குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 1, 2011

பிள்ளையார்



மனைவியோ நண்பனோ இருவரிடம் கூட சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது. அவ்வேளைகளில் நமக்கு உற்ற தோழனாக வருவது “கடவுள்”. மனதுக்குள் கிடந்து அழுத்தும் சில உணர்வுகளை வாய் விட்டுப் பேசியாக வேண்டும். அவ்வாறு பேசினால்தான் மன அழுத்தம் தீரும். இல்லையென்றால் “டாஸ்மாக்கு” போக நேரிடும். முன்னோர்கள் மனிதனுக்கு இது போன்ற ஒரு துணை தேவைதான் என்பதற்காகத்தான் கடவுளை உருவாக்கினோர்களோ என்று சில சமயம் நினைக்கத் தோன்றும். பிள்ளையார் கூட எனக்கும் அது போன்ற சில சமயங்களில் உதவிக்கு வருவார்.

சனிக்கிழமை தோறும் வாரா வாரம் திருமணம் ஆன நாளில் இருந்து மனைவியை உழவர் சந்தைக்கு அழைத்துச் சென்று காய்கறிகள் வாங்கி வந்து குளிரகத்தில் வைத்துக் கொள்வோம். அப்படியான நாட்களில் சிங்கா நல்லூர் உழவர் சந்தைக்கு அருகில் இருக்கும் பிள்ளையாரை அடிக்கடி பார்க்கும் சந்தர்ப்பம் வந்தது. மார்கழி மாதங்களில் பிள்ளையார் ஏக போகமாய் இருப்பாய். தோரணம் என்ன? பாட்டு என்ன? படையல்கள் என்ன? அபிஷேகங்கள் என்ன?  அந்தச் சூழலில் பிள்ளையாரைப் பார்ப்பதே மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்.

சாலையில் இருந்தபடியே அவருக்கு நடக்கும் அபிஷேகங்களை பார்ப்பது உண்டு. அப்படியான நாட்களில் அய்யர் ”பிரசாதம்” கொண்டு வந்து கொடுத்துச் செல்வார். நான்கு வாரங்கள் தொடர்ந்து பிள்ளையார் பிரசாதம் சாப்பிட்டு வந்தேன். மார்கழி முடிந்து விட்டது. அது தெரியாமல் வீட்டிலிருந்து கிளம்பும் போது மனைவியிடம் “இன்னிக்கு பிள்ளையார் எனக்காக பிரசாதம் வைத்திருப்பார்” என்று சொல்லிக் கொண்டே தூறல் விழுந்து கொண்டிருந்த அதிகாலையில் வண்டியை முறுக்கிக் கொண்டு உழவர் சந்தை நோக்கிப் பறந்தேன்.

”கோவில் பிரசாதத்திற்கு மட்டும் ஏன் பிரமாதமான டேஸ்ட் வருகிறது என்று புரியாத மர்மமாய் இருக்கிறதே” என்று நினைத்தபடியே சென்றேன்.

பிள்ளையாரைப் பார்த்தால் அம்போவென்று இருந்தார். மனைவியோ “என்னங்க உங்க பிள்ளையார் ஏமாத்திட்டார் போலிருக்கே?” என்றார். சரியான கடுப்பு. மார்கழி மாதம் முடிந்து விழாக்கள் முடிந்து போனதை அப்போதுதான் உணர்ந்தேன்.பிள்ளையாரை ஒரு முறை முறைத்தேன். ”இப்படியா ஏமாற்றுவாய்” என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே உழவர் சந்தைக்குச் சென்று காய்கள் வாங்கி திரும்பிக் கொண்டிருந்தோம்.

காமராஜர் சாலையில் இஎஸ்ஐ ஹாஸ்பிடல் தாண்டி வந்தால் சாலையோரப் பிள்ளையார் ஒருவர் வில்வ மரத்தடியில் உட்கார்ந்து அருள் பாலித்துக் கொண்டிருப்பார். அவருக்கும் எனக்குமான உறவு அவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்ததில்லை. அவரை வண்டியில் செல்லும் போது பார்ப்பதோடு சரி. 

இந்தப் பிள்ளையார் கோவிலின் முன்பு ஒரே கூட்டமாய் இருந்தது. வண்டியை மெதுவாக செலுத்தினேன். யாரோ ஒருவர் என்னிடம் வந்து கொழுக்கட்டை, பொங்கல், பழம் வைத்திருந்த தட்டை நீட்டி, ”சார் இந்தாங்க பிரசாதம்” என்றுச் சொல்லி நீட்டினார்.

ஜாடை காட்ட, பின்னால் உட்கார்ந்திருந்த மனைவி கையில் வாங்கிக் கொண்டார்.

பிள்ளையாரைப் பார்த்தேன். அவர் என்னிடத்தில் ஏதோ சொல்வது போன்று தோன்றியது. 

* * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.