குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, November 24, 2011

பணம் என்றால் என்ன?பணம் என்கிற பொருள் மனிதர்களின் வாழ்க்கையை நிர்மாணிக்கும் ஒரு சக்தி. பெரும்பகுதி மக்கள் பணத்தேடலில் தான் வாழ்க்கையே அடங்கி இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு அரசு ஊழியரை எடுத்துக் கொள்ளுங்கள். 58 வயது வரையிலும் உழைத்துக் கொண்டிருப்பார். ரிட்டயர்ட்மெண்ட் ஆனதும் கிடைக்கும் பென்ஷனில் நிம்மதியாய் வாழ்கிறோம் என்று நினைக்கும் தருவாயில் அவர் அடையும் மனக்குழப்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அரசு அலுவலில் இருந்து ரிட்டயர்ட் ஆன பல நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது “ மிக மோசமான வாழ்க்கை” என்ற வாக்கியத்தை அவர்களிடமிருந்து கேட்டிருக்கிறேன்.

அரசு வேலை, நிரந்தர வருமானம், நிம்மதியான வாழ்க்கை என்று மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தோம் என்பார்கள் அவர்கள். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் ஏகப்பட்ட நிராசைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களைப் போன்றோர்களுக்கு சொல்வெதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் அடைந்திருக்கும் மனக்குழப்பத்திற்குக் காரணம் சமூகத்தின் பிரதிபலிப்பு. மனித சமூகம் மனிதர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை மட்டுமே முன்னிலைப்படுத்துவதால் வந்த பிரச்சினை இது. இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். அதெல்லாம் மனதைச் சுடும் உண்மைகள். நேரமிருக்கும் போது எழுதுகிறேன்.

கோவை ஆவாரம்பாளையம் சென்றிருந்தேன். போன வேலை முடிந்து பேக்கரி ஒன்றில் “லெமன் டீ” ஆர்டர் செய்து விட்டு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஸ்கோடா கார் ஒன்று அருகில் வந்து நின்றது. நண்பரின் நண்பர் அவர். சாதாரண ரிஸ்ட் வாட்ச், வெகு சாதாரண பேண்ட், சர்ட்டில் இருந்தார். அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் நண்பர். அவருக்கு என்னை மிகவும் பிடித்து விட, “தங்கம், என்னுடன் வருகின்றீர்களா, ஒரு இடத்திற்குச் சென்று வரலாம், நீங்கள் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.

கோவையின் மிகப் பிரதான இடத்தில் புதிதாய் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நான்கு மாடி குடியிருப்புப் பகுதி ஒன்றிற்கு அழைத்து சென்றார். வேலை செய்து கொண்டிருந்தோர் இவரைப் பார்த்ததும் ஒரு வித அட்டென்ஷன் நிலைக்கு வர, இவர்தான் ஓனர் என்று முடிவு கட்டினேன். கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேல் இன்வெஸ்ட்மெண்ட். ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. வெகு சாதாரணமாய் இருப்போரிடம் இப்படி ஒரு திறமை. குடியிருப்பினை பார்வையிட்டு விட்டு, மீண்டும் அந்த ‘லெமன் டீ’ கடைக்கு வந்து சேர்ந்தோம். மார்க்கெட்டிங் செய்வது பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பினேன்.

25 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இன்று ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடு பெருக்கி இருக்கிறது. எப்படி என்ற காரணத்தை அவர் சொல்லக் கேட்டேன். அவர் எதுவும் புதிதாய்ச் சொல்லி விடவில்லை. அவர் சொன்னது எல்லாம் பல புத்தகங்களில் சொல்லப்பட்டிருப்பதுதான்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார். அவரிடம் 50 கோடிக்கும் மேல் சொத்து இருக்கிறது. எவராவது சொந்தக்காரர் வந்தால் 1000 ரூபாய் கொடுக்க அவரால் முடியாது. ஏனென்றால் அத்தனை காசு இருந்தும், அந்தக் காசு அவருக்கு உபயோகப்படவில்லை. அதை வைத்து, அவரால் தொடர்ந்து சம்பாதிக்க முடியவில்லை.  உண்மைக் காரணம் அவருக்கு புத்திசாலித்தனம் இல்லை.

புத்திசாலித்தனம் என்றால் என்ன என்பதற்கு ஒரு கதை.

நிலத்துடன் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் என் நண்பரொருவர் 20 அறைகள் கொண்ட காம்பளக்ஸைக் கட்டினார். அதை பெரிய நிறுவனம் ஒன்று வாடகைக்கு எடுத்தது. மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் வாடகை. இரண்டு தேதிக்குள் வங்கியில் சேர்ந்து விடும். இவ்வளவு வாடகை கொடுக்கும் அந்த நிறுவனத்திற்கு, இந்த வாடகைச் செலவால் மாதம் ஐந்து லட்ச ரூபாய் செலவு மிச்சமாகி லாபமாகி விட்டது. எப்படி என்கின்றீர்களா? அந்த நிறுவனம் வெளி நாட்டில் இருந்து வரும் கிளையண்டுகளுக்கு தங்குமிடம், உணவு என்ற வகையில் தினம் தோறும் 25,000 ரூபாய் செலவு செய்து வந்தது. இப்போது யார் வந்தாலும் தங்குமிடம் ஸ்டார் ஹோட்டலுக்கும் நிகராய் இருக்கிறது. மாத வாடகை ஒன்றரை லட்சத்துடன், அரை லட்சத்தில் உணவுச் செலவும் ஆகிவிடுகிறது. இருவருக்கு லாபம். எவர் கொடுப்பார் ஒரு கோடிக்கு ஒன்றரை லட்சம் வருமானம்? அதுவும் வெள்ளையில். ஒரு கோடி போட்டு, அதன் மூலம் வருமானம் பெற்ற நண்பரும் புத்திசாலி, ஒன்றரை லட்ச ரூபாய் வாடகைக்கு எடுத்த கம்பெனியும் புத்திசாலி. தினம் 5000 ரூபாய் செலவுக்கு நண்பருக்கு பணம் வந்து விடுகிறது. நண்பர் இப்போது அடுத்த புராஜெக்ட்டிற்கு நிலம் வேண்டுமென என்னை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்.

எவர் வேண்டுமானாலும் பணம் வைத்திருக்கலாம். அப்பணம் மேலும் பணத்தினைச் சம்பாதித்துத் தர வேண்டும். இல்லையென்றால் அந்தப் பணம் இருந்து யாருக்கு என்ன பிரயோசனம்? அது மண்ணுக்குச் சமானம் அல்லவா?

பணம் என்பது என்னவென்றால் அது மீண்டும் மீண்டும் பல்கிப் பெருகி வழிய வேண்டும். அப்படிப் பெருகவில்லை என்றால் அப்பணமிருந்தும் இல்லை என்பதே உண்மை.

அன்புடன்
கோவை எம் தங்கவேல்