குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, November 28, 2011

அக்கினிப் பிஞ்சுகள் வளர்கின்றன

பெரியாரின் வாசகம் ஒன்றினை எனக்கு முன்பு சென்று கொண்டிருந்த ஒரு கால் டாக்ஸியில் படித்தேன். “தானாக உருவாக முடியாத மனிதன், தனக்காக வாழ்வதில் என்ன நியாயம் இருக்கிறது”. திராவிட நாடான தமிழகத்தில் பெரியாரின் சிந்தனைகளை இக்கால இளைஞர்கள் படித்து அறிய யாரோ ஒரு இயக்கத்தார் கோர்ட்டில் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது. கால் டாக்ஸியில் ஒரு மாபெரும் தமிழகப் புரட்சியாளனின் சிந்தனையைப் படிக்கும் அவலம் என்னைத் தொடர்ந்து வரும் சந்ததியினருக்கு கிட்டாமல் போக வேண்டுமென்று பெரியார் மறுத்த அந்த கடவுளிடம் விண்ணபிக்கிறேன்.

இவ்வாறான அரசியல் வித்தைகள் நிரம்பிய இந்தியாவில், சமீப காலத்தில் செய்திச் சானல்கள்  அமைச்சர் ஒருவருக்கு சீக்கிய சகோதரன் ஒருவர் கன்னத்தில்  விட்ட அறையினை அடிக்கடி ஒளிபரப்பின. விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அந்த இளைஞன் ஜெயிலில் கிடக்கிறார். இந்த இளைஞரை அடிக்க அமைச்சரின் கட்சிக் கூட்டத்தார் முண்டியடித்ததையும் சானல்கள் காட்டின. தனி மனிதன் செய்தால் குற்றம், அதே கட்சிக் காரன் செய்தால் போராட்டம் என்கிறது இந்திய அரசியலைப்புச் சட்டம். இப்படி ஒரு நகைப்புக்கிடமான சட்டங்கள் இந்தியாவை ஆள்வது கண்டு எரிச்சல் தான் ஏற்படுகிறது.

இந்திய அரசியல்வாதிகள் எவரும் மக்களின் மீது அபிமானம் கொண்டவர்களாய் இல்லை. எவருக்கும் இங்கே அக்கறை இல்லை. அதன் பிரதிபலன் தான் அரசியல்வாதிகள் மீதான அடி உதைகள். இனி வரும் காலங்களில் அரசியல்வாதிகளுக்கு மாபெரும் ஆபத்தினை மக்கள் உருவாக்கப் போகின்றார்கள் என்பதை ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்ற மக்கள் சொல்லாமல் சொல்கின்றார்கள். காவல்துறையினர் இன்றி எந்த ஒரு அரசியல்வாதியும் தெருவில் நடமாட முடியாத நிலையில் தங்களின் பொதுவாழ்க்கையினைச் சகதிக்குள் திணித்துக் கொள்கிறார்கள். 

ஒரு எம் எல் ஏ (இவர் லண்டனில் “வணக்கம் லண்டன்” என்ற நிகழ்ச்சியை நடத்தியதை சானல் ஒன்று வெளியிட்டது ) தொகுதிப் பக்கமே வரவில்லை என்று எஸ் எம் எஸ் தட்டி அது அவரின் கவனத்திற்கு வந்து, அடித்துப் பிடித்துக் கொண்டு தொகுதிக்குள் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. மக்களுக்கு சேவை என்றால் அது மக்களின் பணத்தினைக் கொள்ளை அடிப்பது என்ற புதுவகையான சித்தாந்தத்தை அரசியல்வாதிகள் உருவாக்கியதன் விளைவுகளை அவர்கள் அனுபவித்தாக வேண்டிய தருணத்தில் நிற்கின்றார்கள்.

அரசியல்வாதிகள் பஞ்சுப் பொதிகளை போன்றவர்கள். அடி விழாமல் தப்பித்துக் கொள்ள தற்போதைக்கு வேண்டுமானால் முயலலாம். ஆனால் இளைஞர் கூட்டத்தில் ஒரே ஒருவன் பொங்கி எழுந்தான் என்றால் அவன் சின்னஞ் சிறு அக்கினிப் பிஞ்சாய் மாறி நிற்பான். அதுமட்டுமல்ல அவனைக் கொண்டே பல அக்கினிகள் உருவாகும். பஞ்சுப் பொதிகள் மீது அக்கினிப் பிஞ்சுகள் பட்டால் என்ன ஆகும் என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். 

கடைசியில் போகின்ற வழிக்கு கூட கோடி கோடியாய் கொட்டி வைத்து இருக்கும் தங்க கட்டிகள் கூட வராது. அக்கினிப் பிஞ்சுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பஞ்சுப் பொதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்


* * * * *