அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.
நிலம் தொடர் 71வது கட்டுரை எழுதுகிறேன். இது வரையிலும் எனது பதிவுகளைப் படித்து வரும் பல்வேறு நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கும், தமிழ் பேசத் தெரிந்தவர்களுக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பதிவுகள் ஒவ்வொன்றும் அனுபவங்களின் வாயிலாக எழுதப்படுகிறது.
வாய் மொழியாக கேள்விப்படும் செய்திகளை நான் எழுதுவதில்லை. என்னளவில் எனக்கு அனுபவம் கிடைத்திருக்கும் பட்சத்தில் எழுதுகிறேன். எனது பதிவுகளைப் படிப்பவர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். பொழுது போக்க பல வழிகள் உண்டு. இந்த நிலம் தொடர் பல கருத்துக்களையும், சட்டப்பிரிவுகளையும் நடைமுறையோடு ஒன்றி எழுதப்பட்டு வருகிறது.
தலைப்பு விஷயத்துக்குப் போகும் முன்பு, உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.
பத்திரப்பதிவு முடிந்ததும் பட்டா மாற்றம் நடைபெற அரசு உத்தரவிட்டிருக்கிறது அல்லவா? அதைப் பற்றிய ஒரு சில விஷயங்களைப் பார்ப்போம்.
பதிவு அலுவலகம் என்பது என்னைப் பொறுத்தவரை லீகல் ஒப்பீனியன் பார்க்கும் அலுவலகம் இல்லை. ஒரு சப் ரிஜிஸ்டரர் தவறுதலான ஆவணங்களைச் சரிபார்க்காமல், இன்ன பிற விஷயங்களுக்காக ஒரு சொத்தினை இன்னொருவருக்குப் பதிவு செய்து கொடுக்கலாம். அவ்வாறு செய்யப்படும் பத்திரப்பதிவுக்கு, பட்டாவும் கிடைத்து விட்டால் அது தொடர்ச்சியாக பல கிரையங்கள் ஆகி விடும். அதையெல்லாம் கண்டுபிடித்து சரி செய்வதற்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரும். சொத்து வாங்கி நிம்மதியாக இருக்கலாம் என்றால் முடியாது.
சொத்து பரிமாற்றம் சரிதானா? துல்லியமானதா? என்று சப் ரிஜிஸ்டரர் எப்படி கண்டுபிடிப்பார் என்பது கேள்விக்குறிய ஒன்று. ஆகவே சொத்துப் பதிவு செய்யப்பட்ட பிறகு, பட்டா மாற்றம் ரெவின்யூ டிபார்ட்மெண்ட் மூலம் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு மாறுதல் செய்தல் ஒன்றே சரியான வழி. அதற்கு ஆன்லைன் மூலமாகவே அரசு வி.ஏ.ஓ மற்றும் ஆர்.இ - தாசில்தாருக்கு அனுமதி வழங்கி, வசதிகள் செய்து தரலாம்.
ரெவின்யூ அதிகாரிகளின் அட்ராசிட்டி, அலைச்சல் போக்கு மக்களுக்கு பதிவு அலுவலகத்திலேயே பட்டா மாற்றம் ஆகி விட்டால் போதும் என்ற மன நிலைக்கு வந்து விட்டதன் காரணமாக, எதிர்காலத்தில் விளையக்கூடிய பெரும் பிரச்சினைகளை அறிய மறுக்கின்றனர்.
ஆகவே அரசு பத்திரப்பதிவு அலுவலகம் மூலமாக பட்டா மாறுதல் செய்வதை மறுபரிசீலனை செய்தலும், பட்டா மாற்றத்தை பதிவு முடிந்த ஒரு மாதத்திற்குள் ரெவின்யூ டிபார்மெண்ட் மூலமாகவே ஆன்லைன் வழியாக செய்வதற்கும் வழி வகைகளை ஆராய வேண்டும்.
அடுத்து பத்திரம் எழுத வக்கீல்கள் அல்லது பத்திர எழுத்தர் தேவையா என்பது பற்றி பார்க்கலாம்.
26.08.2020ம் தேதியன்று தினமலரில் ஒரு செய்தி வெளி வந்திருந்தது. கீழே இருக்கும் பெட்டிச் செய்தியை முழுமையாகப் படித்து விடவும்.
பதிவு பெற்ற ஆவண எழுத்தர்களும், அரசால் பரிந்துரைக்கப்பட்ட வக்கீல்கள் மட்டுமே பத்திரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பது போல மேற்கண்ட செய்தியில் சொல்லி இருக்கின்றார்கள். இது முற்றிலும் தவறானது.
இந்தியப் பதிவுச் சட்டத்தில் சொத்து வாங்குபவரோ அல்லது சொத்து விற்பவரோ தானாகவே அதாவது தானே பத்திரம் எழுதி, கையொப்பம் இட்டு, சாட்சிகளுடன் பத்திரப் பதிவு செய்யலாம் என இருக்கிறது.
அடியேன் பல பத்திரங்களைச் சொத்து வாங்குபவர் பெயரில் எழுதி பதிவு செய்து கொடுத்திருக்கிறேன். வக்கீல்கள், பத்திர எழுத்தர்கள் மட்டுமே ஆவணம் எழுதி பதிவு செய்தல் என்பது தேவையில்லை. அவர்களின் கையொப்பமும் தேவையில்லை.
பத்திரம் எழுதுவதற்கு கொஞ்சம் பத்திர எழுதும் திறன் தேவை. வக்கீல்களும், பதிவு எழுத்தர்களும் தேவையே இல்லை.
ஆன்லைனில் பதிவு செய்யும் போது அது பற்றிய கொஞ்சம் அனுபவம் தேவை. அவ்வளவுதான்.
துல்லியமான லீகல் ஒப்பீனியன் பார்க்க வேண்டும். பிறகு மாடல் டிராஃப்ட் தயார் செய்து ஆன்லைனில் பதிவு செய்து, நேரடியாக சாட்சியுடன் பதிவு அலுவலகம் சென்றால் போதும்.
தற்போது பல பத்திரப்பதிவுகளில் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக், நில பரப்புகளில் தவறுகளும் நடந்து, அதன் தொடர்ச்சியாக பிழை திருத்தல் பத்திரங்களும் செய்யப்படுகிறது.
ஆகவே நமக்குத் தேவையான பத்திரங்களை நாமே தயார் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால் ஒரு சில கம்பெனி வகையறா, பவர் பத்திரங்கள் எழுதும் போது அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையுடன் பதிவு செய்வது அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.