குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, February 3, 2017

கெணத்தடிப்பாம்பு - சிறுகதை

மலைகள் இணைய 114 இதழில் வெளியான கிணத்தடிப்பாம்பு என்கிற சிறுகதை இங்கு வெளியிடுகிறேன். ஆசிரியர் சிபிச் செல்வனுக்கு நன்றிகள் பல. மலைகள் இணையப்பக்க இணைப்பு : http://malaigal.com/?p=9735

இனி சிறுகதையை தொடர்ந்து படிக்கவும்:-

சாயங்காலம் பள்ளிக்கொடத்திலிருந்து வீட்டுக்கு வரும் போது கெணத்தடியில் ஆட்கள் குறைவாக இருந்ததைப் பார்த்தேன். வீட்டுக்கு வடக்கே இரண்டு தெரு தாண்டி கிழ மூலையில் பெரிய கெணறு ஒன்னு நாலு பொறமும் தண்ணி இறைக்க சகடைகள் தொங்கியபடி இருக்கும். மரத்தினால் செய்யப்பட்டிருக்கும் இந்த சகடைகள் மீது கயித்தப் போட்டு தண்ணி எறைக்கனும். கட கடவென சவுண்டு விட்டுக்கிட்டு சுத்தும் சகடைகள். வெத்து வாளி உள்ளே போவதும் தண்ணி வாளி வெளியே வருவதுமாய் பொழுதன்னைக்கும் சத்தம் கேட்டபடியே இருக்கும். யாராவது குளிச்சிக்கிட்டும், துணி தொவைச்கிட்டும், தண்ணி எடுத்துக்கிட்டும் இருப்பாங்க.

குளிக்கிறதுக்கும் துணி தொவைக்கிறதுக்கும் அந்தப் பகுதிப் பெண்கள் பொழுது மசங்கின நேரத்தில் அந்தக் கெணத்துக்குச் செல்வார்கள். பாவாடையை மார்பின் மேலே தூக்கிக் கட்டிக் கொண்டு கெணத்திலிருந்து நீர் எறைச்சு மேலே ஊத்திக் கொண்டு குளிப்பார்கள். கெணத்துக்கு குளிக்கச் செல்வதற்கு முன்பே சீவக்காயை வடிச்ச கஞ்சியோடு சேர்த்து குழப்பி தலையில் தடவி கொண்டை போட்டுக் கொள்வார்கள். குளிச்ச பின்னாடி வழுவழுன்னு மின்னும். கையோடு அழுக்குத் துணியையும், உப்புச்சவக்காரத்தையும் கொண்டு போவார்கள். அவங்க குளிக்கும் போது ரவுண்டா முட்டை மாதிரி இருக்கும் மைசூருசாண்டல் மேல்சோப்பு வாசம் அடிக்கும்.

கல்யாணம் ஆனவர்கள் கையோடு வாளியில் துவைக்க துணிகளையும்,. குழந்தைகளையும் அழைத்துச் சென்று வாளியில் தண்ணி எறைச்சு சிண்டுகளைக் குளிப்பாட்டி இடுப்பில் துண்டைக் கட்டி விட்டு தலையை காயவைன்னுச் சொல்லி விடுவார்கள். துணிகளைத் தொவச்சு பிழிஞ்சு வாளியில எடுத்து வெச்சுட்டு குளிப்பார்கள். அதுவரைக்கும் சிண்டுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டும், குளிக்கிற தண்ணி வழிஞ்சோடும் வாய்க்காப் பக்கமாக கால்களை நனைச்சுக்கிட்டும் அம்மாகிட்டே திட்டு வாங்கிக் கொண்டும் பராக்குப் பார்த்தபடி கழிப்பார்கள்.

அது பொதுக்கெணறு. யாரு வேண்டுமானாலும் தண்ணி எடுத்துக் கொள்ளலாம். சைக்கிளில் ரெண்டு பக்கமும் செப்புக் குடத்தைக் கட்டிக்கிட்டு ட்ரிப்அடிப்பார்கள் ஆண்கள். வேலையாட்களுக்கு தண்ணி சுமக்கிறது பெண்டு நிமித்தும் பெரிய வேலை. எல்லா வீட்டிலும் கெணறுகள் இருக்காது. ஒரு சில வீடுகளில் தான் கெணறு இருக்கும். வற்றவே வற்றாத தண்ணீர் அமிர்தமென சுரந்து கொண்டே இருக்கும் கெணறுகள் எங்கள் வீட்டிலும் இருந்தன.

கைகாட்டி கொல்லையில் ஒரு கெணறு இருந்தது. தண்ணீர் வற்றிப்போகவே போகாது. ஏற்றமிரைத்து தான் விவசாயம் நடக்கும். நெலக்கல்லை தான் அதிகம் பயிர் செய்வார்கள். உளுந்து, துவரை, மரவள்ளிக்கிழங்கு போடுவார்கள். கொல்லையைச் சுத்தியிலும் தென்னமரமும், பலாக்காய் மரமும் இருக்கும். இந்தக் கெணத்துத் தண்ணீ உப்புகரிக்கும். தென்ன மரத்துக்கும், பயிர்களுக்கும் ஏத்தம் போட்டு எறைச்சு தண்ணி ஊத்தனும். கல்லைக்கு வாய்க்காலில் வரும் தண்ணியை தட்டு வெச்சு விசிறி அடிக்கணும். தரை நனையனும். வடக்குக் கொல்லை சோம்பி வீட்டுக்காரரு போரைப் போட்டாரு. கெணத்து தண்ணீயெல்லாம் காணாமப் போச்சு.

வடக்கித் தெரு கெணத்துத் தண்ணிக் கொஞ்சம் சப்பைமாதிரி இருக்கும். குளிக்க மட்டும்தான் பயன்படும். ஆனால் எங்கள் வீட்டுக் கெணத்துத்தண்ணி குடிக்க டேஸ்டா இருக்கும். தெக்கித் தெருவிலிருந்தெல்லாம் தண்ணி கொண்டு போக தவலைப்பானை, கொடமெல்லாம் கொண்டு வந்து விடுவார்கள். இரும்பு பூட்டையில் தொங்கிக் கொண்டிருக்கும் வாளியில் இறைத்து நிரப்பிக் கொண்டு சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு செல்வார்கள். அம்மா யாரையும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

கெணத்துக்கு உறை கொண்டு வந்து போட்டார்கள். மழை பேஞ்சா கெணத்து வாய் மண்ணெல்லாம் கரைஞ்சு போய் அகன்று விடும். கெணத்து வாயைச் சுத்திலும் ரவுண்டு ரவுண்டா புல் தரையைச் செதுக்கு அடுக்கி வைக்கணும். இருந்தாலும் வாய் அகண்டு போயிடும். வீட்டில் செமண்டு உரையை வாங்கி வந்து பதினெஞ்சு அடிக்கு போட்டு விட்டார்கள். அடிக்கடி கெணத்துக் கயிறு அறுந்து போகும். ரப்பர் கயிறு வாங்கி வந்து போட்டார்கள். இந்த ரப்பர் கயிறு பூட்டையில் சிக்கிக் கொண்டு இறைக்க முடியாது.

மழை பேஞ்சுடுச்சின்னா கெணத்தில் தண்ணீ நெறஞ்சு கிடக்கும். கையாலே தொடலாம். வழிந்தோடும். தண்ணி சுண்ணாம்பு கலந்த மாதிரி இருக்கும். கொஞ்ச நாளுல பளிங்கு மாதிரி ஆயிடும். தண்ணீ குறைஞ்சாத்தான் அம்மா வடக்கித் தெருக் கெணத்துக்கு குளிக்க அழைத்துச் செல்வார்கள். அந்த வடக்கித் தெரு கெணத்தடியைச் சுற்றிலும் நான்கடி அகலத்துக்கு சிமெண்ட் போட்டு பார்டரு கட்டி தண்ணி போக வழி வைத்திருந்தார்கள். மூன்று துவைக்கும் கல்லும் கட்டி இருந்தார்கள். அவ்வப்போது சண்டைகள் நடக்கும். கொஞ்ச நேரம் தான் சத்தமாக்க் கேட்கும். ஆம்பளைங்க யாரும் அந்தப் பக்கம் போக மாட்டாங்க. குளியலும் துவைத்தலும் முடிந்ததும் ஆரவாரமின்றிக் கிடக்கும். வடக்கித்தெரு சுப்பைத்தேவர் வீட்டுப்பக்கமாய் குளிக்கிற தண்ணி, துவைக்கிற தண்ணி வடிந்து போகும். அவர் வாழை போட்டிருந்தாரு. அந்த வாழைகளும் சவுக்காரத்தண்னி, சீயக்காய் தண்ணீ, வடிச்ச கஞ்சித் தண்ணி, மஞ்சத்தண்ணியெல்லாம் குடிச்சு வளமா வளந்து கொலை கொலையா தள்ளுச்சு.

சவுக்காரத்தண்ணி வாழைக்காய்னு சொல்லி ராவுத்தப்பய வெலையைக் குறைச்சுப்பிட்டான் குட்டியம்மாஎன்று சாயங்காலமா வீட்டு வந்த சுப்பையாத்தேவர் அம்மாகிட்டே புலம்பிக்கிட்டு இருந்தார். கைகாட்டியில ஏலக்கட வச்சிருக்கிற ராவுத்தருக்கு இந்த வெஷயத்தை எவனோ போய் சொல்லிப்புட்டான்என கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்.

போன வாரம் வடக்கித் தெரு கெணத்துக்குள்ளே பாம்பு விழுந்துடுச்சுன்னு பேசிக்கிட்டாங்களேண்ணே, பாம்பைப் பிடிச்சாச்சா?” என அம்மா கேக்க ”அதையேன் கேக்கிற குட்டியம்மா! சம்முகம் வாத்தியாரு பொண்டாட்டி கெணத்துல தண்ணி எடுக்கப் போயிருக்கா, வாளியோடு தலையை நீட்டிகிட்டு பாம்பு வந்ததைப் பார்த்தவ கத்துன கத்துல ஊரே கூடிடுச்சு. அவளுக்கு பாம்பப் பார்த்துப் பயமா? என்னமா நடிக்கிறாங்கறே. பத்தடி நீளமெருக்கும். தண்ணிக்குல கிடந்து ஊருது. நல்லபாம்பு மாதிரி தெரியுது. எவனும் கிட்டக்கே போக மாட்டேங்குறானுங்க. இன்னும் எடுக்கலை இந்த சனிக்கிழமை ஊருல கூட்டம் போட்டு தான் ஆளை அனுப்பனும்னு அருணாலம் சொன்னான்” என்றார்.

இனி அந்தப் பக்கம் எவரும் போக மாட்டார்கள். வடக்கித் தெரு சுப்பையாதேவரு வாழைகளுக்குத்தான் சிரமம். சவுக்காரத் தண்ணி கெடக்காம வாடிப்போய்டும். தெக்கிவீடு சலுவா வீட்டில ரெண்டு கெணறு இருக்கும். சப்பைத்தண்ணின்னு. யாரும் சீந்த மாட்டாங்க. கைலி மாதிரி லுங்கியைக்கட்டிக்கிட்டு மேலே துண்டைப் போட்டுக்கிட்டு திரியும் சலுவாகிட்டே தண்ணி எரைச்சுக்கிறேன்னு எவரும் போய் கேக்கமாட்டாங்க. ராவுத்தரு வீட்டுல போய்த் தண்ணி எடுக்கறதான்னு வீராப்பு.

மேக்கால கொலுசு வீட்டில ஒரு கெணறு இருந்துச்சு. பூமியோட பூமியா ரெண்டு பக்கமும் கவட்டைக் கம்புல பெரிய மரச்சகடை மாட்டிக் கிடக்கும் கெணத்தைச் சுத்தியும் செடியும் கொடியும் மரமுமாய் இருக்கும். பாம்பு கீம்பு வந்துரும்னு அந்தக் கெணத்துப் பக்கமும் யாரும் போக மாட்டாங்க.

வீட்டுக்கு வீடு கெணறு இருந்தாலும் எங்க வீட்டுக் கெணத்துத்தண்ணி மாதிரி டேஸ்டுஎங்கேயும் இல்லைன்னுச் சொல்லிக்கிட்டே தெனமும் குடிக்கத் தண்ணி வேணும்னு சொல்லிக்கிட்டு வந்துகிட்டே இருப்பாங்க. பெரிய மாமரத்தடி நெழலு குளுகுளுன்னு இருக்கும். தண்ணி எடுக்க வர்ரவுங்க நெழல்ல உக்காந்து ஊர்க்கதை உலக கதையெல்லாம் அம்மாகிட்டே பேசிட்டுதான் கெணத்துல தண்ணி எறைக்கவே போவாங்க. அம்மாவும் அவங்கிட்டேப் பேசிக்கிட்டே ரெண்டு மூனு குடம் தண்ணியை வீட்டுக்கு கொண்டு வந்துடுவாங்க.

மார்கழி மாசம் வந்துச்சுன்னா குளிரு பின்னும். வாசப்பக்கம் வந்தா பல்லு தந்தியடிக்கும். பள்ளிக்கொடத்துக்குப் போக குளிக்கணும்கிறதை நெனச்சாலே சில்லிடும். சூரியன் கொஞ்சமா வெளிய வந்து தலையை நீட்டியவுடனே கிணத்துல தண்ணி எறைச்சு பொக்கையில நெப்பி வைச்சுக்கிட்டு குளிச்சா வெது வெதுன்னு இருக்கும். சூரியன் வாரதுக்கும் குளிக்கிறதுக்கும் ஸ்கூலுக்குப்போறதுக்கும் இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இருக்கும். அவசர அவசரமா மோத்தண்ணிச் சோறை மாங்காய் ஊறுகாயோட தின்னுட்டு பைக்கட்டை எடுத்துக்கிட்டு பிரேயர் ஆரம்பிக்கிறதுக்குள்ளே போய்ச் சேர்வது பெரும்பாடா இருக்கும். தை ஒன்னாம் தேதி வந்துடுச்சுன்னா குளிரு கொஞ்சம் குறையும். இருந்தாலும் மார்கழி மாசக் குளிரு குளிருதான்.

கோடைகாலமென்று நினைக்கிறேன். சாயங்காலமா குளிக்கலாம்னு கெணத்தடிக்குப் போய் தண்ணி இறைக்கப்போனா உள்ளே கருகருவென பாம்பு நெளியுது. அம்மாகிட்டே வந்து சொன்னேன். மறு நாள் தட்டுக்கூடையில வைக்கோலப் போட்டு உள்ளே கட்டித் தொங்க விட்டாங்க. வேடிக்கைப்பார்க்க கருவேல மரத்தடியில இருந்த திண்டுல உக்கார்ந்திருந்தேன். அம்மா கெணத்தடிப்பக்கமா வரவே கூடாதுன்னுட்டாங்க. கூடையை மேலே கொண்டு வந்தா பாம்பு குதிக்குமுன்னு சொல்லியிருந்தாங்க. பயத்துல தான் தள்ளி உக்காந்திருந்தேன். ஆட்கள் சுற்றிலும் நின்று கொண்டு ஒரு ஆள் கயிறை இழுக்க மெதுவா தட்டுக்கூடை மேலே வந்தது. அதில் கயிற்றில் சுற்றிக் கொண்டு பனிரெண்டு நீளத்துக்குப் பாம்பு கூடையில இருந்த்தைப் பாத்து விட்டு ஆளுக எல்லாம் தெரிச்சு ஓடுனாங்க. கயித்தை மரத்துல கட்டிப்புட்டு கம்பை எடுக்க ஓடுனாங்க. அந்தப் பாம்பு அதுக்குள்ளே சீறிக்கிட்டு ஒரே தாண்டு. சரியா நான் உக்காந்திருந்த திண்டுக்கிட்டே விழுந்துச்சு. பயத்துல நான் கத்துன கத்துல பாம்பு வக்கப்போரு ஓரமா வேகமாகச் செல்ல ஒரு ஆளு ஓடி வந்து கம்பால ஒரே அடி. நடுங்கிப் போயிட்டேன். அத்தப் பெரிய கருகரு நாகப்பாம்பை பக்கத்துல பாத்தா சிரிப்பா வரும்? அம்மா என்னைத் திட்டிகிட்டே இருந்தாங்க. அதுதான் கடைசி. அந்தப் பாம்பைப் பார்த்ததுக்கப்புறம் கெணத்தடிப்பக்கமே போவதில்லை. வீட்டின் அருகில் இருக்கும் பொக்கைத்தண்ணியில தான் குளிப்பேன்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.