டிரேடிங் பிசினஸ் ஆரம்பித்த புதிதில் இறக்குமதி, ஏற்றுமதிக்கான சில பிரத்யேக வெப்சைட்டுகளை அறிய நேர்ந்தது. அதில் உறுப்பினராய்ச் சேர்ந்தால் எளிதில் இறக்குமதியாளர்களின் தேவைகளை அறிந்து கொண்டு, கொட்டேஷன் கொடுத்தால் ஆர்டர் கிடைக்கும் என்று அந்த வெப்சைட்டுகளில் சொல்லி இருந்தார்கள். அதன்படி நானும் ஒரு வெப்சைட்டிற்கு பணம் கட்டி மெம்பர் ஆனேன். இறக்குமதியாளர்களின் முகவரியுடன், அவர்களின் தேவைகளும் வரிசையாய் பட்டியலிட, நானும் அசராமல் கொட்டேஷன் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன். எவரும் பதில் தரவே இல்லை. போன் பேசினால் சொத்தை விற்றுத்தான் போன் பில் கட்ட வேண்டி வரும் என்பதால் மெயில் மூலமே அனுப்பி வந்தேன். சரி நம்மைப் போல பலரும் மெம்பராகி இருப்பார்கள் அல்லவா? ஆகவே வேறு யாருக்கும் ஆர்டர் கிடைத்திருக்கும் என்று நினைத்திருந்தேன்.
இந்தச் சூழலில் எனது நண்பர் ஒருவர் அமெரிக்காவில் இருந்தார். எதேச்சையாக அவரின் தொடர்பு கிடைக்க, இருவரும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்போம். அந்த நேரம் பார்த்து நண்பர் வசித்த இடத்திலிருந்து ஒரு இறக்குமதியாளரின் பையிங் லீட்ஸ் வர, நண்பரிடம் அந்த லீடைக் கொடுத்து, இறக்குமதியாளரை நேரில் சந்திக்கும் படியும், அவருக்குத் தேவையான பொருளை தயார் செய்து கொடுக்க நமது கம்பெனியைப் பற்றியும் எடுத்துச் சொல்லி ஆர்டர் கிடைக்க உதவி செய்யும் படி கேட்க, நண்பருக்கு ஆர்வம் பிறந்து சில சாம்பிள்களைப் பெற்றுக் கொண்டு, கம்பெனி புரபைலுடன் நேரில் அப்பாயிண்ட்மெண்ட் பெற்றுச் சென்றிருக்கிறார்.
சந்திப்பின் போது, அந்தக் கம்பெனியின் பையின் லீடை எடுத்துக் காட்டி இருக்கிறார். அது ஒரு வருடத்திற்கு முன்பு அந்தக் குறிப்பிட்ட வெப்சைட்டில் போடப்பட்டதாகவும், போட்ட ஒரு நாளுக்குள் ஏற்றுமதியாளரை அந்தக் கம்பெனியே ஏற்பாடு செய்து விட்டதாகவும், தற்போது அவர்களிடமிருந்துதான் இறக்குமதி செய்து கொண்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த வெப்சைட்டில் அந்தக் குறிப்பிட்ட கம்பெனி, இப்போதுதான் அவர்களின் தேவையை போஸ்ட்டிங் செய்திருந்தது. அதை அந்தக் கம்பெனி முதலாளியிடம் காட்டி விட்டு வந்திருக்கிறார் நண்பர்.
இது போன்ற டிரேடிங் வெப்சைட்டுகள் முதலிலேயே பிசினஸ்ஸை முடித்து விட்டு, முடிந்து போன ஒரு விஷயத்தை பதிவாக்கி, அதை வைத்து காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்தேன். அதன் பிறகு எங்களூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் அந்தக் கம்பெனியின் தில்லுமுல்லுகளை ஆதாரத்துடன் காட்டிய போது, அதிர்ந்தனர் மற்ற ஏற்றுமதியாளர்கள். இது ஒரு பக்கா திருட்டு.
அதுமட்டுமல்ல, கடந்த வருடத்தில் நிலக்கரி தேவை என்று ஒரு டிரேடிங் வெப்சைட்டில் போஸ்ட்டிங் போட்ட உடனே, அந்த டிரேடிங் வெப்சைட் கம்பெனியிலிருந்தே போனில் அழைத்து அவர்களே நிலக்கரியைச் சப்ளை செய்கிறோம் என்று கேட்டார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? இது போன்ற டிரேடிங் வெப்சைட்காரர்கள் செய்யும் அயோக்கியத்தனம் !
இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கும் டிரேடிங் இணையதளங்கள் அனைத்தும் ஃப்ராடு வேலை செய்து வருகின்றன. அதுமட்டுமல்ல, உங்களுக்கென்று தனி வெப்சைட், கீ வேர்ட் என்று ஆரம்பிப்பார்கள். ஏமாந்தீர்கள் என்றால் அது அவர்களுக்கு லாபம். நமக்கு ஒரு பைசா லாபம் கிடைக்காது. ஏமாற்றும் இது போன்ற இணையதளங்களை நீங்கள் நம்பி காசை கரியாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
* * *