பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் திரைப்படத்தினை விமர்சனம் செய்பவர்களை பல்வேறு கொடூர வார்த்தைகளால் யாரால் புகழப்படுகின்றார்களோ அவர்களை நன்றி கெட்டு வைது கொண்டு இருக்கின்றார்கள். திரைவிமர்சனம் செய்பவர்களின் எதிர்மறையான விமர்சனங்களைப் படித்து விட்டு பலரும் படம் பார்க்க வர மாட்டார்கள் என்று அவர்கள் நினைப்பதால் திட்டுகின்றார்கள். ஏன் எதிர்மறையான விமர்சனங்கள் வருகின்றன? என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. காக்காய்க்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதால் அவர்கள் இப்படி நிலைகுலைந்து விடுகிறார்கள். இருந்தாலும் உண்மை என்று ஒன்று உண்டல்லவா?
ஹோட்டலில் சாப்பிடப் போகின்றவர்கள் உணவு எப்படி இருக்கிறது, ருசி எப்படி இருக்கிறது, தரம் எப்படி இருக்கிறது என்று பலரிடமும் பகிர்ந்து கொள்வார்கள். உணவு நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்பார்கள். நன்றாக இல்லையென்றால் நன்றாக இல்லை என்பார்கள். ஆனால் அதற்காக ஹோட்டல்காரர்கள் உணவு நன்றாக இல்லை என்பவர்களை நீயென்ன சமையல் படித்திருக்கின்றாயா? எந்த ஹோட்டலில் வேலை செய்தாய் என்றா கேட்கின்றார்கள்? இல்லையே! ஒரு உணவின் ருசியை சாப்பிட்டுப் பார்த்தால் சொல்லி விடலாம். அதற்காக சமையல் கலைஞனாக இருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? விமர்சனங்களை மூன்று நாட்கள் கழித்து எழுதுங்கள் என்கிறார்கள் சினிமாக்காரர்கள். ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஒரு ஹோட்டலில் சாப்பிடச் செல்கிறான் ஒருவன். அவனுக்கு வாந்தி பேதி எடுத்து மருத்துவமனையில் கிடக்கின்றான். அவன் அந்த ஹோட்டலில் சாப்பிட்டதால் தான் வாந்தி பேதி வந்தது என்று சொன்னால் என்ன தப்பு? அவ்வாறு பிறரிடம் சொன்னால் தானே பலரும் தப்பித்துக் கொள்வார்கள். அவ்வாறு உடனே சொல்லாமல் மூன்று நாட்கள் கழித்துச் சொல்லலாமா? இது தவறில்லையா?
திரைப்படத்தைப் பார்த்ததும் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்று படிக்காதவன் கூட சொல்லி விடுவான். ஒரு நாவல் படிக்கிறோம் என்றால் அதை எழுதத் தெரிந்தவனோ அல்லது முன்பே எழுத்தாளனாக இருப்பவனோ தான் விமர்சிக்க வேண்டுமென்றால் அதெல்லாம் நடக்கக் கூடிய ஒன்றா? சினிமாக்காரர்கள் பொதுவில் பேசும் போது நான்கும் சிந்தித்துப் பார்த்து பேச வேண்டும்.
சிந்திக்கும் அளவுக்கு சினிமாக்காரர்கள் ஒன்றும் பெரிய புத்திசாலிகள் இல்லை எனலாம். அவர்களில் மிகச் சிறந்த ஆளுமைகளும் இல்லை. தங்களின் புகழ் மாயையில் ஒரு விஷயத்தை மறந்து விடுகின்றார்கள். நாங்கள் தான் தமிழ் நாட்டை ஆள்கிறோம் என்பதாக அவர்களுக்கு எப்போதும் ஒரு மமதை உண்டு. இதை விட முட்டாள் தனமான சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்பதற்கு காரணம் உண்டு.
எம்.ஜி.ஆரை வைத்து, கலைஞரை வைத்து, ஜெவை வைத்து, விஜயகாந்தை வைத்து சம்பாதிக்க நினைப்பவர்களின் மேற்கண்டவர்களை உசுப்பேத்தியே அரசியலுக்கு வர வைத்து அரசியலுக்குள் நுழைத்து விடுகின்றார்கள். மேற்கண்ட தலைவர்களால் பிரயோஜனம் இல்லையென்றால் அடுத்த கட்சிக்குத் தாவி விடுவார்கள். அவர்களுக்குத் தேவை அரசியல், அதிகாரம், பணம். அதற்குத் தேவை சினிமாக்காரர்களின் புகழ். தலைவர்கள் தான் அனைத்துப் பழிச்சுமைகளையும் ஏற்பார்கள். அவர்களை அரசியலுக்குள் இழுத்தவர்கள் எதிரிகளாகி விடுவார்கள். சினிமாக்காரர்கள் தன் புகழால் விளையும் எதிர்காலப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ரஜினியால் பணமும் புகழும் அதிகாரமும் கிடைக்க வேண்டும் என விரும்புவர்களுக்குத்தான் ரஜினி தேவை என்பதை அவர் புரிந்து வைத்திருக்கின்றாரா என்று தெரியவில்லை.
ஒரு சினிமாக்காரர் விமர்சனம் செய்பவர்கள் எந்த இன்ஸ்டிடியூட்டில் படித்தார்கள்? சினிமா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் விமர்சனம் செய்கின்றார்கள் என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தார். பொது வெளியில் திரைப்படத்தினை மக்கள் பார்ப்பதற்காக வெளியிடுகிறார்கள். படம் எப்படி இருக்கிறது என்றுச் சொல்லக் கூடாது என்கிறார்கள். இது என்ன சட்டமோ? அவர்களுக்கான நியாயமோ? தெரியவில்லை.
தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா என்னைப் பொறுத்தவரை ஒரு சில தனியார் கூட்டத்தால் நிர்வகிக்கப்படும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை மதிக்காக அமைப்பு. அவர்களுக்கு எந்த வித சட்டமும், விதியும் இல்லை. ஆட்சிக்கு வரும் எந்த அரசும் கண்டு கொள்வதில்லை என்பதும் அதற்குப் பல்வேறு காரணிகள் காரணமாய் இருக்கின்றன என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சினிமாவின் புகழ் மற்றும் இதர இன்பங்களையும் முன்னிட்டு அரசு தொடர்புடையவர்கள் சினிமாவைக் கண்டு கொள்வதே இல்லை என்பதுதான் உண்மையாக இருக்கக் கூடும்.
அடுத்து ஒரு முக்கியமான உளவியல் பிரச்சினை பற்றிப் பார்த்து விட்டு பாகுபலிக்குள் செல்லலாம்.
ஒரு காரில் பார்த்தேன், ”மை டாட் ஈஸ் மை ஹீரோ” - என் தந்தை என் ஹீரோ என்று ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. உலகெங்கும் இருக்கும் பிரச்சினையே இதுதான். அடிமைத்தனத்தினை இப்படித்தான் சொல்வார்கள். என் தந்தை என் ஹீரோ என்பது அடிமைத்தனம். ஒவ்வொருவரும் தனிப்பட்டவர்கள், தனிப்பட்ட பண்பு நலன்கள் கொண்டவர்கள். ஆனால் அதை எவரும் புரிந்து கொள்வதில்லை. எப்போது என் தந்தை என் ஹீரோ என்று ஒரு சமூகம் சொல்ல ஆரம்பித்ததோ அன்று ஆரம்பித்தது இந்த ஹீரோயிசம் பிரச்சினை. தலைவரிலிருந்து சினிமா ஹீரோ வரை எல்லாவற்றிலும் ஹீரோயிசத்தில் மாட்டிக் கொள்கின்றார்கள். ஹீரோயிசத்தின் முடிவு என் தலைவர் என்ற அடிமை மனப்பான்மை. ஹீரோ இல்லாமல் எதுவுமே இல்லை என்ற ஒரு மாயையைக் கட்டமைத்து விட்டார்கள். தலைமை, தலைவர், மேலதிகாரி, தந்தை, தாய் என்று எல்லாவற்றிலும் ஹீரோயிசத்தினைக் கொண்டு வந்து திணித்து விட்டார்கள். நாவல் எழுதினால் கூட ஹீரோ, ஹீரோயின் வேண்டும்.
இங்கு யாரும் யாருக்கும் தலைவரும் இல்லை, எவரும் எவருக்கும் தொண்டனும் இல்லை என்பதை மனது புரிந்து கொள்ள மறுக்கிறது. ஆதர்ஷ ஹீரோ அது எதுவானாலும் சரி இங்கிருப்பவர்களுக்கு வேண்டும். அவர் வழி தான் இவர் நடப்பார். அடிமைத்தனத்தில் சுகம் கண்டவர்களுக்கு அதன் அபாயகரமான வழிகாட்டுதலின் அர்த்தம் புரிவதில்லை. அன்புக்கு அடிமையாக இருப்பதும், கடமைக்கு கட்டுப்பட்டு நடப்பதும் வேறு. இது வேறு. இந்த ஆதர்ச ஹீரோயிசம் தான் மனிதனைப் படுகுழிக்குள் தள்ளி புதைத்து விடுகிறது.
இங்கு ஹீரோ, ஹீரோயின் என்று எவரும் இல்லை. இயற்கைதான் ஹீரோ. வாழ்க்கை தான் ஹீரோயின். இயற்கையோடு இயைந்து வாழ்வதுதான் வாழ்க்கை. நம் முன்னே இருப்பது நம் வாழ்க்கை மட்டும் தான். பிறப்பு எப்படி நம் கையில் இல்லையோ அது போல இறப்பும் நம் கையில் இல்லை. ஆனால் வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் பெரும்பாலும் நாம் வாழ்வதே இல்லை. ஆப்பிள் நிறுவன ஸ்டீவ் ஹாக்கின் இறுதிப் பேச்சு என்றொரு மெசேஜ் வாட்சப்பில் வந்து கொண்டிருக்கிறது. படித்துப் பார்த்தீர்கள் என்றால் கொஞ்சமேனும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்னவென்று புரியும்.
அடுத்து மற்றொரு கேனத்தனமான விஷயத்தைப் பற்றியும் பார்த்து விட வேண்டும். விசுவாசம் என்பது அடிமைத்தனத்தின் உச்சகட்டம். சுத்தப் பைத்தியக்காரத்தினத்தின் மற்றொரு வார்த்தை என்னவென்றால் அதன் பெயர் விசுவாசம். ஒருவன் தவறே செய்தால் கூட அதைச் சுட்டிக்காட்டக் கூட அனுமதி மறுக்கும் விசுவாசம் என்கிற வார்த்தை சுத்தப் வேறொரு முட்டாள்தனத்தின் வேறு வார்த்தை..
கதைக்கு வந்து விடுவோம்.
பாகுபலி முதல் பாகத்தின் கதை - கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதாக முடிந்து விட்டது.
உலகே இந்தக் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்துதான் காத்துக்கிடக்கிறது என்றார் திவ்யதர்ஷினி. சிலம்பாயி பேத்திக்கு பேசக் கத்துக் கொடுக்கணுமா? டிடியின் சின்னப்பத்தாவோ பெரியப்பத்தாவோ எனக்குச் சரியாக நினைவில் இல்லை. அது ஜாக்கெட் போடாது. சிறு வயதில் அழுது அடம் பிடித்து பால்குடிக்க சண்டை போட்டேன் என்பதால் என்னைப் பார்த்தாலே அதற்கு கொஞ்சம் திகில் ஆகி விடும். அது பெயர் தான் சிலம்பாயி. சிலம்பாயி பேச்சு ஆவணத்தில் பிரபலம். டிடி அச்சு அசல் சிலம்பாயி. மரபணு தோற்காது அல்லவா? டிடியின் அப்பா நீலகண்டன் இறப்பதற்கு முன்பு வீட்டுக்கு வந்திருந்த போது டிடியைப் பற்றிச் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தார். அருமை பெருமைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தக் கதை ஒரு பக்கம் இருக்கட்டும்.
டிடி எல்லோரையும் கட்டிக் கட்டிப் பிடித்து கமல் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். பேசாமல் டிடிக்கு டாக்டர் பட்டம் கொடுத்து விடலாம். விஜய் டிவி அதற்கான வேலையைச் செய்ய வேண்டும். எது எதுக்கோ எவன் எவனுக்கோ விழா எடுக்கிறது விஜய் டிவி. டிடியினால் பிழைத்துக் கொண்டிருக்கும் விஜய் டிவி தன் தொகுப்பாளினிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்து அதை விழாவாக எடுக்கும் என நம்பலாம்.
இரண்டாம் பாகம் பாகுபலியை கோவை மணீஷ் தியேட்டரில் அம்மு, ரித்திக்கின் தொல்லை தாங்காமல் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இத்தனைக்கும் நெட்டில் இருக்கிறது, தேடிப் பிடித்து டவுன் லோடு செய்து பாருங்களேன் என்றால் ’போப்பா’ என்று ஒரு வார்த்தையில் மறுத்து விட்டார்கள்.
சாண்டில்யன், கல்கி ஆகியோரின் வரலாற்றுப் புதினங்களைப் படித்ததினால் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்று ஓரளவு யூகித்து இருந்தேன். அந்தளவுக்கு ராஜமெளலி மீது கவனம் இருந்தது. இரண்டாம் பாகத்தின் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். எழுத வேண்டியதில்லை.
பாகுபலியின் அறிமுகம் ஹீரோயிசத்தின் வெளிப்பாடு. பல நூறு பேர் சேர்ந்து இழுக்கும் தேரை ஒற்றை ஆளாக இழுத்து வந்து யானை மீது மோத விடுகிறார். மதம் பிடித்த யானை அடங்கிப் போகிறது. என்ன ஒரு ஹீரோயிசம்? ரஜினி 100 பேரை அடிக்கிறார் அதை விடவா என்று நீங்கள் சிரிப்பது புரிகிறது. அதுமட்டுமல்ல ஹீரோவிடம் இருக்கும் கருணை வேறு எவருக்கும் இல்லாத ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. குச்சிக் கால்கள் கொண்ட மன்னன். கருப்புச் சுவடு படிந்த உதடுகள். நடிக்கவே தெரியாத வெற்று வரட்டு முகம். இவர் தான் ஹீரோ. தியேட்டரில் விசிலடிச்சான் குஞ்சுகள் வாயில் விரலை வைத்து விசிலடிக்கின்றார்கள். இதன் காரணம் நம் சமூகம் கட்டமைத்திருக்கும் ஹீரோயிசம்.
தமிழர்கள் எடுத்த அந்தக் கால மன்னர் படங்களை இயக்குனர் பார்த்திருந்தால் இவரை ஹீரோவாக போட்டிருக்க மாட்டார். ஹீரோவுக்கு 25 கோடி என்றும் இயக்குனருக்கு 100 கோடியும் சம்பளமாகக் கொடுத்திருக்கின்றார்கள் என்று இண்டஸ்ட்ரீயில் பேசிக் கொள்கின்றார்கள். உத்தமர்கள் அலுவலகம் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சுமார் 35 கோடி வரியாக இந்தியாவுக்கு கிடைக்குமே?
எம்.ஜி.ஆர் என்ற ஹீரோயிசத்தின் காரணமாக நாம் தமிழ் நாட்டையே ஆளக் கொடுத்திருக்கிறோம். இது தான் ஹீரோயிசத்தினை நம்பியதன் விளைவு. ஹீரோ நன்றாக இருக்க வேண்டும். அதற்கு காமெடியன்களும், இதர அல்லைக்கை நடிகர்களும் ஹீரோவுக்கு உதவ வேண்டும். இதைத்தான் காலம் காலமாக சினிமா சொல்லிக் கொடுத்துக் கொண்டே வருகிறது. மற்றவர்கள் எல்லாம் வாழவே வேண்டாம். ஹீரோ மட்டும் வாழ்ந்தால் போதும். அவர் நூறு அல்ல லட்சம் பேரை வாழ வைப்பார் என ஒவ்வொரு படத்திலும் ஹீரோயிசத்துக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எம்.ஜி.ஆர் தமிழகத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுமதி கொடுத்து விட்டு எத்தனை பேரை பிச்சைக்காரனாக்கி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
\
பாகுபலி கதையில் ராஜிய பரிபாலனத்திற்கு பட்டாபிஷேகம் செய்யும் முன்பு ராஜிய யாத்திரை சென்று விட்டு வா என்கிறார் சகிக்கவே முடியாத முகமும், பாவனையும் கொண்ட ராஜமாதா ரம்யா கிருஷ்ணன். அரியணையில் குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்று கிரைண்டர் குரலில் கத்துகிறார். முதல் பாகத்தில் காலகேயனை வென்றவர் தான் மகிழ்மதியின் மன்னன் என்பதால் பாகுபலி காலகேயனை அடித்து துவைத்துக் கொண்டிருக்கும் போது முதுகிற்குப் பின்னால் இருந்து கொல்கிறான் பல்வாள்தேவன். அதையெல்லாம் விட்டு விட்டார்கள். மன்னனின் கடமை தம் குடிமக்களைக் காப்பது என்பதால், போரின் போது குடிமக்களைக் காப்பாற்றி எதிரியை துவம்சம் செய்த பாகுபலியே மன்னன் என்று அறிவித்து விட்டார் ராஜாமாதா. தொடர்ந்து ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்கிறார்.
ராஜமாதா தன் மகனுக்கு வாக்கு கொடுத்தாராம். அதுவும் எப்படி? ஓவியத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பார், அப்பெண்ணை தன் மகன் விரும்புகிறாராம், அவரையே மணமுடித்து வைப்பதாக வாக்குக் கொடுப்பாராம். அந்தப் பெண் சபையில் நான் பாகுபலியைத்தான் விரும்புகிறேன் என்கிறாள். ஆனால் நான் கொடுத்த வாக்கு என்னாவது? ராஜமாதா உடனே உனக்கு பெண் வேண்டுமா? இல்லை ராஜ்ஜியம் வேண்டுமா? என பாகுபலியிடம் கேட்கிறார். பாகுபலி நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன் என்று ராஜ்ஜியத்தை மறுக்கிறார். பல்வாள் தேவனை மன்னனாக்கி, பாகுபலியை படைத்தளபதி ஆக்குகிறார். தொடர்ந்து ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்கிறார் ராஜமாதா. இதற்கு முன்புச் சொன்ன சாசனம் என்ன ஆச்சு என்று அவருக்குத் தெரியுமா? இல்லை கதை எழுதிய ராஜமெளலியின் அப்பாவுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. சுத்த நான்சென்ஸ்.
இதுவாவது பரவாயில்லை. மன்னனைக் கொல்ல வந்தார்களாம், இதற்குக் காரணம் பாகுபலி என்கிறார்களாம். உடனே மொட்டையன் சத்தியாராஜை அழைத்துப் பாகுபலியைக் கொல்லச் சொல்கிறார் ராஜாமாதா. ராஜமாதா விசாரிக்க மாட்டார், பிறர் சொல்வதை மட்டுமே கேட்பார் என்று கேனத்தனமான கதை. புல்லரிச்சு புல்லரிச்சு சொரிய ஆரம்பித்து விட்டேன். ராமமெளலியின் கதையை எந்த வார்த்தையால் சொல்லிப் பாராட்டுவது என்றே புரியவில்லை. தன் மகன் பல்வாள் தேவனின் சூழ்ச்சி தெரிந்ததும் தேவசேனாவின் பிள்ளையை மன்னாக்குகிறார். ஆற்றில் விழுந்து ஒற்றைக் கையில் பிள்ளையை தண்ணீருக்கு மேலே பிடித்தபடி இறந்தும் போகிறார். தன் மகன் விட்ட அம்பு முதுகில் தைக்க உயிர் போகிறது ராஜமாதாவுக்கு. பிள்ளை பெரிய ஆளாகி மகிழ்மதியை மீட்கிறார். சிறை வைத்திருந்த அன்னையின் சபதத்தை நிறைவேற்றுகிறார்.
பாகுபலியும், தேவசேனாவும் ஒரே கையில் மூன்று அம்புகளை வில்லில் வைத்து விடுவார்கள் அல்லவா அது ஒரு கார்ட்டூன் புகைப்படத்தில் வந்தது. அதை அப்படியே சுட்டு விட்டார் இயக்குனர்.
பாகுபலியும், பல்வாளும் பூணூல் போட்டிருக்கிறார்கள். கழற்றி வைத்து சண்டையிடுகின்றார்கள். பூணூல் எந்தளவுக்கு முக்கியமாக இருக்கிறது என்பதையும், பூணூலின் மகத்துவத்தையும் அறிந்தவராக இயக்குனர் இருந்திருக்கிறார் என்பது இந்தப் படத்தின் ராஜதந்திரம்.
1000 கோடி கலெக்ஷன் என்கிறார்கள். அந்த ஆயிரம் கோடி எப்படி எவ்வாறு வந்தது என்று கணக்குக் கேட்டுப் பாருங்கள்? ஒருவர் பதில் சொல்ல மாட்டார். 1000 கோடி வரவு என்றால் என்ன அர்த்தமென்பது சினிமா தயாரிப்பாளர்களுக்கு நன்கு தெரியும், இவர்களுக்கு நன்கு தெரியும் என்பது இந்தியாவின் உத்தமர்கள் அலுவலகமும் அறியும்.
கோவை மணீஷ் தியேட்டரின் டிக்கெட்டில் சீரியல் நம்பர் மட்டுமே இருந்தது. மற்றபடி டிக்கெட்டின் விலை இல்லை, தேதி இல்லை. வேறு எதுவுமே இல்லை. மோடி அவர்கள் கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்றார். வெறும் டோக்கனைக் கொடுத்து லட்சக்கணக்கில் காசு வசூலிக்கும் தியேட்டர்களை கண்டு கொள்ளவே இல்லை. அரசியல், சினிமா இரண்டும் கூட்டுக்களவாணித்தனத்தின் குறியீடு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினைக் கேலிக்கூத்தாக்கும் சினிமா அமைப்பினை கண்டு கொள்ளாமல் களவாணித்தனத்தினை அரசு செய்து வருகிறது.
இரண்டரை லட்சத்துக்கு மேல் வருமானம் வந்தால் சாமானியனிடம் வரி கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தும் உத்தமர்கள் அலுவலகம் பைசாவுக்கு பெயராத சிறு பேப்பரைக் கொடுத்து வசூல் செய்யும் சினிமாக்காரர்களை ஏன் கண்டுகொள்வதில்லை என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? ரொக்கமாக கையில் காசு வைத்திருந்தால் அபராதம் போடுவோம் என்றார்களே அந்த உத்தரவுகள் எல்லாம் சினிமா தியேட்டர்களுக்குக் கிடையாதா?
சுத்த கொங்குத் தமிழனான சத்தியராஜை கட்டப்பாவின் கேரக்டரை வைத்து நன்றாக செய்திருக்கிறார் இயக்குனர். போதாத குறைக்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறார் சத்தியராஜ். திரைப்படத்தில் நீ நாய் தான் என்று அடிக்கடிச் சொல்கிறார்கள். கட்டப்பா அதற்கொரு பஞ்ச் டயலாக் அடிக்கிறார். நான் நாய் தான், மோப்பம் பிடித்தேன் என்று. விசுவாசத்தின் பெயர் அடிமை. அடிமைத்தனத்தின் பெயர் அயோக்கியத்தனம். தர்மத்தினை விசுவாசத்தின் பெயரால் அழிப்பது அயோக்கியத்தனம்.
இந்திய அரசியல் தலைவர்களிடம் இல்லாத அரிய விஷயம் விசுவாசம். விசுவாசம் இருந்தால் சாகும் வரை தொண்டன்வாகவே மட்டுமே இருக்க முடியும். எப்போதும் தலைவராக இருக்க முடியாது. பன்னீர் செல்வம் அவர்கள் விசுவாமாக இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
ஹீரோயின் செலக்சனில் முற்றிலுமாகத் தோற்று இருக்கிறார் ராஜமெளலி. முதல் பாகத்தில் ஹீரோயினாக இருக்க கொஞ்சம் கூட தகுதி இல்லாத உடல் மட்டும் சிவந்த கலரில் இருக்கும் தமன்னாவை என்ன சிந்தனையில் தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை. இரண்டாம் பாகத்தில் தேவசேனாவாக வரும் அனுஷ்காவிடம் இளவரசித்தன்மைக்கான எந்த உடல் மொழியும் இல்லை. இளவரசியின் உடல் தகுதி என்று ஒன்று உண்டு. உங்களுக்குப் புரிய வேண்டுமெனில் இதே சினிமாவில் ருத்ரம்மா தேவி என்றொரு படம் வந்தது, அப்படத்தில் ராணாவும் அனுஷ்காவும் ஒரு பாடலில் வருவார்கள். அந்தப் பாடலில் ஒரு சிற்பம் வருமல்லவா அதன் உடல் மொழியைப் பாருங்கள். அதற்குப் பெயர் பெண். சிவப்புத் தோல் எல்லாம் ஹீரோயின் என்றால். இயக்குனருக்கு தமன்னாவும், அனுஷ்காவும் போதும் போல. இயக்குனர் இன்னும் காம்ப்ளானில் இருக்கிறார். இவர் எப்போது காஃபி குடிப்பாரோ தெரியவில்லை. இன்னும் வளரணும் சாரே!
சினிமா கிராபிக்ஸ் சுத்த மட்டம். இதை விட அருமையான கிராபிக்ஸ் எல்லாம் பார்த்திருக்கிறோம். பனைமரத்தினை வளைத்து உயர எம்பி அரண்மனைக்குள் நுழைந்து சண்டை இடுகின்றார்களாம். ஒரு ராஜாவை அவ்வளவு எளிதில் அண்டக்கூட முடியாது. அந்தளவுக்கு அரண் வைத்திருப்பார்கள். ஆனால் இப்படத்திலோ போர் என்கிற போர்வையில் காமெடி செய்து கொண்டிருக்கின்றார்கள். கதையில் காமெடி, வசனத்தில் காமெடி, படமாக்கியதில் சொதப்பல் என்று அத்தனையும் சொதப்பி வியாபாரத்தில் மட்டும் வெற்றி அடைந்த ராஜமெளலிக்குப் பெயர் சினிமா வியாபாரி.
அவர் இயக்குனர் அல்ல. கலைஞனும் அல்ல. சட்டத்திற்கும் புறம்பான வழியில் பணம் சம்பாதிக்கு ஒத்துழைக்கும் எவரும் என்னைப் பொறுத்தவரை ..... எழுத விரும்பவில்லை. இதோ புகைப்படத்தில் சாட்சி இருக்கிறது. சாமானியனைக் கட்டுப்படுத்தும் அரசாங்கம் சினிமா என்கிற ஒரு சிறு கூட்டத்தினைக் கட்டுப்படுத்தவில்லை என்பதற்கான சாட்சி இது.
பாகுபலி திரைப்படத்தினைக் கொண்டாடி மகிழும் பல்வேறு உள்ளங்களுக்கு இந்தப் பதிவு வித்தியாசமானதாக இருக்கலாம். இது தான் உண்மை என்பது உங்கள் உள்ளங்களுக்குத் தெரிந்திருக்கும். உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்துப் பாருங்கள். நம்மைச் சுற்றி நடக்கும் நாடகங்களை. அதனால் நாம் என்னென்ன இழந்திருக்கிறோம் என்பதை. நம் வாழ்க்கையை நாம் வாழ இந்தச் சமூகம் விடுவதே இல்லை. ஒவ்வொரு விஷயத்திற்கு முன்னுதாரணங்களைக் காட்டி பிறர் வழி நடக்க வைக்கும் கொடூரமான சிந்தனையில் சிக்கி இருக்கிறோம் என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். பாதைகள் பல இருக்கலாம். அவைகள் தூரத்தைக் கடந்துச் செல்லத்தானே உதவ வேண்டுமே ஒழிய அதே பாதை தான் வாழ்க்கையாக இருக்கக் கூடாது. பாலம் என்பதும் பாதை என்பதும் கடக்கத்தானே ஒழிய வசிப்பதற்கு இல்லை. நாம் இன்னும் சாலையில் தான் வாழ்கிறோம். அந்தச் சாலையிலிருந்து நாம் வெளியில் வர வேண்டும்.
பாகுபலி போன்ற படங்கள் நம்மிடம் இருக்கும் பணத்தைப் பறித்துக் கொள்கின்றன. நம்மையும் கீழ்மைச் சிந்தனைகளில் சிக்க வைத்து விடுகின்றன. புரியும் தன்மை கொண்டவர்களுக்கு எளிதில் புரிந்து விடும். ஆனால் வெள்ளை மனம் கொண்டவர்களின் கதையை என்னவென்றுச் சொல்வது. பாகுபலி ஆந்திராவின் முதலமைச்சரானால் இதன் அர்த்தம் உங்களுக்குப் புரியலாம். அல்லது புரியாமல் கூடப் போகலாம். நாம் நாமாக இருக்க இது போன்ற மூளை மழுங்கச் செய்யும் படைப்புகளை நிராகரிக்க வேண்டுமென்பது எனது ஆவல்.
நான் இந்தப் பதிவில் எழுதி இருக்கும் விஷயங்கள் பல குழப்பங்களைத் தரலாம். உங்களுக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கலாம். அனைத்துக்குமான பதிலை நீங்களே உங்களுக்குள் தேடிக்கொள்ளுங்கள்.