குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, November 16, 2011

ஏமாற்றும் மருத்துவமனைகள்எனது நண்பரின் நண்பரொருவருக்கு கண்ணில் பிரச்சினை இருப்பது போலத் தோன்றியிருக்கிறது. இந்தியாவில் பிரபலமான ஐ ஹேர் ஹாஸ்பிட்டலுக்குச் சென்றிருக்கிறார். கண்ணில் புரை ஏற்பட்டிருக்கிறது. 25 ஆயிரம் ரூபாய் செலவாகும், உடனே அட்மிட் ஆகுங்கள் இல்லையென்றால் கண் பார்வை போய் விடும் என்றுச் சொல்லி இருக்கிறார். இவருக்கோ பணப்பிரச்சினை வேறு, கண் பார்வை போய்விடுமே என்ற கவலையில் ஆளே ஒரு மாதிரியாகி விட்டார். என்ன செய்வதென்று புரியாமல் மன வேதனையோடு எவரிடமும் சொல்லாமல் திரிந்திருக்கிறார்.

இப்படியான ஒரு நாளில், சரி குலதெய்வத்தின் கோவிலுக்குச் சென்று வருவோம் என்று நினைத்து, கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி விட்டு வந்திருக்கிறார். காலையில் கண்ணில் இருந்த உறுத்தல் குறைந்தது போல இருந்திருக்கிறது. அடுத்த யோசனையாக வேறு கண் மருத்துவமனைக்குச் சென்று செக்கிங்க் செய்து விட்டு வருவோம் என்று நினைத்துச் சென்றவருக்கு, அம்மருத்துவமனையின் பதில் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. கண் புரை இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லி இருந்திருக்கிறார்கள். இதற்கிடையில் ஐ கேர் மருத்துவமனையில் இருந்து “எப்போது வருகின்றீர்கள்” என்று டாக்டரே போனில் அழைத்திருக்கிறார். இவரும் ஏதோ சொல்லிச் சமாளித்திருக்கிறார்.

அத்துடன் விடாமல் மேலும் ஒரு மருத்துவமனைக்குச் சென்று செக்கிங் செய்தால், அங்கும் இவருக்கு கண் புரை நோய் இல்லை என்றேச் சொல்லி இருக்கிறார்கள்.

25 ஆயிரம் ரூபாயை பிடுங்க முயற்சித்திருக்கும் இம்மருத்துவமனை அடிக்கடி டிவியில் விளம்பரங்களையும், பெரிய பெரிய இடங்களில் மருத்துவமனையும் கட்டி வருகிறது.

இந்திய சுகாதாரத்துறை இம்மாதிரியான மருத்துவமனைகளின் திருட்டுத்தனத்தை கட்டுப்படுத்த ஏதுவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒன்றும் கோடிக்கணக்கில் செலவழிக்கும் நடவடிக்கை இல்லை. சரியான திட்டமிடல் செய்தால் இந்தியாவெங்கும் நடக்கும் ஆஃபரேஷன்களைக் கூட கண்காணிக்கலாம். டெக்னாலஜி அந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது. இந்திய அரசு இப்படியான மோசடி மருத்துவமனைகள் நடத்துவோரைக் கண்டறிந்து உடனடியாக ஹாஸ்பிட்டலை மூட வேண்டும். 

கிட்னி திருட்டில் ஈடுபட்ட தமிழக மருத்துவமனைகள் பலவும் தற்போதும் கிட்னி திருடி கல்லாக்கட்டி வருகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. தினசரிகளில் வெளியான கிட்னி திருடிய ஹாஸ்பிட்டல்களின் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் புரியவில்லை. இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தன் செயல்பாட்டினை துரிதப்படுத்தவில்லை எனில் நாளடைவில் மோசடி மருத்துவமனைகள் புற்றீசலாய் பெருகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

உயிரோசையில் வெளிவந்திருக்கும் ஒரு கட்டுரையினை நீங்கள் அனைவரும் படித்தே ஆக வேண்டும். இதோ அதன் இணைப்பு.


அன்புடன்
கோவை எம் தங்கவேல்