குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label மின்வெட்டு. Show all posts
Showing posts with label மின்வெட்டு. Show all posts

Friday, April 20, 2012

குழந்தைகளின் அழுகுரல்கள் அம்மாவிற்கு கேட்கவில்லையா?




உறவினரின் வீட்டுக்கு குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்காக சென்றிருந்தேன். நகரமைப்பின் விதிகளுக்கு ஏற்ப நெருக்கமாய் கட்டப்பட்ட அழகிய வீட்டின் முன்பு நீண்ட வராந்தா, இடது பக்க சந்து வழியாக சிலுசிலுவென வீசும் காற்று.  பத்துக்குப் பத்து கிச்சன், பத்துக்கு பனிரெண்டு சைசில் ஒரு ஹால், பத்துக்கு பத்து சைஸில் ஒரு பெட்ரூம், பத்து நான்கு அடியில் ஒரு பாத்ரூம். இவ்வளவுதான் வீடு. மாத வாடகை ஐந்தாயிரம் ரூபாய். இதில் தண்ணீருக்கு தனி கட்டணம், மின்சாரத்திற்கு தனி கட்டணம். மாதம் கிட்டத்தட்ட 7000 ரூபாய்க்கு மேல் வந்து விடும் என்று வைத்துக் கொள்ளலாம். இத்துடன் செலவு கணக்கை முடித்துக் கொள்வோம். இவ்வளவு வாடகை கொடுத்து, ஏன் தங்க வேண்டும். வீடு என்பது எல்லோருக்கும் தங்குமிடம் என்பதாகத்தான் புரிந்திருக்கும். ஆனால் வீடு என்பது அதற்கும் மேலே. வீடு மனிதனின் உயிர் நாடி. அவன் வாழ்வதும் வீழ்வதும் வீட்டில்தான். வீடு இல்லையென்றால் மனிதன் ஒரு அற்பன். காற்றில் பறந்து செல்லும் பஞ்சு போல அவனது வாழ்க்கை மாறி விடும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வீட்டில், பெரும்பான்மையான நடுத்தர வருவாய் குடும்பங்களில் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன.



இரவு எட்டு மணி வாக்கில் வராந்தாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஒன்பது மணிக்கு பவர் கட் ஆனது. காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. பத்து மணியிலிருந்து பதினோறு மணி வரை மின்வெட்டு, பிறகு ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை மின்வெட்டு என்று இரண்டு மணிகளுக்கு ஒரு முறை இரவில் மின்வெட்டு நிகழ்ந்தது. வீட்டிற்குள் வெப்பம் மைக்ரோவேவ் ஓவன் போல தகித்தது. சூடு தாங்காமல் வீட்டுக்கு வெளியில் வந்தால் பெரும்பான்மையான வீட்டின் வாசல்களில் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். ஒரு மணி நேரம் மின்வெட்டினைச் சமாளிக்கத் தூக்கத்தை இழக்க வேண்டி தெருவில் நின்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந்தார்கள். சூடு தாங்காமல் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் அழ ஆரம்பித்தன. தெருவெங்கும் குழந்தைகளை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடந்து கொண்டிருந்தனர் தகப்பன்கள். அந்த நேரத்தில் அவர்கள் செய்யும் அர்ச்சனைகளை காது கொடுத்துக் கேட்க முடிவதில்லை. விடிகாலை நான்கு மணிக்கு வேலைக்கு கிளம்புவோர் தூக்கமின்றி தவிக்கின்றனர். வண்டியில் செல்வோர் ஒரு நிமிடம் அசந்தால் ஆக்சிடெண்ட் ஆகின்றது. சரியான தூக்கமின்மையால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினை தலைதூக்குகின்றன. பாட்டரி வாங்கி வைத்தால் கூட சமாளிக்க முடியவில்லை. பாட்டரி சார்ஜ் ஆனால் தானே தொடர்ந்து இயங்கும்.  கண்மண் தெரியாமல் குடித்து விட்டு போதையில் சாலையோரம் கிடப்போர்தான் இந்த மின் வெட்டிலும் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை மக்களுக்கு மட்டும் இரண்டு மணி நேரம் மின்வெட்டினை அமல்படுத்திய தமிழக அரசு பிற மாவட்ட மக்களுக்கு பனிரெண்டு மணி நேரம் மின்வெட்டினை பரிசாய் அளிக்கிறது. சென்னை மக்கள் இரண்டு வரிகள் கட்டுகின்றார்களா? இல்லை அவர்கள்தான் தமிழகத்தில் வாழ உரிமை உள்ளவர்களா? அங்கும் பனிரெண்டு மணி நேரம் மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டியதுதானே? ஏன் செய்யமாட்டேன் என்கிறார்கள்.

வீட்டுக்குள் தூங்கவும் முடியாமல், நிம்மதியின்றி தவிக்கும் சென்னை தவிர்த்த பெரும்பான்மையான தமிழக மக்களின் குழந்தைகள் வெப்பம் தாளாமல் இரவில் அலறுகின்றன. அம்மாக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றார்கள். தந்தைகள் துயரம் தாளாமல் மனதுக்குள் அழுகின்றனர். சீராட்டி, பாராட்டி வளர்க்கும் குழந்தைகளுக்கு தூக்கமில்லை. குழந்தைகள் தூங்கவில்லை என்று பெற்றோரும் தூங்கவில்லை. மொத்தத்தில் தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்ட மக்கள் தூக்கமின்றித் தவிக்கின்றார்கள்.

தாயுள்ளத்தோடு தமிழர்களின் முன்னேற்றத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கும் “அம்மா” அவர்கள் தமிழர்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு தேவையான மின்சாரத்தினை குறைந்த பட்சம் இரவில் எந்த வித மின்வெட்டும் இன்றி வழங்க ஆவண செய்ய வேண்டும். கோவையின் பெரும்பான்மையான இடங்களில் இரவுகளில் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை திருப்பி விட்டு, குடியிருப்புப் பகுதிக்கு மின்வெட்டினை அமுல்படுத்துகின்றார்கள் (பணம் பெற்றுக் கொண்டு) என்று காற்று வாக்கில் செய்திகள் கசிகின்றன. அதை உடனடியாக அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும்.

குழந்தைகள் அழுகின்றன ! அம்மா கவனிக்கவில்லை என்று !

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்