நீ எப்போதுமே தனியாள் என்பதை நினைவில்
வைத்துக் கொள். உனது பிரச்சினையும், மகிழ்ச்சியும், வலியும் உன்னை மட்டுமே
சார்ந்தது. அதை வேறு எவரும் உணர்ந்து கொள்ளக் கூட முடியாது. உன் வாழ்க்கைப்
பயணத்தில் கூட வருபவர்கள் எவரும் நிரந்தரம் இல்லை என்பதை நீ முடிவு கட்டிக் கொள்ள
வேண்டும். வேறு யாரும் உனக்கு எந்த வித காரியத்தையும் பயனின்றி செய்ய மாட்டார்கள்
என்பதை நீ நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வரிகளை
நான் மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறேன்.
உங்கள் நண்பர் ஜஹாங்கீர் ஆலம்
பற்றி படிக்கும் போது எனக்கு என் நண்பன் ஞாபகம் வந்தது. அவர் எப்படி இறந்தார்
என்று பதிவில் இல்லையே. அல்லது உங்களுக்கு தகவல் தெரியவில்லையா?
தாெடர்ந்து
எழுதுங்கள். நன்றி.
கார்த்தி
01/03/2017
கார்த்திக்,
தங்களின் கடிதத்துக்கு நன்றி.
பெரிய கோடீஸ்வரன் வீட்டுக் குழந்தைகள் எப்படியெல்லாம் வளர்க்கப்படுமோ அப்படித்தான் வளர்ந்தான் என் நண்பன். அவனுக்கு கிடைக்காத ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம். அவனது அம்மா அவன் மீது கொண்ட பாசம் அளவிட முடியாதது. பையன் உருப்பட மாட்டேன் என்கிறானே என்று அவனின் அப்பா அவன் மீது கோபம் கொண்டிருந்தார். இவர்களுக்குள் நான் சிக்கி இருந்தேன்.
ஆலம் நிறைய சிகரெட் குடிப்பான். அனைத்தும் காட்டம் மிகுந்த ஃபாரின் சிகரெட். அவனுக்குள் காதல் தோல்வி என்றொரு நிறைவேறாத சோகம் ஒன்றிருந்தது. அது யார்? ஏன் அப்படி ஆனது என்ற விஷயமெல்லாம் எனக்கு நன்கு தெரியும். அந்தக் காதல் விபரீதங்களைக் கொண்டு வந்து சேர்த்து விடும் அளவுக்கு தாக்கமுடையது. பணக்காரன் ஏழை என்கிற வித்தியாசத்தைத் தாண்டியும் ஒரு சில காரணிகள் அந்தக் காதலுக்கு இருந்தது. காதல் என்பது எல்லைகளற்ற உணர்ச்சி. அதை அடக்கி ஆள்வது என்பது மனிதனால் முடியாத ஒன்று. இயலாமையால் விட்டு விட நேரிடலாம். ஆனால் அந்த நிறைவேறாத காதலினால் எண்ணற்ற அனர்த்தங்கள் பிற்காலத்தில் உருவாகி வாழ்க்கையை சிக்கலானதாக்கி விடும். அவன் தன் காதல் தோல்வியை சிகரெட் புகை போக்கி விடும் என்று நினைத்தான். அதைத்தான் அவை செய்தன. அம்மா தான் போனில் ”அவன் இறந்து விட்டான் புற்று நோய்” என்றார்கள். மனது வலித்தது.
அவனுக்குப் பிடித்த சிகரெட் என்னையும் பிடித்திருந்தது. ஒரு நாள் மாலை நேரத்தில் அதுவும் என்னிடமிருந்து விடைபெற்றது. தெரிந்தோ தெரியாமலோ ஒட்டிக்கொள்ளும் பழக்கத்தை அவ்வளவு எளிதில் மனது விட்டு விட ஏற்றுக் கொள்ளாது. அதன் பின் விளைவுகளை புத்தியில் உரைக்கும் படி உணரச் செய்தால் மனது எங்கோ ஓடி ஒளிந்து கொள்ளும். அந்த உரைக்கும்படி சொல்வது எப்படி என்பது தான் தந்திரம்.
நான் வேலை நிமித்தமாக வெளியூர் வந்து விட்டேன். அதன் பிறகு அவனுடனான தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு இருந்தது. ஊருக்குச் செல்லும் போதெல்லாம் அவன் வீட்டினைக் கடக்கும் போது அவனுடனான நினைவுகள் நெஞ்சில் அழுந்திக் கொள்ளும். காலம் அதற்கான மருந்தினை எனக்குத் தந்து இருக்கிறது. எதுவும் நிரந்தரம் இல்லையே. அந்த உண்மை உரைக்க ஆரம்பித்த பிறகு மனது இலேசாகி விட்டது.
அஹமத் புக்காதீர் - எனக்குப் பிடித்த அரபி பாடகர். அவரின் லாஸ்ட் ப்ரீத் பாடல் தான் நெடுவாசல் கிராமத்தின் கடைசி மூச்சு என்கிற வீடியோவின் பின்னனியாக ஒலிக்கிறது. மனதை உருக்கும் அற்புதமான குரல். டன்டனக்க டனக்கு நக்கா கும்மு கும்மு இசை கருவிகள் இல்லாமல் வெறும் ஹம்மிங்க் சவுண்டுடன் அழுத்தப்பட்ட ஸ்ருதியுடன் அற்புதமாக உருகி இருப்பார்.
இதோ அந்தப் பாடல்.
மான் வகையறாக்கள் அஹமத் புக்காதீரைக் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதைத் தமிழில் கொண்டு வருவதுதான் அவர்களுக்குப் பிரச்சினையாக இருந்திருக்கும் போல. இவர்கள் எல்லாம் அப்படியே காப்பி அடிப்பதில் மன்னர்கள் அல்லவா?
அஹமத்தின் ஃபர்கிவ் மீ என்றொரு அற்புதமான பாடலை கீழே இருக்கும் இணைப்பில் கேளுங்கள். படத்தொகுப்பு கண்ணீரை வரவழைத்து விடும். ஆனால் இப்பாடலில் இருக்கும் க்ரூரம் கொடுமையானது. பாடலைப் பாருங்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரியும். பிச்சை போடுவது கூட க்ரூரம் என்கிறேன் நான். ஒரு சில விஷயங்கள் மனித தன்மை கொண்டதாக இருந்தாலும் இரக்கம் என்பது பிறரின் மீது செலுத்தும் ஆகப் பெரிய குற்றச் செயல் என்றே நினைக்கிறேன்.
தன் மானத்தைக் கீறி விடும் எந்த ஒரு மனிதாபினச் செயலானாலும் அது க்ரூரமே !
எனக்கு இதைப் போன்ற அனுபவங்கள் பல ஏற்பட்டன. ஒரே ஒரு தடவை பேருந்தில் தட்டுத் தடுமாறி ஏறி உட்கார்ந்தேன். அருகில் இருந்த ஒருவர் 100 ரூபாயைக் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னார். புரிகிறதா எனது இந்த பதிவின் அர்த்தம். இதைத்தான் கொடூரம் என்கிறேன்.
இந்தியாவின் வளர்ச்சி என்கிற பெயரில் இந்தியாவிற்கே உணவளிக்கும் எங்கள் தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை அழித்திட முனைந்திருக்கும் இந்திய அரசே! ஆளும் அதிகாரவர்க்கதினரே!
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் யூத இனத்தை கேஸ் சாம்பரில் குவித்து கொன்றொழித்தானே அதைப் போல எங்களையும் கேஸ் என்கிற பெயரில் கொல்லப் போகின்றீரா?
எங்களுக்கு நல்லது செய்வீர்கள் என்று நம்பித்தானே ஓட்டுப் போட்டோம் எங்கள் உயிரைப் பறிக்க முதுகில் குத்திக் கொல்ல வருவீர்கள் என்று நினைக்கவில்லையே?
வீடு வீடாக வந்தீர்களே! நாங்கள் உங்களை எங்கள் பிரதி நிதியாகத்தானே பார்த்தோம் ஆனால் எமதர்மனின் பிரதிநிதிகளாக எப்போது மாறினீர்கள்?
இரத்தமும் சதையும் எலும்பும் நிறைந்த உங்கள் உடம்புக்குள் இதயம் என்று ஒன்று இல்லாமல் போய் விட்டதா?
ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் ஒரு ஊர் அழியலாம் என்கிறாரே ஒருவர், எங்கள் குழந்தைகளையும் எங்களையும் கொன்று விட முடிவெடுத்து விட்டுத்தான் பேசுகின்றீர்களா?
உங்களிடம் ராணுவம் இருக்கிறது, போலீஸ் இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது. எங்களிடம் இயலாமையும் கண்களில் வழிந்தோடும் கண்ணீரும் தான் இருக்கிறது இந்திய அரசே!
உலகத்தின் ஒப்பற்ற நாகரீக தமிழர்களை இருக்க இடமில்லாமல் அழித்து விட முயன்று விட்டீர்களா? தமிழும் தமிழனும் உங்களுக்கு என்ன கெடுதலைச் செய்தார்கள்?
நம்பி நம்பி கெட்டவர்கள் நாங்கள். இப்போது நாங்கள் இருக்கும் இடத்தையும் அழித்து எங்களை நாடில்லா வீடில்லா மனிதர்களாக ஆக்கப் போகின்றீர்களா?
நாங்கள் வாழும் இடத்தையும் பறித்துக் கொண்டு எங்களையும் விரட்டி அடிக்கப் போகின்றீர்களா?
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் முசோலினிக்களும் இருந்த இடம் தெரியாமல் அழிந்தார்களே. வரலாற்றினை மறந்தா போனீர்கள்?
நேதாஜி அழைத்தார் என்பதற்காக உயிருக்கு அஞ்சாமல் வெற்று நெஞ்சினைக் காட்டி துப்பாக்கிக் குண்டுகளை எங்கள் நெஞ்சில் பெற்று மண்ணோடு மண்ணாய் செத்துப் போன வரலாறு எங்களுக்கு உண்டு.
எங்கள் வாரிசுகளுக்காக எதிர்காலத்தை தேக்கி நிற்கும் சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக நாங்கள் எங்கள் உடம்பில் இறுதி மூச்சு இருக்கும் வரை அஹிம்சா வழியில் போராடுவோம்.
நெடுவாசல் கிராமம் இந்தியாவின் தலைப்புச் செய்தியாக மாறும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. எனது ஊர் அது. நான் பிறந்த ஊர். எனது தந்தை மாணிக்கதேவர், அவரின் தகப்பனார் அருணாசலத்தேவர், அவரின் தகப்பனார் நாடதேவர் இப்படியாக வாழையடி வாழையாக வாழ்ந்த ஊர். எங்கள் குடும்பத்திற்கு நாடி வீடு என்றொரு பட்டப்பெயரும் உண்டு. எனது வீட்டுக்கு முன்னால் நெடுவாசல் கிராமத்தின் தெய்வமான நாடியம்மன் இருக்கிறார். நெடுவாசல் திருவிழா சுத்துப்பட்டு ஊரெங்கும் புகழ் பெற்றது. படத்தேர் திருவிழாவின் அசத்தல் நிகழ்ச்சி.
நெடுவாசலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் கீழே இருக்கும் கூகுள் மேப் இணைப்பினைக் கிளிக் செய்து சுற்று வட்டாரங்களைப் பாருங்கள். எங்கெங்கும் பசுமை மண்டிய விவசாய பூமி எம் ஊர்.
என் சிறு வயதில் ஓ.என்.ஜி.சி வண்டிகள் அடிக்கடி வந்து செல்லும். வெடி வைப்பார்கள். வெடிக்கும் போது நடக்கக்கூடாது என்பார்கள். நாடங்குளத்தருகில் தான் மண்ணெண்ணெய் டெஸ்ட் செய்தார்கள். அப்போதெல்லாம் இந்தக் காலத்தில் இருப்பது போன்று டெக்னாலஜி வளர்ச்சி ஏதும் இல்லை. அரசாங்கம் மண்ணெண்ணெய் டெஸ்ட் செய்கிறது என்ற பெருமையில் மட்டுமே ஊர் மக்கள் இருந்தார்கள். நம்ம ஊரில் மண்ணெண்ணெய் இருக்கிறதாம் என்ற பெருமை மட்டுமே. ஆனால் அதனடியில் கொலைகார எண்ணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவில்லை. அந்தளவுக்கு அப்பாவித்தன்மை கொண்டவர்கள் எம் மக்கள். நெல், உளுந்து, நிலக்கடலை, எள், சிறுதானியப் பயிர்கள், மா, பலா, வாழை, காய்கறிகள் என எங்களூரில் விளையாத உணவுப்பொருட்களே இல்லை எனலாம். தென்னந்தோப்புகள் அதிகம். தேங்காய்கள் அதிகம். உலகெங்கும் நாங்கள் விளைவிக்கும் விவசாயப்பொருட்கள் உண்ணப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் வறட்சி மாவட்டம் என்பார்கள். ஆனால் நெடுவாசல் காவிரி ஆற்றின் கடைமடைப் பகுதி. காவிரி ஆறு நெடுவாசலின் கிழக்கே செல்கிறது. ஊருக்கே உணவளிக்கும் உன்னத ஊர் நெடுவாசல்.
எனது சகோதரி ஜானகியும் சித்தி செவையாளும் போராட்டக்களத்தில்
எக்கானமிக்ஸ் டைமில் 2016ம் வருடம் ஒரு செய்தி வெளியானது. மத்திய அரசின் ஓ.என்.ஜி.சியால் கண்டறியப்பட்ட எண்ணெய் வளமிக்க பகுதிகளில் ஆயில் எக்ஸ்புளோரேஷனுக்காக வெளி நாட்டு நிறுவனங்களை ஏலத்தில் பங்கு கொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற நாடுகளில் ரோடு ஷோவை நடத்தி வந்திருக்கிறது. இத்தனை செலவு செய்து விட்டு சும்மா இருக்குமா அரசு? அதன் பிறகு நடத்தப்பட்ட ஏலத்தில் தற்போது ஜெம் லேபரட்டரீஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்றுச் சொல்லி மீத்தேன் வாயுவை எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான பகுதி என்று மத்திய அரசுக்குத் தெரியாதா? இல்லை பாரதப்பிரதமருக்குத்தான் தெரியாதா? எல்லாம் அனைவருக்கும் தெரியும். உலகிற்கே உணவளிக்கும் பகுதி இது என்று அனைத்து அரசியல்தலைவர்களுக்கும் நன்கு தெரியும். தெரிந்தும் செய்கின்றார்கள் என்றால் என்ன காரணம்?
போராட்டக்களத்தில் இருப்பவர்களை பிரிவினை வாதிகள் என்கிறார் பாஜகவின் ஹெச்.ராஜா. இல.கணேசன் ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமெனில் ஒரு மாவட்டம் தியாகம் செய்யணும் ஒரு மாவட்டம் நன்றாக இருக்க வேண்டுமெனில் ஒரு கிராமம் தியாகம் செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றார். பாஜகவின் மாநிலத் தலைவர் இதுவரை அமைதியாக இருந்து விட்டு இப்போது போராடுகின்றார்கள் என்கிறார். ஆக இவர்களின் பேட்டியை வைத்துப் பார்க்கும் போது நெடுவாசலை சுடுகாடாக்க முடிவே செய்து விட்டார்கள் என்றே தெரிகிறது. மத்திய அமைச்சர்கள் மக்களின் விருப்பமின்றி எந்தத் திட்டமும் செயல்படுத்த மாட்டோம் என்கிறார்கள். ஆனால் ஆளும் பிஜேபி அரசின் அங்கத்தினர்கள் மத்திய அமைச்சர்களின் பேச்சுக்கு எதிராகப் பேசுகின்றார்கள். போராடினால் தேசத்துரோகி என்கிறார்கள் பிஜேபியினர்.
ஒரு ஊரையே அழித்துத்தான் பிறரின் அடுப்பு எரிய வேண்டுமா? ஊர் மக்களைக் கொன்றொழித்துதான் இந்திய மக்கள் உணவு சமைக்க வேண்டுமா? இப்படியெல்லாம் பேச இல.கணேசன் அவர்களின் மனது என்ன கல்லா? ஏன் இத்தனை வன்மமாகப் பேசுகின்றார் என்றே தெரியவில்லை. உணவை விட இயற்கை எரிவாயு தான் அவசியமா? விவசாயத்தை விட அடுப்பு எரிக்கவும், கார்கள் ஓட்ட பெட்ரோல் தான் அவசியமா? இல.கணேசன் அவர்கள் உணவுக்குப் பதிலாக இயற்கை எரிவாயுவை உண்கின்றாரா? அவர் குடும்பத்தாரும் அப்படித்தான் இயற்கை எரிவாயுவை குடிக்கின்றார்களா? என்று தெரியவில்லை.
மத்திய அரசு மக்களை எப்படி ஏமாற்றுகிறது என்பதை புதிய தலைமுறையில் வெளிவந்திருக்கும் இந்தச் செய்தி அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது.
செய்தி கீழே:
மத்திய அரசின் மக்கள் நயவஞ்சகத் திட்டம்
ஷேல் கேஸ் திட்டத்தை, புதுபுதுப் பெயர்களில் செயல்படுத்த, முயற்சி தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு குத்தாலம் உள்ளிட்ட மிகச்சில இடங்களில் ஷேல் கேஸ் எடுக்கப்போவதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது புதிய தலைமுறை. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட விழிப்புணர்வு மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பால், திட்டத்தை நிறுத்திவைத்தது ஒஎன்ஜிசி (ONGC). இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பொதுப்பெயரில், கைவிடப்பட்ட அந்த ஷேல் கேஸ் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஷேல் கேஸ் எனப்படும் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு, காவிரிப் படுகையில் அமைந்திருக்கும் குத்தாலம், சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரி, அடியக்காமங்கலம், கமலாபுரம், கூத்தாநல்லூர், ராமநாதபுரம், பெரிய நரிமனம், சீர்காழி அருகே உள்ள காளி ஆகிய இடங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டவை ஆகும். இதில், காவிரி படுகையை மையப்படுத்தி, இரண்டு மண்டலங்கள், பெயரிடப்படாமல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதில், முதல் மண்டலம், 948 சதுர கிலோமீட்டர் பகுதியை உள்ளடக்கியதாக உள்ளது. பெயரிடப்படாத இரண்டாவது மண்டலத்தின் எல்லை, ஆயிரத்து 542 சதுரகிலோ மீட்டர் பரப்பளவை கொண்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் ஆரம்பிக்கும் இந்த புள்ளியானது, வடக்கு தெற்காக, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை தாண்டி முடிவடைகிறது. ஹைட்ரோகார்பன் திட்டம் என்ற பெயரில் குறிக்கப்பட்டுள்ள, பெயரிடப்படாத, இரண்டாவது மண்டலத்தின் வரைபடத்தில், நரிமனம், திருவாரூர், கீழ்வேளூர், அடியக்காமங்கலம், பள்ளிவார்மங்கலம், விஜயாபுரம், கமலாபுரம், நன்னிலம், கூத்தாநல்லூர், பூண்டி, மாத்தூர், கோவில்களப்பால், திருக்காலூர், பெரியகுடி, துளசபட்டினம் ஆகியவையும், தஞ்சாவூர் காவிரி துணை படுகை பகுதிகள் என குறிப்பிடப்பட்டு, அதில், வடதெரு, நெடுவாசல் மற்றும் கிருஷ்ணாபுரமும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஷேல் கேஸ் எடுக்கப்போவதாக பட்டியலிப்பட்டுள்ள பகுதிகளின் மொத்தப் பரப்பளவு (ஆதார ஆவணங்களின்படி) 3 லட்சத்து 81 ஆயிரம் ஏக்கர். 40க்கு 40 என வைத்தால், சராசரியாக 150 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகளை தன்னகத்தே கொண்டது, முழுமையான பெயரிடப்படாத, இரண்டாவது மண்டலமாகும். இந்த இரண்டாவது பகுதியில், ஷேல் கேஸ் எடுக்க வழங்கப்பட்டிருக்கும் உரிமங்கள், வருகிற 2019ஆம் ஆண்டோடு காலவதியாகிவிடும். இதன் காரணமாக, ஹைட்ரோகார்பன் என்ற பொதுப்பெயரில், கச்சா எண்ணெய் எடுப்பதாக கூறி, ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவே, புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் கூறுகின்றன. இந்த இரண்டாவது மண்டலத்தைப் போன்றே, முதல் மண்டலத்திற்கான பெயர்களும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இரண்டாவது மண்டலத்தில் இடம்பெற்ற பகுதிகளை தவிர்த்து, பெயரிடப்படாத முதல் மண்டலத்தில், ஷேல் கேஸ் எடுக்க, கடலூர் மாவட்டத்தில் 14 இடங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 இடங்களும், அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களும், திருவாரூர் மாவட்டம் ஒரு இடமும் இனங்காணப்பட்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான ஷேல் கேஸ் எடுக்கும் உரிமமும், புதிய தலைமுறைக்கு கிடைத்திற்கும் ஆவணத்தின்படி, வருகிற 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. ஷேல் கேஸ் எடுக்க வெளிப்படையாக 8 இடங்களின் பெயர்கள் தெரியவரும் நிலையில், நெடுவாசல் உள்ளிட்ட 51 இடங்கள், பெயர் வெளியிடப்படாமலேயே, ஷேல் கேஸ் எடுப்பதற்காக, இனங்காணப்பட்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 61 இடங்களில் ஷேல் கேஸ் எடுக்கப்பட இருப்பது, அதற்கான ஆய்வு பணிகள், அடுத்தடுத்த கட்டங்களில், விரைந்து அனுமதி வழங்கப்பட்டு தொடங்கப்படலாம் என்பதே, புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள ஆதார ஆவணத்தின்படி தெரியவரும் பேரதிர்ச்சி தரும் உண்மையாகும்.
இந்தியமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நெடுவாசல் போன்ற தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயு எடுத்து மொத்தமாக தமிழக நெற்களஞ்சியத்தை சுடுகாடாக்கி பீஹார் போன்ற ஏழைகள் நிறைந்த மாநிலமாக மாற்றிட மத்தியில் ஆளும் அரசு கடும் பிரயத்தனங்களைச் செய்து வருகிறது.
அதிகாரத்தில் இருப்பதற்காக இந்தியாவின் நெற்களஞ்சியத்தை அழிக்க தனி நபர் சார்ந்த நிறுவனங்களின் துணை கொண்டு மத்திய அரசின் இத்தகைய ரகசிய செயல்பாடுகளை அதி தீவிரமாக எதிர்க்க வேண்டும். தமிழக நெற்களஞ்சியத்தில் வாழும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முதலாளி. சொந்தத் தொழில் செய்யும் முதலாளிகள். நெற்களஞ்சியத்தை அழித்து ஒழித்து விட்டால் மொத்தமாக வேலையிழந்து பஞ்சைப் பராரியாக ஊரு விட்டு ஊருக்கு பஞ்சம் பிழைக்கச் செல்வார்கள் என்பதாலும் அப்போது வெகு எளிதாக அரசியல் லாபம் பெறலாம் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது.
உணவா? அடுப்பெரிக்க வாயுவா? எது வேண்டும் உங்களுக்கு என்பதை முடிவெடுங்கள்.
மத்திய அரசின் கொடூரத்தின் முன்னே அதிகாரத்தின் முன்னே எழும் எங்கள் ஊரின் அவலக்குரலைக் கேளுங்கள். உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை, அமைதியான வாழ்க்கை வாழ்ந்து பிறருக்கும் உணவளித்து வரும் எங்களை மத்திய அரசின் அரக்கப் பிடியில் இருந்து காப்பாற்ற வாருங்கள்.
வருவீர்கள் என்கிற நம்பிக்கையோடு உங்களின் ஆதரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
சிறிய வயதில் மஹாசிவராத்திரி அன்றைக்கு மாலையில் அம்மா என்னைக் கொண்டு போய் சிவன் கோவிலில் அமர வைத்து விட்டு வீட்டுக்கு போய் விடுவார்கள். மழையூர் சதாசிவம் உருகி உருகிப் பாடிக் கொண்டிருப்பார். கல்லூரி படிப்பு வரையிலும் இந்தச் சம்பவம் நடந்து கொண்டிருந்தது. இரவின் இடையில் சுக்கு மல்லி காஃபி கிடைக்கும். விடிகாலையில் சுண்டல்,பொங்கல் இப்படி ஏதாவதொன்று கிடைக்கும். அப்போதெல்லாம் ஏன் இரவு முழுவதும் கண் விழித்திருக்கிறோம் என்று தெரியாது. அம்மா சொன்னாங்க, செஞ்சாச்சு.
கரூரில் இருக்கும் போது நெரூர் சதாசிவாநந்தா ஜீவசமாதியின் முன்னால் இருக்கும் சிவன் கோவிலுக்கு நானும் மகன் ரித்திக்கும் மஹாசிவராத்திரியன்று சென்று விடுவோம். இரவு முழுவதும் சிவன் கோவிலின் முன்புறம் இருக்கும் பகுதியில் உட்கார்ந்திருப்போம். ரித்திக் வயது மூன்று இருக்கும். தூங்கி விடுவான். மடியில் படுக்க வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன்.
காலம் செல்லச் செல்ல மஹாசிவராத்திரியன்று கண் விழிப்பது குறைந்து விட்டது. தென் கயிலை செம்மேட்டில் காளஹஸ்திக்கு நிகரான ராகு கேது ஸ்தலமான முட்டம் முத்துவாளி அம்மன் கோவில் இருக்கிறது. பரிகார ஸ்தலம். முதன் முதலில் பாலைக் கொண்டு நாகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும் போது ஊதா கலரில் பால் அவர் மீது வடிந்தது. அதன் பிறகு இரண்டு வருடம் வாரா வாரம் வெள்ளிக்கிழமை அன்று சென்று கொண்டிருந்தேன். சிறுவாணி சாலையிலிருந்து ஆலந்துறை பள்ளி அருகில் பிரியும் சாலை மிகவும் மோசமாக இருக்கும். ஒரு தடவை எரிச்சலில் முத்துவாளி அம்மனிடம் இனி ரோட்டைச் சரி செய்தால் தான் உன்னைப் பார்க்க வருவேன் என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். ஒருவருடம் அந்தப்பக்கம் போகவே இல்லை.
ஒரு நாள் மாலையில் கோவிலின் அர்ச்சகர் சிவகுரு நாதனிடமிருந்து போன் வந்தது. ”நாளை மஹா சிவராத்திரி வருகிறது. அபிஷேகத்திற்குக் கரும்புப் பால் இந்தப் பக்கம் கிடைக்கவில்லை. ஆகவே நீங்கள் வாங்கிக் கொண்டு வாருங்கள்” என்றார். மனையாள் பரபரத்தார். எனக்கோ 80 கிலோ மீட்டர் தூரம் சென்று வர வேண்டுமே என்ற கடுப்பு. சாலை நன்றாக இருந்தாலும் பரவாயில்லை. வெகு மோசம் என்று கடுப்படித்துக் கொண்டிருந்தேன். வழியின்றி மறுநாள் நானும் மனையாளும் கரும்புச் சாருடன் கிளம்பினோம். ஆலந்துறை தாண்டி சாலையில் பயணித்த போது பள்ளமும் குழியுமான சாலை வரப்போகிறது என்ற கடுப்பில் சென்று கொண்டிருந்தேன்.
ஆனால் கோவில் வரை புத்தம் புதிய சாலை கருகருவென நாகப்பாம்பு போல பளபளத்துக் கொண்டிருந்தது. கோவிலின் அருகில் இருந்த பாலத்தை முதல் நாள் தான் திறந்து வைத்தார்களாம். அசந்து போனேன். அந்தப் பேரழகி மல்லிகைப் பூச்சூடி மோகனப் புன்னகையுடன் அழியாத பேரழகுடன் நகைத்துக் கொண்டிருந்தாள். நாகேஸ்வரர் பாம்பு படம் எடுக்க உலகை ஆளும் மன்னன் போல ஓங்கி உயர்ந்து பூக்களிடையே பூவாய் மலர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருந்தார். அன்றிலிருந்து அந்த அம்மாளுடன் எந்த வம்பு வழக்கும் வைத்துக் கொள்வதில்லை.
இந்த வருடம் கரும்புச் சாறு வாங்கிக் கொண்டு சென்றோம். வழியெங்கும் காவல்துறையினர் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தனர். அவர்களும் சக மனிதர்கள் தானே. ஒரு நிமிடம் வெயிலில் நின்றால் கூட நமக்கு காய்ந்து விடும். அவர்களின் நிலைமை என்னவென்று சொல்ல. அவர்களின் அம்மாக்கள் அந்த நிலையில் அவர்களைப் பார்த்தால் பெத்த வயிறு எப்படி பதை பதைக்கும்? ஒருவர் வருகிறார் என்பதற்காக இத்தனை பேர் துயரப்பட வேண்டுமா? எத்தனை பேருக்கு என்னென்ன நோய்கள் இருக்கின்றனவோ? என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றனவோ? எல்லாம் மறந்து வெயிலில் நின்று வாடிக் கொண்டிருந்தனர். மனதுக்குள் பாரமாக இருந்தது.
முட்டத்துப் பேரழகனையும் பேரழகியையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு குருநாதரைத் தரிசிக்கலாம் என்று கிளம்பினால் அக்கப்போர் ஆரம்பித்தது. இந்தப் பக்கம் போ அந்தப்பக்கம் போ என்று அழிச்சாட்டியம் செய்தார்கள். ஒரு வழியாக வனத்துறை செக் போஸ்ட் அருகில் சென்று அப்படியே இடது புறம் திரும்பி விடலாம் என்றால் கார் பார்க்கிங்கை அதற்கு முன்பே ஒதுக்கி கார்களை அந்தப்பக்கம் விட்டுக் கொண்டிருந்தார்கள். டி.எஸ்.பி ஒருவரிடம் செக் போஸ்ட் வரை அனுமதியுங்கள் என்றால் முடியாது சார், பிரைம் மினிஸ்டர் பாதுகாப்பு புரோட்டோகால் என்று மறுத்து விட்டார். நானெப்படி சார் நடந்து செல்வது என்று கேட்டால் நாங்கள் தூக்கிக் கொண்டு போய் விடுகிறோம் என்றுச் சொன்னார். போலீஸ் தூக்கிக் கொண்டு போனால் முரசொலி மாறன் கதையாக மாறி விடும் அபாயமும், அய்யோ கொல்றாங்களேன்னு கத்தினால் யாரும் படம் பிடிக்க வரமாட்டார்கள் என்கிற காரணத்தாலும் அவரின் ஐடியாவை நிராகரித்து காரை திருப்பி வந்த வழியே மீண்டும் வந்து காருண்யா வழியாக ஆஸ்ரமத்தின் பின்புற வழிப்பாதைக்குச் சென்றேன்.
ஜோதி ஸ்வாமி மாட்டு வண்டியை பூட்டிக் கொண்டு வந்தார். அதில் ஏறி ஆற்று வழியாகச் சென்றால் ஆற்றில் சுத்தமாகத் தண்ணீர் இல்லை. காய்ந்து போய் கிடந்தது. ஆசிரமத்தில் அனேகர் வந்திருந்தனர். வெள்ளிங்கிரி மலைக்கு சென்று வந்தவர்கள் ஆங்காங்கே படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் ஆற்றில் குழி வெட்டி தண்ணீர் பிடித்து காக்காய் குளியல் போட்டுக் கொண்டிருந்தனர். குரு நாதரைத் தரிசித்து விட்டு வெளியில் வந்தால் டம் டம் என்று ஸ்பீக்கர்கள் அலற ஆரம்பித்தன. அங்கிருந்த குரங்குகள் படபடப்பில் எங்கோ சென்று மறைந்தன. அந்த இடமே அதிர ஆரம்பித்தது. வெள்ளிங்கிரி மலையின் அமைதி முற்றிலுமாக குலைய ஆரம்பித்தன. அதிரும் ஒலிகள், கார்களின் அசுர சத்தம். ஹெலிகாப்டர்களின் கொடூரச்சத்தம். மலையெங்கும் எதிரொலித்தன. மலையேறும் பக்தர்களை காவல்துறையினர் விடாது தடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு நிறுவனத்திற்காக ஆன்மீக வழிபாட்டினைத் தடுப்பது இந்தியாவில் மட்டுமே அதுவும் தமிழகத்தில் மட்டுமே நடக்கக்கூடிய விஷயம்.
சமீபத்தில் ஈஷா மீது பத்திரிக்கைகளில் வெளிவந்த கோவை புரபசர் பெண்கள் பிரச்சினையிலிருந்து ஈஷாவுக்கு செல்பவர்கள் கூட்டம் குறைந்திருந்தது. அதை ஈடுகட்டும் விதமாக ஜக்கி அவர்களின் புத்திசாலித்தனத்தினால் உருவானதுதான் ஆதியோகி சிலை. வெறும் எட்டு மாதங்களுக்குள் உருவாக்கப்பட்டவை என்று விழாவில் பேசினார். ஜக்கியின் அரசியல் பார்வை புத்திசாலித்தனமானது. ஜக்கி ஒரு யோகா மாஸ்டராகி இன்று பிரதமரையே தன் இடத்திற்கே வரவழைக்கும் வல்லமை பெற்றவராக இருக்கிறார் என்றால் அவரிடம் செல்லும் சாதாரண மனிதனின் நிலையை என்னவென்று சொல்வது? மாதம் ஒரு இலட்சத்து ஐம்பாதாயிரம் சம்பளம் பெறும் ஒரு ஐடிகாரர் மாதம் தோறும் தன் சம்பளத்தில் ஏழு சதவீதத்தை ஈஷாவுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
தெஹல்வாவில் வந்த ஜக்கியின் ஒரு ஹாபி (பொழுதுபோக்கு) கீழே:
He drives straight from Coimbatore to Bangalore, with people meeting him while he’s driving. This is his usual thing — he’ll take somebody in his car for a quick meeting. Ahead another car is waiting with somebody else, and he’ll drop off the first person and pick up the next.
Three hundred and fifty kilometres in four hours. Average speed: 87 km/h. He doesn’t stop, just gas station to gas station. Never takes a driver. Find somebody who can drive better than him and he’d let them drive! He can’t bear people who drive with fear and not with skill.
Everyone thinks it’s a Lexus... it’s a Toyota! A black Land Cruiser. Range: 650-700 km. He had it painted matt black when he bought it second-hand. The guy he got it from wanted to be seen in a Lexus and so imported its front guard. Now he’s been trying to get a Toyota one, but it’s difficult.
He could take the faster Salem road — it’s a four-lane highway now — but there’s a 25-30 km unfinished section and you can lose an hour there, easy. So he drives through the mountains instead, going through Dinbumghat and Chamrajnagar, and then a smaller route, villages and little-little towns and all those names he did a long time ago. Malavalli! My god, he was last here 32 years ago. He likes
this drive.
Next to his seat there’s a bottle of mineral water, a hanky and a packet of paper napkins. There’s also his trusty menthol inhaler (his staff places it wherever he sits). There’s always this little nude white tube he’s frequently sniffing. They take off the packaging since he doesn’t want to be seen endorsing a brand. He loves the smell.
பிரைம் மினிஸ்டர் யோகா நோய்களிலிருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் விடுவிக்கும் என்று பேசினார். ஆச்சரியமாக இருந்தது. எந்த முனிவர் யோகா செய்து கொண்டிருந்தார்? எந்தக் குருகுலத்தில் யோகா சொல்லிக் கொடுக்கப்பட்டது? பதஞ்சலி யோகா என்பது உடலுக்கான உடற்பயிற்சியே தவிர ஆன்மீக விழிப்புணர்வுக்கான தகுதி அல்ல என்று விவரம் தெரிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
உலகிற்கே அதீத ஆன்மீகத்தைச் சுட்டிக்காட்டிய புத்தர் எந்த யோகா செண்டருக்குச் சென்றார்? மாபெரும் மறை பொருளை தன்னகத்தே கொண்டு உலகின் ஒப்பற்ற ஒரு வழிகாட்டியாகத் திகழும் திருக்குரானை ஓதிய முஹம்மது அவர்கள் எந்த யோகா செண்டருக்குச் சென்று பயிற்சி பெற்றார்? ஜென் தத்துவத்தில் மனித மனங்களை ஆன்மீகப் பாதைக்குத் திருப்பி தன்னுணர்வு பெற வைத்தக் குருமார்கள் எந்தெந்த யோகா செண்டருக்குச் சென்று வந்தார்கள்? சித்தர்கள் என்றுச் சொல்கின்றோமே அவர்கள் எந்த யோகாவைச் செய்து வந்தார்கள்? யோகா என்பது உடற்பயிற்சிக்குத்தானே ஒழிய மனம் அமைதி பெற அல்ல என்பதினை நாட்கள் செல்லச் செல்லத்தான் புரிந்து கொள்ள முடியும்?
பிரதமர் இவ்வாறு பேசியது எனக்கு ஆச்சரியத்தினைத் தந்தது. அரசியலும் ஆன்மீகமும் ஒன்று சேர்வது மக்களை முட்டாளாக்கத்தானே தவிர அவர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒவ்வொரு அக்கவுண்டிலும் கருப்பு பணத்தை மீட்டு வந்து கட்டுவேன் என்றுச் சொன்ன பிரதமர் நம் பணத்தை நம் அக்கவுண்டில் கட்ட வைத்த அரசியல் சாணக்கியத்தனம் மிகுந்தவர். அவர் இவ்வாறு பேசியதற்கும் ஏதாவது ஒரு சாணக்கியத்தனம் இருக்கலாம்.
ஆன்மீக வாதிகள் துயரப்படும் மனிதர்களுக்கு வழிகாட்டியாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வழிகாட்டி எப்போதும் தன்னை தலைவன் என்றுச் சொல்லிக் கொள்ளாது. வழிகாட்டி இதுதான் வழி என்று சுட்டிக் கொண்டிருக்கும்.
எதையும் நம்பித்தான் ஆவேன் என்பவர்களுக்கு இதைத்தான் நம்ப வேண்டும் என்றுச் சொல்கின்றவர்கள் தான் குருக்களாக இருப்பார்கள். தமிழர் இனத்தில் எத்தனையோ முனிவர்கள், ரிஷிக்கள், சித்தர்கள் தங்களை மறைத்துக் கொண்டு வழிகாட்டிகளாக மட்டுமே இருந்திருக்கின்றனர். புகழ் பெற்ற ஆன்மீக தலங்களில் தங்களை மறைத்து மூர்த்திகளை முன்னிலைப்படுத்தும் அவர்கள் எங்கே?
இவ்விடத்தில் உங்களுக்கு ஒரு கதை. மஹாபாரதக் கதையின் முடிவில் கலியுகம் தொடங்குகிறது. பாண்டவர்களும், கிருஷ்ணனும் வந்த வேலை முடிந்ததும் உலகை விட்டு விட்டு கிளம்பினர். ஆட்சியில் பரிட்சித்து அமர்கின்றார். ஒரு நாள் காட்டில் வேட்டையாடச் செல்லும் பரிட்சித்து சமிகர் என்றொரு முனிவரின் குடிலுக்குள் நுழைகின்றார். அவர் தியானத்திலிருக்கிறார். அவர் பலமுறை முனிவரின் கவனத்தை திருப்ப முயன்றும் இயலவில்லை. ஆகவே கடுப்பில் குடிலின் அருகில் செத்துக் கிடத்த பாம்பினை எடுத்து தியானத்திலிருந்த முனிவரின் கழுத்தில் போட்டு விடுகிறார். அதை அப்போது அங்கு வந்த முனிவரின் மகன் சிரிங்கன் பார்த்து விட்டு கடும் கோபத்த்தில் இன்றிலிருந்து ஏழாவது நாள் பரிட்சித்து பாம்பு கடித்து இறந்து போவான் என்று சாபமிடுகின்றான். ஏழாவது நாளில் பரிட்சித்து பாம்பு கடித்து இறந்து போகின்றான். கதை முடிந்து விட்டது.
இப்போது நிகழ்காலத்திற்கு வருவோம். இது தானே உண்மை. இந்த நிமிடம் தானே உண்மை. நாளை என்பது வரப்போவது? அப்போது நாமிருப்போம் என்பதற்கு உத்தரவாதமில்லை. நேற்று என்பது நடந்து விட்டது. அதற்குள் நம்மால் நுழைந்து செயல்பட முடியாது. ஆகவே ... ! தொடருங்கள்...!!!
குருநாதர் இருக்கும் இடம் சப்த ரிஷிகள் வந்து தங்கி அங்கிருந்து ஆகாய மார்க்கமாக ஏழாவது மலையில் குடிகொண்டிருக்கும் வெள்ளிங்கிரி அப்பனைத் தரிசிக்கச் செல்லும் பகுதி. வெள்ளிங்கிரி மலை ரிஷிகளும், முனிவர்களும், யோகிகளும் தவம் செய்யும் இடம். மலைக்குச் சென்று வந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். மலையிலிருந்து வரும் ஏழு வாத்திய இசைக்கோர்வைகள். ஓங்காரமிட்டு மலை தேடி வரும் பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்கும் தென் கயிலையின் அமைதியை ஸ்பீக்கர் ஒலிக்க விட்டுக் கெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆன்மீக விழிப்புணர்ச்சி பெற அமைதிதான் தேவை. அதற்காகத்தான் யோகிகள் அமைதி நாடி காடுகளுக்குள் சென்று விடுவார்கள். ஆனால் இங்கோ ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அமைதி இல்லா இடத்தில் அமைதி ஏற்படுமா? ஆன்மீக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு தன்னை அறிதலும் நடக்குமா? நடக்கக்கூடிய சாத்தியங்களும் இருக்கின்றனவா?
தென்கயிலையில் தியானமேற்றிக் கொண்டிருக்கும் வாசியோகிகளின் அமைதியையும், ரிஷிகளின் தவத்தையும் கலைக்கும் எவரும் அவர்களின் சாபத்தினை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டிய விதி இருக்கிறது. தென் கயிலையின் அமைதியைக் கெடுக்கக் காரணமாக இருந்தவர்களின் குடும்பங்கள் சிதறியிருக்கின்றன. அரசியல் தலைவர்கள் முகவரி இல்லாமல் போய் இருக்கின்றார்கள். நான்கு நாட்களாக விடாது தென் கயிலையை அமைதி குலைத்திருக்கிறார்கள். முனிவர்களின், ரிஷிக்களின் சாபம் சும்மா விட்டு விடாது என்றே நினைக்கிறேன். முனி சாபம் பலித்தே ஆக வேண்டும். பரிட்சித்து மன்னன் கதை அதைத்தான் சொல்கிறது.
கேதார்நாத் உங்கள் அனைவருக்கும் நினைவிலிருக்கும் என நம்புகிறேன். அயோக்கியத்தனம் அதிகமானதால் அதுவே தன்னை ஒரு உலுப்பு உலுப்பிக் கொண்டு அழித்துச் சுத்தப்படுத்திக் கொண்டது. அதுபோல தென் கயிலையும் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளும் என்று நம்புகிறேன்.
அதற்குச் சாட்சியாக கீழே ஒருவர் எழுதி இருப்பதை இணைப்பினைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள்.
என் மீது எரிச்சலில் இருப்பவர்களுக்கு ஒரு பாட்டினை சமர்ப்பிக்கின்றேன். சிவராத்திரியன்று எப்படி கொண்டாட வேண்டுமென்பதற்கு பயிற்சி பெற கீழே இருக்கும் பாடலினைப் பாருங்கள். சீக்கிரம் முக்தி பெற்று விட எளிய பயிற்சி இது. இந்த முக்தியை விட வேறு முக்தியெல்லாம் நமக்கெதுக்கு???
நேற்றுக்கு முதன் நாள் இரவு நாளை ”திருப்பூர் வரைக்கும் போய்ட்டு வரலாமா? வக்கீல் உடனே வரச்சொல்கிறார்” என்றார் என் நண்பர். வெயில் அதிகமானதாலும் பணியும் அதிகமானதாலும் உடல் அயர்ச்சியடைந்திருந்தது. உண்மையில் நேற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. நண்பர் ஆறு வருடங்களுக்கு முன்பு வழக்கொன்றினைத் தொடுத்திருந்தார்.
வழக்கில் தொடர்புடையவரை அழைத்து இருவருக்கும் பொதுவாக ’பஞ்சாயத்து’ செய்து வைக்க முயன்று கொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக வழக்கு விபரங்கள், தற்போதைய நிலை பற்றி விசாரிக்கச் சென்றால் சரியாக நேற்று வாய்தா தேதி. இரண்டாவது அழைப்பாக வர பதினைந்து நாட்கள் வாய்தா பெற்றுக் கொண்டு திருப்பூரிலிருந்து கிளம்பினோம். இனி இருவருக்குமான பஞ்சாயத்து மிச்சம் இருக்கிறது. யாருக்கும் சங்கடம் வராமல் நேர்மையாகச் செய்து கொடுக்க வேண்டும்.
ஏழு வருடங்களாக நடக்கும் பிரச்சினை ஏதோ ஒரு நொடியில் சரி செய்யப்பட்டால் நல்லதுதானே. மனிதர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க கொஞ்சூண்டு கவனம் தேவை. இல்லையென்றால் இது போன்ற பஞ்சாயத்துக்கள் தேவையற்ற எதிரிகளை உருவாக்கி விடும் ஆபத்து மிகுந்தவை. கத்தி மீது நடப்பது போலத்தான் இது. கொஞ்சம் பிசகினாலும் வெட்டி விடும்
திருப்பூரில் வெயில் 100 ஃபாரன்ஹீட்டைத் தொட்டது. எங்கெங்கும் காய்ந்து கிடந்த செடி கொடிகள் கண்ணில் பட்டன. காற்று உடலைச் சுட ஆரம்பித்தது. கண்கள் மசமசக்கத் தொடங்கின. பெட்டி பெட்டியாக காங்கிரீட் கட்டடங்கள் மட்டுமே தெரிந்தன. ஆனால் பச்சைகள்?? திருப்பூர் வெயிலில் பார்பிக்யூவில் வைக்கப்பட்ட மட்டன் போல வறுபட ஆரம்பித்தேன். நண்பர் காரை விரட்டிக் கொண்டிருந்தார். காரில் ஏசி இல்லை. வரும் வழியெங்கும் வெயிலின் தாக்கம் குறையவே இல்லை. அவினாசி வந்து சேர்ந்தோம். அங்கும் கொதித்துக் கொண்டிருந்தது. செல்பேசியில் கால நிலை அளவுகள் எகிறிக் கொண்டிருந்தது. கருவலூர் வழியாக கோவில்பாளையத்துக்கு வந்த பிறகு தான் வெயிலின் தாக்கம் குறைய ஆரம்பித்தது. சிலுசிலுவென காற்று தன் சூட்டினைக் குறைக்க ஆரம்பித்தது.
ஏதோ ஒரு இடத்தில் கண்ணில் குட்டை ஒன்று தென்பட்டது. அதில் தண்ணீர் கிடந்தது. அதைப் பார்த்ததும் தான் மனதுக்குள் கொஞ்சமே கொஞ்சம் சிலுசிலுப்பேற்பட்டது.
என் சிறு வயதில் நன்கு நினைவில் இருக்கிறது. தீபாவளி அன்றைக்கு வெடி வெடிக்க முடியாது. வானம் கொட்டிக் கொண்டே இருக்கும். மழையில் நெற்மணிகள் நனைந்து போய் விடும். மழை எப்போதும் பெய்து கொண்டே இருக்கும். மழைக்காலங்களில் தேங்கிக் கிடக்கும் குட்டைகளில் தவளைகளின் “டொர்ராங் டொர்ராங்” சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆலங்கட்டி மழையில் அடி வாங்கி இருக்கிறேன். வாசலில் வந்து கொட்டும் வெண்பனிக்கட்டிகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து விழுங்கி இருக்கிறேன். கொட்டிக் கொண்டிருந்த மழை நான் வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவதை என்னால் உணர முடிகிறது.
குறுவை, சம்பா சாகுபடிகள் இப்போது இல்லை. கோடைச் சாகுபடியும் இல்லை. குளங்கள் பொறுக்குத் தட்டிக் கிடக்கின்றன. ஆடு மாடுகளைக் காணமுடியவில்லை. பசும் புற் தரைகளைக் கூட காணவில்லை. மரங்கள் வெப்பத்தில் வாட்டியவை போல சோம்பிக் கிடக்கின்றன. குளிக்கும் தண்ணீரில் நுரையே வருவதில்லை. உப்புச் சேர்ந்து தண்ணீரின் அமுது அழுக்காகிக் கிடக்கிறது.
என் வயதொத்தவர்கள் உங்கள் நினைவுகளைப் பின்னே ஓட்டிப் பாருங்கள். நம் வயதில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் பெய்த மழை இப்போது பெய்கிறது எனத் தோன்றுகிறதா? இல்லை அல்லவா? ஆக நம் முன்னே ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது.
நம்மை விட்டு வெகுதூரம் போய் விட்டது மழை. தண்ணீரோ பூமியின் அடியாளத்துக்குள் சென்று ஒளிந்து கொண்டு விட்டது. தண்ணீர் இல்லாமல் வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம். இனி குளிப்பது என்பது கூட எவராலும் முடியாது போய் விடும் போல. குடிக்கவே தண்ணீர் இல்லாமல் குளிப்பது எங்கே. டிவிக்களில் உடல் துர்நாற்றப்போக்கிகளின் விளம்பரங்கள் அதிகமாகின்றன.
மனித குலத்தை அழிக்கும் ஆயுதமாக தண்ணீர் நம் முன்னே நின்று கொண்டிருக்கிறது. காலம் தப்புவதற்குள் சரி செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
வீடெங்கும் ஒரு மரத்தையோ தெருவெங்கும் மரங்களை வளர்த்து மழைக்கு அழைப்பு விடுப்போம். தண்ணீரைச் சேகரித்து வைக்க ஏற்பாடுகளைச் செய்வோம்.
இல்லையெனில் நம் வருங்கால சந்ததியினர் நாசா புதிதாக கண்டுபிடித்த கிரகங்களுக்கு செல்ல நேரிடும். ஜோசியக்காரர்களுக்கு கணக்குப் பிழையாகி விடும் ஆபத்தும் ஏற்பட்டு விடும். புதிய கிரகங்கள் புதிய கணக்குகள் என்றால் கொஞ்சம் சங்கடம் தானே???
சமீபத்தில் எனது நண்பரின் மூலமாக ஒரு நபர் லீகல் ஒப்பீனியனுக்காக அணுகினார். எளியவர். இருக்க ஒரு வீடு வேண்டுமென்பதற்காகப் பல ஆண்டுகளாக உழைத்துச் சேர்த்து வைத்து சமீபத்தில் ஒரு இரண்டு பெட்ரூம் கட்ட நிலம் வாங்கிட முனைந்திருக்கிறார்.
நில உரிமையாளருக்கு கடன் பிரச்சினை இருப்பதால் மார்கெட் விலையில் இருந்து சல்லிசாக கொடுக்க முன் வந்திருப்பதாக புரோக்கர் மூலம் தெரிய வந்து அந்த நிலத்தை வாங்கிட அட்வான்ஸ் போட்டு விட்டு என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.
ஆவணங்கள் எல்லாம் மிகச் சரியாக இருந்தன. இருந்தாலும் மனதுக்குள் குறுகுறுப்பு இருந்து கொண்டே இருந்தது. என்னவென்று அறியமுடியவில்லை. ஒரு வேலை நிமித்தமாக ஏர்போர்ட் வரையிலும் செல்ல வேண்டி இருந்தது. அப்போது ஏர்போர்ட் பகுதி உப்பிலிபாளையம் கிராமத்தில் வருவதாக பேசிக் கொண்டிருந்தார்கள். பளிச்சென்று எனக்குள் வெளிச்சமடிக்க வீடு வந்து சேர்ந்து அவசர அவசரமாக ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட சர்வே எண்களைப் பார்த்தேன். அதே தான். அவரை வரச்சொல்லி நிலம் கையகப்படுத்தும் அரசாணையைக் கொடுத்து அட்வான்ஸை திரும்பப் பெற்றுக் கொள்ளச் சொன்னேன். ஆள் மகிழ்ச்சியுடன் கொஞ்சம் கூடுதலாகவே கட்டணத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார். இந்த ஆர்டர் இந்த வருட ஆரம்பித்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
சமீபத்தில் தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மூலமாக ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கு உப்பிலிபாளையம் கிராமத்தில் கையகப்படுத்திய சர்வே எண்களின் விபரம் கீழே இருக்கிறது. பயனடைந்து கொள்ளுங்கள்.
கோயமுத்தூர் மாவட்டம், கோயமுத்தூர் தெற்கு வட்டம், உப்பிலிபாளையம் கிராமத்தில் சர்வே எண்கள்:
321/3,
322/1பி, 3பி,
333/2பி பார்ட்,
334/2பி பார்ட்,
332/2 பார்ட்,
332/3 பார்ட்,
332/4ஏ பார்ட்,
335/1 பார்ட்,
337/4 பார்ட்
ஆகிய பழைய சர்வே எண்களில் மொத்தம் 11 ஏக்கர் 22 செண்ட் அளவு கொண்ட நிலம். இதன் தற்போதைய டி.எஸ். நம்பர், உரிமையாளர்களின் பெயர்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.
இந்திய அரசியலும், அரசும் அதன் இயங்கும் விதத்தையும் பற்றியும் எழுத ஆரம்பித்தால் வாழ்க்கையே வெறுத்துப் போய் விடும். அரசமைப்பியல் அந்தளவுக்கு கேடுகெட்டதாய் ஆகி விட்டது. இனி மாற்றம் வரும் என்பதெல்லாம் நடக்கும் என்று எவரும் நம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. இருப்பினும் மாற்றம் ஒன்றே மாறாதது என்றொரு இயற்கைச் செயல்பாடு இருக்கிறது என்பதால் ஓர் அணுவத்தளவும் நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது. ஆயாசமாக இருந்தாலும் அந்த நம்பிக்கை தரும் ஊக்கம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
இந்தியாவில் தென் தமிழகம் மட்டுமே மனிதர்கள் வாழக்கூடிய தட்ப வெப்ப நிலைகளுக்கு தகுந்ததாகும். தென் தமிழகத்தில் மட்டுமே ஆன்மீகம் தழைத்திருக்கிறது. உலகிற்கே உயர்வு வாழ்வு நெறி காட்டிய தமிழும், தமிழர்களும் கலை மோகம் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தின் அடி வேரினையே பிடுங்கி எறிந்து கொண்டிருக்கின்ற அவக்கேடு எந்த உலகத்திலும் உள்ள எந்த ஒரு இனத்திலும் நடக்காத ஒன்று. தமிழ், தமிழ் என்பார்கள். ஆனால் ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவார்கள். தமிழர்கள் பாரம்பரியம் என்பார்கள். ஆனால் வீட்டிலோ ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஜீன்ஸ் உடைகள், சல்வா துப்பட்டாக்களை உடுத்துவார்கள். மலையாளத்துக் காரர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். ஓணம் பண்டிகைகளில் பாருங்கள்.
ஆனால் தமிழர்களோ தமிழ் பண்டிகைகளின் போது என்ன உடுத்துவார்கள்? வேஷ்டி எங்கே போனது? சேலை எங்கே போனது? தாவணிகள் எங்கே சென்றன? தானும் கெட்டும் தன் இனத்தையும் கெடுத்துக் கொண்டு வாழும் ஒரு இனம் இந்த உலகில் இருக்கிறதென்றால் அது தமிழினம் மட்டுமே. இனி எந்தக் காலத்தில் தமிழர்கள் உருப்பட்டு உருப்படிக்கு வருவார்கள் என்பதெல்லாம் நடக்கக்கூடிய ஒன்றா? தன் இனத்துக்கு ஒரு அமைப்பினை உருவாக்கி தன் இனத்தையும் தன் மொழியையும் வளர்த்து வரும் பிராமணர் சங்கம் போல தமிழர்கள் தங்களையும் தங்கள் மொழியையும் வளர்த்திட வேண்டாமா?
தமிழர்கள் எங்கே வளர்க்கின்றார்கள்??? குறுந்தாடிகளைத்தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மலைகள் இணையத்தில் வெளியான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்று முகம் கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன். படித்து வையுங்கள்.
பதினைந்தாயிரம் பேர் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று தெரியாமலே யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து வெளிவந்த விஷக்காற்றினால் உயிரை விட்டனர். லட்சக்கணக்கான பேர் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டனர். மூளை வளர்ச்சி குன்றியும், கண் போயும், இன்னும் சொல்ல முடியாத நோய்களுக்கெல்லாம் ஆட்பட்டு இன்றும் நோயின் பிடியில் சிக்கி உயிரோடு வேதனைப்பட்டு வருகின்றனர். ஆலையின் அலட்சியத்தால் நடந்த இந்தச் சம்பவத்தின் முதல் குற்றவாளி ஆண்டர்சன். மற்ற குற்றவாளிகள் இந்த ஆலையின் நிர்வாகத்திலிருந்தவர்களும், டெக்னீஷியன்களும். இந்த வழக்கு முதல் குற்றவாளி இல்லாமலே நடந்து கொண்டிருந்தது.
இந்தியாவையே உலுக்கிய இந்தப் படுபயங்கர கொலைகளுக்கான தீர்ப்பு இருபத்து ஆறு ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட போது, இத்தீர்ப்பினைப் பற்றி வட மாநில மீடியாக்களில் சூடான விவாதங்கள் நடத்தப்பட்டன. தீர்ப்பு வெளியான அன்று ஆண்டர்சன் உயிரோடு இருந்தார். அவர் எங்கிருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று டிவிக்கள் கண்டுபிடித்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அவரை கைது செய்யக்கூட இந்திய அரசால் முடியவில்லை. இதே ஒரு சாதாரணன் என்றால் சட்டமும் சட்டத்தின் காவலர்களும் என்னவெல்லாம் செய்வார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.
இந்த தீர்ப்பை கூர்ந்து அவதானிக்கும் போது நெஞ்சை உலுக்கும் சில உண்மைகள் நிர்வாணமாக வெளிப்படுகின்றன. இந்த உண்மைகள் சாதாரண மக்களிடையே இந்தியா ஒரு ஜனநாயக நாடா என்ற கேள்விக்குறி எழுவதில் வியப்பேதும் இல்லை. ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்ற மாயையினால் ஆளும் அதிகார வர்க்கமும் அதற்கு துணையாக இருக்கும் கோடீஸ்வரர்களும் எவ்வாறெல்லாம் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள் அப்பட்டமாகத் தெரியும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் இந்தியப் பிரஜைகள் என்று சட்ட மேதை அம்பேத்கார் எழுதிச் சென்றார். ஒரு நீதிபதி நில மோசடியில் சிக்குகின்றார். அரசு புறம்போக்கு நிலத்தை தன் பதவியை வைத்து கபளீகரம் செய்கிறார். பொதுமக்களை அந்த நிலத்திற்குள் வர விடாமல் தடுக்கிறார். மீடியாக்களில் இந்த விஷயம் வெளிப்பட்ட பிறகு அரசு நடவடிக்கை எடுக்க ஆரம்பிக்கின்றது. விசாரணை செய்து அந்த நீதிபதி ஆக்கிரமிப்பு செய்துள்ள விஷயம் பற்றி அறிக்கை அளிக்கின்றது. ஆனால் சட்டத்தை அமுல் படுத்தி வரும் உச்ச நீதிமன்றம் சர்ச்சையில் சிக்கியவரை வேறு ஊருக்கு மாறுதல் செய்கிறது. சர்ச்சையில் சிக்கியவர் பணி நாள் முடிவடையும் வரை நீதிபதியாகத்தான் இருந்து ஓய்வு பெறுகிறார்.
அரசு நிலத்தை தன் அதிகாரத்தால் கபளீகரம் செய்யும் நீதிபதியைத் தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லையா? சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் இந்த நீதிபதி தண்டிக்கப்பட கூடியவர் என்றால் அது ஏன் இன்னும் செய்யப்படவில்லை? இந்திய நீதிபதிகள் தங்களைச் சட்டத்திற்கும் மேலானவர்களாக, கடவுளாக கருதிக் கொள்கிறார்கள் என்பதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதும் இதற்கு முன்பு நடந்த சில சம்பவங்கள் மூலமாக தெரிய வருகிறது. அதாவது நீதிபதிகள் விஷயத்தில் அவர்கள் கொலைக் குற்றமே செய்தாலும் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பது மற்றொரு உண்மை என்பதை இவ்விடத்தில் புரிந்து கொள்க.
1976ல் ஜஸ்டிஸ் கே. வீராச்சாமி மேல் சிபிஐயினால் பதிவு செய்யப்பட்ட கரப்ஷன் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய நீதிமன்ற வரலாற்றிலே 108 எம்பிக்கள் ஒன்று சேர்ந்து திரு ஜஸ்டிஸ். கே.வீராச்சாமியின் மருமகன் திரு ஜஸ்டிஸ் ராமசாமி மீது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக நடவடிக்கை எடுக்க கையெழுத்திட்ட சம்பவங்களையும் பத்திரிக்கைகள் வாயிலாக நாம் அறியலாம். இந்திய நீதிபதிகள் சில பேர் மீது இருக்கும் வழக்குகளை மெயில் டுடே என்ற பத்திரிக்கை 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 23ம்தேதி அன்று கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது. கட்டுரையினை இந்த இணைப்பில் படிக்கலாம்.
ஒரு நீதிபதி இரு நீதிபகள் என்று இல்லை. ஊழல் வழக்கிலும் மற்ற வழக்குகளிலும் எண்ணற்ற இந்திய நீதிபதிகள் சிக்கினார்கள். இது பற்றிய கட்டுரைகள் பல பல பத்திரிக்கைகளில் வெளி வந்தன. ஆனால் சட்டத்தினால் இவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஓய்வு பெற்று இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஓய்வூதியம் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது போன்ற குற்றச்செயல்களில் சாதாரணன் ஈடுபட்டால் அதே சட்டத்தின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஏன் முதலில் நீதிபதிகளைப் பற்றி எழுதுகிறேன் என்றால் சட்டங்களை அமுல் படுத்துவதும், சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதும் நீதி மன்றங்கள்தான். ஆனால் நீதிமன்றத்தின் தலைவர்களான நீதிபதிகளாலே சட்டங்கள் மீறப்படுவது என்பது சட்டத்திற்கே சட்டம் எதிரியாக இருப்பது போன்றது. ஜனநாயக நாடான இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்வதில் சிறு துளி உண்மை இருக்கிறதா என்றால் நம்புவது கடினம். அடுத்து மற்றொரு உதாரணத்தைப் பார்க்கலாம்.
அடுத்து யூனியன் கார்பைடு ஆலையின் அதிபர் ஆண்டர்சன், ஆலையின் அலட்சியத்தால் நடந்த விபத்திற்குப் பிறகு அரசு செலவிலே, அரசு விமானத்திலே, முதலமைச்சரின் ஆலோசனையின் படி, காவல்துறையினரின் பாதுகாப்போடு அவரது சொந்த நாட்டிற்கு எந்தவித இடையூறும் இன்றி அனுப்பி வைக்கப்படுகிறார். அவர் இந்தியாவில் இருந்தால் சட்ட ஒழுங்கு அமைதிக்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று காரணம் சொன்னார் அன்றைய மாநில முதலமைச்சர் திரு.அர்ஜூன் சிங். ஒருவரால் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டால் அவரைக் கைது செய்வார்கள் என்று படித்திருக்கிறோம். ஆனால் ஆண்டர்சன் விசயத்தில் நடந்த சம்பவம் அவரைப் பாதுகாக்க மட்டுமே என்பது தான் உண்மை. பதினைந்தாயிரம் இந்திய மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுபற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், கொலைக்குக் காரணமானவரை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதில் அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இருந்த முதலமைச்சர் துணிந்திருக்கிறார். இவரை நம்பி ஓட்டுப் போட்ட மக்களின் நம்பிக்கைக்கு இவர் செய்திருக்கும் துரோகம் என்னவிதமானது என்று யோசித்துப் பாருங்கள். அதுவும் ஒரு ஓட்டுக் கூட போடாத மாபெரும் கோடீஸ்வரனைப் பாதுகாக்க துணிந்த முதலமைச்சர் ஏழைகள் கொல்லப்பட்டது குறிந்து சிறு வருத்தமும் இன்றி செயல்பட்டதை எண்ணினால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மறு முகம் பற்றிய நிர்வாணமான உண்மையை தெரிந்து கொள்ளலாம்.
தீர்ப்பு வெளியிட்ட நாளன்று அமெரிக்காவில் வசதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வரும் ஆண்டர்சனை, நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை சிபிஐயினால் கைது செய்ய முடியவில்லை. அவர் இருக்கும் இடத்தையும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டது. அதன் பிறகு அவரை இந்தியா கொண்டு வர முயற்சிக்கப்படும் என்று சொல்கிறார்கள் ஆட்சியாளார்கள். ஆனால் சமீபத்தில் ஆண்டர்சன் இறந்தே போய் விட்டார். ஆண்டர்சனின் அலட்சிய நிர்வாகத்தால் கொல்லப்பட்டவர்கள் ஏழைகள். ஒன்றுமறியாத அப்பாவிகள். அவர்கள் செய்தது ஒன்றே ஒன்றுதான். இந்தியாவில் பிறந்ததுதான் அவர்கள் செய்த குற்றம். ஏழைகள் சொல் அம்பலம் ஏறாது என்ற பழமொழிக்கு ஏற்ப நீதிமன்றமும் 26 ஆண்டுகள் கழித்து வழங்கிய தீர்ப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையின்மையும், ஆளும் அதிகார வர்க்கத்தினரின் பாசம் எந்தப்பக்கமாக இருக்கிறது என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
பதினைந்தாயிரம் உயிரைப் பறிக்க காரணமாயிருந்தவர்களை, ஜாமீனில் செல்லக்கூடிய வகையில் தீர்ப்பு வழங்கி இருப்பது வழக்கையே இல்லாமல் ஆக்கும் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். இருபத்தைந்தாயிரம் ரூபாய் ஜாமீன் தொகை செலுத்தி குற்றவாளிகள் அனைவரும் விடுதலையாகி விட்டார்கள். இது தான் ஏழைகள் சம்பந்தப்பட்ட வழக்கின் நிலைமை.
மும்பையில் தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 150 பேர். சட்டம் இந்த விஷயத்தில் எப்படி நடந்து கொண்டது? வழக்கு விசாரணையை ஒரே வருடத்தில் முடித்து தீர்ப்பும் வழங்கி விட்டது. ஏனென்றால் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள். தாக்கப்பட்டது இந்தியக் கோடீஸ்வரரின் ஹோட்டல். அதனால் வழக்கு விரைந்து முடிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டு விடட்து. யூனியன் கார்பைடு ஆலையினால் கொல்லப்பட்டவர்கள் ஏழைகள். ஏழைகள் கொல்லப்பட்டதற்கு தீர்ப்பு 26 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வழக்கின் தீர்ப்போ நகைப்புக்கிடமான ஒன்றாகும்.
சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் இரண்டு வழக்குகளிலும் தீர்ப்பு வெளியிடப்பட்ட நாட்கள் ஏன் வேறுபட்டதாக இருக்க வேண்டும்? நீதிபதிகளை சட்டம் ஒன்றும் செய்யாது. பணக்காரர்களை சட்டம் ஒன்றும் செய்யாது. அரசியல்வாதிகளை சட்டம் ஒன்றும் செய்ய முடியாது. அதிகாரவர்க்கத்தினரை சட்டம் தீண்டிக்கூட பார்க்க முடியாது என்றால் பின்னர் ஏன் சட்டம் அனைவருக்கும் சமமானது என்று சொல்கின்றார்கள்? ஏழைகளைக் கட்டுப்படுத்தவும், ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கவும் தான் சட்டம். ஏழைகள் சட்டத்தை மீறக்கூடாது என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள். இப்போது சொல்லுங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமமானதா? சட்டத்திற்கு வேறு முகங்களும் இருக்கின்றன. மீண்டும் இங்கு ஒரு எழுத்தாளரின் எழுத்தை மேற்கோள் காட்டி பத்தியை முடிக்கிறேன். ”ஏழைகள் அதிகாரவர்க்கத்தினரின் இரக்கத்தின் பால் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்”.
சசிகலா தீர்ப்பு - விடுதலை அலசல் பற்றி எழுதிய ஒரு சில மணிகளில் பல நண்பர்களிடமிருந்து அழைப்பு வந்தது. சொல்லி வைத்தாற் போல பெரும்பாலும் சசிகலாவை எதிர்த்தே பேசினார்கள். அது அவர்களின் பிரச்சினை.
மீடியாக்கள் கட்டமைக்கும் பிம்பத்தை வைத்து ஒருவரை குற்றவாளி, நல்லவர் என்று அனுமானித்துச் செயல்படும் போக்கு உலகெங்கும் இருக்கும் வழக்கமான ஒன்று. செய்தி தாள்களும், டிவி சானல்களும் இல்லாத காலங்களில் இருந்த நிம்மதி இன்று மக்களுக்கு இல்லை. அது போகட்டும் ஒரு பக்கம்.
என்னிடம் பேசிய அனைவரும் சொல்லி வைத்த மாதிரியே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்குத் தெரியாத ஒன்றா உங்களுக்குத் தெரிந்திருக்கும்? என்றே கேட்டார்கள். எனக்குத் தெரியும் தெரியவில்லை என்பதெல்லாம் பிரச்சினையே இல்லை. எல்லா விஷயமும் எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது. சட்டப்படியான வழிகள் இருக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்று ஆராய்வதில் தான் எனக்கு ஆர்வம். அதற்கு பிரபலமான குற்ற வழக்கை ஆதாரமாக வைத்திருக்கிறேன்.
தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் என்ற கதைகளை எழுதியவன் அடியேன். விருப்பு, வெறுப்பின்றி ஒரு விஷயத்தை என்னால் அறிய இயலும். வாழ்க்கை என்னை பக்குவப்படுத்தி இருக்கிறது. ஆதரவு தெரிவிப்பதும், பின்னர் விலக்கி கொள்வதும் அதனால் பலனடைவதும் அரசியல் சார்ந்தவை. ஒரு விரல் நீட்டி ஒருவனைக் குற்றவாளி என்கிற போது மூன்று விரல்கள் குற்றவாளி என்றுச் சொல்கிறவனை நோக்கிக் நீட்டிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடுகின்றார்கள். ஆக தீயவர்கள் என்று எவரையும் விரல் நீட்டிட முடியாது என்பது உண்மை.
எது தர்மம் என்று கண்டுபிடிக்க சாதாரண மனிதனால் முடியவே முடியாது. தர்மத்தின் பாதை தனை கண்டறிவது வெகு சூட்சுமமானது.
ஜெயலலிதா இறந்து போனது அவர் செய்த தர்மத்தின் பலன் என்று அறிகிறேன். அவர் அனைவருக்கும் உணவிட்டார். யார் பணத்தில் என்பதை ஆராய்ச்சி செய்வதை விட அவர் மூலம் என்பதுதான் இங்கே முக்கியம். அன்னதானத்தின் பலன் அவரை அவருக்கு நேர இருந்த அவமானத்திலிருந்து விடுபட வைத்திருக்கிறது. முதலமைச்சராக இருந்து நோயினால் இறந்து போனார். தர்மம் அவருக்கு நேர இருந்த அவமானத்திலிருந்து அவரைக் காப்பாற்றி விட்டது என்றே என் மனது நினைக்கிறது. அவர் இறக்கும் போதும் முதலமைச்சராகத்தான் இருந்தார். எப்படிச் செத்தார்? அதன் சர்ச்சை என்றெல்லாம் போகாதீர்கள். இறந்து விட்டார் அவ்வளவுதான் விஷயம். முதலமைச்சராக இருந்து ஜெயிலில் அடைபட்டு நான்காண்டுகள் தண்டனை பெற்று ஜெயிலில் கிடப்பது என்பது அவரின் மன நிலையை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
இறைவனின் தர்மம் என்கிற நூலில் கட்டப்பட்ட மனிதன் எப்போதும் தர்மத்தின் பால் கட்டுண்டவனே. ஏனென்றால் பிறக்கும் போதே இறக்கும் வரம் வாங்கி வந்தவன் மனிதன்.
1991-1996 வரை நடைபெற்ற ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக திமுக ஆட்சியில் ஜெயலலிதா மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த வழக்குகளை எந்தெந்த வக்கீலிடம் கொடுப்பது என்ற மீட்டிங்கின் போது நடைபெற்ற சம்பவம் பற்றி ஜூனியர் விகடனில் வெளியானது கீழே இருக்கிறது.
‘யார் யார் என்னென்ன வழக்குகளை எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள் என்பதை ஆலோசித்துச் சொல்லுங்கள்’’ என்றார் ஜெயலலிதா.
வழக்கறிஞர்கள் ஒவ்வொருவராக கருத்துகளை முன்வைத்தார்கள். மேஜையின் இன்னோர் ஓரத்தில் உட்கார்ந்திருந்த வழக்கறிஞர் ஒருவர், ‘‘சவாலான வழக்குகளைக் கையாளும் பிரபல வழக்கறிஞர்கள்கூட ஜெயிக்கக் கூடிய வழக்குகள் மீதுதான் கண் பதிப்பார்கள். இது சாதாரண வழக்கறிஞர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில், ஜெயிக்கக் கூடிய டான்சி வழக்கை நான் எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார்.
அத்தனை பேரின் பார்வையும் அவர் பக்கம் திரும்பியது. அந்த வழக்கறிஞர், என்.ஜோதி. ஜெயலலிதா ஆச்சர்யத்தோடு பார்த்தார். ‘‘அரசு நிலத்தை முதல்வரே வாங்கியதாகச் சொல்லி டான்சி வழக்கைப் போட்டிருக்கிறார்கள். இதை வைத்து என்னைத் தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்க முடியும் என தி.மு.க-வே நம்பிக் கொண்டிருக்கும் வழக்கு அது. அந்த வழக்கில் எப்படி ஜெயிக்க முடியும் என நம்புகிறீர்கள்?’’ எனக் கேட்டார் ஜெயலலிதா.
‘‘டான்சி வழக்கு ரொம்ப சிம்பிளான வழக்கு. நாம் ஜெயிப்பதற்கான நிறைய ஸ்கோப் இருக்கிறது’’ என அடித்துச் சொன்னார் ஜோதி. ‘‘எப்படிச் சொல்கிறீர்கள்’’ எனக் கேட்ட ஜெயலலிதா, தனது பக்கத்தில் இருந்த பி.ஹெச்.பாண்டியனை எழுப்பிவிட்டு அங்கே ஜோதியை அமர வைத்தார்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்றைப் புரட்டிய ஜோதி, அதை ஜெயலலிதாவிடம் காட்டினார். ‘‘கேரளா பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளுக்கு சர்க்குலர் ஒன்றை அனுப்பி, ‘அனைத்துப் பள்ளிகளிலும் காலையில் தேசிய கீதம் கட்டாயம் பாட வேண்டும்’ எனச் சொன்னது. ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டும் தேசிய கீதம் பாடப்பட்டபோது ஓரமாகப் போய் நின்று கொண்டார்கள். ‘ஜெகவோ மதத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் நாங்கள். தேவனை மட்டுமே வழிபடுவோம். தேசிய கீதத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், என் பிள்ளைகள் அதைப் பாட மாட்டார்கள். அது எங்கள் மதத்துக்கு எதிரானது’ என அந்த பிள்ளைகளின் தந்தை பிஜு இம்மானுவேல் பள்ளிக்குக் கடிதம் அனுப்பினார். அதைப் பள்ளி நிர்வாகம் ஏற்காமல், மாணவர்களைப் பள்ளியைவிட்டு நீக்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கேரளா அரசு வெற்றி பெற்றது. சுப்ரீம் கோர்ட்டில் பிஜு இம்மானுவேல் அப்பீல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘தேசிய கீதம் பாடம் வேண்டும் என கேரளா அரசு சொன்னது சட்டம் அல்ல. அது சுற்றறிக்கைதான். நன்னடத்தை விதி, சட்டம் ஆகாது’ என பிஜு இம்மானுவேலுக்குச் சாதகமாக 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி தீர்ப்பளித்தது’’ எனச் சொல்லி முடித்த ஜோதி, ‘‘அரசு விற்பனை செய்யும் ஆவின் பாலை அரசு ஊழியர்கள் வாங்கக்கூடாது எனச் சொல்ல முடியுமா? அரசு நிலத்தை அரசு ஊழியர் வாங்கக் கூடாது என்பது நன்னடத்தை விதிதான். அது சட்டம் அல்ல. அதனால் டான்சி வழக்கில் நாம் ஜெயிக்க முடியும்’’ என்றார் ஜோதி.
இதைத்தான் நான் முன்பு எழுதி இருந்தேன். இப்போது நான் எழுதி இருப்பதற்கும் டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை பெற்றதும் உங்களுக்கு நினைவில் வந்து விடும் என்று நினைக்கிறேன். இந்தப் புத்திசாலித்தனம் தான் வேண்டும். டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை பெற்றது சட்டப்படி சரியானது அல்லவா?
அடுத்து இன்னொரு வெகு முக்கியமான பாயிண்டினை உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதுவும் ஜூனியர் விகடனில் வெளிவந்த ஒரு பத்தியில் வெளியாகி இருக்கிறது. அது கீழே,
‘‘ஜெயலலிதாவின் கணக்கில் வராத பணத்தை வைத்து, மற்ற மூவரும் நிறைய நிறுவனங்களைத் தொடங்கினார்கள். ஒரே நாளில் பத்து நிறுவனங்கள் தொடங்கப்பட்ட வரலாறும் உண்டு. மற்ற மூவருக்கும் வேறு எந்த வருமானமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் தொடங்கிய இந்தப் பல நிறுவனங்களுக்கு, சொத்துக்களை வாங்குவதைத் தவிர வேறு எந்த பிசினஸும் இல்லை. ‘இவை எல்லாம் எனக்குத் தெரியாமல் நடந்தது’ என ஜெயலலிதா சொல்ல முடியாது. அவருடைய வீட்டு முகவரியை வைத்தே பெரும்பாலான நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. வங்கிக் கணக்குகளில் பணம் போடும்போது, எண் 36, போயஸ் கார்டன் என்ற முகவரியைக் குறிப்பிட்டே பணம் செலுத்தியிருக்கிறார்கள். ரத்த உறவாக இல்லாதபோதும், ஜெயலலிதாவின் வீட்டில்தான் இவர்கள் தங்கியிருந்தார்கள். அதனால் எல்லா குற்றங்களிலும் எல்லோருக்கும் பங்கு உண்டு’’ எனத் தெளிவாகத் தீர்ப்பு சொன்ன உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குன்ஹா விதித்த அதே தண்டனையை உறுதி செய்தார்கள்.
இது போன்ற வழக்குகளில் எண்ணற்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தத் தீர்ப்புகளைப் படித்துப் பார்த்து எங்கோ மறைந்து கிடக்கும் அந்த ஒரு பாயிண்டினைப் பிடித்தால் வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டு மொத்தமாக முடிக்கப்படும் சாத்தியங்கள் இருக்கின்றன.
யார் அதைச் செய்வார்கள் என்று பார்ப்போம்?
பணம் வந்த வழி என்ன என்று இதுவரை ருசுப்படுத்தப்படவே இல்லை. பதவியில் இருந்ததால் முறைகேடாக வந்த பணம் என்றால் அது எப்படி? அதற்கு என்ன ஆதாரம்? அந்தப் பணம் அதிகாரத் துஷ்பிரயோகத்தினால் வந்தது என்று ருசுப்படுத்தப்பட்டதா? இந்த வழக்குகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் குற்ற எண்கள் சரியானவைதானா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன? எல்லாவற்றிற்கும் கேள்விகள் தேடினால் விடை கிடைத்தாலும் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம்.
முதலில் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். நான் யாருக்கும் ஆதரவாளனும் இல்லை, எதிரியும் இல்லை. தர்ம நியாயங்களை நம்பும் ஒரு சாதாரணன். தர்மத்தின் மீது வெகுவான நம்பிக்கை உள்ளவன். ஆகவே இதை மனதில் வைத்துக் கொண்டு படியுங்கள்.
நேற்று விடிகாலைப் பொழுது 3 மணியிலிருந்து சுப்ரீம் கோர்ட் சசிகலா சொத்துக்குவிப்பு விவகாரத்தில் வழங்கிய தீர்ப்பினை வாசிக்க ஆரம்பித்தேன். தமிழகத்தின் வரலாற்றில் முக்கியமான ஒரு தலைவரை குற்றவாளி எனக் குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு அது. குன்ஹா அவர்களின் தீர்ப்பினையும் படித்துள்ளேன். குமாரசாமி அவர்களின் தீர்ப்பினையும் படித்திருக்கிறேன். அந்த வகையில் இந்தத் தீர்ப்பு என் கவனத்தை பெரிதும் கவர்ந்தது.
ஜெயலலிதா மறைந்து விட்டார். ஆனாலும் அவரின் வரலாற்றில் அந்தக்கறை படிந்து இருக்கும். இனி அவருக்காக கோர்ட்டில் எவரும் வாதாடப்போவதில்லை. யாரும் அவரை நினைத்துக் கூடப்பார்க்க மாட்டார்கள். அரசியல் களம் அப்படித்தான் இருக்கும்.
மிகப் பெரிய பெண் போராளி அவர். ஆட்சி நடத்திய விதம் சர்ச்சைகளுக்கு உட்பட்டதாக இருக்கலாம். இதற்காக அவர் மீது ‘மட்டும்’ குற்றம் சுமத்திட முடியாது. “பாம்பு தின்னும் ஊருக்கு வாழச் சென்றால் பாம்பின் தலையையும், வாலையையும் தின்னாமல் நடுத்துண்டை சாப்பிட்டு வாழலாம்” என்றொரு சொல் வழக்கை கேள்விப்பட்டிருப்பீர்கள். சில பாம்புகளுக்கு தலையில் விஷம் இருக்கும். சில பாம்புகளுக்கு வாலில் விஷம் இருக்குமென்பதால் நடுத்துண்டே பாதுகாப்பானது. அவர் அதைத்தான் செய்தார். அரசு அமைப்பின் சிஸ்டம் அப்படி இருக்கிறது. மன்னர் காலத்திலிருந்து ஜன நாயக ஆட்சி வரை ஊழலும், சிபாரிசும், அதிகார துஷ்பிரயோகங்களும் வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகின்றன.
நாட்டையும், நாட்டு மக்களையும் திருத்த முடியாது. எத்தனையோ கடவுள்கள் இருக்கின்றார்கள். எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. இருந்தும் என்ன பலன்? எவராவது திருந்தினார்களா? கோவிலுக்குச் செல்பவனும், பிற மத இடங்களுக்குச் சென்று வருபவனும் தான் குற்றச்செயல்களைச் செய்கின்றார்கள். மனம் கூசாமல் கொலைகளைச் செய்கின்றார்கள்.
இதையெல்லாம் தெரிந்து கொண்டதனால் அவர் தனக்கான வழியைத் தேர்ந்தெடுத்தார். ஜெயலலிதா தனிமையாக வாழ முடியாது. கலைஞருக்கு குடும்பம் இருக்கிறது. அவர்கள் அவரைப் பாதுகாத்தார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்கு மாற்று வழி தெரியவில்லை. மாற்று வழி இருந்தாலும் அவருக்கு உகந்தவர்களாக மன்னை ஆட்கள் இருந்தார்கள். கூட வைத்துக் கொண்டார். எதுவும் தவறில்லை. கலைஞர் தன் குடும்ப உறுப்பினர்களால் பத்தாண்டுகள் ஆட்சியையே இழக்கவில்லையா? அது போல்தான் இதுவும்.
மன்னர் ஆட்சியும் ஜன நாயக ஆட்சியும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றுதான். மன்னராட்சியில் மன்னர் குடும்பத்தினர் ஆட்சிக்கு வருவார்கள். மக்களின் கருத்துக்கள் கேட்கப்படாது. ஜனநாயக ஆட்சியில் மீடியா திருட்டுக்கூட்டத்தினால் மக்களின் மூளைச் சலவை செய்யப்பட்டு யார் தேர்வாக வேண்டுமென்று தயார் செய்யப்படுத்தப்படுவார்கள். ஓட்டு அதிகாரம் இருப்பதாக கற்பனையாக கதை கட்டி அதையும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வார்கள். இது ஜனநாயக ஆட்சி. இரண்டுக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை.
ஜெயலலிதா நல்லவராகவே இருந்தாலும் அரசியல் அப்படி இருக்க விடாது. அரசியல் என்றாலே உங்களுக்கு சகுனிகளும், சாணக்கியன்களும் நினைவுக்கு வந்து விட வேண்டும். சாணக்கியன் தான் கொண்ட சபதத்தினை மக்கள் நலனை முன்னிறுத்தி மன்னருக்காக மக்கள், மக்களுக்காக மன்னர் என்ற அர்த்தசாஸ்திரத்தை உருவாக்கினான். சகுனியோ சுய நலம் ஒன்றினையே குறிக்கோளாய் கொண்டவன். இந்தப் பாரத பூமியில் சகுனிகளும், சாணக்கியன்களும் தங்களுக்குள்ளே ஆடும் பகடை தான் அரசியல். இப்படிப்பட்ட அரசியலில் நல்லவர்களுக்கு இடமேது? நல்ல எண்ணம் கொண்டவர்களுக்கு இடம் நிச்சயம் இருக்கவே இருக்காது.
அவர் தனிப்பட்ட முறையில் மனிதாபிமானவர். மனிதர்களுக்கு இருக்கும் குணம் தான். எல்லாம் கிடைத்தும் எதுவும் கிடைக்காத வாழ்க்கை அவரது. அழகு, படிப்பு, அறிவு, பதவி, அதிகாரம், புகழ் அனைத்தும் அவருக்குக் கிடைத்தன. ஆனால் வாழ்க்கை? எதுவும் காரணமின்றி அமையாது. அந்த ஆராய்ச்சியை செய்யத்துவங்கினால் அது பெரும் வரலாறாக மாறிப்போகும். ஆகவே விட்டு விடுவோம்.
மீண்டும் வழக்கு விபரத்துக்கு வந்து விடுகிறேன்.
ஒவ்வொரு தீர்ப்பு வழங்க்கபடும்போது, அந்தத் தீர்ப்பில் வழக்கு விபரங்கள், வாதிகள் தரப்பு வாதம், பிரதிவாதிகளின் வாதம், சாட்சி ஆவணங்கள் போன்றவற்றுடன் தீர்ப்பு வழங்க ஏதுவாக இது போன்ற வழக்குகளில் முன்பு வழங்கப்பட்ட தீர்ப்புகள் என விவரித்து இறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். அவ்வாறு வழக்குகளின் தீர்ப்பின் ஊடே மேற்கோள் காட்டப்பட்டுள்ள தீர்ப்புகள் ஆகியவைகளைப் படித்து வெகு முக்கியமான பாயிண்ட் என்றால் கணிணியில் சேமித்து வைத்துக் கொள்வேன். நானொன்றும் வக்கீலுக்குப் படிக்கவில்லை. வக்கீலுக்குப் படித்தால் தான் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. ஆர்வம் மட்டுமே. ஆகவே சட்ட புத்தகங்களை படிப்பதும், நீதிமன்றத்தீர்ப்புகளை வாசிப்பதும் எனது வாடிக்கையாகவே வைத்திருக்கிறேன். அந்த வகையில் இந்த தீர்ப்பினையும் வாசிக்க ஆரம்பித்தேன்.
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பினைப் படிக்கவோ அல்லது பார்க்கவோ விரும்புகின்றீர்களா? கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்யுங்கள்.
இந்தத் தீர்ப்பின் மொத்தப்பக்கங்கள் 547. இதில் பாயிண்டுகள் தான் வழக்கு விபரங்களை விவரித்துச் செல்லும். 154வது பாயிண்டிலிருந்து 239 பாயிண்ட் வரை பல தரப்பட்ட வழக்குகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த நால்வரின் மீதான குற்றங்களின் சட்டம் என்ன சொல்கிறது என்று விவரிக்கப்பட்டுள்ளன. 1991லிருந்து 1996 வரை அவர்கள் சேர்த்த சொத்துக்கள் அதன் உண்மை மதிப்புகள் வரிசையிடப்பட்டிருக்கின்றன. ஊழல், கரப்ஷன் போன்ற விசயங்கள் அலசப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சொத்துக்கும் விவரங்களும் அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அக்யூஸ்டு ஏ1 - ஜெயலலிதா முதல் ஏ4-இளவரசி வரை குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கணக்குகள் மிகச்சரியாக கணக்கிடப்பட்டிருக்கின்றன. கோர்ட்டு வழக்கு ஆவணங்கள், சாட்சிகள் இவைகளைக் கொண்டு யார் குற்றவாளி என்று தீர்ப்பு கொடுக்கும் வழக்கப்படி சட்டப்படி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இவர்கள் மூவரும் விடுதலையடைய வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்று சொல்லி விடேன் ஏன் இத்தனை இழுப்பு என்று நீங்கள் கேட்கின்றீர்கள். அதற்கு முன்னால் ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன்.
”பல குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது” என்கிறது நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம். அதைத்தான் இவ்விடத்தில் சொல்ல விரும்புகிறேன்.
கவனிக்க “பல குற்றவாளிகள் தப்பினாலும்”.
இதற்கு நம் சட்டமைப்பு இடம் கொடுக்கிறது என்பது முரண்பாடு. முரண்பாட்டில் கூட ஒரு நல்ல விசயம் என்னவென்றால் நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான்.
இவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழி இருக்கிறது. அது வெகு எளிதானதுதான். மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொள்ள வேண்டியதில்லை. சட்டப் புத்தகங்களை பிரித்துப் படித்து மூளையை கடைய வேண்டியதில்லை. நம் நீதிமன்றத் தீர்ப்புக்கள் அதற்கான வழியைத் தருகின்றன. அந்த நம்பிக்கையில் தான் வழி இருக்கிறது என்கிறேன். கீழமை நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு, மேல்முறையீட்டில் ஒரு தீர்ப்பு. உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு என்றெல்லாம் நாம் படித்து வருகிறோம். (மறக்காமல் படிக்கவும் இந்தியாவின் அசைக்க முடியாதவர்கள் )
ஆகவே இதுகாறும் ஊழல் வழக்குகளில் விடுதலை செய்து வழங்கப்பட்ட தீர்ப்புகள், இன்கம்டாக்ஸ் மற்றும் பொருளாதார குற்ற வழக்குகளில் விடுதலை செய்து வழங்கப்பட்ட தீர்ப்புகளைப் படித்தால் இவர்களின் விடுதலைக்கு சட்டப்படியான தீர்வுகள் நிச்சயம் கிடைக்கும் வாய்ப்புகளும், சாத்தியக்கூறுகளும் இருக்கலாம். ஆனாலும் இந்தத் தீர்ப்பு தகுந்த ஆதாரங்களைக் கொண்டு வெகு சுத்தமாக வழங்கப்பட்டிருக்கிறது.
இதை உடைக்க அதீதப் புத்திசாலியால் தான் இயலும். அந்தப் புத்திசாலி வக்கீல் யார் என்று அறிவதில் தான் எனக்கு ஆர்வம் அதிகமிருக்கிறது. சட்டத்தின் ஊடே விளையாடுவது என்பது மாபெரும் சாகசக்கலை. அதில் தர்மம் இருக்க வேண்டுமென்பது எனது ஆசை.