குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, January 24, 2011

புது வீடு கட்டும் முன்பு கவனிக்க வேண்டியவை

மனிதர்கள் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமான வீடுகளைப் பற்றி நாம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து வருகிறோம். ஒரு மொபைல் போன் வாங்கும் போது, அதன் செயல்பாடுகள் என்ன? விலை சரியா, வாரண்டி இருக்கா என்றெல்லாம் யோசித்து வாங்கும் நாம், நமக்கான அடையாளமாய், நம் வாழ்வோடு கூடவே வரும் தோழனாய் இருக்கும் வீடுகளைப் பற்றி அறிந்து கொள்ள சோம்பல் படுகிறோம். பலபேருக்கு இவ்விஷயங்கள் தெரியாது. 

வீடு வாங்க வேண்டுமென்றால் வாஸ்துகாரரை அழைத்து பீஸ் கட்டினால் போதும் என்ற நிலைக்கு மக்கள் இருக்கின்றார்கள்.முழுவதும் தெரிய வேண்டாம், ஆனால் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா அதற்குதான் இத்தொடரை எழுதுகிறேன்.

இனி, புது வீடு கட்ட நிலம் வாங்க முனையும் போது, அந்த நிலம் வீடு கட்ட தகுதி உடையதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

நிலத்தில் உயிர் நிலம், உயிரற்ற நிலம் என்று இருக்கின்றன. உயிர் நிலத்தில் மனித குலத்திற்கு நன்மை தரக்கூடிய செடிகள் முளைத்திருக்கும். உயிரற்ற நிலத்தில் புல், பூண்டு கூட முளைத்திருக்காது. மேடு, பள்ளம், பிளவுகள் இருக்கும். உயிர் நிலத்தில் வீடுகட்டினால் நல்ல வாழ்க்கை வாழலாம். உயிரற்ற நிலத்தில் வீடுகள் கட்டக்கூடாது என்று மனையடி சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.



நிலத்தினை மற்றொரு முறையிலும் சோதிக்கலாம். மையத்தில் ஒரு கை நீளம், அகலம், ஆழத்திற்கு மண்ணைத் தோண்டி எடுத்து, மீண்டும் மூடினால், பள்ளம் நிறைந்து, மேலும் மண் முகடு தட்டினால் அது நல்ல நிலம் என்றும் அறியலாம்.பள்ளத்தை மூடக்கூடிய அளவிற்கு மண் இல்லை என்றால் அது மோசமான நிலம் என்று தெரிந்து கொள்ளவும்.

அதே பள்ளத்தில் தண்ணீரை நிரப்பி வைத்து, பின்னர் பார்த்தால் தண்ணீர் ஊற்றிய அளவிலேயே இருந்தால் மிக நல்ல நிலமென்றும், குறைவாக இருந்தால் நடுத்தரமான நிலமென்றும், உலர்ந்து போய் இருந்தால் தகுதியற்ற நிலமென்றும் தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக கவனிக்க வேண்டியது தண்ணீர் சத்து இருக்க வேண்டியது அவசியம்.

- கோவை எம் தங்கவேல்

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.