குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, June 13, 2011

அவசிய உணவுக்குறிப்புகள் பகுதி - 4

நான் பிறந்த சமூகம் காரம், புளி இவற்றினை அதிக அளவு பயன்படுத்தும். குழம்பு என்றால் சிவப்புக் கலரில் இருக்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடவே மாட்டேன். நாக்கு பற்றி எரிய வேண்டும். அந்தளவு காரம் இருக்கும். கரூரில் இருக்கும் போது நானும் எனது நண்பர் விஜயகுமாரும் மாயனூர் ஆற்றுக்குச் செல்வோம்.மாயனூரில் ஆற்றில் மீன் பிடித்து, வலைக்குள்ளே போட்டு தண்ணீரில் முக்கி வைத்திருப்பார்கள். இருநூறு ரூபாய் கொண்டு செல்வோம். மூன்று கிலோ மீன் வாங்கி அங்கேயே சுத்தம் செய்து, ஆற்று நீரில் அலசும் போது, மனைவிக்கு போன் போட்டு விடுவேன்.

வீட்டிற்கு கொண்டு வந்து காரம், புளி சேர்த்து குழம்பும், வறுவலையும் ஒரு மணி நேரத்திற்குள் தயார் செய்து விடுவார் மனைவி. விஜயகுமார் முள் எல்லாம் எடுக்காமல் அப்படியே சாப்பிடுவார். படுரசனையான ஆள். ஆனால் எனக்கு கவுச்சி வாடையே பிடிக்காது. மீன் குழம்பில் கவுச்சி வாடை அடித்தால் அது நல்ல குழம்பாக இருக்காது. இப்பதிவு எழுதும் போது மேற்கண்ட சம்பவம் நினைவுக்கு வந்து விட்டது. அதெல்லாம் ஒரு காலத்தில் நடந்தவை. இப்போது என் உணவுகளோ முற்றிலும் மாறிவிட்டது.

அதிக காரம், புளி இவற்றால் தான் மூல வியாதி வரலாம். முற்றிலுமாய் இவற்றை தவிர்க்க முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாய் தவிர்த்து விடுங்கள். அதுமட்டுமின்றி மலச்சிக்கல் வந்தால் மூலம் நிச்சயம். உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், ஓட்டுனர்கள், அதிக எடை உள்ளவர்களுக்கு இந்த மூலம் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.

மலச்சிக்கல் வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்பு மூன்று துண்டுகள் பப்பாளி சேர்த்து வாருங்கள். காலையில் மலம் எளிதாய் போகும். பப்பாளி ஆரம்பத்தில் சூட்டினைக் கிளப்பும். பப்பாளி சாப்பிடாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் உடலைப் பப்பாளியை ஏற்றுக்கொள்ளும்படி பக்குவப்படுத்த வேண்டும்.வாரம் ஒரு முறை கோவைக்காய் சமையல் செய்து சாப்பிட்டு வாருங்கள். தினம் தோறும் கொஞ்சமேனும் உடற்பயிற்சி செய்யுங்கள். கீரை, காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மட்டன், சிக்கன் போன்றவை வேண்டவே மாதமொருமுறையோ அல்லது ஆறு மாதத்திற்கொரு தடவையோ எடுத்துக் கொள்ளுங்கள்.

விரைவில் வாழை இலையில் சாப்பாடு பரிமாறுவதைப் பற்றிய பதிவொன்றினை எழுதவிருக்கிறேன்.


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.