அன்பு நண்பர்களே,
அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பதிவினால் எனக்குச் சட்ட சிக்கல் வருமா என்று தெரியாது. ஆனாலும் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன்.
அறம் கொன்றார்க்கு அறமே கூற்றாகும் என்கிறது மூதுறை. நீதியையும், தர்மத்தையும் கொன்றார்க்கு, அதுவே எமனாக வரும் என்பது அர்த்தம்.
எனக்குத் தெரிந்து ஜெயலலிதாவை விட, சசிகலாவை விட உயர் அதிகாரத்தில் இந்தியாவில் எவரும் இருந்திருக்க முடியாது. ஆனானப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியாரையே தூக்கி ஜெயிலில் போட்டவர்கள்.
அப்பேர்பட்டவர்களுக்கு அறமே கூற்றாக இருந்து தர்மத்தை நிலை நாட்டியது. ஜெ சசி இருவரும் ஜெயிலுக்குப் போவார்கள் என்று எவராது நினைத்திருப்போமா? ஆனால் அறம் அதைச் செய்ய வைத்தது.
இவர்களுக்கு வழங்கிய தண்டனையை ரத்துச் செய்த நீதிபதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரியவில்லை. இச்செயலை எவரும் நியாயப்படுத்த இயலுமா? தர்மத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
அறம் கொன்ற எந்த நீதிபதிக்கும் இதுதான் நடக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. எவரும் தப்ப முடியாது தர்மத்தின் தண்டனையிலிருந்து.
அறம் கொன்ற ஒவ்வொருவரின் வேரும் வேரடி மண்ணும் முற்றிலுமாக துடைக்கப்படும் என்று சாத்திரங்களும், தர்மத்தைப் போதிப்பவர்களும் சொல்கிறார்கள்.
இராமருக்கு கோவில் அறவழியில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இராமன் என்றால் நீதி, அறம் என்று வாழ்ந்தவர் என புராணங்கள் சொல்கின்றன. அவருக்கு இப்படியான ஒரு நிலையில் கட்டப்படும் கோவில் பற்றி எதிர்கால சந்ததியினர் மிச்சம் சொச்சம் இல்லாமல் விமர்சிப்பார்கள்.
குறைந்த பட்சம் 30 வருட அனுபோக பாத்தியதை அல்லது கோவில் இருந்ததிற்கான சிறு சாட்சிகளையாவது நீதிமன்றம் கவனத்தில் கொண்டு, தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டுமென்று பலரும் கருத்துக்களைத் தெரிவித்து இருக்கின்றார்கள்.
நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்கு சட்டம் வளையுமானால் அது வளைந்து போன சட்டம் தான். வளைந்த சட்டத்தை ஸ்ரீராமரின் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருக்கும் இராம பாணங்கள் சரி செய்யும் என அறத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் நம்புகின்றார்கள்.
நீதிமன்றத் தீர்ப்பினை மதிக்காத எத்தனையோ சம்பவங்கள் இந்தியாவில் நடந்திருக்கின்றன. அதையெல்லாம் கவனத்தில் கொண்டு, தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்திருக்கலாம்.
காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை கர்நாடகா அப்பட்டமாக மீறியது. ஆனால் அப்போதெல்லாம் உச்ச நீதிமன்றம் அவமதிப்பாக கருதவில்லை. ஏனென்று தெரியவில்லை. தனி மனிதனுக்கும் அரசுக்கு வெவ்வேறு சட்டங்கள் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை.
ஒரு சிலசூழலில் அறச் சீற்றம் எழுவதும், அதன் தொடர்ச்சியாக கோபத்தில் வார்த்தைகள் வருவதும் இயல்பு. இது ஒவ்வொருவருக்கும் வரும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேட்டியே கொடுத்த முதல் இந்திய வரலாறும் உண்டு.
இந்திய அரசு - நீதிபதிபதிகள், தீர்ப்புகள் விஷயத்தில் சட்டத்திற்கு புறம்பான வகையில் தீர்ப்புக் கொடுக்கும் நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்படிக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் கீழ் நீதிமன்ற தீர்ப்புகள் தள்ளுபடி செய்யும் போது, அவ்வகையான தீர்ப்புகள் மீது விசாரனைகள் வேண்டும் என சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட எவரும் விரும்புவார்கள். ஒவ்வொரு கோர்ட்டுக்கும் ஒவ்வொரு சட்டம் இருக்க முடியாது அல்லவா?
எதேச்சதிகாரம் நீதிமன்ற விஷயத்தில் எடுபடக்கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு ஏழை இந்தியன் அரசுக்குச் செலுத்தும் வரியில் நீதிபதிகள் சம்பளம் பெறுகிறார்கள். அவர்களும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை ஏழை இந்தியன் அறிய விரும்புகிறான்.
இதோ கீழே ஒரு சில நீதிபதிகளின் வாழ்க்கை இருக்கிறது.
பிரஷாந்த் பூசன் மன்னிப்பு கேட்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை நண்பர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
நன்றி : மெயில் டுடே பத்திரிக்கை. செப்டம்பர் 23, 2009ம் தேதியில் இப்பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.