சித்திரை ஒன்றாம் தேதியன்று அன்று குருநாதர் ஆசிரமத்திற்குச் சென்று அவரிடம் அமர்ந்திருந்தேன். ஏகப்பட்ட நபர்கள் வந்து குரு நாதரை வணங்கிச் சென்றார்கள். அங்கு வரும் ஒவ்வொருவரும் ஏதாவது கொண்டு வந்து அவரிடத்தின் முன்பு வைக்கின்றார்கள். பக்தி என்பதை விட குருநாதரின் மீதான அன்பின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி வைத்திருந்த பலாப்பழம் அன்றுச் சரியான மணத்துடன் நாசியைத் துளைத்துக் கொண்டிருந்தது.
குருநாதர் அமைதியாக யோகத்தில் இருந்தார்.
அவரிடம் உட்கார்ந்திருந்தாலே அமைதி, ஆனந்தம் தான். குளிர்ச்சி தவழும், அமைதியான அவ்விடத்தில் அமர்ந்திருப்பதே ஒரு கொடுப்பினை தான். விழித்திருக்கும் போது ஒரு நிமிடம் கூட அமைதியாக இல்லாது எங்கெங்கோ அலைபாயும் மனம் அவரிடத்தில் அமர்ந்திருக்கும் போது அமைதியுடன் இருக்கும்.
சிறிது நேரம் கழித்து, குரு நாதரின் அறையிலிருந்து வெளியில் வந்து எம் குரு ’ஜோதி சுவாமி’களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.
அப்போது குருநாதரைச் சந்திக்க வந்த அன்பர், குருநாதருடன் நேரடியாகப் பேசிப் பழகி மருத்துவ சிகிச்சை பெற்ற திரு.கனகராஜைச் சந்தித்தேன்.
திரு.கனகராஜ் இ.எஸ்.ஐயில் பணி செய்து கொண்டிருந்த போது ஏதோ ஒரு நோய்க்காக அலோபதி மருத்துவம் பார்த்திருக்கிறார். ஒரே ஒரு மாத்திரைதான் சாப்பிட்டாராம். எழுந்து உட்கார முடியவில்லை என்றார் அவர் கண்களில் ஒளி மின்ன.
இனி கனகராஜ் முடிந்தான் என்றுச் சொல்ல ஆரம்பித்திருக்கின்றார்கள். எல்லாமே படுக்கையில் என்றாகி விட்டதாம். அலோபதி மருத்துவமும் கைவிட அவர் தன் வாழ்க்கை முடிந்து விட்டது என்று முடிவு கட்டிக் கொண்டிருந்த நேரத்தில் அவரின் நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ”முள்ளங்காடு வெள்ளிங்கிரி சாமிக்கிட்டே போ!” என்றுச் சொல்லி பேரூந்தில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
உடம்பு முழுவதும் வீங்கிப் போய், நடக்க முடியாமல், உட்கார முடியாமல் பேருந்திலிருந்து நடத்துனர் இறக்கி அங்கேயே விட்டு விட்டுப் போய் விட்டாராம்.
அங்கிருந்து நடக்க முடியாமல் உருண்டே ஆஸ்ரமத்திற்கு வந்திருக்கிறார். சாமி அவரைப் பார்த்ததும் பதியில் இருந்த ஒரு சிலரை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் போய் சிவனார் வேம்பு என்கிற மூலிகையின் வேரினைப் பறித்து வர சென்றிருக்கிறார்.
”கை பெரிசு சார், பச்சைப் பசேல்னு இருந்தது” என்றார் கனகராஜ்.
கை அளவு பெரிய சைஸ் சிவனார் வேம்பின் வேரை வெட்டி எடுத்துக் கொண்டு வந்து கனகராஜிடம் கொடுத்து இதைக் கஷாயம் வைத்துச் சாப்பிட்டு விட்டு, மீண்டும் வா என்றுச் சொன்னாராம்.
யார் யாரையோ பிடித்து வீட்டுக்குச் சென்ற கனகராஜ், தன் அம்மாவிடம் வேரைக் கொடுத்து இதை அரைத்துத் தா என்றுச் சொல்லி படுக்கையில் படுத்து விட்டாராம்.
என் அம்மா அந்த வேரை எப்படித்தான் அரைத்தாரோ தெரியவில்லை. என்றார் கனகராஜ். ஒரு குவளை அரைத்த பச்சைப்பசேல் விழுதினை குடித்து விட்டு படுத்திருக்கிறார். அது நாள் வரை தூக்கமே இல்லாமல் இருந்தவர் நன்கு தூங்கியிருக்கிறார். மறு நாள் எழுந்து விட்டார்.
”ஆச்சரியம்! அதிசயம் !!” என்றார்.
”இன்று உங்கள் முன்பு பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றுச் சொல்லி தலைமேல் இருந்த குரு நாதரின் புகைப்படத்தைப் பார்த்துச் சிரித்தார் அவர்.
”அது இருக்கும் ஒரு இருபதாண்டுக்கும் மேல்” என்றார் தொடர்ந்து
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
எம் குரு ’ஜோதி சுவாமி’ புன்னகையுடன் உட்கார்ந்திருந்தார்.
அப்போது குரு நாதரின் அறைக்குள்ளிருந்து ”குக்கூ குக்கூ” என்றொரு சத்தம் வர ஆரம்பித்தது.
உள்ளே பார்த்தேன். வெள்ளுடை உடுத்திய தேகப்பொலிவுடன் பெரியவர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரிடமிருந்து தான் அந்தச் சத்தம் வந்து கொண்டிருந்தது.
“சாமி, அவர் என்ன செய்கிறார்?”
“வாசியோகத்தில் உள்மூச்சுப் பயிற்சியில் தியானத்தில் இருக்கிறார்”
“அப்படின்னா?”
“அவர் இப்போது மூச்சினை வெளியில் விடுவதும் இல்லை, உள்ளே இழுப்பதும் இல்லை, உள்ளுக்குள்ளேயே மூச்சினை செலுத்திக் கொண்டு தியானத்தில் இருக்கிறார்” என்றார்.
அந்தப் பெரியவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
மனசு சலனமற்று இருந்தது.
உள்ளே குரு நாதர் அமைதியுடன் யோகத்தில் உட்கார்ந்திருந்தார்.