இன்றைக்கு மூலம் மற்றும் வாய்ப்புண் இவற்றிற்கு என்ன மருந்தினையும் உணவினையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
முதலில் வாய்ப்புண் ஏன் ஏற்படுகிறது என்பதைப் பார்க்கலாம். உதடுகளைச் சுற்றி வருவது ஒரு வகை புண். அது வைரஸ்ஸினால் வரும். நோய்தொற்று உடையவர்களிடமிருந்தும், வைரஸ்ஸினாலும் வரும் அத்தொற்றினை நீக்க மருத்துவரைத் தொடர்பு கொள்க. இது உணவினால் உண்டாகும் வயிற்றுப் புண் மற்றும் வாய்ப்புண் பற்றியது.
வாயைத் திறக்க முடியாது, நாக்குகள் பாளம் பாளமாய் வெடித்திருக்கும். மலம் கழிக்கும் போது எரியும், கடும் நாற்றமெடுக்கும்.மலம் சீதளமாய் வெளியாகும். அடிக்கடி வாயு பிரிந்து அது கொடுமையான நாற்றம் அடிக்கும். இது போன்று இருந்தால் அது உணவினால் உண்டானது என்பதைக் கவனத்தில் கொள்க. கல் வைத்துப் பழுக்க வைத்த மாம்பழம், சில பப்பாளிப் பழங்கள், பாமாயில் எண்ணெய், சில வகை மசாலாக்கள், கெமிக்கல்ஸ் பயன்படுத்திய உணவுகளினால் (பெரும்பாலான ஹோட்டல் உணவுகள்) வரக்கூடிய இந்தப் புண் பெரும் அவஸ்தைகளையும், இப்புண்ணினைக் கவனிக்கா விட்டால் பெரும் பின் விளைவுகளையும் உருவாக்கி விடும்.
இந்தப் புண் வந்தால் அதற்கு ஏகப்பட்ட ஆங்கில மருந்துகள் இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் மருந்தையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால், ஒட்டுப் போட்ட தார்ச்சாலை போல ஆகி விடும் உடம்பு. பின்னாடி பார்த்துக் கொள்ளலாம், இன்னும் வயது இருக்கிறது என்று அலட்சியம் செய்தீர்கள் என்றால் உங்களால் அருமையாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் கூட உங்களைத் திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள் இந்தக் காலத்தில். நோயில்லாமல் வாழக் கற்றுக் கொண்டு, பிறருக்கு தொல்லைகள் ஏதும் தரக்கூடாது என்பதை நோக்கமாய் வைத்துக் கொள்ளுங்கள்.
மேற்படி புண் வந்தால் மாசாக்காய் என்றுச் சொல்லக் கூடிய மாசிக்காயை வாங்கி வந்து உடைத்து காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்று விடுங்கள். ஒரு முழு மாசிக்காய் உங்களின் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் இவற்றை சரி செய்து விடும். இந்தக் காய் கடுமையான துவர்ப்புச் சுவை உடையது. மென்று தின்ன இயலாதவர்கள் காயை அம்மியில் வைத்து தேய்த்து பசை போல எடுத்து அப்படியே விழுங்கி விடுங்கள். தொடர்ந்து காரம், புளி இல்லாத உணவுகளாய் எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாய் கோக், பெப்சி, ஹோட்டல் உணவுகள் வேண்டவே வேண்டாம். இந்தக் காய் எங்கு கிடைக்கும் என்றால் நாட்டு மருந்துக் கடை அல்லது மளிகைக் கடைகளில் கிடைக்கும். நான் ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் போது, லீவுக்கு வீட்டுக்கு வந்து திரும்பிச் செல்லும் போது, அம்மா ஒரு மாசாக்காயை வாங்கி வந்து வாயில் வைத்து மிட்டாய் போல சப்பிக் கொண்டே செல் என்பார்கள். கையில் மேலும் இரண்டு உருண்டைகள் வேறினைத் தருவார்கள். இரண்டு மாதத்திற்கு சாப்பிட்டுக் கொள்வேன். வாய்ப்புண்ணோ அல்லது வயிற்றுப் புண்ணோ என்னை அண்டவே அண்டாது. ஏதாவது ஹோட்டலில் சாப்பிட்டே ஆக வேண்டி வந்தால் தயிர் சாதத்தோடு முடித்துக் கொள்வேன். முழுச்சாப்பாடு சாப்பிட்டேன் என்றால், வீட்டுக்கு வந்தவுடன் மாசாக்காயில் சிறு துண்டினை எடுத்து வாயில் போட்டுக் கொள்வேன்.
தமிழகம் உணவுப் பழக்கத்தை மாற்றியதால், அரையடிக்கு ஒரு ஹாஸ்பிட்டல் எதிர்காலத்தில் வந்து விடும். எதைச் சாப்பிடணும், எதைச் சாப்பிடக்கூடாது என்ற அனுப அறிவு இன்றி கண்டதையெல்லாம் சாப்பிட ஆரம்பித்து விட்ட தமிழக மக்கள் பெரும்பாலானோர் நோயின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கின்றார்கள். இளைஞர்களுக்கு இருக்கும் ஆரம்ப கட்ட நோய் எதிர்ப்புச் சக்தியினால் விஷ உணவுகள் சாப்பிடும் போது, உடனடி பக்க விளைவுகள் ஏதும் வராது. ஆனால் உடம்பின் ஸ்பேர் பார்ட்ஸ் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து கொண்டு வரும்.
யாரெல்லாம் கூடிய சீக்கிரம் நோய் வேண்டுமென்று விரும்புகின்றீர்களோ அவர்கள் ஹோட்டல்களில் சாப்பிடலாம். அத்துடன் பெப்சி, கோக், சினாக்ஸ் வகைகளை வெளுத்து வாங்கலாம். பின்னர் ஆஸ்பிட்டல் ஆஸ்பிட்டலாய் அலையலாம். ஹோட்டலில் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டியிருக்கிறது என்றால் கூடிய வரைக்கும் எண்ணெய், உப்பு அதிகம் சேர்க்காமல் சாப்பிடப் பழகிக் கொள்ளுங்கள்.
வாய்ப்புண்ணுக்கு ஏற்ற கீரை : மணத்தக்காளிக் கீரை என்றுச் சொல்லும் சுக்கிட்டிக் கீரை. இதனை பொறியல் செய்து சாப்பிட்டாலும் வயிற்றுப் புண் தீரும்.
விரைவில் மூலம் பற்றியும் அதற்குச் சாப்பிட வேண்டிய உணவினையும் பார்க்கலாம்.