நேற்று காலையில் மெயில்களைப் படித்து வருகையில் யாரோ ஒரு பெண் தன் குடும்பப் பிரச்சினை பற்றி எழுதி எனக்கு அப்பிரச்சினையில் இருந்து தீர்வு சொல்லுங்கள் என்று மொபைல் எண்ணையும் கொடுத்திருந்தார். ஏதோ பத்திரிக்கைக்குச் அனுப்ப வேண்டிய மெயிலை எனக்கு அனுப்பி விட்டாரே என்று நினைத்தேன்.
தனி மனித வாழ்வில் உறவுகளுக்கிடையான பிரச்சினை என்பது மிகவும் சென்சிடிவானது. அதில் பிறர் தலையிடுவது என்பது வேறுபல பிரச்சினைகளை தலையிடுபவருக்கு உருவாக்கி விடும் என்பது நான் பல அனுபவங்களின் மூலம் அறிந்து கொண்டிருக்கிறேன். இப்படித்தான் ஒரு முறை எனது நெருங்கிய தோழி ஒருவருக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தேன். தோழி தன் உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். தன் சம்பளத்தில் பெரும்பான்மையானதை தன் உறவினருக்குச் செலவு செய்து வந்திருக்கிறார். இது எனக்குத் தெரியாது. இப்படியான நிலையில் என் மூலம் மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்தனர். பெண் பார்க்கும் படலம் முடிந்து, மாப்பிள்ளை வீட்டாரை அனுப்பி வைத்து விட்டு, தோழியின் உறவினருடன் பேசிக் கொண்டிருந்த போது, அந்த உறவினர் ” நீங்கள் அவளை வைத்திருக்கின்றீர்கள்” என்று பட்டென்றுச் சொன்னார். என்னுடன் வந்த என் மனைவிக்கும், எனக்கு திகீர் என்றது.
அவர்களுடன் என்ன பேச முடியும் என்றுச் சொல்லுங்கள் பார்ப்போம். என் தோழியின் கண்களில் இருந்து கரகரவென கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஏதும் பேசாமல் திரும்பி வந்து விட்டேன். அதன் பிறகு தன் தோழியின் சம்பளப் பணம் கிடைக்காமல் போய் விடும் என்பதாலும், தோழிக்குப் பெரிய இடத்தில் திருமணமாகி விடுமே என்ற பொறாமையினாலும் அந்த உறவினர் அப்படி நடந்து கொண்டார் என்று கேள்விப்பட்டேன். தோழி தனியாய் வந்து, தற்போது திருமணம் முடித்து நன்றாக இருக்கிறார். சில நுண்ணிய பிரச்சினைகள் உறவுகளில் இருக்கும். ஆகவே வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அந்தச் சம்பவத்தில் இருந்து புரிந்து கொண்டேன்.
கணவன் மனைவி உறவானது பல்வேறு அகமுடிச்சுகளைக் கொண்டது. அம்முடிச்சுகளை போடுவது இருவர் தான், அவிழ்ப்பதும் இருவர் தான். இதில் பிறருக்கு என்ன வேலை இருக்கிறது? ஆகவே அந்தப் பெண் நிதானமாய் யோசித்து, தன் கணவன் எதனால் பிற பெண்ணை நோக்குகிறான் என்பதை ஆராய்ந்து, உணர்ந்து அதைச் சீர்படுத்த முயல வேண்டும்.
பொறுமையும், நிதானமும், ஆராய்ந்து தெளியும் பக்குவமும் இருந்தால் தான், இது போன்ற பிரச்சினைகளை எளிதில் தீர்க்கலாம். அந்தப் பெண்ணுக்கு கடவுள் மேற்படி சக்திகளை வழங்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நாளை “ செம்பருத்தி” வாழ்வியல் சூட்சுமத்தின் ஒரு ரகசியத்தைப் பற்றிப் பார்க்கலாம்.