நேற்றுக் காலையில் ஏழு மணிக்கே வேலை விடயமாக வெளியில் சென்று பத்து மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்தேன். நல்ல வெயில். சூடு தான் பிரச்சினை. கொதிக்கிறது அனல். முக்கியமான வீதிகளில் கம்பங்கூழ் பானைகள் துண்டுகள் கட்டி அமர்ந்திருக்கின்றன. ஒரு முறை திருப்பூர் கோர்ட்டுக்குச் சென்று விட்டு வரும் வழியில் கம்பங்கூழ் குடித்தேன். புளிப்பு உடலெங்கும் புல்லெரிக்க வைத்தது. ஆனால் நண்பரோ அசராமல் அனைத்தையும் குடித்தார். அப்படியே திரும்பக் கொடுத்து விட்டேன். அந்த அனுபவத்தினால் கம்பங்கூழ் என்றால் காத தூரம் ஓடிப் போ என்கிறது மனசு.
நுங்குகள் ஐந்து ரூபாயாம். வெட்டித்தருகின்றார்கள். பதனீ குடித்துப் பார்க்கலாம் என்று கொஞ்சம் வாங்கி வாயில் வைத்தால் சாக்கரீன் சுவை மிளிர துப்பி விட்டேன். ஒரு முடை நாற்றம் வேறு வந்தது. அதில் நுங்கைச் சீவிப் போட்டு மட்டை மட்டையாகக் குடிக்கின்றார்கள். ஆனால் எனக்குத்தான் ஆகவில்லை. நுங்கை வைத்து இப்படி ஒரு பிசினஸ் செய்யலாம் என்பதே ஆச்சரியம் தான். ஆனால் பாருங்கள் வருடம் முழுமைக்கும் நுங்கு கிடைக்கிறது. அதில் தான் ஏதோ ஒரு உள்குத்து இருக்கிறது. அது என்னவென்று புரியமாட்டேன் என்கிறது. ஒரு தடவை வீட்டுக்கு வந்த உறவினர் விழா நாட்களில் கோவையில் சாணி விற்றே கோடீஸ்வரனாகலாம் போலவே என்று சொல்லிக் கொண்டிருந்தார். வீட்டு வாசலில் தெளிக்க சாணி வாங்க மனையாள் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள்.
(திருமணத்திற்கு முன் இப்படி இருந்த நான்)
வீட்டுக்கு வந்து அயர்ந்து போய் படுத்து விட்டேன். வெயிலில் கருவாடு போலக் காய்வது என்பது சாதாரணமா? பசங்க டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். மதியம் மூன்று மணி போல நீயா? நானாவில் மறதி கணவர்கள் மனைவிகள் என்றொரு தலைப்பில் கணவர்கள் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள் பெண்கள். இதெல்லாம் சகஜம் தானே? அதைப் பார்த்து மனையாள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
தன் குடும்ப விஷயத்தை, அதுவும் தன் கணவனின் ரகசியத்தை வெளியில் கசிய விடலாமா என்றெல்லாம் தெரியாமல் பிளந்து கட்டிக் கொண்டிருந்தனர். மறதி என்பது மனிதனுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்பதில் யாருக்கேனும் எள்ளளவாவது சந்தேகம் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை உடனடியாக மறந்து விடுங்கள். சந்தேகம் இருக்கவே கூடாது. நல்லது நடந்தால் நினைக்கும் மனது கெடுதல் நினைந்தால் மறக்கத்தான் நினைக்கும் அல்லவா? அதைத் தவறு என்கிறார்கள் இல்லத்தரசிகள். இருக்கட்டும்.
பெண்கள் எப்போதுமே குறை பேசி பழக்கமானவர்கள். நிறையை மட்டும் பார்க்காமல் குறையை மட்டுமே குத்திக் காட்டிக் கொண்டிருப்பார்கள். குறை சொன்னால் தான் நிவர்த்திச் செய்து கொள்ளலாம். ஆகையால் அதுவும் தவறில்லை. சரி கணவனிடம் தானே பேசுகின்றார்கள். தங்கள் தகப்பன், தாய், அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளை விட்டு விட்டு வந்திருக்கின்றார்கள். பேசினால் தப்பில்லை. அடித்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். குடும்பத்தின் ஆணி வேர் அல்லவா பெண்கள்? இப்படிச் சரண்டர் ஆகி விட்டாயே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. எவன் எவனுக்கோ அடிபணிந்து வேலை செய்யும் போது மனைவியிடம் சரண்டர் ஆவது ஒன்றும் தப்பில்லை என்கிறேன். சரிதானே சரண்டரானவர்களே? அடக்கம் தான் அமைதிக்கு வழி! (தத்துவங்களில் சொல்லப்பட்டிருக்கிறது)
காதலின் மோக லாகிரியில் சிக்கி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறும் பெண், காதலின் உச்சத்தை நுகர்ந்து விட வாழ்க்கையெனும் மோக வளைக்குள் நுழைகின்றாள். வாழ்க்கையின் வாசலில் வசந்தம் தன் அழகான வரவேற்பைத்தரும். அந்த வரவேற்பில் மகிழ்ந்து வாழ்க்கை எனும் வீட்டுக்குள் நுழைந்த பெண், நாளடைவில் காதலின் மோக லாகிரியிலிருந்து விலகி, இயற்கையின் மகத்துவமான தாய்மை எனும் அவதாரமெடுக்கின்றாள்.
கண்ணதாசன் கூட சொல்வார்,”இறைவன் ஒருவனின் ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் தாயோ ஒருவனின் ஆத்மாவுக்கும், உடலுக்கும் பொறுப்பேற்றுக் கொள்கின்றாள்”. இதை விட ஒரு பெண்ணின் மகத்துவத்தை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.
தாய்மையின் உயர்வைக் காட்டும் ஒரு கதையைக் கூட அர்த்தமுள்ள இந்து மதத்தில் எழுதி இருப்பார். கதையைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆகவே மனையாளிடம் மதி மயங்கிக் கிடப்பது (இதைத்தான் மறதி என்கிறார்கள்) ஒன்றும் தவறில்லை.
மனையாளுடன் சேர்ந்து நானும் நீயா நானாவைப் பார்க்க ஆரம்பித்தேன். அதிலொரு பெண்மணி தன் கணவன் தங்கள் கல்யாண நாளைக் கூட நினைவில் வைத்திருப்பதில்லை எனவும், நான் முதன் முதலாக இந்த வீட்டுக்கு வந்தது அந்தத் தேதியில்லையா? அதைக் கூட அவர் மறந்து ஒரு வாழ்த்துக்கூட சொல்வதில்லை என்று வேதனையாகச் சொன்னார். எனக்கு அந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை. மறக்கவா முடியும் அந்தத் தேதியை?அருகில் அமர்ந்திருந்த மகள், ”அப்பா! உங்கள் கல்யாண தேதி என்னப்பா?” என்று கேட்க, நானும் உடனே வெகு சந்தோஷமாக, ”செப்டம்பர் 31” என்றேன்.
(திருமணத்திற்குப் பிறகு இப்படி ஆகி விட்டேன். கவனிக்க மீசை காணாமல் போய் விட்டது)
மகள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் மனைவியோ டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் எழுந்து கடு கடுவென அடுப்பங்கரைக்குள் சென்றாள். ”இந்தக் கோபிநாத்துக்கு ஏன் தான் இந்த வேலையோ தெரியவில்லை? நாசமாப் போறவன் ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமாக, எரிச்சலைக் கிளப்பி விடுகின்றான்” என்று அவரை ஒருமையில் திட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவளுக்கு என்ன ஆனது என்று இதுவரைக்கும் தெரியவில்லை.
நான் தேதி மட்டும் தான் சொன்னேன். அதுக்கு எதுக்கு இவ்வளவு கோபம் கொள்கிறாள் இவள்? ஆமாம் செப்டம்பர் 31 தேதி இருக்கிறது தானே நண்பர்களே?