குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, October 14, 2019

நிலம் (58) - மாற்றப்பட்ட அப்ரூவ்ட் பிளான் ஏமாற்றப்பட்ட உரிமையாளர்கள்

ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்புவது, துரோகம் என்று அலறுவது எல்லாம் மனிதனின் இயல்பு. ஏமாற்றவே புறப்பட்டவர்களிடம் ஏமாறுவது ஒன்றும் தவறு அல்ல. அது அவர்களின் டிசைன். இப்படித்தான் ஒருவன் என் உழைப்பை இரண்டு வருடம் உறிஞ்சினான். பின்னர் வசதியாக மாறிக் கொண்டான். அவனை இந்த உலகம் ஆஹா...! ஓஹோ... ! என்று பாராட்டுகிறது. இங்கு நியாயமும், தர்மமும் பேச்சிலும், புத்தகங்களிலும், வேதங்களிலும் மட்டும் தான் இருக்கின்றன. இன்னொருவனை ஏமாற்றுவது அல்லது அவனறியாமல் அவனிடமிருந்துது பிடுங்கிக் கொள்வது புத்திசாலித்தனமாக பார்க்கப்படுகிறது.

பல்வேறு துறைகளால் ஒருங்கிணைக்கப்பட்ட மாபெரும் சிக்கல்கள் நிறைந்த ரெவின்யூ துறை. சாலைத்துறையில் ஆரம்பித்து பல துறைகள் நிலத்திற்கான ஆவணங்களைப் பராமரித்து வருகின்றன. அவைகளை ஒருங்கிணைப்பது மிகவும் சவால் நிறைந்த பணியாகும். எனக்குத் தெரிந்து அது அவ்வளவு எளிதானது அல்ல. தியாகமும், அர்ப்பணிப்பும், நிலத்தின் அத்தனை சிண்டு சிடுக்களைத்  தெரிந்த  ஒருவரால் தான் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அல்காரிதமை உருவாக்க முடியும். ஆமை போல நகரும் அரசின் ரெவின்யூ பிரிவில் அதெல்லாம் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள்.

இப்படியெல்லாம் செய்ய முடியுமா? ஒரு மனிதன் இப்படி காசுக்காக செய்யத் துணிவாரா? என்று இப்பதிவைப் படிக்கும் போது உங்களுக்கு கேட்க தோன்றும். அந்தளவுக்கு கொடு மதியாளர்கள் சூழ் உலகு இது.

சமீபத்தில் வெளிநாடு வாழ் நண்பர் ஒருவரின் வாழ் நாள் உழைப்பை  போட்டு வாங்கிய சொத்தின் ஆக்கிரமிப்பு கண்டு கொதித்த எனக்கு கிடைத்தது நல்ல வசவு. கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டிய கட்டம். நண்பரின் நலம் மட்டுமே முக்கியமாக தெரிந்தது. வாளா இருக்க வேண்டிய சூழல். நண்பரோ  அமைதி விரும்பி.  அவர் சரி எனச் சொல்லி இருந்தால் ஆக்கிரமிப்பாளனின் மூளையைச் சூடாக்கி வெளியில் கசிய வைத்திருப்பேன். அந்த அயோக்கியன் பெற்ற இரு புதல்வர்கள், என்ன ஒரு வினோதம் தெரியுமா? அவர்களும் அப்படியே....! இவர்களை நம்பி இரு பெண்கள். அவர்களுக்கு இனி வாரிசுகள்  வரும்... ! கருவில் அழிக்க வேண்டிய அற்பர்கள் பூமியில் மனிதர்களாய் நடமாடுகிறார்கள். இன்னொருவனின் சொத்தினை ஆக்கிரமிப்பு செய்கிறோம் என்பது  அவர்களுக்கு சரியானது. அது அவர்களின் தர்மம். அது அவர்களுக்கு நியாயம். 

இதோ இன்னும் ஒரு சம்பவம் உங்களுக்காக....!

கோவை, வேடப்பட்டியில் 1987ல் ஒரு வீட்டு மனை அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அனுமதி பெற்றவர் சுமார் 19 வீட்டு மனைகளை பணம் வாங்கிக் கொண்டு ஒருவருக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்திருக்கிறார். அட்டர்னி வாங்கியவர் அரசு அனுமதி கொடுத்த மனைப்பிரிவை தனது வசதிக்காக மாற்றி புது பிளானை உருவாக்கி, பழைய அனுமதி எண்ணை வரைபடத்தில் போட்டு, ஊராட்சி மன்ற தீர்மானத்தின் படி விற்கிறேன் எனச் சொல்லி விற்று விட்டார்.

இரண்டு மூன்று கிரையங்கள் ஆகி விட்டன. கிரையம் வாங்கியவர்களில் பலர் மீண்டும் தற்போதைய மனை வரன்முறைப்படி பணம் கட்டி வரன்முறை பெற்றிருக்கின்றார்கள். யாரோ ஒருவர் இது பற்றி வழக்குப் போட பத்திரப்பதிவாளர் அந்த கிராமத்தின், அந்தக் குறிப்பிட்ட சர்வே நம்பர் நிலங்களின் கிரையங்களை நிறுத்தி விட்டார்.

பவர் எழுதிக் கொடுத்த உரிமையாளர், பவர் எழுதி வாங்கியவர் பணம் தரவில்லை, ஆகவே எல்லா பத்திரங்களையும் ரத்துச் செய்கிறேன் என்று சொல்லி கிளம்பி இருக்கிறார். அதுமட்டுமின்றி செண்டுக்கு ஒரு லட்சம் தாருங்கள் என்று தற்போதைய மனையை தன் பெயரில் வைத்திருப்பவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அவராலும் எழுதிக் கொடுக்க முடியாது. இடியாப்பச் சிக்கலில் இருக்கிறது பிரச்சினை. இதை எப்படி தீர்ப்பது? தீர்வு இருக்கிறதா? 

இல்லாமல் இருக்குமா? காலமும், பொருளும் செலவாகும். மன அமைதி போகும். உளைச்சல் அதிகமாகும். உழைத்த காசை இப்படித் திருடுகின்றார்களே என ஆற்றாமை உண்டாகும். ஆனால் சரி செய்யலாம். சரி செய்து ஆக வேண்டும். வேறு வழி????

ஆகவே நண்பர்களே... ! உங்களுக்குச் சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான். கவனமாய் இருங்கள். 

வெளி நாடுகளில் வசித்துக் கொண்டிருப்போர் கோவையில் சொத்துக்கள் வைத்திருந்தால், சொத்தினை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், வரி வகையாறாக்கள், வாடகை வசூல் செய்ய அணுகலாம். கலிகாலம் இது. ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது.

வாழ்க வளமுடன்....!

Tuesday, September 24, 2019

நிலம் (57) - லீகல் ஒப்பீனியன் எப்படி பார்க்கணும்

என்னிடம் ஒருவர் ஒரு சிறிய சைட் ஒன்றிற்காக லீகல் ஒப்பீனியன் கேட்டிருந்தார். தேவைப்படும் ஆவணங்களை குறிப்பிட்டு, அவரிடம் இந்த ஆவணங்களைத் தருமாறு கேட்டேன்.

“சார், இதெல்லாம் எதுக்கு சார்? நீங்கள் இதை மட்டும் பார்த்துச் சொல்லுங்கள்” என அவரின் வசதிக்காக என்னை வேலை செய்யச் சொன்னார். அதற்கு அடியேன் சரிப்பட்டு வர மாட்டேன் என்பதால், அவரிடம் ஆவணங்களைத் திருப்பிக் கொடுத்து, “உங்கள் விருப்பப்படி, என்னால் வேலை செய்ய இயலாது,  ஆகவே மன்னித்து விடுங்கள்” என்றேன்.

அவருக்கு பிபி அதாவது பிளட் பிரஷ்ஷர் உச்சத்தில் ஏறி விட்டது.

”அப்படி என்ன நீங்கள் லீகல் ஒப்பீனியன் பார்க்கின்றீர்கள்? வில்லங்கம் போடுவீர்கள், 1900லிருந்து ஆர்.எஸ்.ஆர் எடுத்துப் பார்ப்பீர்கள், ஒவ்வொரு பத்திரமாக டேலி பண்ணுவீர்கள், சரியாக இருந்தால் ஓகேன்னு சொல்வீர்கள், இதைத் தவிர வேறு என்ன புதிதாக லீகல் பார்க்கப் போகின்றீர்கள். என் வக்கீல் நண்பர்கள் இதைத்தான் செய்கின்றார்கள்” என்று கோபத்துடன் பேச ஆரம்பித்தார்.

சரி, இது வேற ஆள், இவருக்குப் புரிகின்ற மாதிரி சொல்லி ஆக வேண்டும் என நினைத்துக் கொண்டு, அவரை உட்காரச் சொன்னேன்.

மெதுவாக ஆரம்பித்தேன்.

”ஏரியல் வியூப்படி அரசு சாலைக்கோ அல்லது பொது இடங்களுக்கோ அல்லது அரசின் நிலங்களுக்கோ கையகப்படுத்தும் நிலையில் உள்ள நிலங்களின் அருகில் உங்களது நிலம் வருகிறதா என முதல் லீகல் ஆரம்பிப்பேன்” என்றேன்.

”என்ன? இது என்ன புதுக்கதையாக இருக்கிறது, இதையெல்லாம் ஏன் பார்க்கின்றீர்கள்?” என அடுத்த கேள்வி.

”இந்த நிலத்தை ஏன் வாங்குகின்றீர்கள்? வீடு கட்டணும் அல்லவா? அவ்வாறு வீடு கட்ட வேண்டுமெனில், உமது நிலம் இந்த விதிகளின் படி பாதிக்கப்படாமல் இருந்தால் தான் அனுமதி கிடைக்கும் என அரசு விதி இருக்கிறது” என்றேன்.

சட்டென்று உட்கார்ந்து விட்டார்.

”கோடிக்கணக்கில் முதலீடு செய்கின்றீர்கள். ஒரு நிலம் வாங்குவதற்கு முன்பு ஏன் வாங்குகிறோம், என்ன பயன்பாட்டுக்கு வாங்குகிறோம் என முடிவெடுப்பீர்கள். தமிழக அரசும், மத்திய அரசும் குறிப்பிட்டிருக்கும் பல விதிகளின் படி நிலம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. சொத்தின் உரிமையை மட்டும் சரி பார்த்தல், லீகல் ஒப்பீனியன் ஆகாது. அரசு விதிகளுக்கு உட்படாமல் அதாவது பாதிக்கப்படாமல் அந்த நிலம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதும் எனது வேலை” என்று விவரித்தேன்.

அமைதியானார் அவர்.

இன்னொரு விஷயத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் எனத் தொடர்ந்தேன்.

“நீதிமன்றத்தில் வாதியால் சிவில் வழக்கொன்று தொடுக்கப்படுகிறது. பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கில் ஆஜராக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிடும். பிரதிவாதி என்பவருக்கு இன்னொரு பெயர் எதிரி. பிரதிவாதிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவர் தனக்காக வாதாட வக்கீல் வைக்க வேண்டும். என்ன வழக்கு எனத் தெரிந்து அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்து, தன் பக்கம் என்ன நியாயம் உள்ளது என சட்டத்துக்கு உட்பட்டு வக்கீல் மூலம் வாதாட வேண்டும். ஆவண சாட்சியங்களை அளித்தல் வேண்டும். நீதிபதி வாதி, பிரதிவாதிகளின் வக்கீல்கள் மூலம் பெறப்படும் ஆவணங்கள், சட்ட மேற்கோள்கள், முன் தீர்ப்புகள், வாதி/பிரதிவாதிகளின் வாக்குமூலங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் இவற்றை எல்லாம் ஆராய்ந்து சட்டத்துக்கு உட்பட்டு தீர்ப்பு அளிப்பார். இது நடைமுறை.”

”ஆனால் ஒரு சில அறிவாளி வக்கீல்கள் என்ன செய்வார்கள் என்றால், பிரதிவாதிக்கு அனுப்பி வைக்கப்படும் கடிதத்தை ஆள் செட்டப் செய்து வாங்கிக் கொள்வார்கள்.  பிரதிவாதிக்கு தன் சொத்தின் மீது வழக்கு இருப்பதே தெரியாமல் போய் விடும். கோர்ட் மூலம் அனுப்பப்படும் ஒவ்வொரு கடிதத்தையும் பிரதிவாதிக்கு கிடைக்க விடாமல் செய்வார்கள். இன்னும் ஒரு சிலர் பிரதிவாதியின் முகவரியை தவறாக கொடுத்து விடுவார்கள்.”

”எந்த தபால்காரர் ஒழுங்காக தபாலைக் கொடுக்கிறார் இந்தக் காலத்தில். எனக்கு வர வேண்டிய புத்தகங்களைக் கூட, அவர் வசதிக்குத்தான் கொண்டு வந்து தருகின்றார். அந்த இலட்சணத்தில் தபால் அலுவலகம் இயங்குகிறது.”

”இப்படி பிரதிவாதியால் ஆஜராகாமல் இருக்கும் வழக்குகள் எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு என ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டு விடும். இந்த வகையில் வழங்கப்படும் எக்ஸ் பார்ட்டி தீர்ப்புகளை மீண்டும் அந்த பிரதிவாதி வழக்காக மாற்றலாம். அதற்கு இத்தனை நாட்கள் என கோர்ட் அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்புகளின் படி உரிமை மாற்றம் செய்யப்படும் சொத்துக்களை வாங்கலாமா?” என்று அவரிடம் கேட்டேன்.

அயர்ந்து போய் உட்கார்ந்து விட்டார்.

”இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கின்றீர்கள்” என்று வினவினார்.

”நான் என் தொழிலை நேசிக்கிறேன்”

அவர் ஒன்றும் சொல்லவில்லை, நீங்கள் கேட்ட ஆவணங்களையும், உங்களது கட்டணத்தையும் இரண்டொரு நாளில் கொண்டு வந்து தருகிறேன் என்றுச் சொல்லி விட்டுச் சென்றார்.

அந்த இடத்திற்கான லீகல் பார்த்து, டிராப்ட் எழுதி, கிரையம் செய்து கொடுத்தேன். அதன் பிறகு அவர் ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. உண்மை தெரியாமல் இருப்பதன் விளைவு அவரின் கோபம், அதனால் அவரிடம் தப்பில்லை என்று அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டபோது, அவரின் கோபத்தை நியாயப்படுத்தினேன். கண்கள் கலங்கி விட்டது அவருக்கு. ஆனால் அதுதானே உண்மை?

ஒரு காரியம் செய்யப் போகும் முன்பு அதற்கான திட்டமிடல் அவசியம். ஒவ்வொரு துறைக்கான ஆவணங்கள் அனைத்தும் தேடித் தேடி கண்டுபிடித்து, வாங்கி வைத்திருக்கிறேன். தமிழகத்தில் உள்ள நிலங்களில் 90 சதவீதம் விபரம் என்னிடம் இருக்கிறது. 10 வருட காலமாய் உழைத்ததன் பலன் அது. லீகல் பார்க்க என்னெவெல்லாம் தேவை என்பதையும், சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்குகளின் தீர்ப்புகளையும், தமிழக அரசு, இந்திய அரசுகள் வழங்கும் குறிப்பாணைகள், கெஜட்டுகள் எல்லாவற்றையும் படிக்கிறேன், குறிப்புகள் எடுக்கிறேன், தேவையானவற்றை சேமித்து வைத்துக் கொள்கிறேன். அதன் மூலம் ஒவ்வொரு நிலத்தின் தன்மை, அனுமதிக்கான விதிகளுக்கு உட்பட்டிருக்கின்றனவா என்றெல்லாம் ஆராய முடிகிறது. ஆனாலும் எனக்கே அவ்வப்போது அல்வா கொடுக்கும் ஒரு சில நிலங்கள் இருக்கத்தான் செய்கின்றது.

ஒரு தனி மனிதனுக்கு இதெல்லாம் சாத்தியமே இல்லை. ஆனால் அதை என்னளவில் சாத்தியப்படுத்தினேன். ஒரே ஒரு நிலமோ வீடோ வாங்குபவர்களுக்கு இதெல்லாம் தேவை இல்லை எனலாம். இது கலிகாலம் அல்லவா? யார் என்ன செய்து வைத்திருக்கின்றார்கள் என்று யாருக்குத் தெரியும்? எல்லாம் சரியாக இருக்கிறதா எனக் கண்டுபிடிப்பதே பெரிய வேலை.

உங்களிடம் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். தமிழக அரசு அனுமதி பெறாத மனை இடங்களை அனுமதி பெற வரையறைகளை செய்து பணம் கட்டச் சொல்கிறது அல்லவா? இதே போல கோவையில் ஒரு வரையறை நடந்து, சுப்ரீம் கோர்ட்டில் அந்த வரையறைச் செல்லாது என தீர்ப்பு பெறப்பட்டது. அப்படி வசூலிக்கப்பட்ட சுமார் 400 கோடி ரூபாய் சும்மா கிடக்கிறது. பணம் கட்டியவர்களுக்கு அந்தப் பணம் இதுவரை திரும்பக் கொடுக்கப்படவில்லை. ஆனாலும் வீடுகள், இடங்கள் கிரையங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒருவரின் தேவை அல்லது ஆசைதான் எல்லாவற்றுக்கும் காரணம்.

ஒரு விதியை மீற ஒரு வரையறை என்பதெல்லாம் சட்ட விரோதமானது. அரசு இந்த விஷயத்தில் கொள்கை முடிவெல்லாம் எடுக்க முடியாது. சட்ட விதிகளை மேம்படுத்தலாம், கொஞ்சம் எளிதாக்கலாம். ஆனால் அதை நீக்க முடியாது.

காஷ்மீர் 370 அப்படியே. சரியான வக்கீலிடம் இந்த வழக்குச் சென்றால், பிஜேபி அரசின் மூக்கு உடைக்கப்படும். ஏனென்றால் இந்தியாவின் கட்டமைப்பு அப்படி. பெரும்பான்மை பெற்றிருப்பதால் ஒரு காரியத்தைச் செய்து விடலாம் என நினைப்பது என்னைப் பொறுத்தவரை அடிமுட்டாள்தனம். வாழ்நாள் வரையிலும் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருக்க முடியாது. வரும் காலத்தில் வரக்கூடியவர் வெச்சு செய்வார்கள்.

ராஜீவ் காந்தி காலத்தில் உள்துறை அமைச்சகத்தில் இருந்தவர் நினைத்தே பார்த்திருக்க மாட்டார். அன்றைக்கே ஆரம்பித்தார் அவர் தன் திருவிளையாடல்களை என என்னிடம் ஒரு முக்கியமான நபர் ஒரு சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

விதி ஆட விட்டு, என்றைக்கு முடியாத நிலையில் இருக்கின்றார்களோ, அன்றைக்குப் பார்த்து, கயிற்றை இருக்கி முடிச்சுப் போட்டு விட்டது. இனி விதி போட்ட முடிச்சை தில்லை வாழ் நாயகனால் கூட அவிழ்க்க முடியாது. கொஞ்சமாவது மக்கள் பணத்தை விழுங்குகிறோம் என்ற நினைப்பு இருந்திருக்க வேண்டும். எவருக்கு இருக்கிறது இங்கே?

நாம் அனைவரும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு ஆளைச் சந்தித்திருப்போம். அவர் பெயர் பொதுவாக துரோகி என அழைக்கப்படும். அவரை நம் வாழ் நாள் வரையிலும் மறக்க முடியுமா? நெஞ்சில் குத்தாமல், முதுகில் குத்தியிருப்பார் அந்த துரோகி. அப்படியானவர்களை நாம் முதலில் மன்னிப்போமா? ஆனால் இப்போது என்ன செய்கிறோம்? என்ன செய்ய முடியும்?

ஒழுங்கீனம் இப்போது ஒரு தகுதியாக மாறிப் போனது. எல்லாம் மனித வாழ்க்கையில் சாத்தியம் தான். ஆனால் எது ஒன்று காலை, மாலை, பிறப்பு, இறப்பு என மனிதனையும், அவன் சூழலையும் இயக்குகிறதோ அதன் வாசலில் நிற்கும் போது ஒவ்வொருவரின் கணக்கும் சரி செய்யப்படுகிறது என்பது நிதர்சனம்.

ஆடும் வரை ஆடி விடுவோம், பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது அறிவிலித்தனம். எதுவும் முடியாமல் ஓய்வாக இருக்கும் போது, கண் முன்னால் ஒவ்வொன்றும் அழிக்கப்படும் அவலத்தைக் கண்டு துடித்து துடித்துச் செத்துப் போக விரும்புவர்கள் ஆடுவார்கள். அது அவரவர் வசதிக்கு உட்பட்டது.

வாழ்க வளமுடன்...!



அடியேன் செய்யும் வேலைகளில் ஒரு சில உங்களுக்காக. தேவைப்படுபவர்கள் அணுகலாம். 

Tuesday, September 10, 2019

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா?

இந்த மாத பிசினஸ் டுடேயை வாசித்த போது, நம் பாரதத்தின் மொத்தக் கடன் தொகை (மாநிலத்தையும் சேர்த்து) ஒரு லட்சத்து முப்பத்து ஓராயிரம் லட்சம் கோடி கடன் என்ற செய்தியைப் படித்தேன். 130 கோடி மக்கள் தொகை கொண்ட பாரதத்தின் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் கோடி கடன் இருக்கிறது. இத்தனைக் கடனும் ஏன் உண்டானது என்று பார்த்தால் தெளிவற்ற நிர்வாகமும், ஆட்சி முறையும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. 




என்ன நடந்தது? ஏன் இத்தனை கடன் என்பதற்கு ஒரே பதில் ஊழல். ஆம், இத்தனை தொகையும் ஊழலால் இந்தியாவிற்கு ஏற்பட்ட கடன். மக்களுக்கு இந்த சித்து விளையாட்டு புரிவதில்லை. புரியும் அளவிற்கு மீடியாக்கள் விடுவதில்லை. எவன் ஒருவன் டிவியும், செய்தி தாளும் படித்து, அதன் உண்மை என்னவென்று ஆராய்கிறானோ அவன் தான் புத்திசாலி. மீடியாக்களில் வரும் செய்திகள் உண்மையென நம்பினவன் முட்டாள். அந்தக் காலத்தில் இருந்து இதுதான் நடந்து வருகிறது. அவ்வப்போது அய்யோ குய்யோ என ஜன நாயகத்தின் குரல்வளை நசுக்கப்படுகிறது என்று கூக்குரலிடுவார்கள் பத்திரிக்கையாளர்கள். அதெல்லாம் சும்மா....!

நீதியின் பெயரால் உயர் மட்ட அளவில் நடக்கும் அக்கிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. நீதிபதிபதிகளை விமர்சிக்க கூடாது என்றும், அது தேச துரோகம் என்றும், அவமதிப்பு வழக்கு என்றும் மக்களைப் பயமுறுத்துவார்கள். பேட்டி கொடுத்த நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மீது எந்தச் சட்டத்தில் இந்த நீதித்துறை நடவடிக்கை எடுத்தது என்று எவராவது யோசித்திருக்கின்றீர்களா? யோசித்திருக்கமாட்டீர்கள். ஏனென்றால் உங்களின் சிந்தனையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்ற பயம் திணிக்கப்பட்டிருக்கிறது.

சரி விடுங்கள் எரிச்சல் தான் மேலோங்கும். இங்கு எவனும் நல்லவனில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனது பிளாக்கைப் படிப்பவர்கள் தெளிவு பெற வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவின் தன்னாட்சி பெற்ற உயர் நிர்வாகத்துறையின், உயர் அதிகாரி ஒருவரால் பாராட்டப்பட்டேன். அவர் எனது பிளாக்கைப் படிக்கிறார் என்கிற சிறு நேரத்து மகிழ்ச்சி உண்டானது.

“அய்யா, உங்களுக்கு எனது அனேக நன்றிகள்”

ஏதோ ஒரு வகையில் சிறு உதவியைச் செய்கிறேன் இந்த உலகிற்கு என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மூடுமந்திரம் போடப்பட்டிருக்கும் நம்மைச் சுற்றிய மாயையை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி விட முயல்கிறேன். பட்டவர்த்தமாக எழுதினால் பலரின் மனசாட்சி விழித்துக் கொள்ளும். ஆகையால் புரிந்தும் புரியாதவாறு எழுதுகிறேன். புரிந்தவர்கள் தெளிவாகுங்கள். புரியாதவர்கள் இன்னும் ஆழப் படியுங்கள்.

சரி, ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கும் ஒரு லட்சம் கோடி கடனை கட்ட வழி இருக்கிறதா என்று அறிந்து கொள்ள இங்கு தொடர்கின்றீர்கள். தொடருங்கள்.

எனது மனையிவியின் தூரத்து உறவினர் ஒருவர், தமிழகத்தின் பிரபலமான கட்சியில் பதவி வகித்தவரும், எம்.பியும் ஆன ஒருவருக்கு கடன் அதுவும் பெரிய அளவில் கடன் கொடுத்தார். உறவினர் தனது அக்கம் பக்கம், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து வட்டிக்கு வாங்கி, கொஞ்சமே கொஞ்சம் வட்டி உயர்த்தி அந்த அரசியல்வாதிக்கு கொடுத்தார். கொஞ்ச நாட்களில் அந்த அரசியல்வாதியால் கடனையும், வட்டியையும் கொடுக்க முடியவில்லை. உறவினர் தற்கொலை செய்து கொண்டார். வட்டிக்குப் பணம் கொடுத்தவர்களின் கதி?

வங்கியும் இதே போலத்தான். வட்டிக்கு வாங்கியவர்கள் ஒழுங்காக கடனைக் கட்டவில்லை என்றால் என்ன ஆகும்? டெபாசிட் போட்டிருப்பவர்களுக்கு எங்கிருந்து வட்டியைக் கொடுக்கும்? திவால் அல்ல வங்கியும் தற்கொலை செய்து கொள்ளும். அப்படித்தான் எனது பிரியமான விஜயா வங்கியும் தற்கொலை செய்து கொண்டது.

கலைஞர், ஒவ்வொரு வீட்டிற்கும் டிவி கொடுத்தார். அந்த டிவியால் சன் டிவி பயன் அடைந்தது. டிவியை டெண்டர் விட்டு வாங்கினார் அல்லவா? அந்த டிவியால் பொருளாதாரம் உயர்ந்ததா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மக்களின் பொருள் இன்னொருவரின் பாக்கெட்டில் சென்று சேர்ந்தது. டிவி வாங்கிய வகையில் பர்செண்டேஜ், சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கும். இதனால் சமூகத்திற்கு என்ன பயன்? ஒரு எழவும் இல்லை. மிக்சி, கிரைண்டரின் கதையும் இதேதான். இலவச பைக்கிற்கும் இதே கதைதான்.

எனது இனிய நண்பர்களே, கடனைக் கட்ட வழி என்னவென்று உங்களுக்கு தெளிவாகி விட்டதா? தெளிவாகவில்லை எனில் நானொன்றும் செய்ய முடியாது.

இதுவரை பிஜேபி அரசு பொருளாதாரத்தின் ஆணி வேர் எதுவென்று கண்டுபிடிக்கவில்லை. அது முதலில் உயர் ஜாதிய சிந்தனையிலிருந்தும், மதக் கோட்பாடுகளிலிருந்தும் வெளி வர வேண்டும். தற்போதையைப் பொருளாதாரம், தத்துவங்கள் எதுவும் நாட்டின் வளர்ச்சிக்கானதல்ல என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகின்றதோ தெரியவில்லை. ஒரு சாதாரண விவசாயிக்குத் தெரிந்த பொருளாதாரக் கோட்பாடு, பொருளாதார மேதைகளுக்குத் தெரியவில்லை என்கிற விடயம், நாட்டை வழி நடத்துபவர்களின் அறிவின் மீது சந்தேகத்தினை உண்டாக்குகிறது.

கிராமப்புறங்களில் ஒருவன் கடனாளியாகி விட்டால், அப்பன் சொத்து, தாத்தா சொத்து எங்கிருக்கிறது என்று தேடித் திரிந்து கண்டுபிடிப்பான். அதனால் கடன் தீருமா என்றால் தீராது. அதைப் போலத்தான் ஊழலைக் கண்டுபிடிக்கிறேன், பதுக்கிய பணத்தைக் கொண்டு வருகிறேன் என அமலாக்கத்துறையினரையும், சிபிஐயும் வைத்து பழம் சொத்தினைத் தேடித் திரிகிறது பிஜேபி அரசு. செமக் காமடி.

பொருளாதார மேதைகளே, 131 லட்சம் கோடியையும் வரக்கூடிய பத்தாண்டுகளில் கட்டி விடலாம். நிச்சயம் முடியும். கடனற்ற பாரதத்தினைக் கட்டமைத்து, மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கலாம். கொஞ்சம் உங்களின் பொருளாதார தத்துவங்களை ஆராயுங்கள். எங்கே நீங்கள் கோட்டை விட்டீர்கள் என்று.


Saturday, August 24, 2019

நிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது

”டாக்குமெண்ட்  தவறு என்றால்  சப் ரெஜிஸ்டர் ஏன் ஆவணங்களைப் பதிவு செய்து கொடுக்கணும், அது தவறில்லையா?” என்று கேட்பார்கள். 

“பதிவாளர் என்பவர் லீகல் பார்ப்பவர் அல்ல, நீங்கள் கொடுக்கும் ஆவணங்களை, பதிவுத்துறை விதிகளின்படி பதிவு செய்து கொடுப்பது மட்டுமே அவரின் வேலை,  வில்லங்கம் பார்ப்பது அவரின் வேலை இல்லை” என்று சொல்வேன். 

”என்ன இருந்தாலும் அரசாங்கத்தின் தவறுதானே, அது?” என்று எதிர்கேள்வி கேட்பார்கள்.

அரசின் ஆணை சட்டத்துக்கு உட்படவில்லை எனில் கோர்ட் அந்த அரசாணையை ரத்து செய்து விடும் செய்திகளை நாம் தினசரிகளில் படித்து இருப்போம்.

கோவையில் அப்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.தண்டபாணி அவர்கள், 18.07.2019ம் தேதியன்று, 34395/2007 அப்பீல் மனு மீது தமிழக அரசு வழங்கிய அரசாணை எண்.(பி) 245/21.06.2005  உத்திரவினை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

வெகு சுவாரசியமான சொத்து வழக்கு இது. கோவை பீளமேட்டில் இயங்கி வரும் பயனியர் மில்ஸ் மற்றும் ராதாகிருஷ்ணன் மில்ஸ் தொழிலாளர்களுக்காக சவுரிபாளையம் கிராமத்தில் க.ச.எண்.275/1,2 மற்றும் 276/3,4 ஆகிய காலைகளில் சுமார் 7.96 ஏக்கர் பூமியை, 1955ம் தேதியன்று சொசைட்டியாக பதிவு பெற்ற Peelamedu Industrial Worker's Co-operative House Construction Society Ltd சொசைட்டியின் பெயரில் கிரையம் பெற்று, மேற்படி நிலத்தினை வீட்டுமனையாகப் பிரிக்க விண்ணப்பம் செய்து, அது 1968ம் ஆண்டு டிடிபி 35.1968ம் நெம்பராக வீட்டுமனைகளாக அனுமதி பெற்றது. அந்த மனைகளில் மேற்கண்ட் மில்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த மனையில் டிடிசிபி அலுவலகத்தால் வழங்கப்பட்ட வீட்டுமனை வரைபடத்தில் வீட்டுமனைகளைத் தவிர சாலைகள், பொது இடங்கள், பூங்காக்கள், மின் கோபுர பாதையை ஒட்டிய இடங்கள் ஆகியவை கோயமுத்தூர்  மாநகராட்சிக்கு பொது இடமாக ஒப்படைக்கப் பட வேண்டும் என்ற உத்திரவும் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த சொசைட்டியினர் பொது உபயோக இடங்களை மனைகளாகப் பிரித்து, அதையும் விற்பனை செய்து விட்டு, தமிழக அரசுக்கு மனுச் செய்து, பொது இடத்தினை மனைகளாக மாற்ற அனுமதி பெற்று விற்பனை செய்திருகின்றார்கள்.  தமிழக அரசும் யோசிக்காமல் அரசாணையை வெளியிட்டுக்கிறது. இந்த அரசாணை 2005ம் ஆண்டு வெளியானது. 

இந்த அரசாணைச் செல்லாது எனவும், அவ்வாறு வீட்டு மனையாக மாற்றம் செய்யப்பட்டு, பதிவு செய்த பத்திரங்கள் எதுவும் செல்லாது எனவும் கோர்ட் உத்தரவு வழங்கி இருக்கிறது. வீட்டு மனை வாங்கியவர்களுக்கு பணத்தினை கொடுக்கும்படி உத்தரவிட்டிக்கிறது. நீதிபதி அவர்கள் ஏன் அரசாணை செல்லாது என்பதற்கு பல்வேறு வழக்குகளை மேற்கோள் காட்டி விளக்கி இருக்கிறார்.

பொது இடத்தில் மனையாக இருந்ததை வீட்டுமனை என அங்கீகரித்த ஒரு வழக்கையும், அதன் தீர்ப்பினை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கோவை, காரமடைப் பகுதியில் அன் அப்ரூவ்ட் சைட்டில் மனை வாங்கிய ஒருவர் என்னிடம், அந்த மனையில் வீடு கட்ட அப்ரூவல் பெற்றுத் தரும்படி வந்தார். எங்கெங்கோ சென்று பார்த்து விட்டு, முடியாத பட்சத்தில் தான் என்னிடம் வருவார்கள். 

வீடு கட்ட -- கவனிக்க -- வீடு கட்ட பஞ்சாயத்து போர்டில் குறிப்பிட்ட சதுரடி அளவுக்கு மட்டும் அனுமதி கொடுக்கலாம். ஆனால் காரமடை பஞ்சாயத்தார் மறுக்க காரணம் என்னவோ என்று ஆராய்ந்தால், அந்த மனையினை விற்றவர் செய்த கில்லாடித்தனம் தெரிய வந்தது. அவர் முதலில் பேஸ்1 என்று மனையினை விற்பனை செய்திருக்கிறார். அந்த பேஸ் 1ல் பார்க் இடம் இதுவென வரைபடத்தில் காட்டப்பட்டிருக்கிறது. அவர் பேஸ் 2ல்,  பேஸ் 1ல் பார்க்குக்கு என விடப்பட்ட இடத்தையும் சேர்த்து மனையாக்கி விற்பனை செய்து விட்டு, வேறு இடத்தில் பார்க்குக்கு என இடம் விட்டிருக்கிறார்.

பேஸ்2ல் வீட்டு மனை, முன்பு பேஸ்1ல் பார்க்காக இருந்தது. இதில் என்ன விசேசம் என்றால், அந்த பார்க் இடம் பஞ்சாயத்து போர்டுக்கு தானம் கொடுக்கவில்லை. ஏனெனில் அந்த வீட்டுமனை அன் அப்ரூவ்ட் மனை. 

சென்னையில் வழக்குப் போட்டு, வீட்டு மனை அனுமதி பெற தீர்ப்புப் பெற்று, அதன்படி வீடு கட்டினார் அவர். எனக்கு அலைச்சலோ அலைச்சல் ஆனது. வக்கீலுக்கு தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொடுத்து, அவருக்கு விஷயத்தை விளங்க வைத்து, வழக்குப் போட்டு தீர்ப்பு பெற இரண்டாண்டுகள் ஆயின. இந்த வழக்கில் ஏன் பார்க்கில் அமைந்த இடத்திற்கு மனை அப்ரூவல் கிடைத்தது எனில், அரசு அனுமதி பெற்றிருந்தால் நிச்சயம் கோர்ட் மனுவை தள்ளுபடி செய்திருக்கும். அரசு அனுமதி பெறாத மனை என்கிறபடியால், மனை புரோமோட்டர் அந்த இடத்தினை அரசுக்கு எழுதிக் கொடுக்காத காரணத்தால், கோர்ட் அவ்வாறு தீர்ப்பு வழங்கியது.

இரண்டும் ஒரே விதமான தீர்ப்புதான். ஆனால் உள்ளே இருக்கும் விஷயம் வேறு என்பது உங்களுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான் இந்த நீண்ட பதிவு.

டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை நம்பி வாங்கலாம் என்ற எண்ணம் இருப்பின் அதை உடனே கலைத்து விடுங்கள். கோவை சரவணம்பட்டியில் இருக்கும் ஒரு பிரபலமான வீட்டு மனை அமைந்துள்ள இடத்தில், மனைகளின் அளவும், மனைகளின் எண்ணும், பொது உபயோகத்தின் இடங்கள் வீட்டு மனைகளாகவும் மாற்றப்பட்டு விற்பனை செய்திருக்கின்றார்கள். கோர்ட்டுக்கு வழக்குச் சென்றால் மனை அனுமதி கோவிந்தா, கோவிந்தா தான். அதாவது ரத்தாகி விடும்.

கோவையில் இன்னொரு மிகப் பிரபலமான இடத்தில் வீட்டுமனை விற்பனை வெகு ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. பெரிய, பெரிய பணக்காரர்கள், கம்பெனி பிராப்பர்ட்டி என ஆளுக்கு நான்கைந்து சைட்டுகளை கிரையம் செய்து வருகிறார்கள். செம காஸ்ட்லி மனைகள் அவைகள். தீர்க்கவே முடியாத பிரச்சினை ஒன்று அந்த இடத்தில் உள்ளது. என்னிடம் அந்த மனைக்காக லீகல் பெற வந்தவரிடம் வேண்டாமென்றுச் சொன்னேன். அவர் விலகி விட்டார். 

கீழே தினமலர் செய்தியும், கோர்ட் தீர்ப்பின் முதல் பக்கத்தையும் இணைத்திருக்கிறேன். 

வாழ்க வளமுடன்....!

நீதிமன்ற தீர்ப்பின் முதல் பக்கம்
தினமலரில் வெளியான செய்தி


Wednesday, August 21, 2019

நிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்

மனிதன் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் காலம் எல்லாம் போயே போய் விட்டது. வார்த்தை சொல்லி விட்டேன் - ஆண்மைத் தனம் இப்போது எங்கும் காணப்படுவதில்லை.

ஆறு மணி நேரம் வரிசையில் நின்று, அத்திவரதரைச் சந்தித்து விட்டு வீடு திரும்பும் முன்பு வீட்டுக்குள் பணம் வந்து விட வேண்டுமென நினைக்கிறார்கள். திருப்பதி கோவிலுக்குள் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஒரு ரூபாய் ஐம்பது காசுக்கு ஆலந்துறைப் பக்கம் பாட்டி ஒருத்தி இட்லி விற்கிறார். கூட்டம் இன்றும் குறையவில்லை. ஒரு பக்கம் இரண்டு இட்லிக்கு 250 ரூபாய் கொடுத்து சாப்பிடும் கூட்டம். பாதி விள்ளலில் எழுந்து நாசூக்காய் கை துடைத்துக் கொள்ளும் அக்கிரமக்காரர்கள் அலட்டலாய் திரிகின்றார்கள்.

இரண்டொரு நாட்களுக்கு முன்பு வயதான ஒருவர் என்னைச் சந்தித்தார். ’எனக்கொரு பிரச்சினை, சரி செய்து தர இயலுமா?’ என்று கேட்டார். 

”பிரச்சினை என்னவென்று சொல்லுங்கள், இயலுமா? எனச் சொல்கிறேன்”

நண்பர்களே, கவனக்குறைவு என்று சொல்ல மாட்டேன். ஏமாற்ற வேண்டும் என நினைத்து விட்டால் எப்படியும் ஏமாற்றி விடலாம் என்றுதான் திட்டமிடுகின்றார்கள். அரசியல்வாதிகளும் சரி, சட்டக்காவலர்களும் சரி எவருக்கும் கொஞ்சம் கூட மனச்சாட்சி என்பதே கிடையாது. எவன் செத்தால் எனக்கென்ன, என் வீட்டு உலை கொதிக்கிறதா? என நினைக்கிறார்கள். அப்படி ஒரு அழிச்சாட்டியத்தைச் செய்திருக்கிறார் அந்த புரமோட்டர் ஒரு சில அயோக்கியர்களுடன் கூட்டு சேர்ந்து. ரத்தம் கொதிக்கிறது நினைத்து நினைத்து.

கோவையில் ஒரு பிரபலமான இடத்தில் டிடிசிபி அப்ரூவ்ட் சைட் விற்பனை ஆனது பல வருடங்களுக்கு முன்பு. பல அரசுத் தொடர்புடையவர்களுக்கு பல கட்ட அனுமதிகள் பெற்று அந்த வீட்டு மனையினை, மாதத்தவணை முறையில் வாங்கி இருக்கின்றார்கள். வீடும் கட்டி விட்டார்கள்.

டிடிசிபி அனுமதியை சென்னையில் பெற்று இருக்கிறார் அந்த புரமோட்டர். அந்த அனுமதியை பஞ்சாயத்தில் அப்ரூவ்ட் பெறும் போது மனை வரைபடத்தை மாற்றி அனுமதி பெற்று, வீட்டு மனைகளின் எண்கள் மாற்றப்பட்டு விற்பனை செய்திருக்கிறார். பொது இடத்திற்கு என ஒதுக்கப்பட்டு, அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இடத்தையும் வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்து விட்டார். எந்தப் பத்திரத்திலும் மனையின் அளவீடுகள் குறிப்பிடவில்லை. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?  இந்த இடத்தில் மனை வாங்கியவர்கள் எல்லாம் சாதாரண ஆட்கள் இல்லை. சட்டம் தெரிந்தவர்கள், பெரிய மனிதர்கள். இனி என்ன, எவராவது கோர்ட்டுக்குச் சென்றால் மனை அனுமதி ரத்தாகிப் போகும். சரி செய்ய அரசாங்கம் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.

இன்னொரு கொடுமை என்னவென்றால், எனக்கு மிகவும் நெருங்கிய குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர்  அந்த இடத்தில் மனை வாங்க இருப்பதாகத் தெரிவித்து, பத்திரத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். 32 வகையான ஆவணங்கள் தேவையென லிஸ்ட் போட்டுக் கொடுத்தேன். ஆள் அவ்வளவுதான். கிரையம் பெற்று விட்டார். அவ்வளவு அவசரம் அவருக்கு. 

ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன். வீடோ அல்லது மனையோ பிடித்து விட்டால், அவர்களே தங்களுக்குள் சமாதானம் செய்து கொள்வார்கள். எல்லோரும் வாங்கி இருக்கின்றார்கள், நாமும் வாங்கி விடலாம் என்று சமாதானமாகி விடுகின்றார்கள். பின்னர் அலையோ அலையென அலைந்து கொண்டிருப்பார்கள்.

இப்போது மனை அப்ரூவல் ரத்தாகுமா? இல்லையா? எனத் தெரியவில்லை. போராடிக் கொண்டிருக்கிறார்கள் வீட்டு மனை வாங்கியவர்களில் சிலர். புரமோட்டர் என்ன ஆனாரோ தெரியவில்லை. 

இரண்டு நாட்களுக்கு முன்புதான் யானை ராஜேந்திரன் அவர்களின் வழக்கின் மீது என்ஃபோர்ஜ்மெண்ட் தீர்ப்பு ஒன்றினை ஹைகோர்ட் வழங்கியது. முறைப்படி அனுமதி பெற்று கட்டப்படாத கட்டிடங்களை எவரின் அனுமதியும் இன்றி இடித்து தள்ளுங்கள் என்கிறது கோர்ட். மனைப்பிரிவும் அப்படி ஆனால் என்ன ஆகும்? 

அந்த புரமோட்டரின் ஆசையால், அக்கிரமத்தால் அந்த வீட்டு மனைகள் போலியாக பிளான் தயாரிக்கப்பட்டு, ஏமாளிகளுக்கு விற்று விட்டார். பாவம் அவர்கள் அலைகின்றார்கள். இன்னும் பட்டா வாங்க முடியவில்லை. மனைப்பிரிவினை ஒழுங்குப்படுத்தி சரி செய்ய வேண்டும். அதற்கான பணிகள் பலப்பல இருக்கின்றன. எப்படிச் செய்ய வேண்டுமெனச் சொல்லி அப்பெரியவரை அனுப்பி வைத்தேன்.

ஆகையால் நண்பர்களே, டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை வாங்கும் போது ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும். என்னைப் போன்ற ஆலோசகர்களிடம் தகுந்த முறையில் ஆவணங்களை சரிபார்த்துக் கிரையம் பெறுங்கள்.

அப்பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, ஒருவர் போனில் அழைத்தார்.

“தம்பி, ஒரு அபார்ட்மெண்ட் கிரையம் செய்ய வேண்டும், என்ன சார்ஜ் செய்கிறீர்கள்” என்றார்.

“முதலில், அபார்ட்மெண்ட் அனுமதி சரியாக இருக்கிறதா என ஆராய்ந்து விட்டுத்தான், பத்திரம் பதிவு செய்வேன், ஆகவே அனைத்து ஆவணங்களையும் கொண்டு வாருங்கள்” என்றேன்.

அவர் டென்சாகி விட்டார். ”பத்திரம் மட்டும் போட்டுத்தாங்க” என்றார்.

“முடியாது” என மறுத்து விட்டேன்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், போனில், ”தம்பி, நீங்க பெரிய ஆளா வருவீங்க, வாழ்த்துகிறேன்” என்றார்.
* * *

Saturday, August 17, 2019

பிரதமர் நரேந்திரமோடியின் நம்பர் ஒன் விசிறி

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு இரவு நேரத்தில் நானும் சுவாமி ஆத்மானந்தாவும் பேசிக் கொண்டிருந்தோம். அவரின் வாழ்வியல் அனுபவங்கள், அவர் படித்த புத்தகங்களில் சிலாகிக்கும் இடங்கள் என என்னிடம் பகிர்ந்து கொள்வார். கூர்மையாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். அவரின் இளமை வாழ்க்கையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, அவரது தாய்மாமா கொடுத்த அப்துற் றஹீம் அவர்கள் எழுதிய ‘எண்ணமே வாழ்வு’ என்ற புத்தகத்தை இரவு முழுவதும் உட்கார்ந்து படித்தாராம். அன்றைக்கு முடிவு செய்தாராம், நானும் விவேகானந்தர் போல சன்னியாசம் ஏற்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என. இப்போது அவர் இரண்டு கல்லூரிகளின் தாளாளர், எண்ணற்ற ஆதரற்றவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 86 வயது இளைஞராக, இன்னும் ஆற்றக்கூடிய பணிகள் இவைகள் என என்னிடம் பட்டியல் இட்டுக் கொண்டிருந்தார் சமீபத்தில் அவரைப் பார்க்கச் சென்ற போது. அவரின் மனவலிமைக்கு ஈடு இணை இல்லை.

வாழ்க்கையானது எல்லோருக்கும் சுகத்தை வழங்குவதில்லை. எப்போதும் மகிழ்ச்சியை மட்டுமே தந்து கொண்டிருப்பதில்லை. அதன் தன்மை பூமியைப் போன்றது. இரவு, பகல் போல இன்பம் துன்பம் கலந்தது. அதைப் புரிந்து கொள்ள இயலாமல் துன்பம் தீர பல்வேறு வழிகளை நாடுவது மனித மனிதத்தின் இயலாமை எனும் மனம்.

பியருடன் நம் பாரதத்தின் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கலந்து கொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ புரோகிராமைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சாதாரண வாழ்க்கைச் சூழல், டீ விற்கும் நிலையில் பிறந்த அவர் ஒரு நாட்டின் மக்கள் பிரதிநிதி. அவரின் இன்றைய நிலைக்கு காரணம் கடவுள், விதி என ஆன்மீகவாதிகள் சொல்வார்கள். 

கடவுளிடம் செல்லும் பக்தனுக்கு தெரியும், அவர் அவனுடன் பேச மாட்டான் என்பது. அவன் தன் மனதுக்குள் கடவுளுடன் பேசிக் கொள்வதாக நினைத்து, தன் தேவைக்கான எண்ணத்தின் வலிமையை கூட்டிக் கொள்கிறான். கடவுள் தன் வேண்டுகோளை நடத்தி வைப்பார் என்று நம்புகிறான். அவனின் அந்த நம்பிக்கையின் வலிமைதான் அவனது வேண்டுகோள் நிறைவேற காரணமாக இருக்கிறது. கடவுள் பக்தனுடன் பேசுவதாக இருந்தால், ஒருவர் கூட கோவிலுக்கோ, மசூதிக்கோ, சர்ச்சுக்கோ செல்லமாட்டார்கள். அவர் கடவுளே அல்ல என்றுச் சொல்வார்கள். 

ஜாதகத்தில் விதி என்று சொல்வார்கள். பிரபல திரைப்பட நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் யூடியூப் பேட்டி ஒன்றினைப் பார்த்தேன். அவரின் இளவயதில் 'அஸ்ட்ராலஜி அண்ட் அதிர்ஷ்டா’ எனும் ஜோதிடப் புத்தகத்தைப் படிக்க நேர்ந்ததாகவும், அதில் யாரோ ஒருவர் தன் திருமணம் பற்றிக் கேட்ட கேள்விக்கு, இத்தனையாவது நாளில், உனது திருமணம் நடக்கும் என எழுதி இருந்ததாகவும், அச்சில் இருக்கிறதே, இவ்வளவு சரியாக எதிர்காலத்தைக் கணிக்க முடியுமா? என்று நினைத்துக் கொண்டு, அந்த புத்தகத்தின் ஆசிரியரைப் பார்க்கச் சென்றதாகவும், அந்த பத்திரிக்கையின் ஆசிரியர், நீ நடிகனாகத்தான் வருவாய் என்று சொன்னதாகவும், அதன்படியே அவர் நடிகன் ஆனதாகவும், அதன் பிறகு அவரிடமே ஜோதிடம் கற்றுக் கொண்டதாகவும் சொல்லி இருந்தார். 

மூர்த்தி அவர்களுக்குப் போன் செய்தேன். அவர் தற்போது ஜோசியம் பார்ப்பது இல்லை எனவும், தன் பையன் வேறு எந்த வேலையும் செய்யகூடாது என்று சொல்லி இருப்பதாகவும் சொன்னார். நேரில் சந்திக்கலாமா எனக் கேட்டேன். சென்னை வரும் போது, வாருங்கள் சந்திக்கலாம் என்றுச் சொன்னார். அவரிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக போன் செய்யவில்லை. ஜோதிடத்தின் சாத்தியக்கூறுகள் என்ன என்பது பற்றி அறிய வேண்டுமென்ற ஆவல். 

பாவம் சரவணபவன் அண்ணாச்சி. யாரோ ஒரு அயோக்கிய ஜோதிடனால் அவரின் வாழ்க்கையே போனது.  மிகத் துல்லியமான ஜோதிடம் சொல்ல இந்த உலகில் எவருமில்லை என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை.

கடவுளோ, விதியோ ஒருவனுக்கு உதவி செய்வதில்லை. அவன் தனக்குத்தானே உதவிக் கொள்ள, தன் மனத்தின் வலிமையை அதிகப்படுத்திக் கொள்ள ஜாதகமும், விதியும், கடவுளும் உதவுகின்றன. கடவுளால் கைவிடப்பட்டாலும் முயற்சி நிச்சயம் பலன் கொடுக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

பிரதமர் மோடி அவர்கள் இத்தனை உயரத்தில் இருக்கிறார் என்பது சாதாரணமல்ல. அவருக்கு நான்கு மூளைகளும், ஐந்தாறு கைகளும், நான்கு தலைகளும் இல்லை. அவரும் நம்மைப் போல சாதாரண மனிதர் தான். பூமிபந்தின் ஒரே ஆனந்த பூமியான இந்தியாவின் முதல் மனிதராக இருக்கிறார். அவர் சார்ந்திருக்கும் கட்சி, கட்சியின் கொள்கைகள் பற்றி நான் இங்கு எழுத வரவில்லை. அதையும் தாண்டி இது வேறு. அவரின் இந்த உயரத்துக்கு காரணம் என்னவாக இருக்கும் என ஆராய முயல்கிறேன். இது ஜோதிடமும் இல்லை.

பியரிடம், ’நான் ஒரு பணியை வெற்றிக்காகவே செய்கிறேன்’ என்றார் பிரதமர். ’தோல்வி அடைவதைப் பற்றி சிந்திப்பது இல்லை. வேறு வழிகளை ஆராய்வேன்’ என்கிறார்.

என்ன ஒரு வலிமை கொண்ட மனம் அவரது? பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டின் பிரதமராக இருக்கிறார். அவர் கொண்ட மனத்தின் வலிமைக்கு ஈடாக ஒன்றையும் சுட்டிக்காட்ட இயலாது. அவரின் அந்த மனம் - அவருக்கானவர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. காலம் அவரின் வலிமையான மனத்தின் காலடியில் தன்னைச் சேர்த்து விட்டது. இந்தியாவே அவரின் அந்த வலிமையான எண்ணத்தின் பால் ஈர்க்கப்பட்டு உள்ளது. அவரின் அந்த எண்ணத்தின் வலிமையை நினைத்தால் எனக்கு சொல்லொண்ணா இன்பம் உண்டானது. எவ்வளவு வலிமை அவரிடம். தகர்த்தெறிய முடியா கோட்டையை விட அவரின் அந்த எண்ணம் வலிவானது அல்லவா நண்பர்களே!

நரேந்திரர் என்ற விவேகானந்தர், என்னிடம் 100 இளைஞர்களைக் கொடுங்கள், உலகையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் அல்லவா?  அவரின் ஒவ்வொரு பேச்சும் எவ்வளவு வலிமையைக் கொடுப்பவை? படித்திருக்கின்றீர்களா நீங்கள் விவேகானந்தரின் பேச்சை? அவரின் புத்தகங்களை? கீழே உள்ள இந்த வாக்கியத்தின் வலிமைக்கு ஈடு எது? அதைப் போலத்தான் பிரதமரும் பியரிடம் சொன்னார். 

பிரதமர் அவ்வளவு எளிதில் இந்த நிலைக்கு வரவில்லை. ஆனாலும் வந்து விட்டார். அது எங்கணம்? அவரை மட்டும் ஏன் முதலமைச்சராக, பிரதமராக பிஜேபி தேர்ந்தெடுத்தது? கரை கண்ட பல அரசியல்வாதிகள் இருக்கும் அந்தக் கட்சியில், நரேந்திரருக்கு மட்டும் அந்த வாய்ப்புக் கிடைத்தது ஏன்? அவரின் எண்ணத்தின் வலிமை, கட்சியின் தலைவர்களின் எண்ணங்களுக்குள் ஊடுறுவி அல்லவா, அவர் தான் வேண்டும் எனச் சொல்ல வைத்தது. இல்லையென்று எவராலும் மறுக்க முடியாது நண்பர்களே...!

நாம் பெறும் ஒவ்வொன்றும் நாம் அதைப் பற்றி நினைக்காமலா கிடைத்திருக்கிறது? இல்லை அல்லவா?

மடக்கிய கை பெரிது அளவுள்ள அந்த இதயத்துக்குள் உதித்த எண்ணமல்லவா அவரை இந்த நிலைமைக்கு உயர்த்தியது. பாலைவனத்துச் சிங்கம் எனது மனம் கவர்ந்த உமர் முக்தாரின் நடை போல, கிரிலுடன் நடந்தார் அவர். 

பிரதமருடன் பேசும் போது கிரிலின் முகத்தில் அவ்வப்போது எழுந்த பயம் எனக்குள் கிளர்ச்சி ஊட்டியது. அவர் மிகப் பெரும் ஜனநாயக நாட்டின் தலைவர் என்கிற எண்ணம் பியரின் பேச்சில் அவ்வப்போது வெளிப்பட்டது. அவரின் முகம் சாந்தமாக இருந்தது. அவரின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் மக்களின் நலனை, சமுதாய நலனை, நாட்டின் நலனை பிரதிபலித்தது. தோல்வியைப் பற்றி நினைப்பதில்லை. வெற்றி பெற வேறு வழிகளை ஆராய்வேன் என்கிறார் அவர்.

வெற்றி அதை ஒன்றினைத் தவிர வேறொன்றினையும் அவர் கடுகளவும் நினைத்துப் பார்ப்பதில்லை என்கிறார். அவரிடம் இந்தியா என்ன? உலகே மண்டியிட்டு நிற்கும். அவர் கொண்ட எண்ணமே அவர் இப்போது இந்தியாவின் பிரதமராக இருக்க காரணம் அல்லவா?
அன்பு நண்பர்களே, சுவாமி விவேகானந்தர் சொல்லி இருக்கிறார் இப்படி. நாமும் முயன்றால் தான் என்ன? கடிகாரத்தில் ஓடிக் கொண்டிருப்பது நொடி முள் அல்ல, நம் வாழ்க்கை என்கிறார் விவேகானந்தர். ஒரு மனிதரால் சாதிக்க முடியுமென்றால், அதை இன்னொரு மனிதனாலும் சாதிக்க இயலும் தானே? தோல்வி என்ற எண்ணத்தை நினைவில் இருந்து அகற்றுவோம். வெற்றி ஒன்றினைத் தவிர நமக்கு வேண்டியது வேறொன்றும் இல்லை. செய்யும் செயலில் பாதை தெளிவாக இருந்தால் வெற்றி நிச்சயம்.

அவர் நலமுடன் இருந்து இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் நன்மை செய்வார், பசியில் செத்துப் போவோர் இல்லாமல் செய்வார், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் இல்லாமல் தன்னம்பிக்கை மிளிரும் விவசாயிகள் உருவாக நாட்டைத் திறம்பட வழி நடத்துவார் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன். 

அவரின் வலிமை கொண்ட எண்ணம் அவருக்கு எல்லாமும் வழங்கியது போல சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக, நாட்டின் உயர்வுக்காக, மனிதர்களின் மேன்மைக்காக  நாமும் வலிமையான எண்ணங்களை எண்ணலாம். 

எண்ணமே வாழ்வு

* * *

Friday, August 2, 2019

நரலீலைகள் - நாய் காதல் (5)


உங்களுக்கு நரலீலைகளின் 3 மற்றும் 4 வது பகுதிகள் ஏதாவது புரிந்ததா? ஏதோ காதல் பித்து ஏற்பட்டு இந்த நாவல் ஆசிரியன் எழுதி இருக்கிறான் என நினைத்திருப்பீர்கள். ஆமாம் நீங்கள் நல்லவர்கள். அப்படித்தான் நினைப்பீர்கள். ஆனால் இந்த நாவலாசிரியன் இருக்கின்றானே அவனுக்குள் குறுக்கு வெட்டு பகுதி ஒன்று உண்டு.

இந்த அஸாஸில் யார் தெரியுமா? திருக்குர் ஆனை நாவலாசிரியனுக்கு அவ்வப்போது வாசித்துக் காட்டி அர்த்தம் சொல்லி கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் மூலம் தெரிய வந்த ஆள் தான் அஸாஸில் அலீம் எனச் சொல்லக்கூடிய சைத்தான்.

கடவுளின் மகிமை தெரிய வேண்டுமெனில் சைத்தான் இருக்க வேண்டும். ஹீரோவின் மகிமை தெரிய வேண்டுமெனில் வில்லன் இருக்க வேண்டும். இப்போது புரிகிறதா உங்களுக்கு?

அஸாஸில் என்பவர் சைத்தான். இந்த உலகம் சைத்தானால் தானே ஆளப்பட்டு வருகிறது. உலகம் மட்டுமா உங்களின் ஒவ்வொருவரின் உள்ளத்துக்குள் உறங்கிக் கிடப்பவனும் அவன் தானே?

இல்லையென்றா நீங்கள் மறுக்கப்போகின்றீர்கள்? அஸாஸில் இந்தப் பூவுலகின் ஒவ்வொரு துகளிலும் இருக்கின்றான். அவன் ஆடும் ஆட்டத்தின் பகடைக்காய் தான் இந்த பூமி. மனிதர்களின் நாடி, நரம்புகளில், இரத்தத்தின் துளிகளில், விடும் மூச்சில் அவன் நீக்கமற நிறைந்து கிடக்கிறான். உங்களது காதலில், காமத்தில், பாசத்தில், பற்றில் எல்லாம் அவனே இருக்கிறான்.

உங்களை ஆளும் அஸாஸில் தான் உங்களுக்கு கடவுள். ஆனால் நீங்கள் எவரையோ தேடி ஓடிக் கொண்டிருக்கின்றீர்களே? அவர் நம்மைக் காப்பாற்றுவார் என்று கோவில் கோவிலாய், மசூதியாய், சர்ச்சுக்காய் ஓடிக் கொண்டிருக்கின்றீர்களே? ஓடி என்ன பயன்?

உங்களுக்குள் இருக்கும் அஸாஸிலை நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்? உங்களுக்குள் உறைந்து கிடக்கும் அவனை எவ்விதம் நீங்கள் விரட்டி அடிக்கப்போகின்றீர்கள்? முடியுமா உங்களால்?

* * *

”மாயா....! உனக்கு அறிவிருக்கிறதா? நாவலின் ரகசியங்களை வெளிப்படுத்தினால் சுவாரசியமே இருக்காதே? ஏனடா? நீயே உன் நாவலைக் கெடுக்கிறாய்? வேண்டாம் மாயா....! நீ அமைதியாக இருந்து கொள். நாவலின் கட்டமைப்பை சீர் குலைக்காதே. இல்லையென்றால் உன்னை ராஜீயாய சபாவில் கொண்டு போய் விட்டு விடுவேன். ஜாக்கிரதை..” - கோவை எம் தங்கவேல்

* * *

”அண்ணேய், அண்ணேய்....! ”

”என்னடா? சநி....”

“பிக்பாஸில் பார்த்தியாண்ணேய். இந்த கவின் பய பன்றதை?”

“நானெங்கடா அதைப் பார்த்தேன். ஒரு வேளை பாத்ரூமிக்குள் பண்ணி இருப்பானோ என்னவோ தெரியவில்லையேடா சநி”

“அண்ணேய், இது என்னா காதல்னே... சாக்ஸி சொல்றா என் ஃபீலிங்க்ஸ், என் ஃபீலிங்க்ஸ் ஹர்ட் பண்றான் கவின்ங்கறாளே??? அப்படின்னா என்னாண்ணேய்?”

”அதுவாடா, சொல்கிறேன் கேளு...!”

”நாய்க்காதல் என்றால் என்னவென்று தெரியுமா உனக்கு? நாய்கள் ஆறு மாதத்துக்கு ஒரு தடவை குட்டி போடும் தன்மை கொண்டவை. பெண் நாய் குட்டி போட தயாரானவுடன் ஆண் நாய்கள் சுற்ற ஆரம்பிக்கும். அந்த நாய்களில் ஏதோ ஒரு நாயை பெண் நாய் தன்னை அண்ட விடும். பின்னர் அந்தக் காதல் முடிந்து விடும்.”


”புரிஞ்சுடுச்சுண்ணேய்....!”

”சேரனுக்கு லாஸ்லியா மீதுதான் மகள் பாசம் பொங்கும். எந்த தகப்பன்? தன் மகளை கன்னத்தைத் தடவி, கட்டிப் பிடித்துக் கொண்டலைகிறான்? கலாச்சாரம் பற்றி வாய் கிழிய பேசும் சேரனுக்கு மீராவை மகள் எனப் பாவிக்கத் தெரியாதா? கருப்பாய், சற்றே அழகற்றவளாய் தெரியும் மீராவை மகளாகப் பாவிக்காத சேரனுக்கு கொழுக் மொழுக் லாஸ்லியா மகளாகத்தான் தான் தெரிவாள். இதெல்லாம் இந்த நாவலில் வருகின்றானே அஸாஸில் செய்கிற அக்கிரமம். சேரன் மனதுக்குள் காமப் பித்தேறி அந்தப் பெண்ணைத் தடவிக்கிட்டு திரிகிறான்”



“அய்யோ... ???”

“அட, ஆமாடா சநி, மீராவை இடுப்பைப் பிடித்து தள்ளி விடுகிறான் இந்தச் சேரன். அந்தப் பெண் ஆற்றாமையால் அவனின் முதுகில் அடிக்கிறாள். அவள் அவன் செய்தது சரியில்லை என்று தான் சொன்னாள். ஆனால் இவன் என்னடா? செய்தான்? அழுது ஆர்ப்பாட்டம் செய்தான். இவனுக்கு மட்டும் தான் மகள்கள் இருக்கின்றாளா??? அப்போ மீரா யாரடா? அவளும் யாரோ ஒரு தகப்பனின் மகள் தானே? இவன் மகள்களுக்கு மட்டும் தான் கல்யாணம் ஆகணுமா? அயோக்கியப்பயல்....!”

“அட, ஆமாண்ணேய், கமல் கூட சேரனை நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பாராட்டினாரே??”

“ஒரு அயோக்கியனுக்கு இன்னொரு அயோக்கியன் தானடா குடை பிடிப்பான். இது தான் உலக வழக்கம் சநி...”

“அண்ணேய், இந்தப் பயல்கள், வாயற்ற பெண்ணை அல்லவா பலி கடாவாக்குகின்றார்கள். சரவணன் பஸ்ஸில் இடித்தேன் என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்க வைக்கின்றார்கள் இந்த நல்லவர்கள். கமல் படத்தில் நடிக்கும் போது, நடிகைக்கே தெரியாமல் உதட்டைக் கடித்து உறிஞ்சினானே, அப்போதெல்லாம் இந்த நல்லவர்கள் எங்கே போனார்கள்?”

“அடேய் சநி, இந்த நாவலாசிரியன் கடுப்பாகி விடுவான் இப்படியெல்லாம் பேசினால். நானோ நாவல், நீயோ நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம். நாவலின் ரகசியத்தைச் சொல்லி விட்டேன் என்று கடுப்பில் வேறு இருக்கிறான்”

“ஆமாண்ணேய், இந்த ஆளைப் பார்த்தால் பாவமாத்தான் இருக்கு”

* * *

”அன்பர்களே, மல்டிபிள் டிஸ்ஆர்டர் ஏற்பட்டு விட்டது உனக்கு” என்கிறாள் கோதை. இந்த நாவலைப் படித்து விட்டு, அவளுக்கு இது நாவலாய் தெரியவில்லையாம். ராஜம் கிருஷ்ணன், கல்கி போன்று எழுது என்கிறாள். அவர்களைப் போல எழுத நானொன்றும் அவர்களின் பிரதி அல்லவே. 

மனதற்ற நிலைக்குப் போக போராடிக் கொண்டிருக்கும் எளியவன் நான். எனக்கு சத்தங்களற்ற அந்த உலகின் அற்புதத்தில் ஒரு நொடி ஊடுறுவி வெளியேற ஆசை. 

இறைவனின் குரலில் கரைந்து கொண்டிருக்கும் ஆனந்தத்தில் திளைத்திருக்கும் என்னை பிறரைப் போல நாவல் எழுது என்று கேட்டுக் கொள்ளும் கோதைக்கு ஒன்றைச் சொல்கிறேன்.

நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும்
இடையே உள்ள திரை
அவர்களை விலக்கி வைக்கிறது
நீயிந்த திரையை நீக்கிட
விரும்பவில்லையா? நான்
தெய்வீகப் பேரொளியில்
என் உள்ளொளியைச் 
சேர்க்க வேண்டும் அல்லவா? - ரூமி

கோதை, உனக்குப் புரிகிறதா? எல்லைகளற்ற இந்தப் பிரபஞ்சத்தின் தூசிகளில் இருந்து மாற்று வடிவாய் உன் முன்னே, கணவனாய் உருவெடுத்து இருக்கும் உனது நான், விரும்புவது எனது நாவலின் வழியே உருகியோடும் அன்பினை மட்டுமே.  அன்பின் வழி கடவுள் தன்மையை அடைவது மட்டுமே எனது ஆவல் அன்பே....!

நானே உன் இதயம் - அந்த 
உணர்ச்சி மையத்தை நீ
உனக்குள் தேடாதே! அது
என்னிடம் உள்ளது
என்னில் இருந்து வேறாக 
உன்னை எண்ணி விடாதே! அப்போது
உன்னை நீ அறிய மாட்டாய்
நீ துன்பத்தாலும், வேதனையாலும்
நிரம்பியிருப்பவள்....!
வா..! என்னில் ஒரு பகுதியன்றோ நீ.....!
என் விலகப்பார்க்கிறாய் முழுமையில் இருந்து?
என்னை இருகப்பற்றிக் கொள்,
என்னை மகிமைப்படுத்திக் கொள்...! - ரூமி


* * *
02/08/2019

Tuesday, July 23, 2019

நிலம் (54) - ஊட்டியில் நிலம் வாங்கப்போகின்றீர்களா?

எனது நண்பர் ஊட்டிக்குச் சென்று வர அழைத்தார். குளிரும், நீரும் சேர்ந்த இடங்கள் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். இயற்கையின் ஆழ்ந்த அமைதி, குளிர் பொருந்திய கால நிலையில் சில் வண்டுகளின் இனிய தம்பூரா கீதங்கள் என மனது எல்லையில்லா அமைதியில் இருக்கும். உடனே போகலாம் என்று சொல்லி விட்டேன்.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி சாலையில் சென்றோம். மேகமூட்டத்தில் காலைச் சூரியனின் கதிர்கள் பூமியை எட்டா வண்ணம் கருமையான நீர் ததும்பும் மேகங்கள் பாதுகாத்தன. ஆங்காங்கே தூறல்கள்  விழுந்து பூமியை கிளர்ச்சி அடைய வைத்துக் கொண்டிருந்தன. ஒன்பது மணியைப் போல கோத்தகிரி அடைந்தோம். அடேங்கப்பா டீஸ் ஸ்டாலில் கீரை போண்டாவுடன் ஒரு டீ. கோத்தகிரியில் மழையும் இல்லை. தூறலும் இல்லை.


அங்கிருந்து கீழ் கோத்தகிரிக்கு சென்றோம். நண்பர் இடம் வாங்குவதற்காக முடிவு செய்திருக்கிறார் என்பதை அங்கு சென்ற பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

பல இடங்களைப் பார்த்தோம். இதற்கிடையில் என்னிடம் ’இடம் எப்படி இருக்கு?’ என கருத்துக் கேட்டார். மதியம் போல கார்சன் எஸ்டேட் அருகில் காரை நிறுத்தினோம். நான்கடி உயரம் இருக்கும், காரைக் கடந்து சென்றது. மஞ்சள் வண்ணத்தில். காட்டெறுமைகளும், எருமை மாடுகளும் உலாவின. இன்றைக்கு அதற்கு வேட்டை தான் என நினைத்துக் கொண்டேன்.

சாப்பிட இந்த இடம் தகுதியானதல்ல எனக் கருதி கோத்தகிரிக்கே திரும்பினோம். 

லெமன் சாதம், உருளை வறுவல். சூடு இல்லை. கூடவே நெய் முறுக்கு. சாப்பிட்டு முடித்தவுடன், தெரிந்த ஒருவர் ஒரு ஆளை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தார்.

நான்காண்டுகளுக்கு முன்பு இடம் வாங்க, அக்ரிமெண்ட் போட்டு 25 லட்ச ரூபாயைக் கொடுத்திருக்கிறார். கிரையம் செய்ய அழைத்த போதெல்லாம் உரிமையாளார் வீட்டில் இருப்பதில்லையாம். திடீரென்று பார்த்தால் அந்த இடத்தை வேறொருவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டாராம். மூன்று ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறாராம் அவர். இன்னும் விஷயம் முடிந்தபாடில்லை. என்னுடன் கட்சிக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அட்வான்ஸ் கொடுத்து விட்டு, இன்னும் அலைந்து கொண்டிருக்கும் அவரின் நிலையை எண்ணி வருத்தம் உண்டானது. 

அவருக்கு யாரும் அங்கு உதவி செய்ய மாட்டார்கள்.  பணம் பெறும் வரைக்கும் தான் எல்லோரும் ஓடி வருவார்கள். பணம் கிடைத்ததும் ஓடி ஒளிந்து விடுவார்கள். அவ்வளவு எளிதில் அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியாது எனப் பலப்பல தகவல்களைக் கொட்டினார் அவர்.

இதில் என்ன கொடுமையான விஷயம் என்றால், நில உரிமையாளர் தான் இவரிடம் சிக்கி இருக்கிறார். ஆனால் இவரோ அவரிடம் சிக்கி விட்டதாக மூன்றாண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறார். அவரிடம் சில ஆலோசனைகள் சொல்லி விட்டு வந்தேன்.

முன்பெல்லாம் வார்த்தைக்கு மரியாதை இருந்தது. இன்று காசுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கிறார்கள் என்று என்னிடம் இருந்த ஆட்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். 

ஊட்டியில் என்ன பிரச்சினை என்றால் செக்‌ஷன் 17 மற்றும் கடந்த வருடம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட லட்சம் ஏக்கருக்கும் மேலான இடங்கள் மற்றும் ஃபாரெஸ்ட் இடங்கள். இவைகளைக் கண்டுபிடித்து வாங்குவதற்குள் நாக்குத் தள்ளி விடும். ஊட்டியில் தற்போது கரலேஷன் நடந்து பல சர்வே எண்கள் மாற்றம் பெற்றிருக்கின்றன. அந்த இடத்தைத் தான் வாங்குகிறோமா என்று கண்டுபிடித்து எல்லைகளை வரையறைப்பது பெரிய வேலையாக இருக்கும். அடியேன் பல இடங்களில் ஊட்டியில் சர்வே செய்திருக்கிறேன். எல்லைப் பிரச்சினைக்கு எவரும் வருவது இல்லை.

ஏற்கனவே வாங்கி வைத்திருந்தவர்களிடம், இடங்களை வாங்குவதில் பிரச்சினை இருக்காது. அவர்கள் குதிரை விலைக்கு வாங்கி விட்டு, யானை விலை சொல்வார்கள். அருகில் 20 லட்சம் விலை போகும், ஆனால் 50 லட்சம் என விலை சொல்வார்கள். 

எனக்கொரு நண்பர் இருக்கிறார். அவர் ஊட்டில் பிசினஸ் செய்து கொண்டிருந்த போது சொன்னது. தவணை முறையில் பொருள் வாங்கிக் கொள்வார்களாம். தவணையை வாங்கச் சென்றால் ஆள் எஸ்கேப் ஆகி விடுவார்களாம். அலைந்து அலைந்து காசு கரியானதுதான் மிச்சம் என்று சொல்லிக் கொண்டிருப்பார். 

இதில் ஒரு சில நில புரோக்கர்கள் அடாத வேலை செய்கிறார்கள். ஒரே இடத்தைக் காட்டி பல கிரையங்களைச் செய்வது. அட்வான்ஸ் கொடுத்த இடத்தில் பாகம் இருக்கிறது எனச் சொல்லி கேஸ் போட வைப்பது என பல அலப்பறைகளைச் செய்கிறார்கள். அவர்கள் ஆட்களை எளிதாக கணிக்கிறார்கள். ஆளுக்கு ஏத்தது போல காரியங்களை செய்து, பணத்தைச் சிக்க வைத்து விடுகிறார்கள். பின்னர் பிரச்சினை என்றால் அதற்கும் பணம் பெறுகின்றார்கள். இது போன்ற பல சம்பவங்களை எனது நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

இன்றைக்கு ஒரு இடத்தை வாங்குவது என்றால் சாதாரணமானதாகத் தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார். 

”ஏன் இப்படிப் புலம்புகின்றீர்கள்? வாழ்க்கை இதுதான். பிரச்சினைகள் இல்லாதவர்கள் உலகில் ஏது? பிரச்சினை இல்லாத இடம் தான் ஏது? எல்லாம் சரியாக இருந்து விட்டால் உலக இயக்கமே நின்று விடும். பிரச்சினை வராமல், எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு விட்டால் சரியாகி விடும்” என்றுச் சொன்னேன்.

“சரிதான் தங்கம், சரிதான்” என்றார் அவர்

ஊட்டியில் நிலம் வாங்கும் எண்ணம் இருப்பின் தகுந்த ஆலோசனை கிடைத்த பிறகு வாங்குங்கள் என எனது பிளாக்கைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவு.

Wednesday, July 17, 2019

நரலீலைகள் - அஸாஸில் (4)

ராதேயின் காதலன் நான். 

என் பெயர் அஸாஸில் என்று உம்மையும் என்னையும் படைத்த அந்தக் கடவுள் என்னிடம் சொன்னார். 

நான் ஹீரோ அல்ல. வில்லன். இந்த நரலீலைகள் நாவலில் ஹீரோ இல்லை. வில்லன் தான் இருக்கிறான். அது தான் நான்.

எனக்கு எந்த செண்டிமெண்டும் கிடையாது. என்னால் இந்த உலகில் வெறுக்கும் ஒரே ஒரு ஆள், ‘கடவுள்’.

அவர் படைத்த மனிதர்களுடன் விளையாடுவது, முடிவில் அவர்களாலேயே அவர்களை அழிப்பது மட்டுமே எனது வேலை. உங்கள் ‘அவனும்’ என்னை என்னென்னவோ செய்து பார்க்கிறார். அவரால் என்னை அழிக்க முடியவில்லை.

நீங்கள் இருக்கும் வரையில் நானும் இருப்பேன். கடவுள் என்கிறவர் இருக்கிற வரையில் நானும் இருப்பேன். 

* * *

அஸாஸில்....! 

உங்களை அழிக்கும் கர்ண கடூரமான, இரக்கமே அற்ற, மனிதாபிமானம் அற்ற, அரக்கனை விட கொடூரத்தின் வில்லன் அஸாஸில்.

உங்கள் மனதுக்குள் பொதிந்து கிடக்கும் ஒவ்வொரு ரகசியங்களும், உங்களைப் படைத்த ‘அவனுக்கு’ தெரிந்ததை விட எனக்கு நன்றாகத் தெரியும். 

ஒவ்வொன்றாய் வெளியிடப் போகிறேன். 

பயத்தால் நா உலர்ந்து, முகம் வெளிறி, ரத்தம் சுண்டி நடுங்கப் போகின்றீர்கள் நீங்கள்.

மனிதர்களை நான் எனது மிகச் சிறந்த பல ஆயுதங்களால் வதைக்கிறேன். அதன் மூலம், உங்களின் ‘அவன்’ படைத்த மனிதர்களைக் கொல்கிறேன். அழிக்கிறேன். ...!  உங்களை அழிப்பதற்கு நான் வைத்திருக்கும் கோடானு கோடி ஆயுதங்களில் ஒரே ஒரு ஆயுதம் எது தெரியுமா?

ஹா.....! ஹா.......!



ராதே....! 

உன் பெயரை உச்சரிக்கும் போது உன் மீது காதல் கொண்டு மனம் உன் மத்தம் கொள்கிறதடி. ராதே...! ராதே...!

என்னைக் கொல்லாமல் கொல்கிறதடி உன் மீது நான் கொண்ட காதல்...!

எவருக்கும் மண்டியிடாத இந்த அஸாஸில் உன்னிடம் மயங்கிக் கிடக்கிறேன் ராதே....!

ஓடோடி வா...! 

உன்னைப் பார்க்காத கண்களும் அருவியென கண்ணீரை, என்னைக் கேட்காமலே பொழிகிறதடி! நீ வரும் போது, கண்ணீர் மறைத்து விடக்கூடாது என அடிக்கடி கண்களைத் துடைத்து, துடைத்து சிவப்பேறிக் கிடக்கிறதடி ராதே...!

ராதே...!!


விரைவில் தொடரும் 

ராதேயின் அறிமுகம் விரைவில் வரும். அதுவரை நீங்களும் காதலில் மூழ்கிக்கிடப்பீர்களாக. 

காதல்...! காதல்...! காதல்...!! 
காதல் போயின்....
அஸாஸில்......!

ஹா....! ஹா......!

Tuesday, July 16, 2019

நரலீலைகள் - ராதே (3)

காதல் காதல் காதல்
காதல் போயின் சாதல்
சாதல் சாதல் சாதல்....!

காதல்
காதல்! காதல்!! காதல்!!!

கா................
த.............................
ல்......................................

மானிடத்தின் அற்புதம்!
இயற்கையின் புனிதம்!



ராதே!
மனது மயங்குது, உள்ளம் சோர்வடைகிறது, உடல் தளர்கிறது. உன் மீது கொண்ட காதல் என்னைப் பாடாய்படுத்துதடி.

நீ கண்ணனைக் காதலிக்கிறாயாம். ராமதேவர் உருகி உருகி உன் அழகை வருணிக்கிறார். உன்னுடன் முயங்கி, முயங்கி, உன் அழகில் மூழ்கி, உன்னை வருணிக்கிறாரடி ராதே!

அடியே ராதே, நானும் உன்னைக் காதலிக்கிறேனே, ஏன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை?

ஓங்கி உலகளந்த கார்வண்ணத்தில் காணாமல் போய் விட்டாயோ? நீ....! 

ராதே..!

உன் பெயரைச் சொல்லும் போதெல்லாம் அலையென அடிக்கிறது காதல் உன் மீது....!

ராதே... மழை மேகமென உலகெலாம் விரவி விற்கும் கருமையில் ஆழ்ந்து போனாயோ நீ...!

உன் காலடியில் கிடக்கிறேனே.... நான். 

உன் கொலுசின் ஒலி கேட்டு, உன் மலர் பாதத்தின் ஓசை கேட்டுக் கேட்டு, அதுதான் இசையென மூழ்கிக் கிடக்கிறேனே நான்....!

நான் அழிந்து போக துடியாய்த் துடிக்கிறேனே ராதே...!

ராதே....!

உள்ளம் சூடு தாளாமல், நெருப்பெனக் கொதிக்கிறது ராதே... !

ஓடோடி வா, உன் கார் வண்ணனை விட்டு....!

உன் காதலன் நான், உன்னை மட்டும் நேசித்து, நேசித்து, நான் காணாமல் போய்க் கொண்டிருக்கிறேன் ராதே...!

ராதே....!!!

ராதே....!!!

ராதே...!!!!

நான் உன்னிடம் சமர்ப்பணம்....! 

இனி, நானில்லை....!

நீயே.....!

காதலியே வந்து விட்டாயா?

இதோ என்னை எடுத்துக் கொள்....!

இனி, நானில்லை...!

நீயே.....!

இல்லை...! இல்லை...!

காதல்......!
காதல்......!!
காதல்......!!!


இந்த நரலீலை நாவலின் முதல் கதாநாயகி ராதே. அழகு சொட்டும் அற்புதமான நீர்ச்சோலையில் பரவிக் கிடக்கும் புற்களின் மீது படிந்து இருக்கும் விடிகாலைப் பனி நீர் போன்றவள். ராதேயிடம் இருப்பது ஒன்றே ஒன்று.


விரைவில் தொடரும்... 

யார் அந்தக் காதலன்? ராதையை இப்படிக் காதலிக்கும் அவன் யார்? என்ன செய்து கொண்டிருக்கிறான் அவன்?