குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, September 18, 2011

ஒரு சிறுவனின் தமிழர்களுக்கான முதல் உண்ணாவிரதப் போராட்டம்



( மகன் ரித்திக் நந்தா)

மனித உரிமைகள் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பொழுது மகனும் வருகிறேன் என்றான். நாம் எதற்காகச் செல்கிறோம், ஏன் இன்றைக்கு உண்ணாவிரதம் இருக்கிறோம் என்ற விபரங்களைச் சொன்னேன். அமைதியாய் கேட்டுக் கொண்டான். தமிழ் நாடு ஹோட்டல் அருகில் இருந்த போராட்டப்பந்தலில் சென்று அமர்ந்தோம். அருகில் உட்கார்ந்து அமைதியாய் அங்கு நடப்பவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். “அப்பா, நீ பேசுவாயா?” என்று அடிக்கடிக் கேட்டுக் கொண்டிருந்தான். பல கட்சிகளைச் சார்ந்தவர்களும் வந்து ஆதரவு தெரிவித்துப் பேசிச் சென்றனர். கூட்ட அமைப்பாளர் பேசியே தீர வேண்டுமென்றுச் சொல்லி விட்டார். இதுவரை மைக்கில் பேசியது இல்லை என்பதால் கொஞ்சம் பயமும், படபடப்பும் சேர்ந்து கொண்டது. மாலையில் பேச அழைத்தார்கள். கன்னிப் பேச்சினை ஆரம்பித்தேன்.

சுருக்கமாய் அதன் வடிவம் கீழே 

“உலகம் தீயவர்களால் நடத்தப்படுகிறது, நல்லவார்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் கொல்கிறார்கள், எப்படி பிரச்சினை ஆரம்பித்தது என்று யாரும் சொல்லவில்லை. 2100 ஆண்டுகளுக்கு முன்பே எல்லாளன் என்ற தமிழ் மன்னன் அனுராதாபுரத்தினை தலைமையாகக் கொண்டு ஆட்சி செய்திருக்கிறான் என்று வரலாறு சொல்கிறது. அதுமட்டுமல்ல கி.பி 10 - 11 நூற்றாண்டுகளில் சோழர் ஆட்சிதான் நடைபெற்று வந்திருக்கிறது. தமிழர்கள் இலங்கையில் சமபகுதிகளில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கான ஆவணங்கள் தானிது. தமிழர்களிடமிருந்து ஆட்சியைப் பிரிக்க வேண்டுமென்பதற்காக பிரிட்டிஷார் இலங்கைக்கு விடுதலை கொடுத்த போது, சிங்களவனிடம் கொடுத்துச் சென்றான். அதன்பிறகு பிரச்சினை ஏற்பட்டது. 1955ம் வருடம் களனி என்ற இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையில் இனி சிங்களம்தான் ஆட்சி மொழி என்ற தீர்மானத்தை நிறைவேற்ற, அன்றிலிருந்துதான் தமிழர்கள் போராட ஆரம்பித்தனர். வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்ரீ என்னும் எழுத்தை பதிக்க வேண்டுமென்ற உத்தரவினை எதிர்த்துப் போராடியவர்கள் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.நான்காம் உலகத் தமிழ் மாநாட்டின் பரிசளிப்பு விழாவின் போது, சிங்கள போலீஸார் மின்சாரக் கம்பிகளில் சுட்டு அறுந்து விழ வைத்து, ஒன்பது பேரைக் கொன்ற நிகழ்வுதான் அடுத்த ஆரம்பம். சிறு நிலப்பகுதியில் வாழும் சிங்களர்கள் உலகெங்கும் பெரும்பான்மை இனமாக வாழும் தமிழர்களை எந்த வித பயமின்றிக் கொல்கிறார்கள் என்றால் என்ன காரணம்? தமிழர்கள் ஜாதி, மதம், இனம், மொழி, பணம், பகட்டு, அகம்பாவம் போன்றவற்றினால் பிரிந்து கிடக்கின்றனர். மனிதாபிமானம், இரக்ககுணம் இன்றி வாழ்கின்றார்கள். அதனால்தான் சிறுபான்மை இனத்தவரான சிங்களவர்கள் பெரும்பான்மை இனத்தவரான தமிழர்களைக் கொன்று குவிக்கின்றார்கள். உடனடித் தேவை தமிழர்களிடம் ஒற்றுமை. அது இருந்தால் சிங்களவர்கள் காணாமல் போய் விடுவார்கள். அரசியலில் என்னென்னவோ நடந்து முடிந்தன. அதுவெல்லாம் நமக்குத் தேவையில்லை. இன்றைக்கு மாண்புமிகு அம்மா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றார்கள். அதை இந்திய அரசு செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று மனித உரிமைகள் கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” 

மனிதப் பிறப்பு என்பது பிறருக்கு நன்மை செய்யத்தான் உருவாக்கப்பட்டது எனலாம். குழந்தையாக இருக்கும் போதும், வளர்ந்த பிறகும்,இளைஞனாக இருக்கும் போதும், குடும்பஸ்தனாக இருக்கும் போதும், வயதான போதும் எப்போதும் பிறரின் உதவியோடுதான் அவன் பிழைத்திருக்க வேண்டும் என்கிறது சமூக வாழ்வியல் முறை. தனி மரம் தோப்பாகாது என்பார்கள். அது மனிதனின் வாழ்க்கையில் முற்றிலும் உண்மையான ஒன்று.

அதை எனது மகனுக்கு உணர்த்த வேண்டிய முயற்சியில் ஆரம்பகட்ட அடி எடுத்து வைத்திருக்கிறேன். மாலையில் ”அப்பா பசிக்குது” என்றுச் சொல்ல,  மனசு கலங்கி விட்டது. அவனிடம் சில இலங்கைச் சிறார்களின் கதைகளைச் சொன்னேன். கேட்டுக் கொண்டிருந்தான்.பின்னர் பேசாமல் உட்கார்ந்து கொண்டான். கூட்டம் முடியும் வரை பசிக்குது என்றுச் சொல்லவே இல்லை. 

* * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.