குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, July 15, 2017

முதல் தேர்தலில் வெற்றியடைந்த கதை

மாலை நேரம், குழந்தைகள் இருவரும் பள்ளியிலிருந்து வந்தனர். ரூடோஸின் அட்டகாசம் ஆரம்பித்து ஒரு வழியாக இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். பையன் அப்பா என்று இழுவை போட ஆரம்பித்தான். மனையாள் மெதுவாக ஆரம்பித்தாள்.

”ஏங்க (எத்தனை நாளைக்குத்தான் ஏங்குறதோ தெரியவில்லை?), ஸ்கூலில் சேர்மன் தம்பியை ஏ.எஸ்.பி.எல் பதவிக்கு தேர்தலில் நிற்க வேண்டுமென்று சொல்லி இருக்கின்றாராம்? என்னங்க செய்யறது?” என்று இழுத்தாள்.

“அவனுக்கு அனுபவமாக இருக்கும் கோதை. நிக்கட்டுமே?” என்றேன்.

பையனுக்கு குஷி ஆகி விட்டது. அப்போதைக்கு சொல்லி விட்டேன். இருந்தாலும் மனதுக்குள் ஒரு நெருடல். நன்றாகப் படிக்கும் பையன். பதவியில் அமர்ந்தால் படிப்புக் கெட்டு விட்டால் என்ன செய்வது என்ற சிந்தனை. அப்படி ஏதேனும் நேர்ந்தால் பார்த்துக் கொள்ளலாம். அவனுக்கும் தேர்தல் பற்றிய அனுபவம் கிடைத்தால் அது நல்ல விஷயம் தான் என்று நினைத்துக் கொண்டேன். இருப்பினும் அவன் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால் என்ன நினைப்பானோ? என்றொரு பதட்டமும் ஏற்பட்டது.

மறு நாள் மாலையில் “அப்பா, காய்கறிகளில் ஏதாவது ஒரு காயைத்தான் சின்னமாகத் தேர்ந்தெடுக்கச் சொல்லி இருக்கின்றார்கள்,  எனது போட்டோவுடன், அருகில் சின்னத்தை வைத்து நோட்டீஸ் தயார் செய்யச் சொல்லி இருக்கின்றார்கள்” என்றுச் சொன்னான்.

என்னைப் பொறுத்த வரையில் தேர்தலில் சின்னம் என்பது மக்கள் மனதில் பதியக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். இரட்டை இலை, கைச் சின்னம், உதய சூரியன் ஆகியவை அதனால் தான் மக்கள் மனதில் பதிந்து விட்டன. ஆகவே பையன் முதன் முதலாக பள்ளியில் நடக்கும் தேர்தலில் நிற்கின்றான். ஆகவே சின்னம் வெகு முக்கியம் என்று திட்டமிட்டேன். காய்கறிகளில் தான் சின்னம் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டது. பல சிந்தனைகளில் ஒரு வழியாக ஒரு சின்னத்தைத் தேர்ந்தெடுத்தேன்.  

ரெட் சில்லி - சிவப்பு மிளகாயைத் தேர்ந்தெடுத்தேன்.  அடியேன் கம்யூனிஸ்ட் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதைய அரசியல்வாதிகள் பலர் பிரதமரை விமர்சித்தால் கூட தேசத்துரோகி என்கிறார்கள். சிவப்பு உடை உடுத்தி இருந்தாலே கம்யூனிஸ்ட் என்கின்றார்கள்.

பையனை போட்டோ ஸ்டுடீயோவிற்கு அழைத்துச் சென்று போட்டோ எடுத்து அதனுடன் ரெட் சில்லி சின்னைத்தை இணைத்து சிறிய நோட்டீஸ் தயாரித்து கொடுத்து அனுப்பி வைத்தாகி விட்டது.

பையனே பிரச்சாரம் செய்து கொள்ள வேண்டுமென்பதால் அவன் பிரச்சாரத்திற்காக சிறு உரையும் தயார் செய்து, அதை எப்படிப் பேச வேண்டுமென்று பயிற்சியும் கொடுத்து இருந்தேன்.

தேர்தல் அன்று மாலையில் ஓட்டு போட்டு விட்டு வீடு வந்த போது, ”அப்பா, ரிசல்ட் என்னாகும் என்று தெரியவில்லை” என்றுச் சொல்லிக் கொண்டிருந்தான். நிவேதிதா அண்ணன் தான்பா ஜெயிப்பான் என்றுச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

ரிசல்ட் வெளியிட மூன்று நாட்கள் ஆகி விட்டன. எனக்குள் பதட்டம் அதிகமாயிருந்தது. ரிசல்ட் அன்று கூட காலையில் பதட்டத்துடன் தான் இருந்தேன். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. முதன் முதலாக தேர்தலில் போட்டி இடுகிறான். வெற்றி பெற்றால் அது அவனின் நினைவலைகளில் அழிக்க முடியாத சுவடாக நின்றிடுமே என்றொரு அற்ப சந்தோஷம் எனக்கு. ஆனால் என்ன நடக்கும் என்று தெரியாது.

மாலையில் பள்ளியிலிருந்து வீடு வந்த பையன், அப்பா ஜெயித்து விட்டேன் என்று மகிழ்ச்சியில் திளைத்திருந்தான். விஷயம் என்னவென்றால் பள்ளியின் எஸ்.பி.எல்லை விட இரு நூறு ஓட்டுக்கள் இவனுக்கு அதிகம் கிடைத்திருக்கின்றது. ரித்திக் தன்னுடன் போட்டி போட்ட இரண்டு சக மாணவர்களை விட 400 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தான்.

பதவி ஏற்புக்காக சிறு விழா நடைபெற்று ஏ.எஸ்.பி.எல்லாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றான்.

”யார் எதைச் சொன்னாலும் கோபப்படாதே. சரி, ஆகட்டும், பார்க்கலாம் என்ற வார்த்தைகளைத் தவிர வேறோன்றும் சொல்லி விடாதே” என்று அவனிடம் சொல்லி இருக்கின்றேன்.

1 comments:

ராஜி said...

சரி ஆகட்டும்

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.