குருவி படத்தில் விஜய் எங்கிருந்தோ பறந்து பறந்து வந்தெல்லாம் அடித்து தூள் கிளப்புவார். சினிமா தியேட்டரில் இண்டர்வல்லில் ரசிகன் ஒருவன் தன் நண்பனிடம் இது பற்றி அலுத்துக் கொள்ள, "நண்பன் இதே சூர்யா செய்தால் ஒத்துக் கொள்வோமா? இதற்கு விஜய்தான் லாயக்கு" என்றான். சினிமா தியேட்டருக்கு ரெகுலராக வருகை தரும் ரசிகன், தன் நண்பரான தியேட்டர் மேனேஜரிடம் “ என்னாங்க இது, காத்துல பறக்கறாரு, படம் பார்க்க புடிக்கல காசைக் கொடுங்க” என்றுச் சொல்லி வந்து நின்றார். இதெல்லாம் விஜய் படத்தின் ரிலீசின் போது அவரின் ரசிகர்கள் பேசிக் கொண்டது.
ஆனந்த விகடன் நேர்காணலின் போது பிரபல இயக்குனர்களின் லிஸ்ட்டில் விஜய்யின் பெயரே இல்லை என்று எழுதி இருந்தார்கள். அப்போது புது இயக்குனர்களுக்கு வாழ்வு கொடுக்கிறேன் என்றுச் சொன்ன விஜய் தற்போது உண்மை நிலவரத்தைப் புரிந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.
அவர் விரும்பிய, நம்பிய பறந்து பறந்து போடும் சண்டை இல்லை,பஞ்ச் டயலாக் இல்லை, ஆனால் படம் வெற்றி. விஜய்யிடம் என்ன பிரச்சினை என்றால் தான் செய்யும் சில அசட்டைகளை அவர் இன்னும் விடாமல் நடிப்பில் பயன்படுத்துவதுதான். ஒரே மாதிரியான அசட்டைகள் எரிச்சலை உருவாக்கும் என்பதை அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று நண்பன் படத்தினைப் பார்க்கின்ற போது தெரிய வருகின்றது. இது மாதிரியான விஷயங்கள் எல்லாம் நண்பன் படத்தின் வெற்றிக்கு முன்னால் காணாமல் போய் விட்டன என்பதால் அதைப் பற்றி அதிகம் பிரஸ்தாபிக்கத் தேவையில்லை.
இவருக்குப் பின்னால் வந்த சூர்யா பிரபல இயக்குனர்களின் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறார். சூர்யா நடிப்பில் எங்கோ சென்று விட்டார். தனுஷோ இன்னும் ஒரு படிமேல் சென்று விட்டார். போக்கிரி, வில்லு, வேட்டைக்காரன், சுறா போன்ற அக்மார்க் அட்டர் பிளாப்புகளால் தன் இமேஜ்ஜை வேறு விதமாக புரிந்து கொண்டிருந்தார் விஜய். ஆனால் தற்போது அவரின் நண்பன் படம் அந்த அடிதடி இமேஜ்ஜை உடைத்து, அவருக்கு வேறு விதமான பாதையைக் காட்டி இருக்கிறது. அவர் நிச்சயம் தற்போது தன் நிலையையும், ரசிகர்களின் போக்கினையும் புரிந்து கொண்டிருப்பார் என நம்பலாம்.
இயக்குனர் சங்கருக்கென்று இருக்கும் ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்திருக்கும் விஜய், அடுத்து வரப்போகும் முருகதாஸின் “துப்பாக்கி”, கவுதம்மின் “யோகன் அத்தியாயம் ஒன்று” போன்ற படங்களினால் நிச்சயம் அமீர்கான் போன்ற சிறந்த நடிகராக மிளிர்வார் என்று நம்பலாம். இயக்குனர் முருகதாஸுக்கு என்று இருக்கும் ஆடியன்ஸ், கவுதமிற்கு என்று இருக்கும் ஆடியன்ஸ் என்று பல பிரபல இயக்குனர்களின் ஆடியன்ஸ்களை தன் பக்கம் ஈர்ப்பதில் தான் நடிகரின் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும். வியாபாரமும் அதிகமாகும். இந்த நடிகரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாபம் வரும். அதற்காக புதிய இயக்குனர்களின் படங்களை ஒத்துக் கொள்ளக் கூடாது என்றுச் சொல்லவில்லை. கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும். ரசிகர்களைக் கவரும் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிக்க கவனம் கொள்ள வேண்டும். தமிழ் சினிமா உலகின் சாபக்கேடு கதை திருட்டு. அதை விஜய்யின் தந்தை செய்கிறார் என்று சில சர்ச்சைகள் இருக்கின்றன. இதன் காரணமாக கூட நல்ல நல்ல கதைகள் கூட விஜய்யை எட்டி விடாமல் போகலாம். விஜய் இது போன்ற சின்ன சின்ன விசயங்களைச் சரி செய்து கொள்ள வேண்டியது அவரின் வெற்றிக்கு முக்கியம்.
இப்போதிருக்கும் காலம் எம் ஜி ஆர் காலம் அல்ல. இது டெக்னாலஜி ஆட்சி செய்யும் டெக் உலகம். அதை நடிகர்கள் உணர்ந்து தன் மீதான வியாபார உத்தியைப் பெருக்க வழி வகை செய்ய வேண்டும். அதை விடுத்து, “ நான் போகும் பாதை தனிப்பாதை” என்றெல்லாம் பஞ்ச் டயலாக் விட்டு, தானும் ரஜினி போன்று வரலாம் எனக் கனவுக் கோட்டை கட்டினால் அது காற்றின் சிறு சலசலப்பில் கலைந்து போகும்.
விஜய் அதை உணர்ந்து கொண்டால் மிக நல்ல நடிகராக பரிணமளிக்கலாம். இல்லை என்றால் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான, பெண்களால் அதிகம் காதலிக்கப்பட்ட “திரு மோகன்” கதி போல ஆகி விடுவார் என்பது நிச்சயம். உலகம் மாறிக்கொண்டிருக்கிறது, அதே போல மாற்றப்பட்ட வியாபார உத்திகளை புகுத்தாத எவரும் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல.
- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.