குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, March 11, 2009

என்ன தேசமோ ?

தேர்தல் வந்து விட்டது. தொகுதிப் பங்கீட்டில் அடித்துக் கொள்கிறார்கள் அரசியல்வாதிகள். இலங்கைத் தமிழர்களின் கல்லறையின் மீது ஆட்சி அமைக்கத் துடிக்கின்றார்கள் அரசியல்வாதிகள். நீயா நானா என்று போட்டி போடுகிறார்கள். இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்படுகிறார்கள். தமிழக அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்தில் சிக்கி சின்னா பின்னப்படுகிறது இலங்கைத் தமிழச்சிகளின் கற்பு. பச்சிளம் குழந்தைகளையும் விடாமல் நெருப்பு மழை பொழிந்து கொன்று வருகிறது இலங்கை. வேடிக்கை பார்க்கிறது தமிழகம். தன் மான உணர்ச்சியுடையோர் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல், நெஞ்சுக்குள் ரத்தம் வடிய வடிய வேதனையோடு நாட்களைக் கடத்துகின்றார்கள் உண்மைத் தமிழர்கள்.

இந்தப் பாடலைக் கேட்டு வையுங்கள். மனம் சற்று ஆறுதல் பெறும்.

என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?

இன்பம் துன்பம் என்பது
இரவு பகலைப் போன்றது
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
சோகமென்ன தோழனே
சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு
இன்று ஓய்வெடு
நீ இன்று ஓய்வெடு
என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?

பிறக்கும் போதும் பேரில்லை
இறக்கும் போதும் பேரில்லை
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
ஜெயிக்கபோகும் மானிடா
மயக்கம் இங்கே ஏனடா
உறுதியோடு கேளடா
உண்மை நீயடா
ஓ... உண்மை நீயடா

என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?

Sunday, March 8, 2009

கோயம்பேட்டில் அனாதைச் சிறுவர்களுடன் - 1

லாரிக்குள் டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். லாரி டிரைவர் குசும்பு பிடித்தவன். எதிரே வரும் கார்களை இடிப்பது போல லாரியைச் செலுத்தினான். “வேல்முருகா எதிரே வரும் காருக்கு நன்றாகத்தான் வழி விடேன்” என்ற போது, “சார், நாம பெரிய வண்டியில் இருக்கிறோம் அவன் தான் பயந்து ஒதுங்கிப் போகனும்” என்றான். ”அடப்பாவி பயலே, நீ செய்யுறது சரியில்லை“ என்று கோபமாகக் முறைக்க வேறு வழி இன்றி எதிரே கார்கள் வந்தால் நன்கு ஒதுங்கி வழி விட்டான்.

விடிகாலை நான்கு மணிக்கு கரூரிலிருந்து கிளம்பி சென்னைக் கோயம்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது லாரி. பின்னால் மூடிய லாரிக்குள் பத்து அனாதைச் சிறுவர்களும், மூன்று சக்கர சைக்கிளும், பதினைந்து பேருக்கு இரண்டு மாதம் தாங்கும் அளவுக்கு சமையல் பொருட்களும் இருந்தன. காலைச் சாப்பாடு புளிச்சாதம், தயிர்சாதம். மதியம் ஹோட்டலில் சாப்பிட்டோம். வழியில் நுங்கு, டீ, வடை, பஜ்ஜி என்று சிறுவர்களுடன் சாப்பிட்டேன். பத்து சிறுவர்களும் மாறி மாறி லாரியின் முன்புறம் வந்து என்னுடன் ஒட்டிக் கொள்வார்கள். சென்னையைப் பார்ப்பது என்பது அவர்கள் வாழ்வில் நடக்கப் போகிற அற்புத சம்பவம். அதற்கு காரணமான கம்ப்யூட்டர் வாத்தியாராகிய என்மீது கொள்ளைப் பிரியம் கொண்டார்கள். அதன் பலன் என்னவென்றால் அவர்கள் சாப்பிடுகிறார்களோ என்னவோ, என்னை அவர்கள் கவனித்த விதம் பற்றி வார்த்தைகளில் வடிக்க இயலாது.

இவ்விடத்தில் சற்று நிற்க :

அனாதைச் சிறுவர்கள் என்று எழுதிய போது மனதுக்குள் வந்து சென்ற வரிகளும், கவிதையும் கீழே.

”என்னுடைய அம்மா ஒரு நாள் ராத்திரி என்னை கூப்பிட்டு சுவர்ல விளக்கோட நிழல் ஊர்ந்து போறதே அது சுவத்தில ஏன் படியுறதேயில்லைனு கேட்டா. எனக்கு அப்போ விபரம் புரியாத வயசு. பதில் சொல்ல தெரியலை. அவளாகவே நாமளும் அப்படிதான் என்று சொன்னாள். எனக்கு பயமா இருந்துச்சி. ” எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நகுலனின் பத்துக் கவிதைகள் கட்டுரையில் இருந்து.

இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம் - நகுலனின் கவிதை




சரி விஷயத்துக்கு வருகிறேன். இனி...

சரியாக நான்கு மணிக்கு கோயம்பேட்டின் பின்புறமிருக்கும் ராமகிருஷ்ண தபோவனத்தை அடைந்தோம். பொறுப்புச் சாமி ஓடிவந்து வரவேற்றார். பிரதர் ஒருவரும் வந்து வரவேற்றார். சுற்றி வர முற்செடிகள். ஒத்தையடிப்பாதை. நீண்ட கூரைக் கொட்டகைகள் இரண்டு. அதில் ஒன்றில் தங்கும் அறைகள் மூன்று இருந்தன. மற்றொன்றில் பூஜை அறை, சமையல் கிடங்கு மற்றும் சமையல் அறையுடன் கூடிய சாப்பாட்டுக் கூடம். தண்ணீர் கிடையாது. சைக்கிளில் சென்று பிடித்து வரவேண்டும். கரண்ட் இல்லை. வேறொரு இடத்தில் ஆஸ்ரமத்தின் பள்ளி கட்டிட வேலைக்கு போட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் பிடித்து சமையல், பாத்ரூம் எல்லாவற்றுக்கும் பயன்படுத்த வேண்டும். பாம்பு, பூரான், திருடர்கள் மற்றும் இன்னபிற தொல்லைகள் அதிகம். கொசுக்கள் ஈக்கள் போல மொய்க்கும். இரவில் சுவர்க்கோழிகள் சத்தம் காதைக் பிளக்கும். இரவில் மண்ணெண்னெய் விளக்கு வெளிச்சம். இனிமேல் இரண்டு மாதங்கள் இங்கு இருக்க வேண்டிய முக்கியமான சூழ்நிலை.

பத்துக்கு பதினைந்து அடியில், அறையோடு கூடிய பாத்ரூம், ஏர்கூலர், பேன், விடிகாலையில் நெல்லிக்காய் ஜூஸ் அல்லது வில்வ இலை ஜூஸ்( எனக்கும் பெரிய சாமிக்கும் மட்டும்), காலையில் டீ அல்லது காஃபி, ஏழு மணிக்கு டிஃபன், சரியாக பனிரெண்டு மணிக்கு சாப்பாடு, மாலை நான்கு மணிக்கு காஃபியுடன் சிற்றுண்டி, இரவு ஏழு மணிக்கு டிஃபன், இரவில் பழ ஜூஸ் அல்லது சுண்டக் காய்ச்சிய பால், கல்லூரிக்கு சென்று வர காண்டசா கிளாசிக் கார் என்று வாழ்ந்தவன் மேற்படி சொன்ன இடத்தில் சென்று தங்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது?

Thursday, March 5, 2009

தேர்தல் வந்து விட்டது !



இனிமேல் செய்தி தாள்களில் தேர்தல் விதிமுறை மீறல் என்ற தலைப்பினை அடிக்கடிக் காணலாம். செய்தி தாள்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாகும். மீடியாக்கள் கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருப்பார்கள். எக்ஸ்குளூசிவ் பேட்டி என்று உடம்பு அதிரும் இசையில் விளம்பரங்கள் கொடி கட்டிப் பறக்கும்.

கட்சியின் கொள்கைகள், கூட்டணி தர்மம் என்ற வார்த்தகளில் காணாமல் போய் விடும். நேற்றைய எதிரிகள் இன்றைய நண்பர்கள் ஆவார்கள். நண்பர்கள் எதிரிகள் ஆவார்கள்.

விவாதங்கள் தூள் பறக்கும். இலங்கைப் பிரச்சினை தமிழ் நாட்டில் காணாமல் போய் விடும்.

நேற்று டைம்ஸ் நவ்வில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். பேட்டி எடுத்தவர் மிஸ்டர் சிதம்பரமென்றே அழைத்தார். ஆச்சர்யம்.

பாகிஸ்தானுக்கு எதிராக புஜ பல பராக்கிரமத்தை காட்டக்கூடாது. தீவிரவாதம் ஒரு மைண்ட் கேம். அதை மூளையால் தான் வெல்ல வேண்டுமென்றுச் சொன்னார் சிதம்பரம்.

இந்தியாவின் ராஜ தந்திரம் சரிதான். ப.சிதம்பரத்தின் குரல் ஆளுமைத்தன்மை வாய்ந்தது. வெகு அலட்டலான குரலில் நறுக்கு தெறித்த வார்த்தகளில் அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. காந்தக் குரலோன்.

இந்தத் தேர்தலின் முடிவில் ஆட்சி அமைக்க, குதிரை பேரங்கள் நடக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் தென்படுகிறது. பார்ப்போம்.

Wednesday, March 4, 2009

கவனமாய் இருங்கள்

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

Sunday, March 1, 2009

கருத்துச் சுதந்திரம் எங்கே




நீண்ட நாட்களாக பதிவு ஏதும் எழுத இயலவில்லை. காரணம் அதிகமான வேலைப்பளு. இனிமேல் ஏதாவது எழுதலாமென்றிருந்த வேலையில் இணைய தளத்தின் சுதந்திரத்துக்கும் வேட்டு வைத்து விட்டார்கள். அது என்னவென்று சொல்லவே பயமாக இருக்கிறது. ஜூனியர் விகடனில் நீதிமன்றம், பிளாக் பற்றிய கட்டுரை ஒன்று வந்துள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்கிற போக்கு இந்திய ஜன நாயகத்துக்கு வேட்டு வைக்கும் செயல். கேள்வியே கேட்க்கக்கூடாது என்கின்றன சட்டத்தைப் பாதுக்காக்கும் அமைப்புகள். பொதுமக்கள் நீதியின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை குலைந்து வருகிறது.

இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் நீதி அமைப்புகளாலும், அரசியல்வாதிகளாலும், பெரும் பணக்காரர்களாலும் அழிக்கப்பட்டு வருகின்றன என்பது வேதனை தரும் உண்மை.

சற்று ஆசுவாசப்படுத்த இந்தப் பாட்டை பாருங்கள். இது போன்ற சூழ் நிலைகளில் தான் இவ்வகைப் பாடல்களும், இசையும் மனிதனுக்கு ஆறுதல் தரும் போல. தவறுதான். வேறு வழி இல்லை.

நீங்களும் ஒரு பார்வை பார்த்து வையுங்கள். பெண்கள் அழகானவர்கள். அற்புதமானவர்கள்.


Thursday, February 19, 2009

கண்களுக்குள் மோதல்

அஹிம்சையின் மூலம் நாட்டுக்கே விடுதலை வாங்கித் தந்த மஹாத்மா காந்தியை தேசத்தலைவராகக் கொண்ட இந்திய அரசியலமைப்பின் சட்டத்துறையின் இரு கண்கள் தங்களுக்குள் மோதிக்கொண்ட வேதனையினை என்னவென்று சொல்வது. அறப்போராட்டத்தின் மூலமாக மட்டும்தான் எதையும் சாதிக்க இயலும் என்று நிரூபணம் செய்த நாட்டின் பிரஜைகள் வருந்தக் கூடிய அளவில் சட்டத்தின் பாதுகாவலர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்ட சம்பவம் சட்டத்தின் மீதான நம்பிக்கையை குலைக்கும் செயலாகும். நாளைய நீதிபதிகள் வன்முறையினை தேர்ந்தெடுக்கலாமா? சட்டத்தின் பாதுகாவலர்களுடன் வன்முறை தேவையா ? அஹிம்சை வழிப் போராட்டத்தினை மறந்து விட்டார்களா இருவரும் ? வேதனை தரும் இச்சம்பவம் மீண்டும் நடக்கலாமா? வக்கீல்கள் உணருவார்களா ? காவல்துறையும் தனது கடமையை உணர்ந்து செயல்படுவார்களா? சட்டத்துறையும் காவல்துறையும் தான் இந்தியாவின் ஆன்மா. ஆன்மாக்களுக்குள் மோதல் போக்குத் தேவையா ? அவரவர் தத்தமது கடமையினை உணர்ந்து செயல்படுவார்களா ? அன்பு சகோதரர்களே வேண்டாம் வன்முறை. வாழ்க்கை என்பது எல்லோரையும் சந்தோஷமாக வாழ வைப்பது தானே. ஏன் இந்த சண்டை? யாருக்காக இந்த சண்டை. இதனால் மக்களுக்கு என்ன பயன் ? உங்களையே நம்பி இருக்கும் பொதுமக்களாகிய நாங்கள் என்ன செய்வது ? எங்களைப் பாதுகாக்க தங்களது வாழ்வினையே அர்ப்பணித்த இருவரும் சமாதானமாகி விடுங்கள். அரசியல் சித்து விளையாட்டில் எல்லோரையும் பழி வாங்கி விடாதீர்கள். ஒவ்வொரு இந்திய மக்களின் வேதனையினை நான் ஒரு பிரஜை என்ற முறையில் இங்கு பதிவு செய்கிறேன் வேதனையுடன்.

Wednesday, February 4, 2009

ரொம்ப பசிக்குதா ?

சித்தி வீடு. காலையில் எழுந்ததும் வீட்டின் எதிரே இருந்த பெஞ்சில் உட்கார்ந்தேன். சித்தி அங்குமிங்கும் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். அடுப்பில் சோறு வெந்து கொண்டிருந்தது. இன்னொரு அடுப்பில் குளத்தில் இருந்து பிடித்து வந்த மீன் குழம்பாய் மாறிக் கொண்டிருந்தது.

”தங்கம், இந்தா வேப்பங்குச்சி. பல் துலக்கு “ சொல்லி விட்டு சொம்பில் தண்ணீரும்,வேப்பங்குச்சியும்,துண்டும் கொடுத்து விட்டு அடுத்த வேலைக்குச் சென்றார்.

பல் துலக்கி முடித்து விட்டு உட்கார்ந்த போது சித்தப்பா ரகசிய பாஷையில் கொட்டகைக்குள் அழைத்துச் சென்று தென்னை மரத்துக் கள்ளை குடிக்க சொன்னார். சித்திக்குத் தெரிந்தால் தொலைத்து விடுவார். அவசர அவசரமாக குடித்து வைத்தேன். தித்திப்பாய் இருந்தது.

திரும்பவும் பெஞ்ச். அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த சித்தி “ ரொம்ப பசிக்குதா” என்று கேட்க

சிரித்து வைத்தேன்.

”மீன் வறுத்துக் கிட்டு இருக்கேன். கொஞ்ச நேரத்துல சாப்பிடலாம் என்ன ?”

”சரிம்மா” என்றேன்.

*****
பெண்கள் கல்லூரியில் புரபஸர் மற்றும் ஸ்டூடண்ஸுக்கு கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்த போது போன் வந்ததாய் சொன்னார்கள். சித்தி தவறி விட்ட செய்தி கேட்டு துடித்துப் போனேன்.

அடித்துப் பிடித்துக் கொண்டு சென்றேன். அம்மா சித்தியின் தலைமாட்டில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். சுற்றிலும் உறவுகள் கதறிக் கொண்டிருந்தார்கள்.

சித்தி அருகில் போய் உட்கார்ந்திருந்தேன். பெஞ்சில் கிடத்தப்பட்டிருந்த சித்தியின் தலையை தடவி விட்டேன். கண்களில் கண்ணீர் ஒழுகியது. அழுது ஓய்ந்து விட்டு வந்து கையைப் பார்த்தேன். கையில் சித்தியின் தலையில் இருந்து வெளியேறிய பேன்கள் ஒட்டிக் கொண்டிருந்தன.

இனி... “ ரொம்ப பசிக்குதா? “ குரலை எப்போது கேட்கப் போகிறேன்.

*******

சித்தியின் கடைசி மகன் சென்னையில் வாசம் செய்கிறார். மிகச் சமீபத்தில் திருமணம் ஆனது. குடும்பத்துடன் தம்பி வீட்டில் சென்று தங்கினேன். ஒரு நாள் என் மனைவி, மகள், மகனுடன், தம்பியும் தம்பி மனைவியும் காலை பத்து மணிக்கு ஷாப்பிங் சென்றார்கள். வருவதற்கு இரவு ஆகி விட்டது.

மதியம் சாப்பாடு இல்லை. மாலையில் வீடு துடைக்க வந்த கிழவி வர டீ போட்டுக் கொடுத்தார். பசி சற்று அடங்கியது. நான் சாரு நிவேதிதாவின் கட்டுரையினை அப்லோடு செய்யும் வேலை செய்து கொண்டிருந்தேன்.

இரவு மணி எட்டு. எல்லோரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

”ரொம்ப பசிக்குதா ?”

குரல் கேட்டு நிமிர்ந்தேன். தம்பி மனைவி.

"இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு செய்து விடுவேன். கொஞ்ச நேரத்துல சாப்பிடலாம்” என்று சொன்னார் தம்பியின் மனைவி.

“சரிம்மா” என்றேன்.

எனக்குப் நேர்ப் பின்புறமிருந்த பூஜை அறையில், போட்டோவில் இருந்த சித்தி சிரித்தது போல இருந்தது.

*****

Saturday, January 31, 2009

நாகேஷ் - காமெடி

மக்களின் மனதில் என்றும் மறையாத நடிப்புக் கொண்டவர் நாகேஷ். விருதுகளுக்கும் அப்பாற்பட்ட நடிகரின் மரணம் சற்று வேதனையாக இருந்தாலும் சினிமா உலகில் என்றும் மறையாத புகழுடையவர். நடிப்பின் மூலம் மற்றவரை சிரிக்க வைத்தவர் அவர். அழுவது அவருக்குப் பிடிக்காது என்பதால் தான் இந்த கிளிப்பினை இணைக்கிறேன்.

Monday, January 26, 2009

சங்கு வண்டி

காமராஜர் காரில் சென்று கொண்டிருக்கும் போது காரின் முன்பாக போலீஸ் ஜீப் ஒன்று சைரன் ஒலி எழுப்பிய படி சென்று கொண்டிருக்கும். அது என்ன சத்தம் என்று உதவியாளரிடம் கேட்பார். சைரன் சத்தமென்று சொல்ல காரை உடனடியாக நிறுத்தச் சொல்லி இறங்கி நானென்ன செத்தா போய்விட்டேன். காருக்கு முன்னாடி சங்கு ஊதிகிட்டு போறீங்க என்று சொல்லி வீணா செலவு பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க என்ற படியே காரில் ஏறிச் செல்வார். இந்தக் காட்சி காமராஜர் படத்தில் வருகிறது.

இன்றைய அரசியல்வியாதிகளும், அடிப்பொடிகளும், அரசு அலுவலர்களும் செத்த பொணம் வருது செத்த பொணம் வருது விலகுங்க என்று சொல்லும்படியாக சைரன் வைத்த காரில் பயணம் செய்வது இவர்களுக்கு மனசாட்சி செத்துப் போய் வெறும் மனிதப் பிம்பங்களாய் உலா வருவதைக் காட்டுவது போல இருக்கிறது. நல்ல அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பற்றி இங்கு விமரிசிக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்க.

கட்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் பிரமுகரின் கட்டி முடிக்கப்படாத தியேட்டருக்கு லைசென்ஸ் வழங்க மறுக்கும் கலெக்டரிடம் சட்டப்படி தான் நடக்கணும். அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படக்கூடாது என்றும் சொல்வார். ஆனால் இன்று நடப்பதென்ன ?

சாதாரண தொண்டனாக இருக்கும் கறை வேட்டிக்காரரின் அலட்டலும் மிரட்டலையும் வார்த்தைகளில் சொல்ல இயலுமா ? காவல்துறை அலுவலங்களில் பார்த்தால் தெரியும் இவர்கள் செய்யும் சேட்டைகளை.

ரத்தமும் துரோகமும் நிரம்பி வழியும் வரலாற்றுப் பக்கங்களில் காமராஜரைப் போன்றோரின் பக்கங்கள் பாலைவனத்துச் சோலைகளாய் இருப்பது சற்று ஆறுதல் தருகிறது.

Saturday, January 24, 2009

சபரி மலை ஐயப்பன் கோவில் பயணமும் தரிசனமும்

சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாலை போட்டிருந்தேன். நண்பர்களுடன் வேனில் பயணித்தேன். வழியெங்கும் பச்சைப் பசேல் மரங்கள்.. குளிர் காற்று. பார்க்கப் பார்க்க பரவசமாய் இருந்தது. வழியில் நிறுத்தி இயற்கைச் சுனையில் குளியல் இட்டோம். அருகில் இருந்த கடையில் கப்பங்கிழங்கு வாங்கி சாப்பிட்டோம். சேச்சி வீட்டில் எங்களுக்கு மதிய சாப்பாடு தயாராகியது. சோறு கொட்டை கொட்டையாக இருந்தது. ஆனால் சாப்பாடு வெகு சுவை. சாப்பிட்டு முடித்து விட்டு தொடர்ந்து பயணித்தோம்.

பேட்டை துள்ளல் என்னால் இயலவில்லை. ஆகையால் நண்பர்கள் மட்டும் துள்ளல் முடிந்து மலைப்பாதையில் நடக்க ஆரம்பித்தனர். நானும் இன்னும் ஒரு சாமியும் வேனில் பயணித்தோம். தொடர்ந்து என்னுடன் பிஎஸ்என்எல் அதிகாரியாக இருக்கும் நண்பரின் அம்பாசிடர் காரும் வந்தது. நிலக்கல்லில் வேன் நிறுத்த வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். நான் பம்பை செல்ல வேண்டுமென்பதால் எனது நண்பரின் காரில் பம்பை சென்று சேர்ந்தேன். நண்பர்கள் வரும் வரை ஒரு நாள் முழுதும் காருக்குள் முடங்கினேன். மலைப்பாதையினைக் கடந்து நண்பர்கள் வரும் வரை பம்பையில் காத்து இருக்க வேண்டுமென்ற குருசாமியின் உத்தரவு. மறு நாள் பம்பை ஆற்றில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் குளியல் போட்டேன். மலைப்பாதையில் டோலிக்கு ரூபாய் 800 பணம் கட்டிய பிறகு நான்கு பேர் தூக்கிக் கொண்டு பயணித்தார்கள். வழியில் இறக்கி ஐந்து பேரும் கட்டஞ்சாயா குடித்தோம். ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்தேன். வாங்க மறுத்தார்கள். அவர்கள் படும் சிரமத்தினைக் கண்டு நெஞ்சு வலித்தது. என் இயலாமையினை எண்ணி வருத்தமடைந்தேன். வேறு என்ன செய்ய இயலும் என்னால்.

எனது குழுவில் பதினைந்து பேர் இருந்தோம். மஞ்சள் கலரில் ஆளுக்கொரு கொடி வைத்திருந்தோம். நாங்கள் எங்கெங்கெல்லாம் செல்கிறோமோ அவ்விடத்திலெல்லாம் கொடியினை ஆட்டியபடி வர வேண்டும் என்பது குரு சாமியின் உத்தரவு. கொடி ஆடுவதை வைத்து குழு நண்பர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள். எளிதில் ஒன்று சேர்ந்து விடலாம். நண்பர்கள் நடைபாதை வழியாக இரண்டு கிலோ மீட்டர் நீண்டிருந்த வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பதினெட்டாம் படியருகில் வருவதற்கு விடிகாலை ஆகிவிடும். டோலி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் பதினெட்டாம் படியருகில் சென்றது. எனக்குப் பயமாகி விட்டது. எண்ணிலடங்கா கூட்டம். எங்கு நோக்கினும் ஐயப்ப பக்தர்கள். ஐயப்பா ஐயப்பா என்ற ஒலி. மைக்கில் அறிவிப்புகள். எனக்கோ ஒருவரையும் தெரியாது ஐயப்பனைத் தவிர. தலையில் இருமுடி. தவழ்ந்து தான் செல்ல வேண்டும். என்ன செய்வது என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த போது என் குழுவில் இடம்பெற்ற விவரமான ஒரு ஐயப்ப பக்த நண்பர் என்னை கண்டுபிடித்து வந்து சேர்ந்து கொண்டார்.இருவரும் பதினெட்டாம் படியருகில் வந்து சேர்ந்தோம்.

அங்கிருந்த காவல்காரர்கள் அருகில் வந்து தேங்காய் வைத்து இருக்கின்றீர்களா என்று கேட்க, இருக்கு என்றேன். இருமுடியினை நண்பரிடம் கொடுத்து விட்டு தேங்காயை வேகமாக அடிக்கச் சொல்ல, நானும் அவ்வாறே செய்ய இரு போலீஸ்காரர்களும் தேங்காய் நன்கு உடைந்து விட்டது என்று மகிழ்ச்சியாய் சொல்ல எனக்குள் நெகிழ்ந்தது. படியேற வேண்டும். வலதுபுறம் கீழே இருந்து மேல் படி வரை போலீஸ்காரர்கள் கைகளை வைத்து மறித்து வழியேற்படுத்தினர். ஏறுங்கள் என்றனர். தவழ்ந்து ஏறினேன். கை வழுக்கியது. அருகில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரரிடம் கை கொடுக்க முயன்றேன். மறுத்து விட்டார். நீங்களே ஏறுங்கள் என்றார். அனைத்து போலீஸ்காரர்களும் ஏற்றிவிடப்பா ஐயப்பா, ஏற்றி விடப்பா ஐயப்பா என்று கோஷமிட்டன்ர். ஒவ்வொரு படியாக ஏறுங்களென்று சொல்லியபடி பின்னால் ஒரு போலீஸ்காரர் வந்தார். பதினெட்டாம் படியினைத் தொட்டேன். அங்கு நின்றிருந்த வேறு இரண்டு போலீஸ்காரர்கள் ஓடி வந்தனர். நேரே கோயில் படிகளில் வருமாறு அழைத்துக் கொண்டு சென்றனர். நீண்ட வரிசையில் நின்றிருந்த ஐயப்ப பக்தர்களுக்கு இரு நொடி தரிசனம் தான் கிடைத்தது. இருவரை விலக்கி விட்டு ஐயப்பனை பார்க்க வைக்க முயன்று தோற்றனர்.



அங்கு நின்றிருந்த மற்றொரு போலீஸ்காரர் என்னையும் என் நண்பரையும் ஐயப்பன் கோவில் படி அருகில் அழைத்துச் சென்று விட்டார். இங்கிருந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு மெதுவாக வாருங்கள் என்று சொல்லி விட்டு பின்னால் நின்று கொண்டார். நீங்கள் நடக்கணும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஐயப்பன் அருளுவார் என்று சொன்னார். ஐயப்பன் ஜோதியில் ஜொலித்துக் கொண்டிருந்தார். கையில் கொண்டு சென்றிருந்த காசுகளை உண்டியலில் போடச் சொன்னார். பம்பையில் குளிக்கும் போது ஏதாவது துணியை விட வேண்டுமாம். ஆனால் நான் விடவில்லை. காசு போடும் போது காசோடு துண்டும் சேர்ந்து உண்டியலுக்குள் சென்று விட்டது. போலீஸ்காரர் சிரித்தார். ஐயப்பனுக்கு கொடுக்க வேண்டியதிருந்திருக்கும் போல என்று சொன்னார். கருவறையில் இருந்து பூசாரி ஒருவர் வெளியே வந்து நீண்ட இலைப் பிரசாதமும், ஆரத்தியும் காட்டினார். ஐயப்பன் உயிரோடு உள்ளே உட்கார்ந்திருப்பது போல தோன்றியது. பிரசாத்தைப் பெற்றுக் கொண்டு வெளி வந்தோம். மஞ்ச மாதா கோவிலின் அருகில் உட்கார்ந்தேன். மற்ற நண்பர்களை அழைத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு என்னுடன் வந்த நண்பர் கிளம்பி விட்டார். மஞ்ச மாதா கோவிலின் அருகில் விடிய விடிய உட்கார்ந்திருந்தேன்.


இதற்கிடையில் பசி வர யாரோ ஒரு ஐயப்ப பக்தர் சாதம் வாங்கி வந்து கொடுத்தார். சாப்பிட்டு விட்டு துண்டை விரித்து படுத்து விட்டேன். அடிக்கடி எழுந்து மஞ்சள் கொடியினை ஆட்டியபடி இருப்பேன். பின்னர் படுத்து விடுவேன்.

விடிகாலையில் குருசாமியும் இன்னொரு சாமியும் என்னைக் கண்டுபிடித்து வந்து விட்டனர். மூவரும் ஐயப்ப சேவா சங்கத்தினர் தந்திருந்த அறைக்குச் சென்று குளித்து முடித்து விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அனைத்து நண்பர்களையும் அழைத்துக் கொண்டு மற்ற சாமிகளும் அறைக்கு வந்து விட்டனர். குரு சாமி நெய் தேங்காய்களை உடைத்து சேகரித்தார். குருசாமி என்னை அவர் முதுகில் தூக்கிக் கொள்ள நெய்யினை சுமந்த படி இன்னுமொரு சாமியும் கூடவே வந்தனர். எங்களைப் பார்த்த காவல்கார்ர்கள் எவரும் வழி மறிக்கவே இல்லை. மீண்டும் நேரடியாக ஐயப்பன் கோவில் படி அருகில் கொண்டு போய் நிறுத்தினர்.

ஐயர் நெய்யினை வாங்கிக் கொண்டு போய் அபிஷேகம் செய்தார். கண் குளிர பார்த்துக் கொண்டிருந்தேன். அபிஷேகம் முடித்து மூவருக்கும் இலையில் பிரசாதம், நெய் தீபம் காட்டினார். மூவரும் கிளம்ப எத்தனித்த போது சற்று இருங்கள் என்றுச் சொல்லி உள்ளே சென்று ஐயப்பன் மீது இருந்த நெய்யினை வழித்து எடுத்துக் கொண்டு வந்து என் இரு கால்களிலும் பூசி விட்டு ஐயப்பா இந்தப் பையன் நடக்கணும் என்று வேண்டிக் கொண்டார். போலீஸ்காரர்கள் மீண்டும் எங்களை கோவிலின் வாசல் படி அருகில் இடது புறம் இருக்குமிடத்தில் கொண்டு போய் விட்டு, இவ்விடத்தில் இருந்து தியானம் செய்யுங்கள் என்று சொல்லி விட்டுச் சென்றனர். மூவரும் அங்கிருந்த படியே தியானம் செய்து ஐயப்பனைக் கண் குளிர பார்த்துக் கொண்டிருந்தோம். வரிசையில் ஐயப்ப பக்தர் நெய் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தியானம் செய்து விட்டு சந்தனம் பெற வந்தோம். அவ்விடத்தில் அபிஷேகம் முடித்து வந்த ஐயப்ப பக்தர்கள் என்னைப் பார்த்தனர். அனைவரும் வரிசையாக என் மீது அபிஷேக நெய்யினைப் பூசி ஐயப்பா, இந்தப் பையன் நடக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். என் உடல் முழுதும் அபிஷேக நெய்யும் சந்தனமும் வழிந்தது. யார் யாரெல்லாமோ எனக்காக வேண்டிக்கொண்டனர். அந்த அன்புக்கு நான் என்ன செய்ய ? என்னை யார் என்று கூட தெரியாது அவர்களுக்கு. ஆனால் நான் நடக்க வேண்டுமென வேண்டிக் கொண்டார்கள். அவர்களின் அன்பு என்னை நிலை குலைய வைத்தது.

நான் கை கூப்பிய படியே என் மீது அபிஷேக நெய் பூசும் ஐயப்பன்களை கண்ணில் கண்ணீர் வழிய பார்த்துக் கொண்டிருந்தேன்.


இந்தப் பதிவினை எழுதக் காரணம் என்ன ? என் மீது அன்பு கொண்டு நான் நடகக் வேண்டுமென வேண்டிக்கொண்ட ஐயப்ப பக்தர்களின் அன்பிற்கு நன்றிக்கடன் செலுத்துவது தான்.