குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, November 24, 2011

சாகித்ய அகாதமி பரிசு நூல் - கார்மேகம்


படிப்பதென்பது அலாதியான இன்பம் தரும் தனிப்பட்ட ஒரு உலகம். அவ்வுலகில் நீண்ட நாளாக வாசம் செய்ய நேரம் கிடைக்கவில்லை. தற்போதைய பவர் கட் கிட்டத்தட்ட 5 மணி நேரம். காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் என்று மின்சாரம் போய் வருகிறது. மின்சார ஊழியர்கள் எந்த வேலையைச் செய்கிறார்களோ இல்லையோ, பவர் கட் செய்வதை மிக மிகவும் சரியாய் செய்கின்றார்கள். வாங்கும் காசுக்கு ஏற்ற வேலை.

தேர்தல் காலங்களில் மட்டும் காணாமல் போகும் ‘பவர் கட்’ தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் வருவது எப்படி என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். இதெல்லாம் புரிந்து கொள்ள முடியாத அரசியல் மர்மம். அது எதற்கு நமக்கு. இந்த பவர் கட்டையும் ஏதாவது பிரயோசனமாய் மாற்ற வேண்டுமே என்ற கவலைக்கு தீர்வாய் வந்தது வீட்டுக்கு அருகில் இதுகாறும் மறைந்து இருந்த ஒரு அரசு நூலகம். உறுப்பினர் அட்டையும் பெற்றுக் கொண்டேன். 925 ராசியான நம்பரா என்று நியூமராலஜி நண்பரிடம் விசாரிக்க வேண்டும்.

இந்த சாகித்ய அகாதமி என்கிறார்களே, அது ஏதோ அவார்டு கொடுக்கின்றதாமே என்றெல்லாம் “இலக்கியவாதிகள்” எழுதி இருப்பதைப் படித்த தினத்திலிருந்து எனக்குள் ஒரு ஆசை கிளர்ந்திருந்தது. அவ்வப்போது தோன்றி மறையும் அந்த ஆசை நூலகத்தில் உறுப்பினர் ஆனவுடன் பூதமாய் எழுந்தது பிற நூல்களைப் பார்க்கும் ஆசையைத் தடுத்தது. சாகித்ய அகாதமியின் செலக்‌ஷனைப் பற்றிப் புரிந்து கொள்ள முயற்சித்தேன்.

கையில் சிக்கியது “சாகித்ய அகாதமி பரிசு பெற்ற ஜி.விவேகானந்தன் என்ற கேரளாக்காரரின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் கார்மேகம்”.

நான்கு மணி நேர பவர் கட்டினை சாகித்ய அகாதமியின் தேர்வின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள செலவழித்தேன். மொழிபெயர்ப்புச் சரியில்லை என்றால் நாவலின் லட்சணம் வீட்டிற்கு ஒன்பது வாசல் வைத்தது போலாகி விடும் என்பதை இந்த நூலின் மூலமாய் தெரிந்து கொண்டேன். அந்தளவுக்கு தட்டையான மொழி பெயர்ப்பு. மூலம் நன்றாக இருந்திருக்கலாம். அதை இந்த ஜென்மத்தில் படிக்க முடியாது. ஒரு மொழியை தெரிந்து வைத்துக் கொண்டே தமிழர்களின் நூல்களைப் படிக்க முடியவில்லை. மலையாளம் வேறு கற்றுக் கொண்டால் என்ன ஆவது?

இனி கதை : பிரபாகரனுக்கு தன் மனைவியின் மூலம் குழந்தை பிறக்கவில்லை என்ற கவலை. அதைப் புரிந்து கொண்ட மனைவி மாலதி, தன் உதவியால் படிக்கும் தன் தங்கை சாந்தாவை தன் கணவனுக்கு கட்டி வைக்கின்றார். இதற்கு சாந்தாவின் அம்மாவும் உடந்தை. ஒரு வழியாக பிரபாகரனுடன் சாந்தாவிற்கு முதலிரவும் நடக்கிறது. அதன்பிறகு உண்டான ஈகோவினால் மாலதி தன் அம்மா வீட்டுக்குச் செல்ல, சாந்தாவை கவனிக்க மறக்கிறார் பிரபாகர். காரணம் வயது வித்தியாசம். கோபம் கொண்ட சாந்தா அம்மா வீட்டுக்கு வந்து விட, மாலதி மீண்டும் கணவனுடன் வந்து தங்க, மாலதி கர்ப்பவதியாகின்றாள். சாந்தாவின் அம்மா, அதாவது மாலதியின் அம்மா சாந்தா இனி என்ன செய்வது என்று கேட்க, என் மீது பாசமிருக்கா என்றெல்லாம் ஆலாபனை செய்து தன் கணவனைக் கட்டிக் கொள்ள வைத்த தங்கையை, அதை அவளே முடிவு செய்யட்டும் என்கிறாள் மாலதி. வெறுத்துப் போன சாந்தா இரண்டு மாதங்களாய் தாய் வீட்டில் இருந்தும் கவனிக்காத பிரபாகரன், தங்கையைக் கண்டுகொள்ளாத மாலதி இவர்களுக்கிடையே மனத்துன்பம் அடையும் சாந்தா, தற்கொலை செய்து கொள்கிறாள். இது தான் கதை.

மாலதி தன் தங்கையை தனக்காக தியாகம் செய்யச் சொல்கிறாள். இந்தக் கதையின் மூலம் நாம் முக்கியமான படிப்பினை அறிந்து கொள்ள வேண்டும். பாத்திரமறிந்து பிச்சையிடு என்பார்களே அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். தியாகம் யாருக்காசச் செய்கிறமோ அவர்களுக்கு அதைப் பெற தகுதியும் வேண்டும், யாருக்காக தியாகம் செய்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் தியாகம் என்ற பெயரால் ஏமாற்றப்பட நேரிடும். உலகில் “ஏமாளிகள்” அதிகம். ஏனென்றால் அவர்களைத் தியாகிகள் என்கிறார்கள். தியாகிகளின் இன்றைய நிலை பென்சன் என்பதுதான் முடிவு.

சாகித்ய அகாதமி விருதுக்கு இக்கதை தேர்ந்தெடுக்கப்பட்ட காரணம் தான் இன்னும் எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை எனக்குப் புரியாத இக்கதை தேர்வாளர்களுக்குப் புரிந்திருக்குமோ? தெரியவில்லை. உலகில் தெரிந்து கொள்ள முடியவே முடியாத விஷயங்கள் தானே அதிகம். சாகித்ய அகாதமியின் பரிசு பெற்ற இன்னும் பல நூல்களைப் படித்துப் பார்த்து எழுத முயற்சிக்கிறேன். தற்போதைக்கு சாகித்ய அகாதமி ஏதோ எரிச்சல் தான் இருக்கிறது. தகுதி உடையவர்களை சமூகம் அங்கீகரிக்க வேறு விதிகள் வைத்திருக்கும் போல.

- கோவை எம் தங்கவேல்
24/11/2011 - 11 .26 ஏஎம்.

* * * * *