குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, November 24, 2011

பணம் என்றால் என்ன?



பணம் என்கிற பொருள் மனிதர்களின் வாழ்க்கையை நிர்மாணிக்கும் ஒரு சக்தி. பெரும்பகுதி மக்கள் பணத்தேடலில் தான் வாழ்க்கையே அடங்கி இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு அரசு ஊழியரை எடுத்துக் கொள்ளுங்கள். 58 வயது வரையிலும் உழைத்துக் கொண்டிருப்பார். ரிட்டயர்ட்மெண்ட் ஆனதும் கிடைக்கும் பென்ஷனில் நிம்மதியாய் வாழ்கிறோம் என்று நினைக்கும் தருவாயில் அவர் அடையும் மனக்குழப்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அரசு அலுவலில் இருந்து ரிட்டயர்ட் ஆன பல நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது “ மிக மோசமான வாழ்க்கை” என்ற வாக்கியத்தை அவர்களிடமிருந்து கேட்டிருக்கிறேன்.

அரசு வேலை, நிரந்தர வருமானம், நிம்மதியான வாழ்க்கை என்று மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தோம் என்பார்கள் அவர்கள். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் ஏகப்பட்ட நிராசைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களைப் போன்றோர்களுக்கு சொல்வெதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் அடைந்திருக்கும் மனக்குழப்பத்திற்குக் காரணம் சமூகத்தின் பிரதிபலிப்பு. மனித சமூகம் மனிதர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை மட்டுமே முன்னிலைப்படுத்துவதால் வந்த பிரச்சினை இது. இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். அதெல்லாம் மனதைச் சுடும் உண்மைகள். நேரமிருக்கும் போது எழுதுகிறேன்.

கோவை ஆவாரம்பாளையம் சென்றிருந்தேன். போன வேலை முடிந்து பேக்கரி ஒன்றில் “லெமன் டீ” ஆர்டர் செய்து விட்டு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஸ்கோடா கார் ஒன்று அருகில் வந்து நின்றது. நண்பரின் நண்பர் அவர். சாதாரண ரிஸ்ட் வாட்ச், வெகு சாதாரண பேண்ட், சர்ட்டில் இருந்தார். அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் நண்பர். அவருக்கு என்னை மிகவும் பிடித்து விட, “தங்கம், என்னுடன் வருகின்றீர்களா, ஒரு இடத்திற்குச் சென்று வரலாம், நீங்கள் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.

கோவையின் மிகப் பிரதான இடத்தில் புதிதாய் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நான்கு மாடி குடியிருப்புப் பகுதி ஒன்றிற்கு அழைத்து சென்றார். வேலை செய்து கொண்டிருந்தோர் இவரைப் பார்த்ததும் ஒரு வித அட்டென்ஷன் நிலைக்கு வர, இவர்தான் ஓனர் என்று முடிவு கட்டினேன். கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேல் இன்வெஸ்ட்மெண்ட். ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. வெகு சாதாரணமாய் இருப்போரிடம் இப்படி ஒரு திறமை. குடியிருப்பினை பார்வையிட்டு விட்டு, மீண்டும் அந்த ‘லெமன் டீ’ கடைக்கு வந்து சேர்ந்தோம். மார்க்கெட்டிங் செய்வது பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பினேன்.

25 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இன்று ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடு பெருக்கி இருக்கிறது. எப்படி என்ற காரணத்தை அவர் சொல்லக் கேட்டேன். அவர் எதுவும் புதிதாய்ச் சொல்லி விடவில்லை. அவர் சொன்னது எல்லாம் பல புத்தகங்களில் சொல்லப்பட்டிருப்பதுதான்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார். அவரிடம் 50 கோடிக்கும் மேல் சொத்து இருக்கிறது. எவராவது சொந்தக்காரர் வந்தால் 1000 ரூபாய் கொடுக்க அவரால் முடியாது. ஏனென்றால் அத்தனை காசு இருந்தும், அந்தக் காசு அவருக்கு உபயோகப்படவில்லை. அதை வைத்து, அவரால் தொடர்ந்து சம்பாதிக்க முடியவில்லை.  உண்மைக் காரணம் அவருக்கு புத்திசாலித்தனம் இல்லை.

புத்திசாலித்தனம் என்றால் என்ன என்பதற்கு ஒரு கதை.

நிலத்துடன் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் என் நண்பரொருவர் 20 அறைகள் கொண்ட காம்பளக்ஸைக் கட்டினார். அதை பெரிய நிறுவனம் ஒன்று வாடகைக்கு எடுத்தது. மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் வாடகை. இரண்டு தேதிக்குள் வங்கியில் சேர்ந்து விடும். இவ்வளவு வாடகை கொடுக்கும் அந்த நிறுவனத்திற்கு, இந்த வாடகைச் செலவால் மாதம் ஐந்து லட்ச ரூபாய் செலவு மிச்சமாகி லாபமாகி விட்டது. எப்படி என்கின்றீர்களா? அந்த நிறுவனம் வெளி நாட்டில் இருந்து வரும் கிளையண்டுகளுக்கு தங்குமிடம், உணவு என்ற வகையில் தினம் தோறும் 25,000 ரூபாய் செலவு செய்து வந்தது. இப்போது யார் வந்தாலும் தங்குமிடம் ஸ்டார் ஹோட்டலுக்கும் நிகராய் இருக்கிறது. மாத வாடகை ஒன்றரை லட்சத்துடன், அரை லட்சத்தில் உணவுச் செலவும் ஆகிவிடுகிறது. இருவருக்கு லாபம். எவர் கொடுப்பார் ஒரு கோடிக்கு ஒன்றரை லட்சம் வருமானம்? அதுவும் வெள்ளையில். ஒரு கோடி போட்டு, அதன் மூலம் வருமானம் பெற்ற நண்பரும் புத்திசாலி, ஒன்றரை லட்ச ரூபாய் வாடகைக்கு எடுத்த கம்பெனியும் புத்திசாலி. தினம் 5000 ரூபாய் செலவுக்கு நண்பருக்கு பணம் வந்து விடுகிறது. நண்பர் இப்போது அடுத்த புராஜெக்ட்டிற்கு நிலம் வேண்டுமென என்னை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்.

எவர் வேண்டுமானாலும் பணம் வைத்திருக்கலாம். அப்பணம் மேலும் பணத்தினைச் சம்பாதித்துத் தர வேண்டும். இல்லையென்றால் அந்தப் பணம் இருந்து யாருக்கு என்ன பிரயோசனம்? அது மண்ணுக்குச் சமானம் அல்லவா?

பணம் என்பது என்னவென்றால் அது மீண்டும் மீண்டும் பல்கிப் பெருகி வழிய வேண்டும். அப்படிப் பெருகவில்லை என்றால் அப்பணமிருந்தும் இல்லை என்பதே உண்மை.

அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Wednesday, November 16, 2011

ஏமாற்றும் மருத்துவமனைகள்



எனது நண்பரின் நண்பரொருவருக்கு கண்ணில் பிரச்சினை இருப்பது போலத் தோன்றியிருக்கிறது. இந்தியாவில் பிரபலமான ஐ ஹேர் ஹாஸ்பிட்டலுக்குச் சென்றிருக்கிறார். கண்ணில் புரை ஏற்பட்டிருக்கிறது. 25 ஆயிரம் ரூபாய் செலவாகும், உடனே அட்மிட் ஆகுங்கள் இல்லையென்றால் கண் பார்வை போய் விடும் என்றுச் சொல்லி இருக்கிறார். இவருக்கோ பணப்பிரச்சினை வேறு, கண் பார்வை போய்விடுமே என்ற கவலையில் ஆளே ஒரு மாதிரியாகி விட்டார். என்ன செய்வதென்று புரியாமல் மன வேதனையோடு எவரிடமும் சொல்லாமல் திரிந்திருக்கிறார்.

இப்படியான ஒரு நாளில், சரி குலதெய்வத்தின் கோவிலுக்குச் சென்று வருவோம் என்று நினைத்து, கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி விட்டு வந்திருக்கிறார். காலையில் கண்ணில் இருந்த உறுத்தல் குறைந்தது போல இருந்திருக்கிறது. அடுத்த யோசனையாக வேறு கண் மருத்துவமனைக்குச் சென்று செக்கிங்க் செய்து விட்டு வருவோம் என்று நினைத்துச் சென்றவருக்கு, அம்மருத்துவமனையின் பதில் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. கண் புரை இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லி இருந்திருக்கிறார்கள். இதற்கிடையில் ஐ கேர் மருத்துவமனையில் இருந்து “எப்போது வருகின்றீர்கள்” என்று டாக்டரே போனில் அழைத்திருக்கிறார். இவரும் ஏதோ சொல்லிச் சமாளித்திருக்கிறார்.

அத்துடன் விடாமல் மேலும் ஒரு மருத்துவமனைக்குச் சென்று செக்கிங் செய்தால், அங்கும் இவருக்கு கண் புரை நோய் இல்லை என்றேச் சொல்லி இருக்கிறார்கள்.

25 ஆயிரம் ரூபாயை பிடுங்க முயற்சித்திருக்கும் இம்மருத்துவமனை அடிக்கடி டிவியில் விளம்பரங்களையும், பெரிய பெரிய இடங்களில் மருத்துவமனையும் கட்டி வருகிறது.

இந்திய சுகாதாரத்துறை இம்மாதிரியான மருத்துவமனைகளின் திருட்டுத்தனத்தை கட்டுப்படுத்த ஏதுவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒன்றும் கோடிக்கணக்கில் செலவழிக்கும் நடவடிக்கை இல்லை. சரியான திட்டமிடல் செய்தால் இந்தியாவெங்கும் நடக்கும் ஆஃபரேஷன்களைக் கூட கண்காணிக்கலாம். டெக்னாலஜி அந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது. இந்திய அரசு இப்படியான மோசடி மருத்துவமனைகள் நடத்துவோரைக் கண்டறிந்து உடனடியாக ஹாஸ்பிட்டலை மூட வேண்டும். 

கிட்னி திருட்டில் ஈடுபட்ட தமிழக மருத்துவமனைகள் பலவும் தற்போதும் கிட்னி திருடி கல்லாக்கட்டி வருகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. தினசரிகளில் வெளியான கிட்னி திருடிய ஹாஸ்பிட்டல்களின் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் புரியவில்லை. இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தன் செயல்பாட்டினை துரிதப்படுத்தவில்லை எனில் நாளடைவில் மோசடி மருத்துவமனைகள் புற்றீசலாய் பெருகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

உயிரோசையில் வெளிவந்திருக்கும் ஒரு கட்டுரையினை நீங்கள் அனைவரும் படித்தே ஆக வேண்டும். இதோ அதன் இணைப்பு.


அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Tuesday, November 15, 2011

புற்றுநோயை உருவாக்கும் ரீஃபைண்ட் ஆயில்

கீரீம்,  எடிபிள் கம் ஆகியவற்றை எடுத்த பிறகு உருவாகும் எண்ணெய் தான் ரீஃபைண்டு ஆயில். முற்றிலும் தண்ணீர் போன்ற ஒரு திரவம் தான் ரீஃபைண்ட் ஆயில். சமையலில் உணவு பொறிக்கப்படும் போது, அதிகச் சூட்டினால் இந்த எண்ணெய் போன்ற திரவம் முற்றிலுமாய் சிதைந்து விடுகின்றதாம். இந்த எண்ணெய்யை உட்கொள்வதால் தான், ஆஸ்துமா, தைராய்டு, புற்று நோய் ஏற்படுகிறதாம். கூவிக் கூவி மீடியாக்களில் பல்வேறு கலர் கலரான விளம்பரங்கள் மூலம் இன்று சமையல் எண்ணெய் மார்க்கெட் படு சூடு பிடித்திருக்கின்றது. இந்த எண்ணெய் தான் பல்வேறு நோய்களுக்கும் காரணம் என்று விஜயபாரதத்தில் வெளியான கட்டுரையை தினமணிக் கதிர் வெளியிட்டு இருக்கிறது. கீழே இருப்பது அதன் கட்டிங். படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.


நேற்றைய பதிவான “வெள்ளை மரணம் - பரோட்டா” பற்றிய பதிவிற்கு ஒரு சகோதரர் அச்செய்தியை அனுப்பும்படி கோரியிருந்தார். அவருக்காக கீழே அந்தச் செய்தியின் பட இணைப்பை வெளியிட்டு இருக்கிறேன்.

  
குறிப்பு : முடிந்த வரையில் எனது பிளாக்கில் எனது அனுபவங்களையும், நண்பர்களின் அனுபவங்களையும் எழுதி வருகிறேன். படிக்கும் ந்ண்பர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்ற ஆவல்தான் காரணம். பின்னூட்டத்தை நிறுத்தி விட்டேன். என்னை மெயில் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளவும். அல்லது போனில் அழைக்கவும்.

விரைவில் ஹாஸ்பிட்டல்களில் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள உங்களை அறிவுறுத்தும் ஒரு பதிவினை எழுத இருக்கிறேன். இது உங்களுக்கு நிச்சயம் உதவிகரமாய் இருக்கும் என நம்புகிறேன்.

இதைத் தொடர்ந்து லே அவுட்களில் சொத்துக்கள் வாங்குவது பாதுகாப்பானதா என்பதைப் பற்றியும் எழுத உள்ளேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

-அன்புடன் கோவை எம் தங்கவேல்

* * * * *

Monday, November 14, 2011

வெள்ளை மரணம் - பரோட்டா

 
 
 
 
 
நேற்றுக் காலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸை படித்துக் கொண்டிருந்த போது, பரோட்டா பற்றிய பத்தியை படித்தேன். ஆச்சரியமும், வெறுப்பும் ஒருசேர உண்டாகியது.

நன்கு அரைக்கப்பட்ட கோதுமையுடன் பென்சாயில் பெராக்ஸைட் சேர்த்த பின்னர்  உருவாவதுதான் “மைதா”. இந்த மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் எதுவும் உடலுக்கு நன்மை செய்வதை விட தீங்குகளைத் தான் தருமாம். இந்த மைதா மாவை ஐரோப்பியன் யூனியன் தடை செய்திருக்கிறதாம்.

மைதா உணவுகள் கிட்னி ஸ்டோன் உருவாக காரணமாக இருக்கின்றனவாம். அதுமட்டுமல்ல இதய சம்பந்தமான நோய்களையும் உருவாக்கும் என்று கோழிக்கோடு மெடிக்கல் கல்லூரியில் அசிஸ்டண்ட் புரபசராக வேலை செய்யும்டாக்டர் மாயா சொல்லி இருக்கிறார் என்கிறது அப்பத்தி.

தமிழகம் மட்டுமல்ல கேரளாவில் மைதா உணவுகள் அதிக அளவு உண்ணப்படுகின்றன. உடலுக்குத் தீங்கு செய்யும் இவ்வகையான மைதா உணவுகளைத் தவிர்த்தே ஆக வேண்டும். இல்லையென்றால் உடலுக்கு நாமே தீங்கினை கொடுத்தது போலாகி விடும். இது பற்றிய முழு கட்டுரையும் நேற்றைய (13.11.2011) சண்டே எக்ஸ்பிரஸ்ஸில் “ WHITE DEATH ON YOUR PLATE - MAIDA, THE COMMONLY USED WHITE FLOUR, COMES WITH A LONG LIST OF ILL -EFFECTS - BY RAGHURAM.R) இருக்கிறது. எனது டிரைவர் நண்பருக்கு கிட்னி ஸ்டோன் வந்து விட்டது. இத்தனைக்கும் அவர் சுத்த சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர். காரணம் என்னவென்று நேற்றுத்தான் புரிந்தது.
 
இந்திய அரசாங்கம் மக்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் உலகிலேயே அதிக சர்க்கரை வியாதி உள்ள நாடு என்ற அடைமொழி பெற்ற இந்தியா, உலகிலேயே அதிக நோயுள்ளவர்களின் நாடு என்ற அடைமொழியைப் பெற்று விடும் தூரம் அதிகமில்லை. ஆரோக்கியத்திற்கு கேடான எவற்றையும் விற்க அனுமதி மறுக்கப்பட்டாலே போதும். இந்திய அரசு செய்யுமா என்பதெல்லாம் கடவுளுக்கு வெளிச்சம். அரசாங்கம் செய்வதற்கு முன்பு நாம் எந்த உணவுகள் உடலுக்குத் தீங்கு தரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். பரோட்டா உணவு ஆரோக்கியமற்ற உணவு என்பதை. அதையாவது நாம் செய்யலாம்.

ஆரோக்கியத்திற்கு உகந்த எண்ணெய் என்று இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த ஒரு வகை எண்ணெய் பற்றி நாளை எழுதுகிறேன். படித்தவுடன் உங்களுக்கு நிச்சயம் திகில் தான் கிளம்பும். கோவை மட்டுமல்ல தமிழகமெங்கும் கடை விரித்திருக்கும் ஒரு மெடிக்கல் செண்டரில் என் நண்பருக்கு நடைபெற்ற திகில் அனுபவத்தையும் எழுதுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள் !
 
- அன்புடன் கோவை எம் தங்கவேல்

* * * * *


Saturday, November 12, 2011

சிவன்-எமன்-உணவு

 (ராமேஸ்வரம் ஆயிரம் கால் மண்டபம்)
 
சமீபத்தில் ராமேஸ்வரம் சென்று வர சந்தர்ப்பம் கிடைத்தது.  காவிரி புரண்டோடும் இயற்கை கொஞ்சும் அழகிய பூமியான தஞ்சாவூரில் இருக்கும் எனது நெருங்கிய நண்பரொருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நண்பரின் அம்மா, வெகு ஆச்சாரமானவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் சொல்லியது கீழே.

மனிதர்களின் ஆயுள் முடிந்த பிறகு எமன் வந்து பாசக்கயிற்றை வீசி மேலே அழைத்துச் செல்வானாம். அப்போது ஒவ்வொருவரும் எமனைத் திட்டியும், வைதும், பழி போட்டும், இன்னபிறவும் செய்து கடிந்து கொள்வார்களாம். உனது காலம் முடிந்து விட்டது, வா போகலாம் என்றழைத்தாலே வசைமாரி பொழிவார்களாம். எமனுக்கோ ஒரே அவஸ்தை. நானும் ஒரு கடவுள் தானே. தர்மத்தின் தலைவன் அல்லவா நான். என்னை மட்டும் மக்கள் இப்படி வைகின்றார்களே என்ற ஆதங்கத்தில், சிவபெருமானிடம் மக்கள் ஏன் என்னை மட்டும் திட்டுகின்றார்கள், இதற்கொரு வழியை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார். அதன்பிறகு சிறிது நேரம் யோசித்த சிவபெருமான், எமனிடம் இனிமேல் மக்கள் உன்னைத் திட்டமாட்டார்கள் என்றுச் சொல்கிறார். எப்படி என்று உங்களுக்குப் புரிகிறதா?

இன்றைய காலத்தில் ஆக்சிடெண்டில் இறந்து போய் விட்டார், ஹார்ட் அட்டாக்கில் இறந்து போய் விட்டார், காய்ச்சலில் போய் விட்டார், புற்று நோயில் போய் விட்டார், கிட்னிப் பிராப்ளத்தில் போய் விட்டார் என்றுச் சொல்கிறார்கள். எவரும் எமன் கொண்டு போய் விட்டான் என்றுச் சொல்ல மாட்டார்கள். இங்குதான் பகவானின் சூத்திரம் இருக்கிறது என்றார் நண்பரின் அம்மா.

எமனின் வேண்டுகோளினை ஏற்று மனிதர்களுக்கு நோயை உண்டாக்கினார் சிவபெருமான். அன்றிலிருந்து எவரும் எமனைத் திட்டுவதில்லை என்றார். நோய் ஏன் வருகிறது என்று யோசித்துப் பாருங்கள். உணவு, காற்று இவற்றிலிருந்து தான் நோய் வருகிறது. ஆக மனிதனுக்கு நோயை அவன் உண்ணும் உணவின் மூலமாக உண்டாக வைத்தார் சிவபெருமான் என்று முடித்தார் அம்மா.

நண்பர் சாப்பிடலாம் வாங்க என்று அழைக்க, சாப்பிடச் சென்றேன்.

வடை, பாயசம், சாம்பார், ரசம், தயிர், உருளைக் கிழங்கு பொறியல், வாழைக்காய் வறுவல், மரவள்ளிக் கிழங்கு பொறியல், கீரை என்ற மெனுவைப் பார்த்தேன். அம்மாவைப் பார்த்தேன். சிவபெருமானும் எமனும் மனதுக்குள் நிழலாடினார்கள்.

- கோவை எம் தங்கவேல்.

Monday, November 7, 2011

கொழுப்பைக் குறைக்கும் மாங்காய் இஞ்சி


எனக்குப் பிடித்த ஊறுகாய் மா இஞ்சி. உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வேன். மாங்காய் இஞ்சி பற்றிய முக்கியக் குறிப்புகள் தேடிக் கொண்டிருந்த போது குமுதம் ஹெல்த்தில் இக்கட்டுரை கிடைத்தது. மாங்காய் இஞ்சியின் மகத்துவம் பற்றித் தெரியாதவர்களுக்கு உபயோகப்படுமே என்பதால் இங்கு பதிவிடுகிறேன். இப்பதிவு படிப்பவர்களுக்கு உபயோகமாய் இருக்குமென்று நம்புகிறேன். நன்றி : குமுதம் ஹெல்த்

இனி மாங்காய் இஞ்சி பற்றிய கட்டுரை

இஞ்சி ஒரு சிறந்த இயற்கை மருந்து என்பது யாவருக்கும் தெரியும். மாங்காய் இஞ்சியும் பல மருத்துவக் குணங்கள் கொண்டது என தாவரஇயல் வல்லுனர்களும், மருந்தியல் விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளார்கள்.

மாங்காய் இஞ்சியின் தாவர இயல் பெயர் ‘குர்குமா அமேடா’ இது இஞ்சி பெரேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் ‘‘மாங்கோ ஜிஞ்சர்’’ என்று பெயர். இஞ்சியைப் போன்று மாங்காய் இஞ்சியின் தாயகமும் இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ் டிரா, ஆந்திரா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒரிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

பயன்பெறும் பாகம்:
இச்செடியின் மண்ணிற்குக் கீழ் உள்ள தண் டுக்கிழங்குதான் நாம் பயன் படுத்தும் மாங்காஇஞ்சி. இதை தாவரவியலில் ரைசோம்  என்று அழைக்கிறார்கள்.

பெயர் வந்த விதம்:
மாங்காயைப் போன்று வாசனையும், இலேசான இஞ்சிச்சுவையும், இஞ்சியைப் போன்று உருவமும் கொண்டதால், தாவர இயல் நிபுணர்கள் தமிழில் இதற்கு ‘மாங்காய்இஞ்சி’ என்று மிகப் பொருத்தமாக பெயர் சூட்டியுள்ளார்கள்.

அடங்கியுள்ள சத்துப் பொருள்கள்:
நாம் சாப்பிடும் மாங்காய் இஞ்சியில் புரதம், மாவுப் பொருட்கள், கொழுப்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ப்பொருட்கள், வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ அடங்கியுள்ளன.

மாங்காய் வாசனையின் காரணம்:
மாங்காய் இஞ்சியிலுள்ள மாங்காய் வாசனைக்கான காரணம் இதில் உள்ள சீஸ் - ஓசிமென், டிரான்ஸ் டை ஹைட்ரோசிமின், மிர்சீன் ஆல்பா முதலிய வேதிப் பொருட்கள் ஆகும். இதில் அடங்கி உள்ள ‘குர்குமின்’ என்ற வேதிப்பொருள் இதற்கு மிக லேசான மஞ்சள் நிறத்தைக் கொடுக்கிறது. இதிலுள்ள ஒரு வகை ஒலியோரெசின், போர்னியால், ஆர்டர்மிரோன் இவை இஞ்சியின் சுவையை அளிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

’மாங்காய் இஞ்சி’ புதுமொழிகள் மாதா ஊட்டாத சோறை மாங்காய் இஞ்சி ஊட்டும்.வாய்ப்புண்ணிற்கு தேங்காய் வயிற்றுக்கோளாறுக்கு மாங்காய் இஞ்சி!கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பாங்கான மருந்து மாங்காய் இஞ்சி!
மருத்துவப் பயன்கள் ஏதாவது ஒருவகையில் மாங்காய் இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுக்கும். இரத்த ஓட்டம் சீராக இயங்கும். இயற்கையிலேயே கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர் களுக்கு, இரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். மாங்காய் இஞ்சியை மெல்லிய வட்டமாக நறுக்கி சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது சாலச்சிறந்தது.

வயிற்றிலுள்ள தீமைதரும் பூச்சிகளை அழித்து மலத்துடன் வெளியேற்றும்  தன்மை மாங்காய் இஞ்சிக்கு உண்டு. வயிறு, குடல் பகுதிகளில் பூசணங்களை அறவே ஒழிக்கும். சுருங்கச் சொன்னால் மாங்காய் இஞ்சி ஒரு சிறந்த இயற்கை வயிற்றுக் கழுவி ஆகும். மாங்காய் இஞ்சியை துவையல் அரைத்து  சாதத்துடன்   சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லையை வேரறுக்கும். உணவு செரியாமையை சீர்செய்யும். நன்கு பசி ருசி ஏற்படுத்தும்.

குண்டான உடல்வாகு உள்ளவர்கள் மாங்காய் இஞ்சியை தொடர்ந்து  சமையலில் சேர்த்து வர, உடல் எடை கணிசமாகக் குறையும் என ஜெர்மனியில் மேற்கொண்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.

வயிற்று உப்புசத்திற்கு ஒரு எளிய இயற்கை மருந்து மாங்காய் இஞ்சி. சரும நோய் வராது காக்கும் குணமுடையது. சிலவகை டானிக்கு களில் இதன் சாறு ஒரு உபபொருளாகச் சேர்க்கப்படுகிறது.

மாங்காய் இஞ்சி ஒரு வலி நிவாரணி. குடல் வலிக்கு மிகவும் சிறந்த இயற்கை மருந்து. மூட்டுவலியைத் தணிக்கும். வெங்காயத்துடன் மாங்காய் இஞ்சியையும் சேர்த்து சாலட் ஆக சாப்பிட்டுவர ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

குளிர்காலத்தில் மாங்காய் இஞ்சியை தாராளமாய் உணவில் சேர்த்துக் கொண்டால் குளிர் உடம்பைப் பாதிக்காது காக்கும் என சில ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.

மாங்காய் இஞ்சியை சிறிய வட்டத் துண்டுகளாக நறுக்கி, சீரகத்தூள் தூவி சாலட்டாக சாப்பிட்டு, ஒரு தம்ளர் மோர் குடித்தால் பித்தம் குணமாகும்.
மாங்காய் இஞ்சி ரெசிபீஸ்

1. மாங்காய் இஞ்சி சாலட் :
மாங்காய் இஞ்சியை மெல்லிய வட்டத்துண்டுகளாக நறுக்கி, சிறிது எலுமிச்சம் பழச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
2. துவையல் :
மாங்காய் இஞ்சி, பச்சைமிளகாய், வெள்ளைப்பூண்டு, தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
3. மாங்காய் இஞ்சி சட்னி:
சட்னி செய்து இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பத்துடன் சேர்த்து உண்ண சுவையோ சுவை.
4. மாங்காய் இஞ்சி தயிர்ப் பச்சடி :
தயிர்ப் பச்சடி தயாரித்து, சைட்டிஸ் ஆக பயன்படுத்தலாம்.
5. மாங்காய் இஞ்சி கறி :
மாங்காய் இஞ்சியை துண்டுகளாக நறுக்கி, சிறிது நல்லெண்ணெயில் வதக்கி எடுத்து, அத்துடன் சீரகம், வத்தல், வெள்ளைப் பூண்டு, உப்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இத்துடன் சிறிது புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, கறிவேப்பிலை தாளித்திட்டு இறக்கவும். இந்தக் கறியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவைக்கு சுவை, சத்துக்கு சத்து.
6. மாங்காய் இஞ்சி ஊறுகாய் :
நறுக்கிய மாங்காய் இஞ்சியுடன் மிளகாய்த்தூள், எலுமிச்சைசாறு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊறுகாய் செய்து அவ்வப்போது பயன்படுத்தலாம்.
7. மாங்காய் இஞ்சி தொக்கு :
சிறு சிறு துண்டுகளாக்கிய மாங்காய் இஞ்சியை மிக்ஸியிலிட்டு தொக்கு பதத்தில் அரைத்து எடுக்கவும். இத்துடன் சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய் வத்தல்கள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் சேர்த்து வேகவைத்து இறக்கவும். மாங்காய் இஞ்சி தொக்கு ரெடி. எல்லாவகை சாதத்துடனும் தொட்டுக் கொள்ள சுவையோ சுவை.
8. மாங்காய் இஞ்சி புலவு :
பாசுமதி அரிசியை உதிரியாக வேகவைத்து எடுத்து, துருவிய மாங்காய் இஞ்சி, நெய், உப்பு சேர்த்து புலவு செய்து, வெங்காய தயிர்ப் பச்சடி சேர்த்து சாப்பிட, சூப்பர் சுவைதான்.
9. மாங்காய் இஞ்சி, வத்தக்குழம்பு :
மிளகாய் வத்தல், மாங்காய் இஞ்சி, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை விழுதாக அரைத்து எடுக்கவும். தேவையான புளிக் கரைசலில் இவற்றைச் சேர்த்து வத்தக்குழம்பு செய்து இறக்கவும். நன்கு சுவையானது இக்குழம்பு.
10. மாங்காய் இஞ்சி பக்கோடா :
சாதாரணமாக நாம் பக்கோடாவுக்கு மாவு சேர்க்கும்போது, மாங்காய் இஞ்சியைத் துருவி இட்டு நன்கு கலந்து பின்னர் பக்கோடா பொரித்து எடுக்கவும். இது சூப்பர் சுவையான பக்கோடா. 

* * *

Saturday, October 29, 2011

மறக்க முடியாத தீபாவளி

ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில், தீபாவளி நாள் அன்று நண்பரைச் சந்திக்க சென்றிருந்தேன். நண்பர்களுடன் தீபாவளி வாழ்த்த்துக்களை பகிர்ந்து கொண்டு, இனிப்புகள் சாப்பிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது என்னிடம் படித்த ஆறாம் வகுப்பு பையன் ஒருவன் என்னைப் பார்த்துக் கையை ஆட்டினான்.

வண்டியை நிறுத்தி, அவனை அருகில் வரும்படி அழைத்தேன். 

“வீட்டுக்கு வாரீங்களா சார் !” என்றான்.

”வீடு எங்கேப்பா இருக்கு ?” என்று கேட்டு அவனை அழைத்துக் கொண்டு அவன் வீடு நோக்கி சென்றேன்.

குளிர்ச்சி தரும் தென்னை ஓலைகள் வேய்ந்த, அழகாய் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட வீடு. வீட்டின் முகப்பில் கோலமிட்டு இருந்தது. மாணவனின் அப்பாவும், அம்மாவும் வண்டிச் சத்தம் கேட்டு வெளியில் வர மாணவன் வண்டியில் இருந்து குதித்து அவர்கள் அருகில் ஓடி என்னை “அப்பா, எங்க இவருதான் கம்யூட்டர் சாரு” என்றான்.

இருவருக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அருகில் வந்து “வாங்க வாங்க” என்றழைத்தவர்கள் வீட்டிற்குள் அழைக்க தயக்கத்தோடு நின்றனர்.

”சாப்பிட ஏதாவது கிடைக்குமா? “ என்றேன். வண்டியை நிறுத்தி விட்டு, இறங்கி வீட்டுக்குள் சென்றேன்.

வழு வழுவென்று மெழுகிய தரைகள். அதன் மீது பாய் போடப்பட்டு அமர்ந்து கொண்டேன்.

இடதுபுறமாய் சமையலறை. மண்சட்டிகள் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மாவரைக்கும் கல்லில் அரைத்த மெதுவடை, சுழியம் இரண்டும் கொண்டு வந்து தந்தார்கள். வயிறு நிறைய சாப்பிட்டேன். அப்பா என்ன ஒரு சுவையாக இருந்தன தெரியுமா? என்னைப் பற்றி விசாரித்தார்கள்.மாணவனை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டே அவர்கள் இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தேன்.

“மதியம் என்ன சமைக்கப் போகின்றீர்கள்?” என்றேன்.

“சாம்பார், பாயசம் சார்” என்றான் மாணவன்.

”எனக்கும் கொஞ்சம் சேர்ந்து சமைத்து விடுங்களேன், இருந்து சாப்பிட்டு விட்டுப் போகிறேன்” என்றேன்.

நிகழ்காலத்தில் படித்த போது பாத்திரத்திப் பொறுத்தது உணவின் சுவையும் தரமும் படித்த போது என் மாணவன் வீட்டில் சாப்பிட்ட சாம்பாரின் சுவை நினைவுக்கு வந்தது. இதுவரை எத்தனையோ ஹோட்டல்களில் சாப்பிட்டு இருக்கிறேன். வித விதமாய் சமைத்துப் போடும் மனைவியின் கைப்பக்குவம் கூட மாணவன் வீட்டில் வைத்திருந்த சாம்பாருக்கு நிகராக இல்லை.

அன்றிலிருந்து ஒவ்வொரு தீபாவளிக்கும் எனக்கும் சேர்த்து சாப்பாடு தயார் செய்வார்கள். நான் ஆசிரியராக இருந்த காலம் முழுவதும் தீபாவளி தினங்களில் மாணவனின் வீட்டுச் சாப்பாடே எனக்கு அமிர்தமாய் இருந்தது. அம்மாணவன் இப்போது என்ன செய்கின்றானோ தெரியவில்லை. அவன் வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.

* * *

Wednesday, October 26, 2011

ஷூட்டிங்கில் இருக்கும் திரைப்படத்தின் காட்சி

எங்களது மாடல் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் ஒரு ஸ்டில். படத்தின் இயக்குனரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது. இப்படத்தின் அடுத்த அடுத்த ஷூட்டிங் காட்சிகள் சிலவற்றை தொடர்ந்து வெளியிடுவோம்.

இளம் இயக்குனரின் கடின உழைப்பில் வளர்ந்து வரும் இப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

படத்தின் பெயர், டிரெயிலர் போன்றவை தொடர்ந்து வெளியிடப்படும்.


* * *


Tuesday, October 25, 2011

உறவுகளில் சிறந்தது எது?


”எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பார் எனது நண்பர். 

உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு.

தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது.

தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் பாதுகாவலனாய் இருப்பவன் தாய் மாமன்ம் மட்டுமே.

அண்ணன் தன் தங்கையை வாழ வைப்பான். அதுமட்டுமா தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான். 

தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால் என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான். எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது. அதுமட்டுமா கூடப்பிறந்தவனை எதிரியாக நினைக்கும் பெண்கள் சீரழிந்து போவார்கள்.

சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ கண்கள் குருடாகவோ, ஊனமாகவோ இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய் மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா?

உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம்.

அந்த வகையில் பாசமலர் என்ற திரைப்படத்தினை உதாரணமாய்ச் சொல்லலாம். உறவுகளில் எவராவது ஒருவர் தீய எண்ணமுடையவராக இருந்தால், அதன் பிறகு உருவாகும் பிரச்சினைகளில் சிக்கி சின்னாபின்னமாகும் அண்ணன், தங்கை பற்றிய அருமையான படம் தான் பாசமலர். இதுவரை இதைப் போன்ற தமிழ்ப்படத்தினை காண இயலவில்லை. 

அப்படத்தின் பாடல்களை ஒருமுறை கேட்டு வையுங்கள். 


பாடலில் வரும் சில வரிகள்

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்



வாழ்க நலமுடன்,வளமுடன் - கோவை எம் தங்கவேல்

* * *

Monday, October 24, 2011

காதல் என்பது என்ன?


”சார், எனக்கொரு பிரச்சினை, நீங்கள் தான் உதவ வேண்டும்” என்றது போன் குரல்.

“என்னவென்று சொல்லுங்கள், என்னால் ஆன உதவியைச் செய்ய முயல்கிறேன்” என்றேன்.

"சார், நான் சிங்கப்பூரில் இருக்கும் பெண் ஒருத்தியை காதலித்தேன். அப்பெண்ணும் என்னைக் காதலித்தாள். எனக்கு அங்கு வேலை கூட ஏற்பாடு செய்திருக்கிறாள். என் அப்பா, அம்மாவிடம் கூட பேசி இருக்கிறாள். நானொரு சேல்ஸ் மேன். இப்படியான நாட்களில் ஒரு நாள் அவள் கூட சின்ன சண்டை ஆகி விட்டது. மேலும் அத்துடன் அவள் என்னுடன் பேசவே இல்லை. நானும் என்னென்னவோ முயற்சிகள் செய்துபார்த்தேன். விடாமல் சில சுலோகங்களைச் சொன்னால் நினைப்பது நடக்குமென்றுச் சொன்னார்கள். அவ்வாறு சொல்லியும் பார்த்தேன். இதுவரை எதுவும் நடக்கவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. கோவில் கோவிலாய் ஏறி இறங்குகிறேன். அவள் இன்னும் என்னுடன் பேசவில்லை. ஒருமுறை என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது, என்னைத் திருமணம் செய்தால் உனக்கு நன்மை, ஆனால் எனக்கு என்ன நன்மை என்று கூட கேட்டாள். அதையெல்லாம் நினைவில்  வைத்துக் கொள்ளாமல் அவளை சின்சியராக லவ் பண்ணினேன். இதுவரை அவளிடமிருந்து ஒரு அழைப்பும் வரவில்லை” என்றார் படபடப்பாக.

”சரி, இதற்கு நான் என்ன உதவி செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?” என்றேன்.

”சார், நெட்டில் தேடிய போது உங்களின் பதிவைப் படித்தேன்” என்றார்.

அவர் எங்கே வருகிறார் என்று புரிந்து கொண்டேன். அவரிடம், “ நான் மந்திரவாதியுமில்லை, வசியமும் உண்மையில்லை “ என்று சில விளக்கங்களைச் சொல்லி கட் செய்தேன்.

எனக்குத் தெரிந்த ஒரு பையனின் நண்பன் பதினைந்து வயதுப் பெண்ணைக் காம வயப்படுத்தி வேறு ஊருக்கு வர வழைத்து விட்டான். பெண்ணின் பெற்றோர் படிக்காதவர்கள் என்பதால் ஒரு வழியாகச் செட்டில் செய்தார்கள். பெண் யாரோ ஒரு குடிகாரனுக்கு வாழ்க்கப்பட்டு செத்துக்கொண்டிருக்கிறாள். அதே பையன் மீண்டும் ஒரு பெண்ணை (வயதுக்கு வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை என்றான் நண்பன்) காம வயப்படுத்தி, அழைத்துக் கொண்டு ஓடி மீண்டும் அடிதடி ரகளையாகி பஞ்சாயத்தில் வந்து முடிந்திருக்கிறது. 

என் வீட்டின் அருகில் இருக்கும் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சிறுமி ஒருத்தி, கொட்டிக் கொண்டிருக்கும் மழையில் நனைந்து கொண்டே, யாரோ ஒரு கல்லூரி மாணவனுடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அதைப் பற்றி விசாரித்தேன். அவளுக்கு இது இரண்டாவது பாய் பிரண்டாம். காதல் எப்படி புரிய வைக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.

காதல் என்பது என்ன?  என்பது பற்றிய புரிதல் இல்லாமல் வாழ்வதால் வரும் வினை இது. சினிமாக்களில் காதல் என்பது ”காதலைக் காட்டுதல்” என்ற வகையில் வருவது. காதல் காட்டப்படுவது அல்ல வாழ்ந்து காட்டுவது. சினிமாக் காதலுக்கும் நிஜ காதலுக்கும் 10000 மடங்கு வித்தியாசம் உள்ளது. அதை உண்மையான வாழ்க்கை வாழ்பவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சொல்லித் தெரிய வேண்டுமென்றால் அது காதலே அல்ல.

வசியம், மாந்திரீகம் பற்றி பலமுறை எழுதி விட்டேன். இனிச் சொல்ல ஒன்றுமில்லை. இருப்பினும் குறுக்கு வழியில் இன்பம் தேடும் சிலர் இருக்கும் போது, போலிச் சாமியார்கள் ஏமாற்றுவது நிற்கப் போவதில்லை. 

மனித குலத்தில் சினிமாக்களும், மீடியாக்களும் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் மிகக் குறைந்த அளவே வாழும் காலம் உள்ள மனிதன் வாழ்வில் மிகப் பெரும் அழிவுகளை உருவாக்கி வருகின்றன. புரிந்து கொண்டிருப்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். புரியாதவர்கள் மேற்கண்ட பையனைப் போல அலைவார்கள்.

வாழ்க நலமுடன், வளமுடன்

* * *