குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, January 7, 2011

கோயமுத்தூரில் கீரைக்கட்டு பத்து ரூபாய்


நம்பவே முடியவில்லை. சரியாக 30 நாட்களுக்கு முன்பு வரை, கோவையிலிருக்கும் சிங்கா நல்லூர் உழவர் சந்தையில் ஒரு கட்டு கீரை ரூபாய் 4.00 என்று விற்பனை ஆனது. இன்று காலையில் ஒரு கட்டு ரூபாய் 10 என்று விற்றார்கள். யார் இந்த விற்பனையாளர்கள் என்று பார்த்தால், ஒருவர் கூட விவசாயிகள் கிடையாது. விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட 'உழவர் சந்தை' இன்றைக்கு வியாபாரிகள் சந்தையாக மாறிப் போய் விட்டது. நேரடியாக விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலைக்கு மொத்தமாக கீரைக்கட்டுகளை வாங்கி அடுத்த அரைமணி நேரத்தில் மிக அதிக விலைக்கு விற்கின்றார்கள் இந்த வியாபாரிகள். இவர்களுக்கு அன்றாடம் கிடைக்கக் கூடிய லாபம் ஒன்று மட்டுமே குறிக்கோள். இவ்வகை வியாபாரிகளை ‘கோயமுத்துர் சிங்கா நல்லூர் உழவர் சந்தை'யின் அதிகாரிகள் உள்ளே நடமாட விட்டு, அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்று விடுகின்றார்கள். 

ஒரு முறை, நான் நேரில் கண்டது உண்மைச் சம்பவத்தை இவ்விடத்தில் சொல்ல விரும்புகிறேன்.ஒரு அதிகாரி, வெங்காய வியாபாரியிடம் ‘காளான்' இருக்கிறதா என்று கேட்டார். அனைத்துக் காளான்களும் விற்று விட்ட நிலையில், அந்த வியாபாரி அந்த அதிகாரியிடம் சொன்னது “சார் ஐந்து நிமிடத்தில் தருவித்து தருகிறேன்” என்றார். சொன்னபடியே இரண்டு பாக்கெட் காளானை இலவசமாய் வழங்கினார் அந்த வியாபாரி. அதிகாரியும் கெத்துக் குறையாமல் வாங்கிச் சென்றார். 

இதே போன்று, போர்டில் இருக்கும் விலை ஒன்றாகவும், விற்கும் விலை ஒன்றாகவும் சிலர் விற்பனையாளர்கள் விற்பதை கம்ப்ளெயிண்ட் செய்தால் அப்போதைக்கு காமாச் சோமாவென்று சொல்லி சரி செய்கிறார்கள். ஆனால் அதே வியாபாரி தொடர்ந்து கடை போட்டுக் கொண்டிருப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், விலைவாசியைக் கட்டுப்படுத்த தவறினால் ஆளும் அரசுக்கு மக்களிடம் மிகப் பெரும் வெறுப்பு உண்டாகி விடும். அரசு கொண்டு வரும் திட்டங்களை சரியாக அமல்படுத்தாமல், அலட்சியப் போக்கில் செயல்பட்டு வரும் இவ்வகை அதிகாரிகளை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. மக்களால் அரசு அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்க இயலாமல், தமிழக அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருவதை நாம் பல சம்பவங்கள் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அரசு அலுவலர்கள் மட்டுமல்ல சமூகம் என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் கோவையில் 'அல்பேனியா' பள்ளியில் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், பெற்றோர்கள் கோபமடைந்து சாலை மறியல் செய்தார்கள். இவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததாக ‘சன் செய்திகள்' வெளியானது. குற்றம் செய்தவனை விட, குற்றம் செய்யத்தூண்டியவர்கள் மீது நடவடிக்கை ஒன்றினையும் எடுக்காத காவல்துறையினரின் 'சட்டம் ஒழுங்கு' பற்றி என்ன சொல்லமுடியும்? பள்ளியின் நிர்வாகியை அல்லவா கைது செய்திருக்க வேண்டும் காவல்துறை. காவல்துறையினரின் சில செயல்பாடுகள் மக்கள் விரோதமாய் சென்று விடுகின்றன. மக்கள் இல்லையென்றால் நாம் இல்லை என்பதை காவல்துறையினர் உணர வேண்டும்.

கீரைக்கட்டு 10 ரூபாய் என்றால் வருங்காலத்தை நினைக்கையில் நிலைமை என்னாகுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

தமிழக அரசு உழவர் சந்தைகளில் நடக்கும் 'கோல்மால்களை' சரி செய்ய, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களைச் சரிவரச் செயல்படுத்தாத அதிகாரிகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் தயங்கக்கூடாது என்பது பெரும்பாலான மக்களின் எண்ணம்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.