும்.

கடந்த வாரம் ஒரு பெரியவர் அலுவலக வாசலில் வந்து நின்று கொண்டு, “வயதானவன், நல்ல வார்த்தை சொல்வேன், காபி குடிப்பதற்கு ஏதாவது தர முடியுமா?” என்று கேட்டார். நான் திரும்பிக் கொண்டேன். எனது நண்பர் இரக்க சுபாவி. அவரை உள்ளே வர வைத்து எதிரில் அமர்ந்து கொண்டார்.

பிறந்த நாள், நேரம், இடம் கேட்டார். நண்பர் சொன்னார். கையை நீட்டச் சொன்னார். தட்சிணை வைக்கச் சொன்னார். நண்பர் திகைத்து விட்டு எவ்வளவு என்று கேட்டார்.”ஒரு நூறு ரூபாய் வையுங்களேன்” என்றார் கிழவர். நண்பர் வேறு வழி இன்றி கையிலிருந்த நோட்டுகளை எடுத்துக் கையில் வைக்க அதைக் கவனமாக எடுத்து வைத்துக் கொண்டு பலன் சொல்ல ஆரம்பித்தார்.

மேலே அந்த மூதாட்டியார் சொன்னாரே அதையே அந்தப் பெரியவரும் சொன்னார். ஐந்து நிமிடங்களாய் ஒப்பேத்தி விட்டு, அடுத்து உங்கள் குழந்தைகளுக்கும் பார்க்கலாமா என்று ஆரம்பித்தார். நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டே நண்பரைப் பார்க்க, நண்பரோ அலறியடித்துக் கொண்டு போதும் என்றுச் சொல்லி எழுந்து விட்டார்.

அடுத்து பெரியவர் என்னைப் பார்த்து, ”அய்யா உங்களுக்கு?” என்று ஆரம்பித்தவுடனே பெரிய கும்பிடு போட்டு விட்டேன். ஆள் எழுந்து விட்டார்.

“அறுபது ரூபாய்” கொடுத்தேன் என்றார் நண்பர் வருத்ததுடன்.


Monday, April 6, 2015

நிலம்(15) - முப்பாட்டனார் சொத்தில் பேரனுக்கு பங்கு உண்டா?

கடந்த வாரத்தில் எனது நண்பரொருவர் என்னைச் சந்தித்தார். அவர் ஒரு இடத்தினை வாங்குவதற்கு முடிவு செய்திருப்பதாகவும், என்னிடம் லீகல் ஒப்பீனியன் பெறலாம் என்றும் வந்திருப்பதாகவும், வெகு கவனமாக ஆவணங்களைப் பரிசீலித்து கிரையம் செய்ய உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.

முப்பாட்டனாரின் சொத்தில் இன்றைய வாரிசுகளுக்கு உரிமை உண்டு என்பதை நாமெல்லாம் அறிவோம். தாத்தா சொத்துப் பேரனுக்கும் உண்டு என்று கிராமத்தில் கூடச் சொல்வார்கள். தந்தை கூட விற்க முடியாது என்பர் பலர். ஆமாம் அதுதான் உண்மையும் கூட.

நண்பர் கொண்டு வந்து கொடுத்த சொத்தானது, தற்போது விற்பனை செய்ய விரும்பியவரின் தாத்தாவுக்கும் தாத்தா கிரையம் பெற்ற சொத்து. எந்த வித உயிலும் எழுதி வைக்காமல் அனைவரும் காலமாகி விடுகின்றனர். இந்த நிலையில் தற்போதைய உரிமையாளர் என்றுச் சொல்லக்கூடியவரின் தந்தை இந்தச் சொத்தில் ஒரு பகுதியை வேறொருவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டார். இது செல்லாது என்கிறார் த.உ.எ.சொ. அது உண்மைதான் என்று அனைவருக்கும் தெரியும். தாத்தா சொத்து பேரனுக்கு இல்லாமல் விற்க இயலாது.

ஆனால் அந்தக் கிரைய ஆவணத்தை படிக்கும் போது அதில் முக்கியமான விஷயமொன்று இருந்தது. குடும்பத்தின் பணத்தேவைக்காக மேற்படிச் சொத்தினை வேறொருவரிடம் அடமானம் செய்து வைத்திருந்திருக்கிறார் த.உ.எ.சொவின் தந்தை. அதை மீட்பதற்காகவும், மேலும் பணத்தேவைக்காகவும் மேற்படி முப்பாட்டனார் சொத்தினை விற்றிருக்கிறார் அந்த தந்தை. அதாவது குடும்பத்தின் பணத்தேவைக்காக பணம் தேவைப்படும் போது முப்பாட்டனார் சொத்தினை இதர வாரிசுகளின் அனுமதியின்றி ( நிரூபிக்கப்படும் பட்சத்தில்) விற்பது தவறில்லை என்கிறது ஒரு தீர்ப்பாணை.

அந்த விற்பனை செய்யப்பட்ட சொத்தினைத்தான் எனது நண்பர் வாங்குவதற்கு முடிவு செய்திருந்தார். 

கிட்டத்தட்ட நான்கு கோடி இருக்கும் அந்தச் சொத்து. தப்பித்துக் கொண்டார் நண்பர்.... 

வாழ்க வளமுடன் !!!

Thursday, March 26, 2015

ரத்தம் கசியும் நினைவுகளூடே உப்புவேலி

எனக்குக் காந்தி மீது ஆற்றவே முடியாத கோபம் இருக்கிறது. எனது தாத்தா மறைந்த மாணிக்கதேவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் பணி செய்தவர். அவர் வம்சத்தில் வந்தவன் என்பதால் கூட காந்தி மீது கோபம் வர காரணமாக இருக்கலாம். 

தாத்தா மலேசிய சிறையிலிருந்து இந்தியா வந்த பிறகு அவர் கூடவே கொண்டு வந்திருந்த ராணுவ சட்டையை நான் மார்கழி மாதக் குளிருக்கு அணிந்து கொள்வேன். சொரசொரப்பான மடக்குக் கத்தி ஒன்றினை அவர் இடுப்பில் சொருகி வைத்திருப்பார். அதுவும் ராணுவத்தில் இருந்து கொண்டு வந்ததுதான் என்பார். அதை விரிக்க என் சிறு வயதில் வலுப் போதவில்லை. 

ஒரு முறை முயற்சித்து ஆள்காட்டி விரலின் நடுவில் கத்தி பிளந்தது போல வெட்டி விட்டது. அதன் பிறகு அந்தக் கத்தியைப் பார்த்தாலே எனக்குள் விரலில் இருந்து கொட்டிய இரத்தம் நினைவுக்கு வந்து விடும். ராணுவத்தின் கத்தி என்பதை அது சரியாக நிரூபித்தது. அதன் பிறகு எனக்கு விபரம் தெரிந்த நாள் வரை விரித்துப் பார்க்கவே இல்லை. அந்தக் கத்தியில் ஒரு குத்தூசி போல ஒரு பகுதி இருக்கும். அதை வைத்துதான் குத்துயிரும் குலையுயிருமாய் கிடக்கும் வீரர்களுக்கு மோட்சம் கொடுப்பார்களாம். நிற்க !

இந்திய வரலாற்றுச் சரித்திரத்தில் மறைந்து போன ஒரு விஷயம் என்பதாய் ஜெயமோகன் தனது இணையதளத்தில் உப்புவேலி என்ற புத்தகத்தைப் பற்றி எழுதி இருந்தார். எனது நண்பரிடம் சொல்லி உடனடியாக அந்தப் புத்தகத்தை வரவழைத்து படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு சாதாரண கம்பெனியாக இந்தியாவுக்குள் நுழையும் போது வளமுடன் இருந்த இந்தியாவை, ஏழை நாடாக மாற்றியது மட்டுமல்லாமல், கலாச்சாரத்தையும், கல்வியையும் சீரழித்து சின்னாபின்னப் படுத்தியவர்கள் கிழக்கிந்திய கம்பெனி என்கிற வரையில் வரலாறு சொல்லிக் கொடுத்தது. ஆனால் இந்த உப்புவேலி காட்டும் இன்னொரு முகம் மேற்கண்ட சீரழிவை விடவும் கொடூரமான ஒன்றாய் இருக்கிறது. 

உப்புக்கு வரி, அதனால் உருவான வேலி (சுங்கம்) அதனால் மாண்ட கோடிக்கணக்கான இந்தியர்கள் என்று பக்கத்துக்குப் பக்கம் பிரிட்டன் இந்தியாவை ஒரு இடம் விடாமல் சீரழித்து சின்னப்படுத்தி அழித்ததை ஒரு பிரிட்டன்வாசி எழுதி இருப்பதைப் படிக்கையில் நினைவுகளில் ரத்தம் துளிர்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

காந்தியின் அஹிம்சை மீது எனக்கு வெறுப்பு மண்டுகிறது. அதனால் அவர் மீது எனக்கு எல்லையில்லாக் கோபம் கொப்பளிக்கிறது. அஹிம்சை என்பது கெஞ்சுவது, இறைஞ்சுவது என்ற எண்ணம் உதித்தபடியே இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் உண்மை என்னை அப்படிச் சிந்திக் வைக்கிறது.

இந்தியர்கள் அனைவரும் அவசியம் படித்து உணர வேண்டிய அற்புதமான ஒரு நூல் “உப்புவேலி”. சிறில் அலெக்சின் மொழிபெயர்ப்பில் இந்தியாவின் வழிந்தோடிய ரத்தம் உறைய வைக்கும் உண்மை நிகழ்வுகள் படம் போல விரிகின்றன. எழுத்து பதிப்பகத்தின் அற்புதமான படைப்பு. 


Tuesday, February 24, 2015

குரு பூஜை விழா அழைப்பிதழ்

அன்பு நண்பர்களே, வருகின்ற 01.03.2015 தேதியன்று கோயமுத்தூர் மாவட்டம், முள்ளங்காடு, பூண்டியில் அமைந்திருக்கும் எமது குரு நாதரின் ஆஸ்ரமத்தில் குருபூஜை விழா சிறப்புற நடைபெற உள்ளது. ஆன்மீக நண்பர்கள் விழாவில் கலந்து கொண்டு குருவின் அருள் பெற வேண்டுகிறேன்.



Monday, February 2, 2015

ஆனந்தக் குளியல்


விபரம் தெரிந்த வயதில் நான் ஆவணம் கிராமத்தில் உள்ள கிளை ஆற்றில் ஆட்டம் போடுவதுண்டு. கண்கள் சிவக்கச் சிவக்க குளியல். காவிரியாற்றின் கடைமடை ஊரின் கிழக்கிலே செல்லும் ஆற்றிலிருந்து ஒரு சிறு வாய்க்கால் போல பிரிந்து செல்லும் சிறு ஆற்றின் இணைப்பில் உள்ள படிகளில் தான் குளியல் போடுவது வழக்கம். தடுப்பிலிருந்து சீறும் தண்ணீரில் தலையைக்காட்டிக் குளிப்பது ஆனந்தமோ ஆனந்தம். மாலை வேளைகளில் இரு சுவற்றின் மருங்கிலும் சின்னஞ்ச் சிறு மீன்கள் பாசியில் குத்திக் கொண்டு சரம் சரமாய் தொங்கும் அழகு மனதை அள்ளும். அதைக் கையால் தண்ணீருக்குள் தள்ளி விடுவேன். மொசு மொசுவென மொய்க்கும். ஆஹா அற்புதம்.

ஆற்றில் தண்ணீர் வற்றி விட்டால் குளத்தில் குளியல், கோடையில் வடக்குத் தெருக்காரரின் தோட்டத்தில் உள்ள போரில் குளியல் போடுவதுண்டு. எனது வகுப்புத் தோழன் பனைமரத்துக் கள் இறக்குவான். தோட்டத்துக்குப் போகும் வழியில் தான் அவன் கள் விற்றுக் கொண்டிருப்பான். அவனிடம் ஒரு மக் பனங்கள் வாங்கிக் குடிப்பேன். அதற்கு சைடு டிஷ் நண்டு வறுவல், ஆம்லேட் மற்றும் காரச் சுண்டல். சும்மா அள்ளும். கள் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்றால் மாமா தோலை உரித்து உப்புத் தடவி விடுவார். ஆகவே அதை மறைக்க தோட்டத்து போரில் இரண்டு மணி நேரத்திற்கு குளியல் போட்டு விட்டு கள் வாசம் அடிக்காதவாறு சரி செய்து கொள்வதுண்டு.

ஆனால் வீரியன்கோட்டை சித்தப்பா வீட்டிலோ தலை கீழ். கோடையில் வீரியன்கோட்டைக்குச் செல்வதுண்டு. குளத்து மீனை விடிகாலையில் பிடித்து வந்து வறுத்து வைத்துக் கொண்டு, சின்ன தம்பி சிதம்பரம் வாங்கிக் கொண்டு வரும் தென்னங்கள்ளை குடித்துக் கொண்டே வறுத்த மீனைச் சாப்பிடுவது என்றால் எனக்கு கொள்ளை பிரியம். சித்தப்பா ஒன்றும் சொல்ல மாட்டார். சின்னம்மா தான் கோவித்துக் கொள்வார்கள். தம்பி விடவே மாட்டான். சின்னம்மா வைக்கும் மீன் குழம்பின் ருசியை இதுவரையில் நான் எங்கும் சாப்பிட்டதே இல்லை. அந்தக் கைப்பக்குவம் போனது போனதுதான். சின்னம்மா இறந்த பிறகு அந்தக் குழம்பின் ருசியும் அவரோடு சென்று விட்டது. இப்போது வாழ்க்கையோ முற்றிலுமாக மாறிப் போய் விட்டது. 

கோவை வந்த பிறகு குளியல் ஏக்கம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. உடம்புச் சூடு போக குளிக்க முடிவதில்லை என்பதில் எனக்குள் ஒரு ஆற்றாமை தொடர்ந்து கொண்டே இருந்தது. பாத்ரூமில் குளிப்பது எல்லாம் குளியலே இல்லை. சும்மா கோழி கொத்துவது போலத்தான் குளியலும். எரிச்சல் மண்டும் சில நேரங்களில். ஊருக்குச் செல்லும் போது கரூர் தாண்டி திருச்சி வழியில் செல்லும் போது சில நேரங்களில் காவிரி ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருந்தால் ஒரு அவசரக் குளியலைப் போட்டு விடுவேன். இருப்பினும் அந்த சந்தோசம் கிடைப்பதில்லை.


சமீபத்தில் எனது குரு நாதரைத் தரிசிக்க வெள்ளிங்கிரி சென்றேன். பாரஸ்ட் காரர்கள் ஆஸிரமத்துக்குச் செல்லும் வழியில் பெரிய பள்ளத்தை தோண்டி விட்டார்கள். ஏனென்றுதான் தெரியவில்லை. அங்கிருக்கும் மக்கள் பள்ளத்துக்குள் இறங்கி ஆற்றுக்கு குளிக்கச் சென்று கொண்டிருந்தார்கள். ஆக்டிவா ஆசிரமத்துக்கு போக முடியாது. காரும் போக முடியாது. எனது குரு நாதர் ஜோதி ஸ்வாமிகள் ஒரு வண்டியை வாங்கி விட்டார். காங்கேயம் காளைகள் பூட்டிய வண்டி. ஆக்டிவாவை கொண்டு போய் நிறுத்திவிட்டு வண்டியில் அமர்ந்தேன். ’ஜல் ஜல்’ என சலங்கை மணிகள் இசைக்க மாட்டு வண்டியை வெள்ளிங்கிரி மலையிலிருந்து வழிந்து வரும் ஆற்றுக்குள் இறக்கி ஆற்றின் ஊடே ஒரு கிலோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்றார் சாமி. வண்டியை நிறுத்தி விட்டு, மாடுகளை அவிழ்த்து அங்கிருந்த கரையோரமாய் மேய்வதற்காக கட்டி வைத்து விட்டு சாமி வண்டியில் அமர்ந்து விட்டார். 

குளியல் போட ஆரம்பித்தேன். அப்பப்பா என்ன ஒரு ஜில்! ஐஸ் கட்டி போல தெளிந்த தண்ணீர். உடம்பே சில்லிட்டது. நல்ல குளியல். உடம்பெல்லாம் சில்லிட்டு விட்டது. அப்படி ஒரு குளியல். புத்துணர்ச்சி என்றால் புத்துணர்ச்சி. எத்தனை மூலிகளைக் கடந்து வருகிறதோ தெரியவில்லை. சுவையோ சுவை. ஆசை தீர குளியலை முடித்து விட்டு ஆசிரமம் வந்தேன். அற்புதமான மனம் ஒடுங்கிய தியானத்தினை என் குரு நாதர் அருளினார். சாப்பிட்டு விட்டு வீட்டுக்குக் கிளம்பினோம்.

மனத்தில் எந்த வித சிந்தனையும் இல்லாது, மனம் ஒடுங்கிய நிலையில் எனது குரு நாதரின் ஆசீர்வாதத்தில் குளித்த அந்தத் தருணங்களை இனி எப்போது எனக்கருளுவாரோ?