”எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பார் எனது நண்பர்.
உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு.
தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது.
தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் பாதுகாவலனாய் இருப்பவன் தாய் மாமன்ம் மட்டுமே.
அண்ணன் தன் தங்கையை வாழ வைப்பான். அதுமட்டுமா தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான்.
தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால் என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான். எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது. அதுமட்டுமா கூடப்பிறந்தவனை எதிரியாக நினைக்கும் பெண்கள் சீரழிந்து போவார்கள்.
சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ கண்கள் குருடாகவோ, ஊனமாகவோ இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய் மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா?
உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம்.
அந்த வகையில் பாசமலர் என்ற திரைப்படத்தினை உதாரணமாய்ச் சொல்லலாம். உறவுகளில் எவராவது ஒருவர் தீய எண்ணமுடையவராக இருந்தால், அதன் பிறகு உருவாகும் பிரச்சினைகளில் சிக்கி சின்னாபின்னமாகும் அண்ணன், தங்கை பற்றிய அருமையான படம் தான் பாசமலர். இதுவரை இதைப் போன்ற தமிழ்ப்படத்தினை காண இயலவில்லை.
அப்படத்தின் பாடல்களை ஒருமுறை கேட்டு வையுங்கள்.
பாடலில் வரும் சில வரிகள்
வாழ்க நலமுடன்,வளமுடன் - கோவை எம் தங்கவேல்
* * *