குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, January 22, 2012

நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலும் எஸ்எம்கிருஷ்ணாவும்

கரூர் பசுபதிபாளையத்தைக் கடந்து செல்லும் அமராவதி ஆற்றின் கிழக்கிலிருந்து வடக்கே செல்லும் பாதையில் சென்றால்,  வழியெங்கும் சாயப்பட்டறைகளும், சிதைந்து போன மடங்களும், பாதசாரிகள் தங்கிச் செல்லும் கற்களால் ஆன சிதைந்த மண்டபங்களும் வரும். அதைத் தொடர்ந்து சென்றால் பச்சைப் பசேல் வயல் வெளிகளும், படர்ந்து விரிந்த ஆலமரமும், பிராமணாள் வீதி ஒன்றும் கண்களில் படும். தென்னஞ்சோலைகளும், மரங்களும் நிரம்பிய பாதையில் சென்றால் சிவப்பு சாயம் பூசிய கோயில் ஒன்று தென்படும். அது தான் நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவ சமாதி அடைந்த திருக்கோயில்.  அங்கே ஒரு ஆஸ்ரம் கூட இருக்கிறது.

சதாசிவ பிரம்மேந்திராள் பற்றித் தெரிந்து கொள்ள கீழே இருக்கும் பிளாக்கைப் படித்துப் பார்த்துக் கொள்ளவும்.
(சன்னதிக்கும் செல்லும் கோவிலின் முன்புறத் தோற்றம் )


இரண்டு வருடங்களாக ஞாயிறு தோறும் காலை பத்து மணிக்கு நெரூர் சென்று விடுவேன். கோவில் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் காவிரி ஆற்றில் இரண்டு மணி நேரக் குளியல். துணிகளைத் துவைத்துக் காய வைத்து பின்னர் சரியாக பனிரெண்டு மணிக்கு கோவிலுக்குள் செல்வேன்.  காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அய்யர் கண் தெரியாதவர். அருமையாக அர்ச்சனை செய்வார். பின்புறம் பிரம்மேந்திராள் ஜீவ சமாதி ஆன இடத்திற்குச் சென்று அமைதியாக பத்து நிமிடம் தியானம். குளிர்ச்சி என்றால் அப்படி ஒரு குளிர்ச்சி தென்படும் அவ்விடத்தில்.  நடை சாற்றிய பிறகு கோவிலின் வெளியே உள்ள நாகலிங்க மரத்தின் அடியில் அமர்ந்து இருப்பேன்.

மதியம் இரண்டு மணிக்கு மேல் கிளம்பி, இருப்பிடம் வந்து சேர்வேன். இந்தக் கோவிலுக்கு இளையராஜா போன்ற மிகப் பிரபலமான பலர் வந்து செல்வதாகச் சொல்வார்கள். வட நாட்டில் இருந்து பலர் வருவர்.

நமது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா மீது லோக்யாயுக்தா ஊழல் விசாரணை தொடர்கிறது என்ற செய்தியை படித்தேன். நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலுக்கு அமைச்சரின் பயணம் பற்றிப் படித்தேன்.  பிரம்மேந்திராள் சமாதி மீது எழும்பியிருந்த வில்வ மரம் பட்டே போய் விட்டது என்ற செய்தியையும் படித்தேன். மனதுக்குள் வெறுமை மண்டியது.

ஒரு முறை டிஸ்கவரி சானலில் அருமையான நிகழ்ச்சி ஒன்றினைப் பார்க்க நேர்ந்தது. பெரும் மலைகளும், மரங்களும் சூழ்ந்திருக்கும் இடங்களில் வசிக்கும் காட்டுவாசிகள் கோடையில் தண்ணீர் இருக்கும் இடத்தினைக் கண்டு பிடிக்க முடியாது.  தண்ணீர் இன்றி வாழ முடியாதே, ஆகவே எப்படியாயினும் தண்ணீர் இருக்குமிடத்தினைக் கண்டுபிடிக்க வேண்டுமல்லவா?  தண்ணீர் இருக்கும் இடங்களை குரங்குகள் தெரிந்து வைத்திருக்கும் என்பது இவர்களுக்குத் தெரியும். குரங்குகளை வைத்து அவ்விடங்களைக் கண்டுபிடிக்க இவர்கள் உத்தி ஒன்றினைக் கையாள்வார்கள். 

மரமொன்றில் துளையொன்றினைச் செய்வார்கள். அத்துளை வாயில் சிறிதாய் இருக்கும். ஆனால் உட்புறம் பெரிதாய் அகண்டு இருக்கும். சிலர் ஒன்று சேர்ந்து பல குரங்குகளை அம்மரத்தினடிக்கு விரட்டி வரும் போது, ஒருவர் நல்ல பெரிய பெரிய உப்புக் கட்டிகளை அம்மரத்தின் துளைக்குள் போடுவார். அதை அக்குரங்குகள் பார்க்கும் படிச் செய்வார்கள்.  அவ்வாறு செய்து விட்டு செடிகொடிகளுக்குள் மறைந்து கொள்வார்கள். ஏதோ வெள்ளையாக துளைக்குள் போட்டிருப்பதைக் கண்ட குரங்குகளில் ஏதோ ஒன்று துளைக்குள் கையை விட்டு உப்புக் கட்டிகளை எடுத்து விடும். உள்ளங்கைக்குள் உப்புக் கட்டி வந்தவுடன் கை விரிவடைந்து விடுமல்லவா? துளையில் கை மாட்டிக்கொள்ளும். குரங்கோ கட்டியை விடாது கையை வெளியில் எடுக்க முயற்சிக்கும். உப்புக்கும் ஆசை, கைக்கும் ஆசையாய் குரங்கு படாத பாடு படும். உடனே காட்டுவாசிகள் குரங்கிடம் சென்று அதைப் பிடித்து இடுப்பில் ஒரு கயிறும், காலில் ஒரு கயிறுமாய் கட்டி மரத்தோடு பிணைத்து உப்புக்கட்டிகளை வெளியில் போடுவார்கள். மரத்தின் துளையிலிருந்து குரங்கின் கையையும் விடுவிப்பார்கள். ஆசை ஆசையாய் உப்புக்கட்டியை விழுங்கும் குரங்கினை நக்கலுடன் பார்த்து விட்டு வீடுகளுக்குள் சென்று விடுவார்கள்.

உப்பைத் தின்றால் தாகமெடுக்கும் அல்லவா? ஒரு நாள் முழுக்க தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கும் குரங்கு.  மரத்தோடு கட்டிக் கிடப்பதால் தவித்து உருண்டு புரண்டு கொண்டிருக்கும். மறு நாள் வந்து குரங்கினை அவிழ்த்து விட்டு அது செல்லும் பாதையில் அதனுடன் ஓடுவார்கள். தாகத்தால் தவித்த குரங்கு தண்ணீர் இருக்கும் இடம் தேடி கண்மண் தெரியாமல் படு வேகத்தில் செல்லும். காட்டுவாசிகள் குரங்கினை வைத்து தண்ணீர் இருக்கும் இடத்தினைக் கண்டு பிடித்து விடுவார்கள்.

ஐந்தறிவு உள்ள குரங்கிற்குத் தெரியாது உப்பைத் தின்றால் தாகம் எடுக்கும் என்பது. ஆனால் மனிதனுக்குத் தெரியுமே. இருப்பினும் அவன் ஏன் பாவத்தினைத் தொடர்ந்து செய்கிறான்? விதி என்பதா? இல்லை ஆசை என்பதா? இரண்டும் வேறு வேறு அல்ல. விதியின் மறுபெயர் தான் பேராசை.

நமக்கு நடக்கும் நல்லதும் கெட்டதும் நாமே உருவாக்கி கொண்டவைகள். தெரிந்து செய்யும் தவற்றை இறைவன் என்றைக்குமே மன்னிக்க மாட்டான். தெரியாமல் செய்யும் தவறுகள் தவறுகளே அல்ல என்கின்ற புண்ணிய நூல்கள். இரும்புத்தாது ஏற்றுமதியில் நான் கண்ட அக்கிரமங்களுக்கு சாட்சியாய் விளங்கியவர்கள் இன்றைக்கு இருக்கும் நிலைக்கு காரணம் அவர்களே அன்றி வேறு யார்?

ஏழேழு ஜென்மப் பிறப்பெடுத்தாலும் செய்த பாவம் தலைமுறைக்கும் வரும் என்கின்றார்கள் முன்னோர்கள். எந்தக்  கோவிலுக்குச் சென்றாலும், கோடி பேருக்கு அன்னதானம் செய்தாலும் பாவத்தின் சம்பளம் கிடைத்தே ஆகும். வேலையை செய்தால் கூலி கிடைக்கும் அல்லவா?

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

1 comments:

Hariharan Valady said...

When I was young, my father used to take me to this temple every year. There would be bhajans and annadhanam on that day. We used to sit on the street and eat the food. When I read this post, i got the old memories back.
I will visit this place once again.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.