தமிழர்கள் ஏன் தங்களது
அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டே வருகின்றார்கள் என்பதே புரியவில்லை. இவர்கள்
என்ன தான் நினைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்றே புரியவில்லை. அமெரிக்காகாரன் ஆராய்ச்சி
செய்து, “பழைய சாதத்தில் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களும், உடலுக்கு
ஊட்டம் தரும் சக்தியும், அத்துடன் இரண்டு சின்ன வெங்காயம் சேர்த்துச் சாப்பிட்டால்
மேலும் உடலுக்கு வலு சேரும்” என்று சொல்கிறான். ஆனால் பழைய சாதத்திற்குச் சொந்தக்காரர்களோ
பழைய சாதமா “அய்யே! “ என்கிறார்கள்.
இரவு படுக்கப் போகும்
முன்பு, மண்சட்டியில் இரவு வடித்த ஆறிய சாதத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு
வைத்து விட்டு மறு நாள் காலையில் கிடைக்கும் சாதமும், அதன் நீரும் தான் “அமிர்தம்”
இதற்காகவே ஊருக்குச்
சென்றிருக்கும் போது மண்சட்டி வாங்கி வந்து மனையாளிடம் கொடுத்தேன். நகரத்தில் வாழ்ந்தவள்
என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். பெரும்பாலும் குழம்பு, பொறியல் போன்றவைகள் மண்சட்டியில் தான் சமைக்கிறார்.
இப்போதெல்லாம் காலையில்
கொஞ்சம் மோர் விட்டு, கரைத்து, தொட்டுக்கொள்ள காய்கறிகள் கூட்டும், கொஞ்சம் சின்ன வெங்காயமும்
சாப்பிடுகிறேன். தற்போது கோவையில் குளிராக இருந்தாலும் அமிர்தச் சாப்பாடு இல்லையென்றால்
எனக்கு இறங்கவே இறங்காது. வாரம் நான்கைந்து தடவை பழைய சாதமும், சின்ன வெங்காயமும் தான்.
சமீபத்தில் ஒரு கோவிலுக்குச்
சென்றிருந்த போது அங்கு வந்திருந்த பெரும்பாலான இளம் பெண்கள் சுடிதார், டைட் டீசர்ட்,
பேண்ட் அணிந்து வெகு கவர்ச்சியாய் பார்ப்போரை கிளர்ச்சியடையும் விதமாக வந்திருந்தார்கள்.
அதில் ஒரு சில பெண்கள்
தாவணி அணிந்து, தலையில் பூச்சூடி, நெற்றியில் திலகம் துலங்க “அம்மனைப்” போல வந்திருந்தார்கள்.
தமிழர்கள் தனி அடையாளமான
“தாவணியும் பாவாடையும்” கொஞ்சம் கொஞ்சமாய் காணாமலே போய்க் கொண்டிருக்கிறது. தமிழனுக்குரிய அடையாளத்தை இழந்து அப்படி என்ன மிகச் சிறந்த நாகரீக வாழ்க்கை வாழ்கிறார்களோ தெரியவில்லை.
மலேயாக்காரர்கள்,சீ னர்கள்
எங்கு சென்றாலும் தங்கள் அடையாளங்களை எப்போதும் இழப்பதில்லை. ஆரியர்கள் என்றுச்
சொல்லக்கூடிய பிராமணர்களும் தங்களுக்குரிய எந்த ஒரு அடையாளத்தையும் இழக்கவே மாட்டார்கள்.
யூதர்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாக்க நாடில்லாத போது ஒரு தனிப்பட்ட குழுவை உருவாக்கி,
அவர்களுக்கு உதவி செய்து யூத கலாச்சார, இலக்கிய விழுமியங்களை பாதுகாத்து வந்தார்கள். இன்றைக்கு
இஸ்ரேல் என்றொரு தனி நாட்டையே உருவாக்கி வாழ்ந்து வருகிறார்கள்.
உலகிற்கே நாகரீகம் கற்றுக்
கொடுத்த தமிழர்கள் இப்படியா தரம் தாழ்ந்து போவார்கள்.
மனது வலிக்கிறது.