குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, May 3, 2012

மோகமுள் திரைப்படமும் நாவலும்




மோகமுள்ளை இன்று தான் வாசித்து முடித்தேன். நிஷ்டையில் இருந்தாட்போல மனது ஒரு முகப்பட்டு இருந்தது. 

ஒரு நாவல் அதுவும் கருப்பு மையிட்ட எழுத்துக்கள் படிக்கும் வாசகனின் மனதை நிஷ்டையில் கொண்டு போய் விடும் என்று உணர முடிந்தது.

படிக்கும் போதே கவட்டிக்குள் குமுற வைக்கும் எழுத்துக்களையும், படங்களையும் பார்த்துப் பார்த்தே மனது இது போன்ற நாவல்களைப் படிக்க முனைய மாட்டேன் என்கிறது.

ஜெயமோகனின் ஏழாம் உலகம் படித்த போது முகத்தில் அறைந்த, நம்மை அடுத்த இன்னொரு உலகத்தினை அறிந்து கொண்ட அதிர்ச்சி என்னை விட்டு நீங்க இரண்டு நாட்களானது. அடுத்து இந்த நாவல் ! 

நாவல் மனதோடு இழைகிறது. காவிரிக்கரை, பாப நாசம், கும்பகோணம், தஞ்சாவூர் கண்ணை விட்டு அகலமாட்டேன் என்கிறது. திரைப்பட படப்பிடிப்பின் போது கும்பகோணம் எல்லையில் ஒரு நாள் ஷூட்டிங் சென்றிருந்த போது காவிரியின் அழகை காண நேர்ந்தது. சுழித்து ஓடும் காவிரியைக் கண்டாலே மனது அவள் மீது லயித்துப் போய் விடும்.

திருவையாறில் சின்னஞ் சிறு வயதில் அப்பாவின் திதிக்குச் சென்றிருந்த போது கரை நிரம்பி தளும்பிச் சென்ற காவிரின் அகண்ட பருவம் இன்றைக்கும் மனதை விட்டு அகலவே இல்லை. விடிகாலைப் பொழுதில் சற்றே குளிர்ந்த தண்ணீரில் முங்கி எழுந்த அனுபவத்தின் சிலிர்ப்பு இந்த எழுத்தை எழுதும் போது கூட உணர முடிகிறது. 

திஜாவின் எழுத்தில் காவிரியின் கரையோர ஊர்கள் கண் முன்னே நர்த்தனமாடுகின்றன. 

ஞானராஜசேகரனின் திரப்பட மோகமுள்ளைப் பார்த்துப் பார்த்து “அர்ச்சனாவை” யமுனாவாக நினைவில் அச்சாய் பதிந்து போய் விட்டது. அர்ச்சனாவின் சாயலை மனதில் இருந்து நீக்க படாத பாடு பட்டேன். ஒரு வழியான அர்ச்சனா மறைந்து போய் யமுனா ஆக்ரமித்து விட்டாள். பாபு கொண்ட காதலைப் போல யமுனாவின் மீதான காதல் இன்னும் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

திரை யமுனாவிற்கும், நாவல் யமுனாவிற்கு ஏணி வைத்தால் கூட எட்டவே எட்டாது.வாழைத்தண்டு பாதம் என்பதெல்லாம் திரை “அர்ச்சனாவிடம்” இல்லவே இல்லை. அர்ச்சனா ஒரு விதமான சோகத்தைப் பிழியும் முகம் கொண்டவர். ஆனால் திஜாவின் யமுனா மனித உருவில் இருக்கும் இறைவி போன்றவள்.

பாபு தன்னை விட 10 வயது அதிகமான யமுனாவைக் காதலிப்பது தானே முக்கியமான கரு என்றார் நண்பர். இது சரியும் அல்ல, தவறும் அல்ல, விதி விலக்கு என்றார். பாபுவின் காதல் பொருந்தாக் காதல் என்றார்.

காதலில் பொருந்தாக்காதல் என்று ஏதாவது இருக்கிறதா என்ன? 

சிக்கலான பல முடிச்சுக்களை போட்டுப் போட்டு மனிதன் தனக்குள்ளே பல சிக்கல்களை உருவாக்கி வாழ்க்கையை அபத்தமாக்கி வைத்திருப்பதன் நோக்கம் எனக்கு இது வரை புலப்படவே இல்லை.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்



Tuesday, May 1, 2012

யமுனாவின் மீதான மோகம் தீரவில்லை



கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகி விட்டன. இப்போது சந்தர்ப்பவசமாய் யமுனா என்னிடம் சிக்கிக் கொண்டாள்.

எங்களூர் பட்டிக்காட்டு கிராமம். படிப்பறிவு கொஞ்சம் கம்மியாக இருந்த கால கட்டத்தில் பிறந்த காரணத்தால் புத்தக வாசனை பள்ளிக்கூடத்தின் மூலமாகவே கிடைத்தது. மூன்றாவது படிக்கும் போது என்று நம்புகிறேன், ராணி காமிக்ஸ் அறிமுகமாகி அன்றிலிருந்து காமிக்ஸ்ஸின் ரகசிய ரசிகனானேன். மாமாவோ பாடப்புத்தகத்தை தவிர வேறு புத்தகத்தைக் கையில் பார்த்து விட்டார் என்றால் மண்டையில் அழுந்த ஒரு குட்டுப் போடுவார்.  மாமாவின் குட்டுக்குப் பயந்து மர பீரோவின் அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் சில கிழிந்து போன, கசங்கிப் போன காமிக்ஸ் புத்தகங்கள். எல்லாம் தெரிந்த மாமா இதுவரையிலும் மரபீரோவின் அடியில் எதையும் தேடுவதே இல்லை. ஏன் என்று எனக்கு இன்றைக்கும் புரியவில்லை.

இப்படியான ஹிட்லர் வீட்டில், அக்கா மூலம் என்றோ ஒரு நாள் அறிமுகமானது மாலைமதி. அந்தக் கதை இன்றைக்கும் என் மனதை விட்டு அகலவில்லை. ஏன் என்று தெரியவில்லை. பழைய புத்தக கடைகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்த மாலைமதி கிடைத்து விடுமா என்ற நப்பாசையில் தேடிப் பார்ப்பேன். கிடைக்காது. செல்லம்மாவின் சமையல் குறிப்புகளாவது கிடைக்குமா என்று கூட பக்கங்களில் படருவேன். செல்லம்மா கால ஓட்டத்தில் காணாமல் போகும் குழந்தைப் பருவ நினைவுகள் போல காணாமல் போய்விட்டார்.

தொடர்ந்து எழுத்தாளர் சுபாவின் நாவல்களும், அட்டைப்படத்தின் மூலம் கேவி ஆனந்த்தும் எனக்கு தெரிய வந்தனர். சுபாவின் நாவல்களின் அட்டைப்படங்கள் ஒவ்வொன்றும் படு அசத்தலாய் இருக்கும். ஆரம்ப கட்டம் அல்லவா? பார்க்கும் புத்தகங்கள் எல்லாம் திகிலைக் கிளப்பிக் கொண்டிருந்தன. சுபாவின் தூண்டில் முள் நாவல் என்னை கலவரப்படுத்திய ஒன்று. அவரிடமிருந்து என் கடிதத்திற்கு ஒரு பதில் கடிதம் கூட வந்தது. அதன் பிறகு அவர் எழுத்தின் மீதான வாசிப்பு எனக்கு திகட்ட ஆரம்பித்தது. நரேன், வைஜெயந்தியின் உரையாடல்கள் அலுப்பினைத் தர ஆரம்பித்தது. நரேனின் சாகசங்கள் வயதானது போல தோன்றின. பிகேபியின் பரத், சுசீலா கூட அப்படித்தான் ஆகிப் போனார்கள்.

தொடர்ந்த என் வாசிப்பு, கல்லூரிப் படிப்பின் போது, ஜானகி ராமனின் மோகமுள் புத்தகத்தில் வந்து நின்றது. பூண்டிக் கல்லூரியின் நூலகருக்கு எனக்கு பதில் சொல்லிச் சொல்லியே சலித்து இருக்கும். மூன்று வருடப் படிப்பின் போது ஜானகிராமனின் மோகமுள் என்னிடம் சிக்கவே இல்லை. ஆனால் மோகமுள்ளின் மீதான பிறரின் பார்வைகள் மிகப் பெரும் ரகசிய ஆர்வத்தை அதன் மீது ஏற்படுத்திக் கொண்டே இருந்தன. குமுதத்தில் வெளி வந்த மோகமுள் திரைப்படத்தின் கதா நாயகி அர்ச்சனா ஜோக்லேகர் எனது டைரியின் பக்கத்தில் நிரந்தரமாய் படமாக ஒட்டிக் கொண்டாள். அவளைப் பார்க்காது டைரியில் ஒரு எழுத்துக் கூட எழுத மாட்டேன்.

வாழ்க்கைச் சூழலின் மாறுபாட்டினால் கல்லூரிப் படிப்பு முடிந்து கல்யாணம் முடிந்து ஓடிக் கொண்டிருந்த போது, மோகமுள் மனதின் அடியாளத்தில் புதைந்து போய்க் கிடந்தது.

பவர் கட்டின் பிரதிபலனாக பல நூல்களைப் படிக்க வேண்டிய சூழலுக்கு ஆட்பட்டேன். வீட்டுக்கு அருகில் இருந்த நூலகத்தில் உறுப்பினராய்ச் சேர்ந்து புத்தக அலமாரியை அணுகிய போது மனதுக்குள் ஒளிந்து கிடந்த “மோகமுள்” மெதுவாக வெளிவந்தது. நூலகரிடம் விசாரித்த போது இல்லையென்ற பதில் மோகமுள்ளின் மீதான ஆவலை மேலும் அதிகப்படுத்தியது.

இப்படியான தேடலில் போன சனிக்கிழமை அன்று ஓரிடத்தில் பிடித்தே விட்டேன் மோகமுள்ளை. யமுனாவின் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தழுவிக் கொள்ள, திரைப்பட மோகமுள் யமுனாவிற்கும் ஜானகிராமனின் மோகமுள் யமுனாவிற்கும் எந்த வித தொடர்பும் இன்றி இருப்பதைக் கண்டு மனது அதிர்ந்தது.

ஜானகி ராமனின் யமுனா ஒரு முழு நிலவு(?). அவளைத் தரிசித்துக் கொண்டிருக்கிறேன். 20 வருட ரகசியப் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்


குறிப்பு : மோகமுள் திரைப்பட கதா நாயகி அர்ச்சனா ஜோக்லேகர் ஒரு கதக் நடன மாது. அவரின் வெப்சைட்டை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இதோ அவரின் வெப்சைட் முகவரி.







Saturday, April 28, 2012

மனதுக்கு வலி தரும் காதல்

மூளை முதல் கொண்டு நரம்புகள் அனைத்தும் விரைத்து இதயம் துடி துடிக்க, உதிர அணுக்கள் எல்லாம் காதலியின் பெயரை உச்சரித்துக் கொண்டு உடம்பெல்லாம் பரவ, உதிரச் சூட்டின் வலி தாளாமல் உடல் சோர்ந்து வீழ, மனது வெந்து வெதும்பி வீழ, காதலியின் வருகைக்காக வரும் வழி பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துப் போக, காதலியின் குரல் கேளாமையால் காதுகள் எல்லாம் பஞ்சடைத்து போக மொத்தத்தில் அவளின் நினைவாலே உருமாறிப் போய் நிற்கும் காதலனின் தவிப்பை கமல் இக்காட்சிகளின் வழியே உருவகப்படுத்துவார்.

இதோ அந்தப் பாடலும் காட்சியும் உங்களுக்காக.



- ப்ரியங்களுடன் 
கோவை எம் தங்கவேல்

Friday, April 27, 2012

போலி பிஸ்கட்டுகள் ஜாக்கிரதை

எனது நண்பரொருவர் வீட்டுக்கு வந்த போது பிரிட்டானியா மேரி கோல்ட் பிஸ்கட் பாக்கெட் மற்றும் சில தின் பண்டங்களை வாங்கி வந்தார். அன்று மாலை டீயுடன் மூன்று பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டேன். இரவு வயிறு மந்தமாக இருந்ததால் ஒரே ஒரு தோசையுடன் இரவு உணவை முடித்து விட்டேன். நடு இரவில் வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. எழுந்து உட்கார்ந்ததும் வியர்த்தது. வயிற்றுக்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று புரிந்து கொண்டேன். வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுத்தேன். மாலை நான்கு மணிக்கு சாப்பிட்ட பிஸ்கட் இரவு 11 மணி வரை ஜீரணம் ஆகாமல் இருந்தது.

மறு நாள் காலையில் நண்பருக்கு போன் செய்து பிஸ்கெட் எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டேன். பிரபல பேக்கரி ஒன்றின் பெயரைச் சொன்னார். யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை.

டீத்தூளில் கலப்படம், பாலில் உரக்கலப்படம், பிஸ்கட்டில் போலி,இட்லி மாவில் சோடியம் என்று இன்னும் என்னென்ன செய்திருக்கின்றார்களோ தெரியவில்லை. கடைகளில் வாங்கிச் சாப்பிடக்கூடிய ஒவ்வொரு உணவுப் பொருளிலும் விஷம் விஷம் விஷம்.

மனச்சாட்சியைத் தொலைத்து விட்டு மனிதர்கள் மிருகமாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் நவ நாகரீக இந்தியப் பொருளாதார சந்தையின் பின் விளைவுகள். சாட்டிலைட் டீவிக்கள் வீட்டின் வரவேற்பறையில் விளம்பரங்களின் போதை மருந்தை தெளிப்பதன் விளைவு மனிதர்கள் தேவையற்ற பொருட்களுக்கு ஆசைப்படுகின்றார்கள். அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கிறது. நேர்மையாக உழைத்தால் உழைப்பவனுக்கு பைசா லாபம் கிடைக்காது என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். வேறு வழி இன்றி இப்படியான நச்சுக் கொலைகளில் இறங்குகின்றனர்.  

இந்திய மக்கள் பேராசையின் பிடியில் சிக்க வைக்கப்படுகின்றார்கள். எல்சிடி டிவி இருந்தாலே அவன் பணக்காரன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் எல்யிடி டிவி, பிளாஸ்மா டிவி என்று அலப்பறை செய்து கொண்டிருக்கிறார்கள். 40,000 ரூபாய் கொடுத்து வாங்கிய எல்சிடி இனி குப்பைக்குச் செல்லும். எல்யிடிக்கு அடுத்து என்ன டிவியோ? தினமொரு புதுப் பொருள் உதிக்கின்றது. பழைய பொருள் மார்க்கெட் போகின்றது. செல்போனை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைச் சந்திக்கும் நண்பர்கள் இன்னுமா பழைய போனை வைத்துக் கொண்டிருக்கிறாய் என்று நிச்சயமாய் கேட்பார்கள். அவர்கள் வைத்து இருக்கும் புது போனும் அடுதத ஆறு மாதத்தில் பழைய போனாகி விடும். இப்படியே தங்களிடம் இருக்கும் பணத்தினை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டே இருக்கின்றார்கள்.

உலகச் சந்தைப் பொருளாதாரத்தின் அசுரக் கைகள் மக்களின் மூளைகளை காலி செய்து கொண்டிருக்கின்றன.

இத்துடன் இது முடியவில்லை. மேலும் மேலும் மனித குலத்திற்கு தீங்குகள் வரிசை கட்டி வந்து கொண்டே இருக்கும். 

வாழ்வதற்கு என்னென்ன தேவையோ அதை மட்டுமே வைத்துக் கொண்டு வாழ்பவர்கள் சந்தோஷ வாழ்க்கை வாழ்கின்றார்கள். ஞாயிறு தோறும் குழந்தைகளுடன் ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்லுபவர்களின் குடும்பங்களில் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

வாழ்க்கையிலும் போலிகள் புக ஆரம்பித்திருக்கின்றன. ஆகவே நண்பர்களே போலிகள் ஜாக்கிரதை.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Sunday, April 22, 2012

முதன் முதலாய் பரபரப்புச் செய்தி பத்திரிக்கையில் எழுதுகிறேன்

பரபரப்புச் செய்தி என்ற அரசியல் பத்திரிக்கையில் முதன் முதலாய் எழுத ஆரம்பித்திருக்கிறேன். முதல் கட்டுரை வெளிவந்து இருக்கிறது. முதல் கட்டுரையே அசுர அடியாய் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறேன். பத்திரிக்கை சென்னை மற்றும் கோவையில் கிடைக்கிறது. விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் படியுங்கள். நிச்சயம் நீங்கள் விரும்பும்படியான கட்டுரைகளை எழுதுவேன் என்று நம்புகிறேன். 



- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல் 

அக்குவாமரின் கற்கள் (Aquamarine Stones)



வாழ்க்கையில் பிரச்சினைகளே இல்லாத மக்கள் இல்லவே இல்லை. தினமும் ஒவ்வொரு பிரச்சினை அதனால் ஏற்படும் மன உளைச்சல், மனவழுத்தம் என்று மனிதர்கள் நோய்களின் பிடிகளில் விழுகின்றார்கள். 

பிரச்சினையே வராமல் வாழ இவ்வுலகில் இடமே இல்லை. இடத்திற்கு தக்கவாறு, ஆளுக்குத் தக்கவாறு பிரச்சினைகள் நம்மைத் தொடர்ந்து கொண்டே தான் வரும்.

சிலருக்கு பிரச்சினைகள் வந்தால் குடியே முழுகிப் போனது போல தவித்துப் போய் விடுவார்கள். சிலர் மனதுக்குள் போட்டுப் புழுங்கிப் புழுங்கி மன நோய்க்கு ஆட்படுவார்கள். சிலர் கோபம் கொண்டு அடாத செயல்களைச் செய்ய முயல்வார்கள். சிலர் அவர்களுக்கே தெரியாமல் ஒரு பிரச்சினைக்காக பல பிரச்சினைகளைக் கிளப்பி மாட்டிக் கொள்வார்கள்.

யாரோ ஒரு சிலர் பிரச்சினைகள் வந்தால் இன்பமாய் அதை “டீல்” செய்வார்கள். பிரச்சினைக்கே பிரச்சினையை உருவாக்குவார்கள். பிரச்சினை அலறி அடித்து ஓடிப் போய் விடும். இப்படிப்பட்டவர்களிடம் மன அமைதி ஒரே மாதிரியாக இருக்கும்.

அப்படிப்பட்ட மன அமைதி தேவையெனில் சில கற்களை அணிந்து கொள்ளலாம் என்றுச் சொல்வார்கள். அதைக் காரணமாய் வைத்துக்கூட மன அமைதி கிடைக்கலாம். அப்படி ஒரு கற்களில் முதன்மையானது “அக்குவாமரின்” என்ற கற்கள்.

இக்கற்களைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கீழே இருக்கும் இணைப்பில் படித்துக் கொள்ளுங்கள்.
என்னிடம் பாலீஸ்டு, சர்ட்டிபைடு அக்குவாமரின் கற்களும், ரா கற்களும் இருக்கின்றன. மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு விற்க விரும்புகிறேன். மேற்கண்ட கற்கள் தேவைப்படுவோர் தங்களைப் பற்றிய விபரங்களுடன் எனக்கு எழுதவும்.

எனது மெயில் முகவரி : covaimthangavel@gmail.com 

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்.

சித்திரை மாதத்தில் பிறந்தால் சாதிக்கலாமா?

சித்திரை மாதம் பிறந்தால் நல்லது அல்ல என்று சொல்லுவார்கள். ஆனால் சித்திரை மாதத்தில் தான் சார்லி சாப்ளின், விக்டோரியா மகாராணி, சாமுவேல் ஜான்சன், ராணி எலிசபெத், மாவீரன் அலெக்ஸாண்டர், கார்ல் மார்க்ஸ், டார்வின், ஷேக்ஸ்பியர், லெனின், மனோன்மணியம் சுந்தரனார், பாவேந்தர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றோர்கள் சித்திரை மாதத்தில் தான் பிறந்திருக்கின்றனர் என்று தினமணியில் எழுதி இருந்தார்கள்.

ராணிகளைத் தவிர மற்ற அனைவரும் சின்னஞ் சிறு வயதில் பட்ட துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள், ஏச்சுக்கள், பேச்சுக்கள் பற்றிப் பேச ஆரம்பித்தால் சித்திரையில் பிறந்து சாதித்தவர்கள் பட்ட துயரங்களை விட சாதித்தவை பெரிதாக இருக்க முடியுமா என்று எனக்குப் புரியவில்லை.

துன்பங்கள் தான் வாழ்க்கையைச் செம்மைப் படுத்த இயலும் என்பார்கள். எனக்குப் பிடித்த அப்துற் றஹீம் அவர்கள் “வாழ்க்கை ஒரு முள் செடி போன்றது, அதில் பூத்திருக்கும் பூவில் இருக்கும் தேனை முள் குத்தாமல் சாப்பிட வேண்டும். சாப்பிடாமல் இருக்கவே முடியாது” என்பார்.

வாழ்க்கை எல்லோருக்கும் இன்பமானதாய் இருந்ததாய் யாரும் சொல்லவில்லை. விரலுக்கேற்ற வீக்கம் போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. ஏழைக்கு ஒரு பிரச்சினை,பணக்காரனுக்கு ஒரு பிரச்சினை என்று பிரச்சினை இல்லாதோரை இவ்வுலகத்தில் காணுவதே அரிதென்றாகி விட்டது.

எந்த மாதத்தில் பிறந்தாலும், பிறப்பவர்களுக்கு பிரச்சினை வரத்தான் செய்கிறது. மாதத்தில் எதுவும் இல்லை, மனதில் தான் வாழ்க்கையின் இன்பமே இருக்கிறது என்கிறார் எனது ஆன்மீகவாதி நண்பர் ஒருவர்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்.

Friday, April 20, 2012

குழந்தைகளின் அழுகுரல்கள் அம்மாவிற்கு கேட்கவில்லையா?




உறவினரின் வீட்டுக்கு குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்காக சென்றிருந்தேன். நகரமைப்பின் விதிகளுக்கு ஏற்ப நெருக்கமாய் கட்டப்பட்ட அழகிய வீட்டின் முன்பு நீண்ட வராந்தா, இடது பக்க சந்து வழியாக சிலுசிலுவென வீசும் காற்று.  பத்துக்குப் பத்து கிச்சன், பத்துக்கு பனிரெண்டு சைசில் ஒரு ஹால், பத்துக்கு பத்து சைஸில் ஒரு பெட்ரூம், பத்து நான்கு அடியில் ஒரு பாத்ரூம். இவ்வளவுதான் வீடு. மாத வாடகை ஐந்தாயிரம் ரூபாய். இதில் தண்ணீருக்கு தனி கட்டணம், மின்சாரத்திற்கு தனி கட்டணம். மாதம் கிட்டத்தட்ட 7000 ரூபாய்க்கு மேல் வந்து விடும் என்று வைத்துக் கொள்ளலாம். இத்துடன் செலவு கணக்கை முடித்துக் கொள்வோம். இவ்வளவு வாடகை கொடுத்து, ஏன் தங்க வேண்டும். வீடு என்பது எல்லோருக்கும் தங்குமிடம் என்பதாகத்தான் புரிந்திருக்கும். ஆனால் வீடு என்பது அதற்கும் மேலே. வீடு மனிதனின் உயிர் நாடி. அவன் வாழ்வதும் வீழ்வதும் வீட்டில்தான். வீடு இல்லையென்றால் மனிதன் ஒரு அற்பன். காற்றில் பறந்து செல்லும் பஞ்சு போல அவனது வாழ்க்கை மாறி விடும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வீட்டில், பெரும்பான்மையான நடுத்தர வருவாய் குடும்பங்களில் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன.



இரவு எட்டு மணி வாக்கில் வராந்தாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஒன்பது மணிக்கு பவர் கட் ஆனது. காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. பத்து மணியிலிருந்து பதினோறு மணி வரை மின்வெட்டு, பிறகு ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை மின்வெட்டு என்று இரண்டு மணிகளுக்கு ஒரு முறை இரவில் மின்வெட்டு நிகழ்ந்தது. வீட்டிற்குள் வெப்பம் மைக்ரோவேவ் ஓவன் போல தகித்தது. சூடு தாங்காமல் வீட்டுக்கு வெளியில் வந்தால் பெரும்பான்மையான வீட்டின் வாசல்களில் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். ஒரு மணி நேரம் மின்வெட்டினைச் சமாளிக்கத் தூக்கத்தை இழக்க வேண்டி தெருவில் நின்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந்தார்கள். சூடு தாங்காமல் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் அழ ஆரம்பித்தன. தெருவெங்கும் குழந்தைகளை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடந்து கொண்டிருந்தனர் தகப்பன்கள். அந்த நேரத்தில் அவர்கள் செய்யும் அர்ச்சனைகளை காது கொடுத்துக் கேட்க முடிவதில்லை. விடிகாலை நான்கு மணிக்கு வேலைக்கு கிளம்புவோர் தூக்கமின்றி தவிக்கின்றனர். வண்டியில் செல்வோர் ஒரு நிமிடம் அசந்தால் ஆக்சிடெண்ட் ஆகின்றது. சரியான தூக்கமின்மையால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினை தலைதூக்குகின்றன. பாட்டரி வாங்கி வைத்தால் கூட சமாளிக்க முடியவில்லை. பாட்டரி சார்ஜ் ஆனால் தானே தொடர்ந்து இயங்கும்.  கண்மண் தெரியாமல் குடித்து விட்டு போதையில் சாலையோரம் கிடப்போர்தான் இந்த மின் வெட்டிலும் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை மக்களுக்கு மட்டும் இரண்டு மணி நேரம் மின்வெட்டினை அமல்படுத்திய தமிழக அரசு பிற மாவட்ட மக்களுக்கு பனிரெண்டு மணி நேரம் மின்வெட்டினை பரிசாய் அளிக்கிறது. சென்னை மக்கள் இரண்டு வரிகள் கட்டுகின்றார்களா? இல்லை அவர்கள்தான் தமிழகத்தில் வாழ உரிமை உள்ளவர்களா? அங்கும் பனிரெண்டு மணி நேரம் மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டியதுதானே? ஏன் செய்யமாட்டேன் என்கிறார்கள்.

வீட்டுக்குள் தூங்கவும் முடியாமல், நிம்மதியின்றி தவிக்கும் சென்னை தவிர்த்த பெரும்பான்மையான தமிழக மக்களின் குழந்தைகள் வெப்பம் தாளாமல் இரவில் அலறுகின்றன. அம்மாக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றார்கள். தந்தைகள் துயரம் தாளாமல் மனதுக்குள் அழுகின்றனர். சீராட்டி, பாராட்டி வளர்க்கும் குழந்தைகளுக்கு தூக்கமில்லை. குழந்தைகள் தூங்கவில்லை என்று பெற்றோரும் தூங்கவில்லை. மொத்தத்தில் தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்ட மக்கள் தூக்கமின்றித் தவிக்கின்றார்கள்.

தாயுள்ளத்தோடு தமிழர்களின் முன்னேற்றத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கும் “அம்மா” அவர்கள் தமிழர்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு தேவையான மின்சாரத்தினை குறைந்த பட்சம் இரவில் எந்த வித மின்வெட்டும் இன்றி வழங்க ஆவண செய்ய வேண்டும். கோவையின் பெரும்பான்மையான இடங்களில் இரவுகளில் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை திருப்பி விட்டு, குடியிருப்புப் பகுதிக்கு மின்வெட்டினை அமுல்படுத்துகின்றார்கள் (பணம் பெற்றுக் கொண்டு) என்று காற்று வாக்கில் செய்திகள் கசிகின்றன. அதை உடனடியாக அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும்.

குழந்தைகள் அழுகின்றன ! அம்மா கவனிக்கவில்லை என்று !

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Monday, April 16, 2012

சவக்கடை (அனைவரும் படியுங்கள் ப்ளீஸ்)




எனக்காக இன்றைக்கு மட்டும் ஒரு ஒரு தடவை என்று ஆரம்பிக்கப்படும் குடி, அடுத்து மாதமொருமுறை என்று மாறும். அடுத்து வாரம் ஒரு முறை என்றாகும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று மாறி, பின்னர் வீட்டிலேயே குடிக்கலாம் என்று (உபயம் : தமிழ் சினிமாக்கள்) மாறி, பின்னர் தினம் தோறும் ஒரு சுமால் பிறகு ஆஃப் என்று தொடர்ந்து புல் ஆகி விடும். பிறகு குடிக்காமல் இருந்தால் கைகள் நடுங்க ஆரம்பித்து, வேறு வழி இன்றி தினமும் உணவு போல குடி மாறி விடும். நோய்கள் உருவாகும். மருத்துவம் ஆரம்பிக்கும். குடிக்கான சிகிச்சை ஆரம்பிக்கும். 

முடிந்து வீடு வருபவருக்கு, ஒரு சொட்டு குடித்தால் என்ன என்று தோன்றும். வீட்டுக்குத் தெரியாமல் குடிக்க ஆரம்பிப்பார். நடுக்கமெடுத்த கைகள் குடியை நிறுத்தி மீண்டும் குடிக்க ஆரம்பித்த பிறகு தன்னை அறியாமலே உளற ஆரம்பிப்பார்கள். மனைவியை சந்தேகப்பட ஆரம்பிப்பார்கள். உறவினர்களுடன் வம்புக்குச் செல்வார்கள். நண்பர்களுடன் சண்டைக்குப் போவார்கள். வெளியிடங்களில் குடித்து விட்டு விழுந்து கிடப்பார்கள். ஆல்கஹால் உடம்பை முழுவதும் ஆக்ரமித்து இருக்கும் சூழலில் மனைவியை அல்லது நண்பர்களை கடித்து வைப்பார்கள். 

இந்த நிலை தான் ஆல்கஹால், தனக்கு அடிமையானவனை முடித்துக் கட்டக் கூடிய நிலை. அடுத்து திடீரென தற்கொலைக்கு முயல்வார்கள். ஆல்கஹால் இதைத்தான் செய்கிறது. குடிக்கும் மனிதனை கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் சமூகத்தில் மிகக் கேவலமான நிலைக்குத் தள்ளி கொன்று போடும். 

மானம் போய், மரியாதை போய், காசு போய், முடிவில் உயிரும் போய் விடும். குடும்பமும் நடுத்தெருவில் நிற்கும். குடிகாரன் மனைவி, குடிகாரன் மகள், மகன் என்று சமூகத்தில் ஒரு அடையாளமும் இலவசமாய் கிடைக்கும். 

யார் யாரெல்லாம் பீர் குடிக்கின்றார்களோ (வெயிலுக்கு குடிக்கிறேன் பேர்வழி என்று அலப்பறை செய்யும் லூசுகள்) அவர்களுக்கும் இதே நிலைதான். ஆல்கஹாலை எவன் ஒருவன் விரும்புவானோ அவனை அது பேயாய் பிடித்துக் கொள்ளும். எனது நண்பனொருவரின் அண்ணன் குடியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கொஞ்சம் கொஞ்சமாய் ஆல்கஹாலின் பிடியில் எப்படி விழுந்தார் என்பதைத்தான் மேலே எழுதி இருக்கிறேன். ஆல்கஹால் குடிப்பது என்பது ஃபேஷன் அல்ல அது கொஞ்சம் கொஞ்சமாய் உடலுக்குள் ஆக்ரமித்துக் கொல்லும் விஷம். குடிப்பவர்கள் உடனடியாக நிறுத்துங்கள். இல்லையென்றால் நீங்கள் கொல்லப்படுவீர்கள்.

டாஸ்மாக் என்பது சவமாய் மாற மனிதர்களை ஊக்குவிக்கும் ஒரு சவக்கடை என்பதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருக்கிறதா?

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

வெயிலில் நில்லுங்கள் வியாதியை துரத்துங்கள்



டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரையைப் படித்தேன். நண்பர்களுக்கு உடனடியாக தெரிவித்து விட வேண்டும் என்ற ஆவலில் இந்தப் பதிவு. 

விட்டமின் டி நம் உடலுக்குத் தேவையான ஒரு சத்து, இந்தச் சத்து கால்சியம் சம்பந்தமான பொருட்களை ஜீரணிக்கவும், அதை வெளியேற்றவும், எலும்புகளுக்கு உறுதியைத் தரவும் உதவுகின்றது. 60 பர்சண்டேஜிலிருந்து 90 பர்செண்டேஜ் இந்தியர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் விட்டமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விட்டமின் டியை பால் மற்றும் உணவு எண்ணெயில் சேர்த்தல் நலம் பயக்கும் என்பதாகும் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

பால், எண்ணெய் பொருட்கள் மனிதனுக்கு கொழுப்பை உருவாக்கும் என்பதாலும், விட்டமின் டி மாத்திரைகள் அவ்வளவு நல்ல பலனை தராது என்பதாலும் இயற்கையில் கிடைக்கும் விட்டமின் டியைப் பெறுவதே சாலச் சிறந்தது என்கிறார்கள்.

மனித உடலின் இருபது சதவீத பகுதியை வாரத்தில் இரண்டு முறை பதினைந்து நிமிடம் வெயிலில் காட்டினால் நம் உடலுக்குத் தேவையான விட்டமின் டி கிடைத்து விடும். சூரிய ஒளியில் நீச்சலடிப்பது, சூரிய ஒளியில் விளையாடுவது போன்றவையும் விட்டமின் டி உடலில் சேர உதவும். இந்த விட்டமின் டி பற்றாக்குறையால் " Cardio Vascular Disease, Rickets and Osteoporosis" நோய்கள் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.

பானிபூரி சாப்பிடுவோரே ஜாக்கிரதை என்கிற பதிவின் பின்னூட்டத்தில் இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம் என்று நண்பர்கள் கேட்டிருந்தார்கள். இதோ சில விபரங்கள்.

பானி தண்ணீரில் புளிப்புச் சுவைக்காக சாட் மசாலாவுடன், மோனோ சோடியம் குளுடோ மேட் என்கிற கெமிக்கல்ஸ் சேர்த்து அதிகப் புளிப்புத் தன்மையை ஏற்றுகிறார்கள். அத்துடன் ரசாயனச் சாயங்களும் கலக்கப்படுகின்றனவாம். இந்தக் கலவையை இரண்டு நாட்களுக்கும் மேல் ஊற வைத்து, அதனுடன் புதினா, கொத்தமல்லி கலந்து விற்பனைக்கு கொண்டு வருகின்றார்கள். அதீத புளிப்புச் சுவை கொண்ட இந்த வகை பானி, அல்சரை உருவாக்கும். அல்சர் இருப்பவர்கள் தொடவே கூடாது. அதுமட்டுமல்ல இப்பானியைச் சாப்பிட்டால் உடனடி வயிற்று வலியுடன், நாள்பட பசியும் அறவே குறைந்து போய் விடும். சாலையோரங்களில் விற்கப்படும் இவ்வகை இன்ஸ்டண்ட் உணவு வகைகள் தயாரிப்பாளர்கள் சாப்பிடும் நபர்களின் ஆரோக்கியத்தை ஒரு கணம் கூட எண்ணிப் பார்ப்பதே இல்லை.

எனது ஆரம்ப காலங்களில் நான் பெரும்பாலும் சற்றே சுத்தமான இடங்களில் இருக்கும் சாலையோரக் கடைகளில் எப்போதாவது சாப்பிட்டு வந்தேன். ஒரு முறை மனைவி வெளியூர் சென்றிருந்த சமயம், குழந்தைகளுடன் எனக்கு நன்கு அறிமுகமான நண்பரொருவரின் சாலையோரக்கடையில் ஆளுக்கு நான்கு இட்லி சாப்பிட்டு வந்தோம். அதன் பலனாய் மூவருக்கும் வாய்ப்புண் உண்டாகி, தொண்டையில் அழற்சி ஏற்பட்டு காய்ச்சல் வந்து விட்டது.

விசாரித்துப் பார்த்தால் இட்லி மாவில் புளிப்புச் சுவைக்காக சோடியம் தண்ணீர் கலப்பதாக அறிந்தேன். ஒரு வாளியில் தண்ணீர் போன்ற ஒன்றினைக் கொண்டு வந்து அளவாக கலந்து இட்லி தோசை மாவுகள் விற்பனையாளர்கள் விற்கின்றார்கள்.அதுமட்டுமல்ல சில ஹோட்டல்களில் விற்கும் மீன் குழம்பில் இதே சோடியம் கலந்த தண்ணீர் கலக்கப்பட்டு வருகின்றனவாம்.

காசு போனாலும் பரவாயில்லை என்று உயர்தரமான ஹோட்டல்களில் தயிர்சாதம், கொஞ்சம் காய்கறிகள் சாப்பிடுவதே சாலச் சிறந்தது என்கிறார் எனது நண்பரொருவர். இன்னொரு நண்பரோ பேசாமல் பழக்கடையை நோக்கிச் சென்று விடலாம் என்றார். ஆனால் பழங்கள் உடலுக்கு நன்மையைத் தருகிறதா என்று கேட்டால் மருத்துவ நண்பரொருவர் சொன்ன சில விபரங்கள் அதிர்ச்சி அளிப்பனவாக இருந்தன. அது என்ன? விரைவில்

ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்