ரியல் எஸ்டேட் தொழில் தற்போதைய சூழலில் கடலுக்குள் அகப்பட்ட தோணி போல சிக்கிக் கொண்டிருக்கிறது. ரெரா என்கிறார்கள், ஜிஎஸ்டி என்கிறார்கள் இன்னும் என்னென்னவோ சொல்கிறார்கள். மணல் விலையை யார் நிர்ணயிக்கின்றார்கள் என்பது தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது போல மர்மமாக இருக்கிறது. அரசு ஒரு விலை சொல்கிறது, மார்க்கெட்டில் ஒரு விலை விற்கப்படுகிறது. வீடு வாங்கவோ அல்லது வீட்டு மனை வாங்கவோ விரும்பினால் குதிரைக்கு கொம்பு முளைக்கிற கதை தான் இனி. மிடில் கிளாஸ் மக்களின் அத்தியாவசிய தேவையான வீடு இனி அவர்களுக்கு வசப்படுமா என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.
இத்தனை பிரச்சினைகளுக்கும் இடையில் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. இரண்டொரு நாட்களுக்கு முன்பு அனுமதி பெறப்பட்ட மனைக்கு பட்டா தரமாட்டேன் என்று ஒருவர் அணுகினார். என்னவென்று பார்த்தால் எனக்கு தலையே கிறுகிறுத்தது. சுமார் 25 வீட்டு மனைகளுக்கான பட்டா பிரச்சினையாக இருக்கிறது. தற்போது அரசு நிலம் என்று வருகிறது. வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் ரிட்டயர்ட் ஆகி வீட்டில் இருக்கின்றார்கள். இதைச் சரி செய்து தர முடியுமா? என்றுக் கேட்டிருக்கின்றார்கள்.
ஒரு ஊரில் பெரும் தனக்காரர் இருந்திருக்கிறார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தன. அவைகளில் அவர் விவசாயம் செய்து வந்தார். விவசாயம் செய்வதற்கு ஏதுவாக தன் நிலத்தில் பெரிய ஏரியைக் கட்டி அதில் தண்ணீர் தேக்கி பரம்பரை பரம்பரையாக தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வந்திருக்கிறார். தன் நிலத்தில் விளையும் விவசாய பொருட்களை அருகில் இருக்கும் ரெயில்வே ஸ்டேசனுக்கு கொண்டு சென்று ரயிலில் ஏற்றி பக்கத்து ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பிக் கொண்டிருந்திருக்கிறார். இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தன. திடீரென்று ஒரு நாள் மழை கொட்டோ கொட்டென்று கொட்ட ஏரி நிரம்பி உடைப்பெடுத்து வழிந்து அது ரயில்வே தண்டவாளங்களைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் விட்டன. ரயில் பாதை முற்றிலுமாக அழிந்து விட்டது. அரசாங்கம் இவரின் மீது ஏரியைக் கவனமாக பராமரிக்காத காரணத்தினால் உடைப்பு ஏற்பட்டதாகவும், ஆகவே இந்த இழப்புக்கு அவர் நஷ்ட ஈடு தர வேண்டுமென்று வழக்குத் தொடுத்தது.
அந்த ஊரில் புகழ் பெற்ற வக்கீல் ஒருவரிடம் வழக்கு விவரத்தினைத் தெரிவித்து ஜெயித்துக் கொடுக்கும்படியும், அட்வான்ஸாக பணமும் கொடுத்து விட்டு வந்து விட்டார் விவசாயி. நீண்ட நாட்களாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே இல்லை. திடீரென்று ஒரு நாள் வக்கீலுக்கு வழக்கு விசாரணைக்கு வரப்போகிறது என அறிவிப்பு வர ஆள் சரியான டென்ஷன் ஆகி விட்டார். வழக்கு விபரங்கள் ஏதும் இல்லை, ஆவணங்கள் ஏதும் இல்லை. வழக்குதாரர் ஊரில் இருப்பதால் உடனடியாக வரச்சொல்லவும் முடியவில்லை. என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்தார். இரவெல்லாம் தூக்கமில்லாமல் சிந்தனையில் இருந்தவர், விடிகாலையில் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு வழக்கு பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டு சமையற்காரன் நேரமாகி விட்டது எனவும், சாப்பிட வரும்படியும் அவரை அழைக்க, வருகிறேன் என்றுச் சொல்லி மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். சிறிது நேரம் சென்ற பிறகு மீண்டும் சமையற்காரன் இவரை சாப்பிட அழைக்க, அவனிடம் இவர் எரிந்து விழுந்திருக்கிறார். வழக்கு விபரத்தைச் சொல்லி என்ன செய்வதென்று தெரியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன் உனக்கு நான் சாப்பிடுவது தான் முக்கியமா? என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த சமையற்காரன் எது முன்னாலே என்று கேட்டுப் பாருங்கள். வழக்கே முடிந்து விடும் என்றுச் சொல்ல வக்கீலுக்கு பொறி தட்ட குஷியாகி விட்டார். ரயில்வே நிலையம் அமைப்பதற்கு முன்பு ஏரி கட்டப்பட்டதா? இல்லை ரயில்வே நிலையம் வந்த பிறகு ஏரி கட்டப்பட்டதா? இந்தக் கேள்விக்குப் பதில் தான் வழக்கின் தீர்ப்பும். எந்த வித இழப்பீடும் தர வேண்டியதில்லை என வழக்கில் வெற்றி பெற்று விட்டார் அந்த வக்கீல். சட்டப்புத்தகத்தைப் படித்து பெரும் புகழ் பெற்றவரானாலும், அவரின் சமையறகாரனின் புத்திசாலித்தனம் தான் அந்த வழக்கில் அவர் வெற்றி பெற உதவியது.
இந்தக் கதையில் இருந்து ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ளலாம். வழக்கே ஆனாலும் சட்டப்புத்தகத்தினால் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது. அனுபவம் என்றொரு விஷயம் இருக்கிறது. அந்த அனுபவ அறிவு தான் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வினைத் தரும்.
ரியல் எஸ்டேட் தொழிலில் பலரும் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என ஆசைப்பட்டு வருகின்றனர். கொஞ்ச நாளில் ச்சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்பதாய் கருதத் தொடங்கி விடுகின்றனர். நொடிக்கு நொடி மாறும் உலகம் இது. இந்த நிமிடத்தில் இருக்கும் ஒரு விஷயம் அடுத்த நொடியில் இருப்பதில்லை. ரியல் எஸ்டேட் தொழில் கற்றுக் கொள்வதல்ல. ஒவ்வொரு சம்பவத்திலும் கற்றுக் கொள்பவை.
ஆயிரக்கணக்கில் பத்திரங்கள் படித்திருக்கிறேன். கோயம்புத்தூர் நகரின் ஒட்டு மொத்த சொத்தின் விபரமும் என்னிடத்தில் இருக்கின்றன. ஒரு சொத்தின் தன்மையை நான் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்தே அறிந்து கொண்டு விடுவேன். லீகல் சரி செய்யலாம். ஆனால் நடை முறை என்பது வேறு. தமிழகத்தின் ரெவின்யூ டிபார்ட்மெண்ட் சீரமைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ரெவின்யூ டிபார்ட்மெண்டில் இருப்போருக்கு எல்லா விஷயமும் தெரிந்து விடுவதில்லை. ரெவின்யூ டிபார்ட்மெண்ட் என்பது ஒரு கடல். என் அறிவு என்பது அதில் இரு துளி மட்டும் தான். பிற விஷயங்கள் அனுபவத்தில் மட்டுமே தான் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் விஷயங்களைத் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும்.
வெறும் ஏட்டறிவு மட்டும் இருந்தால் அதனால் பிரயோஜனம் ஏதுமில்லை என்பதைத்தான் அந்த சுவாரசியமான வழக்குச் சொல்கிறது.
குறிப்பு : மேலே இருக்கும் வழக்கு விபரம் அப்துற் றஹீம் அவர்களின் ’எண்ணமே வாழ்வு’ புத்தகத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது. நன்றி!
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.