குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சமயம். Show all posts
Showing posts with label சமயம். Show all posts

Monday, May 1, 2017

செப்டம்பர் 31

நேற்றுக் காலையில் ஏழு மணிக்கே வேலை விடயமாக வெளியில் சென்று பத்து மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்தேன். நல்ல வெயில். சூடு தான் பிரச்சினை. கொதிக்கிறது அனல். முக்கியமான வீதிகளில் கம்பங்கூழ் பானைகள் துண்டுகள் கட்டி அமர்ந்திருக்கின்றன. ஒரு முறை திருப்பூர் கோர்ட்டுக்குச் சென்று விட்டு வரும் வழியில் கம்பங்கூழ் குடித்தேன். புளிப்பு உடலெங்கும் புல்லெரிக்க வைத்தது. ஆனால் நண்பரோ அசராமல் அனைத்தையும் குடித்தார். அப்படியே திரும்பக் கொடுத்து விட்டேன். அந்த அனுபவத்தினால் கம்பங்கூழ் என்றால் காத தூரம் ஓடிப் போ என்கிறது மனசு.

நுங்குகள் ஐந்து ரூபாயாம். வெட்டித்தருகின்றார்கள். பதனீ குடித்துப் பார்க்கலாம் என்று கொஞ்சம் வாங்கி வாயில் வைத்தால் சாக்கரீன் சுவை மிளிர துப்பி விட்டேன். ஒரு முடை நாற்றம் வேறு வந்தது. அதில் நுங்கைச் சீவிப் போட்டு மட்டை மட்டையாகக் குடிக்கின்றார்கள். ஆனால் எனக்குத்தான் ஆகவில்லை. நுங்கை வைத்து இப்படி ஒரு பிசினஸ் செய்யலாம் என்பதே ஆச்சரியம் தான். ஆனால் பாருங்கள் வருடம் முழுமைக்கும் நுங்கு கிடைக்கிறது. அதில் தான் ஏதோ ஒரு உள்குத்து இருக்கிறது. அது என்னவென்று புரியமாட்டேன் என்கிறது.  ஒரு தடவை வீட்டுக்கு வந்த உறவினர் விழா நாட்களில் கோவையில் சாணி விற்றே கோடீஸ்வரனாகலாம் போலவே என்று சொல்லிக் கொண்டிருந்தார். வீட்டு வாசலில் தெளிக்க சாணி வாங்க மனையாள் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள்.
(திருமணத்திற்கு முன் இப்படி இருந்த நான்)

வீட்டுக்கு வந்து அயர்ந்து போய் படுத்து விட்டேன். வெயிலில் கருவாடு போலக் காய்வது என்பது சாதாரணமா? பசங்க டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். மதியம் மூன்று மணி போல நீயா? நானாவில் மறதி கணவர்கள் மனைவிகள் என்றொரு தலைப்பில் கணவர்கள் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள் பெண்கள். இதெல்லாம் சகஜம் தானே? அதைப் பார்த்து மனையாள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள். 

தன் குடும்ப விஷயத்தை, அதுவும் தன் கணவனின் ரகசியத்தை வெளியில் கசிய விடலாமா என்றெல்லாம் தெரியாமல் பிளந்து கட்டிக் கொண்டிருந்தனர். மறதி என்பது மனிதனுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்பதில் யாருக்கேனும் எள்ளளவாவது சந்தேகம் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை உடனடியாக மறந்து விடுங்கள். சந்தேகம் இருக்கவே கூடாது. நல்லது நடந்தால் நினைக்கும் மனது கெடுதல் நினைந்தால் மறக்கத்தான் நினைக்கும் அல்லவா? அதைத் தவறு என்கிறார்கள் இல்லத்தரசிகள். இருக்கட்டும். 

பெண்கள் எப்போதுமே குறை பேசி பழக்கமானவர்கள். நிறையை மட்டும் பார்க்காமல் குறையை மட்டுமே குத்திக் காட்டிக் கொண்டிருப்பார்கள். குறை சொன்னால் தான் நிவர்த்திச் செய்து கொள்ளலாம். ஆகையால் அதுவும் தவறில்லை. சரி கணவனிடம் தானே பேசுகின்றார்கள். தங்கள் தகப்பன், தாய், அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளை விட்டு விட்டு வந்திருக்கின்றார்கள். பேசினால் தப்பில்லை. அடித்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். குடும்பத்தின் ஆணி வேர் அல்லவா பெண்கள்? இப்படிச் சரண்டர் ஆகி விட்டாயே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. எவன் எவனுக்கோ அடிபணிந்து வேலை செய்யும் போது மனைவியிடம் சரண்டர் ஆவது ஒன்றும் தப்பில்லை என்கிறேன். சரிதானே சரண்டரானவர்களே? அடக்கம் தான் அமைதிக்கு வழி! (தத்துவங்களில் சொல்லப்பட்டிருக்கிறது)

காதலின் மோக லாகிரியில் சிக்கி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறும் பெண், காதலின் உச்சத்தை நுகர்ந்து விட வாழ்க்கையெனும் மோக வளைக்குள் நுழைகின்றாள். வாழ்க்கையின் வாசலில் வசந்தம் தன் அழகான வரவேற்பைத்தரும். அந்த வரவேற்பில் மகிழ்ந்து வாழ்க்கை எனும் வீட்டுக்குள் நுழைந்த பெண், நாளடைவில் காதலின் மோக லாகிரியிலிருந்து விலகி, இயற்கையின் மகத்துவமான தாய்மை எனும் அவதாரமெடுக்கின்றாள். 

கண்ணதாசன் கூட சொல்வார்,”இறைவன் ஒருவனின் ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் தாயோ ஒருவனின் ஆத்மாவுக்கும், உடலுக்கும் பொறுப்பேற்றுக் கொள்கின்றாள்”. இதை விட ஒரு பெண்ணின் மகத்துவத்தை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.

தாய்மையின் உயர்வைக் காட்டும் ஒரு கதையைக் கூட அர்த்தமுள்ள இந்து மதத்தில் எழுதி இருப்பார். கதையைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆகவே மனையாளிடம் மதி மயங்கிக் கிடப்பது (இதைத்தான் மறதி என்கிறார்கள்) ஒன்றும் தவறில்லை. 

மனையாளுடன் சேர்ந்து நானும் நீயா நானாவைப் பார்க்க ஆரம்பித்தேன். அதிலொரு பெண்மணி தன் கணவன் தங்கள் கல்யாண நாளைக் கூட நினைவில் வைத்திருப்பதில்லை எனவும், நான் முதன் முதலாக இந்த வீட்டுக்கு வந்தது அந்தத் தேதியில்லையா? அதைக் கூட அவர் மறந்து ஒரு வாழ்த்துக்கூட சொல்வதில்லை என்று வேதனையாகச் சொன்னார். எனக்கு அந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை. மறக்கவா முடியும் அந்தத் தேதியை?அருகில் அமர்ந்திருந்த மகள், ”அப்பா! உங்கள் கல்யாண தேதி என்னப்பா?” என்று கேட்க, நானும் உடனே வெகு சந்தோஷமாக, ”செப்டம்பர் 31” என்றேன்.

(திருமணத்திற்குப் பிறகு இப்படி ஆகி விட்டேன். கவனிக்க மீசை காணாமல் போய் விட்டது)

மகள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் மனைவியோ டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் எழுந்து கடு கடுவென அடுப்பங்கரைக்குள் சென்றாள். ”இந்தக் கோபிநாத்துக்கு ஏன் தான் இந்த வேலையோ தெரியவில்லை? நாசமாப் போறவன் ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமாக, எரிச்சலைக் கிளப்பி விடுகின்றான்” என்று அவரை ஒருமையில் திட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவளுக்கு என்ன ஆனது என்று இதுவரைக்கும் தெரியவில்லை.

நான் தேதி மட்டும் தான் சொன்னேன். அதுக்கு எதுக்கு இவ்வளவு கோபம் கொள்கிறாள் இவள்? ஆமாம் செப்டம்பர் 31 தேதி இருக்கிறது தானே நண்பர்களே? 

Thursday, April 27, 2017

கொளுத்தும் வெயில் குளிரும் நினைவுகள்

கோவையில் இப்படி வெயில் அடிக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அரை மணி நேரம் வண்டியில் சென்ற மனையாளின் தோல் சிவந்து வெந்தது போல ஆகி விட்டது. கோவையில் கோடையில் வெயிலாக இருந்தாலும் சுடாது. ஆனால் இப்போது சுட்டெரிக்கிறது. நாளொன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் ஆகாரம் குடிக்க வேண்டியதாகி விட்டது. சர்பத் கடைகளைக் கண்டால் மனசு அங்கே இழுத்துச் சென்று விடுகிறது. கவுண்டம்பாளையத்தில் திவ்யா சர்பத் என்றொரு கடை இருக்கிறது. நாற்பது வருடமாக சர்பத் விற்பனை செய்கிறாராம் அந்தக் கடைக்காரர். பதமாக வெயிலுக்கு இதமாக அதிகக் குளிர்ச்சியும் இல்லாமல் சர்பத் போட்டுத் தருகிறார். அந்தப் பக்கம் சென்றால் அவரைடம் எலுமிச்சை சர்பத் குடிக்காமால் நகர்வதில்லை. வெயில் என்றால் இதுதான் வெயில் என்பது போல அனத்து அனத்து என்று அனத்துகிறது.

வீட்டின் முன்னே இருக்கும் வேப்பமரம் கூட ஏனோ ஊடல் கொண்ட காதலி போல உஷ்ணக்காற்றினைத் தள்ளுகிறது. போதாதற்கு வேப்பம்பூவைக் கொட்டுகிறது. தமிழக அரசியலில் நொடிக்கொரு திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. செய்தி டிவிக்களுக்குத் தீனி. நான் சுத்தமாக செய்திச் சானல்களை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். விவாதம் நடந்தால் அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை. செய்தித் தாளில் அரசியல் செய்திகள் என்றால் நகர்ந்து விடுவேன். துரோகிகளும், சுய நலக் கொடூரர்களும் நிரம்பிய அரசியல் செய்திகளைப் படிப்பதினால் என்ன பிரயோஜனம்? அதுமட்டுமில்லை சினிமா செய்திகளை மொத்தமாக படிப்பதை நிறுத்தி விட்டேன். எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து இதுவரை சினிமாச் செய்திகளைப் படித்ததினால் என்ன பலன் என்று யோசித்தேன். நிறுத்தி விட்டேன். காசும் நேரமும் கரியானது மட்டுமே பலன்.









(சிறு வயதில் நான் குளித்து மகிழ்ந்த ஊருக்கே உயிர் கொடுத்து வரும் ஆவணம் கிராமத்தில் இருக்கும் குளங்களும் அதன் பெயர்களும்)

கோடையில் பிச்ச நரிக்குளம் மட்டும் சற்றே தண்ணீர் சுண்டி விடும். ஆவணம் மாரியம்மன் கோவிலின் வாசல் வழியாகத் தெற்கே சென்றால் நான்கு புறமும் கொல்லைகள் சூழந்த, தென்மேற்குப் பகுதியில் காடுகள் நிரம்பிய குளம் தான் அது. குளத்துத் தண்ணீர் சற்றே சந்தனக்கலரில் மாறி இருக்கும். இருந்தாலும் அந்தக் குளத்தில் குளிப்பது சுகம். நடு மத்தியான நேரத்தில் செல்வதுண்டு. தண்ணீரின் மேல் பகுதியில் சூடாக இருக்கும். ஆனால் உள்ளே சிலீரென்று இருக்கும். இரண்டு மணி நேரம் தண்ணீருக்குள் ஆட்டம் போட்டு, நீச்சல் அடித்து கண்கள் ரத்தக் குழம்பாக சிவந்த உடன் தான் வெளியில் வருவதுண்டு.

நானும், வேலைக்காரன் போசும் ஆவணத்தான் குளத்துக்கு கிழக்கே இருக்கும் வயலில் கோடைப்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டாருடன் செல்வோம். அது மண்ணெண்ணெய் மோட்டார். ஆரம்பத்தில் கொஞ்சம் பெட்ரோல் ஊற்றி ஸ்டார்ட் செய்து பிறகு மெதுவாக மண்ணெண்ணெய்க்கு மாற்ற வேண்டும். ஹோசில் தண்ணீர் ஊற்றி நிரப்பிய பிறகு ஸ்டார்ட் செய்தால் குளத்திலிருந்து தண்ணீரைப் பம்ப் செய்து மடையில் கொட்டும். அந்த மடைக்குள் உட்கார்ந்து கொண்டு தலையைப் பம்ப் தண்ணீரில் காட்டி குளிப்பேன். ஜாலியாக இருக்கும். மசங்கும் நேரத்தில் தான் குளத்துக்குச் செல்வதுண்டு. கொக்குகள் ஒற்றைக்காலில் தவமிருந்து கொண்டிருக்கும். மீன்கள் மாட்டினால் கொத்திக் கொண்டு மரங்கள் அடர்ந்து நிரம்பிய ஆறும் குளமும் இணைந்த கரைகளில் இருக்கும் மரங்களில் சென்று அமர்ந்து மீனை ருசித்துக் கொண்டிருக்கும்.

தண்ணீர் இறைக்க குளத்துக்குச் செல்வதென்றால் இளம் தேங்காய் ஒன்றும், வெல்லக்கட்டி, பொட்டுக்கடலை கொஞ்சமும் எடுத்துக் கொண்டு சென்று விடுவோம். தேங்காயைப் பொத்து அதற்குள் பொட்டுக்கடலை மற்றும் வெல்லக்கட்டி இரண்டையும் சேர்த்து, தேங்காய் தண்ணீரோடு சேர்த்து மூடி வைத்துக் கொள்வோம். குளத்தங்கரையில் கிடக்கும் காய்ந்து போன விறகுளைக் கொண்டு வந்து போட்டு எரியூட்டி அதில் இந்தத் தேங்காயைச் சுட்டு எடுத்து ஆற வைத்து ஓட்டினை எடுத்து விட்டு சாப்பிட்டால் அள்ளும். அதன் சுவையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

மாலை மசங்கும் வேளையில் நன்றாக குளித்து விட்டு, இலேசாகக் குளத்து நீர் குளிர ஆரம்பிக்கும் சமயத்தில் சுட்ட தேங்காயைச் மாட்டு வண்டியின் நுகத்தடியில் அமர்ந்து கொண்டு சிதறும் தண்ணீரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ருசிப்பது என்பது இப்போது நினைத்தால் கூட நடக்கும் காரியமா? அவனவன் லட்சங்களைக் கொட்டி கடற்கரை, இயற்கை கொஞ்சும் இடங்களுக்குச் சென்று வெறுமையாகத் திரும்புகின்றனர். வாழ்க்கையோடு இயைந்து இருக்கும் இது போன்ற மகிழ்ச்சி தரும் உணர்வுகளைக் காசால் பெற்று விட முடியுமா? 

உண்மையில் வயலுக்கு வேலை செய்யத்தான் செல்கிறோம். ஆனால் அந்த வேலையிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது அல்லவா? அது போல எந்த வேலையில் கிடைக்கிறது சொல்லுங்கள்? கணிணியில் உட்கார்ந்தால் உடலும் மனசும் அலுத்துப் போகும். இப்போதைய உடல் உழைப்புகள் எதுவும் விவசாய வேலை தரும் மகிழ்ச்சியைப் போல மகிழ்ச்சியைத் தந்து விட முடியுமா? தோட்ட வேலைக்குச் சென்று திரும்பும் போது கையில் தேங்காய், மாங்காய், கத்தரிக்காய்களைக் கொண்டு வந்து சமைத்து உண்ணும் வேலைக்காரியின் உணவுக்கு முன்னால் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் உணவின் சுவை நிற்க முடியுமா?



கிர்லோஸ்கர் தண்ணீர் இறைக்கும் பம்பு செட்

கோடையில் வெயிலுக்கு இதமாக வடக்கித் தெரு சுப்பையாத் தேவரின் கொல்லையில் அருவி போலக் கொட்டிக் கொண்டிருக்கும் பம்பு செட்டிற்கு குளிக்கச் செல்வதுண்டு. அப்போது வழியில் என் நண்பன் பனை மரத்துக் கள் விற்றுக் கொண்டிருப்பான். அவனிடத்தில் சென்று ஒரு லிட்டர் கள்ளைக் குடித்து விட்டு, பம்பு செட்டில் ஆட்டம் போட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தால் சூடான சோற்றுடன் கொதிக்கும் மீன் குழம்பினை ஊற்றிக் கொண்டு கவளம் கவளமாக சாப்பிட்ட நாட்கள் இனி வரத்தான் கூடுமா? நிச்சயம் வராது. 

நான்கு சுவற்றுக்குள் கதவைச் சாத்திக் கொண்டு தலையில் மோண்டு ஊத்தும் தண்ணீர் உடலைத் தழுவும் போது ஆற்றுக்குள் குளிக்கும் போது இருந்த சுகம் இல்லை என மனசு முழுக்க ஏக்கம் பரவுகிறது. காவிரி ஆறும், மழையும் வறண்டு போய் வெம்மையானாலும் அந்த இளம் பிராயத்து நினைவுகள் மட்டும் மனதூடே ஊடுறுவும் போது கொஞ்சூண்டு சிலிர்ப்பாக இருக்கத்தான் செய்கிறது.

Wednesday, April 19, 2017

ரூடோஸ்ஸின் வருகை

எனக்கு நாயென்றால் அப்படி ஒன்றும் பிடிக்காத விஷயமல்ல. அதுவும் ஒரு உயிர் தானே என்றளவில் கொஞ்சம் பிரியம் இருக்கின்றது. எனக்கொரு தோழி நெட்டில் அறிமுகமானவர் பிலிப்பைன்ஸில் இருக்கிறார். நான் சிரமப்பட்ட காலத்தில் உடனுக்குடன் எனக்கு பணம் அனுப்பி வைத்தார். பள்ளி, கல்லூரி, ஹாஸ்டல், கடைகள் என நல்ல வசதியான பெண்மணி. அங்கிருந்து வருடம் ஒரு தடவையாவது பரிசுகள் வரும். நான் எதுவும் அனுப்புவதில்லை. போன் கூட அவர் தான் செய்வார். இணையத்தில் பேசிக் கொள்வதுண்டு. அவர் ஊரில் நாய்க்கறி பேஃமசாம். அவரிடம் கேட்டேன். அருமையாக இருக்கும் என்றார். அன்றிலிருந்து அவரிடம் பேசுகின்ற போதெல்லாம் செத்துப் போன நாய்கள் அவரின் பின்னே அவரைத் துரத்துவது போல நினைவலைகள் வந்து விடும். விவசாயமெல்லாம் அழிந்து போன பிறகு நாய்க்கறியைத் தின்னாமல் மனுசனையா தின்ன முடியும். எனக்கென்னவோ இந்தியாவில் இன்னும் கொஞ்ச நாளில் நாய்க்கறி பிரபலமாகி விடும்  போல. நம்ம நாடு போகிற போக்கினைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. 

பிலிப்பைன்ஸுக்கு வா என்று பத்து ஆண்டுகளாக அழைத்துக் கொண்டிருக்கிறார். குடும்பத்தோடு செல்ல வேண்டும். இப்ப ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.

நேற்றைக்கு முதல் நாள். நானும் பையனும் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண், அங்கிள் இங்கே மருத்துவமனை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார். சரவணம்பட்டி காளப்பட்டி சாலையில் ஒரு மருத்துவமனையைப் பார்த்த நினைவில் இந்தப் பக்கம் என்று கைகாட்டி விட்டேன். கடையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினால் அந்தப் பெண்கள் தெரிந்தார்கள். அதிலொரு பெண் நடக்கவே முடியாமல் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தார். சாலையைக் கடந்து வந்தார்கள். மருத்துவமனையில் டாக்டர் இல்லை. சோர்ந்து போய் விட்டார்கள். அந்தப் பெண்ணைத் தொட்டுப் பார்க்க உடல் கொதித்துக் கொண்டிருந்தது. சரியான காய்ச்சல். வெயில் வேறு அனத்திக் கொண்டிருந்தது. பையனை இன்னொரு பெண்ணுடன் இறக்கி விட்டு விட்டு அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இரண்டொரு மருத்துவமனைக்குச் சென்றால் ஒருவரும் இல்லை. ஒரு வழியாக மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைக் கண்டுபிடித்து அங்கு கொண்டு போய் விட்டேன். மருத்துவர் இருந்தார். மீண்டும் என் பையனும் இன்னொரு பெண்ணும் இருக்கும் இடத்திற்கு வந்து அந்தப் பெண்ணை வண்டியில் ஏற்றிக் கொண்டு திருப்பினேன். அப்போது அந்தப் பெண், ”ரித்திக், வெயிலில் நிற்காதே, நிழலில் நில்” என்று இரண்டு மூன்று தடவை சொன்னது. எனக்குச் சரியான எரிச்சல். நான் வெயிலில் இவள் தோழியை அழைத்துக் கொண்டு நாயாய் அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பெண்ணுக்கு யார் மீது அக்கரை என்று பார் என்று கடுப்பானது. காலம் மாறுகிறது என்பது பளிச் சென்று புரிந்தது. அப்பெண்ணை மருத்துவமனையில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தேன். நன்றி சார் என்றது அப்பெண். நல்லா இருங்கம்மா என்றுச் சொல்லி விட்டு பையனை அழைத்துக் கொண்டு வீடு வந்தேன். நீ பாட்டுக்கு இப்படி உதவி செய்யக் கிளம்பி விடாதே ரித்திக் என்று அவனிடம் சொல்லி வைத்தேன். எதுக்கும் இருக்கட்டும். சரி அடுத்த கதைக்கு வந்து விடுகிறேன்.

சிறுவயதில் செவலை நாயொன்றும், கருப்பு நாயொன்றும் வீட்டில் இருந்தது. செவலை நாய் நல்ல நாய். வீட்டை விட்டு எங்கும் செல்லாது. ஆனால் கருப்பு நாயோ எமகாதக நாய். ஊர் சுற்றி. கையில் இருந்தாலும் கடித்து தின்று விடும். அதை நான் அடித்து துரத்தி விடுவேன். அப்போதெல்லாம் நாய்க்குப் பெயர் வைப்பதெல்லாம் இல்லை. நாயை நாயென்றுதான் அழைப்போம். ஆனால் இப்போதோ வேறு நிலை.  நாய்க்கு வைக்கும் பெயரைக் கேட்கும் போதெல்லாம் அது நாயா இல்லை ஆளா என்றொரு குழப்பம் வந்து விடும் எனக்கு. 

இன்றைக்கு எனக்கு ஒரு மெயில் வந்தது. ரிப்ளை செய்யும் போது அது ஆணா பெண்ணா என்று  குழப்பம் ஏற்பட எதுக்கு வம்பு பேசாமல் டியர் என்று போட்டு விடுவோம் என்று நினைத்து டியர் <அந்த பெயர் போட்டு> மெயில் அனுப்பி விட்டேன். அது ஒரு பெண்ணாக இருந்து நான் ஆணல்ல என்று ஆரம்பித்து அதுவே தொடர்கதையாகி, ஏற்கனவே திருமணமானவன். அதுவும் நாற்பதுகளில் இருப்பதால் நாய் குணம் வேறு வந்து விடும் என்பார்கள். எக்குத்தப்பாக ஆகிவிட்டால் நன்றாகவா இருக்கும்? சரி விஷயத்துக்கு வந்து விடலாம்.

அந்தச் செவலை நாய் ஒரு நாள் வாய் கிழிந்து வந்தது. இடது பக்கம் தோல் கிழிந்து தொங்கியது. எதித்த வீட்டுப் பெண்மணி வெங்காய வெடியை கருவாட்டுக்குள் வைத்துச் சுருட்டிப் போட்டு விட்டார். அதை எடுத்துக் கடித்திருக்கிறது. வெங்காய வெடி வெடித்து இடது பக்கம் தோல் கிழிந்து தொங்கி விட்டது. இடது பக்க பற்கள் எல்லாம் வெளியில் தெரிந்தது. எனக்குப் பயமாகவும், பாவமாகவும் இருந்தது. சாப்பாடு வைத்தேன். சாப்பிட்டது ஆனால் சோறு இடது பக்கமாக வெளியில் வந்து விட்டது. கொஞ்ச நாளில் அது வாசலில் படுத்திருந்தது. பட்டினியாகவே கிடந்து இறந்து போனது. வீட்டின் பின்புறம் குழி வெட்டி புதைத்து விட்டோம். 

கருப்பு நாயை பஞ்சாயத்திலிருந்து நாய் பிடிக்க வந்தவன் பிடித்துக் கொண்டு போய் விட்டான் போலும். நீண்ட நாட்கள் அதைக் காணவில்லை. ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் சும்மாவா? வீட்டுக்கே ஆகாது என்பார்கள். நாயைச் சொல்லவா வேண்டும்? அதுகளுக்கு அப்போது பீட்ச்சா அடச்சே பீட்டா, ப்ளூகிராஸ் மாதிரியெல்லாம் ஆட்கள் இல்லை. இப்போதல்லவா இருக்கின்றார்கள். அவனவன் ஆட்களை ஆடுகள் கழுத்தறுப்பது போல அறுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதைக் கேட்க ஆட்கள் இல்லை. நாயை அடித்தாலோ அல்லது மாட்டை அடித்தாலோ கேஸ் போடுகின்றார்கள். சிறு வயதில் மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது சண்டித்தனம் செய்யும் மாட்டினை சாட்டையால் விளாசி இருக்கிறேன். அப்போது இந்த பீட்டாக்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? மாட்டுக்குப் பதிலாக இவர்கள் நுகத்தடியில் கழுத்தை கொண்டு வந்து நீட்டி வண்டியை இழுப்பார்களா? என்று தெரியவில்லை. என்ன நியாயமோ என்ன சட்டமோ? ஒன்னும் சரியில்லை.

கிரடிட் கார்டுகள், பண அட்டைகள் வந்தாலும் வந்தன. மனிதன் இப்போது பைத்தியம் பிடிக்காத குறையாகத்தான் திரிகின்றான். ஏசியில் ஐந்து நிமிடம் நின்று ஏடிஎம்மில் பணம் எடுப்பது அப்போதெல்லாம் கவுரவம் நிரம்பியது. ஆனால் இப்போதோ ஏடிஎம் என்றாலே அலறல் தான் கேட்கிறது. டெக்னாலஜி வந்தாலும் வந்தது பிடித்தது சனியன். கருப்புப் பணத்தை இனி கண்ணால் கூட பார்க்க முடியாது போலும். ஆனால் அரசியல்வாதிகள் காட்டிலோ மழையோ மழைதான். ஒரு கார் வாங்கலாம் என்றால் நாய்க்கு நாக்குத் தள்ளிய மாதிரி நமக்கு நாக்குத் தொங்கி விடுகிறது. கவுன்சிலர் ஆனவுடனே ஸ்கார்ப்பியோவில் வருகின்றார்கள். என்ன தான் தில்லுமுல்லு செய்வார்களோ தெரியவில்லை. அடுத்தவன் பணத்தில் வாழ்வதுக்கும் ஒரு மச்சம் வேண்டும். மச்சம் மட்டும் இருந்து என்ன ஆகப் போகிறது? புத்திசாலித்தனமும் வேண்டும். மோடி சரியான அரசியல்வாதியாக இருக்கிறார். கருப்புப் பணத்தை மீட்கிறேன் என்றார். நாமெல்லாம் நினைத்தோம். அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்டு வந்து விடுவார் என. ஆனால் பாருங்கள் என்ன நடந்தது என்று. இது தான் பிரதமர் மோடி. வெகு புத்திசாலியானவர். திறமையானவர். யாரை எங்கே எப்படி என்ன என்பதெல்லாம் அவரிடம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும். இது வரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் ஆகச் சிறந்தவர் மோடி அவர்கள் தான் என்கிறேன். இப்படி ஒரு ட்விஸ்டை நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்களா? நிச்சயமாக இப்படியெல்லாம் நடக்குமா என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள். அதுதான் பிளான். அதுதான் திட்டம்.

சரி திரும்பவும் எங்கேயோ போய் விட்டேன். இந்த மூளை இருக்கிறதே அது படுத்தும் பாடு இருக்கிறதே? பெரிய ரோதனை இதோடு. உங்களுக்கும் போர் அடித்திருக்கும் அல்லவா?

இரண்டு நாட்களுக்கு முன்பு ரித்திக் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் வரும் போது. அவன் கூடவே குட்டியாக, செவலை நாய்க்குட்டி ஒன்று அவனுடன் வந்து விட்டது. ரித்திக்குக்கு நாய், பூனை என்றால் பிரியம். ஆனால் மனையாளுக்கோ ஆகவே ஆகாது. அப்பா இந்த நாயை வளர்க்கலாமா? என்று கேட்க இரண்டு மாதம் வீட்டில் சும்மாதானே இருக்கின்றார்கள், பொழுது போக்காக இருக்கட்டும் என்றுச் சொல்லி சரி என்றுச் சொல்லி விட்டேன்.

போன மாதம் கருகருவென நாய்க்குட்டி ஒன்றினை வளர்க்கலாம் என்று நினைத்து கவுண்டரிடம் சொல்லி வைத்திருந்தேன். அவரும் திரிந்தலைந்து 22 நகங்களுடன் கருப்பு நாய்க்குட்டி ஒன்றினைப் பிடித்து வைத்திருந்தார். எனது நண்பர் நாயை ஓசியில் வாங்கக் கூடாது. யாருக்கும் கொடுக்கவும் கூடாது என்றுச் சொல்லி விட கவுண்டரிடம் வேண்டாம் என்றுச் சொல்லி விட்டேன். அத்தோடு நாய் வளர்க்கும் ஆசை போய் விட்டது. ஆனால் அதுவே வீடு தேடி வருகிறது.

ரூடோஸ் தற்போது

ரூடோஸ் எதிர்காலத்தில்

லேப்ராடர் வகை நாய்க்குட்டி அது. எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை? யார் வளர்த்ததோ தெரியவில்லை? அதற்குச் சாப்பாடு போட்டு, குளிப்பாட்டி, கழுத்திலொரு பட்டியைக் கட்டி, அத்துடன் கயிற்றைக் கட்டி விட்டான் பையன். காலையில் ஷாம்பூ போட்டு குளிப்பாட்டி, நாய்க்கடைக்குச் சென்று கழுத்துப் பட்டி, கயிறு வாங்கி வந்து மாட்டி காலையிலும் மாலையில் ஜாக்கிங்க் சென்று கொண்டிருக்கின்றார்கள் ரித்தியும், அம்முவும். இப்போது அது நன்றாக இருக்கிறது. இன்றைக்கு காலையில் பேப்பரைக் கடித்துக் குதறி விட்டது. ஒரு அதட்டுப் போட்டேன். அவ்வளவுதான் அருகிலேயே வரமாட்டேன் என்றது. ஒரு வழியாக சமாதானம் செய்து அதன் பயத்தைப் போக்க வேண்டியதாகி விட்டது.

இதற்கொரு பெயர் வையுங்கள் சாமி என்று கேட்டேன். 

”ரூடோஸ்” என்றார்.  எங்கிருந்தோ வந்தது ரூடோஸ். இப்போது என்னுடன் இருக்கிறது. காலையில் எழுந்ததும் அதனுடன் கொஞ்ச நேரம் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாலையில் அதனுடன் விளையாடுவதும் சந்தோஷம் தருகிறது. ஒரு குழந்தையைப் போல அதனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

பக்கத்து வீட்டில் சைபீரியன் ஹஸ்கி என்ற பெய்லி (பெயர்) வளர்கிறது. மாலையில் வாக்கிங் செல்லும் போது பெய்லியைப் பார்த்து கர்ண கடூரமாகக் குலைக்கிறது ரூடோஸ். சரியான காமெடி. பயமில்லாமல் குலைத்து விட்டு ஓடோடி வந்து அருகில் அமர்ந்து கொள்கிறது.

பசங்க இருவரும் டிவி பார்ப்பதை கொஞ்சம் நிறுத்தி இருக்கிறார்கள்.

குறிப்பு: எல்லா பத்திகளிலும் நாய் வந்திருப்பதைக் கவனிக்கவும். உன் வீட்டில் நாய்க்குட்டி வளர்க்கிறாய் என்பதற்காக ஊர் கதையெல்லாமா அளப்பது என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் அதற்குத்தான் இந்தக் குறிப்பு.

Monday, March 27, 2017

தாத்தாவும் கருவாடும்

என்னைப் பார்க்க வந்திருந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்தேன். உணவு நேரம் வந்ததும் ’சாப்பிடலாம்’ என்றுக் கேட்ட போது ’இன்று அம்மாவாசை நாளானதால் வீட்டில் தான் உணவு’ என்றார்.

”என்ன காரணம்?” என்றேன்.

“முன்னோர்கள் நினைவு நாளாக ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் உணவு படைத்து அதில் கொஞ்சம் எடுத்து காக்காய்க்கு வைத்து அது உண்ட பிறகு தான் சாப்பிடுவேன், பழக்கமாயிடுச்சு” என்றார்.

“முன்னோரா? அது யாரு?” என்றேன்.

“கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பா, அம்மா, பாட்டி இவங்களெல்லாம் தான் சார், எனக்கும் தாத்தாவுக்கு இருந்த உறவு எனக்கு மட்டும் தான் சார் தெரியும், அதைப் பற்றி மாதத்தில் ஒரு நாளாவது நினைத்துப் பார்க்கலாம் அல்லவா? அதனால் தான் சார், ஏதோ என்னால் முடிந்த உணவுகளை அவர்களுக்குப் படைத்துச் சந்தோஷமடைகிறேன்” என்றார்.

எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் கிட்டத்தட்ட 35 வருடம். இனிமேல் இவர்களைப் போன்றோரைப் பார்ப்பது அரிதாகி விடும். வாக்குக் கொடுத்திட்டேன், மாற்றிப் பேச முடியாது என்றுச் சொல்பவர்களையும் இனிமேல் பார்க்கவே முடியாது. காலம் அழித்துச் சென்ற நற்குணவாதிகளைக் காண்பது அரிதிலும் அரிதாகி விடும்.

தாத்தா மாணிக்கதேவர் மலேஷியாவின் சிறையிலிருந்து விடுதலை பெற்று ஊருக்கு வந்த பிறகு விவசாய வேலை தொடர்ந்து செய்து வந்தார். கலப்பையைக் கூட எப்படி பிடிக்க வேண்டும் என்று தெரியாதாம். மிகுந்த பிரயாசையின் பால் விவசாயத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து அவர் வயலுக்குச் செல்வதுண்டு. ஆனால் வேலைகளைச் செய்ய அவரின் மகன்களும் வேலையாட்களும் இருந்தனர்.

அவருக்கு வேலை என்றால் என்னைப் பள்ளியில் தூக்கிக் கொண்டு போய் விடுவது, பின்பு அழைத்து வருவது மட்டும்தான். கடைத்தெருவுக்குப் போய் சூரியன் பீடி வாங்கிக் கொண்டு டீக்குடித்து விட்டு வருவார். அவரின் படுக்கை வெகு சுத்தமாக மடித்து வைக்கப்பட்டிருக்கும். தலையணையின் பின்னே பணம் வைத்திருப்பார். மடியில் வேறு பணம் வைத்திருப்பார். தோளில் எப்போதும் ஒரு துண்டு இருந்து கொண்டே இருக்கும். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வெற்றுடம்பில் தோளில் துண்டுடன் நடமாடுவார். கடைக்குச் செல்லும் போது சட்டை போட்டுக் கொள்வார். விடிகாலையில் எழுந்து கொள்வார். வேப்பங்குச்சியில் பல் துலக்கி முகம் கழுவி விட்டு கடைத்தெரு சென்று வருவார்.

ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பணம் எடுத்தார் என்றால் வீடே கலகலவென இருக்கும். அத்தனை பணத்தையும் அம்மாவிடம் கொடுத்து விடுவார். அவர் செலவுக்கு கையில் கொஞ்சம் வைத்திருப்பார். வாரம் தோறும் வாளைக்கருவாடு, சுறாக்கருவாடு, நெத்திலிக் கருவாடு போன்ற பல கருவாட்டு அய்ட்டங்களை பேராவூரணிச் சந்தையில் வாங்கிக் கொண்டு வருவார்.

எப்போதும் சுடுசோறுதான் சாப்பிடுவார். எல்லாம் சுடச்சுட இருக்க வேண்டும். காலையில் சுடுசோற்றில் தண்ணீர் விட்டு தொட்டுக்க சோம்பும் வெங்காயமும் சேர்த்து எண்ணெயில் வறுத்த கருவாட்டுத் துண்டை எடுத்துக் கடித்துக் கொண்டே குடிப்பார். அடியேன் அவரருகில் இருந்தால் கஞ்சியின் கடைசி தண்ணீர் சோற்றுடன் இருக்கும். அதைக் குடிக்கத் தருவார். ஒரு கடி கருவாடு, ஒரு வாய் கஞ்சித்தண்ணி என்று குடிப்பேன். நான் பெரியவனாகும் வரையிலும் இது தொடர்ந்து கொண்டே இருந்தது.

தோளில் இடதுபக்கமாய் தூக்கி வைத்துக் கொள்வார். நரைத்துப் போன தலைமுடியை இருக பற்றி இருப்பேன். ஏதாவது கதை சொல்லிக்கொண்டே வீட்டுக்கு தூக்கிக் கொண்டு வருவார். இரவுகளில் அவரின் படுக்கையில் படுத்து தூங்கி விடுவேன். தூக்கிக் கொண்டு போய் எனது படுக்கையில் படுக்க வைப்பார். ஆசை ஆசையாய்ப் பெற்ற மகளின் பேரன். என் தங்கையை அப்படிக் கவனிப்பாரா என்று தெரியாது. ஆனால் என் மீது அவருக்குப் பிரியம் சாஸ்தி.

அவரின் தம்பி சுப்பையாதேவர் கவனிப்பாரின்றி உணவு கிடைக்காமல் அழுது அழுதே இறந்து போனார். இரவுகளில் அவருக்கு இட்லி வாங்கிக் கொண்டு போய் கொடுத்து விட்டு வருவார். நான் இரவுகளில் சுப்பையாத்தேவரின் மகனுக்கும் மருமகளுக்கும் தெரியாமல் ரகசியமாக உணவுகளைக் கொண்டு போய் அவரருகில் வைத்து விட்டு வருவதுண்டு. கத்திக் கத்தியே உடலெல்லாம் புண் வைத்துச் சீழ் பிடித்து இறந்து போன தம்பியைப் பற்றி அவருக்கு மீளொண்ணாத் துன்பம் இருந்தது. உணவு தருகிறோம் என்று தெரிந்தால் சுப்பையாத்தேவரின் மகனுக்கும் மருமகளுக்கும் ஆகாது. சண்டைக்கு வந்து விடுவார்கள். கண் முன்னே தன் தம்பி பட்ட பாட்டை காணச் சகிக்காது அந்தப் பக்கமே போக மாட்டார். அந்தளவுக்கு அவரின் தம்பி வெயிலிலும் மழையிலும் மாட்டு வண்டிக்கு கீழே கிடந்த தென்னை தட்டியிலும் வைக்கோல் மீது விரித்த படுக்கையிலும் கிடந்துச் செத்துப் போனார்.

அடுத்த ஒரு மாதத்தில் திடீரென அவருக்கு உடல் சரியில்லாமல் போய் விட்டது. ஜமாலிடம் தான் காட்டினார்கள். கிட்னி பெயிலியர் ஆகி விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று டாக்டர் சொல்லி விட்டார். வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள். கிட்னி மாற்றலாம் என்று கேட்ட போது என் காலம் முடிந்து விட்டது இனி நான் இருந்து என்ன செய்யப்போகிறேன். செலவு செய்து சொத்து அழித்து விடாதீர்கள் என்று மறுத்து விட்டார்.

வைகுண்ட ஏகாதசி அன்று காலையில் அமைதியாக படுக்கையில் படுத்திருந்தார். நான் தான் கடைசியாகப் பால் ஊற்றினேன். அம்மா என்னை அழைத்துக் காலைப் பிடித்துப் பார் என்றார்கள். கால் சில்லிட்டது. உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக சில்லிட கண்கள் திறந்தபடி வாய் வழியாக உடம்பின் உயிர் வெளியேறியது. அவரருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அழுகை வந்தது. கொஞ்ச நேரம் அழுதேன்.

அவர் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப்படையில் இருந்த போது அவருக்குக் கொடுத்த பச்சைக் கலர் ராணுவச் சட்டை இருந்தது. அதை எடுத்துப் போட்டுக் கொண்டேன். தாத்தா கொடுத்த கத்தியை பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். அவரை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் தட்டில் அவர் குடித்து விட்டு மீதம் வைத்திருக்கும் கஞ்சியும் கருவாடும் என் நினைவில் வந்து விடும். இன்றைக்கு சுத்த சைவமாக இருப்பதால் தாத்தாவுக்குப் பிடித்த சுறாக்கருவாட்டையோ அல்லது வாளைமீன் கருவாட்டையோ செய்து வைக்க முடியவில்லை. அது ஒன்று தான் எனக்கு கொஞ்சம் மனக்கஷ்டமாக இருக்கும்.

உங்கள் தாத்தாவுடன் உங்களுக்கான உறவு எப்படி இருந்தது? என்னைப் போல தாத்தாவுடன் விளையாடுவதுண்டா? அவரை எப்போதாவது நினைத்துப் பார்ப்பீர்களா?

Thursday, March 16, 2017

பழைய சோறும் வெங்காயமும் டாக்டர் விசாகனின் மறைவும்

வாழ்க்கை எண்ணற்ற அனர்த்தங்களை உள்ளடக்கியது. புரிந்து கொள்ள முடியாத பல கணக்கு வழக்குகளைத் தன்னகத்தே கொண்ட மர்மம் பொருந்தியது. அப்படி எனது வாழ்க்கைப் பயணத்தில் என் கூட வந்த ஒருவரின் கணக்கினை முடித்து வைத்தது காலம்.

எனது நண்பரும் பல் மருத்துவருமான விசாகன் அவர்கள் கடந்த வாரம் தான் ஓட்டி வந்த காரால் ஆக்சிடெண்ட் ஆகி மரணமடைந்து விட்டார். நானும் அவரும் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம். சென்னையிலிருந்து வரும் வழியில் இரவில் கார் ஆக்சிடெண்ட் ஆகி விட்டது. மறு நாள் காலையில் வீட்டுக்கு வந்து விடுவேன் என்றுச் சொன்னவர் இன்னும் வரவில்லையே என்று நினைத்து அழைத்தால் ரிங்க் போய்க் கொண்டிருந்தது. ஒருவரும் எடுக்கவில்லை. சென்னையிலிருந்து அழைப்பு வர எடுத்தால் ஆக்சிடெண்டில் இறந்து விட்டார் என்றார்கள்.

இதயம் ஒரு நிமிடம் நின்று பின் துடிக்க ஆரம்பித்தது. ஆயிரம் கிலோ பாரத்தைத் தூக்கி நெஞ்சுக்குள் வைத்தமாதிரி நெஞ்சு கனக்க ஆரம்பித்தது. கண்களிலிருந்து கண்ணீர் வரவா என்று துடித்துக் கொண்டிருந்தது. பிள்ளைகளும், மனையாளும் வருத்தப்படுவார்களே என  கண்களுக்குள் மனசு தானாகவே கேட்டைப் போட்டது. உடல் சோர்ந்து போனேன். சாப்பிடவே பிடிக்கவில்லை. வருத்தம், துன்பம், துயரம் அனைத்தும் அழுத்த மனசு பாரமாகி விட அன்றைய நாள் முழுவதும் எனக்கு இருப்பே கொள்ளவில்லை. 

மறு நாள் திருச்சிக்குச் சென்று கடைசியாக அவரின் முகத்தைப் பார்த்ததும் கரையிட்டிருந்த துயரம் வெடித்துச் சிதறியது. உடல் அதிர கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ”அவ்வளவு அவசரமா உங்களுக்கு?” என்று அவரிடம் மனசு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. ஒரே ஒரு கேள்விக்கு ஆயிரம் பதில்களைச் சொல்லும் அவர் மவுனமாக கிடந்தார்.

ஒரு முறை வீட்டுக்கு வந்திருந்த போது மனையாளிடம் ”தங்கச்சி, பழைய சோறு, மோர், சின்ன வெங்காயம் வெட்டிப் போட்டு, கொஞ்சம் பச்சை மிளகாயை நறுக்கிப் போட்டு கையால் கரைத்துக் கொடும்மா?” என்றார். மனையாளும் செய்து கொடுக்க சாப்பிட்டவர் ”இதுநாள் வரைக்கும் இப்படி ஒரு சுவையான கஞ்சியை நான் குடித்ததே இல்லைம்மா!” என்றுச் சொல்லி அனைத்தையும் குடித்தார். அடியேனுக்கும் கொஞ்சம் கொடுத்தார்.

அவருக்கும் எனக்குமான நட்பு எப்போதுமே சர்ச்சைகள் மிகுந்ததாகவே இருந்தன. அவரின் கருத்துகளும், அவரின் முடிவுகளும் எனக்கு உகந்ததாக இருந்ததில்லை. இருவருக்கும் போனில் வாக்குவாதம் வரும். போனைக் கட் செய்து விடுவோம். ஆனால் அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் அடுத்த போன் வரும். இப்படித்தான் எங்களது நட்பு சென்று கொண்டிருந்தது.

இனி பழைய சோற்றினைப் பார்க்கும் போதெல்லாம் அவரின் நினைவு நிழலாடுவதை என்னால் தடுத்து நிறுத்த முடியாது என் காலம் வரை. ஆனாலும் காலம் அதற்கான மருந்தினை எனக்கு அளித்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

Sunday, March 5, 2017

இன்றைக்கு முதல் நாள்

நாடு, மொழி, இனம், உறவுகள் இவைகளுக்கு அப்பாற்பட்டு ஒருவன் இயங்க முடியும் என்றால் அது சாத்தியமே இல்லாத ஒன்றாகத்தான் இருக்கும். ஒவ்வொருவரின் மனதும் ஒவ்வொரு குப்பைத்தொட்டி. அழுகி நாற்றம் வீசும் கருத்துக்களும், முன் பதிவுகளும் கடைசிக் காலம் வரை அவனை அக்குப்பைத்தொட்டிக்குள்ளேயே சிக்கிக் கொள்ள வைத்து விடும். குப்பைத்தொட்டியில் இருந்து வெளியில் வந்தால் அல்லவா உலகத்தின் அற்புதமான தரிசனம் கிடைக்கும்? ஆனால் அதற்கான சிறு முயற்சியைக் கூட எவரும் எடுப்பதில்லை. குப்பைத்தொட்டியில் இருந்து வெளிவருவது எப்படி என்று எவரும் எளிதான முறையில் சொல்லிக் கொடுப்பதும் கூட இல்லை. இந்த நிலையில் மனிதனுக்கு எங்கே விடிவுகாலம் வரப்போகிறது? ஆளும் பிஜேபியினர் நிதர்சனத்தை உணர்ந்து அரசியல் செய்ய வேண்டும். பெரும் பிரயத்தனம் செய்து ஆட்சிக்கு வந்திருக்கின்றார்கள். வந்ததும் மக்களின் வாழ்வாதாரத்தில் கையை வைத்தார்கள். கருப்பு பணமென்றுச் சொல்லி மக்களை அலைய விட்டார்கள். இப்போது தமிழகத்தை சுடுகாடாக்க முயல்கின்றார்கள். 

நெடுவாசல் நான் பிறந்த ஊர். 16ம் தேதியிலிருந்து நடக்கும் போராட்டம் இன்றைக்கும் முடிவில்லாமல் இழுத்துக் கொண்டே செல்கிறது. டிவிக்களில் விவாதங்கள், நொடிக்கொரு தடவை செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. காலையில் தொடங்கி இரவு வரை தொடரும் அஹிம்சா போராட்ட்டம், போராட்டக்களத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகமெங்கிலிருந்தும் வரும் மக்கள். 

ஒரு கிராமம் அந்தக் கிராமத்தில் இருக்கும் மக்கள் எங்களூரும் எங்கள் தொழிலும், நாங்களே எங்கள் நிலத்திற்கு முதலாளியாக இருந்து சம்பாதிக்கும் போக்கும் மாறிப்போய் விடும் என்று போராடுகிறார்கள். மக்களுக்காக அரசா? இல்லை அரசுக்காக மக்களா? என்று தெரியவில்லை. ஆளும் மத்திய அரசிலிருந்து ஒருவரும் நெடுவாசலுக்கு வர மாட்டேன் என்கிறார்கள். ஒருவர் நெடுவாசலில் வாழ்வுரிமைக்காக போராடுபவர்களுடன் நக்சலைட்கள் இருக்கின்றார்கள் என்கிறார். இனி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நெடுவாசலில் இருக்கின்றார்கள் என்பார்கள். சைனா மறைமுகமாக நெடுவாசலுக்கு சப்போர்ட் செய்கின்றார்கள் என்பார்கள். போராட்டக்களத்தில் இருக்கும் எமது ஊர் வினோத்குமார் தமிழக பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரை நெடுவாசலுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார். எவரும் வரவில்லை. 

நெடுவாசல் கிராமத்தார் தங்கள் வயிற்றுப் பசிக்காக தங்கள் நிலத்தில் உழுது பயிரிட்டு விவசாயம் செய்து அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காகப் போராடுகின்றார்கள். ஆனால் பிஜேபியினரும், அவர்களின் அடி வருடிகளும் தங்கள் வயிற்றுப் பசிக்காக பிறரை அழித்தாவது அரசியல் பிழைத்து வயிற்றுப்பசி போக்க வேண்டும் என்பதற்காகப் பேசுகின்றார்கள். இதில் யார் அது இது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கிராம வளர்ச்சியில் தான் முன்னேற்றம் இருக்கிறது என்கிறது அரசியல் சாசனம். ஆனால் கிராம ஒழிப்பில் தான் நாட்டின் வளர்ச்சி இருக்கிறது என்கிறது பிஜேபி அரசாங்கம்.

அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்த போது கோவையில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்த இருக்கிறோம் நீயும் வருகின்றாயா என்று கேட்டார். 

பதினோரு மணி வாக்கில் கேஜிசினிமாஸ் தியேட்டர் முன்புறம் உள்ள டீக்கடையின் முன்பு ஒன்று சேர்ந்தோம். ஐந்து நிமிடம் கூட இருக்காது. ஆர்ப்பாட்டத்தின் போது பேசக்கூட விடவில்லை. கைது செய்து விட்டார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க சிறிய ஆர்ப்பாட்டத்தை நடத்தக் கூட விடமாட்டேன் என்கிறது இந்த ஜனநாயக ஆட்சி. அடியேனை காவல்துறை அதிகாரி ஒருவர் ”வெயிலில் நின்று கொண்டு சிரமப்படாதீர்கள், மத்தவங்க போராடுகின்றார்கள், நீங்கள் ஏன் சிரமப்படுகின்றீர்கள்?” என்று கேட்டுக் கொள்ள வேறு வழியின்றி வீடு வந்து சேர்ந்தேன். அண்ணனும் ஊர்க்காரர்களும் கைது செய்யப்பட்டு எங்கேயோ கொண்டு போய் வைத்திருந்தார்கள். மாலையில் விடுதலை செய்து விட்டார்கள். 

அரசியல் சதுரங்க விளையாட்டில் பகடைகளாக மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது. பகடைகள் தானாகவே உருளும் சாத்தியங்கள் உருவாக ஆரம்பித்தால் அரசியல் சதுரங்க விளையாட்டு மாறி விடும். 

மக்களுக்கு எதிரான எந்த ஒரு விஷயமும் அழிந்தே போகும். இல்லையெனில் மக்களுக்கு எதிரானவர்களை காலம் அழித்தே விடும். அரசியல்வாதிகள் வரலாற்றினைப் படிக்க வேண்டும்.


Thursday, March 2, 2017

வாசகர் கடிதம் - பதில்

உங்கள் பிளாக் நன்றாக இருக்கிறது. 


மகள் நிவேதிதாவிற்கு கடிதம் - 19 ஜூன் 2016

இந்த கடிதம் இதுவரை நான் படித்ததில் நா. முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதத்திற்கு பிறகு மிகச் சிறந்த கடிதம்.



நீ எப்போதுமே தனியாள் என்பதை நினைவில் வைத்துக் கொள். உனது பிரச்சினையும், மகிழ்ச்சியும், வலியும் உன்னை மட்டுமே சார்ந்தது. அதை வேறு எவரும் உணர்ந்து கொள்ளக் கூட முடியாது. உன் வாழ்க்கைப் பயணத்தில் கூட வருபவர்கள் எவரும் நிரந்தரம் இல்லை என்பதை நீ முடிவு கட்டிக் கொள்ள வேண்டும். வேறு யாரும் உனக்கு எந்த வித காரியத்தையும் பயனின்றி செய்ய மாட்டார்கள் என்பதை நீ நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வரிகளை நான் மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறேன்.

உங்கள் நண்பர் ஜஹாங்கீர் ஆலம் பற்றி படிக்கும் போது எனக்கு என் நண்பன் ஞாபகம் வந்தது. அவர் எப்படி இறந்தார் என்று பதிவில் இல்லையே. அல்லது உங்களுக்கு தகவல் தெரியவில்லையா?

தாெடர்ந்து எழுதுங்கள். நன்றி.

கார்த்தி
01/03/2017


கார்த்திக்,

தங்களின் கடிதத்துக்கு நன்றி.

பெரிய கோடீஸ்வரன் வீட்டுக்  குழந்தைகள் எப்படியெல்லாம் வளர்க்கப்படுமோ அப்படித்தான் வளர்ந்தான் என் நண்பன். அவனுக்கு கிடைக்காத ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம். அவனது அம்மா அவன் மீது கொண்ட பாசம் அளவிட முடியாதது. பையன் உருப்பட மாட்டேன் என்கிறானே என்று அவனின் அப்பா அவன் மீது கோபம் கொண்டிருந்தார். இவர்களுக்குள் நான் சிக்கி இருந்தேன்.

ஆலம் நிறைய சிகரெட் குடிப்பான். அனைத்தும் காட்டம் மிகுந்த ஃபாரின் சிகரெட். அவனுக்குள் காதல் தோல்வி என்றொரு நிறைவேறாத சோகம் ஒன்றிருந்தது. அது யார்? ஏன் அப்படி ஆனது என்ற விஷயமெல்லாம் எனக்கு நன்கு தெரியும். அந்தக் காதல் விபரீதங்களைக் கொண்டு வந்து சேர்த்து விடும் அளவுக்கு தாக்கமுடையது. பணக்காரன் ஏழை என்கிற வித்தியாசத்தைத் தாண்டியும் ஒரு சில காரணிகள் அந்தக் காதலுக்கு இருந்தது. காதல் என்பது எல்லைகளற்ற உணர்ச்சி. அதை அடக்கி ஆள்வது என்பது மனிதனால் முடியாத ஒன்று. இயலாமையால் விட்டு விட நேரிடலாம். ஆனால் அந்த நிறைவேறாத காதலினால் எண்ணற்ற அனர்த்தங்கள் பிற்காலத்தில் உருவாகி வாழ்க்கையை சிக்கலானதாக்கி விடும். அவன் தன் காதல் தோல்வியை சிகரெட் புகை போக்கி விடும் என்று நினைத்தான். அதைத்தான் அவை செய்தன. அம்மா தான் போனில் ”அவன் இறந்து விட்டான் புற்று நோய்” என்றார்கள். மனது வலித்தது.

அவனுக்குப் பிடித்த சிகரெட் என்னையும் பிடித்திருந்தது. ஒரு நாள் மாலை நேரத்தில் அதுவும் என்னிடமிருந்து விடைபெற்றது. தெரிந்தோ தெரியாமலோ ஒட்டிக்கொள்ளும் பழக்கத்தை அவ்வளவு எளிதில் மனது விட்டு விட ஏற்றுக் கொள்ளாது. அதன் பின் விளைவுகளை புத்தியில் உரைக்கும் படி உணரச் செய்தால் மனது எங்கோ ஓடி ஒளிந்து கொள்ளும். அந்த உரைக்கும்படி சொல்வது எப்படி என்பது தான் தந்திரம்.

நான் வேலை நிமித்தமாக வெளியூர் வந்து விட்டேன். அதன் பிறகு அவனுடனான தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு இருந்தது. ஊருக்குச் செல்லும் போதெல்லாம் அவன் வீட்டினைக் கடக்கும் போது அவனுடனான நினைவுகள் நெஞ்சில் அழுந்திக் கொள்ளும். காலம் அதற்கான மருந்தினை எனக்குத் தந்து இருக்கிறது. எதுவும் நிரந்தரம் இல்லையே. அந்த உண்மை உரைக்க ஆரம்பித்த பிறகு மனது இலேசாகி விட்டது.

தொடர்ந்து படியுங்கள். வாழ்த்துக்கள்.


Wednesday, February 15, 2017

புத்திசாலி சாமர்த்தியசாலி ஒரு நீதிக்கதை

புத்திசாலிகள் வெற்றிபெறுவதில்லை. சாமர்த்தியசாலிகளே வெற்றி பெறுகின்றார்கள். இரண்டு நபர்களை உதாரணமாகச் சொல்லலாம். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் புத்திசாலியானவர். நம் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் புத்திசாலி மட்டுமல்ல சாமர்த்தியசாலியும் கூட. அறிவு மட்டும் இருந்தால் பணியாளராக இருக்கலாம் . சாமர்த்தியமும் இருந்தால் முதலாளியாக இருக்க முடியும் என்பதற்கு இவர்களே சாட்சி.

சாமர்த்தியசாலிகளைப் பற்றிய ஒரு நீதிக்கதை உண்டு. அதை இப்போது படியுங்கள். 

ஒரு ஊரில் புத்திசாலி பணக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்குச் சொந்தமாகப் பெரிய ஆட்டு மந்தைக் கூட்டம் இருந்தது. நிலங்களும் பெரிய அளவில் இருந்தன.  அவன் ஆடுகளை வளர்ப்பது அழகு பார்ப்பதற்கு அல்ல, அவைகளின் தோலுக்காகவும், கறிக்காவும் தான் வளர்த்து வந்தான். அவன் பணக்காரனாக இருந்தாலும் மகா கருமி. அவன் நிலத்தைச் சுற்றிலும் வேலி போட அவனுக்கு விருப்பமில்லை. வேலி போட்டால் செலவு அதிகமாகும் என்ற நினைப்பு. 

அந்த ஆடுகளில் ஒரு சில புத்திசாலிகள் இருந்தன. அவைகள் இவன் தங்களைக் கொன்று பிழைக்கின்றான் என்றும் பேசிக் கொண்டன. அதனால் கூட பல ஆடுகள் அருகில் இருக்கும் காடுகளுக்குத் தப்பிச் சென்றும் விட்டன. அடிக்கடி ஆடுகள் வேலி தாண்டிச் சென்றும் விடும். இதன் காரணமாக அவனுக்கு அதிக இழப்புகள் ஏற்பட்டன.

இந்தப் புத்திசாலி பணக்காரன் செலவும் ஆகக்கூடாது, ஆடுகளும் தப்பித்துச் செல்லக்கூடாது, இதற்கொரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று நினைத்தான்.

ஒரு நாள் அனைத்து ஆடுகளையும் அழைத்து அவைகளிடையே பேச ஆரம்பித்தான்.

ஆடுகளுக்கு எப்போதும் இறப்பே வராது என்றும், அதன் தோல்களை நீக்கும் போது வலியே ஏற்படாது என்றும், அதனால் அவைகளின் உடல் நன்கு பாதுகாக்கப்பட்டு, மீண்டும் தோல் வளர்ந்து எப்போதும் சாவதே இல்லை என்றும் அவைகளுக்கு நம்பிக்கை ஊட்டி வசியப்படுத்தினான்.

ஆட்டு மந்தைக் கூட்டத்தின் மீது அவன் அளவற்ற அன்பு கொண்டுள்ளதாகவும், அவைகளின் நன்மைக்காக உலகில் இருக்கும் அத்தனை நலன்களையும் அவைகளுக்குச் செய்து வருவதாகவும், அந்த ஆடுகளின் நன்மையைத் தவிர வேறு எதையும் அவன் சிந்திப்பதே இல்லை என்றும், அவன் அவைகளுக்கு நல்ல எஜமானனாக இருப்பதாகவும் விவரித்துப் பேசினான்.

அவைகளுக்கு எந்தக் காலத்திலும் துன்பம் ஏற்படவே ஏற்படாது என்றும், அவைகளுக்குத் துன்பம் ஏற்படவே கூடாது என்பதற்காக அவன் தன் வாழ் நாளையே தியாகம் செய்து பணி செய்து வருவதாகவும் பேசினான். அப்படி அவைகளுக்குத் துன்பம் ஏற்பட்டு விட்டால் அது தான் உயிரோடு இருக்கும் வரையில் நடக்காது என்றும் வீராவேசமாகப் பேசினான்.

அதுமட்டுமல்ல அந்த ஆடுகளில் பல ஆடுகளே இல்லை என்றும் அவைகளும் நாளை நல்ல எஜமானனாகும் தகுதி உடையவை என்றும், பல ஆடுகள் சிங்கங்கள் என்றும், பல ஆடுகள்  புலிகள் என்றும், பல ஆடுகள் பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் என்றும், பல ஆடுகள் தியாகமே உருவான தொண்டர்கள் என்றும் ஆடுகளையே ஆடுகள் இல்லை என்ற தோற்றத்தினை உருவாக்கினான். அவன் பேசியதைக் கேட்ட ஆடுகள் தங்களை ஆடுகளே இல்லை என நம்ப ஆரம்பித்தன.

அவன் பேசப் பேச ஆடுகளுக்கு அவன் மிக நல்ல எஜமானன் என்று தோன்றின. அவைகள் அவனை நம்பின. அன்றிலிருந்து எந்த ஒரு ஆடும் வேலி தாண்டிப் போவதில்லை. அவன் நிலத்துக்குள்ளேயே வசித்து வர ஆரம்பித்தன. அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆடாக கொன்று தோலை உரித்து, கறியை விற்பனை செய்து சுகமாக வாழ்ந்து வந்தான்.

அந்த ஆடுகள் தாங்கள் கொல்லப்படுவதையோ, தாங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம் என்பதையோ அறிந்திருக்கவில்லை. தங்கள் எஜமானன் மீது அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டிருந்தன.

கதையைப் படித்து விட்டீர்களா?

இந்தக் கதையில் வரும் ஆடுகள் யார்? அந்த சாமர்த்தியசாலியும் புத்திசாலியுமான எஜமானன் யார் என்று உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். ஆகவே.... !!!




Friday, February 10, 2017

எப்பொழுதும் எந்த நொடியும் சந்தோஷமாக வாழ்வது எப்படி?

போன் வருகிறது. பிள்ளை கீழே விழுந்து விட்டான். அடிபட்டு விட்டது என்கிறது அது. மனசுக்குள் திடுமென்று பயம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. எண்ணங்கள் அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்று அலைபாய மனதுக்குள் பாரம் அடுத்து அடுத்து ஏற்றப்பட்டுக் கொண்டே முடிவில் பெரும் துன்பகரமனதாக வேதனையில் விழுந்து வெம்மி விடும். பையனை நேரில் பார்க்கும் வரை வேதனையில் மனது வெந்து சாகும். அவனை நேரில் பார்த்தால் சின்ன அடி தான் என்றவுடன் மனசு லேசாகி விடும். அவ்வளவு நேரம் துயரப்பட்ட மனசு பட்டென்று லேசாகி சந்தோஷமாகி விடும். காரணம் அறியாமல் உண்மை தெரியாமல் மனது தனக்குள்ளேயே தவறான முடிவு எடுத்து துயரப்பட ஆரம்பித்து விடும். 

மனம் எப்போதுமே உண்மையை உணர்ந்து கொள்ளாது. மனதுக்கு முதல் எஜமான் உணர்ச்சிகள் தான். உணர்ச்சியின் பிடியில் சிக்கிய மனம் முழு உடலையும் ஆட்டுவிக்கிறது. கோபம் கொள்ளச் செய்கிறது. அழச் செய்கிறது. உண்மையை மறைத்து விடுகிறது. இறந்தகாலத்துக்குச் சென்று எதிர்காலத்துக்குச் சென்று இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி துயரத்தில் ஆழ்த்தி விடுகிறது.

இறந்த காலமும் இல்லை
எதிர்காலமும் இல்லை
இந்த இரு இல்லாமைகளுக்கிடையில்தான் மனம்
இருக்கிறது
அதனால் தான் துன்ப துயரங்கள்

மனதால் வாழ்வது துயர வாழ்க்கை
வேதனை மிகுந்த நரகம்
மனமே நரகம் தான்

சட்டென இதை உணர்ந்தால்
புதிய வாசல் பிறக்கும்
அது நிகழ்வின் தீர்ப்பு
இயல்பின் திறப்பு இது.

இருக்கிற ஒரே காலம் நிகழ்காலம் மட்டுமே
இருப்பதே அதுதான்
அதில் நீ இரு, அப்போது நீ விடுதலையடைவாய்
அதில் வாழ்க, அதுவே பரவசம்!

நன்றி : ஓஷோ - ஒரு கோப்பை தேநீர் புத்தகத்திலிருந்து ஒரு கவிதை

நான் சொல்ல வந்தது இதுதான். எது நடந்தாலும் என்ன நடந்தாலும் நடந்ததை அழித்து விட்டு புதிதாக ஆரம்பிக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை. நடந்து விட்டது இனி என்ன செய்யலாம்? நடந்து விட்டதை நமக்கு சாதகமாக பிறருக்கு பாதகம் ஏற்படா வண்ணம் சரி செய்ய முடியுமா? என்று மட்டும் தான் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தனை செய்ய ஆரம்பித்து விட்டால் வாழ்க்கையின் போக்கு நிச்சயமாக மாறிப்போய் விடும். தட்டுத்தடுமாறி இப்பாதைக்கு மாறி விடுங்கள். எதையும் எளிதாக வெற்றி கொள்ளலாம்.

ஏதேனும் புரியவில்லை என்றால் மெயில் அனுப்பவும். விவரித்து எழுதுகிறேன்.

Friday, February 3, 2017

டமிலா டமிலா

தலைப்பைப் பாத்ததும் ஏதோ வெளி நாட்டுப் பொண்ணு பேருன்னாதானே நினைச்சீங்க? இது அந்தமாதிரிக் கதை இல்லை. இது வேற கதை. அந்த லூசு பிரண்டு திடீருன்னு வந்துட்டான்.  அதுவும் விடிகாலையிலேயே வந்து உக்காந்துக்கிட்டான். அவனொரு பக்கம் இருக்கட்டுமுன்னு நெனச்சுக்கிட்டு பல்லு விளக்க பல்பொடியை எடுத்தேன்.

”கையிலே என்ன வைத்திருக்கிறாய்?” எனக் கேட்டான்.

“சதுரகிரி ஹெர்பல்ஸ் பற்பொடி” என்றேன்.

“என்ன தீடீரென்று பற்பொடிக்கு மாறி விட்டாய்?”

“என்னமோ தெரியலை, இந்த ஸ்டூடண்டுக போராட்டத்திலருந்து வெளி நாட்டுக்காரன் பொருளை வாங்கறதுன்னா கஷ்டமா இருக்கு?”

“ஓ....அப்படியா?????” என்று கேட்டு சிரித்தான்.

“ஏண்டா சிரிக்கெரே” என்றேன் கோபமாக.

“ஏண்டா தங்கம்? அந்தப் போராட்டத்துல கலந்துகிட்டவங்க எத்தனை பேருடா வேஷ்டி கட்டியிருந்தாங்க? எத்தனை பொண்ணுங்க தாவணி போட்டிருந்தாங்கன்னு பாத்தீயா?” என்றான் நக்கலுடன்.

ஏதோ வில்லங்கமா பேசப்போறானோ என்று அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“தங்கம்! அந்த போராட்டக்காரங்கள்ள எத்தனை பேரு தமிழ்ல கையெழுத்து போடுறாங்கன்னு கேட்டுப்பாரேன்” என்றான்.

கையிலிருந்த ஹெர்பல் பொடியை கீழே வைத்தேன். 

அதைப் பார்த்ததும்  “டமிலா....! டமிலா....!” என்று உரக்கச் சொல்லி சிரிக்க ஆரம்பித்தவன் எழுந்து சென்று விட்டான்.

எனக்குத்தான் ஒரு மாதிரியாக இருந்தது. நினைவு தெரிந்த நாளில் இருந்து ஆங்கிலத்தில் தான் கையெழுத்துப் போடுகிறேன். 

சதுரகிரி ஹெர்பல்ஸ் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.

அவன் யார்? என்று உங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் அவன் யாரென்று உங்களுக்குப் புரிந்து  இருக்குமே?

Wednesday, February 1, 2017

சிவன்கோவில் புளியமரம்

அமைதியான விடிகாலைப் பொழுது. மயிலொன்றின் அகவல் சத்தம் கேட்டு விழித்தேன். மூச்சு சரியாக ஓடிக் கொண்டிருக்கிறதா என்று கவனித்து விட்டு எழுந்தேன். பிள்ளைகள் இருவரும் இன்னும் சிறிது நேரத்திற்குள் எழுந்து கொள்வார்கள். விடிகாலை பொழுதின் அமைதி அவர்களுக்கு நற்சிந்தனை, ஊக்கம், சிறந்த செயல்பாடு ஆகியவற்றினைத் தரும் என்பதற்காக சிறு வயதிலிருந்தே ஐந்து மணிக்கு எழுந்து கொள்ள பழக்கப்படுத்தினோம். விடுமுறையானாலும் விடிகாலை ஐந்து மணி தான். இன்னும் கொஞ்ச நாட்களில் நான்கரை மணிக்கு பழக்கப்படுத்தி விட வேண்டும். இரவு ஒன்பதரைக்கு தூங்கச் செல்லவும் பழக்கப்படுத்தி இருக்கிறேன். 

அமைதியான காலைப் பொழுதின் துவக்கத்திலே படிப்பதையும், அலுவலக வேலைகளையும் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து விடுவது வாடிக்கை. நாளொன்றுக்கு சிவில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினைப் படித்து விடுவது வாடிக்கை. அள்ள அள்ளக் குறையாத அற்புதமான சட்ட விளக்கங்கள், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என அசத்தும் தீர்ப்புகளைப் படிக்கவில்லை என்றால் எனக்கு நாளே ஆகாது. அதை முடித்து விட்டால் ஏகப்பட்ட கடமைகள் வரிசை கட்டி நிற்கும். ஒவ்வொன்றாய் முடித்து வர இந்த விடிகாலை ஒழுங்கமைவுச் செயல்கள் அன்றைய தொடர் பணிகளை எந்த இடையூறும் இன்றி செவ்வனே செய்து வர உதவிடும்.

நிசப்தம் மணிகண்டனின் வலைப்பூவை தினமும் படித்து விடுவதுண்டு. தன் வேலையையும் செய்து கொண்டு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை செம்மைப்படுத்தி உதவி வரும் மனப்பாங்குடன் இப்படியான ஆட்கள் பூமியில் அவதரிப்பது அரிதிலும் அரிது. மணிகண்டனை நினைக்கையில் மனது இளகி விடும். அந்த வகையில் தினமும் அவரின் பிளாக்கை படித்து விடுவது வாடிக்கையாகிப் போனது.

இன்றைக்கு அவரின் ஆளுமைன்னா என்னன்னு தெரியுமா? என்ற பதிவினைப் படித்து விட்டு கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். மனம் சலனமற்று இருந்தது. சிந்துவின் மனதை என்னால் உணர முடிந்தது. ஆணாக நான் என் உடலால் பட்ட துயரங்களை விட பெண்ணான அந்தப் பெண் பெரும் துயரங்களை அனுபவித்திருப்பார். வார்த்தைகளால் விவரித்து விட முடியாத வலிகள் அவை. என்னாலும் விவரித்து விட முடியாது. வலிகள் தரும் வேதனையை விட விவரிப்பது என்பது மிக அதிக வலியைத் தரும். இந்த உலகில் வலியும், வேதனையும், துன்பமும் இல்லாதவர்கள் தான் ஏது? ஒவ்வொருவரின் வலி அவரவருக்கு மட்டுமே சொந்தம். ஆறுதலான வார்த்தைகள் வேண்டுமெனில் சிறிது வலியைக் குறைப்பது போலத் தெரியலாம். ஆனால் உண்மையில் அது குறைவதே இல்லை. அவரவர் வலியை அவரவர் அனுபவித்துதான் ஆக வேண்டும். பிள்ளைகளானாலும் சரி, மனைவியானாலும் சரி. நம் வலியை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியுமா? முடியாது.

சிந்துவின் “எல்லோருக்கும்தான் துக்கம் இருக்கு...எனக்கு இருக்கிற துக்கம்தான் பெரிய துக்கம்ன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்...உங்க துக்கம்தான் பெருசுன்னு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க..இல்லையா?” இந்த வார்த்தைகள் உண்மைதான். துக்கம் என்பது சாதிப்பதற்கான ஊன்றுகோல். வாழ்க்கையைக் கடந்து செல்வதற்கான பாதை. வாழ்வின் நிதர்சனத்தை சுட்டிக்காட்டும் சுட்டி. வாழ்வின் நிலையாமையை வெளிப்படுத்தும் வெளிச்சம். துக்கமும் துயரமும் துன்பமும் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை.

ஒவ்வொருவருக்கும் துக்கமும், தாழ்வு மனப்பான்மையும் இருந்து கொண்டே தான் இருக்கும். சமூகச் சூழல், பொருளாதாரச் சூழல் ஆகியவற்றை முன்னிருத்தி ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு நொடியில் துக்கமும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் அவர்கள் வாழ்ந்து முடியும் வரை. இல்லையென்று எவராலும் மறுக்க முடியாது.

எப்போதுமே ஊனமுற்றவனாக இருக்கிறேன் என்ற சிந்தனை வந்ததே இல்லை. என்னிடம் ஒரு சிலர் ”எப்படி சார் சமாளிக்கின்றீர்கள்?” என்பார்கள். ”உங்களால் ஓட முடியும், நடக்க முடியும் என்னால் அது இரண்டும் முடியாது அவ்வளவு தான் விஷயம்” என்றுச் சொல்லி முடித்து விடுவேன்.

சிந்துவின் அச்சீவபிள் டார்க்கெட்டை அவர் அடைந்து விட்டார் என்றால் அவரை வளர்த்த அந்த முகம் தெரியாத பெரியவர்களை விட நான் தான் அதிக சந்தோஷம் அடைவேன். அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும். 

தடம் மாறிச் சென்று கொண்டிருக்கிறது. இதோ இணைப்புத்தடம் வந்து விட்டது.

ஐந்தாம் வகுப்பு வரை ஆவணம் அரசினர் துவக்கப்பள்ளியில் தான் படித்தேன். மாமா அப்பள்ளியில் பணி செய்து கொண்டிருந்தார். தரையில் போடப்பட்டிருக்கும் குட்டைப்பலகையில் அமர்ந்து தான் கல்வி. அனவயல் கணேசன் வாத்தியார் தான் பிரபலம், கணக்கு வாத்தியார். வாய்ப்பாட்டு சொல்லவில்லை என்றால் பின்புறம் பழுத்து விடும், உள்ளங்கைகள் இரண்டும் சிவந்து விடும். வாசகம் என்றொரு தோழன் இருந்தான். கணேசன் வாத்தியார் மூன்றாம் வாய்ப்பாடு சொல் என்றால் நன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தவனுக்கு வரிசை தப்பி விடும். கால்சட்டையிலேயே ஒன்றுக்குப் போய் விடுவான். கைகாட்டியிலிருந்து வரும் விச்சாணி எனும் சிவசுப்ரமணியனுக்கு கால்களும், கைகளும் உதறெலெடுக்க ஆரம்பித்து விடும். ஒரு சில நாட்களில் உப்பு நீர் அபிஷேகத்தையும் நடத்தி விடுவான். விச்சாணி செய்திருக்கும் ஒரு செயல் ஆஹா ரகம். மனிதன் என்றால் மனிதன் அவன் தான். ஏலக்கடை மற்றும் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டும் விவசாயமும் செய்து வருகின்றான்.

துவக்கப்பள்ளிக்கு வடபுறம் சேரிக்குச் செல்லும் தார்ச்சாலை. சாலையின் வடபுறம் குடை போல பரந்து விரிந்து கிடந்த புளியமரம் ஒன்று இருந்தது. மரத்தின் நேர் மேற்கே சற்று வடபுறமாக சிதிலமடைந்து கிடந்த சிவன் கோவில் ஒன்றும் இருந்தது. அந்தச் சிவன் கோவிலில் இருக்கும் ஆவுடையார் சிலையை என் தாத்தா மாணிக்கதேவர் தான் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு தஞ்சாவூர் பக்கம் சென்று வண்டியில் கொண்டு வந்து சேர்த்தாராம். கம்பி போட்ட கதவுக்குப் பின்னால் பெரிய உருவத்துடன் கருகருவென இருப்பார் சிவனார்.  விழா நாட்களில் மாலையும் சந்தனமுமாகச் ஜொலிப்பார். பிற நாட்களில் தனி வாசம் தான். 



இந்தப் புளியமரத்தின் அடியில் தான் விவசாய வேலைகள் பலவும் நடக்கும். கதிர் அடிப்பது, நெற்மணிகளைத் தூசி இன்றி காற்றிலாட்டி சுத்தம் செய்வது, நெற்மணிகளைக் காய வைப்பது. கதிர் அடித்து போர் போட்டு வைத்து பின்னர் போர் அடித்து நெற்மணிகளைச் சேர்ப்பது, அவித்த நெற்மணிகளைக் கொண்டு வந்து காய வைப்பது, எள் அடிப்பது, தூசி தட்டி சுத்தம் செய்வது போன்ற அனைத்து வேலைகளும் இந்த மரத்தின் அடியில் தான் செய்வார்கள். நல்ல இனிப்பு புளியங்காய்கள் கிடைக்கும். பழங்களும் இனிக்கும். 

பள்ளியில் இடைவேளை விட்டால் போதும். மாணவர்கள் அனைவரும் அந்த மரத்தடிக்கு விளையாடச் செல்வதுண்டு. சிலர் மரமேறி உயரத்தில் உட்கார்ந்திருப்பார்கள். ஒரு சிலர் பளிங்கு வைத்து லாக் விளையாடுவர்கள். பெண்கள் நொண்டியாட்டம் விளையாடுவார்கள். கபடி விளையாடுவார்கள். ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். சிலர் அதன் பெருத்த வேர்களுக்கிடையில் துண்டு விரித்து தூங்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் தாயம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒரு சில கிராமத்துப் பெண்கள் தரையில் பல்லாங்குழி பறித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். சில மாணவர்கள் கிட்டி விளையாடுவார்கள். பள்ளியில் மணி அடித்ததும் கூடுகளுக்குள் சென்று சேரும் பறவைகள் போல வகுப்புகளுக்குள் சென்று சேர்ந்து விடுவார்கள். அடியேனும் நாள் தவறாது நண்பர்களுடன் விளையாடச் செல்வதுண்டு.

புளியமரத்தின் நேர் வடக்கில் தூண்டிக்காரன் கோவில் உள்ளது. ஆள் உயரத்தில் குதிரையில் கையில் வாளுடன் முறுக்கிய மீசையுடன் தூண்டிக்காரன் உட்கார்ந்திருப்பார். கோவிலை ஒட்டி புதுக்குளம் இருக்கிறது. தூண்டிக்காரன் கோவிலின் நேர் மேற்கே பின்புறமாக பிடாரி அம்மன் கோவில் இருக்கிறது. இங்கு தான் ஊர் திருவிழாவின் போது முளைப்பாரி கொட்டி, பிடாரி அம்மனுக்கு ஆடு வெட்டி பலி கொடுத்து விழா எடுப்பார்கள். 

ஆவணம் கிராமத்து மக்களைத் தாயைப் போல அரவணைத்து ஆதரவளித்தது அந்தப் புளியமரம். சாதாரண மரமில்லை அது. பத்து ஆட்கள் சேர்ந்து கட்டிப் பிடிக்கும் அளவு பெரியது. பெரிய பெரிய கிளைகள் விரிந்து கிடந்தன. அந்தப் புளியமரம் இப்போது அங்கு இல்லை. அது எப்போது வளர ஆரம்பித்தது என்ற வரலாற்றினைச் சொல்ல எவரும் இல்லை. அந்த மரம் பூமியிலிருந்து வெளிவந்து எண்ணற்றோருக்கு உதவிகளைச் செய்தது. காலம் மாற மாற அம்மரமும் காணாமல் போனது.

நேற்று விடிகாலையில் சிவன் கோவிலும், புளியமரமும் நினைவிலாடின. எழுதுவது போல கனாக்கண்டேன். எனக்கு விளையாட இடம் கொடுத்தது அந்தப் புளியமரம். அதன் நிழலில் நான் சந்தோஷமாக விளையாடினேன். அதன் நிழலில் மறைந்து போன சிவபக்தர் வேலாயுதனார் திருச்சிற்றம்பலம் சிவபெருமானைப் பற்றி வீச்செழுத்தில் எழுதிய ஆசிரியப்பா பாடல்களை அச்சுக் கோர்ப்பதற்காக, எனது அழகான கையெழுத்தில் எழுதிக் கொடுக்க இடமளித்தது அந்தப் புளியமரம். அவ்வப்போது பச்சைப்புளியங்காய்களை தின்னக் கொடுத்தது அது. அந்தப் பள்ளிக் கூடத்தில் படித்து முடித்து இன்றைக்கு சுமார் 30 வருடங்கள் கடந்து விட்டன. அந்த மரம் செய்த உதவியை நான் மறந்து விட்டேன். அதுவாகவே எனக்குள் இருந்து கொண்டு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விட்டது இன்றைக்கு. அந்தப் புளியமரத்தினை ஊர்க்காரர்கள் மறந்து இருக்கலாம். ஆனால் நான் மறக்கவில்லை. அது என்னை மறக்கவும் விடவில்லை. 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு 

(குறள் 110 - அதிகாரம்: செய்நன்றி அறிதல்)

மேலே கண்ட குறள் உங்களுக்குப் புரியும் தானே? 


Thursday, January 26, 2017

மனித வாழ்க்கையும் சூட்சும மஹாபாரதமும்

ஒரு வழியாக இந்த வருட ஆரம்பத்தில் மாணவர்களினால் பலரின் வாய்க்கு மெல்ல அவல் கிடைத்து விட்டது. மக்களிடையே வரவேற்பு பெற்ற இளம் மாணவர்கள் புதிய அரசியல் கட்சியை உருவாக்கலாம். மாவட்டம் வாரியாக நல்ல செயல் தலைவர்களை உருவாக்கலாம். கட்சியை நிர்வகிக்க கண்காணிக்க அதிகாரம் பெற்ற அமைப்பினை உருவாக்கலாம். அந்த அமைப்புக்கு தகுந்த நேரிய சீரிய செயல் திறமையும் புத்திசாலித்தனமும் மிக்க முதிய இளைஞர்களை நியமிக்கலாம். இது நல்ல தருணம். தமிழகத்தின் மாற்றுக் கட்சிக்கு ஏற்ற தருணம். இந்த தருணத்தை விட்டு விடாது தமிழர்களின் எதிர்காலத்திற்காக புதிய கட்சியினை உருவாக்கினால் வெறுத்துப் போய் இருக்கும் தமிழர்கள் தானாகவே புதிய கட்சியை அங்கீகரித்து விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் பழம் தின்று கொட்டை போட்ட சகுனிகளும், சாணக்கியன்களும் இருக்கின்றார்கள். இந்த இருவரை விட மீடியா என்றொரு அரக்கனும் உண்டு. அதை விட ஜாதி என்ற அணுகுண்டும் இருக்கிறது. இவற்றை எல்லாம் விட சுய நலம் என்றொரு தீயசக்தியும் உண்டு. 

இவைகளைச் சரி செய்திட அல்லது சந்தித்திட நல்ல திட்டங்களும், நல்லவர்களும் இருந்தால் கட்சியை உருப்படியாக தயார் செய்து விடலாம். மாணவர்கள் செய்வார்களா என்று பார்ப்போம். அந்த ஒரு மலர்ச்சி தமிழகத்தில் மலருமா? ச.சாக்கள் விடுவார்களா? என்று தெரியவில்லை. திமுகவும், அதிமுகவும் மாறி மாறி மாணவர்களின் போராட்டத்தை மெச்சிக் கொண்டிருக்கின்றன. இதுதான் சரியான சமயம். அவசரப்படாமல் அட்சர சுத்தமான தெளிவான செயல்முறைகளுடன், கொள்கைகளுடன் ”இளைய தமிழர் கழகம்” உருவாகட்டும். அது நாளைய தமிழகத்தை உண்மையான தமிழர்களைக் கொண்டு மக்கள் சேவையைச் செய்யட்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் ஆசை. நிறைவேறுமா என்பது காலத்தின் கைகளில் உள்ளது.

அரசியலில் நொடிக்கு நொடி மாற்றங்கள் உண்டு. இப்போதைய முதல்வரும் அப்படியான முறையில் ஆட்சிக்கு வந்தவர் தான். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது அரசியலில் பாலபாடம். அவலை விட்டு விட்டு எதார்த்தத்துக்கு வந்து விடலாம்.

”வாழ்க்கை சிக்கலாக இருக்கிறதே? மனிதர்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்ன செய்வதென்றும் புரிபடவில்லை” என்று சுப்ரமணியக்கவுண்டர் வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரிடம் ஒரு சிறிய விளக்கத்தைக் கொடுத்தேன். அது உங்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன். 

”மஹாபாரதத்தில் நல்லவர்கள் ஐந்து பேர் தீயவர்கள் நூற்றி ஒருவர். நல்லவர்களுக்கு உதவி செய்ய மனித வடிவில் கிருஷ்ணன். தீயவர்களுக்கு உதவிட சகுனி. சகுனியின் சிந்தனை எப்போதும் கிருஷ்ணனின் மீது. கிருஷ்ணனின் சிந்தனை எப்போதும் சகுனியின் மீது. யார் என்ன செய்வார்கள் அதை எப்படி எதிர்கொள்வது என்பது தான் இருவரின் நோக்கமாக இருந்தது. கிருஷ்ணன் நல்லவர்களை தீயவர்களிடமிருந்து காக்க போராடினான். சகுனியோ நல்லவர்களை ஒழித்திட மட்டுமே சிந்தித்தான். 

இந்த உலகம் இயங்குவதே தீயவர்களால் தான். உலகெங்கிலும் நல்லவர்களே இருந்தால் அரசியல் இருக்காது. அரசாங்கம் இருக்காது. ராணுவம் இருக்காது. எல்லைகள் இருக்காது. இத்தனையும் இருப்பது தீயவர்களால் தான். 

பூமி ஒன்றே ஒன்றுதான். ஒருபுறம் இருளும் ஒரு புறம் வெளிச்சமும் இருப்பது இயற்கை. அது போலத்தான் நல்லவர்களும் தீயவர்களும் இந்தப் பூமியில் இருப்பது. வாழ்க்கையின் மூலாதாரமே இந்தப் போராட்டம் தான். இந்தப் பிரிவினர் இல்லையென்றால் உலகம் தன் இயக்கத்தை நிறுத்தி விடும்” என்றேன்.

”ஆமாங்க, ஆமாங்க, சரியாச் சொன்னீங்க!” என்று ஆமோதித்தார்.

“சரி கவுண்டரே! இப்போது மனிதர்களை மஹாபாரதத்தை வைத்து எப்படி புரிந்து கொள்வது எனச் சொல்லித்தருகிறேன்” என்றேன்.

“சொல்லுங்கள், சொல்லுங்கள்” என்று பரபரத்தார்.

”ஒரு கல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் கல் நீங்கள். அந்தக் கல்லைச் சுற்றிலும் உங்களுக்கு உறவினர்களாக இருப்பவர்களை ஒவ்வொரு கல்லாக வைத்துக் கொண்டே வாருங்கள். எல்லா உறவினர்களையும் கல் வடிவில் வைத்து விட்டீர்களா? இப்போது ஒவ்வொரு உறவினர்களின் இயல்புகளை உங்களுக்குத் தெரிந்த வகையில் ஆராயுங்கள். அவர்களை மஹாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களுடன் ஒப்பிடுங்கள். வெகுசரியான ஒப்பீடும் உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் புரிந்துகொள்ளவும் இயலும். எந்தக் கல் உங்கள் அருகில் இருக்கவேண்டும். எந்தக் கல் உங்களை விட்டு விலகி இருக்க வேண்டும். நீங்கள் எந்தக் கல்லிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது புரிந்து விடும். உங்கள் வாழ்க்கையில் யார் உங்களுக்குச் சகுனி என்பதும் தெரிந்து விடும்” என்றேன்.

“மஹாபாரதம் கதை அல்ல. அது சொல்வது வாழ்க்கையின் சூட்சும ரகசியங்களை. குரான் சொல்வதும் அதேதான். பைபிள் சொல்வது அதே தான். ஆனால் இவ்வுலகில் அலங்காரங்களும், புனைவுகளும் தான் புரிந்து கொள்ளப்படுகின்றன. சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள மறந்து விடுகின்றார்கள். நம் ஆன்மீக பேச்சாளர்கள் இருகின்றார்களே அவர்கள் தானிந்த இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள விடாமல் கதைகளைச் சொல்லிச் சொல்லி மனிதனை மயக்கத்திலேயே வைத்திருக்கின்றார்கள். அவர்கள் பாக்கெட்டுக்கு பணம் போக வேண்டும். பேசியே கெடுக்கும் கூட்டத்திலிருந்து வெளிவந்து விடுங்கள். இல்லையென்றால் மூளையைக் கழுவி உங்களிடமிருந்து உருவி விடுவார்கள்.

பாலத்தின் மீது வீடு கட்டாதே என்றொரு பதிவினை எழுதி இருந்தேன். அதைப் படித்தீர்கள் என்றால் பைபிள் சொல்லும் சூட்சுமம் புரியும். தமிழர்களைப் பொறுத்த வரை மஹாபாரதத்தை வைத்து தங்கள் வாழ்க்கையின் போராட்டம் எதை நோக்கி பயணிக்கிறது, யார் யாரெல்லாம் நமக்கு தீய செயல்களைச் செய்பவர்கள் என்பவைகளை எளிதில் கண்டு கொள்ளலாம். அவர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ளலாம்”

”குறைவான நல்லவர்கள் அதிகமான தீயவர்கள். தீயவர்களின் நோக்கம் நல்லவர்களை அழிப்பது. நல்லவர்களின் நோக்கம் தீயவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வது. இதுதான் வாழ்க்கைப் போராட்டம். இந்தப் போராட்டம் ஒவ்வொரு மனிதனின் சூழலுக்கு ஏற்ப அமைந்திருக்கும் தீய எண்ணங்களைக் கொண்டவர்களை எதிர்கொள்வதுதான்”

என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். 

”கவுண்டரே! ஜோதிடத்தில் ஒரு கணக்கு உண்டு. எந்த ராசிக்காரருக்கு நட்பு ராசி யார்? பகை ராசிகள் யார்? சமமான ராசிகள் யார் எனச் சொல்வார்கள். அதை ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் விஷயம் உங்களுக்குப் புரியும்” என்றேன்.

“அப்படிங்களா?” என்று கேட்டவர் தன் ராசியையும் தன் குடும்பத்தினர் ராசியையும் சொல்ல ஆச்சரியம் அவர் குடும்ப உறுப்பினர்களின் ராசியும் அவரின் ராசியும் ஒன்றுக்கு ஒன்று ராசியானவை. அசந்து போய் விட்டார்.

எந்தக் குடும்பத்தில் பிரச்சினை இருக்கிறதோ சரியான ஜாதகத்தின் படி உள்ள ராசியை ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் விவரம் புரியும். எனக்கும் என் மகனுக்கு ராசிக்கு பகையாக அல்லவா இருக்கிறது என்ன செய்யப்போகின்றேன் என்று குழம்பி விடாதீர்கள். ஒதுக்கி வைத்து விடாதீர்கள். அது உங்களின் விதி. இதனைச் சரிசெய்ய ஒரு சூட்சுமம் இருக்கிறது. அதைச் செயல்படுத்தினால் குடும்ப உறவுகள் பலமடையும். அப்பனுக்கும் பிள்ளைக்கும் பிரச்சினை. அண்ணனுக்கும் தங்கைக்கும் சண்டை என்போர்கள் தங்கள் ராசியை ஆராய்ந்து பாருங்கள். இந்தக் கணக்கு ஒத்துப் போய் விடும்.

தங்கம், ஏதோ ஜோசியக்காரரை நம்பிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். எனக்கு நண்பனாக இருந்த ஒரு ஜோசியக்காரன் என்னை வைத்து அவன் காரியத்தைச் சாதித்துக் கொண்டான். இந்தக் காரியத்துக்காகத்தான் அவன் கல்யாணமே செய்தான். ஆகவே ஜோசியக்காரர்களை நம்புவதையும், எல்லாவற்றையும் அவர்களிடம் ஒப்புவிப்பதையும் முதலில் நிறுத்தி விடுஞ்கள்.

ஒரு ஜாதகத்தை ஆராய பலன் சொல்ல கிட்டத்தட்ட நான்கு நாட்கள் ஆகும். பலன் சொல்பவர்களுக்குப் பிரச்சினை வரும். அதையும் சரி செய்து கொள்ளும் முறை தெரிந்தவர்களால் கணிக்கப்படும் ஜாதகம் தான் சரியானது. நொடியில் பலன் சொல்லும் ஜாதகம் பிசினஸ். எதுவும் நடக்காது. வாக்கில் சுத்தமில்லாதவர்கள் சொல்வது ஜாதகம் கணிப்பது அல்ல என்பது எனது அனுபவம். இது சரியா? இல்லையா? என்பதெல்லாம் ஒவ்வொருவரின் அனுபவத்தில் உள்ளது.

இதோ கீழே  நட்புராசிகள் பகை ராசிகளின் லிஸ்டை பீமராஜையர் தனது பிளாக்கில் எழுதி இருந்தார். அந்த விபரமும் அவரது பிளாக்கின் இணைப்பும் உள்ளது. இது ஒரு கணக்கு. இதையே பிடித்துக்கொண்டு தொங்க வேண்டாம். சரகலையைப் பயின்றவர்களுக்கு கிரகங்கள் வேலையே செய்யவிடாமல் தடுக்கும் ஆற்றல் உண்டு. ஆகவே கணக்கினை ஆராயுங்கள். சரியாக இருக்கிறதா? என்று புரிந்து கொள்ள முயலுங்கள்.

1.மேஷ ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
சிம்மம், தனுசு, மேஷம், மிதுனம், கும்பம்.
பகை ராசிகள்: கன்னி, மகரம், கடகம்.
2.ரிஷப ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
கன்னி, மகரம், மீனம், ரிஷபம், கடகம்.
பகை ராசிகள்: சிம்மம், தனுசு, கும்பம்.
3.மிதுன ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
துலாம், கும்பம், மேஷம். சிம்மம், மிதுனம்.
பகை ராசிகள்: விருச்சிகம், மகரம், மீனம்.
4.கடக ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம், கன்னி.
பகை ராசிகள்: துலாம், தனுசு, கும்பம், மேஷம்.
5.சிம்ம ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
தனுசு, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம்.
பகை ராசிகள்: மகரம், ரிஷபம், மீனம், விருச்சிகம்.
6.கன்னி ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
மகரம், ரிஷபம், கன்னி, கடகம், விருச்சிகம்.
பகை ராசிகள்: மேஷம், தனுசு, கும்பம்.
7.துலாம் ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
கும்பம், மிதுனம், துலாம், சிம்மம், தனுசு.
பகை ராசிகள்: மீனம், மகரம், கடகம்.
8.விருச்சிக ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
மீனம், கடகம்,கன்னி, மகரம், விருச்சிகம்.
பகை ராசிகள்: கும்பம், மிதுனம், சிம்மம்.
9.தனுசு ராசிக்காரர்களுக்கு. நட்பு ராசிகள்:
மேஷம், சிம்மம், தனுசு, கும்பம், துலாம்.
பகை ராசிகள்: ரிஷபம், கன்னி, கடகம், மீனம்.
10.மகர ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
ரிஷபம், கன்னி, மகரம், மீனம், விருச்சிகம்.
பகை ராசிகள்: மேஷம், சிம்மம், மிதுனம், துலாம்.
11.கும்ப ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
மிதுனம், துலாம், தனுசு, மேஷம், கும்பம்.
பகை ராசிகள்: கடகம், விருச்சிகம், கன்னி, ரிஷபம்.
12.மீன ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
கடகம், விருச்சிகம், மீனம், ரிஷபம், மகரம்.
பகை ராசிகள்: மிதுனம், துலாம், சிம்மம், தனுசு.
நட்பு பகை ராசிகளைத்தவிர மற்ற ராசிகள் சம ராசிகள் என்று அறியவும்.
நன்றி :பீமராஜய்யர்

குறிப்பு: இந்த உலகத்தின் மிகப்பெரிய வியாபாரப் பொருள் என்னதெரியுமா? தெரிந்தால் எனக்கு மெயில் அனுப்பவும். தெரியவில்லை என்றால் பொறுத்திருங்கள். விவரமாக எழுதுகிறேன்.

Tuesday, January 24, 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் வெளிவந்த சுயநலமிகள்

23.01.2017 அன்று தமிழ்நாட்டு உண்மையான தமிழர்கள் ஒவ்வொருவரின் நினைவிலும் மாணவர்களும், இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்டு விடுவனரோ என்ற பதைபதைப்பும், மனவருத்தமும், சுய பச்சாதாபமும் ஏற்பட்டு இரத்தக் கொதிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. அடிக்கடி டிவி பார்ப்பதும், வாட்ஸ் சப்பில் மெசேஜ்களைப் படிப்பதும், சென்னைக்கு போன் செய்வதுமாக  இருந்தனர். மாலை வரை மனப்போராட்டம் நீடித்துக் கொண்டே இருந்தது.

நான் முன்பே நடிகர்களால் ஜல்லிக்கட்டு போராட்டம் பாதிப்படையுமா? என்று. எழுதி இருந்தேன். அதைத்தான் செய்திருக்கின்றார்கள். 22ம் தேதி ஆதி பேசியதிலிருந்து ஆட்டம் ஆரம்பித்து விட்டது என்று தெரிந்து கொள்ள முடிந்தது. 23.01.2017 அன்று இரவு ’நேர்பட பேசு’ நிகழ்ச்சியில் பேசிய ஒரு இளைஞர் அவர்கள் எவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என்று விவரித்தார். 

23.01.2017 நேர்படப்பேசு நிகழ்ச்சி பாகம் 1



23.01.2017 நேர்படப்பேசு நிகழ்ச்சி பாகம் 2

களத்தில் இருந்தவர்களை இந்த சினிமாகாரர்கள் உள்ளே நுழைந்து பேசக்கூட விடாமல் தடுத்த நிகழ்வையும் இவர்கள் தான் இந்தக் கலவரத்துக்கு காரணமாக இருந்தனர் என்றும் விவரித்தார். தெரிந்து செய்கின்றார்கள் தெரியாமல் செய்கின்றார்கள் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. எந்தக் காலத்திலும் சினிமாக்காரர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்ததே இல்லை என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். 

இது சினிமா இல்லை. வாழ்க்கை. நிதர்சனம். எதார்த்த உலகின் போராட்டக்களத்துக்குள் ஆயிரமாயிரம் இளம் குருதிகளின் நாளங்களில் புரண்டோடும் உணர்ச்சி அலைகளை சரியாக வழி நடத்திடாவிடில் இப்படித்தான் கண்டவர்கள் எல்லாம் நுழைந்து சீரழித்து விடுவார்கள். மதியம் போல பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த லாரன்ஸ் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் பாதியில் காணாமல் போனார். ஆதி மீடியாவில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசியதைப் பார்த்த அனைவருக்கும் தெரியும் அவர் எப்பேர்பட்ட ஆள் என்று. 

ஒவ்வொரு மீடியாவும் தவறான புரிதல் வரும்படியான செய்திகளைத்தான் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த மீடியாவுக்கும் பொறுப்பு இருந்ததாகத் தெரியவில்லை. பரபரப்பாக்கிக் கொண்டே இருந்தனர். அவர்களுக்கு அதுதான் தேவை. போராட்டக்களம் சந்தோஷமாகச் சென்று விட்டால் மீடியாக்காரர்களுக்கு என்ன வேலை? அவர்கள் எதிர்பார்த்தது நடந்தது. அதை வைத்து இன்னும் கொஞ்சம் காலம் பரபரப்பாகவும், விவாதக்களங்களையும் முன்னெடுப்பார்கள். 

களத்தில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் ஒவ்வொருவரின் தந்தைகள், தாய்கள், உறவினர்கள் என்று அனைவரும் போராட வந்த நிகழ்வு சாதாரணமாக நடந்த நிகழ்வு அல்ல. எதேச்சதிகாரத்துக்கும், அதிகார மையங்களுக்கும், ஊழல் அரசு அதிகாரிகளுக்கும் விடப்பட்ட எச்சரிக்கை. போதும் உங்கள் ஆட்டம் இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கட்டியம் கூறிய போராட்டம். இதன் காரணமாக பலரின் தூக்கம் போயிருக்கும். இந்தப் போராட்டத்தின் முடிவினை இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கின்றார்கள்.

காவல்துறையினர் கூட்டமாக இருந்தவர்களை இழுத்த போது அவர்கள் ஜனகனமன என தேசிய கீதம் பாடினார்கள். சிலர் வந்தேமாதரம் வந்தே மாதரம் என்று முழங்கினார்கள். பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரின் நெஞ்சமும் துடித்தன. காவல்துறை செய்த செயல் நெஞ்சத்தைப் பதற வைப்பது போல இருந்தது. காவல்துறையினரில் அம்மா, அப்பாக்களும் இருக்கின்றனர். தன் பையன் அழுதாலே துடிக்கும் மனசு அவர்களுக்கும் உண்டு. ஆனால் அவர்களால் ஒன்றும் செய்திருக்கமுடியாது. அவர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆளும் அதிகாரத்திற்கு அவர்கள் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் மனிதாபிமானத்தோடு இருக்கவே முடியாது. நேர்படப்பேசு நிகழ்ச்சியில் பேசிய முன்னால் காவல்துறை அதிகாரி கருணா நிதி அவர்கள் ’மேலிடத்தின் உத்தரவுப்படிதான் காவல்துறை நடந்து கொள்ளும்’ என்று நிகழ்ச்சியின் முடிவில் போட்டுடைத்தார். 


(மேலே இருக்கும் பட்டியலில் வீடுகளில் வளர்க்கப்பட்ட காளைகளைச் சேர்த்திருக்கவே கூடாது. காடுகளில் இருக்கும் விலங்குகளும் வீட்டில் வளர்க்கப்படும் காளைகளும் ஒன்றா? பட்டியலில் சேர்த்திருக்கின்றார் காங்கிரஸ் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். ஏன்???)

11.07.2011ம் தேதியன்று மத்திய அமைச்சகமான சுற்றுச்சூழல் துறை ஒரு நோட்டிபிகேசனை வெளியிட்டுள்ளது. அதில் காட்சிப்படுத்தப்படக்கூடாத விலங்குகள் பட்டியலில் காடுகளில் வசிக்கும் சிங்கம், புலி, கரடி, கருஞ்சிறுத்தை, குரங்குகள் பட்டியலோடு காளைகளையும் சேர்த்திருக்கின்றார்கள். இந்தியாவெங்கும் இருக்கும் உழவர்கள் வீடுகளில் ஒவ்வொருவரின் வாழ்வாதாரமாக இருக்கும் காளைகளை ஏன் அந்த லிஸ்டில் சேர்த்தார்கள். திடீரென காளைகளைச் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? 

2009-2011 வரை ஜெய்ராம் ரமேஷ், 2011 - 2013 வரை தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன், 2013-2014 வரை வீரப்ப மொய்லி ஆகிய காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களாக இருந்தனர். ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் அமைச்சராக இருந்த போதுதான் காளைகள் அந்த லிஸ்டில் சேர்க்கபட்டது. ஏன் சேர்த்தார் என்பதற்கு காரணத்தை எவரும் கேட்கவில்லை. உச்ச நீதிமன்றம் இந்தக் கேள்வியைக் கேட்டதா என்றும் தெரியவில்லை. அந்த அமைச்சரவையில் திமுகவைச் சேர்ந்த முக. அழகிரி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். ஜி.கே வாசன் மற்றும் காரைக்குடி ப.சிதம்பரம் ஆகியோரும் அமைச்சரவையில் இருந்தனர். அவர்களுக்கு தெரிந்திருக்காதா இந்த பட்டியல் விவரம். அவர்கள் ஏதும் செய்யவில்லை. ஏன் செய்யவில்லை என்பதற்கு காரணத்தை அவர்கள் தான் நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். அன்று அமைதியாக இருந்து விட்டு இன்று கருத்துச் சொல்கின்றார்கள். போராட்டம் செய்கின்றார்கள். சுப்ரீம் கோர்ட்டில் இந்த ஒரு பாயிண்டை வைத்து பீட்டா ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்குகிறது. சுப்ரீம் கோர்ட் சட்டத்தின் படி தான் தீர்ப்பு வழங்கும் என்று எல்லோரும் சொல்கின்றார்கள். நம்புகின்றார்கள். அதைத்தான் சுப்ரீம் கோர்ட்டும் சொல்லியது.

அரசியல் என்பது இதுதான். பிரச்சினை சரி செய்யப்படவே கூடாது. சரி செய்வது போல காட்டணும் ஆனாலும் சரி செய்யக்கூடாது. இப்படி ஒவ்வொரு மக்கள் பிரச்சினையையும் சரி செய்து விட்டால் அரசியல் செய்ய முடியாது. நீரு பூத்து நெருப்பாகவே ஒவ்வொரு பிரச்சினையும் இருந்தால் தான் அடுத்தடுத்து ஆட்சி மாற்றம் வர இந்தப் பிரச்சினைகள் உதவி செய்யும். 

இன்றைக்கு கட்சிக்குத் தலைவர்களாக இருக்கும் ஒவ்வொருவரிடமும் கேட்டுப்பாருங்கள். உங்கள் கட்சியின் இப்போதைய கொள்கை என்னவென்று. எல்லோரும் திருதிருவென முழிக்க ஆரம்பித்து விடுவார்கள். இனி தமிழ் பேசி பயனில்லை. திராவிடம் பேசிப்பயனில்லை. ஜாதிமதம் பேசிப்பயனில்லை. தன் கட்சியின் கொள்கையாக எதைச் சொல்வார்கள்? கேட்டுப்பாருங்கள் தெரியும் அரசியல் என்றால் என்னவென்று.

மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்குப் போட்டவர் தமிழர். அன்று விழித்திருக்க வேண்டிய அரசு மவுனம் சாதித்தது. ஏனோ தானோவென ஜல்லிக்கட்டுப் பிரச்சினையைக் கையாண்டார்கள். விளைவு இந்தப் போராட்டம்.

தமிழர் பாரம்பரியத்தை மீட்டெடுக்க முயன்ற இளைஞர் பட்டாளத்துக்கு முன் அனுபவம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. கட்டுக்கோப்பாக போராட்டத்தை நடத்தத் தெரிந்தவர்களுக்கு அரசியல் தெரியாது. அதுவும் இங்குள்ள அனைவருக்கும் தெரியும். 

காலம் காலமாக நடந்து வரும் போக்குதான் இது. அஹிம்சா போராட்டத்தின் வெற்றி பலியாகும் உயிர்களின் மீதுதான் கிடைக்கும். மஹாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தில் மாண்டவர்களின் மீதுதான் இந்தியா தன் சுதந்திரத்தைப் பெற்றது. நேற்று மாலையில் ஓய்வு பெற்ற நீதிபதி என்ன சட்டம் போடப்பட்டிருக்கிறது என்று கொடுத்த விளக்கத்தை முன்பே கொடுத்திருக்கலாம். கொடுக்கவில்லை. ஏனென்றால் இந்த இளைஞர் போராட்டம் இப்படி சுமூகமாக முடிந்து விடக்கூடாது. அவ்வாறு நடந்து விட்டால் யாருக்கு எந்த பிரயோஜனமும் இல்லாது போய் இருக்கும். இந்த நிகழ்வினால் பலர் ஆளும் கட்சியின் மீது கோபமும், சிலர் எதிர்கட்சிகளின் மீது கோபமும் கொண்டனர். இதைதான் அரசியல் எதிர்பார்க்கும். நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு பலன் கிடைத்திடுவது தான் அரசியல்.

நான் பிறக்கும் முன்பே நடந்த சுதந்திரப்போராட்டத்தை என்னால் காண முடியவில்லை. மெரினா கடற்கரையில் அந்தப் போராட்டத்தை இளைஞர்கள் கண் முன்னால் கொண்டு வந்து காட்டினர். காவல்துறையினர் அவர்களை முரட்டுத்தனமாக இழுக்கின்றனர். தூக்கி வீசுகின்றனர். போராடிய மாணவர்கள் ”ஜனகனமன” பாடினார்கள். ”வந்தே மாதரம்” என்று முழங்கினார்கள். அஹிம்சையாக உட்கார்ந்து போராடினார்கள். அவர்கள் ஹிம்சிக்கப்பட்டனர். அஹிம்சைக்கு எதிர் ஹிம்சைதானே. ஜனநாயகத்துக்கு எதிர் அரசியல்தானே. இந்தப் போராட்டத்தை வெகு எளிமையாக முடித்திருக்கலாம். ஆனால் அரசியல் அப்படி முடிக்க விடாது. அதைத்தான் இந்த தமிழர் சமுதாயம் நேற்றுக் கண்டது.



குறிப்பு: இன்றைய இளைஞர் பட்டாளம் அவசியம் படிக்க வேண்டிய அரசியல் பகடி நூல் ஒன்று உண்டு. போராட்டக்களத்தில் போராடியவர்கள் சோ எழுதிய சர்க்கார் புகுந்த வீடு என்ற அரசியல் நாவலை அவசியம் படியுங்கள். இந்த நூல் எப்படி அரசியல் செய்வது என்று சொல்லிக் கொடுக்கும். நிதர்சன அரசியல் என்றால் என்னவென்று உங்களுக்கு பாடமெடுக்கும். மறந்து விடாதீர்கள்.

எனக்கும் அல்லையன்ஸ் பப்ளிகேசனுக்கும் மறைந்த சோவுக்கும் எந்த வித வியாபாரத் தொடர்பும் இல்லை என்று இவ்விடத்தில் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.