குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, March 9, 2011

கோவை சாந்தி கியர் கேண்டீன்

ஒண்டிப்புதூரில் இருக்கும் நண்பரைப் பார்க்கச் செல்லும் வழியில் சாந்தி கியர் கேண்டீன் என்ற போர்டைப் பார்த்ததும் காலையில் சாப்பிடாத காரணத்தால் ஒரு காஃபி குடித்து வரலாம் என்று உள்ளே சென்றேன். 

சென்ற பிறகுதான் தெரிந்தது அது கேண்டீன் இல்லை உயர்தரமான உணவகம் என்பதை. சுத்தமாய் பளிச்சிடும் டைல்ஸ் தரைகள். செல்ஃப் சர்வீஸ் பாணி பரிமாறுதல். சுத்தமாக துடைக்கப்படும் மேஜைகள். மெல்லிய சங்கீதம் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. சில்லிட்ட காற்று வீசுகிறது. சத்தமில்லாத சூழல். அமைதி தழுவும் சுற்றுப்புறங்கள். குழந்தைகள் கைகழுவ படிகள் என்று அசத்தினார்கள்.

உணவுகளின் விலையோ மிகக் மிகக் குறைவு. சாம்பார் வடையொன்றினை மனைவி வாங்கி வந்தார். விலை 10 ரூபாய் தான். இதே சாம்பார் வடை வேறு ஹோட்டல்களில் 23 ரூபாய் கொடுத்திருக்கிறோம். இட்லியோ ஆறு ரூபாய்(2) என்று எழுதி இருந்தது. மேலும் படிப்பதற்குள் அழித்து விட்டார் ஒரு அன்பர். கோதுமை தோசை சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.

நண்பரிடம் விசாரித்தேன். கோவையில் பாதி பேர் சமைப்பதே இல்லை என்றும், சனி மற்றும் ஞாயிறுகளில் குடும்பத்தோடு சாந்தி கேண்டீனுக்கு வந்து விடுவதாகவும் சொன்னார். முழுச் சாப்பாட்டின் விலை ரூபாய் 25 என்றுச் சொன்னார். அசந்து விட்டேன்.

ஏதாவது அசந்தர்ப்பமாகத்தான் ஹோட்டல்களில் சாப்பிடுவதை வழக்கமாய் வைத்திருக்கிறேன். அதுவும் பழங்கள் கிடைக்காத போது, ஹோட்டல்களை நாடுவது வழக்கம். வீட்டுச் சமையல் போல சுத்தமான, சுகாதாரமான சமையல் எல்லாம் ஹோட்டல்களில் இன்றைய சூழலில் இருக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. எனது நண்பரின் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு மாதம் வரை ஃப்ரீசரில் ஆட்டுக்கறியையும், கோழிக்கறியையும் வைத்திருப்பார்கள். அதற்கு தேவையான கிரேவியை ஒரு வாரம் வரை வைத்திருப்பார்கள். அதையெல்லாம் பார்த்த பிறகு ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவுகளை உண்ணவும் ஆசை வருமா? இந்த நண்பருக்கு ஹோட்டல் சாப்பாடு பிடிக்காது. அவருக்கும் எனக்கும் வீட்டிலிருந்து தான் சாப்பாடு வரவழைப்பார். காரணத்தை பிறகுதான் புரிந்து கொண்டேன்.

சாந்தி கியர்ஸின் சோசியல் சர்வீஸ் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. நான் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் பணியாற்றிய போது அங்கு வரும் அன்பர்களை சாமியார் முதலில் சாப்பிடச் சொல்லி விடுவார். அதன்பிறகு தான் வந்த காரணம் பற்றி பேசுவார். என்னையும் அப்படியே வாழும்படி சொல்வார். ஒருவனுக்கு எவ்வளவு காசினைக் கொடுத்தாலும் போதாது என்றுதான் சொல்லுவான். ஆனால் சாப்பாடு போட்டுப் பாருங்கள். ஒரு அளவுக்கு மேல் போதும் போதும் என்றுச் சொல்லி விடுவான். அவனுக்கு வயிறும் நிறைந்து விடும். மனதும் நிறைந்து விடும். இதைத்தான் தர்மத்திலேயே மிக உயர்ந்த தர்மம் “அன்னதானம்” என்றுச் சொல்வார்கள்.

அந்த அன்னதானத்தையும் மிகுந்த அர்தத்தோடு செய்யும் சாந்தி கியர்ஸின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
1 comments:

Kannan said...

மிகவும் அருமை

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.