குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, February 4, 2009

ரொம்ப பசிக்குதா ?

சித்தி வீடு. காலையில் எழுந்ததும் வீட்டின் எதிரே இருந்த பெஞ்சில் உட்கார்ந்தேன். சித்தி அங்குமிங்கும் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். அடுப்பில் சோறு வெந்து கொண்டிருந்தது. இன்னொரு அடுப்பில் குளத்தில் இருந்து பிடித்து வந்த மீன் குழம்பாய் மாறிக் கொண்டிருந்தது.

”தங்கம், இந்தா வேப்பங்குச்சி. பல் துலக்கு “ சொல்லி விட்டு சொம்பில் தண்ணீரும்,வேப்பங்குச்சியும்,துண்டும் கொடுத்து விட்டு அடுத்த வேலைக்குச் சென்றார்.

பல் துலக்கி முடித்து விட்டு உட்கார்ந்த போது சித்தப்பா ரகசிய பாஷையில் கொட்டகைக்குள் அழைத்துச் சென்று தென்னை மரத்துக் கள்ளை குடிக்க சொன்னார். சித்திக்குத் தெரிந்தால் தொலைத்து விடுவார். அவசர அவசரமாக குடித்து வைத்தேன். தித்திப்பாய் இருந்தது.

திரும்பவும் பெஞ்ச். அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த சித்தி “ ரொம்ப பசிக்குதா” என்று கேட்க

சிரித்து வைத்தேன்.

”மீன் வறுத்துக் கிட்டு இருக்கேன். கொஞ்ச நேரத்துல சாப்பிடலாம் என்ன ?”

”சரிம்மா” என்றேன்.

*****
பெண்கள் கல்லூரியில் புரபஸர் மற்றும் ஸ்டூடண்ஸுக்கு கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்த போது போன் வந்ததாய் சொன்னார்கள். சித்தி தவறி விட்ட செய்தி கேட்டு துடித்துப் போனேன்.

அடித்துப் பிடித்துக் கொண்டு சென்றேன். அம்மா சித்தியின் தலைமாட்டில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். சுற்றிலும் உறவுகள் கதறிக் கொண்டிருந்தார்கள்.

சித்தி அருகில் போய் உட்கார்ந்திருந்தேன். பெஞ்சில் கிடத்தப்பட்டிருந்த சித்தியின் தலையை தடவி விட்டேன். கண்களில் கண்ணீர் ஒழுகியது. அழுது ஓய்ந்து விட்டு வந்து கையைப் பார்த்தேன். கையில் சித்தியின் தலையில் இருந்து வெளியேறிய பேன்கள் ஒட்டிக் கொண்டிருந்தன.

இனி... “ ரொம்ப பசிக்குதா? “ குரலை எப்போது கேட்கப் போகிறேன்.

*******

சித்தியின் கடைசி மகன் சென்னையில் வாசம் செய்கிறார். மிகச் சமீபத்தில் திருமணம் ஆனது. குடும்பத்துடன் தம்பி வீட்டில் சென்று தங்கினேன். ஒரு நாள் என் மனைவி, மகள், மகனுடன், தம்பியும் தம்பி மனைவியும் காலை பத்து மணிக்கு ஷாப்பிங் சென்றார்கள். வருவதற்கு இரவு ஆகி விட்டது.

மதியம் சாப்பாடு இல்லை. மாலையில் வீடு துடைக்க வந்த கிழவி வர டீ போட்டுக் கொடுத்தார். பசி சற்று அடங்கியது. நான் சாரு நிவேதிதாவின் கட்டுரையினை அப்லோடு செய்யும் வேலை செய்து கொண்டிருந்தேன்.

இரவு மணி எட்டு. எல்லோரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

”ரொம்ப பசிக்குதா ?”

குரல் கேட்டு நிமிர்ந்தேன். தம்பி மனைவி.

"இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு செய்து விடுவேன். கொஞ்ச நேரத்துல சாப்பிடலாம்” என்று சொன்னார் தம்பியின் மனைவி.

“சரிம்மா” என்றேன்.

எனக்குப் நேர்ப் பின்புறமிருந்த பூஜை அறையில், போட்டோவில் இருந்த சித்தி சிரித்தது போல இருந்தது.

*****

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.