நெடுவாசல் கிராமம் இந்தியாவின் தலைப்புச் செய்தியாக மாறும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. எனது ஊர் அது. நான் பிறந்த ஊர். எனது தந்தை மாணிக்கதேவர், அவரின் தகப்பனார் அருணாசலத்தேவர், அவரின் தகப்பனார் நாடதேவர் இப்படியாக வாழையடி வாழையாக வாழ்ந்த ஊர். எங்கள் குடும்பத்திற்கு நாடி வீடு என்றொரு பட்டப்பெயரும் உண்டு. எனது வீட்டுக்கு முன்னால் நெடுவாசல் கிராமத்தின் தெய்வமான நாடியம்மன் இருக்கிறார். நெடுவாசல் திருவிழா சுத்துப்பட்டு ஊரெங்கும் புகழ் பெற்றது. படத்தேர் திருவிழாவின் அசத்தல் நிகழ்ச்சி.
நெடுவாசலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் கீழே இருக்கும் கூகுள் மேப் இணைப்பினைக் கிளிக் செய்து சுற்று வட்டாரங்களைப் பாருங்கள். எங்கெங்கும் பசுமை மண்டிய விவசாய பூமி எம் ஊர்.
என் சிறு வயதில் ஓ.என்.ஜி.சி வண்டிகள் அடிக்கடி வந்து செல்லும். வெடி வைப்பார்கள். வெடிக்கும் போது நடக்கக்கூடாது என்பார்கள். நாடங்குளத்தருகில் தான் மண்ணெண்ணெய் டெஸ்ட் செய்தார்கள். அப்போதெல்லாம் இந்தக் காலத்தில் இருப்பது போன்று டெக்னாலஜி வளர்ச்சி ஏதும் இல்லை. அரசாங்கம் மண்ணெண்ணெய் டெஸ்ட் செய்கிறது என்ற பெருமையில் மட்டுமே ஊர் மக்கள் இருந்தார்கள். நம்ம ஊரில் மண்ணெண்ணெய் இருக்கிறதாம் என்ற பெருமை மட்டுமே. ஆனால் அதனடியில் கொலைகார எண்ணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவில்லை. அந்தளவுக்கு அப்பாவித்தன்மை கொண்டவர்கள் எம் மக்கள். நெல், உளுந்து, நிலக்கடலை, எள், சிறுதானியப் பயிர்கள், மா, பலா, வாழை, காய்கறிகள் என எங்களூரில் விளையாத உணவுப்பொருட்களே இல்லை எனலாம். தென்னந்தோப்புகள் அதிகம். தேங்காய்கள் அதிகம். உலகெங்கும் நாங்கள் விளைவிக்கும் விவசாயப்பொருட்கள் உண்ணப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் வறட்சி மாவட்டம் என்பார்கள். ஆனால் நெடுவாசல் காவிரி ஆற்றின் கடைமடைப் பகுதி. காவிரி ஆறு நெடுவாசலின் கிழக்கே செல்கிறது. ஊருக்கே உணவளிக்கும் உன்னத ஊர் நெடுவாசல்.
எனது சகோதரி ஜானகியும் சித்தி செவையாளும் போராட்டக்களத்தில்
எக்கானமிக்ஸ் டைமில் 2016ம் வருடம் ஒரு செய்தி வெளியானது. மத்திய அரசின் ஓ.என்.ஜி.சியால் கண்டறியப்பட்ட எண்ணெய் வளமிக்க பகுதிகளில் ஆயில் எக்ஸ்புளோரேஷனுக்காக வெளி நாட்டு நிறுவனங்களை ஏலத்தில் பங்கு கொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற நாடுகளில் ரோடு ஷோவை நடத்தி வந்திருக்கிறது. இத்தனை செலவு செய்து விட்டு சும்மா இருக்குமா அரசு? அதன் பிறகு நடத்தப்பட்ட ஏலத்தில் தற்போது ஜெம் லேபரட்டரீஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்றுச் சொல்லி மீத்தேன் வாயுவை எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான பகுதி என்று மத்திய அரசுக்குத் தெரியாதா? இல்லை பாரதப்பிரதமருக்குத்தான் தெரியாதா? எல்லாம் அனைவருக்கும் தெரியும். உலகிற்கே உணவளிக்கும் பகுதி இது என்று அனைத்து அரசியல்தலைவர்களுக்கும் நன்கு தெரியும். தெரிந்தும் செய்கின்றார்கள் என்றால் என்ன காரணம்?
போராட்டக்களத்தில் இருப்பவர்களை பிரிவினை வாதிகள் என்கிறார் பாஜகவின் ஹெச்.ராஜா. இல.கணேசன் ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமெனில் ஒரு மாவட்டம் தியாகம் செய்யணும் ஒரு மாவட்டம் நன்றாக இருக்க வேண்டுமெனில் ஒரு கிராமம் தியாகம் செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றார். பாஜகவின் மாநிலத் தலைவர் இதுவரை அமைதியாக இருந்து விட்டு இப்போது போராடுகின்றார்கள் என்கிறார். ஆக இவர்களின் பேட்டியை வைத்துப் பார்க்கும் போது நெடுவாசலை சுடுகாடாக்க முடிவே செய்து விட்டார்கள் என்றே தெரிகிறது. மத்திய அமைச்சர்கள் மக்களின் விருப்பமின்றி எந்தத் திட்டமும் செயல்படுத்த மாட்டோம் என்கிறார்கள். ஆனால் ஆளும் பிஜேபி அரசின் அங்கத்தினர்கள் மத்திய அமைச்சர்களின் பேச்சுக்கு எதிராகப் பேசுகின்றார்கள். போராடினால் தேசத்துரோகி என்கிறார்கள் பிஜேபியினர்.
ஒரு ஊரையே அழித்துத்தான் பிறரின் அடுப்பு எரிய வேண்டுமா? ஊர் மக்களைக் கொன்றொழித்துதான் இந்திய மக்கள் உணவு சமைக்க வேண்டுமா? இப்படியெல்லாம் பேச இல.கணேசன் அவர்களின் மனது என்ன கல்லா? ஏன் இத்தனை வன்மமாகப் பேசுகின்றார் என்றே தெரியவில்லை. உணவை விட இயற்கை எரிவாயு தான் அவசியமா? விவசாயத்தை விட அடுப்பு எரிக்கவும், கார்கள் ஓட்ட பெட்ரோல் தான் அவசியமா? இல.கணேசன் அவர்கள் உணவுக்குப் பதிலாக இயற்கை எரிவாயுவை உண்கின்றாரா? அவர் குடும்பத்தாரும் அப்படித்தான் இயற்கை எரிவாயுவை குடிக்கின்றார்களா? என்று தெரியவில்லை.
மத்திய அரசு மக்களை எப்படி ஏமாற்றுகிறது என்பதை புதிய தலைமுறையில் வெளிவந்திருக்கும் இந்தச் செய்தி அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது.
செய்தி கீழே:
மத்திய அரசின் மக்கள் நயவஞ்சகத் திட்டம்
ஷேல் கேஸ் திட்டத்தை, புதுபுதுப் பெயர்களில் செயல்படுத்த, முயற்சி தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு குத்தாலம் உள்ளிட்ட மிகச்சில இடங்களில் ஷேல் கேஸ் எடுக்கப்போவதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது புதிய தலைமுறை. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட விழிப்புணர்வு மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பால், திட்டத்தை நிறுத்திவைத்தது ஒஎன்ஜிசி (ONGC). இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பொதுப்பெயரில், கைவிடப்பட்ட அந்த ஷேல் கேஸ் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
ஷேல் கேஸ் எனப்படும் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு, காவிரிப் படுகையில் அமைந்திருக்கும் குத்தாலம், சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரி, அடியக்காமங்கலம், கமலாபுரம், கூத்தாநல்லூர், ராமநாதபுரம், பெரிய நரிமனம், சீர்காழி அருகே உள்ள காளி ஆகிய இடங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டவை ஆகும். இதில், காவிரி படுகையை மையப்படுத்தி, இரண்டு மண்டலங்கள், பெயரிடப்படாமல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதில், முதல் மண்டலம், 948 சதுர கிலோமீட்டர் பகுதியை உள்ளடக்கியதாக உள்ளது. பெயரிடப்படாத இரண்டாவது மண்டலத்தின் எல்லை, ஆயிரத்து 542 சதுரகிலோ மீட்டர் பரப்பளவை கொண்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் ஆரம்பிக்கும் இந்த புள்ளியானது, வடக்கு தெற்காக, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை தாண்டி முடிவடைகிறது.
ஹைட்ரோகார்பன் திட்டம் என்ற பெயரில் குறிக்கப்பட்டுள்ள, பெயரிடப்படாத, இரண்டாவது மண்டலத்தின் வரைபடத்தில், நரிமனம், திருவாரூர், கீழ்வேளூர், அடியக்காமங்கலம், பள்ளிவார்மங்கலம், விஜயாபுரம், கமலாபுரம், நன்னிலம், கூத்தாநல்லூர், பூண்டி, மாத்தூர், கோவில்களப்பால், திருக்காலூர், பெரியகுடி, துளசபட்டினம் ஆகியவையும், தஞ்சாவூர் காவிரி துணை படுகை பகுதிகள் என குறிப்பிடப்பட்டு, அதில், வடதெரு, நெடுவாசல் மற்றும் கிருஷ்ணாபுரமும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஷேல் கேஸ் எடுக்கப்போவதாக பட்டியலிப்பட்டுள்ள பகுதிகளின் மொத்தப் பரப்பளவு (ஆதார ஆவணங்களின்படி) 3 லட்சத்து 81 ஆயிரம் ஏக்கர். 40க்கு 40 என வைத்தால், சராசரியாக 150 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகளை தன்னகத்தே கொண்டது, முழுமையான பெயரிடப்படாத, இரண்டாவது மண்டலமாகும். இந்த இரண்டாவது பகுதியில், ஷேல் கேஸ் எடுக்க வழங்கப்பட்டிருக்கும் உரிமங்கள், வருகிற 2019ஆம் ஆண்டோடு காலவதியாகிவிடும். இதன் காரணமாக, ஹைட்ரோகார்பன் என்ற பொதுப்பெயரில், கச்சா எண்ணெய் எடுப்பதாக கூறி, ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவே, புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் கூறுகின்றன.
இந்த இரண்டாவது மண்டலத்தைப் போன்றே, முதல் மண்டலத்திற்கான பெயர்களும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இரண்டாவது மண்டலத்தில் இடம்பெற்ற பகுதிகளை தவிர்த்து, பெயரிடப்படாத முதல் மண்டலத்தில், ஷேல் கேஸ் எடுக்க, கடலூர் மாவட்டத்தில் 14 இடங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 இடங்களும், அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களும், திருவாரூர் மாவட்டம் ஒரு இடமும் இனங்காணப்பட்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான ஷேல் கேஸ் எடுக்கும் உரிமமும், புதிய தலைமுறைக்கு கிடைத்திற்கும் ஆவணத்தின்படி, வருகிற 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தோடு முடிவடைகிறது.
ஷேல் கேஸ் எடுக்க வெளிப்படையாக 8 இடங்களின் பெயர்கள் தெரியவரும் நிலையில், நெடுவாசல் உள்ளிட்ட 51 இடங்கள், பெயர் வெளியிடப்படாமலேயே, ஷேல் கேஸ் எடுப்பதற்காக, இனங்காணப்பட்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 61 இடங்களில் ஷேல் கேஸ் எடுக்கப்பட இருப்பது, அதற்கான ஆய்வு பணிகள், அடுத்தடுத்த கட்டங்களில், விரைந்து அனுமதி வழங்கப்பட்டு தொடங்கப்படலாம் என்பதே, புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள ஆதார ஆவணத்தின்படி தெரியவரும் பேரதிர்ச்சி தரும் உண்மையாகும்.
செய்தி இணைப்பு : http://tv.puthiyathalaimurai.com/detailpage/ImportantNews/special-news/35/81826/shell-gas-project-in-the-name-of-hydrocarbon-gas-stunning-truth
இந்தியமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நெடுவாசல் போன்ற தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயு எடுத்து மொத்தமாக தமிழக நெற்களஞ்சியத்தை சுடுகாடாக்கி பீஹார் போன்ற ஏழைகள் நிறைந்த மாநிலமாக மாற்றிட மத்தியில் ஆளும் அரசு கடும் பிரயத்தனங்களைச் செய்து வருகிறது.
அதிகாரத்தில் இருப்பதற்காக இந்தியாவின் நெற்களஞ்சியத்தை அழிக்க தனி நபர் சார்ந்த நிறுவனங்களின் துணை கொண்டு மத்திய அரசின் இத்தகைய ரகசிய செயல்பாடுகளை அதி தீவிரமாக எதிர்க்க வேண்டும். தமிழக நெற்களஞ்சியத்தில் வாழும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முதலாளி. சொந்தத் தொழில் செய்யும் முதலாளிகள். நெற்களஞ்சியத்தை அழித்து ஒழித்து விட்டால் மொத்தமாக வேலையிழந்து பஞ்சைப் பராரியாக ஊரு விட்டு ஊருக்கு பஞ்சம் பிழைக்கச் செல்வார்கள் என்பதாலும் அப்போது வெகு எளிதாக அரசியல் லாபம் பெறலாம் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது.
உணவா? அடுப்பெரிக்க வாயுவா? எது வேண்டும் உங்களுக்கு என்பதை முடிவெடுங்கள்.
மத்திய அரசின் கொடூரத்தின் முன்னே அதிகாரத்தின் முன்னே எழும் எங்கள் ஊரின் அவலக்குரலைக் கேளுங்கள். உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை, அமைதியான வாழ்க்கை வாழ்ந்து பிறருக்கும் உணவளித்து வரும் எங்களை மத்திய அரசின் அரக்கப் பிடியில் இருந்து காப்பாற்ற வாருங்கள்.
வருவீர்கள் என்கிற நம்பிக்கையோடு உங்களின் ஆதரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
இங்கனம் நெடுவாசல் மக்களின் ஒருவனாக !