குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, November 28, 2008

ராதையின் காதல் வலி

ஒரு நாள் காதலியைக் காணவில்லை. வருவாள் வருவாள் என்று காத்திருந்தேன். காணவில்லை. அவளின் தங்கையையும் காணவில்லை. எனக்குள் ஏதோ ஒன்று உடைந்தது போல உணர்ந்தேன். கலீல் ஜிப்ரானின் கவிதைகளை படித்து மனதினை தேற்றிக் கொள்வேன். இருந்தாலும் மனசு கேட்காது. எப்போது தான் வருவாளோ என்று பிரவச வலியால் துடிக்கும் பெண்ணைப் போல மனசு துடித்துக் கொண்டிருந்தது. என் நண்பன், நான் படும் வேதனையைக் காணச் சகிக்காமல் அழுதான். ஏனடா, இப்படி உன்னையே சாகடித்துக் கொள்கிறாய் என்று கண்ணீர் சிந்தினான்.

” இறந்த பிறகும் என் கண்கள் திறந்தே இருக்கும்
ஏனென்றால் இன்னும் உனக்காக காத்திருக்கிறேன் “

என்ற கலீல் ஜிப்ரானின் கவிதை வரிகளை அவனிடம் சொன்னேன். ஜெயதேவர் கண்ணனின் காதலி ராதை கண்ணனைப் பார்க்க இயலாமல் காதல் பிரிவில் படும் வேதனையை பாடலாக எழுதி இருப்பார். கண்ணதாசனின் வரிகளில் வழிந்தோடும் ராதையின் காதல் பிரிவின் வலிகள் நான் படும் துயரத்தின் வலியை விட சுமாராகத்தான் இருந்தது.

காதலிக்காக காதலன் பாடும் பாடல் என்று இந்தப் பாடலை எடுத்துக் கொள்ளுங்களேன்.


காதலிக்கும் போது கேட்ட பாடல்

நான் ஒரு காலத்தில் எனது வகுப்புத் தோழியுடன் காதல் வயப்பட்டிருந்தேன். எனக்கும் அவளுக்கும் காதல் தூது தோழியின் தங்கை. தோழி சுமாராகத்தான் இருப்பாள். ஆனால் இவள் தங்கையோ அழகு என்றால் அப்படி ஒரு அழகு. தேவதை போலவே இருப்பாள். உடல்வாகும், நடையும், முகமும் அவ்வளவு லடசணமாக இருக்கும்.

என் மீது கொள்ளைப் பிரியம் வைத்திருந்தாள். ஆனால் நான் தான் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டேன். எனக்கு மகன் பிறந்த பின்னர் எனது உறவினர் வீட்டுக்கு மகனுடன் சென்றேன். என் மனைவி மகனுக்குச் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த போது தோழியின் தங்கை என் மனைவியிடம் சொன்னது “ இவன் என் வயிற்றில் இருந்து பிறக்க வேண்டியவன், எங்கோ பிறந்திருக்கிறான்”. என் மனைவி என்னிடம் வந்து சொன்னாள். அப்படியா சொன்னாள் என்று சொல்லிச் சிரித்து வைத்தேன்.

தோழியுடன் காதல் வயப்பட்டிருந்த போது அவளின் சிரிப்புக்காக நாள் முழுதும் தவமிருப்பேன். அந்த நேரங்களில் இந்தப் பாடலைத்தான் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பேன். நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.

Monday, November 24, 2008

சாட்டிலைட் இன்டர்நெட்

நிமிடத்தில் கண்டம் விட்டு கண்டம் தகவல்கள் பரிமாறவும், இருந்த இடத்திலிருந்தே விரும்பக்கூடிய தகவல்களைப் பெறவும், மற்ற இன்னபிற வசதிகளையும் இன்டர்நெட் மூலம் இன்றைய உலக மாந்தர்கள் அனுபவித்து வருகிறார்கள். வளர்ந்த நகரங்களில் எளிதாக பிராட்பேண்ட் அகலக்கற்றை, டயலப் மூலம் இண்டர் நெட்டினைப் பயன்படுத்தலாம். ஆனால் டெலிபோனோ அல்லது செல்போனோ வயர்களோ செல்லாத ரூரல் ஏரியாக்களில் எப்படி இணையத்தை பயன்படுத்துவது ? காட்டுக்குள் செல்ல வேண்டுமென்ற சூழ் நிலையில் அங்கிருந்து எப்படி இணைய உலகில் தொடர்பு பெற முடியும் ? அதற்கும் வழி இருக்கிறது. சாட்டிலைட் மூலம் இணைய இணைப்பைப் பெறுவதன் பெயர் தான் சாட்டிலைட் இன்டர்நெட். ஹாலிவுட் சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள். லேப்டாப்பை வைத்துக் கொண்டு என்னென்னவோ செய்து கொண்டிருப்பார்கள். எங்கோ ஒரு அத்துவானக் காட்டிலிருந்து கொண்டு இமெயில் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். அதெல்லாம் எப்படிச் சாத்தியமென்று என்றாவது யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா ? எப்படி செயல்படுகிறது என்பதனை இப்பதிவில் படித்துப் பாருங்கள்.

இணைப்புக்கு தேவையானவை : இரண்டு அல்லது மூன்றடி அகலமுள்ள டிஷ் ஆண்டனா, சிக்னல் ரிசீவர், மோடம் மற்றும் கோயாக்சில் கேபிள். இவை தான் சாட்டிலைட் மூலம் இணைய வசதி பெறத் தேவையானவை.

கருவிகளைப் பொறுத்துவது எப்படி : டிஷ் ஆண்டனாவை (சரியான திசையில் பொறுத்த வேண்டும்) சர்வீஸ் புரவைடரின் சாட்டிலைட்டின் சிக்னல் பெறும் வகையில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். கோயாக்ஸில் கேபிள் மூலம் சர்வீஸ் புரவைடர் தரும் மோடத்தை டிஸ் ஆண்டனாவில் பொருத்தப்பட்ட ரிசீவருடன் இணைக்க வேண்டும். மோடத்திலிருந்து ஈதர்னெட் மூலம் கணிப்பொறியில் இணைக்க வேண்டும். கணிப்பொறியில் டிசிபிஐபி வசதி இருக்க வேண்டும். விண்டோஸ் ஆபரேட்டிங்க் சிஸ்டம் இருந்தால் போதும்.

எப்படிச் செயல்படுகிறது : கணிப்பொறியிலிருந்து வரும் சிக்னல் ஆண்டனாவிலிருந்து நேரடியாக சாட்டிலைட்டுக்கு அனுப்பப்படும். சாட்டிலைட் சர்வீஸ் புரவைடரின் ஹப் செண்டருடன் தொடர்பில் இருக்கும். இந்த ஹப் செண்டர் இண்டர்னெட்டுடன் தொடர்பில் இருப்பதால் பயன்படுத்துவோரிடமிருந்து வரும் வேண்டுகோளுக்கேற்ப தேவைப்படும் தகவல்களை பெற்று சாட்டிலைட்டுக்கு அனுப்பி வைக்கும். சாட்டிலைட்டிலிருந்து கணிப்பொறிக்கு தகவல்கள் அளிக்கப்படும். இங்கு சாட்டிலைட், ஹப் செண்டர்கள் கேட்வேயாகச் செயல்படும்.

அமெரிக்காவில் இந்த சர்வீசைத் தருவதற்கு கம்பெனிகள் இருக்கின்றன. மாதமொன்றுக்கு நான்காயிரம் ரூபாயும், மேற்படி பொருட்களை நிறுவவும் வருடத்திற்குமாக மொத்தம் கிட்டத்தட்ட 15,000 ரூபாயும் செலவாகும். தற்பொழுது ஒரு எம்பி அளவுக்கு டவுன்லோட் ஸ்பீட் வசதியும், 126 கேபி அளவுக்கு அப்லோடு வசதியும் தருகிறார்கள். இந்தியாவில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் படிக்கும் வாசகர்கள் தகவல்கள் தரலாம்.

Sunday, November 23, 2008

இறைவனும் ரித்திக்நந்தாவும்

காதல் திருமணம். வீட்டை விட்டு என்னுடன் வந்து விட்டார் மனைவி. தாலி கட்டிய பின்னர் காவல்துறையில் தஞ்சம் அடைந்து, சுற்றத்தாரின் புறக்கணிப்பெல்லாம் சமாளித்து இரு மாதங்களுக்குப் பிறகு எனது உறவினர் வீட்டில் விட்டு விட்டு தொழிலை கவனிப்பதற்காக சென்று விட்டேன்.

மனைவி வயிற்றில் என் வாரிசு ரித்திக் நந்தா. மனைவிக்கு தங்கிய இடம் புதுசு. புது உறவுகள். மூன்று மாடி வீட்டில் செல்லக் குழந்தையாய், துள்ளித் திரியும் மானாய் வளர்ந்தவள். உயர்தர பொன்னி அரிசி சாப்பிட்டு, பஞ்சு மெத்தையில், மின் விசிறி கீழே உறங்கியவள். எனக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வந்தாள். அவள் பிறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்த ஒரு சுடிதார். காதில் ஒரு இரண்டு கிராமில் தோடு ஒன்று.
என் உறவினர் வீட்டில் ஒரு மாதம் தங்கியிருந்தாள். நித்தம் வாந்தி. சாப்பாடு பிடிக்கவில்லை. கொட்டை அரிசி சாப்பாடு. எல்லாம் புதுசு. பெரும்பாலும் பட்டினிதான் கிடப்பாள். விடிகாலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பசி எடுக்குமாம். என்னவளுக்கும் பசி. ஆனால் உறவினர் வீட்டிலோ ஒன்பது மணிக்கு தான் சாப்பாடு கிடைக்கும். வெளியில் சொல்லவும் பயம். மார்கழி மாதம் அது. என் மனைவி தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் ஒரு சிவன் கோவில். அங்கு மார்கழி மாதம் வந்தால் தினமும் விடிகாலையில் பஜனை செய்வார்கள். தேவாரம், திருவாசகம், வள்ளலார் பாடல்கள் பாடுவார்கள். பஜனை முடிந்ததும் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் சுண்டல் தருவார்கள். நான் சிறு வயதில் பள்ளியில் படிக்கும் காலத்தில் அந்தக் கோவில் சிவபெருமானை தினமும் சந்தித்து சிறிது நேரம் ஏதாவது பேசி விட்டு, கும்பிட்டு வருவேன்.





விடிகாலையில் என் மனைவிக்கு பசி வந்து விடும். பசியால் சுருண்டு விடுவாள். அவள் தங்கியிருந்த எனது உறவினரின் பையன் தினமும் கோவிலுக்கு சென்று விட்டு, வரும் போது பொங்கலை வாங்கி வந்து தருவான். அவன் வரும் வரை பசியோடு பாட்டு எப்போ முடியும் என்று பாட்டை கேட்டபடியே காத்து இருப்பாள். அந்த பொங்கலை சாப்பிட்டு என் மனைவி பசி ஆறுவாள்.

இதை நேரில் சந்தித்தபோது என்னிடம் சோகமாக சொல்லுவாள். மகன் பிறந்து என் சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் சிவபெருமான் கோவிலைப் பார்த்தால் என் தகப்பனின் நினைவு தான் வரும். வயிற்றில் இருந்த என் மகனுக்காக சாப்பாட்டை அனுப்பி வைத்த சிவபெருமானின் அருளை நினைத்து நினைத்து பெருமிதம் கொள்வேன். எனக்கு கடவுள் ஆசி உண்டு அல்லவா.

திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பார்கள். என் விசயத்தில் அதுதான் நடந்தது. கர்ப்ப காலத்தில் என் மனைவிக்கு சாப்பாடு கொடுத்தது தெய்வம். பசி அறிந்து உதவி செய்தது தெய்வம்.

ஆகவே நண்பர்களே தெய்வத்திடம் வேண்டுங்கள். நமக்கு வேண்டியதை தரும் கற்பக விருட்சம் அது. எப்படியாவது யார்மூலமாவது உதவி செய்ய அனுப்பிவிடும். தொலைபேசி இல்லா காவல்காரர் அவர். சேவைக்கு கட்டணம் வசூலிக்காதவர் அவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர் அவர். எண்ணற்ற பேண்டு வித் கற்றையை உடையவர். எத்தனை கோடி பேர் வேண்டுமென்றாலும் ஒரே நேரத்தில் ஆக்சஸ் செய்யலாம் அவரின் உள்ளத்தை. அவரின் உள்ளத்தில் உமது அழைப்பை பதிவு செய்தால், ஓடோடி வருவார் உதவி செய்ய. அதற்கு தேவை உமது உள்ளத்தை அவரின் உள்ளத்தோடு இணைக்க வைக்கவேண்டியது மட்டும் தான். இதற்கு மாத வாடகை தேவையில்லை. இலவசம் அவனை அழைப்பதற்கு. அவுட்கோயிங்கும் இலவசம். இன்கமிங்கும் இலவசம். முக்கியமாக ஹேன்ட் செட் அது கலராகவோ அல்லது பிளாக்காவோ இருக்க தேவையே இல்லை.

அவர் நமக்கு ஒரு உகந்த ஒரு தோழன். அவரிடம் ரகசியத்தை சொன்னால் அது தான் ரகசியம். சாவி இல்லாத பெட்டகம் வைத்து இருக்கின்றார். நம்மை தவிர வேறு எவரும் அந்த ரகசிய பெட்டகத்தை திறக்க முடியாது. அழையுங்கள் ஓடோடி வருவார். நாம் எப்போது அழைப்போம் என்று காத்து இருக்கிறார் அவர்...

Wednesday, November 19, 2008

சொர்க்கமே என்றாலும்....

இப்பாடலை எனது மனம் கவர்ந்த பதிவர் ஒருவருக்காக இங்கு பதிவிடுகிறேன்.




அனானிமஸின் கமெண்ட்ஸ்சுக்காக பழைய போட்டோவை இணைத்துள்ளேன். இந்த போட்டோவில் ஒரு விஷயமிருக்கிறது. என் மனைவியால் மூன்று வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எனது புகைப்படங்களிலேயே இது தான் அழகாய் இருப்பதாக அவளிடம் சொல்வேன். அதற்கு அவளின் பதில் : கணவர் எந்த போஸில் அழகாய் இருப்பார் என்று மனைவிக்குத் தான் தெரியும்.

Tuesday, November 18, 2008

நடமாடும் தெய்வங்கள்

இன்று காலையில் வீட்டுக்கு வெளியே ஜீப் சத்தம் கேட்டது.

” என்னம்மா சத்தம் ? “
“ மூன்று மாத பிள்ளையை கொன்று போட்டிருக்கிறார்களாம்” என்றார் மனைவி.
“ என்ன ? “
“ ஆமாங்க.. யாருன்னு தெரியலை. போலீஸ் வந்திருக்காங்க” என்றார் மனைவி

பொக்கை வாய்ச் சிரிப்பும், பிஞ்சு விரல்களும், பால் வழியும் வாயோடு சிரிக்கும் குழந்தையையா கொன்று இருக்கிறார்கள்.
பிஞ்சுப் பாதங்களால் நெஞ்சில் உதைத்தால் பிறவிப்பயன் நிறைவேறுமே. நடமாடும் இயற்கையின் அற்புதமல்லவா குழந்தை. இறைவனின் படைப்பில் உயிரோடு மானிடருக்கு கிடைக்கும் சொர்க்கமல்லவா குழந்தை. வீட்டுக்கு வரும் நடமாடும் கடவுள்தானே குழந்தைகள்.....

நெஞ்சம் கனத்து, கண்ணீரில் நனைந்தது கண்கள்.

பிள்ளை இல்லா அன்னை ஒருத்தியின் குரலில் வெளிப்படும் வேதனையினைக் கவனியுங்கள்.

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா
கனிந்த விட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா
கண்ணீரில் வாடுதடா....

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

பெற்றெடுக்க மனமிருந்தும் பிள்ளைக்கனி இல்லை
பெற்றெடுத்த மரக்கிளைக்கு மற்ற சுகம் இல்லை
சுற்றமென்னும் பறவையெல்லாம் குடியிருக்கும் வீட்டில்
தொட்டில் கட்டி தாலாட்டும் பேரு மட்டும் இல்லை
பேரு மட்டும் இல்லை

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

வேண்டுமென்று கேட்பவருக்கு இல்லை இல்லை என்பார்
வெறுப்பவருக்கும் மறுப்பவருக்கும் அள்ளி அள்ளித் தருவார்
ஆண்டவனார் திருவுள்ளத்தை யாரறிந்தார் கண்ணே
யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே
யார் அறிவார் கண்ணே

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

* * * * *

எப்படியடா உங்களுக்கு இப்படியெல்லாம் செய்ய முடிகிறது. பாவிகளா... பாவிகளா....

துள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்



ஹாட்சாட், லெபனான் பாப் பாடகி நான்ஸி அஜ்ரமின் குரல் - பாடலைக் கேட்டால் மனசு ஆற்றிலிருந்து வெளியே குதித்த மீனாய் துள்ளித் துள்ளி குதிக்கும்.

உடம்பிலொரு மின்சார உணர்ச்சி கிளம்பி தலை முதல் கால்வரை கிறுகிறுக்க வைத்து விடும்.

டயல் அப் வாசகர்களுக்காக எம்பிதிரி வடிவில் கேட்டு மகிழுங்கள்.

Wednesday, November 5, 2008

ஊட்டி சென்று வந்த கதை - 3

போட் ஹவுசில் அன்றைய தினம் நிறைய மக்கள் குவிந்திருந்தார்கள். ஆளாளுக்கு மொபைல் போன், கேமராக்களுடன் தான் திரிகிறார்கள். மனிதர்களுக்கு தன் இருப்பை உலகுக்கு காட்ட வேண்டுமென்ற ஆவல்(ஆதிக்க மனப்பான்மையாக இருக்குமோ?). ஃபோட்டோக்களாக எடுத்துக் கொண்டிருந்தனர். சுற்றுலா வந்ததன் நோக்கத்தை முற்றிலுமாக மறந்து விட்ட மனிதப் பிறவிகள். இயற்கையை அதன் அமைதியோடு மனதுக்குள் உணர்ந்தால் தான் அதன் மகத்துவம் புரியும். ஆனால் இவர்கள் செய்த காரியங்கள் புற அழகிற்கும், நாக்குச் சுவைக்கும் அடிமையாய்ப் போன மனித அகதிகள் போன்றவர்கள் இவர்கள் என்பதனை உணர்த்தின.





சுற்றி வர கடைகள். எங்கு நோக்கினும் மக்கள் வெள்ளம். அமைதியான, அழகான அந்த இடத்தை வணிக அரங்கம் போல உருமாற்றியிருந்தார்கள். மக்கள் கடைகளில் குவிந்திருந்தார்கள். சோளம், ஐஸ் கிரீம் என்று தின்பண்டங்களின் விற்பனை சூடு பறந்தது. குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களில் நேற்றைய குழந்தைகளும் இன்றைய குழந்தைகளும் வீல் வீல் என்று சத்தமிட்டபடி விளையாடினார்கள். தம்பியின் வற்புறுத்தல் காரணமாக போட்டில் ஏறினேன். வீல் சேர் அனாதையாக நின்றது.

தூரத்தில் இருந்து வீல் சேரைப் பார்த்தேன். ”வீடு வரை உறவு. வீதி வரை மனைவி. காடு வரை மக்கள். கடைசி வரை யாரோ“ கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வந்தது. சில இடங்களில் சில தேவையற்றுப் போகும். மனிதனும் தன் வயதான காலத்தில் மற்றவருக்கு பயனில்லாப் பொருளாய் ஆகிவிடுகிறான். உலகம் பொருள் சார்ந்த வாழ்க்கையின் பால் நடைபோடத் துவங்கி விட்ட காரணத்தால், மனித உணர்வும், உணர்ச்சியும் கவனிப்பாரற்று கிடக்கின்றன. அவை மனோ தத்துவ மருத்துவர்களால் மறு சீரமைப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. புறவுணர்வு வாழ்க்கையின் பால் மூழ்கிக் கிடக்கும் மனிதனுக்கு அகவுணர்வு வாழ்க்கையின் மகத்துவம் புரிதலில்லை. அதை சில ஆன்மீகவாதிகள் என்போர் காசாக்கி வருகின்றனர். அவ்விடத்திலும் கூட்டமுண்டு. அவ்விடமும் வணிக அரங்காக மாற்றமடைந்திருக்கும். ஏனென்றால் உலக மாந்தர்கள் நுகர்வோர் வாழ்வினை மட்டுமே நாகரீகத்தின் உச்சக்கட்டமாக நினைக்கின்றார்கள். இவர்களின் பொழுது போக்கு மல்டி பிளக்சுகளிலும், உயர்தர ஹோட்டல்களிலும் ஒளிந்து கிடக்கிறது. அங்குச் செல்லத் தேவையான பொருளாதாரத்திற்காக தன் வாழ்வையே பலியாக்கும் விட்டில் பூச்சிகளாய் இன்றைய மனிதர்கள் உலா வருகிறார்கள்.

அமைதியான தண்ணீர். பச்சை நிறத்தைப் பிரதிபலித்தது. சுற்றிலும் மரங்கள். தண்ணீரில் படகுகள் மிதந்தன. வாழ்க்கையில் மனிதர்கள் மிதப்பது போல. படகும் மக்களை சுமந்து கொண்டு தண்ணீரில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. மக்கள் தன் மக்களை சுமப்பது போல.

தனி போட் எடுத்துக் கொண்டு நானும், தம்பியும், எனது மனைவியும், தம்பி மனைவியும், என் மகள் மற்று மகனுடன் போட்டில் பயணித்தோம்.

வலிந்து வலிந்து போட்டைத் தள்ளும் மனிதரைப் பார்த்தேன். உள்ளம் நிலை கொள்ள வில்லை. வலித்தது. ஒரு ஜாண் வயிற்றுக்காக கைகள் வலிக்க வலிக்க, மூச்சுத் திணற திணற கால்களை உதைத்துக்கொண்டு கண்கள் வெளிவரும் அளவுக்கு இரு கைகளாலும் துடுப்பினால தண்ணீரைத் தள்ளிக் கொண்டு வந்தார். மனதுக்குள் வலித்தது. மனித வாழ்க்கை இவ்வளவு குரூரமானதா ?

ஏன் ???????????????????????????????????????????????????????????

Monday, November 3, 2008

சந்தவை தயாரிப்பில் நான்

ஒரு மாலை நேரம்.கணிப்பொறியில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தேன். கிரைண்டர் சத்தமிட்டது. ச்சே இவளுக்கு எப்ப பாரு இதே வேலை. எரிச்சலாக இருக்க, கதவை சாத்த முயற்சித்த போது, அம்மணி ( அதாங்க என் மனைவி)

"என்னங்க இங்க வாங்க " என்று அழைக்க,

ச்சே இவளுக்கு இதே வேலையாப் போச்சு எப்ப பாரு எதையாவது சொல்லி மூடை கெடுத்து விட்டு..ச்சே ச்சே. எதுக்குடா கல்யாணம் பன்னினோம் என்று ஒரே வெறுப்பா இருந்தது. வேறு வழி இல்லாததால் அழைப்புக்கு உடன்பட வேண்டியதாகி விட்டது.கோர்ட்டு சம்மன் எல்லாம் தூசு பண்ணிடலாம். ஆனா இந்த அம்மணிகள் உத்தரவு இருக்கே கேட்டவுடன் குலை நடுங்க செய்கின்றன..

" எதுக்கு வரச் சொன்னே " கோபத்துடன் நான்.
" இதை பிடிச்சு திருகுங்க " என்றாள். எனக்கு சரியான கோபம். வேலையைக் கெடுத்து விட்டாளே என்று.
" இதுக்கா கூப்பிட்டே , ஏன்டி உசுரே எடுக்கிறே "
" உஸ், பேசாம சொல்லுறதை செய்யுங்க " என்றாள். பார்வையா அது. அப்படி ஒரு கொடூரமய்யா அது..
அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். ஹிட்லராம் ஹிட்லர். அவனெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை. இந்த அம்மணிகள் தானய்யா கொடுங்கோலர்கள். மனசாட்சியே இல்லாத இடி அமீன்கள்.

சமயலறையில் ஒரு வஸ்து இருந்தது. மாமியார் உபயமாம். மாமியார்கள் தானைய்யா எமன். ஏற்கனவே ஒன்று தலைமீது ஏறீ உட்கார்ந்து கொண்டு ஆட்டம் போடுது. இதுல இது வேற. பார்க்க ஸ்பீல்பெர்க் படத்தில் வருமே ஒரு இயந்திரம், பூமிக்குள் இருந்து வெளியே வந்து ஆட்கள் எல்லாம் பிடித்து முழுங்குமே, மூனு காலு கூட இருக்குமே, அது போல இருந்தது.

இடியாப்ப உரல் பாத்து இருக்கீங்களா ? அது போல தான் இருந்தது அந்த வஸ்து. ஆனா அதை மூன்று கால்களுக்கு இடையில் பொருத்தி மேலே திருகு போல இருந்தது அதை திருகினால் உரலுக்குள் சென்று அழுத்துகிறது. உரலுக்குள் மாவை வைத்தால் பிழிந்து கம்பி போல வெளியே தள்ளுகிறது.

அம்மணி இட்லி போல (எங்க வீட்டு இட்லி வைத்து தான் எல்&டி பெரிய பெரிய கட்டிடம் எல்லாம் கட்டுறாங்க) இருந்ததை எடுத்து உரலுக்குள் வைத்து

" ம், திருகுங்க " என்றாள்.

ராணுவ உயர் அதிகாரி கூட இப்படி எல்லாம் உத்தரவு போட மாட்டார்களய்யா. அங்கே வேலை பிடிக்கலைன்னா ராஜினாமா செய்து விடலாம். இங்கே முடியுமா ? விதி.. யாரோ நம்ம மன்றத்துல கல்யாணம் செய்யபோறதா எழுதி இருந்தாங்க . சமயம் பார்த்து அது நினைவுக்கு வர, அவரை நெனச்சு பாவமா இருக்க, நொந்தபடி அந்த கம்பியை பிடித்து திருகினால், அட நொக்காமக்கா, இட்லியா அது இல்லை வெள்ளை குண்டா. திருகவே முடியலை. கையெல்லாம் எரிச்சல் வர, ஆம்பளை இல்ல, முக்கி முக்கி ( சத்தம் வெளியே தெரியாமல் தானய்யா )ஒரு வழியா திருகி முடிக்க, வெள்ளை வெளேரென்று அது கீழே இருந்த தட்டில் சுருள் சுருளாக விழுந்தது. அதற்குள் எனக்கு வேத்து விருவிருத்து போயிருச்சு.

ஒரு வழியா இருந்த வெள்ளை குண்டுகளை எல்லாம் உரலுக்குள் திணித்து அம்மணி " ம்... " என்று உத்தரவு இட நான் விக்கி விதிர்த்து முக்கி முனகி கை எரிச்சல் பட பிழிந்து முடித்தேன்.

அருகில் அமர்ந்து இந்த சமையல் போரை பார்த்துக்கொண்டு இருந்த என் ஒன்றரை வயசு மகளுக்கு தட்டில் அந்த சந்தவையை போட்டு கொடுக்க, கீழே அமர்ந்து கொண்டு சிறிய கையால் எடுத்து வாயில் வைத்து ஒரு உறிஞ்சு உறிய, வாய்க்குள் வைத்து மென்றபடி என்னை பார்த்து சிரித்தது. கை எரிச்சல் எல்லாம் போயே போச்சு...

இது தான் வாழ்க்கையா ?

ஆமா சந்தவை எப்படி தயாரிப்பது என்று உங்களுக்கு சொல்லனும் இல்லையா...

தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - இரண்டு கப்
தேங்காய் - அரை மூடி
ஏலக்காய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

அரிசியையை மூன்று மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் போட்டு அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து, ஏலக்காயை மறக்காமல் போட்டு நைசாக ( சந்தனம் போல ) அரைத்து எடுத்து, கடைசியில் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து வைத்துகொண்டு, இட்லி பாத்திரத்தில் குழியில் ஊற்றி பத்து நிமிடம் வேகவைக்க வேண்டும். வெந்தவுடன் எடுத்து, சூடாக அந்த வஸ்துவுக்குள் வைத்து பிழிந்தால் சூடான மணமான சந்தவை தயார். இதனுடன் தேங்காய் பால் அல்லது சட்னி சேர்த்து சாப்பிட்டால் அருமை...

--------------------------------------------------------------
05-08-2007 அன்று தமிழ் மன்றத்தில் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு
--------------------------------------------------------------

Sunday, November 2, 2008

சங்கரா மீன் குழம்பு

உழவர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிய பிறகு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். கூடவே மனைவியும், மகளும். மீன்கடையில் அழகழகாக மீன்களை அடுக்கி வைத்திருந்தனர். சனிக்கிழமை கவுச்சி சாப்பிடாமல் இருங்கள் என்ற எனது அஸ்டாராலஜிஸ்ட் நண்பரின் கட்டளையினை இன்று ஒரு நாள் மீறித்தான் பார்ப்போமே என்று மனைவியிடம் மெதுவாக அம்மணி, இப்படி இப்படி என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்ய, முறைத்தாள்.

சரணாகதி தத்துவத்தை உதிர்த்தேன், வேறு வழியின்றி மீன் சமைத்துத் தர சம்மதித்தாள். சட்டத்தையும் சில சமயம் வளைத்து விடலாமல்லவா? எங்கள் வீட்டுச் சட்டம் வயிற்றுக்காக சற்றே வளைந்து கொடுத்தது. அதனால் கிடைக்கப்போவது மீன் குழம்பு.

சங்கரா மீன் வாங்கிக் கொண்டிருக்கும் போது அருகில் அடுக்கி வைத்திருந்த நண்டு சோகமாக என்னையே பார்ப்பது போல தோன்றியது. எனக்கு ஒரு வழக்கமிருக்கிறது. யாரேனும் சோகமாக முகத்தை வைத்திருந்தால் எனக்கு பார்க்க பொருக்காது.உடனடி நிவாரணம் செய்ய முற்படுவேன். அந்த வழக்கத்தின் காரணமாக நண்டின் சோகத்தை போக்க விரும்பினேன். அம்மணியை நோக்கி ஒரு ரொமாண்டிக் லுக் விட, அடுத்த நிமிடம் நண்டும் மெனுவில் சேர்ந்தது.

உள்ளுக்குள் ஒரே கும்மாளம். ஆகா இன்னிக்கு மீன் குழம்பும், நண்டு வறுவலும் கிடைக்கப்போவதை எண்ணி எண்ணி மனசு எக்காளமிட்டது.

மீன் குழம்பினை எப்படிச் செய்வதுன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க..

கொஞ்சம் தளர நல்லெண்ணெய் விட்டு வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை கிளறி விட்டு, அதனோடு சிறிய வெங்காயம் மற்றும் நடுவில் கீறிய இரண்டு பச்சை மிளகாயையும் போட்டு வெங்காய வாசம் போகும் வரை வதக்கி அத்துடன் தட்டி வைத்த பூண்டும், இரு நறுக்கிய தக்காளியுடன் துளியூண்டு உப்பும் சேர்த்து வதக்கிய பிறகு மல்லித்தூள், மிளகாய்தூள் சேர்த்து வாசம் போகும் வரை, அதாவது எண்ணெய் மசாலிவிலிருந்து பிரியும் வரை வதக்கிய பிறகு புளி சேர்த்து நன்கு கொதிக்க வைத்த சாற்றில் சங்கரா மீனைச் சேர்த்து இரு கொதி விட்டு இறக்கி வைத்து மேலே மல்லித்தழை தூவி, சிறிது நேரம் சென்ற பிறகு சுடு சோற்றில் குழம்பினை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சொர்க்கம் அவ்விடத்தில் இருக்கும்.

இப்போ நண்டு வறுவல் எப்படிச் செய்வதுன்னு சொல்றேன்.

அரை மூடி தேங்காய், நான்கு பல் பூண்டு, இரண்டு வெங்காயம், அரை டீஸ்பூன் சோம்பு, நான்கு சிவப்பு மிளகாய் இவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொண்டு அத்துடன் கழுவிய நண்டினை சேர்த்து பிசைந்து தேவையான அளவு உப்புச் சேர்த்து வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் மசாலாவுடன் இருக்கும் நண்டினை சேர்த்து ஒரு கிளறு கிளறி மூடி வைத்து விடவேண்டும். சிறிது நேரத்தில் நண்டு வெந்து விடும். மசாலா நன்கு சிவக்கும் வரை பிரட்டி எடுத்தால் வாசம் ஊரையே தூக்கும்.
அந்த மசாலாவின் சுவையே தனி. எந்த நட்சத்திர ஹோட்டலிலும் கிடைக்காத அருமையான சுவை.

கிடைக்கப்போகும் மீன் குழம்பும், நண்டு வறுவலும் எண்ணங்களில் விரவ, வண்டியை விரட்டினேன்.

”ஏங்க, வெங்காயம், பூண்டு, தக்காளி நறுக்கி தருகின்றீர்களா” என்று மனைவி கேட்க, வேறு வழி. மீன் குழம்பு வேண்டுமே, நண்டு வறுவல் வேண்டுமே. மறுக்க முடியுமா? (நேரம் பார்த்து காரியத்தை நடத்திக் கொள்வது இப்படித்தான் போலும். தலையணை மந்திரமாக இருக்குமோ??)

சின்ன வெங்காயம் உரித்து இரண்டாக வெட்டினேன். பூண்டினை தோல் உரித்து வைத்தேன். தக்காளிகளை சிறிய சிறிய பீஸ்களாக நறுக்கி வைத்தேன். தேங்காயை திருகி எடுத்து வைத்தேன்.

முக்கால் மணி நேரத்தில் நண்டு மசாலாவின் வாசனையும், மீன் குழம்பு வாசனையும் என்னைச் சூழ்ந்தது. சாப்பாடு தயார் என்றார் மனைவி. இன்று ஒரு கட்டு கட்டி விட வேண்டுமென்று நினைத்தபடி அறையிலிருந்து வெளி வந்தேன்.

மூன்று தட்டுகளில் சூடாக சாதம் எடுத்து வைத்தார். மகனும், மகளும் ”அப்பா நண்டினை எடுத்துக் கொடு “ என்றார்கள். பிள்ளைகள் இருவரும் சாப்பிடட்டும் பின்னர் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றுச் சொல்லி விட்டு, நண்டு மசாலாவைச் சோற்றில் சேர்த்து பிசைந்து ஊட்டி விட்டேன். நண்டின் சதையினை எடுத்து ஊட்டி விட்டேன். ஆர்வமாக “ அப்பா நல்லா இருக்கு” என்று சொல்லியபடியே சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும், நாங்கள் இருவரும் சாப்பிட அமர்ந்தோம். ரித்தியும், அம்முவும் நல்லா சாப்பிட்டாஙகல்ல என்று சொல்லியபடி மீன் குழம்பினை சோற்றில் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டேன். அதிகம் சாப்பிட இயலவில்லை. மனைவியோ ஒரு கரண்டி சாதத்தைக் கூட சாப்பிடவில்லை. பிள்ளைகள் இருவரும் சாப்பிட்ட அழகும், அவர்களின் சந்தோஷமும் இருவருக்கும் சாப்பிட்ட நிறைவினைத் தர, நண்டும் மீன்குழம்பும் சட்டியில் இருந்தன, ஆனால் எங்களுக்குத்தான் சாப்பிடப் பிடிக்கவில்லை.