குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, January 3, 2012

தயாரிப்பாளரை ஏமாற்றிய இயக்குனர்

கோர்ட்டுகள் குடும்பங்களின் நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது மிகக் கொடுமையான ஒன்று. நீதிபதிகள் எவரும் கடவுள் அல்ல. மிக உயர்ந்த மனம் கொண்டவர்களும் அல்ல. வக்கீலாக பிராக்டீஸ் செய்து, அதன் பிறகு நீதிபதிகளாய் வருபவர்கள் தான்.

கணவன், மனைவிக்கு டைவோர்ஸ் கொடுப்பதில் நீதிமன்றங்கள் ஈடுபடுவது நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்குள் சட்டம் தன் மூக்கை நுழைப்பது ஆகும். சட்டப்படி என்பது வாழ்க்கைக்கு ஒத்து வரவே வராது. தமிழ்ச் சமூகம் என்பது உயர்ந்த நம்பிக்கை சார்ந்த, சமூகச் சார்புடைய, கற்பியல் சார்ந்தது. அதில் சட்டத்துறையின் தலையீடு என்பது கேலிக்குறியதாகும். முன்பு ஒரு முறை அம்மாவின் அரசு பலியிடுதலை சட்டவிரோதம் என்றது. நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்குள் அரசு தலையிட்டு, பின்னர் முக்கறுபட்டது நமெக்கெல்லாம் நினைவில் இருக்கலாம். இது போன்றதுதான் குடும்ப உறவுகளுக்குள் சட்டம் நுழைவது.

கணவன், மனைவி உறவென்பது சாதாரணமானது அல்ல. அது ஒரு டிவைன். இருவருக்கும் இருக்கும் பிணைப்பு என்பது கடவுள் தன்மை உடையது. அதையெல்லாம் சட்டத்தின் வரையறைகளுக்குள் கொண்டு வரவே முடியாது. என் நண்பருக்கு டிவோர்ஸ் ஆகி விட்டது. மனைவி தனியாக வாழ்கிறார். இவருக்கு மூன்று குழந்தைகள். மூவரும் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கின்றனர். மனைவிக்கு டைவோர்ஸ் வாங்கிக் கொடுத்ததில் மனைவியின் உறவினர்களுக்கு பெரும் பங்கு உண்டு. 

தனிமையில் வாழ்கிறார் நண்பரின் மனைவி. இவர் வாழ்க்கையில் என்ன சாதிக்கப் போகின்றார் என்பது எனக்குப் புரியவே இல்லை. முடிவில் என்ன ஆகும் தெரியுமா? எவரும் இவரைக் கண்டு கொள்ளப் போவது இல்லை. தனிமையில் கிடந்து உழலுவார். தன் வாழ்க்கையை பலியிடுவார். இவரின் குழந்தைகள் கூட இவரைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். குழந்தைச் செல்வங்களை கூட வைத்து, வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்குவதில் இருக்கும் சந்தோஷத்தை விட மனிதனுக்கு வேறென்ன சந்தோஷம் பெரிதாய் இருக்க முடியும் சொல்லுங்கள் பார்க்கலாம். அதை இப்பெண்மணி இழந்திருக்கிறார். இவர் மட்டுமல்ல தன் கணவனையும் இழக்க வைத்திருக்கிறார்.

நானும் நண்பரும் வாரா வாரம் கோவை ரேஸ் கோர்ஸ் சென்று வருவோம். வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, கார் வேறு வழியாக வந்தது. வழியில் நண்பரின் குழந்தைகள் தங்கிப் படிக்கும் பள்ளியின் ஹாஸ்டல் இருந்தது.

”என் குழந்தைகள் மூவரும் ஜெயிலில் கிடக்கிறார்கள்” என்றார் குரல் கம்ம. டைவோர்ஸ் வழங்கிய கோர்ட் இந்தத் தகப்பனின் சோகத்துக்கு என்ன பதில் சொல்லும். தானே குழந்தையை வளர்க்கிறேன் என்றுச் சொன்ன தாய் மூன்று பேரையும் ஹாஸ்டலில் கொண்டு போய் தள்ளி விட்டார். கோர்ட் குழந்தைகளை தாயின் அரவணைப்பில் தான் விடும். இது எத்தகைய ஒரு கொடூரம் என்பதைப் பாருங்கள். தகப்பன் நினைத்தால் கூட உடனே தன் குழந்தைகளைப் பார்த்து விட முடியாது. தாய், தந்தையின் அரவணைப்பில் வாழ வேண்டிய குழந்தைகள் தனியாய் வாழ்கின்றாஅர்கள்.  கோர்ட் ஒரு குடும்பத்தினை கெடுத்து, குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறதைப் பார்த்தீர்களா?

கோர்ட்டுகள் உறவுகளுக்குள் நுழைந்து கொடுக்கும் தீர்ப்புகளின் விளைவினைப் பார்த்தீர்களா? அவரின் மூடை மாற்றுவதற்காக பேச்சை மாற்றினேன். அப்போது அவர் சொன்னது.

இவரின் நண்பர் ஒரு இயக்குனர். எங்கெங்கோ சென்று யாரோ ஒருவரைப் பிடித்து ஒன்றரைக் கோடி பணத்தை வாங்கி விட்டார். வாங்கியது சென்னையில் ஒரு வீடு, சொந்த ஊரில் ஒரு வீடு வாங்கி விட்டார். படமெடுக்கிறேன் பேர்வழி என்று ஒப்புக்கு ஒரு படத்தினை எடுத்து, கொஞ்சம் வியாபாரமும் செய்து விட்டார். பணம் கொடுத்தவர் பெரிய பணக்காரர். அவருக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இப்படித்தான் பல இயக்குனர்கள் இருக்கின்றார்கள். இப்போது இந்த இயக்குனர் வேறு ஏமாளி தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறார். எனக்கும் கூட சில அனுபவங்கள் உண்டு.

என்னிடம் ஒருவர் படமியக்க உதவி செய்யும் படி வந்தார். அவரை தமிழகத்தின் மிகப் பிரபலமான கோடீஸ்வர நண்பரிடம் அனுப்பி வைத்தேன். இயக்குனர் சென்று நண்பரைச் சந்தித்து விட்டு வந்து, “சார், என் வாழ்க்கையில் இவ்ளோ பணத்தினைக் கண்ணால் கூட கண்டது இல்லை சார் !” என்றார். என்ன இது இந்த ஆள் இப்படிப் பேசுகின்றாரே என்று நினைத்தேன்.

போனில் வந்த கோடீஸ்வர நண்பர் ”தங்கம், எப்படி நீங்க எல்லோரையும் நம்புகின்றீர்கள்?” என்றார். அதன் பிறகு இந்த இயக்குனரைப் பற்றி சில விஷயங்கள் சொன்னார். அவரின் கணிப்பு மிகச் சரியானது என்பதை அறிந்து கொண்டேன்.

இது நடந்து கொஞ்ச காலம் ஆனது. வேறொரு இயக்குனர் ஒருவர் என்னிடம் வாய்ப்பு பெற்றுத் தரும்படி வந்தார். அவரை காங்கிரஸ் கட்சியில் பெரும் பதவியில் இருக்கும் நண்பரிடம் அனுப்பி, ”நல்ல ஸ்கிரிப்ட் வைத்திருக்கிறார், இவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்” என்றுச் சொன்னேன். நண்பர் சரியான ஆராய்ச்சிப் பேர்வழி. இந்த இயக்குனரை உள்ளும் புறமும் சோதித்து விட்டு, “பத்துப் பைசாவிற்கு தேரமாட்டான் இவன்” என்றுச் சொன்னார்.

பிரபல அரசியல்வாதி  நண்பர் தன் மகனை ஹீரோவாக்க நினைத்து நல்ல ஸ்கிரிப்ட் தேடிக் கொண்டிருந்தார். பேச்சு வாக்கில் என்னிடம் சொன்ன போது, நல்ல ஸ்கிரிப்ட் ஒன்றினை வைத்துக் கொண்டு வாய்ப்பு தேடிய ஒரு புதிய இயக்குனரை அவரிடம் அனுப்பி வைத்தேன். “ஆள் சரியில்லைப்பா” என்றார் அரசியல்வாதி.

தகுதியற்றவர்களை சிபாரிசு செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் வேறுமாதிரியாய் இருந்தது. அத்துடன் சிபாரிசுகளை முற்றிலுமாய் நிறுத்தி விட்டேன்.

சினிமாவில் ஈகோ பிரச்சினை அதிகம். எனக்குத் தெரிந்த ஒரு இயக்குனர் புதியவர். அவரிடம் வேலை பார்க்கும் கேமரா மேன், “சார் எனக்கு பத்து வருடம் அனுபவம் சார், நீங்கள் புதிதாய் சினிமாவிற்கு வந்தவர். இந்தக் காட்சிக்கு இங்கே தான் கேமரா வைக்க வேண்டும்” என்று பலர் இருக்கச் சொன்னார். கேமரா அசிஸ்டெண்ட் இயக்குனர் சொல்வதைக் கேட்கவே மாட்டான்.இவரால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியவில்லை. வேறு வழி இன்றி சமாதானம் ஆனார் இயக்குனர்.

அது மட்டுமல்ல “சினிமாவில் நம்பிக்கைத் துரோகம்” என்பது மிக அதிகம். முன்னால் ஒன்று பேசுவர், பின்னால் ஒன்று பேசுவர். இதுதான் சினிமா. கூட இருந்தே குழி பறிப்பதில் சினிமாவில் தான் மிக அதிகம். நல்ல நண்பராக இருப்போர் திடீரென்று மிகப் பெரும் எதிரியாய் மாறி விடுவதும் சினிமாவில் தான் சாத்தியம் என்றார் எனது சினிமா நண்பர் ஒருவர்.

ஒரு பிரபல இயக்குனரை தயாரிப்பாளர் எப்படித் திட்டினார் தெரியுமா? “ஏண்டா தேவடியாப்பயலே, என் காசுடா ! உன் இஸ்டத்திற்கு செலவு செய்வீயாடா நீ?” என்று பலர் முன்னிலையில் திட்டினார். அந்த இயக்குனர் ஏதும் பேசவில்லை. அமைதியாக இருந்தார். இயக்குனர் இன்று புகழின் உச்சியில் இருக்கிறார். இவருக்கு இப்போது தேவையில்லாத பழக்கங்களெல்லாம் கூட ஒட்டிக் கொண்டன. தயாரிப்பாளர் தலையில் துண்டினை போட்டுக் கொண்டு ஓட்டு வீட்டில் வாழ்கிறார். சினிமாவில் ஜெயித்தவர்கள் இல்லவே இல்லை. அது எவரானாலும் சரி !

ஏதோ எழுத ஆரம்பித்து எங்கோ சென்று விட்டேன். விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்தாலும் பல தகவல்கள். நன்றி! தொடர்க!

Unknown said...

Only a few blogger would discuss this topic the way you do.~,�;. home

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.