குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, January 29, 2012

சேலை கட்டினால் கேன்சர் வரலாம்


”நிம்மதியாக வாழ வேண்டுமா, யார் வாயிலும் விழாமல் வாழக் கற்றுக் கொள்” என்பார்கள். பிரச்சினைகள் நம்மைத் தேடி வருவதில்லை, அதை நாம் தேடிக் கொள்கிறோம் என்பார்கள். அதை எனது நண்பர் சொன்ன உண்மைச் சம்பவம் மூலம் அறிய நேர்ந்தது. ஆனானப்பட்ட ஹிட்லருக்கும் விதி ஒரு நாள் குறித்தது. உலகையே வெல்ல முயன்ற அலெக்சாண்டருக்கும் விதி தன் முடிவை எழுதியது. உலகில் நிரந்தரமானது எதுவுமில்லை அது எதுவானாலும் சரி !

பெண் பிள்ளை சரியில்லை என்றால் குடும்பம் மட்டுமல்ல, பரம்பரையே படுகுழிக்குள் சென்று விடும். அப்படி ஒரு அடாவடியான பெண்மணி ஒருவருக்கு விதி அடித்த ஆப்பு இருக்கிறதே அது தான் இந்தக் கதை. இந்தக் கதை நடந்தது திருநெல்வேலிப்பக்கம். அந்தப் பெண்மணி சற்றே வசதியானவள். திமிர், அகங்காரம், ஆணவம், எடுத்தெறிந்து பேசும் குணம் இவற்றின் மொத்த உருவம் அந்தப் பெண். கணவனோ அப்பாவி. வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு வசூல் செய்து கொண்டிருக்கிறாள் அப்பெண். வாடகைக்கு வருவோரை ஆட்டிப் படைப்பது அவளின் பொழுதுபோக்காம். பணம் பற்றிய கவலை இல்லை என்றால் மனிதனுக்கு வேறு குணங்கள் வந்து விடும். இப்படியான பெண்மணிக்கு விதி ஒரு முடிவு கட்ட எண்ணியது.

அவளின் வீட்டுக்கு குடி வந்திருந்த குடும்பத்தில் ஒருவன் ஏதோ குடும்பப் பிரச்சினையில் அவனது நண்பனைக் கொன்று விட்டான். அவனை மூட்டையாகக் கட்டி வெளியில் கொண்டு போய் போட்டு விட வீட்டு ஓனரின் பைக்கை இரவல் கேட்க, அவரும் கொடுத்திருக்கிறார். ஒரு வாரத்தில் கொலையாளியை ட்ரேஸ் செய்த போலீஸார், வீட்டு ஓனரையும் கைது செய்து சிறையில் அடைத்து, கொலைக்கு சாட்சியாய் பைக்கையும் பறித்து விட்டார்கள். ஒருவழியாக ஜாமீனில் வெளிவந்து செத்த பாம்பாய் நடந்து கொண்டிருக்கிறார் அந்த ஆசாமி. இப்போது அந்தப் பெண்மணி அரண்டு போய் திரிகின்றாராம்.

இப்படி ஒரு சம்பவம் தன் வாழ்க்கையில் நடக்கும் என்று அந்தப் பெண்மணி நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார். கோடியாய் பணமிருந்து என்ன பலன்? ஜெயிலில் போட்டு விட்டார்களே? இனி அந்த அவமானத்தை எங்கு போய் துடைக்க? இதற்குத்தான் சொல்வார்கள் “ஓவராக ஆடக்கூடாது” என்று.

அடக்கம் இல்லையென்றால் இறைவன் அடக்கி விடுவான்.

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சேலை உடுத்தும் பெண்கள் பயன்படுத்தும் பாவாடை நாடாவை இறுக கட்டுவதால் கேன்சர் வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்று செய்தி வெளியாகி இருக்கிறது. நாடா அகலமானதாக இருக்க வேண்டுமாம். அதுவும் இறுக்கமாய் கட்டக்கூடாதாம்.  இக்கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.


- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Saturday, January 28, 2012

சரியாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்

கல்கண்டில் வெளியாகி இருக்கும் ஒரு கட்டுரை உடல் நலத்திற்கு சில நல்ல கருத்துக்களை கொண்டிருப்பதால் அதை இங்கு அவர்கள் அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன். நன்றி : கல்கண்டு மற்றும் ஜே.டி.எஸ்

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

உடல் எடையைக் குறைக்க சரிவரச் சாப்பிடுங்கள்

உங்களுக்குப் பிடித்தமான உணவுகளை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் உங்கள் இடுப்பளவும் குறையும். நீங்கள் விரும்பியதை விட இரண்டு மடங்கு வேகத்தில் உடல் பருமன் குறையவும் வாய்ப்புள்ளது. மென்று சாப்பிடுவதால் பசி எடுப்பதும் குறைவதால் உடல் பருமன் குறைவதும் உறுதி.

உதாரணமாக உணவிற்குப் பிறகு காபி, தேநீர் அருந்தினால் இரும்புச் சத்து உடலில் சேராது என்பார்கள். ஆனால் உணவிற்குப் பிறகு அருந்தும் காபி அல்லது தேநீர் வளர்சிதை மாற்றத்தை 12% கூடுதலாகத் துரிதப்படுத்துவதால் சாப்பிட்ட உணவுகள், குறிப்பாக கொழுப்புகள் தங்காமல் எரிக்கப்பட்டு ஜீரணமாகி விடுகின்றன. சாப்பிட்ட உணவில் கண்டிப்பாக புளி, மிளகாய், ஏலக்காய், இஞ்சி என ஏதாவது ஒன்று இடம் பெற்றிருக்கும். இவற்றில் உள்ள வைட்டமின் சி, தேநீரில் உள்ள (காபியில் உள்ள) இரும்புச் சத்தை அழிக்காமல் ஜீரணிக்க வைத்து விடும்.

எனவே, மதியம் பிரியாணி, பரோட்டா என்று சாப்பிட்டால் ஒரு கப் தேநீர் அல்லது காபி அருந்துங்கள்.

பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், அசைவம் என எதைச் சாப்பிட்டாலும் அவை வேகமாக எரிய நன்கு மென்று சாப்பிட்டு ஒரு கோப்பை தேநீர் அருந்துங்கள். ஆப்பிள், திராட்சை போன்றவற்றை நன்கு மென்று சாப்பிடுங்கள்.

கலோரியை வேகமாக எரிப்பதுடன் குறைவாகச் சாப்பிட வைப்பது கைக்குத்தல் அரிசி, சம்பா ரவை, கேழ்வரகு, சோளம், பருப்புவகைகள். பருப்பு வகை 50% என்ற கணக்கில் சாப்பிட்டால் குறைவாகச் சாப்பிடுவோம். இவற்றில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பும் துத்தநாக உப்பு அதிகம் சாப்பிட்ட திருப்தியைத் தரும். இதனால் கு றைந்த அளவு உடலில் சேர்ந்த உணவும் உடலில் வேகமாக எரிக்கப்படும்.

மூன்றாவதாக சக்தி தரும் உணவுகளையும் நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் சேர்க்காத கறுப்பு தேநீரிலும் காபியிலும் உள்ள காஃபைன், சாப்பிட்ட உணவுகளை வேகமாக எரிக்கிறது. பால், சர்க்கரை சேர்க்காமல் அருந்துங்கள். ஐஸ் கிரீம் சாப்பிடாமலும் பார்த்துக் கொள்ளவும். கிரீன் டீயும் பால் சேர்க்காமல் அருந்த வேண்டும்.


கிரீன் டீயில் காஃபைன் இல்லை. ஆனால், காட்சின்ஸ் என்ற ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் உள்ளது. இது தினமும் 80 கலோரிகளை வளர்சிதை மாற்றமடைய விரைவுபடுத்தி எரித்துவிடுகிறது.

கறுப்பு நிற சாக்லெட்டுகளில் காஃபைன், காட்சின்ஸும் இருப்பதால் தினமும் 18 கிராம் அளவே சாப்பிட்டு வரவும். இவ்விரண்டும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் கலோரி வேகமாக எரிக்கப்படும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது சாக்லெட்டை சாப்பிடுவது நல்லது.

சாக்லெட்டில் கொழுப்பும் கலோரியும் அதிகம். எனவே 18 கிராமைத் தாண்டக்கூடாது.

நான்காவதாக, உடலுக்கு வெப்பம் தரும் உணவுகளைச் சேர்க்க வேண்டும். சமையலில் இஞ்சி, மிளகு, பூண்டு, கடுகு, கிராம்பு, ஏலக்காய் சேரவேண்டும். இவை கொழு ப்பையும் தீவிரமாக எரித்து விடும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் போல எனத் தினமும் சாப்பிட்டால் இவை வரமிளகாய் துவையல், கறிவேப்பிலைத் துவையல், மிளகு போன்றவை 100 கலோரியை தினந்தோறும் எரிக்கும்.

இத்துடன் கொழுப்பு நீக்கப்பட்ட, பால், தயிர், இரண்டு டம்ளர் சுடுநீர், மூன்று தக்காளி, அன்னாசிப்பழம், 100கிராம் திராட்சை போன்றவையும் உணவில் இடம் பெறுவது நல்லது.

சாதம் ஒரு கரண்டி அல்லது இரண்டு கரண்டி என்று குறைத்துக் கொண்டு மற்ற உணவுகளை சற்று தாராளமாக சேருங்கள். நன்கு மென்றும் சாப்பிடுவதே மிக முக்கியமானது. இதுவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும்.

- கே.டி.எஸ்.

Friday, January 27, 2012

கண் திருஷ்டி பிரச்சினை

மனிதனின் சில துன்பங்களுக்கு காரணம் பிறரின் கண் பார்வை. நான் அதை இது நாள் வரையிலும் அனுபவித்து வருகிறேன். எனக்கு திருமணமான புதிது. நானும் மனைவியும் தனியாக குடித்தனம் நடத்தி வந்தோம். அன்றொரு நாள் மதியம் மனைவி சாப்பாடு கொண்டு வந்தார். அப்போது அடிக்கடி வியாபாரம் தொடர்பாய் யூபிஎஸ் விற்கும் விற்பனை பிரதிநிதி வந்தார். ஆஃபீஸ் அறையின் கதவு மூடியிருந்தும், தட்டினார். யாரென்று பார்க்க கதவைத் திறந்த போது உள்ளே வந்து விட்டார். உள்ளே வந்தவரை வெளியேவா போகச் சொல்ல முடியும். அப்போது தட்டில் சாப்பாடு பரிமாறி இருந்தது. தட்டைப் பார்த்தார், என்னைப் பார்த்தார், “வாழ்ந்தால் உங்களைப் போல வாழ வேண்டும் சார் !” என்றார். சாப்பிடுங்கள் என்றுச் சொல்லியும் கேட்கவில்லை.

நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ தெரியவில்லை, அன்றிலிருந்து சாப்பாடு கொண்டு வரமுடியவில்லை. நேரத்திற்குச் சாப்பிடவும் முடியவில்ல நீண்ட காலத்திற்கு.

நானும் குழந்தைகளோடு மனைவியும் எங்காவது சென்று வந்தால் சரியாக ஒரு மாதம் எங்களுக்கு காய்ச்சல் வந்து விடும். படாத பாடு படுவோம். சிங்காநல்லூரிலிருக்கு மசூதிக்குச் சென்று கயிறு போட்டுக் கொண்டு வந்தால் உடனடியாக காய்ச்சல் நிற்கும். அதே போல வீறு வீறு என்று அழுதுகொண்டு காய்ச்சலில் அவதிப்படுவர்களை மந்திரித்து தாயத்துக்கட்டுபவரிடம் அழைத்துச் சென்று வந்த பிறகு குழந்தை அது பாட்டுக்கு சிரித்துக் கொண்டு, ,காய்ச்சல் நின்று போய் இருக்கும். இரண்டு குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன் மேற்கண்ட சம்பவங்கள் உண்மையாய் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன.

என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்டால், வரக்கூடிய திருஷ்டிகளை வேற்றுப்பக்கமாய் திருப்புவது தான் பரிகாரம் என்கிறார்கள். வீடென்றால் வாழை வைக்கலாம். அல்லது திருஷ்டிப் பூசணிக்காய் கட்டலாம். மனிதனென்றால் கருப்புக் கயிறு கட்டலாம், இல்லை தாயத்து அணியலாம்.

கண் திருஷ்டி என்பது மனிதனைத் தாக்கும் கொடிய ஒரு வகை பார்வை நோய்.  அதன் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பது என்பது முடியவே முடியாத காரியமாக இருக்கிறது.

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Thursday, January 26, 2012

ஒரு குவளை நீருக்குள் காந்தி - ஆத்மா பற்றிய அறிவியல் விளக்கம்


நேற்றைக்கு முதல் நாள் இரவு ஒன்பது மணி போல நேஷனல் ஜியாகரபி சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வுலகம் அணுக்களால் ஆனது என்றார்கள். குடிக்கும் தண்ணீருக்குள் கோடிக்கணக்கான அணுக்கள் இருக்கின்றன என்றார்கள். எந்த அணுவும் அழிவதில்லை என்றார்கள். அது உருவம் மட்டுமே மாறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். நாம் குடிக்கும் தண்ணீருக்குள் மஹாத்மா காந்தியை உருவாக்கிய அணுக்கள் இருக்கலாம். அதாவது சுருக்கமாய்ச் சொன்னால் நாம் காந்தியைக் கூட குடித்திருக்கலாம்.

இந்து மார்க்கத்தில் ஜீவாத்மாவிற்கு அழிவே இல்லை என்றும், உடல் மட்டுமே அழிகிறது என்றும் ஆனால் ஆத்மா அழிவதே இல்லை என்றும் விரிவாக எழுதி இருக்கின்றார்கள்.

ஆன்மீகத்தினைப் புரிந்து கொள்ள எளிதில் முடியாது என்று எனது நண்பர் ஒருவர் சொல்வார். ஆன்மீகத் தத்துவங்கள் பல அறிவியலுக்கும் அப்பாற்பட்டது. எனது வாழ்வில் நான் பல உண்மை ஆன்மீகவாதிகள், போலி ஆன்மீகவாதிகளுடன் பழகி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஜீவாத்மாவிற்கு(மனிதனின் ஆத்மா) அழிவில்லை என்றுச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவ்வாக்கியம் எனக்கு குழப்பத்தையே இதுகாறும் தந்து கொண்டிருந்தது. ஆனால் அதை ஜியாகிரபிக் சேனல் நிவர்த்தி செய்து விட்டது.

ஆமாம் நண்பர்களே, ஜீவாத்மாவிற்கு அழிவே இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான மேலதிக விபரத்திற்கு நீங்கள் நேஷனல் ஜியாகிரபிக் சேனலைத் துருவிப் பார்க்கவும்.

அணுக்களால் உருவம் மாற்றமடையுமே தவிர அந்த அணு அழிவதில்லை என்பதுதான் ஆத்மா அழிவதில்லை என்பதாகும். அதாவது அணுக்கள் ஒன்று சேர்ந்து மனிதனாய், விலங்காய், செடியாய், கொடியாய், புல்லாய், பூண்டாய், மரமாய், தண்ணீராய் மாறும். அதே அணுக்கள் பிறகு வேறொரு மாற்றம் பெரும். இதைத்தான் இன்று அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது. இதைப் பற்றி முன்னே சொல்லி வைக்கப்பட்டிருக்கிறது. அணுவை ஆத்மா என்றார்கள். அவ்வளவுதான். அதைத்தான் நாம் குடிக்கும் நீருக்குள் காந்தியை உருவாக்கிய அணுவோ அல்லது அன்னை தெரெஸாவை உருவாக்கிய அணுவோ இருக்கலாம். இதை வைத்துப் பார்க்கும் போது, முன் ஜென்மம் என்பதெல்லாம் இருக்க 100% சதவீத வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த அறிவியல் உண்மை, நம் ஆன்மீகத்தில் என்றோ கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை நினைக்கும் போது, ஆன்மீகத்தின் வழி சென்றால் அறிவியலில் என்னென்னவோ கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம் என்று நம்பிக்கை வருகிறது.

இந்துக் கலாச்சாரத்தின் மேன்மைக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது அல்லவா?

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Tuesday, January 24, 2012

நடிகர் விஜய்யின் சரியான நகர்தல்


குருவி படத்தில் விஜய் எங்கிருந்தோ பறந்து பறந்து வந்தெல்லாம் அடித்து தூள் கிளப்புவார். சினிமா தியேட்டரில் இண்டர்வல்லில் ரசிகன் ஒருவன் தன் நண்பனிடம் இது பற்றி அலுத்துக் கொள்ள, "நண்பன் இதே சூர்யா செய்தால் ஒத்துக் கொள்வோமா? இதற்கு விஜய்தான் லாயக்கு" என்றான். சினிமா தியேட்டருக்கு ரெகுலராக வருகை தரும் ரசிகன், தன் நண்பரான தியேட்டர் மேனேஜரிடம் “ என்னாங்க இது, காத்துல பறக்கறாரு, படம் பார்க்க புடிக்கல காசைக் கொடுங்க” என்றுச் சொல்லி வந்து நின்றார். இதெல்லாம் விஜய் படத்தின் ரிலீசின் போது அவரின் ரசிகர்கள் பேசிக் கொண்டது.

ஆனந்த விகடன் நேர்காணலின் போது பிரபல இயக்குனர்களின் லிஸ்ட்டில் விஜய்யின் பெயரே இல்லை என்று எழுதி இருந்தார்கள். அப்போது புது இயக்குனர்களுக்கு வாழ்வு கொடுக்கிறேன் என்றுச் சொன்ன விஜய் தற்போது உண்மை நிலவரத்தைப் புரிந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

அவர் விரும்பிய, நம்பிய பறந்து பறந்து போடும் சண்டை இல்லை,பஞ்ச் டயலாக் இல்லை, ஆனால் படம் வெற்றி. விஜய்யிடம் என்ன பிரச்சினை என்றால் தான் செய்யும் சில அசட்டைகளை அவர் இன்னும் விடாமல் நடிப்பில் பயன்படுத்துவதுதான். ஒரே மாதிரியான அசட்டைகள் எரிச்சலை உருவாக்கும் என்பதை அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று நண்பன் படத்தினைப் பார்க்கின்ற போது தெரிய வருகின்றது.  இது மாதிரியான விஷயங்கள் எல்லாம் நண்பன் படத்தின் வெற்றிக்கு முன்னால் காணாமல் போய் விட்டன என்பதால் அதைப் பற்றி அதிகம் பிரஸ்தாபிக்கத் தேவையில்லை.

இவருக்குப் பின்னால் வந்த சூர்யா பிரபல இயக்குனர்களின் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறார். சூர்யா நடிப்பில் எங்கோ சென்று விட்டார். தனுஷோ இன்னும் ஒரு படிமேல் சென்று விட்டார். போக்கிரி, வில்லு, வேட்டைக்காரன், சுறா போன்ற அக்மார்க் அட்டர் பிளாப்புகளால் தன் இமேஜ்ஜை வேறு விதமாக புரிந்து கொண்டிருந்தார் விஜய். ஆனால் தற்போது அவரின் நண்பன் படம் அந்த அடிதடி இமேஜ்ஜை உடைத்து, அவருக்கு வேறு விதமான பாதையைக் காட்டி இருக்கிறது. அவர் நிச்சயம் தற்போது தன் நிலையையும், ரசிகர்களின் போக்கினையும் புரிந்து கொண்டிருப்பார் என நம்பலாம்.

இயக்குனர் சங்கருக்கென்று இருக்கும் ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்திருக்கும் விஜய், அடுத்து வரப்போகும் முருகதாஸின் “துப்பாக்கி”, கவுதம்மின் “யோகன் அத்தியாயம் ஒன்று” போன்ற படங்களினால் நிச்சயம் அமீர்கான் போன்ற சிறந்த நடிகராக மிளிர்வார் என்று நம்பலாம். இயக்குனர் முருகதாஸுக்கு என்று இருக்கும் ஆடியன்ஸ், கவுதமிற்கு என்று இருக்கும் ஆடியன்ஸ் என்று பல பிரபல இயக்குனர்களின் ஆடியன்ஸ்களை தன் பக்கம் ஈர்ப்பதில் தான் நடிகரின் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும். வியாபாரமும் அதிகமாகும். இந்த நடிகரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாபம் வரும். அதற்காக புதிய இயக்குனர்களின் படங்களை ஒத்துக் கொள்ளக் கூடாது என்றுச் சொல்லவில்லை. கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும். ரசிகர்களைக் கவரும் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிக்க கவனம் கொள்ள வேண்டும். தமிழ் சினிமா உலகின் சாபக்கேடு கதை திருட்டு. அதை விஜய்யின் தந்தை செய்கிறார் என்று சில சர்ச்சைகள் இருக்கின்றன.  இதன் காரணமாக கூட நல்ல  நல்ல கதைகள் கூட விஜய்யை எட்டி விடாமல் போகலாம். விஜய் இது போன்ற சின்ன சின்ன விசயங்களைச் சரி செய்து கொள்ள வேண்டியது அவரின் வெற்றிக்கு முக்கியம்.

இப்போதிருக்கும் காலம் எம் ஜி ஆர் காலம் அல்ல. இது டெக்னாலஜி ஆட்சி செய்யும் டெக் உலகம். அதை நடிகர்கள் உணர்ந்து தன் மீதான வியாபார உத்தியைப் பெருக்க வழி வகை செய்ய வேண்டும். அதை விடுத்து, “ நான் போகும் பாதை தனிப்பாதை” என்றெல்லாம் பஞ்ச் டயலாக் விட்டு, தானும் ரஜினி போன்று வரலாம் எனக் கனவுக் கோட்டை கட்டினால் அது காற்றின் சிறு சலசலப்பில் கலைந்து போகும்.

விஜய் அதை உணர்ந்து கொண்டால் மிக நல்ல நடிகராக பரிணமளிக்கலாம். இல்லை என்றால் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான, பெண்களால் அதிகம் காதலிக்கப்பட்ட “திரு மோகன்” கதி போல ஆகி விடுவார் என்பது நிச்சயம். உலகம் மாறிக்கொண்டிருக்கிறது, அதே போல மாற்றப்பட்ட வியாபார உத்திகளை புகுத்தாத எவரும் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல.

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Monday, January 23, 2012

அழகின் அற்புதம் படைப்பின் உச்சகட்டம்(A)

பல வருடங்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டில் இருக்கும் டெக்ஸ்டைல் இறக்குமதியாளருக்கு அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் பையிங் ஏஜென்டாக இருந்தேன். ஜெர்மனியில் இருக்கும் பிரபல தியேட்டர் ஒன்றின் சீருடை ஒன்றின் ஆர்டருக்காக கோவை வரும் சூழ் நிலை ஏற்பட்டது. நானும், வாசுதேவன் என்கிற நண்பரும் காரில் வந்து கொண்டிருந்த போது பல்லடம் தாண்டி ஒரு வளைவு வரும். வலது புறமாய் பெட்ரோல் பங்க் ஒன்று கூட இருக்கிறது. அது ஒரு எஸ் பெண்ட் போல இருக்கும். அந்த வளைவில் அடிக்கடி டிராஃபிக் ஆகி விடும். எங்களின் கார் (எனக்குப் பிடித்த ப்ரீமியர் 118 கார் ) முன்னே ஒரு பெண் எங்களைத் தாண்டிச் செல்ல முயன்று கொண்டிருந்தார்.

நண்பர் வாசுதேவன் கிரீச்சிட்டார். ”தங்கம், அங்கே பாருங்க அழகின் அற்புதத்தை!” என்றார் சத்தமாய். நிச்சயம் இது நாள் வரையிலும் நான் அப்படியான அழகுப் பெண்ணைப் பார்த்ததே இல்லை. ஒரு கணம் என் மூச்சு நின்று பின் நிதானமானது. அழகு என்றால் அப்படி ஒரு அழகு. பிரம்மன் மறந்து போய் படைத்து விட்ட அற்புதத்தின் பேரழகி அப்பெண். நானும் என் நண்பரும் மூச்சடைத்து, பிரம்மையின் உச்சத்தில் மித மிஞ்சிய இன்பத்தில் ஆழ்ந்தோம். பார்ப்பதில் கூட இப்படி ஒரு இன்பம் இருப்பதை அன்று நாங்கள் அறிந்து கொண்டோம். இன்றைக்கு எங்கள் சார்பு நிறுவனமான ஃபெமோ மாடலிங் கம்பெனியில் எண்ணற்ற பெண்கள் விளம்பரங்களுக்காகவும், சினிமாவில் நடிப்பதற்காகவும் எங்களை அணுகுகின்றனர். இந்தியாவின் மிகப் பிரபலமான பல மாடல்கள் எங்கள் நிறுவனத்தின் மாடல்கள். இருப்பினும் அவர்களில் எவரும் இதுகாறும் நான் அன்று கண்ட “அற்புத அழகியினை” ஒத்தார்கள் இல்லை.

ஒரு பெண் அழகு என்று எப்படி உணருவது என்று கேட்கத் தோன்றும். தோற்றத்தை வைத்து அதை உணரலாம். பிற விஷயங்கள் பற்றி எழுத கூச்சமாய் இருப்பதால் விட்டு விடுகிறேன். வில் இருக்கிறதே வில் அதை பார்த்திருப்பீர்கள். காமத்தின் கடவுள் மன்மதன் கையில் இருக்கும் மனிதர்களைக் கொல்லும் வில், அதை நேரில் நிறுத்திப் பார்த்திருந்தீர்கள் என்றால் ஒரு பெண்ணின் வடிவம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் அனுமானித்திருக்க முடியும். இதற்கு மேல் விளக்கமாய் எப்படி எழுதுவது? இதோ ஒரு வில்லின் படம். மன்மதனின் கையில் வில் ஏன் என்ற கேள்விக்கு பதிலை நான் அந்த அழகின் அற்புதப்படைப்பினைக் கண்ட போது அறிந்து கொண்டேன்.



( எனக்குப் பிடித்த கடவுள் ராமரின் கையில் வில். இவர் கையில் வில் ஏன் என ஒரு கணம் எண்ணிபாருங்கள். கடவுள் படைப்பின் மகத்துவத்தினை உணரலாம், பிரமிக்கலாம், புரிந்து கொள்ளவே முடியாத கடவுள் படைப்புகளின் மகத்துவத்தை அறியலாம் )

ஜானி என்ற படத்தில் ஸ்ரீதேவி அப்படியான தோற்றத்தில் வருவார். அவருக்குப் பின்பு வந்த எந்த ஒரு கதாநாயகியும் அவ்வாறான தோற்றத்தில் இல்லை.

இளையராஜாவின் “தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது?” என்ற பாடலை கேட்கின்ற போதெல்லாம் என் மனதின் நினைவுகளூடே அப்பெண்ணின் அழகிய முகம் இடறிக் கொண்டிருக்கும். இதோ அப்பாடலையும், இப்பாடல் சம்பந்தமான சுவாரசியமான ஒரு பதிவினையும் படித்துப் பாருங்கள்.




பாட்டைக் கேட்கின்ற போதே தாலாட்டும் இளையராஜாவின் இசையமுதம் உங்களைத் தழுவிக் கொள்ளும். மார்கழி மாத விடிகாலைக் குளிரில் கோலம் போடும் அம்மாவைப் பார்க்க முயலும் குழந்தையை, குளிருக்கு இதமாய் தழுவி தன் முந்தானையால் மூடிக் கொள்ளும் அம்மாவின் அணைப்புப் போல.

- ப்ரியங்களுடன்

கோவை எம் தங்கவேல்



Sunday, January 22, 2012

நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலும் எஸ்எம்கிருஷ்ணாவும்

கரூர் பசுபதிபாளையத்தைக் கடந்து செல்லும் அமராவதி ஆற்றின் கிழக்கிலிருந்து வடக்கே செல்லும் பாதையில் சென்றால்,  வழியெங்கும் சாயப்பட்டறைகளும், சிதைந்து போன மடங்களும், பாதசாரிகள் தங்கிச் செல்லும் கற்களால் ஆன சிதைந்த மண்டபங்களும் வரும். அதைத் தொடர்ந்து சென்றால் பச்சைப் பசேல் வயல் வெளிகளும், படர்ந்து விரிந்த ஆலமரமும், பிராமணாள் வீதி ஒன்றும் கண்களில் படும். தென்னஞ்சோலைகளும், மரங்களும் நிரம்பிய பாதையில் சென்றால் சிவப்பு சாயம் பூசிய கோயில் ஒன்று தென்படும். அது தான் நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவ சமாதி அடைந்த திருக்கோயில்.  அங்கே ஒரு ஆஸ்ரம் கூட இருக்கிறது.

சதாசிவ பிரம்மேந்திராள் பற்றித் தெரிந்து கொள்ள கீழே இருக்கும் பிளாக்கைப் படித்துப் பார்த்துக் கொள்ளவும்.




(சன்னதிக்கும் செல்லும் கோவிலின் முன்புறத் தோற்றம் )


இரண்டு வருடங்களாக ஞாயிறு தோறும் காலை பத்து மணிக்கு நெரூர் சென்று விடுவேன். கோவில் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் காவிரி ஆற்றில் இரண்டு மணி நேரக் குளியல். துணிகளைத் துவைத்துக் காய வைத்து பின்னர் சரியாக பனிரெண்டு மணிக்கு கோவிலுக்குள் செல்வேன்.  காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அய்யர் கண் தெரியாதவர். அருமையாக அர்ச்சனை செய்வார். பின்புறம் பிரம்மேந்திராள் ஜீவ சமாதி ஆன இடத்திற்குச் சென்று அமைதியாக பத்து நிமிடம் தியானம். குளிர்ச்சி என்றால் அப்படி ஒரு குளிர்ச்சி தென்படும் அவ்விடத்தில்.  நடை சாற்றிய பிறகு கோவிலின் வெளியே உள்ள நாகலிங்க மரத்தின் அடியில் அமர்ந்து இருப்பேன்.

மதியம் இரண்டு மணிக்கு மேல் கிளம்பி, இருப்பிடம் வந்து சேர்வேன். இந்தக் கோவிலுக்கு இளையராஜா போன்ற மிகப் பிரபலமான பலர் வந்து செல்வதாகச் சொல்வார்கள். வட நாட்டில் இருந்து பலர் வருவர்.

நமது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா மீது லோக்யாயுக்தா ஊழல் விசாரணை தொடர்கிறது என்ற செய்தியை படித்தேன். நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலுக்கு அமைச்சரின் பயணம் பற்றிப் படித்தேன்.  பிரம்மேந்திராள் சமாதி மீது எழும்பியிருந்த வில்வ மரம் பட்டே போய் விட்டது என்ற செய்தியையும் படித்தேன். மனதுக்குள் வெறுமை மண்டியது.

ஒரு முறை டிஸ்கவரி சானலில் அருமையான நிகழ்ச்சி ஒன்றினைப் பார்க்க நேர்ந்தது. பெரும் மலைகளும், மரங்களும் சூழ்ந்திருக்கும் இடங்களில் வசிக்கும் காட்டுவாசிகள் கோடையில் தண்ணீர் இருக்கும் இடத்தினைக் கண்டு பிடிக்க முடியாது.  தண்ணீர் இன்றி வாழ முடியாதே, ஆகவே எப்படியாயினும் தண்ணீர் இருக்குமிடத்தினைக் கண்டுபிடிக்க வேண்டுமல்லவா?  தண்ணீர் இருக்கும் இடங்களை குரங்குகள் தெரிந்து வைத்திருக்கும் என்பது இவர்களுக்குத் தெரியும். குரங்குகளை வைத்து அவ்விடங்களைக் கண்டுபிடிக்க இவர்கள் உத்தி ஒன்றினைக் கையாள்வார்கள். 

மரமொன்றில் துளையொன்றினைச் செய்வார்கள். அத்துளை வாயில் சிறிதாய் இருக்கும். ஆனால் உட்புறம் பெரிதாய் அகண்டு இருக்கும். சிலர் ஒன்று சேர்ந்து பல குரங்குகளை அம்மரத்தினடிக்கு விரட்டி வரும் போது, ஒருவர் நல்ல பெரிய பெரிய உப்புக் கட்டிகளை அம்மரத்தின் துளைக்குள் போடுவார். அதை அக்குரங்குகள் பார்க்கும் படிச் செய்வார்கள்.  அவ்வாறு செய்து விட்டு செடிகொடிகளுக்குள் மறைந்து கொள்வார்கள். ஏதோ வெள்ளையாக துளைக்குள் போட்டிருப்பதைக் கண்ட குரங்குகளில் ஏதோ ஒன்று துளைக்குள் கையை விட்டு உப்புக் கட்டிகளை எடுத்து விடும். உள்ளங்கைக்குள் உப்புக் கட்டி வந்தவுடன் கை விரிவடைந்து விடுமல்லவா? துளையில் கை மாட்டிக்கொள்ளும். குரங்கோ கட்டியை விடாது கையை வெளியில் எடுக்க முயற்சிக்கும். உப்புக்கும் ஆசை, கைக்கும் ஆசையாய் குரங்கு படாத பாடு படும். உடனே காட்டுவாசிகள் குரங்கிடம் சென்று அதைப் பிடித்து இடுப்பில் ஒரு கயிறும், காலில் ஒரு கயிறுமாய் கட்டி மரத்தோடு பிணைத்து உப்புக்கட்டிகளை வெளியில் போடுவார்கள். மரத்தின் துளையிலிருந்து குரங்கின் கையையும் விடுவிப்பார்கள். ஆசை ஆசையாய் உப்புக்கட்டியை விழுங்கும் குரங்கினை நக்கலுடன் பார்த்து விட்டு வீடுகளுக்குள் சென்று விடுவார்கள்.

உப்பைத் தின்றால் தாகமெடுக்கும் அல்லவா? ஒரு நாள் முழுக்க தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கும் குரங்கு.  மரத்தோடு கட்டிக் கிடப்பதால் தவித்து உருண்டு புரண்டு கொண்டிருக்கும். மறு நாள் வந்து குரங்கினை அவிழ்த்து விட்டு அது செல்லும் பாதையில் அதனுடன் ஓடுவார்கள். தாகத்தால் தவித்த குரங்கு தண்ணீர் இருக்கும் இடம் தேடி கண்மண் தெரியாமல் படு வேகத்தில் செல்லும். காட்டுவாசிகள் குரங்கினை வைத்து தண்ணீர் இருக்கும் இடத்தினைக் கண்டு பிடித்து விடுவார்கள்.

ஐந்தறிவு உள்ள குரங்கிற்குத் தெரியாது உப்பைத் தின்றால் தாகம் எடுக்கும் என்பது. ஆனால் மனிதனுக்குத் தெரியுமே. இருப்பினும் அவன் ஏன் பாவத்தினைத் தொடர்ந்து செய்கிறான்? விதி என்பதா? இல்லை ஆசை என்பதா? இரண்டும் வேறு வேறு அல்ல. விதியின் மறுபெயர் தான் பேராசை.

நமக்கு நடக்கும் நல்லதும் கெட்டதும் நாமே உருவாக்கி கொண்டவைகள். தெரிந்து செய்யும் தவற்றை இறைவன் என்றைக்குமே மன்னிக்க மாட்டான். தெரியாமல் செய்யும் தவறுகள் தவறுகளே அல்ல என்கின்ற புண்ணிய நூல்கள். இரும்புத்தாது ஏற்றுமதியில் நான் கண்ட அக்கிரமங்களுக்கு சாட்சியாய் விளங்கியவர்கள் இன்றைக்கு இருக்கும் நிலைக்கு காரணம் அவர்களே அன்றி வேறு யார்?

ஏழேழு ஜென்மப் பிறப்பெடுத்தாலும் செய்த பாவம் தலைமுறைக்கும் வரும் என்கின்றார்கள் முன்னோர்கள். எந்தக்  கோவிலுக்குச் சென்றாலும், கோடி பேருக்கு அன்னதானம் செய்தாலும் பாவத்தின் சம்பளம் கிடைத்தே ஆகும். வேலையை செய்தால் கூலி கிடைக்கும் அல்லவா?

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Saturday, January 21, 2012

சாரு நிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாஷமும் தொடர்ச்சி 3

அண்ணாத்துரை அவர்கள் முதலமைச்சராய் இருந்த காலத்தில் அவருக்கு ஆஃபரேஷன் செய்ய வேண்டி நாள் குறித்தார்கள். அன்று காலையில் டாக்டர் அண்ணாவிடம் ஆஃபரேஷனுக்கு தயாராகும் படிச் சொல்ல, மறு நாள் ஆஃபரேஷனைத் தள்ளி வைக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணா. காரணம் என்ன என்று டாக்டர் வினவியதற்கு, தான் ஒரு நூலைப் படித்துக் கொண்டிருப்பதாகவும், இன்று இரவுக்குள் நூலை படித்து முடித்து விடுவேன் என்றும், ஒரு வேளை ஆஃபரேஷன் முடிவு தவறாகி விட்டால் நூலைப் படிக்காமலே இறந்து போய் விடுவேன் அல்லவா என்றும் சொல்லியும், தன் உடல் நலத்திற்காக நடக்க வேண்டிய ஆஃபரேஷனை நூலைப் படிப்பதற்காக தள்ளி வைத்தார் என்றுச் சொல்லுவார்கள். அண்ணா அவர்கள் நூலுக்குக் கொடுத்த மரியாதையை, மகத்துவத்தை தற்போது வெளியாகும் நூல்களுக்கு கொடுக்க முடியுமா என்பது தான் என் கேள்வி.

’பன்னியூர் படாடோபசர்மா’ நூலின் முன்னுரை, தெளிவுரை எல்லாம் இப்படிப்பட்ட நூலாசிரியரே இனிப் பிறக்கப் போவதில்லை என்று பறைசாற்றின. நூலின் சுருக்கத்தைத்தான் நீங்கள் தொடர்ச்சிப் பதிவில் படித்திருப்பீர்களே? இந்த நூலில் இருக்கும் முன்னுரையும், தெளிவுரையும் வாசகனை தவறான முடிவு எடுக்க தூண்டி இருக்கிறது. நான் இந்த நூலுக்காக திரும்பவும் கிடைக்கவே கிடைக்காத எனது நேரத்தில் இரண்டு மணி நேரம் செலவழித்திருக்கிறேன். இரண்டு மணி நேரம் செலவழித்துப் படிக்க வேண்டிய நூலா இது என்று நீங்களே சொல்லுங்கள்? பாலியல் உணர்வினைத் தூண்டியதைத் தவிர பெரிதாக இந்த நூல் வேறோன்றினையும் தரவில்லை. எனக்குமட்டுமல்ல, படிக்கும் எவருக்கும் இதைத்தான் அந்த நூல் தரும் என்பதற்கு நான் முன்பு எழுதிய சுருக்கமே சாட்சி.

ஒரு வயதானவன் இளம் பெண்ணைப் புணருவதும், தாயைத் தனயன் பெண்டாள்வதும், கூட்டிக் கொடுப்பதை தொழிலாய் வைத்திருப்போரை பெரும் தனக்காரர்கள் அணுகுவதும் தான் இலக்கியமா? அதுதான் நாவலா? இதைத்தான் நாவலுகின் பிதாமகர் எழுதினாரா? இதைப் படித்துதான் தமிழர்கள் புத்தகங்களை விரும்பினார்களா? இக்கதைக்கும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் “சரோஜாதேவி, மருதம், பருவ விருந்து, விருந்து” போன்ற புத்தகங்களுக்கும் என்ன வித்தியாசம் என்றுச் சொல்லுங்கள் பார்ப்போம்.

சமூகப் பிராணியான எழுத்தாளனின் படைப்புகள் சமூகத்தின் பிரதிபலிப்பு என்கின்றார்கள் இலக்கியவாதிகள். மேற்படி நூல் என்ன விதமான இலக்கியம் என்றுச் சொல்வார்களா? இன்றைக்கு புத்தக வாசிப்பு பெரும்பாலானவர்களால் விரும்பப்படுகின்ற வேளையில், இப்படியான தரமுடைய நாவல்கள் சமூகத்தின் பிரதிபலிப்பையா செய்கின்றன? தனி மனிதனின் எண்ண ஓட்டத்தினை நிறைவேற்றுவதாய்த் தானே இவ்வகையான நாவல்கள் வெளிவருகின்றன. இது போன்ற நாவல்களைப் படிக்கும் வாசகனுக்கு என்ன பலன் கிடைக்கும்?

எழுத்தாளர்களுக்கு சமூக பிரக்ஞை இருக்க வேண்டுமா, வேண்டியதில்லையா என்ற கேள்விக்கு பல்வேறு பதில்கள் கிடைக்கும். ஆனால் அவனுக்கு நிச்சயம் சமூகத்தின் மீதான அக்கறை இருந்தே ஆக வேண்டும். மனிதன் ஒவ்வொருவனும் பிறரால் ஏதோ ஒரு வகையில் வாழ்விக்கப்படுகின்றான். மனிதன் என்பவன் ஒரு சமூகப் பிராணி. சமூகத்தைத் தாண்டி அவனால் வாழவே முடியாது. ஆக, அவன் தான் வாழும் சமூகத்திற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும்.

அதை விடுத்து, கண்டதே  கோலம் எழுதுவதே சிறந்த எழுத்து என்றுச் சொல்லும் எழுத்தாளர்களிடமிருந்து “துஷ்டனைக் கண்டால் தூர விலகு” என்பதைப் பயன்படுத்த வேண்டும்.

எனது சகோதரியின் தோழி தற்போது பிரபல்யமாக இருக்கும் ஒரு நாவலாசிரியரை (இவர்களுக்கு ஏன் ஆசிரியர் என்று பெயர் வந்தது?) சந்திக்கச் சென்றிருக்கிறார். சகஜமாகப் பேசிக் கொண்டிருந்த எழுத்தாளர், பின்னர் அஜால் குஜால் பேச்சினை ஆரம்பித்து, முதுகில் தடவ ஆரம்பித்திருக்கிறார். அரண்டு போன தோழி அவர் முகத்தில் காரித் துப்பி விட்டு வெளியேறி இருக்கிறார். ஒரு புகழ் பெற்ற ஃபிக்சன் நாவல்( நாவலா அதுகள்?) எழுத்தாளரின் ஆரம்ப கட்ட நாவல் ஒன்றினைப் படிக்கும் சூழ் நிலை ஏற்பட்டது. அது சுஜாதா என்று நினைக்கிறேன். அக்மார்க் செக்ஸ் கதை. வாலிபன் ஒருவன் பல பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரு கிரைம் கதை அது.

இது மட்டுமல்ல இன்னும் பலப்பல பிரபலமான எழுத்தாளர்களின் மறுபக்கத்தை பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்து ஒரு தவம் என்பார்கள். தமிழகத்தில் எழுத்து ஒரு வியாபாரம் என்று ஆகி விட்டது. சிறுபத்திரிக்கை எழுத்தாளர்களின் பல படைப்புகளை படித்திருக்கிறேன். அதெல்லாம் பெரும்பான்மையான வாசக தளங்களில் வெளியாவது இல்லை. ஃபேண்டசி எழுத்தாளர்களின் ‘தண்ணீரில் எழுதப்படும்’ எழுத்துக்களைத் தான் வாசக தளங்களின் பெரும்பான்மையானவை வெளியிடுகின்றன.
 
சமூகத்தின் எண்ண ஓட்டத்தினைக் காசாக்கும் மாயக்கலையை இன்றைய பல பிரபல்ய எழுத்தாளர்கள் புரிந்து வைத்திருக்கின்றார்கள். வெளிச்சம் நோக்கி ஈர்க்கப்படும் விட்டில் பூச்சிகளாய் வாசகர்கள் மாறி தங்களின் உழைப்பையும், நேரத்தையும் வீணாக்கி விடுகின்றார்கள்.

சமூகத்தின் பிரதிபலிப்பை எழுதாத எந்த ஒரு படைப்பும் நிலைத்து நிற்பதில்லை. சினிமா தாக்கத்தில் செய்யப்பட்டும் விசிலடிச்சான் குஞ்சுகளின் விடலைப் பருவ நிகழ்ச்சிகளை உண்மைச் சம்பவம் போல உருவகித்து எழுதப்படும் எழுத்துக்கள் தண்ணீர் மீது எழுதும் எழுத்துக்களே. நாம் சிறிய வயதில் செய்திருக்கும் சில செயல்களை இப்போது எண்ணிப் பார்த்தால், நமக்கே வெட்கமாய் இருக்கும். அதுமாதிரியான செயல்களை இலக்கியமாக்கினால் அது எழுதுபவரின் அசட்டுத்தனம்தானே ஒழிய, மேதாவித்தனம் அல்ல.

வாசகர்கள் அசட்டுத்தனமான, விட்டேற்றியான, பாலியல் ரீதியான, வக்கிரங்கள் நிரம்பிய எழுத்துக்களை முன் ஜாக்கிரதையாக விலக்கி, நல்ல சிந்தனையையும், தெளிவும், அனுபவமும் தரக்கூடிய நல்ல புத்தகங்களை படிக்க முயல வேண்டும். அதை விடுத்து கிடைத்ததை எல்லாம் படிக்க ஆரம்பித்தால் பலன் மீண்டும் கிடைக்கவே கிடைக்காத நேரம் போய் விடும். அப்படியான புத்தகங்கள் கிடைக்காதவர்கள் நமக்காகவே வாழும் நம் குடும்பத்தோடு நேரத்தைச் செலவழிக்கலாம்.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Thursday, January 12, 2012

சாருநிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாசமும் தொடர்ச்சி

என் மனையாளை கலவரப்படுத்திய அந்த நாவலின் கதைச் சுருக்கம் கீழே. நிச்சயம் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.

திகம்பரபுரியில் ”பன்னீயூர் படாடோபசர்மா” என்கிற வயதான ஜமீந்தார் வாழ்ந்து வந்தார். அவர் எப்படிப்பட்டவர் என்றால் ஒரு முறை கால்நடையாகவே ஐரோப்பாவைச் சுற்றி வந்து கொண்டிருந்த போது, எதிர்ப்பட்ட பர்வதம் ஒன்று, இவரைக் கண்டதும் மனித உருவம் கொண்டு இவர் தாழ் பணிந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்று, பின்னர் மீண்டும் பர்வதமாய் ஆனதாம். அதுமட்டுமின்றி இவர் தூங்குகின்ற போது, இரண்டு கண்கள் மூடி இருந்தாலும் மூன்றாவது கண் விழித்துக் கொண்டு அவர் யாரை நினைக்கிறாரோ அவரைப்பற்றி இவருக்குப் படம் போலக் காட்டுமாம். அந்தளவுக்கு பன்னீயூராரின் பிரஸ்தாபம். இப்படிப்பட்ட இவருக்கு ஒரு கையாள் இருக்கிறான். அவன் பெயர் ”ஸமரச சஞ்சீவி”, இவன் எப்படிப் பட்டவன் என்றால் மேற்கண்ட பர்வத நிகழ்ச்சியைப் பற்றி இவனிடம் பன்னியூர் ஜமீந்தார் சொன்னவுடனே, அதற்கு இந்த நிகழ்வைப் பற்றி ஏதோ ஒரு புத்தகத்தில் படித்ததாகவும், பெயர் மறந்து விட்டபடியால், பன்னீயூரார் சொன்னவுடன் தான் அந்த மகானுபாவர் எஜமான் தான் என்று அறிந்து கொண்டதாகவும் சொல்லும் அதிபயங்கர புரட்டன். இந்தப் பன்னியூர் ஜமீந்தாருக்கு ”கட்டிக்கரும்பாள்” என்கிற இளவயது மனைவி. பன்னியூராருக்கு கட்டிக்கரும்பாளை வயதானதால்( அந்தக் காலத்தில் வயாக்கிரா இல்லை அல்லவா? பாவம் பன்னியூரார்)  மேட்டர் செய்ய முடியாத காரணத்தால் விரகதாபத்தில் தவிக்கும் இவளுக்கு ஜமீந்தாரின் முதல் மனைவியின் புதல்வன் மாதிருகாம கோலாகலனுடன் இரகசிய சந்திப்பு ஏற்பட்டு விடுகிறது.  அதை அட்சர சுத்தமாய் பார்த்து விடுகிறார் ஜமீந்தார்.

இது இப்படி இருக்க,  நித்ய கல்யாண விலாஸ் என்கிற மாபெரும் பல்பொருள் அங்காடிக்கு கதை செல்கிறது. இந்த விலாஸின் ஓனர் நித்யகல்யாணி அம்மாள் ஒரு விதவை. இவளின் கடைக்கு அருகில் மார்க்க ஸகாயர் என்பவரின் கடையும் உண்டு. மேலுக்குப் பார்க்க இது பல்பொருள் அங்காடி. ஆனால் உண்மையில் ஷோக் சுந்தரி, ஜில் மோகனா, டால் ரம்பாம் மற்றும் எலக்ட்ரிக் லட்டு போன்றோரின் கலைச்சேவைதான் பிரதானம். ஊரின் பெரும்தனக்காரர்கள் மார்க்க ஸகாயர் கடைவழியாய் இருக்கும் ரகசிய பாதை வழியாக நித்ய கல்யாண விலாஸுக்கு வருவர். அங்கு மேற்படி ஷோக், ஜில், டால், எலக்ட்ரிகின் ஸ்பெஷல் அலுக்கல், குலுக்கல்களை அனுபவித்து நித்ய கல்யாணி அம்மாவிற்கு பொருள் அளித்துச் செல்வர்.

இது இப்படி இருக்க, அங்கே ஜமீந்தார் தன் பையனே தன் பெண்டாட்டியை மேட்டர் பண்ணுகிறானே என்ற கோபத்தில் ஏதும் செய்ய இயலாமல் அறைக்குள் சென்று கோபத்தில் தத்தளிக்க, தந்தை சித்தியை மேட்டர் செய்வதைப் பார்த்து விட்ட கோலாகலன், ஸமய சஞ்சீவியிடம் சென்று கொஞ்சம் காசைக் கொடுத்து அப்பாவை எப்படியாவது சரிக்கட்டுமாறு சொல்கிறார். சஞ்சீவியும் ஜமீந்தாரரிடம் சென்று, கட்டெறும்பு கடித்த போது, ஏதேச்சையாக அங்கு வந்த கோலாகலன் ஆபத்திற்கு பாபம் இல்லையென்று முதுகில் இருந்த எறும்பை எல்லாம் கையால் எடுத்தும், முகத்தில் கடித்த எறும்பை எல்லாம் வாயால் ஊதியும் விட்டுக் கொண்டிருந்த போதுதான், நீங்கள் பார்த்தாகவும், உங்கள் பையன் ஒரு பெண்ணை விரும்பிக் கொண்டிருக்கிறான் என்பதாகவும் போட்டு விட பையன் மேல் சந்தேகம் தீர, தன் உறவுக்காரப் பெண்ணை தன் மகனுக்கு கல்யாணம் செய்து  வைக்க, கட்டிக்கரும்பாளையே கேட்டுக்கொள்கிறார். ஆக கோலாகலனும், கட்டிக்கரும்பாளும் எந்த வித தொந்தரவும் இன்றி இனி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஜமீந்தாரரின் உறவுப் பெண் குயில் மொழியாளை அழைத்து வந்து ஸமய சஞ்சீவி கோலகலன் தன் சித்தி கட்டிக்கரும்பாளை கட்டியணைத்து மேட்டர் செய்வதைக் காட்டுகிறான். அதைப் பார்த்து எரிச்சல் படும் குயில் மொழியாளுக்கு மேட்டரின் மீது ஆசை வந்து விடுகிறது.

இது இப்படி இருக்க, நித்ய கல்யாண விலாஸில் கிளியரன்ஸ் சேல் நடக்கிறது. ஊர்ப் பெரிய மனிதர்கள் அனைவருக்கும் விருந்தான மேற்படிப் பெண்களை யாரோ ஒருவருக்கு மொத்தமாய் வப்பாட்டியாயை வைத்துக் கொள்ள சிலருக்கு கடிதம் அனுப்பு வைக்கிறாள் நித்யகல்யாணி அம்மாள்.இதற்குள் சவுடாலப்பர் என்கிற ஒரு போலீஸ் அதிகாரி நித்யகல்யாணி விலாசுக்கு வந்து விசாரணை என்கிற பேரில் மேட்டருக்கும். மாதா மாதம் வசூலுக்கும் ஏற்பாடு செய்கிறான். இவன் பேரில் ஒரு புரட்டு இருக்கிறது.

எண்பது வயது கந்தர்ப்பபுரியார் வாயில் எச்சில் வழியும் உடலுக்காரர். அவருக்கு ஜில் மோகனாவை விற்கிறாள். பரசுமண் ஸதாத்யான ருத்ராக்‌ஷ பூனையார் என்கிற பரிசுத்த பாப்பையா என்கிற ஃபாதருக்கு டால் ரம்பாவை விற்கிறாள். அதிமோக லீலாவதி என்கிற பெண், இரவில் கட்டுக்கலையான ஆண்களை தூக்கி வந்து கண்களைக் கட்டு ஜல்லாபம் செய்கிறாள். ஒத்துக் கொண்டவர்களுக்கு உயிர் மிச்சம். ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு உயிர் போகும். இப்படியான ஒரு பெண்மணிக்குப் பிறந்தவன் செல்லதுரை, சிறு வயதிலேயே அம்மாவின் அஜால்குஜால் வேலைகளைப் பார்த்து, பயலும் மேட்டர் செய்ய ஆரம்பித்து விடுகிறான். அவனுக்கு எலக்ட்ரிக் லட்டுவை விற்கிறாள் நித்யகல்யாணி. ஒருவழியாக கிளியரன்ஸ் சேல் முடிகிறது.

இதை அறிந்து கொண்ட சவுடாலப்பர் தனது நண்பர்களின் உதவியால் மேற்படி மூவரிடமிருந்து பெரும் பணம் பறிக்கின்றான். இதற்குள் ஸமய சஞ்சீவி விரகதாபத்தால் தவிக்கும் குயில் மொழியாளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறான். கனடா தேசத்துக் கவர்னர் பையன் ரைட் ஆனரபிள் டம்பாச்சாரியாரை குயில் மொழியாளுக்கு அறிமுகப்படுத்தி, ரகசிய திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான். ஏனென்றால் பன்னீயுரார் குயில் மொழியாள் அப்பாவிடம் பெரும் பணத்தை கடனாகப் பெற்று அதை குயில் மொழியாளுக்கு எழுதி வைத்து விடுகிறார். இந்தச் செய்தியை ஜமீந்தாரரிடம் நைச்சியமாய்ப் பேசி கறந்து விடும் சஞ்சீவி தன் பையனையே ரைட் ஆனரபிளாக மாற்றி குயில் மொழியாளுக்குத் திருமணம் செய்விக்க முயலும் போது, உண்மை ரைட் ஆனரபிள் டம்பாச்சாரியார் தடுத்து குயில் மொழியாளை திருமணம் செய்து கொள்கிறார். ஸமய சஞ்சீவியையும், அவன் மகனையும் போலீஸார் கைது செய்கின்றனர்.

கோலாகலனும், கட்டிக்கரும்பாளும் கட்டிப்புரண்டு கொண்டிருப்பதை கண்டு விடும் ஜமீந்தாரர் என்ன செய்வது என்று தெரியாமல் மயக்கத்தில் கிடக்க, மனச்சாட்சி உறுத்தும் கட்டிக்கரும்பாள், கோலாகலனை மறக்க முடியாமல் இருவரும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தன் சொத்தைத் தான் இதுவரை பன்னீயூரார் அனுபவித்து வந்திருக்கிறார் என்று அறியும் குயில் மொழியாள் அவரை மன்னித்து அவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு, சொத்துக்களை விற்று விட்டு, ரைட் ஆனரபிள் டம்பாச்சாரியாருடன் கனடாவிற்குச் செல்கிறாள்.

கதை இத்துடன் முடிந்து விட்டது. இது வெகு சுருக்கமாய் எழுதப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் விலாவரியாக எழுதப்பட்டிருக்கிறது. படிக்கப் படிக்க.... என்ன ஆகும் என்றுதான் உங்களுக்குத் தெரியுமே?

தமிழக வாசகப் பரம்பரையை உருவாக்கிய இந்த நாவலின் ஆசிரியர் வடுவூர் கே துரைசாமி அய்யங்கார் என்பவர். நாவலின் தலைப்பு “பன்னீயூர் படாடோபசர்மா”.

கதை இத்துடன் முடிகிறது. நாளைக் கச்சேரி ஆரம்பம்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

Wednesday, January 11, 2012

சாருநிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாசமும் (18+)




( சார் இங்கேயெல்லாம் பார்க்காதீங்க சார் )

போன் செய்து பிளாக் பற்றிப் பாராட்டிய திரு சக்கரபாணிக்கு நன்றி.

சாரு நிவேதிதாவின் பத்தி ஒன்றினை வாசிக்க நேர்ந்தது. அப்பத்தி அவரின்  வாசகர் ஒருவரின் கடிதம். முதலில் அப்பத்தியைப் படித்து விடுங்கள். அப்போதுதான் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரியும்.


புத்தக திருவிழாவிற்கு சென்று 4000 ரூபாய்க்கு புத்தகம் வாங்கியதைப் பற்றி சிலாகித்து எழுதி இருந்தார் ராஜ ராஜேந்திரன். அப்பத்தியில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், மனிதருள் மாணிக்கம் பாஸ்கர் ராஜா என்ற விஷயம்தான்.  அப்பத்தியைப் படித்ததும், இப்பத்தி எழுதியே ஆக வேண்டுமென்ற திட்டம் மனதுக்குள் வந்து  விட்டது.

நான் சமீபத்தில் படித்த ஒரு புத்தகத்தின் கதையைப் பற்றி உங்களிடம் சொல்கிறேன்.

காலையில் ஒன்பது மணிக்கு பவர் கட். என்னெவென்று பார்த்தால் ஷட்டவுனாம். வேறு வழி இன்றி அருகில் இருந்த அரசு நூலகத்திற்குள் நுழைந்தேன்.

ஒரு புத்தகத்தை எடுத்து முன்னுரையைப் படிக்கலாமென்று பார்த்த போது, இலக்கிய சாதனையாளர்கள் என்று தலைப்பிட்டு நாவல் உலகின் பிதாமகன் இவர் என்று ஆரம்பித்திருந்தார்கள். தமிழில் வாசக பரம்பரையை உருவாக்க முனைந்தவர்கள் இவர்களில் ஒருவர் என்ற பதம் வேறு எழுதப்பட்டிருக்க, அடடே கடவுளாய் பார்த்து நம் கண்ணில் நல்ல ஒரு புத்தகத்தைக் காட்டி இருக்கின்றாரே என்று மகிழ்ந்தேன்.  அடுத்து தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் - சிட்டி, சிவபாத சுந்தரம் என்கிற புத்தகத்திலிருந்து எடுத்து போட்டிருந்த பத்தியையும் படித்து, எனது முடிவை மனதுக்குள் சிலாகித்து, எனக்குள்ளே தட்டிக் கொடுத்துக் கொண்டேன். மிக நல்ல புத்தகம் தான் இது அதுவுமின்றி தமிழ் நாவல் உலகின் பிரமாதமான எழுத்தாளர் என்றும் முடிவு கட்டிக் கொண்டு, நிரம்பச் சந்தோசத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்.

தலைக்கு மூன்று தலைகாணியை வைத்துக் கொண்டு, பெட்டில் மல்லாந்து படுத்துக் கொண்டு நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். கடைசியில் என்ன ஆனது தெரியுமா? நாவலை முடித்ததும் மனையாள் அலற ஆரம்பித்தாள்.

”பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வரும் நேரத்தில் ஏன் இப்படி” என்று திட்ட ஆரம்பித்தாள். நாவல் படித்த வேகத்தில் அவள் திட்டியது நினைவில் ஏராமல், கஜினி முகம்மதுவின் படையெடுப்பு ஒன்றே நினைவில் நின்றாடியது. எனக்கு கஜினியை நிரம்பப் பிடிக்கும். கொண்ட கொள்கையில் விடாது நின்று ஜெயித்தவன் அல்லவா அவன். சிறு வயதில் பள்ளியில் படித்த பாடங்களை இது போன்ற தருணத்தில் கூட கடைபிடிக்கவில்லை என்றால் படித்ததற்கும், சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் கடைமைக்கும் அழகில்லை பாருங்கள்.

ஆனால், நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்றுச் சொல்வார்களே அதை நான் அன்று அனுபவித்தேன். என் விஷயத்தில் தொடர்ந்து கடவுள் கெடுதலையே செய்து வருகின்றார் என்பதையும் நான் அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன்.

என்னத்தைச் சொல்ல போங்கள் !

ஏதேதோ சொல்லி சரிக்கட்டுவதற்குள் பையனும் பொண்ணும் காலிங்பெல்லை அடிக்க அடச்சே இன்னும் எட்டு மணி நேரம் மின்சாரத்தடை வேறா என்று எண்ணிக் கொண்டு விதியை நொந்து கொண்டேன்.

அத்துடன் விட்டாரா கடவுள், அன்று மாலையில் மிகச் சரியாக உறவினர்கள் மூவர் வீட்டுக்கு வந்து விட என் நிலைமைய நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். கடவுள் என் விஷயத்தில் ரொம்பவும் தான் இரக்கமற்று நடந்து கொள்கிறான் என்று உங்களுக்கு இப்போது தெரிந்திருக்குமே? இப்படி என்னப் புலம்ப வைத்த நாவல் எது? அதன் ஆசிரியர் யார்? அதன் கதை என்ன என்று உங்களுக்குத் தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்குமே.

அது என்ன நாவல், ஏன் இப்படி எனக்கு ஆனது என்று அந்த நாவலின் கதையை சுருக்கமாய் எழுதுகிறேன். படித்த உடன் உங்களுக்கு எனது நிலைமை ஏற்படவில்லை என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு ஞானியாகத்தான் இருக்க முடியும். அந்தக் கதை என்னவென்றால்....

திரு யுவகிருஷ்ணாவின் பத்தி ஒன்றரை நிமிடத்தில் படிப்பதாய் இருக்க வேண்டுமென்ற கருத்திற்காக மரியாதை கொடுத்து, நாவலின் கதையை நாளை எழுதுகிறேன்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

குறிப்பு : மேற்படி படம் நாவல் படித்த ஜோரில் போடப்பட்டது.

Saturday, January 7, 2012

மல்லிக்கட்டு ஐந்து ரூபாய்

தை மாதம் வந்து விட்டாலே மல்லித்தழை விலை குறைந்து விடும். மல்லித்தழைக்கு கொஞ்சம் தண்ணீர் இருந்தால் போதும். வளர்ந்து விடும். விளைச்சல் அதிகமாக வருவதால் விலை குறைந்து போய் விடும். கட்டு அஞ்சு ரூபாய்க்கு கீழே விற்றால், கொடுத்த கூலி இரு நூறு ரூபாய்க்கு கட்டுபடியாகாதே என்றார் ஒரு விவசாயி. உண்மைதான், விவசாயி உழுத கூலி கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது. முன்பு ஒரு தடவை கட்டு 25 ரூபாய்க்கு மல்லித்தழை விற்றது. இன்றைக்கு கருவேப்பிலை கிலோ 55 ரூபாய் என்றார்கள்.

மல்லித்தழை என்றவுடன் உங்களுக்கு நல்ல ஒரு சமையல் குறிப்பினை வழங்கிட வேண்டுமென்ற ஆசை வந்து விட்டது. மல்லித்துவையல் அல்லது சட்னி என்று இந்தக் குறிப்புக்குப் பெயர் வைத்துக் கொள்வோம்.

ஒரு கைப்பிடி அளவுக்கு சுத்தம் செய்த மல்லித்தழையை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் இரண்டு கீற்று இளம் தேங்காய், சிறிய துண்டு இஞ்சி, கொட்டைப்பாக்கு அளவுக்கு புளி, இரண்டு பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்த் மிக்ஸியில் கொரகொரப்பாய் அரைத்துக் கொள்ளவும். மேற்கண்டவற்றை வதக்க தேவையில்லை. அரைத்த விழுதுடன் கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை தாளித்துக் கொட்டினால் அருமையான இயற்கையான “கொத்தமல்லிச் சட்னி” தயார். சூடாக இரண்டு இட்லியின் மேல் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, அதனுடன் இச்சட்னியைச் சேர்த்துச் சாப்பிட்டால் அமிர்தம்.

கொத்தமல்லித்தழையினை உணவில் சேர்த்து கொண்டால் என்னபலன் கிடைக்கும் தெரியுமா?

இதயம், மூளை, ஈரல் நன்கு பலப்படும். ரத்தம் சுத்தமாகும். கண்கள் நன்கு பளிச்சிடும். வாய் துர் நாற்றம் நீங்கும். ஆணுறுப்பில் புண்கள் அல்லது கொப்புளங்கள் வந்தால் இதன் நீரைப் பயன்படுத்தினால் புண்கள் ஆறும். அதுமட்டுமல்ல சொர சொரப்பான தோலில் கொத்தமல்லிச்சாறை தேய்த்துக் குளித்து வந்தால் தோல் பளபளப்பாகும். நன்கு பசியெடுக்கும். மேற்கண்ட் சட்னியைச் சாப்பிடுபவர்களுக்கு இத்தனை பலன்களைத் தரும் .

அவசியம் மேற்கண்ட சட்னியைச் செய்து தரச் சொல்லி வாரம் ஒரு முறை சாப்பிட்டு விடுங்கள். மூலிகைகள் எதுவும் அலோபதி மருந்து போல உடனடி பலன் தராது. கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் பலன் தரும்.

திருமணமான ஆண்கள் மனைவியை தொந்தரவு செய்யாமல் நீங்களே செய்ய முனையுங்கள்.

அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

* * *

Friday, January 6, 2012

எச்சரிக்கை அயோடின் உப்பு ஆபத்து



எனக்குப் பிடித்த எழுத்தாளர், பேச்சாளர், பிடித்த அரசியல்வாதி திரு பழ.கருப்பையா அவர்கள். எதிலும் நேர்பார்வை, நேர்பேச்சு, பட்டென்று தெரிக்கும் வார்த்தைகள் என்று தூள் கிளப்பும் அவரிடம் எனக்குப் பிடித்தது அவரின் தார்மீக கோபம். அவரின் கோபத்தை நான் பொங்கி வழியும் எரிமலையாய்ப் பார்ப்பேன். கண்ணதாசனைப் போன்ற குட்டை உருவம், எனக்குப் பிடித்த செட்டியார்த்தனமான பேச்சு, நடை என்று உள்ளத்தினைக் கொள்ளை கொண்டவர் திரு பழ.கருப்பையா.

ஒப்புக்கும் பெறாத விஜய் டிவியின் தொடர்களில் “என் பெயர் மீனாட்சி” என்ற தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் திரு.பழ கருப்பையா நடிக்கிறார் என்றவுடன், ஒரு நாள் கூட விடாமல் அத்தொடரைக் கவனித்தேன். அவர் வரும் சீனுக்காக காத்திருப்பேன். அந்தளவுக்கு அவரின் எழுத்தின் மீதும் எனக்கொரு ஈர்ப்பு.

அவரின் பல கட்டுரைகளை வாசித்திருக்கிறேன்.நேற்று முதல் நாள் தினமணியில் வெளியான கட்டுரை ஒன்றினை வாசித்த போது திடுக்கிட்டேன். அயோடின் உப்பால் தெற்கு தமிழர்கள் பெறும் நோய் பற்றி விரிவாக எழுதி இருந்தார். அதை அப்படியே கீழே. நன்றி தினமணிக்கும், ஆசிரியர் திரு.பழ கருப்பையா அவர்களுக்கும்.

பெரிய பதிவாக இருக்கிறதே என்பதற்காக உடனே விண்டோவை மூடிவிடாமல் அமைதியாய்ப் படியுங்கள். உங்களின் நலத்திற்காக, ஏதாவது சிலர் தெரிந்து கொள்ள வேண்டுமே என்பதற்காக எழுதுகிறேன்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்.

இனி, திரு பழ. கருப்பையாவின் ஆவர்த்தனம்....



வடக்கின் தேவைக்குத் தெற்கு நோயுறுவதா?


உப்பைப் பயன்படுத்தாத மக்கள் கூட்டம் உலகில் எங்கும் இல்லை.

உப்பைப்போல், அதையும்விடக் கூடுதலாகப் பயன்படுத்தப்படுவதும், இன்றியமையாததும் தண்ணீர்!

ஆகவே, மருந்துபோன்ற ஒன்று எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்னும் கட்டாயம் அரசுக்கு இருக்குமானால் ஒன்று அதைத் தண்ணீர் விநியோகத்தில் கலந்து செலுத்தவேண்டும் அல்லது உப்பில் கலந்து செலுத்தவேண்டும்.

ஒவ்வொருவரும் குடிக்கின்ற தண்ணீர் முற்ற முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், எல்லா மக்களும் பயன்படுத்துகிற உப்பை அரசின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டுவர முடியும்!

அயோடின்போன்ற இன்றியமையாப் பொருளை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டுசேர்க்க உப்பைக் கருவியாக்கி அதில் கலக்குமாறு சட்டம் செய்தனர் மத்திய அரசினர்.

இதைத் தென்னாட்டுக்கும் செய்தது அறிவுடைய செயல்தானா என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்!

சிலருக்குக் கழுத்தில் கல்போன்ற கடினத்தன்மையுடன்கூடிய கட்டியோடு கழுத்து வீங்கித் தொங்கும்; கைகள் நடுங்கும்; கண்கள் துயில மறுக்கும். அதோடு மட்டுமல்ல; கண்கள் வெளியே தள்ளிக்கொண்டு வந்துவிடும்.

யார்யாருக்கும் பசிப்பது நியாயம். ஆனால், சாப்பிடச் சாப்பிடப் பசி அடங்காது என்பது கொடுமை அல்லவா? சாப்பிடுவதையே வேலையாகக் கொண்டவனும் எடை குறைந்து 70 கிலோ, 40 கிலோவாகிக் கரைந்து தென்னை விளக்குமாற்றுக் குச்சிபோல் ஆகிவிடுவான்!

சிலருக்குக் குரல் மாறிவிடும்! சிலருக்குக் குரலே போய்விடும்! கழுத்தினுள்ளே குரல்வளையில் உள்ள நாண்கள் விரிந்து ஒன்றோடொன்று ஒட்டுவதால் பேச்சு வருகிறது. தைராய்டு முற்றிப் புற்றாக மாறிய நோயாளிகளுக்குக் காற்றுதான் வரும்!

தைராய்டு சுரப்பியில் கோளாறு உள்ளவர்கள் இந்த நோய்க்கு ஆட்படுகிறார்கள். இந்த நோய் ஆண்களைவிடவும் பெண்களுக்கு மிகுதியாய் இருக்கிறது.

தைராய்டு என்பது ஒரு நாளமில்லாச் சுரப்பி! இந்த நாளமில்லாச் சுரப்பியின் சுரப்புக் குறைபாடு ஹைப்போ தைராய்ட் என்னும் நிலை ஒரு கருவுற்ற பெண்ணுக்கு இருக்குமானால், அவள் வயிற்றிலுள்ள குழந்தை அதன் தாக்கம் பெற்றுப் பிறந்து வளர்கையில் மந்தத்தன்மையுடன் வளரும்! மூளை வளர்ச்சி குன்றி இருக்கும்! நினைவுத்திறன் ஏறத்தாழ இருக்காது!

எந்தத் தாயும் வயிற்றிலிருக்கும் குழந்தையின் தேவைக்கேற்பத் தன் உணவை மாற்றிக் கொள்வாள்! வயிற்றுப் பிள்ளைக்குக் கேடுவரும் என்றால் அதற்குக் காரணமான எதையும் தவிர்த்துவிடுவாள்!

அவ்வளவு பொறுப்பான தன்னலமற்ற தாயும் தான் கருவுற்றிருக்கும்போது தனக்கிருக்கும் அயோடின் குறைபாட்டை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இவள் காக்கத் தவறிய இடத்தில் பிள்ளையின் நலத்தைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு மத்திய அரசு நுழைந்தது.

கருவுற்ற தாய்க்கு உள்ள அயோடின் குறைபாடு, அதனால் பிள்ளைக்குப் பாதிப்பு என்பது நடைமுறையில் மிகமிகக் குறைவானது. இதற்காக நாடு தழுவி அயோடின் உப்பைக் கட்டாயமாக்கி இருக்க வேண்டியதில்லை.

அயோடின் என்பது மிக இன்றியமையாததுதான்! இதன் குறைபாடு பத்தாயிரத்தில் ஒரு தாய்க்கு மட்டுமே இருப்பதாக சென்னை, அரசு தலைமை மருத்துவமனையின் நாளமில்லாச் சுரப்பி அறுவைத் துறையின் தலைவர் டாக்டர் சந்திரசேகரன் கூறுகிறார்.

எந்த ஒரு தாய்க்கு இந்த அயோடின் குறைபாடு என்பதைக் கண்டறிந்து, அவளுக்கு அந்த அயோடினை ஊட்டுவதை விடுத்து, ஒவ்வொரு பத்தாயிரத்திலும் மீதமுள்ள 9999 கருவுற்ற, கருவுறாத, விலக்கு நின்றுபோன தாய்மார்களுக்கும் சேர்த்து அயோடின் கலந்த உப்பைக் கட்டாயமாக்குவது என்று மத்திய அரசு முடிவு செய்தது.

தாய்மார்கள் மட்டுமில்லை; தந்தைமார்கள், தனயன்மார்கள், மகன்மார்கள் என்று ஒவ்வோர் இந்தியனுக்கும், அவன் பாலகனாயினும், சிறானாயினும், இளையோனாயினும், முதியோனாயினும் யாராயினும், ஒவ்வொருவருக்கும் உப்பு என்பது சாதா உப்பில்லை; அயோடின் கலந்த உப்பே என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்தப் பணியினை மிதமிஞ்சிய உற்சாகத்தோடு செய்தவர் நம்முடைய திண்டிவனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஐயா இராமதாஸின் மகன் மருத்துவர் சின்ன ஐயா அன்புமணி! அவர் அப்போது மத்திய அரசில் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தார்.

முன்பெல்லாம் உப்பு என்றாலே சாதா உப்புதான்! அது பெருவெட்டாக இருக்கும்; உப்பு என்றால் அதில் உப்புக் கரிப்பு இருக்கும். அது கலப்படமற்றது.

அரிசியில் கல்லைக் கலப்பார்கள்; மிளகில் பப்பாளி விதையைக் கலப்பார்கள்; பாலில் தண்ணீரைக் கலப்பார்கள்!

அதனால் நாம் ஒரு லிட்டரில் உள்ள அரை லிட்டர் தண்ணீருக்கும் பாலின் விலையே கொடுக்கிறோம். அரசியல்வாதியின் லஞ்சத்தால் எட்டு அங்குலத் தடிமன் இருக்க வேண்டிய சாலை நான்கு அங்குலமாக மெலிவுற்று விடுவதுபோல! எல்லாவற்றிலும் பாதிக்குப் பாதி களவு!

இவையெல்லாம் கலப்படச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்களால் தண்டிக்கப்பட வேண்டியவையே!

ஆனால், உப்பைக் கலப்படச் சட்டத்தின்கீழ் கொண்டுவந்தார்களே மத்திய அரசிலுள்ள அறிவாளிகள்! உப்பில் எதைக் கலப்படம் செய்யமுடியும்?

நம் தூத்துக்குடி உப்பளங்களெல்லாம் ஒரு காலகட்டத்தில் நிலைபெறுவதற்கே தவியாய்த் தவித்தன!

உப்பில் அயோடினைக் கலக்காவிட்டால், கலப்படச் சட்டத்தின்கீழ் தண்டனை என்றனர். கலந்தால் தண்டனை என்பதுபோய்க் கலக்காவிட்டால் தண்டனை என்னும் நிலை ஏற்பட்டது! இது காலவினோதம்தான்! இந்தச் சட்டத்துக்கு வேறு பெயர் சூட்டியிருக்கலாம்!

இப்போது முந்திய காலம்போல் அல்லாமல் சாதா உப்பாகிய பெருவெட்டு உப்பிலும் தண்டனை அச்சத்தால் அயோடின் கலக்கப்பட்டுவிடுவதால் நாடு முழுவதும் அயோடின் உப்பு மட்டுமே கிடைக்கிறது. சாதா உப்பு மருந்துக்கடையில் மாதிரிக்குக்கூடக் கிடைப்பதில்லை!

இது வடநாட்டுக்குத் தேவைதான்! மலைப்பகுதிகளில் உள்ள பழங்குடியினர் இந்தியாவின் மையப்பகுதியில் உள்ளோர், வடபகுதியினர் இவர்களுக்கெல்லாம் அயோடின் குறைபாடு இயற்கையாகவே இருக்கிறது. ஆகவே, இவர்களுக்கு அயோடின் கலந்த உப்புத் தேவையாக இருக்கிறது.

ஆனால், கடற்கரையோர மாநிலங்களுக்கு மண்ணிலேயே அயோடின் இருக்கிறது. கடலுணவில், குறிப்பாக மீன் போன்றவற்றில் மிகுதியாகவே அயோடின் உள்ளது. தென்னிந்தியாவில் அயோடின் குறைபாடு உள்ளதாக மெய்ப்பிக்கப்படவில்லை.

இங்கும் சிறிய அளவிலான மலைப்பகுதியினர்க்கு அது தேவையாக இருக்கலாம். மத்திய அரசினர் ஒழுங்காகச் சோதனை செய்யவே இல்லை! இவர்கள் அதீதமான இந்திய ஒருமைப்பாட்டுக் காதலர்கள். வடக்கு நோயுற்றால் தெற்கும் சேர்ந்து மருந்து சாப்பிட வேண்டும் என்னும் கொள்கையாளர்கள்!

தார்ப் பாலைவனத்தின் தாக்கம் பெறும் தில்லியில் டிசம்பர் மாதக் குளிர் 3 டிகிரி செல்சியஸ்; உதடு வெடிக்கும்! ஆனால், எதிலும் நிதானமான தமிழ்நாட்டில் குளிர் என்பதே 27 டிகிரிதான்! வடநாட்டுக் கம்பளியை நாம் போர்த்திக்கொண்டால் வெந்துவிட மாட்டோமா? பவானிப் பருத்திப் போர்வை நமக்குப் போதாதா?

நல்லவேளை! ஒரே மாதிரியாகத்தான் போர்த்திக் கொள்ளவேண்டும் என்று இதற்கும் மத்திய அரசினர் சட்டம் செய்யாமல் விட்டார்களே!

பழையகாலச் சாதா உப்பு நமக்குக் கிடைக்காததால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் என்ன?

நான்கு அயோடின் மூலக்கூறுகள் சேர்ந்ததுதான் ஒரு தைராக்சின். தைராக்சின் என்பது தைராய்டு சுரக்கும் இயக்குநீர். தைராக்சின் அளவோடு வெளிப்பட வேண்டும். அப்படி இருந்தால் அது நோயில்லை.

அது அளவுக்கு அதிகமானால் ஹைப்பர் தைராய்டிசம் என்னும் நோய்.

அது அளவில் குறைந்தால் ஹைப்போ தைராய்டிசம் என்னும் நோய்.

அயோடின் கலந்த உப்பு மட்டுமே நம்முடைய சோற்றில், குழம்பில், ரசத்தில், மோரில், இட்லியில், தோசையில், நாம் உபரியாகத் தின்னும் முறுக்குவரையில் அனைத்திலும் மத்திய அரசின் சட்டத்தால் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சேர்ந்துகொண்டு வருவதால், உயர் நீதிபதிகள், மத்திய, மாநில அமைச்சர்கள், இந்தக் கட்டுரையை எழுதியவர், இந்தக் கட்டுரையை வெளியிட்ட பத்திரிகையினர், இந்த ஆராய்ச்சியைச் செய்த சென்னை, அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர், செவிலியர்கள் மற்றும் தென்னிந்திய மக்களில் 35-ல் இருந்து 50 விழுக்காட்டினருக்கு அதிகப்படியான அயோடின் உப்பால் தைரோ டிட்டிஸ் என்னும் நோயின் கூறுகள் சிறிதளவாவது இருக்கும் என்கின்றனர்.

விளைவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு அது கூடுதலாக இல்லை என்பது ஆறுதலுக்கு உரியதா? இன்னும் 10 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அயோடின் கலந்த உப்பைத் தென்னிந்தியர்கள் தின்றால் முழுவீச்சில் நோய் தாக்கலாம்!

நமக்கு அந்த நோயின் கூறுகளை உருவாக்குவதற்கு மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?

அயோடின் என்பது 70 வயது வரை வாழும் ஓர் நபருக்கு ஒரு தேக்கரண்டி அளவே தேவை. அது கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சேர வேண்டும்!

அயோடினைத் தவிர்த்த சாதா உப்பு என்பதையே நமக்குக் கிடைக்காமல் மத்திய அரசு சட்டம் போட்டுச் செய்துவிட்டதால், அதிகப்படியான அயோடினால் தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பியே சிதைவுற்று விடுகிறது.

ஆகவே, தைராய்டிட்டிஸ் என்னும் நோயின் கூறுகள் 10-லிருந்து 17 வயதுவரை உள்ள இளையோருக்கு 35 விழுக்காடு உறுதியாக இருக்கிறது. 50 விழுக்காடாக இருந்தாலும் வியப்பதற்கில்லை என்கிறார் டாக்டர் சந்திரசேகர். ரத்தத்தைப் பரிசோதித்து இதை அறியலாம் என்கிறார். இந்த நோய்க்கூறுகளால் இளைய தலைமுறையின் அறிவு மந்தப்பட்டுவிடும் என்று அவர் அஞ்சுகிறார்.

மூன்று பிள்ளைகளில் ஒன்று அழிவதற்கு மத்திய அரசின் சொரணை இல்லாத தடித்த தன்மைதானே காரணம்! அந்த ஒரு பிள்ளை நம்முடைய மகனாகவோ, மகளாகவோ இருந்தால்தான் நமக்கு உறைக்குமா?

ஜுவனைல் ஆட்டோ இம்யூன் தைராடிட்டிஸ் என்பது மத்திய அரசின் கொடையால் கிடைக்கும் அயோடின் கலந்த உப்பால் சிறு குழந்தைகளுக்கு வரும் நோய்!

அளவுக்கு மிஞ்சிய அயோடின், தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பியைச் சிதைத்துவிடுவதால், சிதைவுற்ற செல்கள் ரத்தத்தில் கலந்துவிடுகின்றன உடனே நம் உடம்பிலுள்ள போலீஸ்காரனான இம்யூன் சிஸ்டம், ""எவனோ திருடன் வருகிறான்'' என்று தைராய்டு செல்லுக்கு எதிரான ஆன்ட்டி பாடீஸ்-ஐ உற்பத்தி செய்துவிடுகிறது

ஆன்ட்டி பாடீஸ் கொஞ்சம் கொஞ்சமாகத் தைராய்டை அழித்துவிடும். முழுவதும் அழித்துவிட்டால் தைராய்டு இயக்குநீருக்கான மாத்திரையை நாம் வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!

இந்த நோயின் எளியநிலையில் மாத்திரைகள்; உச்ச நிலையில் அறுவை மருத்துவம்; இந்த நோயின் இன்னொரு நிலை 10 விழுக்காடு புற்றுநோயில் போய் முடிகிறது.

தாமாக வருகிற கொடிய நோய் என்றால் அதை "முன்வினை' என்று ஏற்றுக்கொண்டு, வைத்தியம் செய்துகொள்வதோடு, இந்தப் பிறப்பில் புதிய பாவங்களைச் செய்யாமல் இருக்கலாம்!

மத்திய அரசின் யோசனையற்ற, ஆராய்ச்சியற்ற சட்டத்தால் கொடிய நோய் வரும் என்றால், நெஞ்சு கொதிக்கவில்லையா?

விஞ்ஞானத்தில் தவறுகள் நேரும்; திருத்தி முன்னேறுவதை விஞ்ஞானம் அனுமதிக்கிறது!

பத்தாண்டுகளுக்கு முன்பு போட்ட சட்டங்கள் தவறாகப் போய்விடுகிறபோது அவற்றைத் திருத்திக்கொள்வதுதான் அறிவுடைமை!

உப்பு குறித்த மத்திய அரசின் கலப்படச் சட்டத்தோடு சேர்த்து முதலில் உப்புக்கென்று உள்ள தனித் துறையையும் கலையுங்கள். இதற்கு ஒரு ஐ.ஏ.ஏஸ் அதிகாரி வேறு!

வடஇந்தியப் பகுதிகளுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அயோடின் உப்பைக் கொடுங்கள்! தென்னிந்தியப் பகுதிகளில் தேவைப்படும் நோயாளிகளுக்குத் தவிர, மற்றுமுள்ள பெருவாரியான மக்களுக்கு சாதா உப்பைக் கொடுங்கள்.

சாதா உப்பை எல்லாக் கடைகளிலும் விற்கச் செய்யுங்கள்; அயோடின் உப்பை மருந்துக் கடைகளில் விற்கச் செய்யுங்கள்! சும்மா இருக்கிறவனை நோயாளி ஆக்காதீர்கள்! இருக்கிற துயரம் போதாதா?

உங்களுடைய அயோடின் உப்புச் சட்டத்தால் உற்பத்தி செய்து கொழுப்பவை பெரு முதலீட்டு போன்ற உப்பு தயாரிப்பு நிறுவனங்கள்!

அவை உண்டாக்கும் நோயால் கொழுப்பவை மருந்து நிறுவனங்கள்!

வடக்கின் தேவைக்குத் தெற்கு நோயுறுவதா?


பழ. கருப்பையா

* * * * *
தினமணி இணைப்பு : http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial Articles&artid=532416&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=வடக்கின் தேவைக்குத் தெற்கு நோயுறுவதா?



Thursday, January 5, 2012

சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்



டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.

கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த வயிற்றுப் புற்றுநோயாளிகளிடம் அஃப்ரோஷ் நயீம் என்ற மாணவர் எடுத்த புள்ளியியலின் படி மேற்படி நோயாளிகளில் பெரும்பாலானோர் தினம் தோறும் பஜ்ஜி, வடை சாப்பிடுபவர்களாய் இருந்திருக்கிறார்கள். சில பேர் புகையிலை பயன்படுத்துபவர்களாகவும், சிலர் புகை பிடிப்பவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.

டீக்கடைகளில் விற்கப்படும் போண்டா, பஜ்ஜி, வடைகள் ரீயூஸ் என்று அழைக்கப்படும் முன்பே பயன்படுத்திய எண்ணெய் கலந்து தயார் செய்யப்பட்டவை என்கிறது ஒரு புள்ளி விபரம். ரீபைண்ட் ஆயில்களினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்பே எழுதி இருந்தேன்.

பெரும்பாலான டீக்கடைகளில் பாலை சுட வைப்பதே இல்லை. வடை, போண்டா, பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெய் பதார்த்தங்கள் பயன்படுத்திய எண்ணெயுடன், புதிய எண்ணெயை சேர்த்துத்தான் தயார் செய்கின்றார்கள். அதுமட்டுமல்ல சுவீட் கடைகளிலும் கூட இதே வேலையைத்தான் செய்கின்றார்கள்.

யார் யாரெல்லாம் தினம் தோறும் டீக்கடையில் பஜ்ஜி, போண்டா சாப்பிடுகின்றார்களோ அவர்களுக்கு வரக்கூடிய நோய் “வயிற்றுப் புற்று நோய்”.  நோய் வேண்டுமா இல்லையா என்பதை சாப்பிடுபவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்.

அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Wednesday, January 4, 2012

சிறுநீரக கல் சரி செய்வது எப்படி?

மனிதனின் மனம் நல்ல விஷயத்தைக் கிரகிப்பதை விட தீய விஷயத்தை உடனடியாக கிரகித்துக் கொள்ளும். உண்மையைப் புரிய வைப்பதை விட தீமையை எளிதில் புரிந்து கொள்ளும்.   நல்ல விஷயங்களை விட தீய விஷயங்களே மனதில் எளிதில் பதிந்து விடும்.

எவ்வளவோ கடவுள் இருக்கின்றன. எவ்வளவோ நீதி போதனைகள் இருக்கின்றன. இருந்து என்ன பயன்? மனிதர்களிடம் இருக்கும் எல்லா தீய குணங்களும் தினம் தோறும் வெளிப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன.

கடவுளின் பிரதேசம் என்றழைக்கக் கூடிய கேரளா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது பாருங்கள். இவ்வளவிற்கு இந்தியாவிலேயே படித்தவர்கள் அதிகமிருக்கின்றார்கள் இங்கே. படித்தவர்கள் தான் அதிகம் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம். அணுகுண்டைத் தயாரித்தவர் கூட பெரிய படிப்பாளிதானேன்.

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எய்ட்ஸுக்கு மருந்து டெஸ்ட் நிலையில் இருப்பதாக செய்தி வெளிவந்திருக்கிறது. இது ஒரு நல்ல செய்தி தான் என்றாலும், இந்த எயிட்ஸ் பயத்தில் பல பெண்கள் பாதிப்படையாமல் இருந்தார்கள். இனி மருந்து வந்து விட்டால் பெண்களின் பாடு என்னாகுமோ தெரியவில்லை. அதுவும் தமிழ் நாட்டில் குடிகாரர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.

ஆனால் தமிழ் மருத்துவத்தில் எயிட்ஸுக்கு மருந்திருக்கிறது என்கிறார்கள் பலர். ஏன் யாரும் அதைத் தயாரிக்க முயலவில்லை என்பது புரியவில்லை.

பின்குறிப்பு :

சிறு நீரகக் கல் வந்தால் என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றிய பதிவு ஒன்றினைப் படித்தேன். நீங்களும் படித்துப் பாருங்கள்.

இணைப்பு மற்றும் நன்றி  : http://kathirkamamblogspotcom.blogspot.com/2010/12/10.html

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) ,திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிறதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதளத்தில் சொன்னது போல்):

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மணிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்

Tuesday, January 3, 2012

தயாரிப்பாளரை ஏமாற்றிய இயக்குனர்

கோர்ட்டுகள் குடும்பங்களின் நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது மிகக் கொடுமையான ஒன்று. நீதிபதிகள் எவரும் கடவுள் அல்ல. மிக உயர்ந்த மனம் கொண்டவர்களும் அல்ல. வக்கீலாக பிராக்டீஸ் செய்து, அதன் பிறகு நீதிபதிகளாய் வருபவர்கள் தான்.

கணவன், மனைவிக்கு டைவோர்ஸ் கொடுப்பதில் நீதிமன்றங்கள் ஈடுபடுவது நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்குள் சட்டம் தன் மூக்கை நுழைப்பது ஆகும். சட்டப்படி என்பது வாழ்க்கைக்கு ஒத்து வரவே வராது. தமிழ்ச் சமூகம் என்பது உயர்ந்த நம்பிக்கை சார்ந்த, சமூகச் சார்புடைய, கற்பியல் சார்ந்தது. அதில் சட்டத்துறையின் தலையீடு என்பது கேலிக்குறியதாகும். முன்பு ஒரு முறை அம்மாவின் அரசு பலியிடுதலை சட்டவிரோதம் என்றது. நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்குள் அரசு தலையிட்டு, பின்னர் முக்கறுபட்டது நமெக்கெல்லாம் நினைவில் இருக்கலாம். இது போன்றதுதான் குடும்ப உறவுகளுக்குள் சட்டம் நுழைவது.

கணவன், மனைவி உறவென்பது சாதாரணமானது அல்ல. அது ஒரு டிவைன். இருவருக்கும் இருக்கும் பிணைப்பு என்பது கடவுள் தன்மை உடையது. அதையெல்லாம் சட்டத்தின் வரையறைகளுக்குள் கொண்டு வரவே முடியாது. என் நண்பருக்கு டிவோர்ஸ் ஆகி விட்டது. மனைவி தனியாக வாழ்கிறார். இவருக்கு மூன்று குழந்தைகள். மூவரும் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கின்றனர். மனைவிக்கு டைவோர்ஸ் வாங்கிக் கொடுத்ததில் மனைவியின் உறவினர்களுக்கு பெரும் பங்கு உண்டு. 

தனிமையில் வாழ்கிறார் நண்பரின் மனைவி. இவர் வாழ்க்கையில் என்ன சாதிக்கப் போகின்றார் என்பது எனக்குப் புரியவே இல்லை. முடிவில் என்ன ஆகும் தெரியுமா? எவரும் இவரைக் கண்டு கொள்ளப் போவது இல்லை. தனிமையில் கிடந்து உழலுவார். தன் வாழ்க்கையை பலியிடுவார். இவரின் குழந்தைகள் கூட இவரைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். குழந்தைச் செல்வங்களை கூட வைத்து, வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்குவதில் இருக்கும் சந்தோஷத்தை விட மனிதனுக்கு வேறென்ன சந்தோஷம் பெரிதாய் இருக்க முடியும் சொல்லுங்கள் பார்க்கலாம். அதை இப்பெண்மணி இழந்திருக்கிறார். இவர் மட்டுமல்ல தன் கணவனையும் இழக்க வைத்திருக்கிறார்.

நானும் நண்பரும் வாரா வாரம் கோவை ரேஸ் கோர்ஸ் சென்று வருவோம். வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, கார் வேறு வழியாக வந்தது. வழியில் நண்பரின் குழந்தைகள் தங்கிப் படிக்கும் பள்ளியின் ஹாஸ்டல் இருந்தது.

”என் குழந்தைகள் மூவரும் ஜெயிலில் கிடக்கிறார்கள்” என்றார் குரல் கம்ம. டைவோர்ஸ் வழங்கிய கோர்ட் இந்தத் தகப்பனின் சோகத்துக்கு என்ன பதில் சொல்லும். தானே குழந்தையை வளர்க்கிறேன் என்றுச் சொன்ன தாய் மூன்று பேரையும் ஹாஸ்டலில் கொண்டு போய் தள்ளி விட்டார். கோர்ட் குழந்தைகளை தாயின் அரவணைப்பில் தான் விடும். இது எத்தகைய ஒரு கொடூரம் என்பதைப் பாருங்கள். தகப்பன் நினைத்தால் கூட உடனே தன் குழந்தைகளைப் பார்த்து விட முடியாது. தாய், தந்தையின் அரவணைப்பில் வாழ வேண்டிய குழந்தைகள் தனியாய் வாழ்கின்றாஅர்கள்.  கோர்ட் ஒரு குடும்பத்தினை கெடுத்து, குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறதைப் பார்த்தீர்களா?

கோர்ட்டுகள் உறவுகளுக்குள் நுழைந்து கொடுக்கும் தீர்ப்புகளின் விளைவினைப் பார்த்தீர்களா? அவரின் மூடை மாற்றுவதற்காக பேச்சை மாற்றினேன். அப்போது அவர் சொன்னது.

இவரின் நண்பர் ஒரு இயக்குனர். எங்கெங்கோ சென்று யாரோ ஒருவரைப் பிடித்து ஒன்றரைக் கோடி பணத்தை வாங்கி விட்டார். வாங்கியது சென்னையில் ஒரு வீடு, சொந்த ஊரில் ஒரு வீடு வாங்கி விட்டார். படமெடுக்கிறேன் பேர்வழி என்று ஒப்புக்கு ஒரு படத்தினை எடுத்து, கொஞ்சம் வியாபாரமும் செய்து விட்டார். பணம் கொடுத்தவர் பெரிய பணக்காரர். அவருக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இப்படித்தான் பல இயக்குனர்கள் இருக்கின்றார்கள். இப்போது இந்த இயக்குனர் வேறு ஏமாளி தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறார். எனக்கும் கூட சில அனுபவங்கள் உண்டு.

என்னிடம் ஒருவர் படமியக்க உதவி செய்யும் படி வந்தார். அவரை தமிழகத்தின் மிகப் பிரபலமான கோடீஸ்வர நண்பரிடம் அனுப்பி வைத்தேன். இயக்குனர் சென்று நண்பரைச் சந்தித்து விட்டு வந்து, “சார், என் வாழ்க்கையில் இவ்ளோ பணத்தினைக் கண்ணால் கூட கண்டது இல்லை சார் !” என்றார். என்ன இது இந்த ஆள் இப்படிப் பேசுகின்றாரே என்று நினைத்தேன்.

போனில் வந்த கோடீஸ்வர நண்பர் ”தங்கம், எப்படி நீங்க எல்லோரையும் நம்புகின்றீர்கள்?” என்றார். அதன் பிறகு இந்த இயக்குனரைப் பற்றி சில விஷயங்கள் சொன்னார். அவரின் கணிப்பு மிகச் சரியானது என்பதை அறிந்து கொண்டேன்.

இது நடந்து கொஞ்ச காலம் ஆனது. வேறொரு இயக்குனர் ஒருவர் என்னிடம் வாய்ப்பு பெற்றுத் தரும்படி வந்தார். அவரை காங்கிரஸ் கட்சியில் பெரும் பதவியில் இருக்கும் நண்பரிடம் அனுப்பி, ”நல்ல ஸ்கிரிப்ட் வைத்திருக்கிறார், இவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்” என்றுச் சொன்னேன். நண்பர் சரியான ஆராய்ச்சிப் பேர்வழி. இந்த இயக்குனரை உள்ளும் புறமும் சோதித்து விட்டு, “பத்துப் பைசாவிற்கு தேரமாட்டான் இவன்” என்றுச் சொன்னார்.

பிரபல அரசியல்வாதி  நண்பர் தன் மகனை ஹீரோவாக்க நினைத்து நல்ல ஸ்கிரிப்ட் தேடிக் கொண்டிருந்தார். பேச்சு வாக்கில் என்னிடம் சொன்ன போது, நல்ல ஸ்கிரிப்ட் ஒன்றினை வைத்துக் கொண்டு வாய்ப்பு தேடிய ஒரு புதிய இயக்குனரை அவரிடம் அனுப்பி வைத்தேன். “ஆள் சரியில்லைப்பா” என்றார் அரசியல்வாதி.

தகுதியற்றவர்களை சிபாரிசு செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் வேறுமாதிரியாய் இருந்தது. அத்துடன் சிபாரிசுகளை முற்றிலுமாய் நிறுத்தி விட்டேன்.

சினிமாவில் ஈகோ பிரச்சினை அதிகம். எனக்குத் தெரிந்த ஒரு இயக்குனர் புதியவர். அவரிடம் வேலை பார்க்கும் கேமரா மேன், “சார் எனக்கு பத்து வருடம் அனுபவம் சார், நீங்கள் புதிதாய் சினிமாவிற்கு வந்தவர். இந்தக் காட்சிக்கு இங்கே தான் கேமரா வைக்க வேண்டும்” என்று பலர் இருக்கச் சொன்னார். கேமரா அசிஸ்டெண்ட் இயக்குனர் சொல்வதைக் கேட்கவே மாட்டான்.இவரால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியவில்லை. வேறு வழி இன்றி சமாதானம் ஆனார் இயக்குனர்.

அது மட்டுமல்ல “சினிமாவில் நம்பிக்கைத் துரோகம்” என்பது மிக அதிகம். முன்னால் ஒன்று பேசுவர், பின்னால் ஒன்று பேசுவர். இதுதான் சினிமா. கூட இருந்தே குழி பறிப்பதில் சினிமாவில் தான் மிக அதிகம். நல்ல நண்பராக இருப்போர் திடீரென்று மிகப் பெரும் எதிரியாய் மாறி விடுவதும் சினிமாவில் தான் சாத்தியம் என்றார் எனது சினிமா நண்பர் ஒருவர்.

ஒரு பிரபல இயக்குனரை தயாரிப்பாளர் எப்படித் திட்டினார் தெரியுமா? “ஏண்டா தேவடியாப்பயலே, என் காசுடா ! உன் இஸ்டத்திற்கு செலவு செய்வீயாடா நீ?” என்று பலர் முன்னிலையில் திட்டினார். அந்த இயக்குனர் ஏதும் பேசவில்லை. அமைதியாக இருந்தார். இயக்குனர் இன்று புகழின் உச்சியில் இருக்கிறார். இவருக்கு இப்போது தேவையில்லாத பழக்கங்களெல்லாம் கூட ஒட்டிக் கொண்டன. தயாரிப்பாளர் தலையில் துண்டினை போட்டுக் கொண்டு ஓட்டு வீட்டில் வாழ்கிறார். சினிமாவில் ஜெயித்தவர்கள் இல்லவே இல்லை. அது எவரானாலும் சரி !

ஏதோ எழுத ஆரம்பித்து எங்கோ சென்று விட்டேன். விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்