குரு வாழ்க ! குருவே துணை !!

Thursday, April 21, 2011

இக்காலக் குழந்தைகள் எதை நோக்கிப் பயணிக்கின்றன?

எனது நண்பருடன் பொள்ளாச்சி செல்ல வேண்டிய வேலை இருந்ததால் காரில் கிளம்பி விட்டோம். வேலை முடிந்து வந்து கொண்டிருந்த போது, நண்பரின் பையனிடமிருந்து போன் வந்தது. சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தார். பதினொன்றரை மணிக்கெல்லாம் வந்து விடுவேன் என்றுச் சொன்னார்.  பையன் டான்ஸ் கிளாசுக்குப் போக வேண்டுமாம். அப்பா கொண்டு வந்து விட வேண்டும் என்பது டீல்.

அப்போது தான் நாங்கள் காரமடை தாண்டி வந்து கொண்டிருந்தோம். வெள்ளலூர் தாண்டி வருகையில் மேலும் ஒரு வேலை காரணமாய் அரை மணி நேரம் ஆகி விடும் என்றுச் சொல்ல, பையனிடம் பேசினார். தொடர்ந்து எங்கெங்கோ போன் பேசிக் கொண்டிருந்தார். எல்லாம் முடித்து விட்டு என் முகத்தினைப் பார்த்தார்.

”சொல்லுங்க” என்றேன்.

”என் பையன் கடைசிக் காலத்தில கஞ்சி ஊத்தமாட்டான் சார்” என்றார்.

“ அதான் தெரிஞ்ச கதையாச்சே சார். என்ன நடந்தது? ” என்று கேட்க கதை சொன்னார்.

பதினொன்றரைக்கே வருவேன் என்றுச் சொல்லி விட்டு ஏன் இப்போது மேலும் லேட்டாக வருகிறாய் என்றும், என் டயத்தை வேஸ்ட் செய்கிறாய் என்றும் சத்தம் போட்டிருக்கிறான். அது மட்டுமல்லாமல், இவர் வருவதற்கு லேட்டாகுமென்பதால், பையனை டான்ஸ் கிளாஸ்ஸிற்கு கொண்டு செல்ல மாற்று ஏற்பாடாக தன் பக்கத்து வீட்டு நண்பர்களை அழைத்திருக்கிறார். அவரின் நண்பர்கள் எல்லோரும் இப்போது தான் பையன் அழைத்தார் என்றும், நாங்கள் தூரத்தில் இருப்பதால் உடனடியாக வர இயலாது என்றும் சொல்லி இருக்கின்றனர். நண்பரின் பையன் அப்பாவிடம் சொல்வதற்கு முன்பே, அவரின் நண்பர்களை அழைத்து விசாரித்து இருக்கிறார். இது தெரியாமல் இவர் அவரின் நண்பர்களை அழைத்திருக்கிறார். அவர்கள் முடியாது என்றுச் சொல்லியவுடன் அப்பாவுடன் சண்டை போடுகிறான். அதன் பிறகு அவனின் அம்மாவை கொண்டு வந்து விட ஏற்பாடு செய்திருக்கிறான்.

இந்தக் காலக் குழந்தைகள் தன் நலம் சார்ந்தே வாழ்கின்றன என்று சோகத்துடன் சொன்னார். பிறரின் பிரச்சினை என்ன என்பதைப் பற்றி கொஞ்சம் கூட புரிந்து கொள்ள மறுக்கின்றனர். விளைவு - வயதானவர்கள் விடுதிகள் புற்றீசலாய்க் கிளம்புகின்றன.

ஏன் இந்தச் சூழ் நிலை ஏற்பட்டது என்பதை பெற்றோர்கள் கவனித்து சரி செய்யா விட்டால், வயதான காலத்தில் எங்கோ கிடந்து உழல வேண்டியதுதான்.


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.