பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை ஆண்ட போது, உப்புக்கு வரி விதித்தார்கள். அதை எதிர்த்து காந்தி உப்புச் சத்யாகிரகத்தைத் ஆரம்பித்தார். வேதாரண்யத்தில் ராஜாஜி தங்கி இருந்து உப்புச் சத்யாகிரகத்தை நடத்த திட்டமிட்டார். காவல்துறையினர் இவரை உப்பு எடுக்க விடாது தடுக்க வேண்டும் என்று கருதி அதற்கென முன்னேற்பாடுகளில் இருக்கும் போது இரவே தண்ணீர் எடுத்து உப்புக் காய்ச்சி உப்பை எடுத்து விட்டாராம் ராஜாஜி. அப்போராட்டத்தின் போது போலீஸார் அடிதடி நடத்த கையிலெடுத்த உப்பை விடாது பிடித்துக் கொண்டு போராடினாராம் ஒருவர். அவர் கையை மண்ணில் வைத்து மிதிக்க கட்டை விரல் தனியாக துண்டாகப் போய் விழுந்ததாம். இப்படி ஒரு காட்சியை ‘மண்ணில் தெரியுது வானம்’ என்ற நாவலில் விவரித்திருக்கிறார் ஆசிரியர் ந.சிதம்பர சுப்ரமணியன். இன்றைக்கு ஒரு நாள் வங்கி வாசலில் நிற்பதுக்கு கூட வலிக்கிறது. அன்றைக்கு தன் உயிரைக் கொடுத்து இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்கள் எங்கே? ஒரே ஒரு நாள் வெயிலில் நின்றால் குதிக்கும் நாம் எங்கே? வெட்கமாக இல்லையா?
அப்போது பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சம்பளம் பெற்றுக் கொண்டு தன் நாட்டு மக்களையே அடித்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் இல்லை. நம்மவர்கள் தான். நம் இந்திய மன்னர்கள் தான் வயிற்றைக் கழுவுவதற்காக பிரிட்டிஷாரிடம் கூலி வாங்கிக் கொண்டு சுதந்திரத்திற்காகப் போராடிய தன் சகோதரனை அடித்து உதைத்து மண்டைகளைப் பிளந்து பலரை பரலோகம் போக வைத்துக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரனிடம் தன்மானத்தை அடகு வைத்து வயிற்றுப் பிழைப்புக்காக அவன் காலை நக்கிக் கொண்டு ஊழியம் வாங்கிக் கொண்டிருந்தனர்.
இதே நாவலில் ஒரு இடத்தில் பத்திரிக்கை அலுவலகத்தில் நடந்த ஒரு விஷயத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். உலகப்போர் நடந்து கொண்டிருந்த போது இந்தியாவும் கலந்து கொண்டதாக பிரிட்டிஷார் அறிவித்தனர். போர் காலமாகையினால் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. தினசரி பதிவு செய்து ஒரு வருடம் நடத்தினால் அரசே தினசரிக்கான பேப்பரை மானிய விலையில் கொடுக்கும். (இன்றைக்கும் இந்த விஷயம் நடந்து கொண்டிருக்கிறது எவருக்காவது தெரியுமா?) அவ்வாறு கொடுக்கப்பட்ட பேப்பர் பண்டிலை கள்ளமார்க்கெட்டில் விற்று கறுப்புப்பணத்தை உருவாக்கினார்கள் என்று நாவலில் பதிவு செய்திருக்கிறார். அந்த இதழின் ஆசிரியர் ஒருவர் காந்தியின் பால் பற்றுக் கொண்டவர் என்றும் மற்றொருவர் வியாபாரி என்று எழுதி உள்ளார்.
காந்தி காங்கிரஸ்ஸைக் கலைத்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் எவரும் கேட்கவில்லை. பதவிக்கு வந்ததும் அரசு நிலங்களை தங்கள் பெயர்களில் மாற்றிக் கொண்டனர் என்றும் ஒரு விஷயத்தை நாவலில் விவரித்திருக்கிறார் ஆசிரியர். அந்த நாவலின் முன்னுரையில் எழுதப்பட்ட ஆண்டு 1969 என்று தேதியிடப்பட்டுள்ளது. அன்றைக்கே ஆரம்பித்து விட்டனர் தம் ஆட்டத்தினை சுய நலக்கும்பல்கள். கதர் உடுத்தி மக்களிடையே வேஷம் போட்ட அந்த நயவஞ்சகக் கும்பல் தன் குடும்பத்தினையும் தன் நலத்தினையும் மட்டுமே உத்தேசித்து இந்திய மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து கொழுக்க ஆரம்பித்தனர். அதைத்தான் அந்த நாவல் விரிவாக எடுத்துச் சொல்கிறது.
இந்தியா சுதந்திரம் அடையப் போராடி எத்தனையோ உயிர்கள் போராட்டக்களத்தில் பலியாயின. அப்போது பலியாகக் காரணமாயிருந்த காவல்துறையிலும், ராணுவத்திலும் இருந்தவர்கள் பெரும்பான்மை இந்தியர்களே. அவர்களே வயிற்றுப் பிழைப்புக்காக போராட்ட வீரர்களை அடித்துக் கொன்றனர். பிரிட்டிஷ் அரசிடம் வேலை செய்வதைக் கவுரவம் என்றுச் சொல்லித் திரிந்தார்கள் பல சுயநலவாதிகள் அன்றைக்கு.
சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இந்தியாவில் இன்னும் தெருவில் படுத்திருக்கும் ஏழைகள் குறையவில்லை. எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய பலனை தன் சுய நலத்தினால் குவித்து வைத்துக் கொண்டு இந்திய மக்கள் தொகையில் சுமார் 1 சதவீதமாக இருக்கும் சுய நலக்கும்பல்கள் குபேரர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தவுடன் எரிகிறது.
60 ஆண்டுகால ஆட்சியில் கொள்ளையடித்து குவித்து வைத்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கும் பல சுயநலநரிகள் போக வழி தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். கோடிகளில் சம்பளம் பெற்று கள்ளப்பணத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் பல நடிகர்கள் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர். கல்வித் தந்தைகள் இனி என்ன செய்வது என்று தெரியாமல் பிரதமரை கடும் கோபத்துடன் தனிமைகளில் திட்டிக் கொண்டிருக்கின்றனர். ஊழல் அரசு அலுவலர்கள் தங்கள் அநியாயமாக திரட்டி வைத்திருக்கும் பணத்தை வெள்ளையாக மாற்ற அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இருக்க வீடே இல்லாதவர்கள் பலர் இருக்க ஒருவன் பல வீடுகளை வாடகைக்கு விட்டுக் கொண்டிருக்கின்றான். இதெல்லாம் எப்படி சாத்தியமானது? என்றால் அது கள்ளப்பணம். கறுப்பு பணம் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
அரசின் சட்டம் 250000க்கும் மேல் சம்பாதித்தால் கணக்கு காட்டு என்கிறது. ஆனால் எவரும் காட்டுவதில்லை. சம்பாதிக்கும் பணத்தைக் கணக்கு காட்டியே தீர வேண்டும் என்றால் குதிக்கின்றார்கள். சட்டத்தை மதிக்கமாட்டேன் என்கிறார்கள். தெருவில் இறங்கிப் போராடுகின்றார்கள்.
தெருவோரம் படுத்து இருக்கும் ஏழைகளுக்காக என்றைக்காவது போராடினார்களா இந்த வெள்ளை வேட்டி குறு நில மன்னர்கள்? இல்லையே? ஊழலில் குவித்த பணம் வெற்றுக் காகிதமாய் போய் விடுமே என்பதற்காக கூட்டம் கூட்டி கூப்பாடு போடுகின்றார்கள்.
கள்ளப்பணத்தை வைத்துக் கொண்டு நிலத்தின் விலையை ஏற்றுகிறார்கள், பொருட்களை வாங்கிப் பதுக்குகின்றார்கள். பொருட்களின் விலையேறுகிறது. கள்ளப்பணத்தினால் தான் சாதாரண நேர்மையான ஒருவனால் இடம் கூட வாங்க முடிவதில்லை. இதையெல்லாம் சரி செய்ய அரசு முடிவெடுத்தால் குதிக்கின்றார்கள். போராடுகின்றார்கள். ஊழல் பணத்தால் தன் ஆசை நிறைவேற அதிக விலை கொடுத்துப் பொருட்களை வாங்குகிறார்கள். அதே விலைக்கு சாதாரண மக்களும் வாங்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகி விடுகிறது. நான் சொல்லும் இந்த விஷயம் உண்மையா இல்லையா என்று யோசித்துப் பாருங்கள்.
இதோ பருப்பு விலைகுறைந்து வருவதாக விகடன் வெளியிட்ட செய்தி. கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளவும். கருப்புப் பணத்தைக் கொண்டு பதுக்கி வைத்த பருப்பு வகைகள் வெளியில் வர ஆரம்பித்திருக்கின்றன.
http://www.vikatan.com/news/india/73668-reason-behind-decrease-in-dal-prices.art
இதோ பருப்பு விலைகுறைந்து வருவதாக விகடன் வெளியிட்ட செய்தி. கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளவும். கருப்புப் பணத்தைக் கொண்டு பதுக்கி வைத்த பருப்பு வகைகள் வெளியில் வர ஆரம்பித்திருக்கின்றன.
http://www.vikatan.com/news/india/73668-reason-behind-decrease-in-dal-prices.art
ஊழல் பணத்தினால் தங்கள் குழந்தைகளுக்கு விலைக்கு படிப்பினை வாங்கி விடுகின்றார்கள். கள்ளப்பணத்தினால் தங்கள் மகன் மகள்களை சினிமாவில் நடிக்க வைத்து கோடிகளில் சம்பாதிக்கின்றார்கள். இப்படி இந்தியாவெங்கும் ஊழல்வாதிகளும், சுய நலக்கும்பல்களும் அக்கிரமமாகச் சம்பாதித்த பணத்தினால் இந்தியர்களைச் சுரண்டிக் கொண்டே இருக்கின்றார்கள். இந்தியர்கள் மேலும் மேலும் ஏழைகளாகிக் கொண்டே இருக்கின்றார்கள். விலைவாசியும் விண்ணில் ஏறிக் கொண்டிருக்கின்றது. வீட்டு வாடகை 1000 ஆக இருந்தது இன்றைக்கும் 10000 ஆகி விட்டது. இந்த உயர்வு யாரால் ஏற்படுத்தப்படுகிறது என்று யோசித்துப் பாருங்கள். உழைப்பவர்களின் பணத்தினை தான் ஊழல் செய்த பணத்தினால் வைத்து இருக்கும் சொத்துக்களை வைத்து மேலும் உறிஞ்சுகின்றார்கள்.
அன்றைக்கு சுதந்திரப் போராட்டத்தின் போது தன் சகோதரனையே கொன்றொழித்த பிரிட்டிஷ் அடிமைகளாக இருந்த இந்தியர்களையும், இன்றைக்கு கள்ளப்பணத்திற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராகப் போராடும் சுதந்திர இந்தியர்களுக்கும் ஏதாவது வேறுபாடுகள் தெரிகின்றனவா?
இந்திய அரசின் இந்த நடவடிக்க பாமர மக்களுக்கு பல சிரமங்களைக் கொடுக்கிறது என்பது உண்மைதான். அந்தச் சிரமங்கள் எதிர்கால தம் சந்ததியினருக்கு நல்லதைக் கொண்டு வரும் என்று புரிந்து கொள்ள வேண்டும். எதிர்கால சந்ததியினர் சுகமாக வாழ நாம் இந்தச் சிரமங்களை ஏற்று இந்திய அரசுக்கு ஆதரவு நல்க வேண்டும். கருப்புப்பண கோட்டான்களும், ஊழல் பெருச்சாளிகளும் மக்களை திசை திருப்ப தாங்கள் வைத்திருக்கும் அதர்ம பணத்தினைக் கொண்டு பல்வேறு விஷயங்களை முன்னெடுப்பார்கள். அந்தக் கபாலிகளிடம் ஜாக்கிரையாக இருக்க வேண்டும்.
சினிமாவில் வந்த பாடல் வரிகள் இவை. படியுங்கள். உண்மையை உணருங்கள்.
என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?
இன்பம் துன்பம் என்பது
இரவு பகலைப் போன்றது
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
சோகமென்ன தோழனே
சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு
இன்று ஓய்வெடு
நீ இன்று ஓய்வெடு
என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
பிறக்கும் போதும் பேரில்லை
இறக்கும் போதும் பேரில்லை
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
ஜெயிக்கபோகும் மானிடா
மயக்கம் இங்கே ஏனடா
உறுதியோடு கேளடா
உண்மை நீயடா
ஓ... உண்மை நீயடா
என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?
நன்றி:- பாடலாசிரியர் வைரமுத்து. இயக்குனர் பாலு மகேந்திரா மற்றும் ந.சிதம்பர சுப்பிரமணியன்
இந்த சமயத்தில் இந்தப் பாடல் சொல்லும் அர்த்தங்கள் பல. கண்ணில் தெரியும் கபாலிகளைப் பாருங்கள். கபாலிகளிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க மீண்டும் ஒரு சுதந்திரப்போரினை நம் பாரத அரசாங்கம் அறிவித்திருக்கிறது என்பதை நினைவில் கொண்டு கபாலிகளுக்கு எதிராகப் போராடுவோம் வாருங்கள்.
இந்தியத் தாய்க்கு வணக்கம் !
இந்தியத் தாய்க்கு வணக்கம் !