குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 22, 2016

இப்படியும் ஒரு தாய்

”தலைவரே எனக்கு பெண் பிறந்திருக்கிறாள்” என்றார் நண்பர். ”இதோ வந்து விடுகிறேன்” என்றுச் சொன்னேன். ஆனால் மாலையில் ஓஷோவின் “நாரதரின் பக்தி சூத்திரத்தில்” மூழ்கியதால் அந்த நினைப்பே வரவில்லை. மணி ஏழாயிற்று. இனி விசிட்டர்ஸ் அனுமதி இல்லையென்றுச் சொல்லி விடுவார்கள் என்பதால் மறு நாள் செல்வதற்கு முடிவு செய்து கொண்டேன்.

மறு நாள் மாலை. வெயிலொன்றும் அதிகமில்லை. குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. கே.எம்.சி.ஹெச்சிற்குச் சென்றேன். கையில் நண்பரின் அம்மா தூங்கிக் கொண்டிருந்த அந்த அற்புதத்தை என்னிடம் தந்தார். அது அழகாக கண் மூடி துயிலிருந்தது. மலர்ந்த ரோஜாவைப் போல. சின்னஞ்சிறு கைகள் மூடி இருந்தன. கமலக் கண்கள் திரையிட்டிருந்தன. வெதுவெதுப்பான துணியில் ஒளி வீசும் மரகதமாய் துயில் கொண்டிருந்தது அந்த உயிர். அங்கு இவருக்கு மட்டும் தான் மதிப்பு. பெற்றவர்களுக்கு அவர் தான் சந்தோஷம். புதிய உயிரை உலகிற்கு தந்த பெரும் மகிழ்வில் அந்தத் தாயும் தகப்பனும் முகம் மலர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சுகப் பிரசவம் ஆகி இருக்கிறது எனக் கேள்விப்பட்டேன்.

என் மகளை என்னிடம் கொண்டு வந்த கொடுத்த போது அருகிலிருந்த அம்மாவிடம், ”என்னம்மா இவ்ளோ வெள்ளையா இருக்குது?” எனக் கேட்டேன். ”தண்ணிக்குள்ளே கிடந்துச்சுல்ல, அது அப்படித்தான் இருக்கும். காது மடலைப் பார் அந்தக் கலர் தான்” என்றார்.

என் மகன் பிறந்த போது கண்களை திறந்து கொண்டே தான் இருந்தான். பிறக்கும் குழந்தையின் கண்கள் நன்றாகத் தெரியும் என்றுச் சொல்லி செம்போத்து என்கிற செண்பகக் குருவியைக். கிராமத்திலிருந்து என் நண்பன் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்தான். உடனே கிளம்பி விடாதீர்கள். அது கிராமப்புற நம்பிக்கை. அவ்வளவுதான்.


(செண்பகம் என்று அழைக்கும் செம்போத்துக் குருவி)

குழந்தைப் பிறந்ததும் ஒரு வருடத்திற்கு கண்ணை இமை காப்பது  போலக் காப்பாற்ற வேண்டும். அசந்து தூங்க முடியாது அந்தத் தாயால். தவழ ஆரம்பித்தவுடன் மேலும் கவனம் வேண்டும். எதையாவது எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும். ஐந்து வருடம் வரை குழந்தையை நோய்களிலிருந்தும், பிற பிரச்சினைகளிலிருந்தும் காப்பாற்ற ஒரு தாய் படும்பாடு சொல்லிக் கொள்ள முடியாது. இப்படித்தான் காவிரி நீருக்காக தீக்குளித்த விக்னேசையும், எவராலோ கொல்லப்பட்ட இந்தியாவின் இருபது ராணுவ வீரர்களையும் அவர்களின் பெற்றோர்கள் பெற்று வளர்த்திருப்பார்கள்.

ஒரு உயிரைக் கொல்வதை எளிதாகச் செய்து விடுகின்றார்கள். அந்தளவுக்கு மிருக குணம் கொண்டு கொலை செய்து விட்டு என்ன சாதிக்கப்போகின்றார்கள் என்பது தான் விளங்கவில்லை. ஏன் சக மனிதனிடம் இத்தனை வன்மம்? 

டிவி சானல்களில் யாருக்காகவோ அனைவரும் அடித்துக் கொள்கின்றார்கள். விட்டால் லைவ்வாக கொலை கூட செய்து கொள்வார்கள். ஏன் இப்படிப்பட்ட வாக்குவாதங்களைச் செய்கிறோம் அதனால் சமூகப் பெறப்போவது என்ன என்று கூடவா சிந்திக்க மறந்து போனார்கள் இவர்கள்? பெயர்களின் கீழே பார்த்தீர்கள் என்றால் ‘சமூக ஆர்வலர்’ என்று குறிப்பிடுவார்கள். கொடுமை!

மருத்துவமனையில் நண்பரின் அம்மா என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் தன் கிட்னியை தன் மகளுக்கு தானம் கொடுத்திருக்கிறார். அருகில் அவரின் பெண் இருந்தார். 

“உங்களுக்கு என்ன காரணத்தினால் கிட்னியில் பிரச்சினை வந்தது?” எனக் கேட்டேன்.

குழந்தைப் பிறப்பதற்கு தாமதமானதால் ஒரு பிரபலமான சோப்பு, ஷாம்பு, வாசிங் மற்றும் உணவூட்டப் பொருட்களை விற்கும் கம்பெனியின் மாத்திரையைச் சாப்பிட்டால் கரு தரிக்கும் என்றுச் சொல்லி இருக்கின்றார்கள். இந்தப் பெண் குழந்தை பெறும் ஆசையில் மாத்திரையை வாங்கி விழுங்கி இருக்கிறார். கிட்னி போச்சு. இனி வாழ் நாள் முழுவதும் அந்தப் பெண்ணின் நிலைமை. அந்தக் கம்பெனிக்கு காசு கிடைத்து விட்டது. உலகப் பெரும் கோடீஸ்வரக் கம்பெனிகளில் அதுவும் ஒன்றாக இருக்கும்.

கிட்னி டோனரிடம் பலவிதமாய் பேசுவார்களாம். பயமுறுத்துவார்களாம். கிட்னி தானத்தில் உறுதியாக இருக்கின்றார்களா என்று பல சோதனைகளைச் செய்வார்களாம். அதன் பிறகு தான் கிட்னி தானம் நடக்குமாம். 

”நான் மருத்துவரிடம் சொல்லி விட்டேனுங்க. என் இரண்டு கிட்னிகளையும் எடுத்து அவளுக்கு வைத்து விடுங்கள். நான் என் குழந்தைகளுக்காகத்தான் வாழ்கிறேன், அவர்களுக்காக இறப்பது எனக்கு மகிழ்ச்சியே” என்றுச் சொன்னேன் என்றார் அந்தத் தாய்.

(இந்தத் தாய் சொல்லும் மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கும் ரஜினி காந்த் சொன்ன மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் புரிகிறதா உங்களுக்கு)

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.