தலைப்பைப் பாத்ததும் ஏதோ வெளி நாட்டுப் பொண்ணு பேருன்னாதானே நினைச்சீங்க? இது அந்தமாதிரிக் கதை இல்லை. இது வேற கதை. அந்த லூசு பிரண்டு திடீருன்னு வந்துட்டான். அதுவும் விடிகாலையிலேயே வந்து உக்காந்துக்கிட்டான். அவனொரு பக்கம் இருக்கட்டுமுன்னு நெனச்சுக்கிட்டு பல்லு விளக்க பல்பொடியை எடுத்தேன்.
”கையிலே என்ன வைத்திருக்கிறாய்?” எனக் கேட்டான்.
“சதுரகிரி ஹெர்பல்ஸ் பற்பொடி” என்றேன்.
“என்ன தீடீரென்று பற்பொடிக்கு மாறி விட்டாய்?”
“என்னமோ தெரியலை, இந்த ஸ்டூடண்டுக போராட்டத்திலருந்து வெளி நாட்டுக்காரன் பொருளை வாங்கறதுன்னா கஷ்டமா இருக்கு?”
“ஓ....அப்படியா?????” என்று கேட்டு சிரித்தான்.
“ஏண்டா சிரிக்கெரே” என்றேன் கோபமாக.
“ஏண்டா தங்கம்? அந்தப் போராட்டத்துல கலந்துகிட்டவங்க எத்தனை பேருடா வேஷ்டி கட்டியிருந்தாங்க? எத்தனை பொண்ணுங்க தாவணி போட்டிருந்தாங்கன்னு பாத்தீயா?” என்றான் நக்கலுடன்.
ஏதோ வில்லங்கமா பேசப்போறானோ என்று அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“தங்கம்! அந்த போராட்டக்காரங்கள்ள எத்தனை பேரு தமிழ்ல கையெழுத்து போடுறாங்கன்னு கேட்டுப்பாரேன்” என்றான்.
கையிலிருந்த ஹெர்பல் பொடியை கீழே வைத்தேன்.
அதைப் பார்த்ததும் “டமிலா....! டமிலா....!” என்று உரக்கச் சொல்லி சிரிக்க ஆரம்பித்தவன் எழுந்து சென்று விட்டான்.
எனக்குத்தான் ஒரு மாதிரியாக இருந்தது. நினைவு தெரிந்த நாளில் இருந்து ஆங்கிலத்தில் தான் கையெழுத்துப் போடுகிறேன்.
சதுரகிரி ஹெர்பல்ஸ் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.
அவன் யார்? என்று உங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் அவன் யாரென்று உங்களுக்குப் புரிந்து இருக்குமே?
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.