குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, March 28, 2011

தேர்வு சில நினைவுகள்


(இது மனோரா என்றழைக்கப்படும் கடற்கரையோர அந்தக்கால கலங்கரை விளக்கம். வெகு அருமையான சுற்றுலாத் தளம்)

ஆவணம் கிராமத்திலிருந்து பேராவூரணிக்குத் தான் பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதச் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். விடிகாலையில் எழுந்து குளித்து, கொஞ்சமாய் சாப்பிட்டு விட்டு நானும் போஸும்(எங்களின் வயல் வேலை செய்து வந்தவர்) சைக்கிளில் கிளம்புவோம். குறுக்கு வழியாய் காவிரி ஆற்றின் கிளையாற்றினை ஒட்டிய சாலையில் ஆரஸ்பதி மரங்கள் வரிசையாய் நிற்கும் நிழலில் மெதுவாய் சைக்கிளை மிதிப்பார் போஸ்.

கோடை காலம் ஆதலால் ஆற்றில் தண்ணீர் வராது. கதிர் அறுப்பு முடிந்து போய் வயல் வெளிகளில் ஆங்காங்கே வைக்கோல் போருகள் குட்டி குட்டியாய் காட்சியளிக்கும். பொறுக்கு மண் அடிக்கும் வண்டிகள் வயல்களுக்குள் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும். அப்படியே மெதுவாய் ஆற்றோரமாய் வந்து கொண்டிருக்கும் போது ஆறு ஒரு இடத்தில் முடிந்து போய் இருக்கும். அது என்னவென்றால், ஆற்றுத் தண்ணீர் முழுமையும் ஒரு இடத்தில் குழாய் போன்றிருக்கும் பகுதிக்குள் கொட்டும், அத் தண்ணீர் பத்து மீட்டர் பூமிக்குள்ளே பதியப்பட்டிருக்கும் குழாய் வழியாகச் சென்று வெகு வேகமாய் மறு முனையில் கொப்பளித்துக் கிளம்பி வேகமாய்ச் செல்லும். தண்ணீரின் வேகம் குறையாமல் இருக்க அப்படி ஒரு சிஸ்டம் வைத்திருந்தார்கள். ஊரில் அதைக் கேணிப்பாலம் என்பார்கள்.

அதைத் தாண்டிச் செல்லுகையில் ஓரிடத்தில் போர் மூலம் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும். வருடம் முழுவதும் அப்பகுதியில் விவசாயம் நடந்து கொண்டிருக்கும். பசுமை கண்ணுக்கு குளிர்ச்சியாய் தெரியும். அப்படியே சிறிது தூரம் கடந்து சென்றால் தென்னை மரங்கள் சூழ்ந்திருக்கும் ஊர் வழியாய் பேராவூரணியில் இருக்கும் அரசு பள்ளிக்குச் சென்று சேர்வோம்.

நான் படித்த காலத்தில் அறிவியலில் 40 மதிப்பெண்ணுக்கு ஒற்றை வார்த்தையில் விடையளிக்கும் கேள்விகள் இருக்கும். நாற்பது வார்த்தைகள் எழுதி விட்டால் போதும் எளிதில் தேர்வாகி விடலாம். இத்தேர்வின் போது போலீஸ்காரர்கள் பள்ளியில் கேட்டருகில் அதிகம் தென்படுவார்கள். தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரம் கழித்து ”எழுதிக்கோங்கோ எழுதிக்கோங்கோ”  என்று பெரும் சத்தம் கேட்கும். ஒருவன் சைக்கிளை வேகமாக ஓட்டுவான். ஒருவான் பின்னால் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு வார்த்தையில் பதில் சொல்வான். இவர்களைப் பார்த்ததும் போலீஸ்காரர்கள் துரத்துவார்கள். ஆனால் விடாமல் 40 விடைகளையும் சொல்லிவிட்டுத்தான் ஓய்வார்கள். சுமாராக படிக்கும் சில மாணவர்கள் தேர்வறைக்குள் வந்ததும் 40 கேள்விகளையும் எழுதி பேனா மூடிக்குள் வைத்து வெளியில் தூக்கி எறிந்து விடுவார்கள். அதை எடுத்து பதில் எழுதி சத்தமாய்ச் சொல்வார்கள். அனைவரும் எழுதிக் கொள்வோம். நான் பதில்களைச் சரிபார்ப்பேன்.

வருடம் தோரும், இது ஒரு பெரும் சுவாரசியமான சம்பவமாய் நடக்கும். எத்தனையோ மாணவர்களில் அறிவியலில் தேர்ச்சி அடைய இந்த வழி காரணமாய் இருந்திருக்கிறது. அதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மனதுக்குள் சிரிப்பொன்று பூக்கும்.

தேர்வெல்லாம் முடிந்த கடைசி நாட்களில் பேராவூரணி சக்கரம் தியேட்டரில் மேட்டினி சினிமாவொன்றினைப் பார்த்து விட்டு திரும்ப வருவோம். போரிலிருந்து ஊற்றிக் கொண்டிருக்கும் தண்ணீரில் கண்கள் கோவைப்பழமாய் சிவக்கச் சிவக்க ஒரு ஆட்டம் போட்டு விட்டு, வீடு வந்து சேர்வோம். 

அந்த நாட்கள் எல்லாம் நினைவுகளூடே இன்றைக்கும் பசுமையாய் நின்று கொண்டிருக்கின்றன. வாழ்வின் சுவாரசியமான சம்பவங்கள் சில சமயங்களில் சோர்வுற்ற மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.

Sunday, March 27, 2011

மாதா பிதா குரு தெய்வம்


மாதா பிதா குரு தெய்வம் என்பதற்கு எனக்கு நீண்ட நாள் கழித்து உதாரண விளக்கம் கிடைத்தது. எனது மகள் கோவையில் இருக்கும் ஸ்ரீ ஜெயேந்திரா வித்யாலயா பள்ளியில் எல்கேஜி படித்துக் கொண்டிருக்கிறார்.நேற்றைக்கு காலையில் நானும் மனைவியும் மகளின் பிரமோஷன் கார்டை வாங்குவதற்காக பள்ளிக்குச் சென்றிருந்தோம்.  நீண்ட நேரம் கழித்து திரும்பிய மனைவியிடம் “ஏன் இவ்வளவு தாமதம்?” என்று கேட்டேன்.


”வீட்டில் அம்மாவையே சுற்றிச் சுற்றி வந்தவர்கள், பால் குடி மறந்து பள்ளிக்கு வந்து , என்னையேச் சுற்றி வந்தார்கள். அவர்களுக்கு ஏபிசிடி சொல்லிக் கொடுத்து, சாப்பாடு ஊட்டி விட்டு, தூங்க வைத்து, பாட்டுச் சொல்லிக் கொடுத்து வந்தேன். என் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வருவார்கள்.சில பிள்ளைகள் பேசவே மாட்டார்கள். ஆனால் கடந்த ஒரு வாரமாக பேச ஆரம்பித்தார்கள். இத்தனை காலம் பேசாமல் இருந்து விட்டு, வகுப்பை விட்டுச் செல்லும் போது பேசுகிறார்களே என்று அழுகை அழுகையா வருகிறது. தூங்கும் நேரம் மட்டுமே அம்மாவிடம் இருந்தார்கள். பெரும்பாலான நேரத்தில் என்னுடனே கழித்த பிள்ளைகள் இப்போது வகுப்பை விட்டுச் செல்லுவதை நினைத்து என்னால் தூங்கவும் முடியவில்லை. சாப்பிடவும் முடியவில்லை . இனி யார் என்னைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். யாருடன் நான் விளையாடுவது? யாருக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுப்பது? ”என்று எனது மகளின் ஆசிரியை அழுதார் என்றுச் சொன்னார். அழுது அழுது ஆசிரியையின் முகம் வீங்கிப் போய் இருப்பதாக சொல்ல, என் மனது பட்ட வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. மனைவியோ கண்களில் கண்ணீரோடு என்னிடம் என் மகளின் ஆசிரியைப்பற்றி சொல்லிக் கொண்டு வந்தார். எந்த ஒரு பிரச்சினைக்கும் கலங்காத என் கண்கள் நேற்றைக்கு கலங்கி நின்றன.

இதற்கு தீர்வு தான் என்ன? இது தீர்வு காண வேண்டிய ஒன்று அல்ல. அந்த ஆசிரியையின் அன்பினை காட்டுகிறது. இனி புதிதாய் வந்து சேரக்கூடிய மாணவர்களோடு பழக ஆரம்பித்தால் கொஞ்சம் கொஞ்சமாய் புதிய மாணவர்கள் மீது பிரியம் கொள்வார். ஆனாலும் கடந்த ஒரு வருடமாய் பழகிய அந்த அன்பு உள்ளம், வரப்போகும் பிரிவினைக் கண்டு துடித்த, அந்த அன்பு உள்ளத்தின் பரிதவிப்பு கண்டு எங்கள் மனது பட்ட வேதனையை வார்த்தையால் எழுத முடியாது.

என் மகள் வகுப்பில் சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசில் பெற்றார். அதற்கு திருமதி நொய்லா அவர்களே காரணம். ஆசிரியை திருமதி நொய்லா அவர்களுக்கு பெற்றோர்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களைப் போன்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கிடைப்பது அரிதிலும் அரிது. இவரைப் போன்ற ஆசிரியைகளை நிர்வாகம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பது எனது ஆவல்.


திருமதி நொய்லா அவர்கள் தான் உண்மையான குருவிற்கு ஒரு எடுத்துக்காட்டு. முன்னோர்கள் இவர்களைத் தான் ”குரு” என்றழைத்தார்கள். காசே பிரதானமாகக் கொண்ட இவ்வுலகில் அன்புள்ளத்தோடு வாழும் இவ்வகை மனிதர்களால் தான் உலகம் இன்னும் ஜீவித்து வருகிறது. 

திருமதி நொய்லா அவர்களின் அன்பிற்கு இவ்வுலகில் ஈடானது ஒன்றுமே இல்லை. கடவுள் இவருக்கும், இப்பள்ளிக்கும் ஆசீர்வாதங்களை வழங்க நாங்கள் பிரார்த்திக்கிறோம்.




Wednesday, March 9, 2011

கோவை சாந்தி கியர் கேண்டீன்

ஒண்டிப்புதூரில் இருக்கும் நண்பரைப் பார்க்கச் செல்லும் வழியில் சாந்தி கியர் கேண்டீன் என்ற போர்டைப் பார்த்ததும் காலையில் சாப்பிடாத காரணத்தால் ஒரு காஃபி குடித்து வரலாம் என்று உள்ளே சென்றேன். 

சென்ற பிறகுதான் தெரிந்தது அது கேண்டீன் இல்லை உயர்தரமான உணவகம் என்பதை. சுத்தமாய் பளிச்சிடும் டைல்ஸ் தரைகள். செல்ஃப் சர்வீஸ் பாணி பரிமாறுதல். சுத்தமாக துடைக்கப்படும் மேஜைகள். மெல்லிய சங்கீதம் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. சில்லிட்ட காற்று வீசுகிறது. சத்தமில்லாத சூழல். அமைதி தழுவும் சுற்றுப்புறங்கள். குழந்தைகள் கைகழுவ படிகள் என்று அசத்தினார்கள்.

உணவுகளின் விலையோ மிகக் மிகக் குறைவு. சாம்பார் வடையொன்றினை மனைவி வாங்கி வந்தார். விலை 10 ரூபாய் தான். இதே சாம்பார் வடை வேறு ஹோட்டல்களில் 23 ரூபாய் கொடுத்திருக்கிறோம். இட்லியோ ஆறு ரூபாய்(2) என்று எழுதி இருந்தது. மேலும் படிப்பதற்குள் அழித்து விட்டார் ஒரு அன்பர். கோதுமை தோசை சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.

நண்பரிடம் விசாரித்தேன். கோவையில் பாதி பேர் சமைப்பதே இல்லை என்றும், சனி மற்றும் ஞாயிறுகளில் குடும்பத்தோடு சாந்தி கேண்டீனுக்கு வந்து விடுவதாகவும் சொன்னார். முழுச் சாப்பாட்டின் விலை ரூபாய் 25 என்றுச் சொன்னார். அசந்து விட்டேன்.

ஏதாவது அசந்தர்ப்பமாகத்தான் ஹோட்டல்களில் சாப்பிடுவதை வழக்கமாய் வைத்திருக்கிறேன். அதுவும் பழங்கள் கிடைக்காத போது, ஹோட்டல்களை நாடுவது வழக்கம். வீட்டுச் சமையல் போல சுத்தமான, சுகாதாரமான சமையல் எல்லாம் ஹோட்டல்களில் இன்றைய சூழலில் இருக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. எனது நண்பரின் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு மாதம் வரை ஃப்ரீசரில் ஆட்டுக்கறியையும், கோழிக்கறியையும் வைத்திருப்பார்கள். அதற்கு தேவையான கிரேவியை ஒரு வாரம் வரை வைத்திருப்பார்கள். அதையெல்லாம் பார்த்த பிறகு ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவுகளை உண்ணவும் ஆசை வருமா? இந்த நண்பருக்கு ஹோட்டல் சாப்பாடு பிடிக்காது. அவருக்கும் எனக்கும் வீட்டிலிருந்து தான் சாப்பாடு வரவழைப்பார். காரணத்தை பிறகுதான் புரிந்து கொண்டேன்.

சாந்தி கியர்ஸின் சோசியல் சர்வீஸ் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. நான் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் பணியாற்றிய போது அங்கு வரும் அன்பர்களை சாமியார் முதலில் சாப்பிடச் சொல்லி விடுவார். அதன்பிறகு தான் வந்த காரணம் பற்றி பேசுவார். என்னையும் அப்படியே வாழும்படி சொல்வார். ஒருவனுக்கு எவ்வளவு காசினைக் கொடுத்தாலும் போதாது என்றுதான் சொல்லுவான். ஆனால் சாப்பாடு போட்டுப் பாருங்கள். ஒரு அளவுக்கு மேல் போதும் போதும் என்றுச் சொல்லி விடுவான். அவனுக்கு வயிறும் நிறைந்து விடும். மனதும் நிறைந்து விடும். இதைத்தான் தர்மத்திலேயே மிக உயர்ந்த தர்மம் “அன்னதானம்” என்றுச் சொல்வார்கள்.

அந்த அன்னதானத்தையும் மிகுந்த அர்தத்தோடு செய்யும் சாந்தி கியர்ஸின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.




Wednesday, March 2, 2011

உணவே விஷமான சம்பவம்

மிகச் சமீபத்தில் மனைவி சொந்த வேலையாக வெளியூர் சென்றிருந்தார். அன்றைய இரவு உணவுக்காக ஹோட்டல் செல்லும் வழியில், கேரளக்கார கடை ஒன்று கண்ணில் பட்டது. ஆப்பம், கொண்டக்கடலைக் குழம்பு என்று போர்டில் எழுதி இருந்தார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கொச்சின் செல்லும் வழியில், பாலக்காட்டில் ஆப்பமும், கொண்டக்கடலைக் குழம்பும் சாப்பிட்டது நினைவுக்கு வர, உடனடியாக டூவீலரை நிறுத்தி உள்ளே சென்றேன்.

சூடாக இரண்டு ஆப்பமும், குழம்பும் பரிமாற சாப்பிட்டு முடித்து விட்டு வீடு வந்து விட்டேன். மறு நாள் காலையில் எச்சில் முழுங்க முடியவில்லை. தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டது போல இருந்தது. ஏதோ பிரச்சினை என்று மட்டும் தெரிந்தது. சரி மறு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். காரம், புளி சேர்க்காமல் சாப்பிட்டு வந்தேன். இரண்டு நாளாக தொண்டையில் கட்டிக் கொண்ட உணர்வு மட்டும் போகவே இல்லை. வேறு வழி இன்றி மருத்துவரிடம் சென்றேன். தொண்டையில் புண் என்று சொல்ல திக்கென்றாகி விட்டது.

இரு நூறு ரூபாய் செலவு, பதினைந்து நாட்கள் ஆயின தொண்டைப் புண் ஆறுவதற்கு.  முப்பது ரூபாய்க்கு ஆப்பம் சாப்பிட்ட கொடுமையால், உடம்பே ஏறுக்கு மாறாய் மாறி விட்டது. அதுமட்டுமா பதினைந்து நாட்கள் அவஸ்தை வேறு. இந்த ஹோட்டலின் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? இத்தனைக்கும் கோயமுத்தூர் ஹெல்த் டிபார்ட்மெண்டில் எனது நண்பர் வேலை செய்கிறார். கம்ப்ளைண்ட் எழுதிக் கொடு, தூக்கி விடுகிறேன் என்கிறார். அதன்பின் வரும் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் விட்டு விட்டேன்.

நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன கதைகள் அனைத்தும் படு பயங்கரமாய் இருந்தன. மட்டன், சிக்கன் சாப்பிடாத காரணத்தால் மீன் உணவை மாதமொருமுறை பயன்படுத்தி வருகிறேன். அந்த மீனில் இருக்கும் படுபயங்கரம் என்ன தெரியுமா? மீன் பிடித்து கிட்டத்தட்ட இருபது நாட்களுக்குப் பிறகு தான் விற்பனைக்கே வரும் என்றும், அந்த மீனைச் சாப்பிடுவதால் ஏகப்பட்ட வியாதிகள் வரும் என்றும், பேசாமல் டேம் மீனுக்குச் சென்று விடுங்கள் என்றும் சொன்னார். டேம் மீன் மட்டும் சும்மாவா, மீனுக்கான உணவிற்காக குளத்தில் யூரியாவைக் கொட்டுகிறார்கள் என்றும் சொன்னார்.

அதுமட்டுமல்லாமல் தெருக்களில் விற்பனைக்கு வரும் மீன்கள் பெரும்பாலும் கடைசித் தரமானது என்றும் சொன்னார். கேட்கவே படுபயங்கரமாய் இருந்தது. 

கடந்த வாரம் எனது நண்பரின் பண்ணை வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு முற்றிலுமாய் ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்கிறார்கள். நல்ல இள நீர் ஒன்றினை அருந்தி விட்டு, வரும் வழியில் காலிஃபிளவர் தோட்டத்தைப் பார்த்தேன். அய்யோ என்று கதறலாம் போலிருந்தது. மருந்தால் பயிராகும் ஒரு  உணவுப் பொருள் என்றால் அது காலிஃபிளவர்தான். பேஸ்டு போல மருந்து ஒட்டி இருந்தது. காலிஃபிளவரில் இருக்கும் செலோனியம் புற்று நோய்க்கிருமிகள் வராமல் தடுக்கின்றன என்று படித்த ஞாபகம் வந்தது.

நவீனகாலம் உணவை விஷமாக்கியதை தவிர வேறொன்றும் செய்யவில்லை மனித குலத்திற்கு என்பது உண்மை.

Thursday, February 3, 2011

ஃபெமோவின் தமிழ் கதாநாயகி




எங்களது இணை நிறுவனமான ஃபெமோ, கடந்த இரண்டாண்டுகளாக மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது தமிழ் சினிமாவில் ஃபெமோ முதன் முதலாய் கதாநாயகி ஒருவரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. விரைவில் அதுபற்றிய விபரங்களை வெளியிடுவோம்.

பெரும்பாலும் சினிமாவில் நடிக்க வேண்டுமென்றாலும் கடும் பிரயத்தனம் செய்து சான்ஸ் பிடிக்க வேண்டும். இல்லையென்றால் ஏதாவதொரு நடிகரின் வாரிசாக இருக்க வேண்டும். சினிமாக் கனவில் எத்தனையோ ஆண்களும், பெண்களும் சென்னைக்கு வருகின்றனர். எங்கு செல்வது? எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் தடுமாறி நிற்கின்றனர். சிலர் வழி தவறிச் சென்றும் விடுகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து சினிமாக் கனவுகளோடு சென்னைக்கு வருபவர்களின் கனவினை நிறைவேற்றவும், அவர்களுக்கு தகுந்த வழி காட்டவும் தான் ஃபெமோ ஆரம்பிக்கப்பட்டது. 

இதுவரையிலும் விளம்பரங்களில் மட்டுமே தனிக் கவனம் செலுத்தி வந்த நாங்கள், தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு படங்களில் நடிக்க, வாய்ப்புகளை பெற உதவி செய்கிறோம்.

எங்களது இணையதளத்தினை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பிரபல விளம்பர இயக்குனர்கள் அடிக்கடி பார்வை இடுகின்றார்கள். அதன் காரணமாய் பல வாய்ப்புக்களைப் பலரும் பெற்றிருக்கின்றார்கள். எந்த வித ஆரம்பக் கட்டணமும் இன்றி வெகு எளிதில் சினிமா மற்றும் விளம்பர மீடியாக்களில் இருப்போர் கவனத்திற்கு நீங்கள் சென்று விடுவீர்கள். 

சினிமா, டிவி மற்றும் விளம்பரங்களில் நடிக்க விரும்புவோருக்கு நல்ல வரப்பிரசாதமாக எங்களது ஃபெமோ நிறுவனம் விளங்கி வருகிறது.

மேலும் விபரங்களுக்கு எங்களது இணைய தளம் http://www.femo.in சென்று பார்க்கவும். 

- ஃபெமோ

Sunday, January 30, 2011

யுத்தம் செய் திரைப்படமும் சாரு (நிவேதிதாவும்)



சென்னையில் இருந்து வந்த நண்பருடன் வெளியில் சென்று விட்டு, வீட்டுக்குள் நுழைந்த போது நிவேதிதா அழுது கொண்டிருந்தார். என்னவென்று விசாரித்த போது, ஏதோ ஒரு குறும்புக்காக அம்மா பேசி விட்டார் என்பதால் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார் நிவேதிதா. வழக்கம் போல மனைவிக்கு சில அர்ச்சனைகளை டீசண்டாக தூவினேன். கூட நண்பரும் அல்லவா இருக்கிறார்? சிறிது நேரம் கழித்து நிவேதிதா சாக்லேட் பாரை எடுத்துக் கொண்டு வர நான் மனைவியைப் பார்த்தேன். எனக்கு ஒன்றும் தெரியாது என்று சமையல் அறைக்குள் சென்று விட்டார் மனைவி.

நண்பர் சென்றதும், சாக்லேட் ஏன் கொடுத்தாய் என்று கேட்க, “ நான் அழுகையை நிறுத்தனும் என்றால் சாக்லேட் சாப்பிட்டாத்தான் அதுவா நிற்கும்” என்று நிவேதிதா சொன்னதாகவும், பேசிக் கொண்டிருப்பதால் அவளால் கவனம் சிதறி விடும் என்பதாலும் சாக்லேட்டைக் கொடுத்ததாகவும் சொன்னார் மனைவி.

இன்று காலையில், யுத்தம் செய் திரைப்படப்பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பின்னால் ஆடிக் கொண்டிருந்த நிவேதிதாவைத்தான் நீங்கள் கீழே இருக்கும் இணைப்பில் பார்க்கின்றீர்கள்.

சாரு நிவேதிதா நடித்த காட்சியை மிஷ்கின் பாடலில் இருந்து நீக்கி விட்டார் என்று கேள்விப்பட்டேன். அதைக் கேட்டு வருத்தத்தில் இருக்கும் சாருவின் ரசிகப் பெருமக்களுக்கு இருக்கட்டுமே என்று இவ்வீடியோவை அளிக்கிறேன்.

Monday, January 24, 2011

புது வீடு கட்டும் முன்பு கவனிக்க வேண்டியவை

மனிதர்கள் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமான வீடுகளைப் பற்றி நாம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து வருகிறோம். ஒரு மொபைல் போன் வாங்கும் போது, அதன் செயல்பாடுகள் என்ன? விலை சரியா, வாரண்டி இருக்கா என்றெல்லாம் யோசித்து வாங்கும் நாம், நமக்கான அடையாளமாய், நம் வாழ்வோடு கூடவே வரும் தோழனாய் இருக்கும் வீடுகளைப் பற்றி அறிந்து கொள்ள சோம்பல் படுகிறோம். பலபேருக்கு இவ்விஷயங்கள் தெரியாது. 

வீடு வாங்க வேண்டுமென்றால் வாஸ்துகாரரை அழைத்து பீஸ் கட்டினால் போதும் என்ற நிலைக்கு மக்கள் இருக்கின்றார்கள்.முழுவதும் தெரிய வேண்டாம், ஆனால் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா அதற்குதான் இத்தொடரை எழுதுகிறேன்.

இனி, புது வீடு கட்ட நிலம் வாங்க முனையும் போது, அந்த நிலம் வீடு கட்ட தகுதி உடையதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

நிலத்தில் உயிர் நிலம், உயிரற்ற நிலம் என்று இருக்கின்றன. உயிர் நிலத்தில் மனித குலத்திற்கு நன்மை தரக்கூடிய செடிகள் முளைத்திருக்கும். உயிரற்ற நிலத்தில் புல், பூண்டு கூட முளைத்திருக்காது. மேடு, பள்ளம், பிளவுகள் இருக்கும். உயிர் நிலத்தில் வீடுகட்டினால் நல்ல வாழ்க்கை வாழலாம். உயிரற்ற நிலத்தில் வீடுகள் கட்டக்கூடாது என்று மனையடி சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.



நிலத்தினை மற்றொரு முறையிலும் சோதிக்கலாம். மையத்தில் ஒரு கை நீளம், அகலம், ஆழத்திற்கு மண்ணைத் தோண்டி எடுத்து, மீண்டும் மூடினால், பள்ளம் நிறைந்து, மேலும் மண் முகடு தட்டினால் அது நல்ல நிலம் என்றும் அறியலாம்.பள்ளத்தை மூடக்கூடிய அளவிற்கு மண் இல்லை என்றால் அது மோசமான நிலம் என்று தெரிந்து கொள்ளவும்.

அதே பள்ளத்தில் தண்ணீரை நிரப்பி வைத்து, பின்னர் பார்த்தால் தண்ணீர் ஊற்றிய அளவிலேயே இருந்தால் மிக நல்ல நிலமென்றும், குறைவாக இருந்தால் நடுத்தரமான நிலமென்றும், உலர்ந்து போய் இருந்தால் தகுதியற்ற நிலமென்றும் தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக கவனிக்க வேண்டியது தண்ணீர் சத்து இருக்க வேண்டியது அவசியம்.

- கோவை எம் தங்கவேல்

Friday, January 21, 2011

கோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்

ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் கோவையில் வெகு விரைவில் மிகவும் குறைந்த விலையில் வீட்டு மனைகளை விற்பனை செய்யவிருக்கிறது. ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை அவ்வீட்டு மனைகளின் விலைகள் இருக்கும். எதிர்கால வாழ்க்கையினை செம்மையாக, நிம்மதியாக வாழ விரும்புவோர்கள் அனைவருக்கும் தனது சம்பாத்தியத்தினை ஏதாவதொரு நல்ல சொத்தில் முதலீடு செய்தல் நல்லது. அவ்வாறு நிலத்தில் முதலீடு செய்ய விரும்புவோர்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும்.

ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை தங்களின் மூச்சாக கருதி வருகிறது. விரைவில் வீட்டு மனைகளைப் பற்றிய விபரங்களை வெளியிடுகிறோம். மனைகள் தேவைப்படுவோர் முன்பதிவு செய்து கொள்ளவும்.

தமிழ் நாட்டிலே வளர்ந்து வரும் நகரமான கோவையில் தற்போது வாங்கிப் போடும் ஒவ்வொரு செண்ட் நிலமும் நாளை கோடிக்கணக்கில் வளரும் தன்மை கொண்டது என்பதை மறந்து விடாதீர்கள்.

- கோவை எம் தங்கவேல்
ஃபார்ச்சூன் பிரிக்ஸ் 
http://www.fortunebricks.net

Thursday, January 20, 2011

வீடு பற்றிய தொடர் - 5ம் பகுதி

இறுதியாக, வடமேற்குத் திசையில் அமைந்திருக்கும் வீடுகள் வழங்கக்கூடிய பலன்களைப் பார்க்கலாம்.  இந்த திசைக்கு உரிய கடவுள் “வாயு பகவான்”. இவர் அதீத வலிமை கொண்டவர் என்பதால் இவ்வீட்டில் வசிப்பவர்களும் நல்ல மன உறுதி படைத்தவர்களாகவும், சீர்திருத்தவாதிகளாகவும், சிந்தனாவாதிகளாகவும், எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடியவர்களாகவும், கடவுளின் பால் மிக்க பக்தி கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். ஆனால் இந்த திசையில் வீசக்கூடிய காற்றில் கசப்பு சுவை இருப்பதால், மெலிந்த தேகம் கொண்டவர்கள் வசிக்க ஏதுவானதல்ல என்கிறார்கள்.

ஒரு மனிதனுக்கு வீடு என்பது அவனின் முகவரியாய் இருக்கிறது. அவனின் சம்பாத்தியங்கள், நிம்மதி, குடும்பத்தின் வளர்ச்சி, வாரிசுகளின் பெருக்கம் போன்றவற்றிற்கும் வீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கியமாக மனிதனின் நல்லது கெட்டது அனைத்துக்கும் இவ்வீடுகளே பெரும் பங்காற்றி வருகின்றன.வீடு இல்லாதவரை பிச்சைக்காரன் என்று தான் அழைக்க முடியும். அவன் எவ்வளவு புகழ் பெற்றிருந்தாலும், புத்திசாலியாய் இருந்தாலும் கூட அவனுக்கென்று ஒரு வீடு இல்லையென்றால் அவன் ஒரு நாடோடி வாழ்க்கையைத்தான் வாழ வேண்டும். வாடகை வீட்டில் குடியிருப்போர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து ஒரு வீட்டினைக் கட்டிக் கொள்ளவோ அல்லது விலைக்கு வாங்கவோ முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு வீடு இல்லாத நபர்களுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் மிகச் சிறந்த சேவையைச் செய்து வருகிறது. ஒவ்வொருவரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களின் சம்பாத்தியத்திற்கு ஏற்றவாறு மிகச் சிறந்த வீடுகளை, மிகக் குறைந்த வட்டியில் விற்பனை செய்கிறோம். விரைவில் வெறும் 25 லட்ச ரூபாய்க்கு, 24 நான்கு தனித் தனியான வீடுகளை 1000 சதுர அடி பரப்பளவில், இரண்டரை செண்ட் நிலத்தில், இரண்டு பெட்ரூம்கள் கொண்டதாக அமைக்க விருக்கிறோம். கோவையின் பிரதான இடமான ஒண்டிப்புதூரில் இந்த வீடுகள் அமையவிருக்கின்றன. இதற்கு வங்கிக் கடனுதவியும் பெற்றுத் தருகிறோம். வாடகை செலுத்துவது போல, வங்கிக் கடனைச் செலுத்தினால் போதுமானது. வாடகை கொடுத்தால் போல வீடு உங்களுக்கு சொந்தமானதாகி விடும். 

வாசகர்கள் தொடர்ந்து எங்களது நிறுவன தளத்தினையும், எனது இந்த பிளாக்கினையும் படித்து வாருங்கள். அல்லது இமெயில் சப்ஸ்கிரிப்ஷன் செய்து வைத்து விடுங்கள். விபரங்களை விரைவில் அப்லோட் செய்கிறோம்.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்
எக்சிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்ச்சூன் நிறுவனங்கள்

Tuesday, January 18, 2011

வீடு பற்றிய தொடர் - 4

இன்றைக்கு தென்கிழக்குத் திசையில் அமைந்த வீடுகள் மற்றும் தென் மேற்குத் திசையில் அமைந்த வீடுகள் பற்றியும் பார்க்கலாம்.

தென்கிழக்குத் திசையில் வீடு அமைவது உசிதமல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தென் கிழக்குத் திசையில் உஷ்ணம் அதிகமிருக்கும். இத்திசைக்கு உரியவர் அக்னி பகவான். அக்னியினால் வாழ்வும் உண்டு, வீழ்ச்சியும் உண்டு என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அக்னி உணவு சமைக்கவும் உதவும், அதே வீட்டை எரிக்கவும் செய்யும். இந்த வீடுகளில் வசிப்பவர்கள் மிகுந்த பிடிவாத குணமுடையவர்களாய் இருப்பார்கள். கடின உழைப்பு இருந்தாலும் ஏழ்மை இருக்கும். இந்த வீடு பலர் கை மாறும். வயிறு, சிறு நீரகம் சம்பந்தமான நோய்களுக்கு இவ்வீடுகளில் வசிப்பவர்கள் உட்படுவார்கள். ஆகவே தென் கிழக்குத் திசை வீடுகள் வசிக்க உகந்தது அல்ல என்பதைக் கவனத்தில் கொள்க.

அடுத்து,  தென் மேற்குத் திசையின் கடவுளாய் இருப்பவர் நிருதி என்பவர் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இவர் அரக்க குணம் கொண்டவராய் இருக்கிறார் என்றும், இவரின் குணமாக செருக்கு, தாழ்ந்த குணம், பிடிவாதம் மற்றும் அகம்பாவம் கொண்டவராய் இருப்பதாகவும் சொல்லி இருக்கின்றார்கள். இவ்வீடுகளில் வசிப்பவர்களுக்கும் மேற்பட்ட குணங்களும் இருக்குமென்றும், நோய்களுக்கு ஆட்படுவர் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இவ்வீடுகளில் வசிப்பவர்கள் தலைவர்களாய் மாற துடிப்பார்கள் என்றும் சொல்லி இருக்கின்றார்கள்.

மொத்தத்தில் மேற்கண்ட திசைகளில் இருக்கும் வீடுகள் மனிதர்கள் வசிக்க உகந்ததல்ல என்பது முன்னோர்களின் கருத்து.

- கோவை எம் தங்கவேல்