இன்று என் நண்பருக்கு திருமண நாள். இருவரும் நீண்ட காலம், ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ எல்லாம் வல்ல தேவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
எனக்குத் திருமணம் முடிந்து பத்தொன்பது ஆண்டுகள் முடிந்து இருபதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். அன்புச் சிறை. வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் சொல்லும் திருமணம். ஏன் வாழ்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்? என்பதற்கான காரணம் திருமணம்.
பொழுது புலர்ந்த காலையில் காற்றாடியின் வேகத்தில் முகத்தில் அலையென பரவிக் கிடக்கும் கூந்தலிடையே அவள் ஆனந்தமாக தூங்குவதைப் பார்ப்பதும், அருகில் வாயில் எச்சில் ஒழுக நிம்மதியுடன் தாமரை இதழ்கள் சூரியனுக்காக மூடிக் காத்திருப்பது போல இமை மூடி தூங்கும் அற்புதங்களின் உறக்கத்தைப் பார்ப்பதை விடவும் ஆனந்தம் வேறு உண்டா இவ்வுலகில்?
நானும் வாழ்கிறேன் என்பவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. வாழ்ந்து பாருங்க நண்பர்களே.. வாழ்க்கையின் சந்தோசம் எதுவென தெரியும். அவர்களைப் பார்த்து விட்டு, சும்மா வீட்டில் இருக்க முடியுமா?
ஓடிக் கொண்டிருப்போம். ஓடி ஓடிக் களைத்துப் போகும் போதெல்லாம் நமக்காக காத்திருக்கும் மனைவியின் முகத்தையும், பிள்ளைகளின் முகங்களையும் நினைவில் கொண்டு வாருங்கள். களைப்பு போன இடம் தெரியாது. எவன் எதைச் செய்தால் தான் என்ன? இன்னும் வேகம் வேகம் என ஓடி ஓடிக் கொண்டிருக்கிறோம் அல்லவா?
திருமணம் என்பது பிணைப்பு. மனைவியிடமோ கணவனிடமோ குறைகள் இருக்கலாம். விட்டுக் கொடுப்பதைப் போல இன்பம் இந்த உலகில் ஏதும் உண்டா? உடலின் அழகை வயது ஏற ஏற அதனிடம் விட்டுக் கொடுக்கிறோமே ஏதாவது கோபம் வருகிறதா?
முலைக் காம்பை இரத்தம் வர கடித்து பால் அருந்து குழந்தையிடம் கோபித்துக் கொள்கிறாளா தாய்?
யோனி கிழிய, உடம்பை அதிர வைக்கும் வலியுடன் குழந்தையைப் பெற்று எடுக்கின்றாளே அவள் தன் வலியை தன் குழந்தைக்காக விட்டுக் கொடுக்கின்றாளே அதை விட பெரிதாகவா நாம் விட்டுக்கொடுக்கிறோம்? இல்லையே?
விட்டுக் கொடுத்து விடுங்கள் எல்லாவற்றையும்.
பூமி நமக்கு தன் வளமெல்லாவற்றையும் நமக்காக விட்டுக் கொடுக்கிறது. பூமியிலிருந்து நாம் விதை போல வெளியில் வந்திருக்கிறோம்.
பெற்றது தாயாக இருக்கலாம். ஆனால் நம் எல்லோருக்குமான உண்மையான தாய் பூமி.
அது கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
காற்று, நீர், இடம், உணவு என்று எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நாமும் பெற்றுக் கொண்டே இருக்கிறோம். நம்மை எல்லாம் வாழ வைத்து மகிழ்வுடன் பூமி பூத்துக் குலுங்கிக் கொண்டே இருக்கிறதை பார்க்கிறோம் அல்லவா?
அதைப் போலே எல்லாவற்றையும் கொடுத்து விடுவோமே. விட்டுக் கொடுத்து விடுவோமே? அதனால் நாம் என்ன இழக்கப் போகிறோம்? இழப்பது கொஞ்சமே ஆனால் பெறுவது பேரானந்தம்.
ஆகவே அன்பு நண்பர்களே...!
விட்டுக் கொடுத்து விடுங்கள். பெறப்போவது அதிகமோ அதிகம்.
திருமணத்தை சொர்க்கமாக்குவதும், நரகமாக்குவதும் நம் கையிலே.
இன்றைக்கு திருமண நாள் காணும் அன்பு நண்பர்களுக்கும், தோழிகளுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.
நிற்க...!
கரூரில் இருக்கும் போது ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நானொருவரைப் பார்க்கச் செல்வதுண்டு.
காவிரிக் கரையோரம் நிம்மதியாக உட்கார்ந்து நூற்றாண்டு காலமாய் தவம் இருக்கும் அவரைப் பார்க்காமல் என் ஞாயிறு போகாது.
அழுக்கு உடைகளை எடுத்துக் கொண்டு, காவிரித்தாய் செல்லும் ஆற்றங்கரையில் அமர்ந்து அழுக்கை நீக்கி, சூரிய ஒளியில் காயப்போட்டு விடுவேன். பிறகு ஆனந்தமாய் காவிரி அன்னையின் அருளில் நனைந்து, உடல் குளிரக் குளிர நன்கு குளியல் போடுவேன். ஆற்று மணலை எடுத்து உடலில் தேய்க்கும் போது, எழும் உணர்ச்சிக்கு அளவே இல்லை. ஆனந்தமோ பேரானந்தம்.
துணிகள் காய்ந்தவுடன், பைக்கிள் எடுத்து வைத்து விட்டு, அவரைப் பார்க்கச் செல்வேன்.
அவர் யார்?
தர்க்கத்தில் ஈடுபட்டு வெற்றி மேல் வெற்றி பெற்ற அவரின் குரு, ஊரார் வாயை அடக்குகிறாயே, உன் வாய்? என்று கேட்டதற்காக வாழ் நாள் முழுவதும் பேசாமலே இருந்தவர்.
சதா நேரமும் சிவமென இருந்தவர் அவர். நெரூரில் சமாதியில் இருக்கும் சதாசிவ பிரம்மேந்திரர் அவர்.
காவிரிக் கரையின் ஓரம் பள்ளம் தோண்டித் தரச் சொல்லி, அப்பள்ளத்துக்குள்ளே தன்னை ஐக்கியமாக்கி தவம் செய்தவர். அவர் பாதம் பட்ட மண்ணை எடுத்து உடம்பில் பூசிக் கொள்வதை விடவும், அவர் நடந்து சென்ற கரையினிலே, காவிரித் தாயின் கருணை அன்பினால் வழிந்தோடும் உயிர் நீருக்குள் மூழ்கிக் கிடப்பதை தவிர எனது இந்த ஜென்மத்தின் பேரு வகை எது?
பனிரெண்டு மணி பூஜையின் போது காசி விஸ்வ நாதரைத் தரிசித்து விட்டு, அவரின் ஜீவசமாதியில் அமர்ந்து தியானித்து விட்டு வெளி வருவேன்.
அவர் தான் எனக்கு அவளைக் காட்டினார்.
அவளுக்கு என் உசிரை நேந்து விட்டேன்....!
மிக்க நன்றி வணக்கம்.