வேலையில் மும்முரமாக இருந்தேன். கவனம் முழுவதும் வேலையில் இருந்தது. ”என்னாங்க....!!!” என்று குரல். கேட்ட குரல்தான், மனைவியின் முகத்தினைப் பார்த்தேன். ”நாளைக்கு ஆடி வெள்ளிக் கிழமை, மாட்டுச் சாணம் தேடினேன் கிடைக்கவில்லை” என்று இழுத்தாள்.
நண்பர்களிடம் விசாரித்தேன். சில இடங்கள் சொல்ல அங்குச் சென்றால் டிமாண்ட்டாம். என்னடா இது புதுசா ஒரு பிரச்சினை, கோவையில் மாட்டுச் சாணிக்கு டிமாண்டா என்று குழம்பி, வண்டியில் மனைவியை ஏற்றிக் கொண்டு ஒவ்வொரு தெருவாய் திருட்டுப் பார்வை பார்த்துக் கொண்டு (அதான் அந்த வீட்டில் மாடுகீடு இருக்கிறதா என்று பார்ப்பது) சென்றோம். கிட்டத்தட்ட அரை மணி நேர அலசலில் ஒரு வீட்டில் மாட்டின் வாலைப் பார்த்து விட்டேன்.
ஆஹா, மகா லட்சுமியைப் பார்த்து விட்டேன் என்று மனசு ஒரு துள்ளு துள்ளியது. வண்டியை நிறுத்தி மனைவி வீட்டிற்குள் சென்றாள். ஒரு பை நிறைய மாட்டுச் சாணம் வாங்கிக் கொண்டு வந்தாள். ”நல்ல பெண்மணி அல்லவா?” என்று சொல்லி முடிக்கவில்லை, “இது ஐந்து ரூபாய்ங்க” என்றாள். “ஓ.. இப்படி ஒரு பிசினஸ்ஸா??” என்று வியந்து கொண்டே ஆக்சிலேட்டரை ஒரு முறுக்கு முறுக்கினேன்.
பதினைந்து வருடம் ஓடி ஓடிக் களைத்த எல் எம் எல் டிரண்டி “ஏன்பா, இது உனக்கே ஓவரா இல்லை? “ என்று கேட்பது போல இருந்தது. மாட்டுச் சாணியை காசு கொடுத்து வாங்கி வருகிறாளே என்ற கோபத்தினை பின் யாரிடம் தான் காட்டுவது சொல்லுங்கள் பார்ப்போம். “போடா, போடா, இவன் வேற முக்கிக்கிட்டு” என்ற எரிச்சலில் மேலும் ஆக்சிலேட்டரை முறுக்க ஜிவுக்கென்று கிளம்பியது.
”ஏங்க, ஏங்க, நிப்பாட்டுங்க” என்றாள் பின்பக்கமாய் உட்கார்ந்திருந்த மனையாள். இரண்டு அடி தாங்க தள்ளி நிப்பாட்டினேன். அதுக்கு ”நிப்பாட்டுங்கன்னு சொல்லுறேன், இவ்வளவு தூரம் வந்துட்டீங்களே” என்று சொன்னாள். ஏதாவது பேச முடியுமா சொல்லுங்கள் பார்ப்போம்.
பெட்டிக்கடை ஒன்றிற்குச் சென்றவள் கடைக்காரரிடம் ஏதோ பேசினாள். அவர் ஏதோ ஒரு பொட்டலத்தை மடித்துக் கொடுத்தார். இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளுடன் ஒரு ஒத்தை ரூபாய் காசையும் கொடுத்தாள். வீட்டுக்கு வரும் போது, ”என்ன அது?” என்று விசாரித்தேன். ”சாணிப்பவுடருங்க” என்றாள்.
”எதுக்கு?”
“ சாணியோட கலக்கிறதுக்கு”
“கலந்து....... ???”
“ அட சும்மா நொச்சு நொச்சுன்னு கேள்வி கேக்காதீங்க. வீட்டுக்கு வந்து பாருங்க...”
பேச்சு வருமான்னு நீங்களே சொல்லுங்கள். வீட்டுக்கு வந்தாள். பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டை எடுத்து சாணியைக் கொட்டி, தண்ணீர் விட்டுக் கலந்தாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மு,
“அய்யே, ஆய் ஆய் “ என்று சொல்லிக் குதித்தது.
“அடியே... பேசாம இருக்கிறாயா இல்லையா? ” என்று சொல்லி ஒரு முறை முறைத்தாள் அம்முவை.
அம்மு என் முகத்தைப் பார்க்க, நான் வழக்கம் போல சிக்னெல் கொடுக்க, முகத்தினை அஷ்ட கோணலாக்கி அம்மு சிரித்துக் கொண்டிருந்தது.
”அப்பனும் மவளும் அங்கே என்னடி குசுகுசுன்னு பேசுறீங்க?” என்று ஒரு கத்து. கப்சிப் என்று ஆகி விட்டோம் இருவரும்.
பாக்கெட்டில் இருந்த பவுடரை கிழித்துக் கொட்டி கலக்கினாள். மக்கில் எடுத்து, விளக்குமாற்றால் தரையில் கொட்டி வழித்தாள்.
பசு மாட்டுச்சாணம் வாசம் வர, ஈரமாய் தரையில் பரவியது.
பொழுது விடிந்தது.
வழக்கம் போல, பேப்பர் எடுக்க கதவினைத் திறந்தேன். பச்சைப் பசேல் என்று வாசல் மின்னியது. ஆடி வெள்ளிக் கிழமையை எங்கள் வீடு வரவேற்றது.
மனதுக்குள் புன் சிரிப்பொன்று பூத்தது.