குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, January 12, 2012

சாருநிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாசமும் தொடர்ச்சி

என் மனையாளை கலவரப்படுத்திய அந்த நாவலின் கதைச் சுருக்கம் கீழே. நிச்சயம் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.

திகம்பரபுரியில் ”பன்னீயூர் படாடோபசர்மா” என்கிற வயதான ஜமீந்தார் வாழ்ந்து வந்தார். அவர் எப்படிப்பட்டவர் என்றால் ஒரு முறை கால்நடையாகவே ஐரோப்பாவைச் சுற்றி வந்து கொண்டிருந்த போது, எதிர்ப்பட்ட பர்வதம் ஒன்று, இவரைக் கண்டதும் மனித உருவம் கொண்டு இவர் தாழ் பணிந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்று, பின்னர் மீண்டும் பர்வதமாய் ஆனதாம். அதுமட்டுமின்றி இவர் தூங்குகின்ற போது, இரண்டு கண்கள் மூடி இருந்தாலும் மூன்றாவது கண் விழித்துக் கொண்டு அவர் யாரை நினைக்கிறாரோ அவரைப்பற்றி இவருக்குப் படம் போலக் காட்டுமாம். அந்தளவுக்கு பன்னீயூராரின் பிரஸ்தாபம். இப்படிப்பட்ட இவருக்கு ஒரு கையாள் இருக்கிறான். அவன் பெயர் ”ஸமரச சஞ்சீவி”, இவன் எப்படிப் பட்டவன் என்றால் மேற்கண்ட பர்வத நிகழ்ச்சியைப் பற்றி இவனிடம் பன்னியூர் ஜமீந்தார் சொன்னவுடனே, அதற்கு இந்த நிகழ்வைப் பற்றி ஏதோ ஒரு புத்தகத்தில் படித்ததாகவும், பெயர் மறந்து விட்டபடியால், பன்னீயூரார் சொன்னவுடன் தான் அந்த மகானுபாவர் எஜமான் தான் என்று அறிந்து கொண்டதாகவும் சொல்லும் அதிபயங்கர புரட்டன். இந்தப் பன்னியூர் ஜமீந்தாருக்கு ”கட்டிக்கரும்பாள்” என்கிற இளவயது மனைவி. பன்னியூராருக்கு கட்டிக்கரும்பாளை வயதானதால்( அந்தக் காலத்தில் வயாக்கிரா இல்லை அல்லவா? பாவம் பன்னியூரார்)  மேட்டர் செய்ய முடியாத காரணத்தால் விரகதாபத்தில் தவிக்கும் இவளுக்கு ஜமீந்தாரின் முதல் மனைவியின் புதல்வன் மாதிருகாம கோலாகலனுடன் இரகசிய சந்திப்பு ஏற்பட்டு விடுகிறது.  அதை அட்சர சுத்தமாய் பார்த்து விடுகிறார் ஜமீந்தார்.

இது இப்படி இருக்க,  நித்ய கல்யாண விலாஸ் என்கிற மாபெரும் பல்பொருள் அங்காடிக்கு கதை செல்கிறது. இந்த விலாஸின் ஓனர் நித்யகல்யாணி அம்மாள் ஒரு விதவை. இவளின் கடைக்கு அருகில் மார்க்க ஸகாயர் என்பவரின் கடையும் உண்டு. மேலுக்குப் பார்க்க இது பல்பொருள் அங்காடி. ஆனால் உண்மையில் ஷோக் சுந்தரி, ஜில் மோகனா, டால் ரம்பாம் மற்றும் எலக்ட்ரிக் லட்டு போன்றோரின் கலைச்சேவைதான் பிரதானம். ஊரின் பெரும்தனக்காரர்கள் மார்க்க ஸகாயர் கடைவழியாய் இருக்கும் ரகசிய பாதை வழியாக நித்ய கல்யாண விலாஸுக்கு வருவர். அங்கு மேற்படி ஷோக், ஜில், டால், எலக்ட்ரிகின் ஸ்பெஷல் அலுக்கல், குலுக்கல்களை அனுபவித்து நித்ய கல்யாணி அம்மாவிற்கு பொருள் அளித்துச் செல்வர்.

இது இப்படி இருக்க, அங்கே ஜமீந்தார் தன் பையனே தன் பெண்டாட்டியை மேட்டர் பண்ணுகிறானே என்ற கோபத்தில் ஏதும் செய்ய இயலாமல் அறைக்குள் சென்று கோபத்தில் தத்தளிக்க, தந்தை சித்தியை மேட்டர் செய்வதைப் பார்த்து விட்ட கோலாகலன், ஸமய சஞ்சீவியிடம் சென்று கொஞ்சம் காசைக் கொடுத்து அப்பாவை எப்படியாவது சரிக்கட்டுமாறு சொல்கிறார். சஞ்சீவியும் ஜமீந்தாரரிடம் சென்று, கட்டெறும்பு கடித்த போது, ஏதேச்சையாக அங்கு வந்த கோலாகலன் ஆபத்திற்கு பாபம் இல்லையென்று முதுகில் இருந்த எறும்பை எல்லாம் கையால் எடுத்தும், முகத்தில் கடித்த எறும்பை எல்லாம் வாயால் ஊதியும் விட்டுக் கொண்டிருந்த போதுதான், நீங்கள் பார்த்தாகவும், உங்கள் பையன் ஒரு பெண்ணை விரும்பிக் கொண்டிருக்கிறான் என்பதாகவும் போட்டு விட பையன் மேல் சந்தேகம் தீர, தன் உறவுக்காரப் பெண்ணை தன் மகனுக்கு கல்யாணம் செய்து  வைக்க, கட்டிக்கரும்பாளையே கேட்டுக்கொள்கிறார். ஆக கோலாகலனும், கட்டிக்கரும்பாளும் எந்த வித தொந்தரவும் இன்றி இனி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஜமீந்தாரரின் உறவுப் பெண் குயில் மொழியாளை அழைத்து வந்து ஸமய சஞ்சீவி கோலகலன் தன் சித்தி கட்டிக்கரும்பாளை கட்டியணைத்து மேட்டர் செய்வதைக் காட்டுகிறான். அதைப் பார்த்து எரிச்சல் படும் குயில் மொழியாளுக்கு மேட்டரின் மீது ஆசை வந்து விடுகிறது.

இது இப்படி இருக்க, நித்ய கல்யாண விலாஸில் கிளியரன்ஸ் சேல் நடக்கிறது. ஊர்ப் பெரிய மனிதர்கள் அனைவருக்கும் விருந்தான மேற்படிப் பெண்களை யாரோ ஒருவருக்கு மொத்தமாய் வப்பாட்டியாயை வைத்துக் கொள்ள சிலருக்கு கடிதம் அனுப்பு வைக்கிறாள் நித்யகல்யாணி அம்மாள்.இதற்குள் சவுடாலப்பர் என்கிற ஒரு போலீஸ் அதிகாரி நித்யகல்யாணி விலாசுக்கு வந்து விசாரணை என்கிற பேரில் மேட்டருக்கும். மாதா மாதம் வசூலுக்கும் ஏற்பாடு செய்கிறான். இவன் பேரில் ஒரு புரட்டு இருக்கிறது.

எண்பது வயது கந்தர்ப்பபுரியார் வாயில் எச்சில் வழியும் உடலுக்காரர். அவருக்கு ஜில் மோகனாவை விற்கிறாள். பரசுமண் ஸதாத்யான ருத்ராக்‌ஷ பூனையார் என்கிற பரிசுத்த பாப்பையா என்கிற ஃபாதருக்கு டால் ரம்பாவை விற்கிறாள். அதிமோக லீலாவதி என்கிற பெண், இரவில் கட்டுக்கலையான ஆண்களை தூக்கி வந்து கண்களைக் கட்டு ஜல்லாபம் செய்கிறாள். ஒத்துக் கொண்டவர்களுக்கு உயிர் மிச்சம். ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு உயிர் போகும். இப்படியான ஒரு பெண்மணிக்குப் பிறந்தவன் செல்லதுரை, சிறு வயதிலேயே அம்மாவின் அஜால்குஜால் வேலைகளைப் பார்த்து, பயலும் மேட்டர் செய்ய ஆரம்பித்து விடுகிறான். அவனுக்கு எலக்ட்ரிக் லட்டுவை விற்கிறாள் நித்யகல்யாணி. ஒருவழியாக கிளியரன்ஸ் சேல் முடிகிறது.

இதை அறிந்து கொண்ட சவுடாலப்பர் தனது நண்பர்களின் உதவியால் மேற்படி மூவரிடமிருந்து பெரும் பணம் பறிக்கின்றான். இதற்குள் ஸமய சஞ்சீவி விரகதாபத்தால் தவிக்கும் குயில் மொழியாளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறான். கனடா தேசத்துக் கவர்னர் பையன் ரைட் ஆனரபிள் டம்பாச்சாரியாரை குயில் மொழியாளுக்கு அறிமுகப்படுத்தி, ரகசிய திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான். ஏனென்றால் பன்னீயுரார் குயில் மொழியாள் அப்பாவிடம் பெரும் பணத்தை கடனாகப் பெற்று அதை குயில் மொழியாளுக்கு எழுதி வைத்து விடுகிறார். இந்தச் செய்தியை ஜமீந்தாரரிடம் நைச்சியமாய்ப் பேசி கறந்து விடும் சஞ்சீவி தன் பையனையே ரைட் ஆனரபிளாக மாற்றி குயில் மொழியாளுக்குத் திருமணம் செய்விக்க முயலும் போது, உண்மை ரைட் ஆனரபிள் டம்பாச்சாரியார் தடுத்து குயில் மொழியாளை திருமணம் செய்து கொள்கிறார். ஸமய சஞ்சீவியையும், அவன் மகனையும் போலீஸார் கைது செய்கின்றனர்.

கோலாகலனும், கட்டிக்கரும்பாளும் கட்டிப்புரண்டு கொண்டிருப்பதை கண்டு விடும் ஜமீந்தாரர் என்ன செய்வது என்று தெரியாமல் மயக்கத்தில் கிடக்க, மனச்சாட்சி உறுத்தும் கட்டிக்கரும்பாள், கோலாகலனை மறக்க முடியாமல் இருவரும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தன் சொத்தைத் தான் இதுவரை பன்னீயூரார் அனுபவித்து வந்திருக்கிறார் என்று அறியும் குயில் மொழியாள் அவரை மன்னித்து அவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு, சொத்துக்களை விற்று விட்டு, ரைட் ஆனரபிள் டம்பாச்சாரியாருடன் கனடாவிற்குச் செல்கிறாள்.

கதை இத்துடன் முடிந்து விட்டது. இது வெகு சுருக்கமாய் எழுதப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் விலாவரியாக எழுதப்பட்டிருக்கிறது. படிக்கப் படிக்க.... என்ன ஆகும் என்றுதான் உங்களுக்குத் தெரியுமே?

தமிழக வாசகப் பரம்பரையை உருவாக்கிய இந்த நாவலின் ஆசிரியர் வடுவூர் கே துரைசாமி அய்யங்கார் என்பவர். நாவலின் தலைப்பு “பன்னீயூர் படாடோபசர்மா”.

கதை இத்துடன் முடிகிறது. நாளைக் கச்சேரி ஆரம்பம்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.