குரு வாழ்க ! குருவே துணை !!

Monday, August 1, 2011

இரும்புத்தாது தொழிலில் அடியேன் - பகுதி 2

சனிக்கிழமை காலையில் போன் வந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஒருவர் அழைத்திருந்தார். நீங்கள் எழுதி வரும் ரியல் எஸ்டேட் சம்பந்தமான பதிவுகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது என்றார். தெரிந்ததை எழுதுவதில் எனக்கொன்றும் சிரமம் இருந்ததில்லை. ஆனால் நேரம் தான் பிரச்சினை. வேறு ஏதேனும் உதவி தேவையென்றாலும் எனக்குத் தெரியப்படுத்தலாம். இயன்றவரை உதவ முயற்சிக்கிறேன்.

இப்படியும் சில மனிதர்கள் பதிவினைப் படித்து விட்டு சம்பந்தப்பட்ட அனாதை இல்லத்திற்கு உதவும் பொருட்டு சிலர் மெயில் அனுப்பி இருந்தனர். எனக்கு மிகுந்த வேலைப் பளு இருந்த காரணத்தால் மேலதிக விபரங்களை அனுப்ப இயலவில்லை. இந்த வாரத்திற்குள் அனாதை இல்லத்தின் முழு விபரத்தையும் பதிவில் போட்டு வைக்கிறேன். செய்யும் உதவி எதற்குச் செய்கின்றோமோ அதற்குச் சென்று சேர்ந்ததா என்பதை அறிய ஆர்வமிருக்கும். ஆகையால் அனாதை இல்லத்தின் சின்னச் சின்னத் தேவைகளைத் தெரிந்து கொண்டு பதிவாய் எழுதி வைக்கிறேன்.அதற்கு உதவினால் அவர்களுக்கு பெரும் உதவிகரமாய் இருக்கும். நண்பர்கள் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

இப்போது இரும்புத்தாது பிசினஸ்ஸுக்கு வருகிறேன். இரும்புத்தாது பிசினஸ்ஸில் எனது நண்பரொருவர் கர்நாடகத்தில் அரசுப் பதவியில் உயர்ந்த இடத்தில் இருந்த ஒருவரின் மகனுடன் இணைந்து 67 ஏக்கர் இரும்புத்தாது டெபாசிட் இருந்த இடத்தினை லீசுக்கு எடுத்து நிலத்தின் உரிமையாளருடன் ஒப்பந்தம் ஒன்றினைப் போட்டார். அதற்குண்டான பணம் கொடுக்கப்பட்டது. பின்னர் லாரிகள், டிப்பர்கள், எக்ஸ்புளோர் செய்யும் மெஷின்கள் அனைத்துக்கும் ஒப்பந்தம் போடப்பட்டு அனைத்தும் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று விட்டன. ஆர்டரையும் சைனாவிலிருந்து பெற்று விட்டோம். போர்ட்டில் யார்ட் வாடகைக்கு எடுத்து சரக்கினை கொண்டு போய் டம்ப் செய்து கொண்டிருந்த நேரத்தில் சில விஷமிகள் ஒன்று சேர்ந்து (போட்டிக் கம்பெனிகளின் சப்போர்ட்டில்) லாரிகள் அவர்களின் ஊர் வழியாகச் செல்ல முடியாதவாறு தடுத்தனர். அனைத்து வித பர்மிட்டுகளைக் காட்டினாலும் விடவில்லை. அதுமட்டுமா லாரிகளை எரிக்கவும் முற்பட்டனர். எங்கெங்கோ சென்றார். யாரையெல்லாமோ பார்த்தார். கையில் இருந்த பணமெல்லாம் தண்ணீராய்க் கரைந்தது. எதுவும் நடக்கவில்லை. பெரும் திமிங்கிலங்களை எதிர்த்து சிறு மீன் போராட முடியுமா? முடியவில்லை. கையில் இருந்த மொத்தமும் போக நடு ரோட்டிற்கு வந்தார் அவர். 

எவராவது புதிதாக பீல்டிற்கு வந்தால் விடுவார்களா பண முதலைகள். மொத்தமாய் முடித்துக் கட்டி விட்டார்கள். வேறு யாரும் சம்பாதிக்க விட மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் ஏற்றுமதித் தொழிலில் இன்றைக்கும் கோலோச்சுகின்றார்கள்.

பழைய இரும்புத் தொழிலில் சேலத்தைச் சேர்ந்த ஒருவர் புதிதாய் இறங்கினார். சென்னையில் இருக்கும் மிகப் பெரிய இறக்குமதியாளருக்கு இவர் கண்ணை உறுத்தினார். சேலத்துக்காரர் பழைய இரும்பினை இறக்குமதி செய்தார் மிக அதிக விலை கொடுத்து. சரக்கு கிளியர் ஆகி கோடவுனில் சேரும் வரை மார்க்கெட் விலை உயர்ந்திருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் கிலோவிற்கு 10 ரூபாய் மார்க்கெட்டில் விலை குறைத்து அந்தப் பெரிய இறக்குமதியாளர் விற்பனை செய்தார். அங்கங்கே கடன் வாங்கி இறக்குமதி செய்த சேலத்துக்காரர் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தார். நஷ்டம் நஷ்டம் நஷ்டம். தூக்கில் தொங்கினார். பெரிய இறக்குமதியாளரின் ஆசை நிறைவேறியது. போட்டியாளர்களை வரவே விடாமல் இன்றைக்கும் அந்த இறக்குமதியாளர் சென்னையில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறார். யாரால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் பார்ப்போம்? இன்றைக்கு பணம் கொழிக்கும் பல துறைகள் இப்படிப்பட்ட பண முதலைகளிடம் சிக்கிக் கிடக்கின்றன. வேறு யாரும் அந்தத் தொழிலைச் செய்யவே முடியாது. விடமாட்டார்கள். மொத்தமாய் அழித்து விடுவார்கள். சாமானியர்கள் வேறு வழியின்றி வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு இதெல்லாம் தெரியாது என்றா நினைக்கின்றீர்கள். அனைத்தும் தெரியும். ஆனால் ஒன்றும் செய்யமாட்டார்கள்.

இன்றைக்கு இரும்புத்தாது ஏற்றுமதியில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருக்கின்றன என்று பத்திரிக்கைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயமெல்லாம் அன்றைக்கு இவர்களுக்குத் தெரியாதா? ஏன் எழுதவில்லை? இரும்புத்தாது ஏற்றுமதியை சரி செய்ய எவராலும் முடியாது என்கிற ஒரு மாயையை பத்திரிக்கைகள் ஏற்படுத்துகின்றன. ஆனால் அது உண்மை இல்லை.

ஏற்றுமதியான இரும்புத்தாது எத்தனை டன்? அனுமதி கொடுத்தது எத்தனை டன் என்று பார்த்தால் மேட்டர் ஓவர். இதை ஏன் அரசு பார்க்கவில்லை? எல்லாம் பணம்? கோடி கோடியாய் லஞ்சம். யார் எந்தத் தவறு செய்தாலும் எதுவும் செய்ய முடியாதவாறு மிரட்டல்கள். அரசு ஊழியர்கள் என்னதான் செய்வார்கள்? டைம்ஸ் ஆஃப் இந்தியா 12,20,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருக்கிறது என்று பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டிருக்கிறது. 

10,000 டன் சரக்கிற்கு மூன்று பேரிடம் விலை பேசுவார்கள் ஏற்றுமதியாளர்கள்.எவன் அதிகம் தருகின்றானோ அவனுக்குச் சரக்கு. கொஞ்சம் ஏமாந்தவனாக இருந்தால் ப்ளூ மெட்டலைக் கலந்து கேடுகெட்ட குவாலிட்டியை யார்டில் கொட்டி விடுவார்கள். அதுமட்டுமா வாங்கிய காசை திருப்பிக் கொடுக்கவும் மாட்டார்கள். எத்தனை அடியாட்கள். எத்தனை ஆபத்துக்களை உருவாக்குவார்கள் தெரியுமா?  

ஏற்றுமதி முனையத்தில் ஏற்றுமதியாளர்களின் இன்வாய்ஸ்களை வெறும் பத்துரூபாய்க்கு வாட்ச்மேன் விற்றுக் கொண்டிருந்தார். இதை நான் நேரில் பார்த்து அதிர்ந்தேன். அந்த இன்வாய்ஸ்ஸில் இறக்குமதியாளரின் முகவரி, போன், என்னவிலைக்கு பொருள் ஏற்றுமதி செய்யப்படுகிறது போன்ற விபரமெல்லாம் தெளிவாய் இருக்கும். பெரும் முதலைகள் சின்னஞ் சிறு ஏற்றுமதியாளர்களின் வாடிக்கையாளர்களை இப்படித்தான் கவர்கின்றார்கள்.

இது போன்ற இன்னும் எண்ணற்ற பிரச்சினைகளை இரும்புத்தாது தொழிலில் சந்தித்தேன். அதிகாரம், பதவி, பணபலம் இருந்தால் மட்டுமே இது போன்ற பணம் கொழிக்கும் தொழில்களில் ஜெயிக்க முடியும் என்பதை நான் கண்கூடாக கண்டுகொண்டேன்.

* * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.