குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, October 1, 2011

நன்றியும் ஒரு செய்தியும்

நேற்றோடு பத்து வருடங்கள் மணவாழ்க்கையின் நாட்கள் கடந்திருக்கின்றன. ஆரம்பகாலத்திலும் இன்றைக்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்னென்ன என்று யோசித்துப் பார்த்தேன்.

ஏதாவது தவற்றினைப் பார்த்தால் தலைக்கேறிய கோபம் இன்றைக்கு அறவே குறைந்து விட்டது. எதையும் ஆராய்ந்து பார்க்கும் திறன் கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது. தீய எண்ணமுள்ளவர்களை எளிதில் அடையாளம் ஓரளவு முடிகிறது. குடும்பத்தின் மீதான ஈடுபாடு அதிகரித்திருக்கிறது. உணவுக்கட்டுப்பாடு வந்திருக்கிறது. பேச்சில் நிதானம் ஓரளவு வந்திருக்கிறது. வாழ்க்கையின் ஓட்டம் ஒரளவு புரிபட்டிருக்கிறது. இன்பம் என்றால் என்ன, நன்மை என்றால் என்ன என்பதை உணர முடிகிறது. எந்த ஒரு பிரச்சினைக்கும் பல வழிகளில் தீர்வினைக் காணலாம் என்று புரிகிறது. அவசரப்படாத நிதானமான வேலைகள் வெற்றிகளைத் தரும் என்று தெரிய வருகிறது. 

துன்பத்தைத் தருபவர்களுக்கு இன்பத்தை தர மனது விழைகிறது. எதையும் ஆராய முடிகிறது. லட்சியம் பற்றிய பாதைகள் தெரிகின்றது. எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று தெரிகிறது. நேர்மைக்கும், பொய்மைக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. இன்னும் என்னென்னவோ? 

வாழ்க்கை மனிதனுக்கு கற்பிக்கும் அனுபவ பாடங்கள் பலருக்குப் புரிந்து கொள்ள முடியாமலே போய் விடும்.

"மனைவிக்கு சேலை வாங்கிக் கொடுத்தீர்களா? பூ வாங்கிக் கொடுத்தீர்களா? எங்காவது போய் வரலாமா?" என்று நண்பர் போனில் கேட்டார். எனக்கு வெளியில் செல்வதை விட வீட்டில் இருப்பது தான் பிடிக்கும் என்றேன். அவர் ஒன்றும் பேசவில்லை.

எத்தனையோ பெற்றோர், காதல், முதியோர், அப்பா, அம்மா தினங்கள் வருகின்றன. போகின்றன. மீண்டும் வருகின்றன. எனக்கு அந்த தினங்களில் நம்பிக்கை இருப்பதில்லை. காதல் என்பது சேலையிலோ, பூவிலோ தான் இருக்கவில்லை என்று மட்டும் தெரியும்.

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் இல்லை. கொடுத்துக் கொண்டே இருப்பது தான் என்னளவில் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். எதைக் கொடுப்பது? 

தீரவே தீராது அன்பினை தான் பிறருக்கு கொடுக்க வேண்டும். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி. 

அமுதாஸ் ஹோட்டலில் காருக்குள் இருந்து தயிர்சாதமும், கொஞ்சம் காய்கறிகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ வந்த இரண்டு அரவாணி சகோதரிகள் என்னருகில் வந்து “ நீங்கள் நீண்ட ஆயுளோடு, நூறாண்டுகள் வளமோடு வாழ வேண்டும்” என்று வாழ்த்தினார்கள். காசு ஒன்றும் என்னிடம் கேட்கவில்லை. வாழ்த்தி விட்டுச் சென்று விட்டார்கள். சுற்றும் முற்றும் பார்த்தேன். அவர்களைக் காணவில்லை. டிரைவரிடம் விசாரித்தேன். ”சார் அப்படி யாரும் இங்கே தென்படவில்லையே” என்றார்.

திடீரென தோன்றி மறைந்த அந்த அரவாணிகளுக்கு என் நன்றி. நேற்று போனில் வாழ்த்துக்களும், மெயில் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களுக்கு நன்றி. 

ஒரு கட்சியில் அமைப்பாளர் பதவியில் இருப்பவர் என் நண்பர். எதேச்சையாக என்னைப் பார்த்து விட “ தங்கம், ஒரு கப் டீ சாப்பிடலாமா?” என்று பிடித்துக் கொண்டார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

இன்றைக்கு இந்திய நீதித் துறை வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற்றிருக்கும் “வாச்சாத்தி தீர்ப்பு” வழங்கிய நீதிபதி நண்பரின் நெருங்கிய உறவினர். ”கடவுள் போன்றவர்கள் மனிதர்கள் ரூபத்தில் வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், இப்போது உணருகிறேன்” என்றுச் சொன்னேன். 

ஒரு நிமிடம் யோசித்து, பின் திகைத்தார். சிரித்து விட்டு விடை பெற்றுக் கொண்டேன்.

மாலையில் வீடு திரும்பினேன். சிலருக்கு சாப்பாடு போடச் சொல்லி இருந்தேன். அதைப் பற்றி விசாரித்தேன். நன்றாகச் சாப்பிட்டார்கள் என்றுச் சொன்னார் மனைவி. அவ்வார்த்தை மனதுக்கு இதமாய் இருந்தது. 

மீண்டும் நண்பர் போனில் அழைத்து “இரண்டு முழம் மல்லிகைப்பூவாது வாங்கிக் கொடுங்கள் ” என்றார்.

நண்பரிடம் சொன்னேன், “பூவுக்கு எதற்கு பூ”. மனைவியைப் பார்த்தேன். கண் சிமிட்டிச் சிரித்தாள். அதில் காதல் தெரிந்தது. 

இனி வரப் போகும் நாட்களில் திருமண நாள் கொண்டாடப்போகும் சகோதர, சகோதரிகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்

* * *

5 comments:

Anonymous said...

congrats !! wish you to have a happy life

Anonymous said...

Congrats!!!

பாலராஜன்கீதா said...

உங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த இனிய மணநாள் வாழ்த்துகள். ரித்திக் நந்தா நிவேதிதா இருவருக்கும் எங்கள் அன்பினைத் தெரிவிக்கவும்.

அப்பாதுரை said...

வாழ்த்துகள்.

Karthikeyan Rajendran said...

அருமை . அன்பு பதிவருக்கு மணநாள் வாழ்த்துக்களோடு, தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.