குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, July 27, 2011

தர்மம் தலை காத்தது


தர்மம் தலை காக்கும் என்பார்கள். அது எந்தளவுக்கு உண்மை என்பதை உணரக்கூடிய வாய்ப்புகள் குறைவு. உயிர் எங்கே இருக்கிறது காட்டு பார்க்கலாம் என்பதைப் போலத்தான் தர்மமும் எங்கே இருக்கிறது என்று கேட்பார்கள். என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் தர்மம் தலை காக்கும் என்பதை நிரூபித்தது. அது என்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

கரூரில் இருக்கும் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் கண்ட்ரோலில் இருக்கும் மெட்ரிக் பள்ளிகள், பெண்கள் கல்லூரிகளில் அடியேன் தான் கணிப்பொறித் துறைக்கு சிஸ்டம் இஞ்சினியர். புதுக் கணிணி வாங்குவது, அசெம்பிள் செய்வது, டீச்சிங் என்று பல வேலைகளைச் செய்து வந்தேன். ஆசிரமத்தலைவரான திரு ஆத்மானந்தா அவர்களுடன் நேரடித்தொடர்பில் இருந்தேன். இந்தத் தொடர்பால் ஆசிரமத்தில் எனக்கு மிகப் பெரும் தொல்லைகள் எல்லாம் ஏற்பட்டன. அதை சமயம் வாய்க்கும் போதெல்லாம் எழுதுகிறேன். இப்போது வேண்டாம்.

இந்த ஆசிரமத்தின் கீழ் 150 சிறுவர்கள், கிட்டத்தட்ட 100 பெண் குழந்தைகள், கல்லூரிப் பெண்கள் என்று கடவுளின் குழந்தைகள் பலருக்கு உணவும், உடையும், கல்வியும் கொடுத்து பாதுகாத்து வந்தனர். அந்த வகையில் சாமி மீது எனக்கு கொள்ளை அன்பு.  கிட்டத்தட்ட ஆறு பள்ளிகள், ஒரு பெண்கள் கல்லூரி என்று மொத்தமாய் ரூபாய் 100 கோடிக்கும் மேல் மதிப்புக் கொண்ட கல்வி நிறுவனங்களை சாமி நடத்தி வந்தார். இங்கு ஒரு சின்னக் கதை ஒன்றினைச் சொல்ல வேண்டும். 

சாமி, திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் இருக்கும் திருப்பராய்த்துறை தபோவனத்தின் தலைமை சுவாமி சித்பவானந்தரின் சீடர். சித்பவானந்தரின் அறிவுரைப் படி கரூர் வந்தார். அதன் பிறகு இவரின் தனிப்பட்ட முயற்சியில் பல கல்வி நிலையங்களையும், கல்லூரிகளையும் ஆரம்பித்து நடத்தி வந்தார். ஆனால் அது அனைத்தையும் தபோவனத்தின் பெயரிலேயே நடத்தி வந்திருக்கிறார். குரு காணிக்கை என்று வைத்துக் கொள்ளுங்களேன். சுவாமி சித்பவானந்தரின் மறைவுக்குப் பிறகு தலைமையிடத்திற்கு வந்த மற்ற சாமியார்கள் ஆத்மானந்தாவை கரூர் நிறுவனத்திலிருந்து வெளியேற்ற முயற்சிக்க வழக்கு கோர்ட்டுக்குச் சென்றது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக வழக்கு நடந்து வந்தது என்று அங்கிருந்த பிரதர் ஒருவர் என்னிடம் சொன்னார்.

அந்த வழக்கு கரூர் நீதிமன்றத்தில் தபோவனத்திற்குச் சார்பாக தீர்ப்பு பெற, தபோவனச் சாமியார்கள் கல்வி நிறுவனத்திற்குள் நுழைய முயற்சித்தனர்.  தடையாணை பெற்று, மேல் முறையீடு செய்வதற்குள் இந்தப் பிரச்சினை வர, பள்ளியின் கேட்டின் முன்பு பெரும் ரகளை நடைபெற்றது. காவல்துறை உதவியுடன் சாமியார்கள் சிலர் உள்ளே வந்து உட்கார்ந்து விட்டனர்.  கொலைமுயற்சித் தாக்குதல்கள் நடைபெற்றது என்றுச் சொல்லி வழக்குகள் வேறு பாய சாமியை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்று ஆசிரமத்தில் பேசிக் கொண்டார்கள்.

சாமியாருக்கு வேண்டப்பட்டவர்கள், வக்கீல்கள் என்று சாமியாரின் அறை பிசியாக இருந்தது. மதியச் சாப்பாட்டின் போது அவர் மட்டும் தனித்திருப்பார். எனக்கு மட்டும் எப்போது வேண்டுமானாலும் அவரைப் பார்க்க பர்மிஷன் இருக்கிறது என்பதால் சற்றே பதட்டத்துடன் அறைக்குள் நுழைந்தேன்.

ராமகிருஷணரின் பொன்மொழிகள் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். வெளியே ஆசிரமவாசிகள், ஆசிரியர்கள்,மாணவர்கள் அனைவரும் பரபரப்பாய் இருந்தனர். ஆனால் சாமியோ சாந்த சொரூபியாக அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்து, “வாப்பா, கம்யூட்டர் சார் !” என்றச் சொல்ல அவரருகில் சென்று அமர்ந்தேன்.

”பயமாக இருக்கிறதா? வேறு கிளைக்குச் சென்று வருகிறாயா?” என்று கேட்க, நானோ “அதெல்லாம் ஒன்றுமில்லை சாமி, உங்களைக் கைது செய்யப்போவதாகச் சொல்லிக் கொள்கின்றார்கள், அதான் டென்சனா இருக்கிறது” என்றேன்.

”அங்கே பாரப்பா” என்றார். எதிரில் விவேகானந்தரின் ஆளுயரப் படம் ஒன்று இருந்தது. ”சாமியை ஒரு நிமிடம் உற்றுப் பாரப்பா”. உற்றுப் பார்த்தேன்.

”பயப்படாதே, ஒன்றும் ஆகாது, தர்மம் வெல்லும்” என்றார். தெளிந்த மனத்தோடு வெளியில் வந்து, பள்ளிக்குச் சென்று விட்டேன்.

அவரை யாரும் கைது செய்யவில்லை. வழக்கும் மேல் முறையீடு செய்யப்பட்டது.தற்போது இக்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தபோவனத்தின் நிர்வாகத்தின் கீழ் வந்து விட்டது என்றுச் சொன்னார்கள். அது சாமிக்குப் பிரச்சினை இல்லை. ஏனென்றால் இதைப் போன்ற பல நிறுவனங்களை அவர் உருவாக்குவார். அவரின் நம்பிக்கை மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கை கொஞ்சம் நஞ்சமல்ல.

என்னை முதன் முதலில் சந்தித்த போது, “எண்ணமே வாழ்வு” என்ற அப்துற் ரஹீமின் புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அவரின் இளமையில் அவரது மாமா அவருக்குக் கொடுத்த புத்தகமாம் அது.அதை நான் வாங்கி இரவு முழுவதும் படித்தேன். வாழ்க்கையில் வெற்றி என்ற இன்னொரு புத்தகமும் கூட அப்துற் ரஹீம் எழுதியது இருக்கிறது.

வாழ்க்கையில் எப்போதெல்லாம் சோதனைக்கும் மேல் சோதனை வருகிறதோ அப்போதெல்லாம் அந்தப் புத்தகமே எனக்கு உற்ற நண்பனாய் இருக்கும்.

உங்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நினைக்கிறேன். நேரமிருந்தால் வாங்கிப் படியுங்கள்.

சாமியாரின் 'தர்மம் வெல்லும்' என்ற ஒரு வார்த்தையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கங்கள் இருப்பதை அன்று நான் உணர்ந்தேன்.

”தர்மம் நிச்சயம் தலை காக்கும்”

1 comments:

Michael Jackson said...

sir,
whenever you good books in software form, you can give a link in your post for readers to download and use it. it is very rare to get good tamil books in software form. whenever you come across such books, please make it available to readers also.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.