குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, October 25, 2011

உறவுகளில் சிறந்தது எது?


”எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பார் எனது நண்பர். 

உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு.

தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது.

தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் பாதுகாவலனாய் இருப்பவன் தாய் மாமன்ம் மட்டுமே.

அண்ணன் தன் தங்கையை வாழ வைப்பான். அதுமட்டுமா தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான். 

தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால் என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான். எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது. அதுமட்டுமா கூடப்பிறந்தவனை எதிரியாக நினைக்கும் பெண்கள் சீரழிந்து போவார்கள்.

சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ கண்கள் குருடாகவோ, ஊனமாகவோ இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய் மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா?

உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம்.

அந்த வகையில் பாசமலர் என்ற திரைப்படத்தினை உதாரணமாய்ச் சொல்லலாம். உறவுகளில் எவராவது ஒருவர் தீய எண்ணமுடையவராக இருந்தால், அதன் பிறகு உருவாகும் பிரச்சினைகளில் சிக்கி சின்னாபின்னமாகும் அண்ணன், தங்கை பற்றிய அருமையான படம் தான் பாசமலர். இதுவரை இதைப் போன்ற தமிழ்ப்படத்தினை காண இயலவில்லை. 

அப்படத்தின் பாடல்களை ஒருமுறை கேட்டு வையுங்கள். 


பாடலில் வரும் சில வரிகள்

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்



வாழ்க நலமுடன்,வளமுடன் - கோவை எம் தங்கவேல்

* * *

Monday, October 24, 2011

காதல் என்பது என்ன?


”சார், எனக்கொரு பிரச்சினை, நீங்கள் தான் உதவ வேண்டும்” என்றது போன் குரல்.

“என்னவென்று சொல்லுங்கள், என்னால் ஆன உதவியைச் செய்ய முயல்கிறேன்” என்றேன்.

"சார், நான் சிங்கப்பூரில் இருக்கும் பெண் ஒருத்தியை காதலித்தேன். அப்பெண்ணும் என்னைக் காதலித்தாள். எனக்கு அங்கு வேலை கூட ஏற்பாடு செய்திருக்கிறாள். என் அப்பா, அம்மாவிடம் கூட பேசி இருக்கிறாள். நானொரு சேல்ஸ் மேன். இப்படியான நாட்களில் ஒரு நாள் அவள் கூட சின்ன சண்டை ஆகி விட்டது. மேலும் அத்துடன் அவள் என்னுடன் பேசவே இல்லை. நானும் என்னென்னவோ முயற்சிகள் செய்துபார்த்தேன். விடாமல் சில சுலோகங்களைச் சொன்னால் நினைப்பது நடக்குமென்றுச் சொன்னார்கள். அவ்வாறு சொல்லியும் பார்த்தேன். இதுவரை எதுவும் நடக்கவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. கோவில் கோவிலாய் ஏறி இறங்குகிறேன். அவள் இன்னும் என்னுடன் பேசவில்லை. ஒருமுறை என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது, என்னைத் திருமணம் செய்தால் உனக்கு நன்மை, ஆனால் எனக்கு என்ன நன்மை என்று கூட கேட்டாள். அதையெல்லாம் நினைவில்  வைத்துக் கொள்ளாமல் அவளை சின்சியராக லவ் பண்ணினேன். இதுவரை அவளிடமிருந்து ஒரு அழைப்பும் வரவில்லை” என்றார் படபடப்பாக.

”சரி, இதற்கு நான் என்ன உதவி செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?” என்றேன்.

”சார், நெட்டில் தேடிய போது உங்களின் பதிவைப் படித்தேன்” என்றார்.

அவர் எங்கே வருகிறார் என்று புரிந்து கொண்டேன். அவரிடம், “ நான் மந்திரவாதியுமில்லை, வசியமும் உண்மையில்லை “ என்று சில விளக்கங்களைச் சொல்லி கட் செய்தேன்.

எனக்குத் தெரிந்த ஒரு பையனின் நண்பன் பதினைந்து வயதுப் பெண்ணைக் காம வயப்படுத்தி வேறு ஊருக்கு வர வழைத்து விட்டான். பெண்ணின் பெற்றோர் படிக்காதவர்கள் என்பதால் ஒரு வழியாகச் செட்டில் செய்தார்கள். பெண் யாரோ ஒரு குடிகாரனுக்கு வாழ்க்கப்பட்டு செத்துக்கொண்டிருக்கிறாள். அதே பையன் மீண்டும் ஒரு பெண்ணை (வயதுக்கு வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை என்றான் நண்பன்) காம வயப்படுத்தி, அழைத்துக் கொண்டு ஓடி மீண்டும் அடிதடி ரகளையாகி பஞ்சாயத்தில் வந்து முடிந்திருக்கிறது. 

என் வீட்டின் அருகில் இருக்கும் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சிறுமி ஒருத்தி, கொட்டிக் கொண்டிருக்கும் மழையில் நனைந்து கொண்டே, யாரோ ஒரு கல்லூரி மாணவனுடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அதைப் பற்றி விசாரித்தேன். அவளுக்கு இது இரண்டாவது பாய் பிரண்டாம். காதல் எப்படி புரிய வைக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.

காதல் என்பது என்ன?  என்பது பற்றிய புரிதல் இல்லாமல் வாழ்வதால் வரும் வினை இது. சினிமாக்களில் காதல் என்பது ”காதலைக் காட்டுதல்” என்ற வகையில் வருவது. காதல் காட்டப்படுவது அல்ல வாழ்ந்து காட்டுவது. சினிமாக் காதலுக்கும் நிஜ காதலுக்கும் 10000 மடங்கு வித்தியாசம் உள்ளது. அதை உண்மையான வாழ்க்கை வாழ்பவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சொல்லித் தெரிய வேண்டுமென்றால் அது காதலே அல்ல.

வசியம், மாந்திரீகம் பற்றி பலமுறை எழுதி விட்டேன். இனிச் சொல்ல ஒன்றுமில்லை. இருப்பினும் குறுக்கு வழியில் இன்பம் தேடும் சிலர் இருக்கும் போது, போலிச் சாமியார்கள் ஏமாற்றுவது நிற்கப் போவதில்லை. 

மனித குலத்தில் சினிமாக்களும், மீடியாக்களும் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் மிகக் குறைந்த அளவே வாழும் காலம் உள்ள மனிதன் வாழ்வில் மிகப் பெரும் அழிவுகளை உருவாக்கி வருகின்றன. புரிந்து கொண்டிருப்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். புரியாதவர்கள் மேற்கண்ட பையனைப் போல அலைவார்கள்.

வாழ்க நலமுடன், வளமுடன்

* * *


Saturday, October 8, 2011

பாவக்காய் மாமரத்தின் கதை





எங்கள் வீட்டில் மாமரங்களும், பலா மரங்களும், தென்னைகளும் அதிகம். மாமரம் என்றால் இப்போது இருக்கும் குச்சி போன்ற மரங்கள் அல்ல. மூன்று பேர் சேர்ந்து கட்டிப் பிடிக்கும் அளவுக்கு பெரிய மரம். ஏகப்பட்ட பொந்துகள் இருக்கும். கிளிகள் மற்றும் பல பறவைகள் கூடு கட்டியிருக்கும். ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு மரமாய் இருக்கும். அந்தளவுக்கு பெரிய மரம். மாங்காய் கார மாணிக்கதேவர் வீடு என்றால் பிரபலம். ஒவ்வொரு மாங்காய்களும் கிட்டத்தட்ட இரண்டு கிலோ இருக்கும். படுபயங்கர புளிப்பு சுவை. மரத்திலே பழுத்த பழமானால் இனிப்பு சும்மா தூக்கும்.

இம்மரத்தில் ஒரு முறை தேன் எடுத்த போது கிட்டத்தட்ட 10 லிட்டர் தேன் கிடைத்தது. வீட்டிற்குப் பின்புறமாய் இருந்த இடத்தில் பெரிய மாமரம் ஒன்றும், காசா லட்டு மாமரம் ஒன்றும், ஒட்டு மாமரம் ஒன்றும், பாவக்காய் மாமரம் ஒன்றும், குடத்தடி மாமரம் ஒன்றும் இருந்தது.

காசா லட்டு மாமரம் படர்ந்து விரிந்து கிடக்கும். ஒவ்வொரு மாங்காயும் லட்டுதான். மாங்காயைப் பறித்து வந்து வைக்கோல் போருக்குள் மூன்று நாள் வைத்திருந்து எடுத்தால் கமகம வாசனையுடன் கொழ கொழவென பழுத்து இருக்கும். அப்படியே சிமெண்ட் தரையில் வைத்து உருட்டி உருட்டி எடுத்து, முனையில் ஒரு கடி கடித்து ஓட்டை போட்டு உறிஞ்சினால் மாங்காய் ஜூஸ் சாப்பிட சாப்பிட அமிர்தம். எத்தனையோ மாம்பழங்களை சாப்பிட்டுக்கிறேன்.

அடுத்து ஒட்டு மாமரம். அது  இப்போது மார்க்கெட்டில் விற்கிறதே அது போல. அதற்கு எங்கள் வீட்டில் மவுசு இல்லை.

பாவக்காய் மாமரம் என்ற ஒரு மரம். பக்கத்து வீட்டின் நிலத்திற்கும் எங்கள் வீட்டின் நிலத்திற்கும் இடையில் இருக்கும் ஒற்றை நாடி மரம். இதன் மாங்காய் அசல் பாவக்காய் போலவே இருக்கும். எப்போதாவது ஒன்றோ இரண்டோ காய்க்கும். அதையும் பக்கத்து வீட்டு மாமா தெரியாமல் பறித்து விடுவார். இந்த மாமரத்திற்குப் பக்கத்தில் மாட்டினைக் கொண்டு வந்து கட்டி வைப்பார். அது மூத்திரமாகப் பேய்ந்து பேய்ந்து பாவக்காய் மாமரம் ஒரு நாள் உசிரை விட்டு விட்டது. அவர் நிலத்தில் மாடு கட்டி வைப்பதை நாம் எப்படி தடுப்பது. இந்த மாமா சரியான லொள்ளுப் பேர்வழி. சண்டைக்குப் போவெதென்றால் அவருக்கு அம்பூட்டு இஸ்டம். நம்ம வீட்டுக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். இந்த மாமா கோபத்தில் மண்வெட்டியை எடுத்து வந்து தரையில் ஓங்கி ஓங்கி வெட்டுவார். பதிலுக்கு என் மாமா வெட்டுவார். ஒரே பேச்சு ரகளையாய் இருக்கும்.

இப்படியெல்லாம் அடித்துக் கொண்டாலும் கொஞ்ச நாட்களில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை.

கொடைக்கானலுக்கு தாத்தா போய் வரும் போது வாங்கி வந்த அந்த பாவக்காய் மாமரம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒற்றை நாடியாய் சோம்பிப் போய் இருக்கும் அம்மாமரத்தின் இலைகள் பெரிது பெரிதாய் இருக்கும். ஜெனடிக்ட் மாடிபைடு மரம் என்று சொன்னார் மாமா.

தாத்தா இறக்கும் முன்பே அந்த மாமரமும் இறந்து போய் விட்டது. வீட்டின் பின்பக்கம் போவது என்றாலே எனக்கு கிலியடிக்கும்.

வீட்டின் எல்லையில் இருந்த பனைமரத்தில் ஒரு முறை முதன் முதலாய் ஆந்தையைப் பார்த்து விட்டேன். அது தலையை அப்படியே திருப்பியது கண்டு பயத்தில் நடுங்கிப் போய் விட்டேன். வேலைக்காரனை அழைத்து அதைக் காட்டியது போது, அதற்கு அவன் "தங்கம் அது பேய்" என்று சொல்லி விட்டான். தூரத்தே இருந்து பாவக்காய் மாமரத்தினைப் பார்ப்பதோடு சரி. வயது ஏற ஏற ஆந்தையின் மீதான் பயம் குறைந்து போய், அடிக்கடி பாவக்காய் மாமரத்தினைப் பார்க்க சென்று விடுவேன். எப்போதாவது காய்க்கும் மாங்காய்க்காக காத்திருந்து, பறித்து பழுக்க வைக்க முனைந்தேன். அது பழுக்கவில்லை. குழம்பில் போட்டு அம்மா தந்தார்கள். வெகு டேஸ்ட்டியாக இருந்தது.

பக்கத்து வீட்டு மாமாவிடம் ஒரு முறை கேட்டேன் "மாட்டை ஏன் மாமா இங்கே கட்டுகிறாய், மாமரம் பட்டுப் போய் விடும் பாரு" என்றேன்.

" போடா அதெல்லாம் உனக்குத் தெரியாது" என்றார்.

தாத்தா வைத்த மாமரம்,  பக்கத்து வீட்டு மாமாவின் கைங்கரியத்தால் பட்டுப்போய் விட்டது. ஒரு தலைமுறை மாங்காய் மரம் செத்துப் போய் விட்டது.

பக்கத்து வீட்டு மாமா, தாத்தாவின் தம்பியின் பையன் என்பதுதான் இக்கதையின் விசேஷம்.

* * *

Saturday, October 1, 2011

நன்றியும் ஒரு செய்தியும்

நேற்றோடு பத்து வருடங்கள் மணவாழ்க்கையின் நாட்கள் கடந்திருக்கின்றன. ஆரம்பகாலத்திலும் இன்றைக்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்னென்ன என்று யோசித்துப் பார்த்தேன்.

ஏதாவது தவற்றினைப் பார்த்தால் தலைக்கேறிய கோபம் இன்றைக்கு அறவே குறைந்து விட்டது. எதையும் ஆராய்ந்து பார்க்கும் திறன் கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது. தீய எண்ணமுள்ளவர்களை எளிதில் அடையாளம் ஓரளவு முடிகிறது. குடும்பத்தின் மீதான ஈடுபாடு அதிகரித்திருக்கிறது. உணவுக்கட்டுப்பாடு வந்திருக்கிறது. பேச்சில் நிதானம் ஓரளவு வந்திருக்கிறது. வாழ்க்கையின் ஓட்டம் ஒரளவு புரிபட்டிருக்கிறது. இன்பம் என்றால் என்ன, நன்மை என்றால் என்ன என்பதை உணர முடிகிறது. எந்த ஒரு பிரச்சினைக்கும் பல வழிகளில் தீர்வினைக் காணலாம் என்று புரிகிறது. அவசரப்படாத நிதானமான வேலைகள் வெற்றிகளைத் தரும் என்று தெரிய வருகிறது. 

துன்பத்தைத் தருபவர்களுக்கு இன்பத்தை தர மனது விழைகிறது. எதையும் ஆராய முடிகிறது. லட்சியம் பற்றிய பாதைகள் தெரிகின்றது. எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று தெரிகிறது. நேர்மைக்கும், பொய்மைக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. இன்னும் என்னென்னவோ? 

வாழ்க்கை மனிதனுக்கு கற்பிக்கும் அனுபவ பாடங்கள் பலருக்குப் புரிந்து கொள்ள முடியாமலே போய் விடும்.

"மனைவிக்கு சேலை வாங்கிக் கொடுத்தீர்களா? பூ வாங்கிக் கொடுத்தீர்களா? எங்காவது போய் வரலாமா?" என்று நண்பர் போனில் கேட்டார். எனக்கு வெளியில் செல்வதை விட வீட்டில் இருப்பது தான் பிடிக்கும் என்றேன். அவர் ஒன்றும் பேசவில்லை.

எத்தனையோ பெற்றோர், காதல், முதியோர், அப்பா, அம்மா தினங்கள் வருகின்றன. போகின்றன. மீண்டும் வருகின்றன. எனக்கு அந்த தினங்களில் நம்பிக்கை இருப்பதில்லை. காதல் என்பது சேலையிலோ, பூவிலோ தான் இருக்கவில்லை என்று மட்டும் தெரியும்.

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் இல்லை. கொடுத்துக் கொண்டே இருப்பது தான் என்னளவில் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். எதைக் கொடுப்பது? 

தீரவே தீராது அன்பினை தான் பிறருக்கு கொடுக்க வேண்டும். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி. 

அமுதாஸ் ஹோட்டலில் காருக்குள் இருந்து தயிர்சாதமும், கொஞ்சம் காய்கறிகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ வந்த இரண்டு அரவாணி சகோதரிகள் என்னருகில் வந்து “ நீங்கள் நீண்ட ஆயுளோடு, நூறாண்டுகள் வளமோடு வாழ வேண்டும்” என்று வாழ்த்தினார்கள். காசு ஒன்றும் என்னிடம் கேட்கவில்லை. வாழ்த்தி விட்டுச் சென்று விட்டார்கள். சுற்றும் முற்றும் பார்த்தேன். அவர்களைக் காணவில்லை. டிரைவரிடம் விசாரித்தேன். ”சார் அப்படி யாரும் இங்கே தென்படவில்லையே” என்றார்.

திடீரென தோன்றி மறைந்த அந்த அரவாணிகளுக்கு என் நன்றி. நேற்று போனில் வாழ்த்துக்களும், மெயில் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களுக்கு நன்றி. 

ஒரு கட்சியில் அமைப்பாளர் பதவியில் இருப்பவர் என் நண்பர். எதேச்சையாக என்னைப் பார்த்து விட “ தங்கம், ஒரு கப் டீ சாப்பிடலாமா?” என்று பிடித்துக் கொண்டார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

இன்றைக்கு இந்திய நீதித் துறை வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற்றிருக்கும் “வாச்சாத்தி தீர்ப்பு” வழங்கிய நீதிபதி நண்பரின் நெருங்கிய உறவினர். ”கடவுள் போன்றவர்கள் மனிதர்கள் ரூபத்தில் வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், இப்போது உணருகிறேன்” என்றுச் சொன்னேன். 

ஒரு நிமிடம் யோசித்து, பின் திகைத்தார். சிரித்து விட்டு விடை பெற்றுக் கொண்டேன்.

மாலையில் வீடு திரும்பினேன். சிலருக்கு சாப்பாடு போடச் சொல்லி இருந்தேன். அதைப் பற்றி விசாரித்தேன். நன்றாகச் சாப்பிட்டார்கள் என்றுச் சொன்னார் மனைவி. அவ்வார்த்தை மனதுக்கு இதமாய் இருந்தது. 

மீண்டும் நண்பர் போனில் அழைத்து “இரண்டு முழம் மல்லிகைப்பூவாது வாங்கிக் கொடுங்கள் ” என்றார்.

நண்பரிடம் சொன்னேன், “பூவுக்கு எதற்கு பூ”. மனைவியைப் பார்த்தேன். கண் சிமிட்டிச் சிரித்தாள். அதில் காதல் தெரிந்தது. 

இனி வரப் போகும் நாட்களில் திருமண நாள் கொண்டாடப்போகும் சகோதர, சகோதரிகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்

* * *

Thursday, September 29, 2011

யாரோ ஒரு பெண்ணின் தொலைபேசி அழைப்பிற்கான பதில்


(பிளாக் மேஜிக் என்றுச் சொல்லக்கூடிய மந்திரங்கள் எல்லாம் ஏமாற்று வேலை என்பதைப் பல அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்லி இருக்கின்றன. ஆனால் மனித குலம் இன்றும் ஏமாற்றுக்கலையான மந்திர, வசியங்களை நம்பிக் கொண்டிருப்பது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைப் பற்றிய சிறிய விளக்கம் தான் இது )

நேற்று மதியம் சென்னையில் இருந்து ஒரு பெண் போனில் தொடர்பு கொண்டாள். ”எனக்கொரு உதவி வேண்டும் சார், செய்வீர்களா” என்றார். அவரைப் பற்றிச் சொல்லும் படி கேட்டேன்.

இரண்டு வருடமாய் ஒருவரைக் காதலித்து வந்திருக்கிறார். அந்தக் காதலர் இவரைக் காதலித்துக் கொண்டே வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார். அதைத் தெரிந்துகொண்ட இப்பெண் காவல்துறை வரையும் சென்றிருக்கிறார். பலரிடமும் அவரின் காதலருடன் சேர உதவி செய்யும் படி கேட்க, எவரும் உதவி செய்ய மாட்டேன் என்கிறார்கள் என்றார். இன்னும் கொஞ்சம் விசாரிக்க, நான் எழுதிய மந்திரம், வசியம் என்பதை அவர் சொல்ல, அப்பெண் எங்கு வருகிறார் என்று புரிந்து கொண்டேன். 

வசியம் போட்டாவது அவரின் காதலரை வேறொரு பெண்ணிடமிருந்து பிரித்து, அவருடன் சேர்த்து வைக்க முயல்கிறார் அவர் என்பதை அறிந்து கொண்டேன். அடப்பாவமே என்று தோன்றியது.

நீங்கள் இன்னும் 40 வருடம் உயிரோடு இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்த 40 வருடத்தில் 10 வருடம் தூக்கத்திலும், இன்னும் 5 வருடங்கள் டிராவல், துணி, சமையல் இவற்றில் போய் விடும். மீதி இருக்கும் காலம் தான் உங்களுடையது. உங்களை விலக்கி வைத்திருப்பவர்களை நீங்கள் விலக்கி விடுங்கள்.

உங்களை வேண்டாமென்று நினைக்கும் ஒருவருடன் நீங்கள் எப்படி சந்தோஷமாய் வாழ முடியும்? சொல்லுங்கள் பார்ப்போம். 

சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது, ஓரமாய் இருவர் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே சென்றிருப்பீர்கள் அல்லவா, அதைப் போல உங்களுக்கு நடந்த சம்பவங்களை கடந்து போய் விடுங்கள். 

வீட்டின் சமையலறையில் வைத்திருக்கும் குப்பைத் தொட்டியை தினமும் கிளீன் செய்யவில்லை என்றால் எப்படி நாற்றமடிக்கும். அதே போல மனதில் கடந்து போன நிகழ்ச்சிகளின் குப்பையை வைத்திருந்தீர்கள் என்றால் நாற்றமடிக்கும் அல்லவா? வீசி எறியுங்கள்.

உங்கள் அம்மா, அப்பாவிடம் சொல்லி நல்ல பையனாகப் பார்த்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாய் வாழுங்கள்” என்றுச் சொல்லி கட் செய்தேன்.

மந்திரம் கால் மதி முக்கால் என்றுச் சொல்வார்கள். மந்திரத்தில் மாங்காய் வர வைக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். மந்திரம் என்பதெல்லாம் இக்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று. எனக்குத் தெரிந்த பல கிராமங்களில் மந்திரம் செய்வோர் “வசிய மருந்து” என்றுச் சொல்லி ஒரு வஸ்துவைக் கொடுப்பார்கள். அது வயிற்றுக்குள் சென்றால், சாப்பிட்டவன் கதி அதோகதியாகி விடும். யார் மருந்து போட்டார்களோ அவர்களுக்கு மதி மயங்கி, மருந்து போட்டவர்கள் சொல்வதை எல்லாம் செய்ய மாட்டார்கள் என்றுச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சகோதரியே, வாழும் காலம் கொஞ்சம் தான். உங்களைப் போன்ற பெண்கள் ஆக்கச் சக்திகள். உயிரைப் படைக்கும் பிரம்மாக்கள் நீங்கள். கடவுளுக்கு ஒப்பானவர்கள். நீங்கள் பலரை வாழ வைக்க வேண்டும். பழி வாங்க நினைக்கக் கூடாது. பெண் என்பவர் இல்லையென்றால் பூமியே இல்லை. மனிதர்களும் இல்லை. சில கேடுகெட்ட ஆண்கள் இருக்கத்தான் செய்வார்கள். தீயவர்கள் இல்லையென்றால் உலகமே இயங்காது சகோதரி. நல்லவர்களும் வேண்டும், தீயவர்களும் வேண்டும். அப்போது தான் உலகத்தின் சமன்பாடு சரியாகும் சகோதரி. நீங்கள் தவறான முடிவுக்குச் செல்ல வேண்டாம் சகோதரி.

தினமும் கடவுளை ஒரு முறையாவது நினைப்பேன். அப்போது அவரிடம் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன். என்றாவது ஒரு நாள் நீங்கள் என்னிடம் சந்தோஷமாய் வாழ்கிறேன் சார் என்றுச் சொல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

வாழ்க வளமுடன் சகோதரி !

பிரியங்களுடன், ஆசீர்வாதங்களுடன்,
சகோதரன் கோவை எம் தங்கவேல்

* * *

Sunday, September 25, 2011

நவீன அம்மாக்களும் பழமைவாத அம்மாக்களும்

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. அதைப் பற்றி உங்களிடம் சொல்லி ஆக வேண்டி இருக்கிறது.

உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியாவில் 23% சதவீதம் என்கிறது ரிப்போர்ட். 670,000 குழந்தைகள் பிறந்த ஆறு நாட்களுக்குள் இறந்து விடுகின்றனவாம்.16,47,000 ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் இறந்து விடுகின்றனவாம். முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இறப்பு விகிதம் குறைந்து விட்டாலும் ஏன் இன்னும் இப்படியான இறப்புக்கள் உண்டாகின்றன என்பதை யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை.

நேற்று, எப்போதும் பிறரைப் பேசவிடாமல், தானே பேசிக் கொண்டிருக்கும் மதிப்புமிக்க திருகோபி நாத் அவர்களின் நீயா நானா புரோகிராம் ஒன்றினை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. இந்தக் கால அம்மாக்கள், அந்தக்கால அம்மாக்கள் என்ற புரோகிராம் அது. இந்தக்கால அம்மாக்கள் எல்லோரும் டிரஸ் கோடினால் பார்வையாளனின் பார்வையை மாற்றிக் கொண்டிருந்தார்கள். நடிகைகள் எல்லாம் தோற்றுப் போவார்கள் போங்கள். அப்படி ஒரு மாடர்ன் டிரஸ் கோட். ஒரு ஆய்வு சொல்கிறது பெண்களின் கவர்ச்சி உடையால்தான் பெரும்பாலான செக்ஸ் சம்பந்தமான குற்றங்கள் நடக்கின்றன என்று. இதை வலியுறுத்துவது போல, இன்றைய வாரமலர் இது உங்களிடம் என்ற ப்குதியில் ஒரு தாய் தனது அனுபவத்தை எழுதி இருந்தார். கீழே இருக்கும் இணைப்பில் கிடைக்கும் அந்த அனுபவத்தை படிக்கலாம்.


இந்தக்கால அம்மாக்களின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் பத்தாம் பசலித்தனமாக இருந்தது. அதற்கு ஒரு உதாரணம் ஒரு அம்மா தன் மகள் அவள் பிரண்டு சாக்லேட் கொண்டு வருகிறாள் என்பதைச் சொல்லி அழுவதால், இவரும் மகளுக்கு சாக்லேட்ஸ் கொடுத்து அனுப்புகிறாராம். இதே ஐந்து வயதுக் குழந்தை ”ஃபக்” பண்ண வேண்டும், எனக்கொரு பையனை ஏற்பாடு செய்து கொடு என்று அழுதால் இந்த அம்மா செய்து கொடுப்பாரா? என்று தெரியவில்லை. இந்தக்கால அம்மாக்கள் அதைச் செய்தாலும் செய்வார்கள் போல.

பெண் என்பவள் பூமி போல என்பார் எனது சாமியார் நண்பர். அந்தப் பூமியில் விளையும் செடிகளான பிள்ளைகள் நலமோடு, வளமோடு இருக்க வேண்டுமெனில் அப்பூமி, நல்ல பூமியாக இருக்க வேண்டும். இந்தக்கால அம்மாகள் வரண்டு போன பாலை வனமாய் இருப்பதை, அந்த புரோகிராம் எனக்கு காட்டியது.

மனிதனுக்கு ஏன் நோய் வருகிறது என்று கேட்டுப்பாருங்கள். எவருமே உணவினைக் காரணம் சொல்லவே மாட்டார்கள். பல்வேறு காரணங்களைச் சொல்வார்கள். பிள்ளைகள் தூங்கும் போது இடுப்பில் டயப்பர் கட்டி விடுவதை இன்றைய ஃபேஷனாக இருக்கிறது. அது பல்வேறு வகையான தொற்று நோய்களை உருவாக்கும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 

இந்தக்கால அம்மாக்கள் காசுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தன் பிள்ளைகளின் மீது காட்டுவதே இல்லை. என் வீட்டின் அருகில் இருக்கும் பத்தாவது படிக்கும் பெண், மாலை நேரங்களில் இன்னும் மீசை கூட முளைக்காத பையனுடன் காதல் செய்து கொண்டிருக்கிறாள். அவனும் இவளும் கிசு கிசுவென்று அங்குமிங்கும் பார்த்தபடியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். முத்தமிடுகிறார்கள். இவளின் அம்மா காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்புகிறார். அப்பாவோ எதைப் பற்றியும் கண்டு கொள்வதில்லை. ஏன் இப்படியாகிறது சமூகம்? யார் இதற்கு காரணம்? என்ன பிரச்சினை?

குழந்தை பிறந்த ஆறு நாட்களுக்குள் இறக்கிறது என்றால், அதற்கு என்ன காரணம்? விஷ உணவினைத் தவிர, கேடு கெட்ட உணவுகளால் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? ஆனால் யாரும் அதைப் பற்றி கவலைப்படுவது இல்லை. உணவு பற்றிய அறிவே எவரிடத்திலும் இல்லை.

என் மகனுக்கு பிள்ளைப் பேறு பணிவிடை பார்த்தது என் அம்மா. மகனுக்கு ஒன்றரை வருடம் வரையில் எந்த நோயும் வந்ததே இல்லை. என் மகளுக்கு பிள்ளைப் பேறு பார்த்தது என் மாமியார். நான்கு மாதத்திலே டாக்டரிடம் செல்ல வேண்டி இருந்தது. இது பற்றிய ஒரு பதிவை முன்பே எழுதி இருக்கிறேன்.

என் அம்மா சீரக ரசமும், முருங்கைக்காய் குழம்பும், உணவுக்கட்டுப்பாடும் கொடுத்து வந்தார். ஆனால் மாமியாரோ குழந்தை பிறந்த இரண்டாவது நாளே சிக்கன் கொண்டு வந்து கொடுத்தார்.

எனது உறவுக்கார பெண்ணின் குழந்தை இறந்தே பிறந்தது? ஏன் தெரியுமா? அவளின் உணவுப் பழக்கம். காலையில் ஒரு செம்பு சுண்டக்காய்ச்சிய பால், இரவில் அதே போல. பத்து இட்லி அதற்குச் சட்னி, இடையிடையே பழங்கள், மட்டன், மீன், இறால், நண்டு என்று அவள் சாப்பிட்டதை கணக்கில் கொள்ளவே முடியாது. உப்பு நீர், பிரஷர், சுகர் என்று அனைத்தும் வர, மருத்துவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். ஆனால் அவள் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலையேபடவில்லை. அவளின் கணவனுக்கோ அதைப் பற்றிய எந்த ஒரு அறிவும் இல்லை. பிரசவமாகும் சமயத்தில் கூட சூட்டினைக் கிளப்பும் நண்டு வறுவலும், இரால் வறுவலும் சாப்பிட்டிருக்கிறாள். முடிவு குழந்தை இறந்து விட்டது.

அந்தக்கால அம்மாக்களின் கை வைத்தியப் பக்குவங்கள் இன்றைக்கு எந்தப் பெண்களிடம் கிடையவே கிடையாது. எதற்கெடுத்தாலும் “டாக்டர்” வேண்டும். குழந்தையைக் குளிப்பாட்டக் கூட நொச்சி இலை பயன்படுத்துவார்கள் அந்தக்காலத்தில். துளசிசாற்றினை வாரம் ஒரு முறை அம்மா, நான் கதறக் கதற மூக்கினைப் பிடித்துக் கொண்டு வாய்க்குள் ஊற்றுவார்கள். அப்பக்கோவைத் தழையின் சாறு, கற்றாழைச்சாறு என்று என் அம்மா, எனக்கு கொடுத்த தாவர உணவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. சாப்பிடுவது குறைவது போலத் தோன்றினால் “பிரண்டைத் துவையல்” வந்து விடும். நன்கு காய்ச்சியக்கூழில் பழைய சாதம், தயிர் கலந்து நன்கு கரைத்து தம்ளரில் ஊற்றித் தருவார்கள். தொட்டுக்கொள்ள கருவாட்டுக் குழம்பின் கத்தரியை தருவார்கள். மூன்று தம்ளரை முக்கி முக்கியாவது குடிக்க வேண்டும். ஆனால் அதற்கு அவசியமில்லாமல் கருவாட்டுக் குழம்பின் கத்தரிக்காய் நான்கு தம்ளர் வரை கொண்டு வந்து விடும்.

விதை நெல் முளை கட்டியதைக் கொண்டு வந்து அடுப்பில் வைத்து சூடாக்கி, அதை உரலில் போட்டு இடித்து அவலாக்கி, புடைத்து அத்துடன் தேங்காய் சேர்த்து தருவார்கள். உடம்பிற்கு ஏதாவது கெடுதி வருமா? சொல்லுங்கள் பார்ப்போம்?

எனக்கு கல்யாணமாகி குழந்தைப் பிறந்தவுடன் கூட, நான் குறைவாகச் சாப்பிடுகிறேன் என்று எங்கெங்கோ தேடி அலைந்து பிரண்டையை கொண்டு வந்து துவையல் செய்து கொடுத்தார்கள். ஒவ்வொரு நோய்க்கும் காய்கறிகள், இலைகள் இருக்கின்றன. சில பக்குவங்கள் இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் எந்த வித அறிவும் இன்றி இன்றைய கால அம்மாக்கள் இருப்பதால், தான் அறியாமலே தன் குழந்தைகளைக் கொல்லும் எமனாக மாறி வருகின்றார்கள். ஒரு கோக் குடித்தால் உடம்பு ஆயிரமாயிரம் சம்பட்டி அடிகளை வாங்குவதற்கும் மேலாக அவஸ்தைப் படுமாம். யார் கேட்கின்றார்கள். எங்குப் பார்த்தாலும் கோக் பாட்டில்களைக் கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய மக்கள்.

எனது தோழி ஒருத்தியின் மகள் எட்டு வயதில் பூப்படைந்தாள். அக்குழந்தையின் தினசரி உணவு “ பிராய்லர் சிக்கன்”. எத்தனையோ முறை அவ்வுணவு வேண்டாம் என்றுச் சொன்னேன். கேட்கவில்லை. இன்று அக்குழந்தை மனதுக்குள் குமைந்து குமைந்து அழுதுகொண்டிருக்கிறது.

கேடு கெட்ட நாகரீகம் மனிதனைக் கொல்கிறது. அதைத் தான் வாழ்வியல் அர்த்தமாக மீடியாக்கள் காட்டுகின்றன. அம்மாக்கள் தங்கள் குழந்தைகளைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்.

மாற வேண்டும் இந்த நிலை. மாற வேண்டியது பெண்களும் ஆண்களும்.

* * *




புத்தம் புதிய வீடுகள் இவை. இதே இடத்தில் நான்கு செண்டில் கூட வீடு ஒன்று இருக்கிறது. அது 32 லட்சம் விலையாகும். லோன் வசதியும் இருக்கிறது. டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கிளீன். வீடு வேண்டுவோர் விரைவில் புக்கிங் செய்து கொள்ளவும்.

* * *


Friday, September 23, 2011

சிக்க வைக்கும் சில தூண்டில்கள்


ஃபெமோ மாடலிங் கம்பெனியைச் சேர்ந்த மாடல் ஒருவருக்கு சினிமா ப்ராஜெக்ட் ஒன்றிற்காக டெல்லியில் இருந்து சென்னை வர, ஏர் இந்தியாவில் டிக்கெட் புக் செய்திருந்தேன். டிக்கெட்டில் எனது நம்பரைக் கொடுத்து வைத்திருந்தேன். 6.10க்கு கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா ஃப்ளைட் சரியாக 10.55க்குத்தான் கிளம்பியது. அதற்குள் சென்னையில் ரிசீவ் செய்ய சென்றிருந்தவர், போனில் அழைத்து சரியான ரகளை. ஏர் இந்தியா வழங்கும் சர்வீஸ் எத்தகையது என்று நேற்று எனக்குப் புரிந்தது.

திரும்ப மாடல் டெல்லிக்கு கிளம்ப டிக்கெட்டைக் கையில் கொடுத்து, செக்கின் செய்து விட்டு, நண்பரும் வீட்டிற்கு திரும்ப வந்து விட்டார்.

ஒரு வழியாக வேலை முடிந்து விட்டது என்று ஆசுவாசப் பட்ட அடுத்த சில நொடிகளுக்குள் அது எப்படி அத்தனை எளிதாக முடியும் என்பது போல, ஒரு போன் கால் வந்தது.

யாரென்று கேட்டேன். மாடல் பெயரைச் சொல்லி, அவர் எங்கே என்று கேட்டார். என்ன விஷயம் என்றேன். அவரின் பேக் ஒன்று மிஸ்ஸாகி எங்களிடம் இருக்கிறது. அதை அவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றார். நண்பரை அழைத்தால் ஆள் போன் எடுக்கவே இல்லை. என்ன ரகளையடா இது என்று டென்ஷனாகி மாடலை அழைத்து, உனது பேக் ஏதாவது மிஸ்ஸாகி விட்டதா என்று கேட்டேன். இல்லையே என்றாள் அவள்.

”உன் பேக் ஏர்போர்ட் அத்தாரியிடம் இருக்கிறது என்று போன் வந்திருக்கிறது, உன் லக்கேஜை மிஸ் பண்ணி விட்டாயா? ”என்று கேட்டேன்.

”அதெல்லாம் ஒன்றுமில்லையே” என்றுச் சொன்னவள், ”அயாம் ஸ்கேர்டு” என்று கதற ஆரம்பித்தாள். எனக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது. மாடல் அமெரிக்கன் ஆங்கிலம் பேசுகிறாள். எனக்கோ நம்ம தமிழ் ஆங்கிலம் தான் புரியும். அவசரத்தில் அவள் பேசுவதைப் புரிந்து கொள்வது என்பது எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. 

அதன் பிறகு அழைத்திருந்த நம்பரை மீண்டும் தொடர்பு கொண்டு, என்ன பேக், நீங்கள் யார் என்று கேட்ட போது தான் அந்த ஆள் ஏதோ பிரச்சினைக்கு அடிப்போடுகிறான் என்றுத் தெரிந்தது. கேரி பேக்கில், சில கேரி பேக்குகள் இருக்கின்றனவாம்,  அதை அவளிடம் கொடுக்க வேண்டுமாம். ஆகையால் அவளின் தொடர்பு எண்ணைக் கொடு என்றான். எனக்கு விர்ரென்று கோபம் தலைக்கேறியது. அவன் டிக்கெட்டில் இருந்த நம்பரை எப்படிக் கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை. அவன் சென்னை ஏர்போர்ட்டைச் சேர்ந்தவன் தானா என்பதும் தெரியவில்லை.

”ஐ வில் செண்ட் மை கலீக் டுமாரோ டு கலெக்ட் பேக்” என்றுச் சொல்லிக் கட் செய்தேன். யார் அந்த ஆள்? எதற்காக போன் செய்தான் என்பதையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்தால் வேறு எந்த வேலையையும் பார்க்க முடியாது அல்லவா? ஆகையால் விட்டு விட்டேன். அதற்குள் மாடல் பல முறை எனக்கு அழைக்க, நான் அவளிடம் சொன்னேன்.

நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் அல்லவா, அதனால் உன்னுடன் பேச முயன்றிருப்பான் போல”. கேட்டதும் சிரி சிரியென்று சிரித்தாள் மாடல்.

டெல்லியில் இருந்து போன் வந்தது. “ ரீச்டு” என்ற குரலைக் கேட்டதும் தான் தூங்கவே சென்றேன்.

* * *

தமிழ் பேசத் தெரிந்த ஆண்கள், பெண்கள் எங்களது இணையதள முகவரியில் இலவசமாய் பதிவு செய்து கொள்ளவும். தமிழ் பட வாய்ப்புகளைப் பெற உதவுகிறோம். 

இணையதள முகவரி : http://www.femo.in

Sunday, September 18, 2011

ஒரு சிறுவனின் தமிழர்களுக்கான முதல் உண்ணாவிரதப் போராட்டம்



( மகன் ரித்திக் நந்தா)

மனித உரிமைகள் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பொழுது மகனும் வருகிறேன் என்றான். நாம் எதற்காகச் செல்கிறோம், ஏன் இன்றைக்கு உண்ணாவிரதம் இருக்கிறோம் என்ற விபரங்களைச் சொன்னேன். அமைதியாய் கேட்டுக் கொண்டான். தமிழ் நாடு ஹோட்டல் அருகில் இருந்த போராட்டப்பந்தலில் சென்று அமர்ந்தோம். அருகில் உட்கார்ந்து அமைதியாய் அங்கு நடப்பவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். “அப்பா, நீ பேசுவாயா?” என்று அடிக்கடிக் கேட்டுக் கொண்டிருந்தான். பல கட்சிகளைச் சார்ந்தவர்களும் வந்து ஆதரவு தெரிவித்துப் பேசிச் சென்றனர். கூட்ட அமைப்பாளர் பேசியே தீர வேண்டுமென்றுச் சொல்லி விட்டார். இதுவரை மைக்கில் பேசியது இல்லை என்பதால் கொஞ்சம் பயமும், படபடப்பும் சேர்ந்து கொண்டது. மாலையில் பேச அழைத்தார்கள். கன்னிப் பேச்சினை ஆரம்பித்தேன்.

சுருக்கமாய் அதன் வடிவம் கீழே 

“உலகம் தீயவர்களால் நடத்தப்படுகிறது, நல்லவார்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் கொல்கிறார்கள், எப்படி பிரச்சினை ஆரம்பித்தது என்று யாரும் சொல்லவில்லை. 2100 ஆண்டுகளுக்கு முன்பே எல்லாளன் என்ற தமிழ் மன்னன் அனுராதாபுரத்தினை தலைமையாகக் கொண்டு ஆட்சி செய்திருக்கிறான் என்று வரலாறு சொல்கிறது. அதுமட்டுமல்ல கி.பி 10 - 11 நூற்றாண்டுகளில் சோழர் ஆட்சிதான் நடைபெற்று வந்திருக்கிறது. தமிழர்கள் இலங்கையில் சமபகுதிகளில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கான ஆவணங்கள் தானிது. தமிழர்களிடமிருந்து ஆட்சியைப் பிரிக்க வேண்டுமென்பதற்காக பிரிட்டிஷார் இலங்கைக்கு விடுதலை கொடுத்த போது, சிங்களவனிடம் கொடுத்துச் சென்றான். அதன்பிறகு பிரச்சினை ஏற்பட்டது. 1955ம் வருடம் களனி என்ற இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையில் இனி சிங்களம்தான் ஆட்சி மொழி என்ற தீர்மானத்தை நிறைவேற்ற, அன்றிலிருந்துதான் தமிழர்கள் போராட ஆரம்பித்தனர். வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்ரீ என்னும் எழுத்தை பதிக்க வேண்டுமென்ற உத்தரவினை எதிர்த்துப் போராடியவர்கள் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.நான்காம் உலகத் தமிழ் மாநாட்டின் பரிசளிப்பு விழாவின் போது, சிங்கள போலீஸார் மின்சாரக் கம்பிகளில் சுட்டு அறுந்து விழ வைத்து, ஒன்பது பேரைக் கொன்ற நிகழ்வுதான் அடுத்த ஆரம்பம். சிறு நிலப்பகுதியில் வாழும் சிங்களர்கள் உலகெங்கும் பெரும்பான்மை இனமாக வாழும் தமிழர்களை எந்த வித பயமின்றிக் கொல்கிறார்கள் என்றால் என்ன காரணம்? தமிழர்கள் ஜாதி, மதம், இனம், மொழி, பணம், பகட்டு, அகம்பாவம் போன்றவற்றினால் பிரிந்து கிடக்கின்றனர். மனிதாபிமானம், இரக்ககுணம் இன்றி வாழ்கின்றார்கள். அதனால்தான் சிறுபான்மை இனத்தவரான சிங்களவர்கள் பெரும்பான்மை இனத்தவரான தமிழர்களைக் கொன்று குவிக்கின்றார்கள். உடனடித் தேவை தமிழர்களிடம் ஒற்றுமை. அது இருந்தால் சிங்களவர்கள் காணாமல் போய் விடுவார்கள். அரசியலில் என்னென்னவோ நடந்து முடிந்தன. அதுவெல்லாம் நமக்குத் தேவையில்லை. இன்றைக்கு மாண்புமிகு அம்மா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றார்கள். அதை இந்திய அரசு செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று மனித உரிமைகள் கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” 

மனிதப் பிறப்பு என்பது பிறருக்கு நன்மை செய்யத்தான் உருவாக்கப்பட்டது எனலாம். குழந்தையாக இருக்கும் போதும், வளர்ந்த பிறகும்,இளைஞனாக இருக்கும் போதும், குடும்பஸ்தனாக இருக்கும் போதும், வயதான போதும் எப்போதும் பிறரின் உதவியோடுதான் அவன் பிழைத்திருக்க வேண்டும் என்கிறது சமூக வாழ்வியல் முறை. தனி மரம் தோப்பாகாது என்பார்கள். அது மனிதனின் வாழ்க்கையில் முற்றிலும் உண்மையான ஒன்று.

அதை எனது மகனுக்கு உணர்த்த வேண்டிய முயற்சியில் ஆரம்பகட்ட அடி எடுத்து வைத்திருக்கிறேன். மாலையில் ”அப்பா பசிக்குது” என்றுச் சொல்ல,  மனசு கலங்கி விட்டது. அவனிடம் சில இலங்கைச் சிறார்களின் கதைகளைச் சொன்னேன். கேட்டுக் கொண்டிருந்தான்.பின்னர் பேசாமல் உட்கார்ந்து கொண்டான். கூட்டம் முடியும் வரை பசிக்குது என்றுச் சொல்லவே இல்லை. 

* * *

Friday, September 16, 2011

பற்பசையில் சிறந்தது எது?



2006இல் எடுக்கப்பட்ட ஒரு சர்வே இந்திய பற்பசை மார்கெட்டில் பற்பசை விற்பனை 2200 கோடி ரூபாய் என்று சொல்கிறது. இந்தியாவில் கோல்கேட் பிராண்ட் பற்பசை மார்கெட்டில் 50 சதவீத மார்க்கெட்டை தக்க வைத்திருக்கிறது என்று சர்வேக்கள் சொல்கின்றன.இவ்வளவு பெரிய மார்க்கெட்டா இருக்கிறது என்று மலைத்து விடாதீர்கள். 2020 ஆம் ஆண்டில் இந்திய நுகர்வோர் சந்தையின் மதிப்பு 820 பில்லியன் டாலர்ஸ் (820,000,000,000$) என்றுச் சொல்கின்றார்கள் மார்க்கெட்டிங்க் துறையினர். கோடீஸ்வர கம்பெனிகள் இந்தச் சந்தையை தன் பக்கம் திருப்பி விட பெரும் பிரயத்தனங்களைச் செய்து கொண்டிருக்கின்றன. உங்களுக்கு இப்போது தெரிந்திருக்குமே, ஏன் ரிலையன்ஸ் நிறுவனத்தார் நுகர்வோர் சந்தையில் நுழைந்த காரணம். இந்தியாவின் பேஸ்ட் மார்க்கெட்டில் இருக்கும் பிராண்டுகளைப் பார்க்கலாம்.

Top 5 Brands - Market Share (2006)

1. Colgate Dental Cream 34%
2. Close-Up 14%
3. Pepsodent Complete 10 11%
4. Colgate Cibaca Top 5.7%
5. Colgate Fresh Energy Gel 3%
6. Other Brands 32.3% (Anchor, Babool, Ajanta, etc)

( Thanks to Ragul )

இனி, இந்த பேஸ்ட்டுடனான எனது தொடர்பு சம்பந்தமாய் பார்க்கலாம்.


வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்துக் கிணற்றிலிருந்து வெதுவெதுப்பான நீரை தண்ணீர் பொக்கையில் நிரப்பி குளிக்கும் பரவச உணர்வுக்கு ஈடான ஒரு குளியலை எந்த ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலும் தராது. அவ்வாறான நாட்களில் எனது குளியல் இன்றைக்கு மறைந்தே போன மைசூர் ஜாஸ்மின் சோப்பின் மல்லிகை வாசத்துடன், குளோசப் பேஸ்டின் வாசத்துடன் ஒவ்வொரு நாளும் அற்புத அனுபவத்தை தரும். 

குளோசப் அறிமுகமான அன்றிலிருந்து சிகப்பு கலர் மீதான ஈர்ப்பின் காரணமாய் பயன்படுத்த ஆரம்பித்தேன். அது என்ன விதமான விளைவுகளை உருவாக்கும் என்பதெலலாம் எனக்கு தெரியாது. வியாபார உத்தியின் பிரகாசமான மார்க்கெட்டிங் வித்தையில் மனசு மயங்கிய நேரமிது. ஏனென்றால் அந்த நேரம் என் உடம்பில் சூடான இளம் ரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. அழகான பொருட்கள், ஆடம்பரமான அழகு சாதனங்களின் மீதான கவன ஈர்ப்புக்கால வயது அது.

பல வருடங்களாக குளோசப் பேஸ்ட் என்னுடன் பயணித்துக்கொண்டே வந்தது. ஒவ்வொரு நாட்களும் ரத்தக்கசிவுகள் பற்துலக்கும் போது வெளிப்படும். அதை ஒரு பெரிய பிரச்சினையாக கருதவில்லை. ஒரு முறை பற்கள் பிரச்சினைக்காக மருத்துவரை நாடிய போது அவரிடம் நல்ல டூத் பேஸ்ட் ஒன்றின் குணாம்சம் என்ன என்று கேட்டேன். பேஸ்ட் எண்ணெய் போல வழுவழுப்பாக இல்லாமல் இருக்க வேண்டும் என்றுச் சொன்னார். கோல்கேட் சிபாகா பேஸ்ட்டினை சிபாரிசு செய்தார். அன்றிலிருந்து சிபாகாவை உபயோகப்படுத்த ஆரம்பித்தேன். பல் துலக்கும் போது உருவான ரத்தக் கசிவு காணாமல் போய் விட்டது. குளோசப் பேஸ்ட் என் உடம்பிற்கு ஒத்து வரவில்லை. வாயில் புண்ணை உண்டாக்கி இருந்திருக்கிறது. அது பற்றிய பிரச்சினை நீண்ட நாட்களாய் தெரியாமலே இருந்திருக்கிறது.

இப்படியாக குளோசப் பேஸ்ட் என் வாழ்க்கைப் பாதையில் இருந்து விடை பெற்றுக் கொண்டது. இப்போதும் சில விளம்பரங்களைப் பார்க்கும் போது இளமைக்கால கிணற்றுக் குளியலும், குளோசப் பேஸ்ட்டும் நினைவிலாடும்.

பாவக்காய் மாதிரியான மாங்காயைப் பார்த்திருக்கின்றீர்களா? அது போல ஒரு மாமரம் எங்கள் வீட்டில் இருந்தது. அது கொல்லப்பட்ட கதை ஒன்றிருக்கிறது. அதை விரைவில் படிக்கலாம்.

* * *

Thursday, September 15, 2011

இலங்கைத் தமிழர்களுக்காக கோவையில் உண்ணாவிரதப் போராட்டம்


அகில உலக மனித உரிமைகள் கூட்டமைப்பு, அவர் ஹோப் பவுண்டேஷன், இளம்தளிர் மாதர் சங்கம் சார்பில் வரும் சனிக்கிழமை 17.09.2011 அன்று கோவையில் தமிழ் நாடு ஹோட்டல் முன்புறம் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. 

கோரிக்கைகள் :

தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தவும்,

ஐ. நா. சபையின் மூலம் இயங்கும் அகில உலக மனித உரிமைகள் ஆணையத்தின் வழியாக இலங்கை அரசின் மீது மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்,

இந்தியாவிலேயே குறிப்பாக தமிழகத்தில் செயல்படும் மனித உரிமைகள் அமைப்புகளை இலங்கைக்கு அனுப்பி மனித உரிமை மீறல் குற்றங்களை ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவும், பாதிப்பினை ஏற்படுத்தியவர்களுக்குத் தண்டனை வழங்கவும், இந்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.

தொடர்புக்கு : 98944 10651 / 93601 08948 / 93601 08952 / 99940 30939


* * *